வலைப்பந்தாட்டத் தாரகை - செல்வி தர்ஜினி சிவலிங்கம் - செந்தூரம் மின்னிதழ் 6 ல் வெளியாகிய கட்டுரை.

Rosei Kajan

Administrator
Staff member
#1
கடந்த பத்து ஆண்டுகளாய், ஆறடி ஒன்பது அங்குலத்தில் உலகிலேயே உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையாக, இலங்கையின் வலைப்பந்தாட்ட தேசிய அணியில் தன் ஆக்ரோஷமான விளையாட்டின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் செல்வி தர்ஜினி சிவலிங்கம். அவர் ஒரு தமிழ்ப் பெண், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து சாதித்தவர் என்று சொல்லிக்கொள்வதில் தமிழர்களுக்கெல்லாம் மிகவும் பெருமையும் சந்தோஷமும்!


2009 ஆம் ஆண்டு இலங்கை வலைப்பந்தாட்டதுக்கான ஆசியாக்கிண்ணத்தை கைப்பற்றியபோது பெரும் தூணாக இருந்ததுடன், 2009 ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த ஷூட்டராக தரவரிசைப்படுத்தப்பட்டார். அதே ஆக்ரோஷம் தொடர்ந்ததில் அவரையும், எங்களையும் ஒருசேரப்பெருமைப்படுத்திய உலகின் சிறந்த ஷூட்டர் அடையாளம் 2011 ஆம் ஆண்டில் தர்ஜினியை கௌரவப்படுத்தியது. தன்னுடைய கோல் போடும் வீதத்தை 100 வீதமாக கொண்டுவந்தமை, பங்குபற்றிய போட்டிகளிலெல்லாம் சிறந்த ஷூட்டர் அடையாளம் என பற்பல பெருமைகளைத் தன்வசப்படுத்திய இந்த வலைப்பந்தாட்டத்தாரகையின் ஆரம்ப காலம் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உதாரணப்பாடமே!


யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவானில் ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த அவருக்கு, ஆரம்ப காலகட்டத்தில் அவரது அசாதாரண உயரமே பெரும் துயரமாக அமைந்து விட்டிருக்கிறது. மினிபஸ்களில் பயணம் செய்யும் சிரமம், தெருக்களில் தோற்றம் குறித்த கேலி கிண்டல்கள், தன்னைக்குறித்த பெற்றோரின் வருத்தம் என அவர் அனுபவித்த வலிகள் மிக அதிகம். இருந்தாலும், பெற்றோரும் நல்ல நண்பர்களும் வாய்த்ததினால் கல்வியில் இருந்து கவனம் சிதறவில்லை. அப்போதே விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தாலும், பாடசாலை மட்ட போட்டிகளில் பங்குபற்றி இருந்தாலும், அப்போதிருந்த போர்க்காலச் சூழல், வெளிமாவட்டங்களுக்குப் பயணம் செய்ய முடியாத தடைகள் போன்றவற்றால் அந்த ஆர்வம் அடுத்தகட்டத்துக்கு நகரவேயில்லை.

உயர்தரப்பரீட்சையை அடுத்து மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார் அவர். அங்கேயும் பொருளாதாரத்துறையை சிறப்புப்பிரிவாக எடுத்துப் படிக்கிறார். அப்போதுதான் வவுனியாவில் நடைபெற்ற ஒரு திறந்த வலைப்பந்தாட்டப்போட்டிக்கு மட்டக்களப்பு சார்பாக விளையாட அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அந்தப்போட்டிக்கு இலங்கை வலைப்பந்தாட்ட பெடரேஷன் ஒழுங்கமைப்பாளர்களும், முன்னாள் தேசிய அணி வீரர்களும், பயிற்சியாளரும் வந்திருக்க, அவர்களின் கருத்தில் படுகிறார் அவர். விரிவுரையாளராக வரவேண்டும் என்கிற இலட்சியத்துடன் கற்றவரின் வாழ்க்கைப் பாதை அன்றிலிருந்து முற்றிலுமாக மாறிப்போயிற்று!


அந்த நாட்களை பற்றி பேசுகையில், “ஆரம்ப நாட்கள் எனக்குச் சற்றே சிரமமானவை தான். கொழும்பில் ஹாஸ்டலில் தங்கிப் பயிற்சிகளுக்கு செல்ல, கொழும்பின் செலவு மிகு வாழ்க்கை முறைக்குத் தாக்குப்பிடிக்க சற்று சிரமப்பட்டுத்தான் போனேன். அதை விட மொழி பெரும் பிரச்சனையாக இருந்தது. அணியில் ஒற்றைத்தமிழ் பெண்ணாக நான் இருந்ததினால் மற்றவர்களுடன் பேசிப்பழக மொழி பெரும் தடையாக இருந்தது. படிப்படியாகத்தான் கற்றுக்கொண்டேன். அதைவிட வலைப்பந்தாட்டத்தில் அணியவேண்டிய ஆடைகள் ஆரம்ப காலத்தில் பெரும் சங்கடதைக்கொடுத்தன. நான் அணியும் ஆடைகள் குறித்து எம் சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் இருந்தது. வெளிநாட்டுப்பயணங்கள் மேற்கொள்ளும் போது நான் பிரபலமடைந்திராத ஆரம்ப காலத்தில் பொருளாதார ஆதரவாளர்களைக் கண்டுபிடிப்பதே பெரும்சிரமமான காரியம். 2005 காலப்பகுதி போர் தீவிரமான காலப்பகுதி வேறு. சிரமமான பயணங்கள், பாதைகள் மூடப்பட்ட நிலை என்று அது தனிப்பிரச்சனை. இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி நான் சாதனை புரிவதற்கு விளையாட்டு மீது எனக்கிருந்த காதலும், நாட்டுக்காக விளையாடுவதில் இருந்த ஆர்வமும், எனக்குக்கிடைத்த சிங்கள, தமிழ் நண்பர்களும், பெற்றோர் உறவினர்கள், ஊர்மக்களின் உற்சாகமும் ஆதரவும் என்று தான் சொல்வேன்” என்று செவ்வியொன்றில் மனம் திறந்திருக்கிறார், செல்வி தர்ஜினி சிவலிங்கம் அவர்கள்.


