Chamrousse - Ski station - யாழ் சத்யா (செந்தூரம் மின்னிதழ் 11)

Rosei Kajan

Administrator
Staff member
#1
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!வசந்த காலம் வாசம் வீச ஆரம்பித்திருக்கும் இந்நாட்களில் நான் உங்களைக் குளிர்காலத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணியுள்ளேன். ஆம்! நாங்கள் செல்லப் போவது ஒரு குளிர் பிரதேசத்திற்குத்தான்.1564428438620.png

அன்றொரு நாள் எனது பிரெஞ்சு நண்பியைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது,“அடுத்த மாதம் ‘போவோமா ஊர்கோலம்’ பகுதிக்கு எந்த இடத்தைப் பற்றி எழுதுவது என்று தெரியவில்லையே...” என்று எனது பிரதான கவலையை அவளிடம் தெரியப்படுத்தினேன். அப்போது அவள் பரிந்துரைத்த எண்ணம் தான், இந்த ஸ்கீ விளையாடும் இடத்திற்குப் போகலாம் என்பது.வசந்தகாலம் ஆரம்பித்தே பல நாட்கள் கடந்த நிலையில் பனியுருகும் காலம் வந்து விட்டமையால் ஸ்கீ விளையாட்டு நிலையங்களை மூட ஆரம்பித்திருந்தார்கள். எங்கள் பிரதேசத்துச் சுற்றுலா மையத்தைத் தொடர்பு கொண்டு Chamrousse எனும் இந்த இடம் சித்திரை ஏழாம் திகதி வரை திறந்திருப்பதை அறிந்து கொண்ட நாம் ஆறாம் திகதி அங்கு சென்றோம்.1564428463913.png நான் வசிக்கும் Grenoble நகரிலிருந்து ஒரு நாற்பது, நாற்பத்தைந்து நிமிடங்கள் காரில் பயணிக்க வேண்டும். ஏறத்தாழ 1700m உயரத்தில் அமைந்திருந்தது.மலைப்பாதையில் ஏற ஆரம்பிக்கவே ஆங்காங்கே ஓங்கி உயர்ந்து நின்ற மரங்களிலும் நிலத்திலும் சிதறியிருந்த பனிப் பூக்கள் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை உண்டாக்கியது.ஸ்கீ ஸ்டேசனை அடைந்து காரை விட்டு இறங்கியதும் நான் மகனுக்கு ஸ்கீ விளையாடுவதற்குரிய ஆடை, கண்ணாடி, கையுறைகள், தலைக் கவசம் போன்றவற்றை அணிவித்து விட்டேன்.1564428474882.pngஅவரும் மகிழ்ச்சியாக அவற்றை அணிந்து கொண்டு அந்தப் பனி மலையை நோக்கி, பனிப்பிரதேசத்தில் நடப்பதற்கேயுரிய இரு குச்சிகளைப் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றார்.எனக்குமே மகிழ்ச்சிக்கு அளவில்லை. முன்பும் வேறு சில பனிமலைகளுக்குச் சென்றிருந்தாலும் கூட ஏனோ இந்த வெள்ளைப் பளிங்கு மலைகளை எத்தனை தரம் கண்டாலும் அலுப்பதில்லை. மனம் சலிப்பதில்லை.1564428490155.png

“புதுவெள்ளை மழை இங்கு பொழிகிறது…” பாடியபடியே மல்லாந்து படுத்து வானத்தை வெறித்தால் உச்சி வானிலிருந்து திருவாளர் கதிரவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பார்வையின் வெம்மை தாங்க முடியாதவளாய் அங்கே அருகிருந்த ஒரு ஸ்கீ உபகரணங்கள் விற்கும் கடைக்கு ஓடினேன். காரணம், எனது கறுப்புக் கண்ணாடியைக் கொண்டு செல்ல மறந்திருந்தேன்.அவசரமாக ஒரு கண்ணாடியை வாங்கி அணிந்த பின்பே கண்கள் சகஜ நிலைக்கு வந்தன. மறுபடியும் பனிமலைக்குச் சென்றால் அங்கு மகன் அந்தக் குச்சிகளின் உதவியோடு குடுகுடுவென ஓடிக் கொண்டிருந்தார்.


