11.அவள் என் உயிர் இல்லை! - ரோசி கஜன் - இதழ் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1
1558512192321.png

நான்...

பச்! என் பெயர் எதற்கு ? அதைப்பார்த்துவிட்டு இன்ன மத்தை, இனத்தைச் சேர்ந்தவன் இது சரியா? பிழையா? தேவையா? தேவையில்லையா? என்று வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு விவாதிக்கச் சந்தர்ப்பம் தருவான் ஏன்?

நான் ஒரு மனிதன். மாமிசம் விரும்பி உண்பவன். என்னைக் கடிக்க வந்த நுளம்பையும் வாசலில் போட்டுள்ள மெல்லிய வலையையும் மீறி எப்போதாவது உள்ளே வந்துவிடும் இலையான்களையும் தயை தாட்சன்யம் பாராது கொன்றுவிடும் அளவுக்குத் தைரியம் உள்ளவன். அதேநேரம், நெஞ்சு நிறைய கனவுகளும் ஆசா பாசங்களும்...

ம்ம்ம்... அம்ம்மம்ம்ம்ம்...மா ...

சட்...சட்...சட்.. டப் ...டப் ...டப் சத்தம் விலகித் தூரவாகப் போய்க்கொண்டிருந்தது.

தடதடத்தது என் நெஞ்சும் தேகமும்! நகர முடிந்தால்...ஏங்கிய உள்ளம் இயலாமையில் சுருண்டது.

பச்! இன்று காலையில் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு வெகு கவனமாக என் மனைவி தந்த முத்தம் உதடுகளில் ஊர்வது போலிருந்தது. தொட்டுப் பார்த்திட, வசமிழந்து கொண்டிருக்கும் பாவப்பட்ட மனம் வெகுவாய் ஆசைகொண்டது .

அவளை நினைத்ததும் சுர்ரென்ற மரண வலி கூட கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதாய்...

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

இன்றைக்கு எங்களின் திருமண நாள். பதினைந்தாவது! சத்தியமாய் திருமணத்தின் அன்றுதான் அவளைக் கண்டேன் என்று பொய் சொல்ல மாட்டேன். எனக்கு அவள் அவளுக்கு நான் என்று நிர்ணயித்து ஒரு இருபது வருடங்கள் இருக்கலாம்.

இல்ல... "இல்லவே இல்லை...அது பிறப்பில் போட்ட முடிச்சு!" என்பாள் அவள்.

அவள் என் உயிர்!

இல்லை இல்லை, அவள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். என் உயிர் இல்லை, சத்தியமாய் இல்லவே...இல்...லை .

ம்ம்மாஆஆஆஆ ...

கண்களின் ஓரமிரண்டாலும் ததும்பித் தளம்பிய உப்பு நீரின் சூட்டில் என்னில் உணர்வு கொஞ்சமேனும் உள்ளதை உணர்ந்து கொண்டேன். ஒருவேளை ஒருவேளை...அதிஷ்டம் இருந்தால்...பச்!

சத்தியமாக இக்கணம் எந்தக் கடவுளும் நினைவில் வரவில்லை. இத்தனை நாட்களும் இல்லாத ஒன்றை நினைத்து ச்சே ...!

இனிமேலும்,கண்ணால் காணாத கடவுள் என்றவனை நினைத்துக் கணப்பொழுதையும் வீணாக்க விரும்பவில்லை என் உள்ளம்.

காலையில் முத்தம் தந்த சூட்டோடு "இன்னும் பலப்பல பதினைந்து ஆண்டுகளை ஒன்றாகக் கடக்க வேண்டும் " என்று கிசுகிசுத்திருந்தவள், எங்கள் அன்பில் பூத்த மலர்கள்...ஒருவர் அல்ல மூவர்; நால்வரும் சுற்றிச் சுழன்று என்னை வளைத்துக் கொண்டார்கள்.

ஆசையும் எதிர்பார்ப்பும் யாரிடமும் அனுமதி கேட்டுக் கொண்டா வரும்?

ஆண்டாண்டு சேர்ந்திருப்போம் என்று அவள் சொல்கையில் என்னுள்ளம் ஆனந்தித்ததை எல்லாம் எப்படி விபரிப்பேன்.

ஒரு கண்ணடிப்புக்குக் கூட கட்டுப்பாடுகள் வைப்பவன் அவள்.

"பிள்ளைகள் இருக்கும் பொழுது பார்த்து நடக்க வேண்டாமா?" என்னிடமே நியாயம் கேட்பவள், இனி ...? கண்ணடிப்பது கூட குற்றமாகப் பார்க்கப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு என்றிருக்கையில் இதெல்லாம்...?நச்சுக்கிரக வாசிகளின் ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ளாது நடமாடும் மனிதரை நினைக்கையில் மீண்டும் விழிகள் தளும்பின. இன்று நான், நாளை நீ, அடுத்த நாள் அவன்...அவள்...

தட் தட் தட் பட் பட் பட்

என் உடல் குளிர்ந்து கொண்டு வருவது தெரிந்தது. செக்கன்களை எண்ணுகிறேனா?

நேற்றிரவு ஐவருமாக ஒன்றாக அமர்ந்திருந்து மூன்று கிழமைகளின் பின்னர் வரவிருக்கின்ற விடுமுறைக்கு இத்தாலி செல்ல பதிவுகள் செய்தோம்.

எல்லாம் 'செந்தூரம்' என்ற மின்னிதழில் வரும் 'போவோமா ஊர்கோலம்' செய்த வேலை. அதையும் மனைவிதான் விரும்பிக் கேட்டிருந்தாள்.

"அம்மாவின் கலியாண நாளுக்குப் பரிசு!" கைதட்டினால் மூத்தவள்; பத்து வயதுதான்; குழந்தை அமோகமாக வளர்ந்து வாழ்வாளா? என்ன என்ன எல்லாம் நினைத்திருந்தேன்... குஞ்சு பத்திரம்மா !

"அதெல்லாம் செல்லாது அப்பா! பின்னேரம் வரேக்க கிப்ட் வாங்கி வர வேணும்." சின்னவள் மிரட்டினாள். ஏழுவயதுப் பிஞ்சு. நானில்லாது பல்லைக் கூட தீட்ட மாட்டாளே...ஐயோ...!

"அம்மாக்கு மட்டும் இல்ல, எங்களுக்கும் கிப்ட்." இரண்டாவது மகள்; எட்டு வயது; அப்படியே என் அம்மாவைப் போலவே இருப்பாள்; ஒவ்வொரு இரவிலும் நான் கதை வாசித்தால் தான் கண் மூடு...வாள்...இ...னி...

இலேசாகக் காலடிச் சத்தம், கூடவே பட் பட் பட்...

ஐயோ...!

வெறி பிடித்த கோர முகம் பல்லிழித்தபடி பசியோடு துவம்சம் செய்தது.

"எதைச் செய்தாலும் ஒழுங்கா முழுதாச் செய்ய வேணும்" நேற்று மகள்களிடம் சொன்ன என் ம..னை...வி ...

அதர்மமும் மூர்க்கவெறியும்
பிடித்தலையும் கொடூரர்களால்
அநியாயமாகப் கொல்லப்படும்
ஒவ்வொரு உயிர்களுக்கும்

அஞ்சலி!
 
Top