“சோதனைகளும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதற்காக சாதிக்க நினைக்கும் நாங்கள் பின்வாங்கக்கூடாது. சின்னச்சின்னதாய் ஒவ்வொரு வருடமும் உங்களுக்கென இலக்குகளை நியமித்துக்கொள்ளுங்கள். நான் அப்படித்தான் செய்வேன். வலைப்பந்தாட்டத்தில் ஆசியாவின் சிறந்த ஷூட்டர் ஆகவேண்டும் என்று போராடினேன். 2009 இல் அது நனவாகியது. அடுத்து உலகின் சிறந்த ஷூட்டர் என்ற அடையாளத்தைக் குறி வைத்தேன். அதுவும் 2011 இல் எனக்குக் கிடைத்தது. அடுத்து இலங்கைத்தேசிய அணியினைத் தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என்று எண்ணி அதையும் நிறைவேற்றினேன். இப்படி, வாழ்க்கையில் நம்மை நாமே வென்று கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை அதுதான் வெற்றியின் தாராகமந்திரம். மனதைக் குழம்ப விடக்கூடாது. 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கள் உறவுகள் பூநகரியில் இறுதிப்போரில் மாட்டிக்கொண்டார்கள்.

அப்போது எனக்கு மனரீதியாக நிறைய குழப்பங்கள் ஆனாலும் இரண்டையும் சரியாகக்கையாண்டு அந்த கட்டத்தை நான் தாண்டினேன். தமிழ் மாணவர்கள் அதிகமாக சொல்லும் குற்றச்சாட்டு தேசியமட்டப்போட்டிகளில் தமிழ் என்று பேதம் பார்க்கிறார்கள் என்பதுதான். உங்கள் கடும் உழைப்பை தொடர்ச்சியாக கொடுத்து தவிர்க்க முடியாத போட்டியாளராக ஆவதை விடுத்து இதையே காரணம் சொல்லிக்கொண்டிருப்பதால் உங்களுக்காக காலம் கொடுத்த சந்தர்ப்பங்கள் தான் வீணாகும். தடைகள் வரத்தான் செய்யும், தாண்டிசெல்லுங்கள் என்பதுதான் நான் சொல்லக்கூடியது!” என்று, இளைய சமுதாயத்துக்கு மிகப்பெரிய உண்மையை சிரித்தமுகமாக விளக்குகிறார் எங்களின் வலைப்பந்தாட்டத் தாரகை!


அவர் அடைந்த உயரங்கள் அத்தனை சாதாரணமானவை அல்ல!


இன்றைய ‘வலைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையில்’ உலகிலேயே உயர்ந்த பெண் என வியந்து பாராட்டப்படும் அவர், 2009ஆம் ஆண்டு ஆசிய மட்டத்தில் நடந்த போட்டித்தொடரில் இலங்கை வலைப்பந்தாட்டக் குழு Championships பட்டத்தை வெல்ல முழுப்பங்காற்றியவர். 2012-2014 ம் ஆண்டுகளிலும் இலங்கைக்கு வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுத்தரக் காரணமானவர். அத்துடன் இரு ஆண்டுகளிலும் ஆசிய மட்டத்தில் ‘Best Shooter’ விருது வென்றவர். 2011 ம் ஆண்டு சர்வதேசப்போட்டிகளில் ‘உலகிலேயே சிறந்த ‘Best Shooter’ விருதினையும் வென்றவர். 2018ம் ஆண்டு Asian Netball Championships விருதினையும் இலங்கைக்கு வென்றுதரக் காரணமானவர்.


கிழக்குப் பல்கலைக் கழகத்தில்- பொருளாதாரம் மற்றும் கலை என இரு துறைகளிலும் பட்டம் பெற்றவர். Australian City West Falcons netball club ல் பயிற்சியும் பெற்று அக்குழுவுக்காக பல போட்டிகளில் விளையாடி, வெளிநாட்டு வலைப்பந்தாட்டக்குழுவில் இடம்பெற்ற ஒரே இலங்கையின் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றவர்.

தற்போது வங்கித்துறையில் பணியாற்றிக்கெண்டே விளையாட்டுத்துறையிலும் சாதனைகள் புரிந்து, தமிழினத்தைத் தலைநிமிரவைத்த வலைப்பந்தாட்டத் தாரகை செல்வி தர்ஜினி சிவலிங்கத்துக்கு பாராட்டுக்களையும் அன்பையும் பரிசளிப்பதில் செந்தூரமும் பெருமை கொள்கிறது!

1545519346913.png
 
Top