Lake Garda - ITALY - இதழ் 10 -யாழ் சத்யா

Rosei Kajan

Administrator
Staff member
#1வணக்கம் அன்பு நெஞ்சங்களே!


நலம் நலமறிய ஆவல். இந்தத் தடவையும் நாம் செல்லப் போவது ஒரு நீர்ப் பிரதேசத்திற்குத் தான். இத்தாலியின் மிகப் பெரிய நீர் நிலையான Lake Garda இற்கு உங்களை அழைத்துச் செல்ல எண்ணியுள்ளேன்.


1558512919939.png


இத்தாலியின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த வாவி 370km2 பரப்பளவைக் கொண்டுள்ளது. அதே நேரம் 346m ஆழமானதும் கூட.


ஆவணி மாதம் சூரியன் உச்சி மண்டையைப் பதம் பார்க்கும் ஒரு மதிய வேளையில் நாம் அங்கே சென்றடைந்தோம். அந்த நீர்த்தடாகக் கரையை அண்மித்த பகுதிகளில் காம்பிங் வசதிகளும் இருந்தன. நாம் அன்றே வீடு திரும்ப எத்தனித்திருந்தமையால் காம்பிங் பக்கம் செல்லவில்லை.


எனது நண்பர்கள் நீரைக் கண்டவுடனேயே நீச்சல் உடைக்கு மாறி ஓடிச் சென்று நீரில் குதித்து விட்டார்கள். எனக்கோ ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியுமே புதிதுதானே. சுற்றுச் சூழலை அவதானிப்பதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன்.


அப்போது தான் நான் முதன் முதலாக ஒலிவ் மரங்களைக் கண்டது. நீர்நிலைக் கரையெங்கும் ஆங்காங்கே என்னை விடச் சற்று உயரமாய் அகன்று குடை பரப்பி சின்னச் சின்ன இலைகளும் ஒலிவ் பிஞ்சுகளுமாகக் காட்சியளித்தன. பழக்க தோஷத்தில் ஒரு ஒலிவ் பிஞ்சை எடுத்து வாயில் கடித்துப் பார்த்தேன்.அப்பப்பா… அவ்வளவு கய்ச்சல். உடனடியாக துப்பி விட்டு நல்லதொரு மர நிழலாகத் தேடித் திரிந்தேன். விடுமுறை நாளென்பதாலோ என்னவோ மக்கள் கூட்டத்திற்குக் குறைவில்லை. அதனால் நல்லதொரு நிழலான இடம் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்தது.


ஏரிக் கரையோரமாக சிறிது தூரம் நடந்ததில் ஒரு பெரிய மரத்தின் கீழிருந்த சிலர் எழுந்து செல்வதைப் பார்த்து விட்டு ஓடிச் சென்று அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் நான் இடுப்பில் கட்டியிருந்த துவாலையை விரித்துப் போட்டு இடம் பிடித்துக் கொண்டேன். பிறகு எனது நண்பர்களிடம் நான் இருக்கும் இடத்தைத் தெரிவித்து விட்டு அவர்கள் உடமைகளையும் கொண்டு சென்று அந்த இடத்தில் வைத்து விட்டு, நான் நன்கு நீட்டி நிமிர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.


ஐந்தாறு வருடங்களின் பின்னர் இவ்வாறான சுற்றுலா என்று வெளிக்கிட்டதால் என்னவோ, மனதிலிருந்த உற்சாகம் உடலால் முடியவில்லை. அதனால் விரைவிலேயே களைத்து விட்டேன். உண்ட களை தீர, பயண அலுப்புத் தீர ஒரு மணி நேரம் நன்கு உறங்கியிருக்க என் நண்பர்கள் வந்து எழுப்பினார்கள்.


“சத்யா…! வாங்கோ… ஒரு இடத்துக்குப் போவோம்…”


நானும் என்னவாக இருக்கும் என்ற ஓர் எதிர்பார்ப்போடு சென்றால் ஏரிக் கரையில் நால்வர் அமரக் கூடிய ஒரு ஸோபா போன்ற காற்றடைத்த ரப்பர் பலூன் ஒன்றை சிறு துடுப்பு வைத்து நண்பர் ஒருவர் தள்ளிக் கொண்டே என்னையும் மறுபுறம் ஏறித் தள்ளச் சொல்லித் துடுப்பைத் தந்தார்.


நானும் பாதுகாப்புக்குரிய லைவ் ஜக்கெட்டெல்லாம் அணிந்து கொண்டு மறுபுறம் ஏறியமர்ந்து துடுப்பைத் தள்ளத் தொடங்கினேன். எத்தனை திரைப் படங்களில் பார்த்து இருப்போம். இதெல்லாம் ஒரு சின்ன விசயம் என்று நினைத்துக் கொண்டு துடுப்பைத் தள்ளினால் படகோ வட்டமிட்டு வேறெங்கோ போனதே தவிர உரிய இடத்தை அடையவில்லை. எனக்கோ அழுவதா? சிரிப்பதா? நிலை.


உண்மையில் நாங்கள் அந்த ரப்பர் படகைக் கொண்டு சென்று சிறு மோட்டார் படகில் இணைக்க வேண்டும். மோட்டார் படகு கரைக்கு வர முடியாத காரணத்தால் ரப்பர் படகைக் கரையிலிருந்து அங்கே கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தோம். மோட்டார் படகு ஒன்றும் ரொம்ப ஆழத்தில் இருக்கவில்லை. எனது நெஞ்சளவு ஆழம் தான் வரும்.


