Parco Termale Del Garda - Italy - யாழ் சத்யா - இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
1554062492863.pngஐந்து நாட்கள் வெனிஸில் சந்தோசமாகச் சுற்றி விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஏதோ ஒரு முழுமையடையாத உணர்வு. வெனிஸ் உண்மையில் ஒரு சொர்க்கபுரி. இருந்தும் ஏனிந்த திருப்தியற்ற நிலை என்று தீர யோசித்த போது தான் எங்களின் திருப்தியின்மைக்கான காரணம் புரிந்தது.
என்ன தான் வெனிஸில் சுற்றி சுற்றி தண்ணீருக்குள்ளேயே திரிந்தாலும் நாங்கள் அங்கு நீருக்குள் ஒரு விரலைக் கூட விடவில்லை. அவ்வளவு நீரைப் பார்த்தும் இறங்கி அளையவில்லை என்றால் மனதில் ஒரு திருப்தியின்மை வருவது இயல்பு தானே.
அப்போதுதான் எங்காவது நீர் நிலைக்குச் சென்று நன்கு நீரில் நீந்தி விளையாடி விட்டுத் தான் வீட்டுக்குச் செல்வது என்று முடிவெடுத்தோம். வெனிஸிலிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், சிறிது நேரத்திலேயே வாகனத்திலிருந்தவாறு கூகிளாண்டவரின் உதவியோடு நீர்நிலைகளுக்கான தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம்.
அப்போது கிடைத்த விடை தான் இந்த தேர்மல் பார்க். நான் இது வரைக்கும் எங்கேயும் இது போன்றதொரு இடத்துக்குச் சென்றதில்லை. இயற்கையான வென்னீர் ஊற்றென்றால் நான் சென்றிருக்கும் ஒரேயொரு இடம் இலங்கையில் இருக்கும் கிண்ணியா வென்னீரூற்று மட்டுமே.
ஆகவே இங்கு சென்று பார்த்தே விடுவது என்று முடிவெடுத்து இந்த இடத்துக்கென்றே பிரத்யேகமாக இருந்த வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு மாற்றுடையையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

1554062520773.png

அனைத்துச் சுற்றுலாப் பிரதேசங்களையும் போல இங்கும் என்னவோ நுழைவுக் கட்டணம் குறைவு தான். ஆனால் உள்ளே போனால் படிப்படியாக ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
பதின்மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகை வாவிகளும், நீச்சல் குளமும், உடற்பயிற்சி, உடல் ஆரோக்கிய நிலையங்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பாரிய இடம் இது.
இயற்கையாக வளர்ந்த மூலிகைகள் நிரம்பிய இரண்டு பெரிய வாவிகளும் நூற்றிஅறுபதிலிருந்து இருநூறு மீற்றர் வரை ஆழம் கொண்டவை. அத்தோடு இதன் சிறப்பாக ஊற்றிலிருந்து வெளிவரும் நீரின் வெப்பநிலை 37°C இலிருந்து 42°C ஆகவும் காணப்படும்.


1554062588139.png

பொதுவாக ஒரு குளத்தின் வெப்பநிலை 37°C இலிருந்து 39°C ஆகவும், இரண்டாவது குளத்தில் 29°C 30°C ஆகவும், நீச்சல் குளத்தில் அண்ணளவாக 33°C ஆகவும் இருக்கும். குளங்களிலிருந்து ஒவ்வொரு நாற்பத்தெட்டு மணி நேரங்களிற்கொரு தடவையும் நீச்சல் குளத்திலிருந்து ஒவ்வொரு பதினைந்து மணித்தியாலங்களுக்கொரு தடவையும் நீர் மாற்றப்படும்.
அங்கு தரப்பட்ட வழிகாட்டலின் படி, முதலில் மிதமான வென்னீருள்ள குளத்தில் இறங்கி உடனேயே விழுந்தடித்து நீந்தாமல் ஒரு பத்து நிமிடங்கள் அங்கும் இங்குமாக நடந்தோம். அது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதோடு கரையோரமாய் ஆழம் குறைந்த இடத்திலிருந்த சிறு கற்கள் பாதத்திற்கு இயற்கையான மசாஜ்ஜையும் வழங்கத் தவறவில்லை.
பின்னர் இலகுவாக அந்த மூலிகை வாவி முழுவதும் நீந்தி விளையாட ஆரம்பித்தோம். இதிலே நீந்துவது இறந்த செல்களை உடலிலிருந்து நீக்கிப் புத்துணர்ச்சி அளிக்கின்றது.1554062863728.png

அந்தப் பிரதேசம் பச்சைப் பசேலென மூலிகைகள் நிரம்பி உடலுக்கு மட்டுமல்ல கண்ணுக்கும் விருந்தளித்தது. அங்கிருக்கும் சிறு குகையொன்றைக் கடந்து செல்ல சிறு நீர் வீழ்ச்சி ஒன்று காணப்பட்டது. நீந்திய களைப்புப் போக அதன் கீழ் ஐந்து நிமிடங்கள் நின்ற போது கவலைகள் மறந்து புது உலகொன்றில் பறப்பது போன்ற உணர்வு.


1554062717869.png

நீச்சல் தெரியாதவர்களுக்கு ஏற்றது போல ஆழம் குறைந்த வகையில் நீர்த்தேக்கத்தை சில இடங்களில் பிரித்தும் வைத்திருந்தார்கள். பொதுவெளியில் குளிக்க வெட்கப்படும் எம்மாட்களுக்காகவே போலத் தனித் தனியாக சிறிய பாத்டாப் போன்ற அமைப்புகளும் காணப்பட்டன.
உடை மாற்றும் அறைகள் ஸ்பா, ஆவி பிடிக்கும் அறைகள், ஜிம், விளையாட்டு வசதிகள், ஓய்வெடுக்கும் அறைகள், என்று சொகுசுக்குக் குறைவில்லை.அந்த இளஞ் சூட்டு நீரில் கலந்து வந்த மூலிகை வாசத்தோடு குளித்தது எங்கள் நாட்டு ஆறுகளில் குளித்த ஒரு அனுபவத்தை மீட்டிப் பார்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அரை நாளுக்கும் மேலான பொழுதை மிக மகிழ்ச்சியாக கழித்து விட்டு வெளியேறினோம். உண்மையில் வெளியே செல்லும் போது உடலும் மனமும் மிகுந்த லேசாகிய ஒரு உணர்வு. வெனிஸில் சுற்றிய ஐந்து நாட்களின் அலுப்புக் களைப்பு அனைத்தும் பறந்தோடியிருந்தது எனலாம்.
ஒட்டு மொத்தத்தில் தேர்மல் பார்க் குளியல் ஒரு சுகானுபவம் தான் மக்கா! சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் நீங்களும் சென்று அனுபவித்துப் பாருங்கள்.

 

Attachments

Top