1564428502731.png
சிறிது நேரம் கழித்து அங்கிருந்த குழாய் போன்ற அமைப்பிலிருந்த தானியங்கி மூலம் கொஞ்சம் உயரமான இடத்திற்குச் சென்றோம். அங்கிருந்து நாங்கள் விரும்பிய முறையில் கீழே சறுக்கிச் செல்லலாம். அங்கிருந்த கடையொன்றில் வாடகைக்கு எடுத்திருந்த சிறு படகு போன்ற ஒன்றில் தான் மகனை வைத்து மேலே இழுத்துச் சென்றிருந்தேன். மேலிருந்து அதைக் கீழே தள்ளிவிட அது மிதமான வேகத்தில் சறுக்கிக் கொண்டு சென்றது பார்க்க மிக அழகாக இருந்தது. மகனும் நன்றாக அனுபவித்து மகிழ்ந்தார்.

நானும் ஒரு பிளாஸ்டிக் சவல் போன்ற ஒன்றில் அமர்ந்து மகனுக்குப் பின்னால் சறுக்கிச் சென்றேன். நாங்கள் இவ்வாறு விளையாடிய இடம் புதிதாய் பழகுபவர்களுக்காகவும் குழந்தைகளுக்குமானது. அதனால் அதிக உயரமின்றி பாதுகாப்பாகவே இருந்தது.பெரியவர்களுக்குரிய ஸ்கீ விளையாடும் இடமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருந்தது. விளையாடுபவர்களைப் பார்த்து, ‘எப்படித்தான் இப்படிச் சமநிலை தவறாமல் விளையாடுகிறார்களோ?’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.1564428516681.png எங்கள் அதிர்ஷ்டமோ என்னவோ, அன்று பெரிதாகக் குளிரெல்லாம் இல்லை. இயற்கை அன்னையின் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடி கால் புதையப் புதைய ஓடி ஆடியபடி அந்தப் பிரதேசமெங்கும் சுற்றி வந்தோம்.1564428526769.png அங்கிருந்த உணவகம் ஒன்றின் முன்னால் மரத்தினால் செய்த பெரிய கரடி உருவம் ஒன்று வைத்திருந்தார்கள். எனது மகனும் நண்பியின் மகளும் அந்தக் கரடிக்குத் தொப்பி அணிவிப்பதாகக் கூறி அதன் தலையை நோக்கிப் பனியை எறிவதும் பின்னர் ஆளாளுக்குப் பனியை எறிந்து விளையாடுவதுமாகப் பொழுது போக்கினர்.வெறும் கையால் சில்லென்ற பனிப்பூக்களைத் திரட்டிப் பந்துகளாக்கி பெரியவர்கள் நாங்களும் ஒருவருக்கொருவர் எறிந்து, ஓடி விளையாடி விழுந்து எழும்பிச் சிரித்து மகிழ்ந்தோம்.1564428546277.png

மதியம் அங்கேயே ஒரு உணவகத்தில் உண்டு விட்டு மறுபடியும் சிறிதும நேரம் பனிப்பூமியில் ஐக்கியமாகி விட்டு மனம் நிறைந்த திருப்தியோடு வீடு திரும்பினோம்.அன்றைய நாள் அனுபவங்கள் சிலவற்றின் நேரடி வீடியோக்களை எனது ‘யாழ் சத்யா’ முகப்புத்தகத்தில் கண்டுகளிக்கலாம்.வாழ்க்கை என்பது ஒருமுறை தான். நாம் எப்போது இந்த உலகத்தை விட்டு நீங்கப் போகிறோமோ யாரும் அறியோம். வாழப்போகின்ற காலத்தில் இவ்வாறு மனதுக்கு நிறைவைத் தரக் கூடியச் சின்னச் சின்ன அனுபவங்களை நீங்களும் தவறாது அனுபவியுங்கள்.வெறும் சொத்துக்களிலும் தங்கங்களிலும் ஆடம்பர விழாக்களிலும் முதலிடுவது மட்டுமல்ல வாழ்க்கை. எதிர்காலத்துக்குச் சேமிக்கிறோம் என்று நிகழ் காலத்தை இழந்து விடாதீர்கள்.அடுத்த மாதம் வேறொரு இடத்தில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்கிறேன்.யாழ் சத்யா.
 
Top