நானும் படகும் படும் பாட்டைப் பார்த்துச் சிரித்த என் மற்றைய நண்பர்கள், என்னை துடுப்பு வலிக்காமல் இருக்கச் சொல்லி விட்டுத் தாங்களே பின்னாலிருந்து தள்ளிச் சென்று மோட்டார் படகுடன் இணைத்தார்கள். என் நண்பர்கள் எல்லோரும் இந்த விளையாட்டைச் சிறு வயதில் இருந்தே விளையாடி மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் எனக்கோ புது அனுபவம். அதனால் எல்லோர் கவனமும் என் பாதுகாப்பின் மீதே தான் இருந்தது.

1558512986816.png
மோட்டார் படகோடு ரப்பர் படகை இணைத்து முடிய என்னை இயல்பாக அமரச் சொல்லி இருக்கையின் முன்னே இருந்த பிடி போன்ற கயிற்றை நன்கு இறுகப் பற்றிக் கொள்ளச் சொன்னார்கள். வேகத்தை எவ்வாறு கூட்டச் சொல்வது, குறைக்கச் சொல்வது, நிறுத்தச் சொல்வது, அளவான வேகம் என்பவற்றுக்கான சில இலகுவான சைகை மொழிகளையும் ஆரம்பத்திலேயே கற்றுத் தந்தனர்.


நாங்கள் அனைவரும் ஆயத்தமாகியதும் மோட்டார் படகு தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது. எங்களுக்கும் மோட்டார் படகுக்குமான தூரம் ஒரு இருநூறு மீட்டர்கள் இடைவெளியாவது இருக்கும். முதலில் மோட்டார் படகு மிதமான வேகத்தில் மெதுவாகச் செல்லும் போது எல்லாம் நன்றாகத் தான் இருந்தது.


ஆனால் சிறிது நேரத்திலேயே மிக வேகம் எடுத்து வளைந்து வளைந்து ஓடி பெரும் அலைகளை உண்டு பண்ணியது. எமது ரப்பர் படகோ அந்த அலைகளின் மீது துள்ளி விழுந்து மோட்டர் படகின் வேகத்துக்கேற்ப வலப் பக்கமும் இடப் பக்கமுமாக மாறி மாறிச் சரிந்து கொண்டே சென்றது.எனது நண்பர்கள் என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொள் என்று அடிக்கடி கத்திக் கொண்டே இருந்தனர். முதலில் ஒரு வித பயம் ஏற்பட்டாலும் பின்னர் நானும் அந்தப் பயணத்தை ரசித்து அனுபவிக்கத் தொடங்கினேன்.


நீர்த் திவலைகள் பூந்தூறலாய் முகத்தில் வந்து விழ, கூந்தல் அங்குமிங்கும் பறக்க கைகள் மட்டும் கயிற்றை இறுக்கிப் பிடித்திருக்க, உடல் எங்கோ மேலெழுந்து பறப்பது போன்ற அந்த ஒரு அனுபவம் உண்மையிலேயே புதுமையான மறக்க முடியாத அனுபவம் தான். முப்பது நிமிடங்கள் எவ்வாறு கடந்தது என்று தெரியாமல் நீரில் விளையாடி விட்டுக் கரையை அடைந்தோம்.


கரைக்குச் சென்றதுமே மண் தரையில் நான் மல்லாக்க விழுந்து படுத்து விட்டேன். அந்த வித்தியாசமான அனுபவத்திலிருந்து என்னால் உடனடியாக வெளி வர முடியவில்லை. சிறிது நேரம் கழித்து எழுந்து அங்கிருந்த ஒரு சிற்றுண்டிக் கடையில் சுடச்சுட கஃபே வாங்கிக் குடித்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.


ஆ…! இங்கே சொல்ல வேண்டிய ஒரு விடயம். தமிழன் இல்லாத இடம் இல்லை என்று நான் மறுபடி உணர்ந்த தருணம் இது. கஃபே வாங்கவென்று சென்றால் அங்கே சத்தமாக, “அரபிக் கரையோரம் ஒரு அழகைக் கண்டேனே…” என்று ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தார். எனக்குத்தான் காதில் ஏதோ குழப்பமோ என்று பார்த்தால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் பொடியனின் வேலை அது.


கஃபே தந்த உற்சாகத்தோடு சிறிது நேரம் நீரில் நீந்த ஆரம்பித்தேன். எனது மற்றைய நண்பர்களோ வேறு சில நீர் விளையாட்டுக்களை விளையாடி விட்டு வரச் சென்றிருந்தனர்.


ஒரு மோட்டார் படகு செல்ல அதில் கிளைடரோ, பரசூட்டோ போன்ற ஒன்றில் இணைந்து பறப்பது. நமக்கு நான் விளையாடியதற்கேக் கண்ணைக் கட்டி விட்டது. இதையெல்லாம் வேறொரு நாள் முயற்சி செய்வோம் என்று எண்ணி மறுத்து விட்டேன்.

1558513028436.png
நேரம் மாலையாகி கதிரவன் தன் செந்நிறக் கதிர்களைப் பரப்பியவாறே நீர்நிலைக்குள் மறைய ஆரம்பிக்கவும் நாங்களும் உடை மாற்றி, வீடு திரும்பினோம்.


வாழ்க்கை என்பது ஒரு தடவை தான். இறப்பு என்பது எந்த நொடியும் நம்மை வந்தடையலாம். அதனால் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையை மகிழ்ச்சியுடன்அனுபவியுங்கள். புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் மக்கா.


என்றும் அன்புடன்
யாழ் சத்யா.
 
Top