முரானோ - யாழ் சத்யா - இதழ் 8 (The island of Murano - Venice, Italy.)

#1
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
எல்லோரும் எப்படியிருக்கிறீர்கள்? முதலில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளும் அனைவருக்கும் உரித்தாகட்டும்!
இந்த வருடம் உங்களுக்கு அனைத்து நலன்களையும் வாரி வழங்கிப் பல்வேறு புதிய இடங்களுக்கு உங்களை சுற்றுலா அழைத்துச் செல்லப் பிரார்த்திக்கிறேன். நானும் ஒவ்வொரு மாதமும் வழமைபோலவே உங்களைச் செந்தூரத்தின் வழியே அழைத்துச் செல்கிறேன்.
இந்த முறை இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற ஒரு பெரிய தீவான Murano விற்கு உங்களைக் கூட்டிச் செல்லப் போகிறேன். வெனிஸிலிருந்து பத்து நிமிட தூரத்தில் இங்கே Vaporetto எனும் படகு சேவை மூலம் சென்று விடலாம்.

1550857679662.png

இந்தத் தீவைச் சுற்றிப் பார்த்து விட அரை நாள்ப் பொழுது தாராளமாகப் போதும். இந்தத் தீவும் grand canal எனப்படும் மிகப் பெரிய கால்வாயைக் கொண்டுள்ளது.
Church Santi Maria E San Donato இங்கிருக்கும் பிரசித்திபெற்ற புனிதத் தலம். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்தலம் உண்மையில் ஒரு அதிசயமே. காரணம் உள்ளே இருக்கும் mosaic வேலைப்பாடு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பொன்னிறத்தில் மொசைக் வேலைப்பாடு செய்த சீலிங்கைப் பார்த்து வியப்பை அடக்க முடியவில்லை.

1550857726036.png 1550857741282.png

இத்தனை நுண்ணிய முறையில் எவ்வாறு அத்தனை உயரத்தில் இந்த ஓவியத்தைச் செதுக்கியிருப்பார்கள் என்று இன்றளவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரானோவில் இருக்கும் அடுத்த அதிசயம், இன்றளவும் உலகப் பிரசித்தி பெற்ற முரானோ கண்ணாடித் தொழிற்சாலைகள். ஒரு தொழிற்சாலையைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது.

1550857764042.png 1550857775269.png
 
#2
அங்கிருந்த ஊழியர் ஒருவர் ஐந்தே நிமிடங்களில் கண்ணாடிக் குதிரை ஒன்றைச் செய்து காட்டினார். கலவையை நெருப்பிலிட்டுச் சூடாக்கி கையால் ஒரு சிறு சாவணத்தின் உதவி மட்டும் கொண்டு அவர் அந்தக் குதிரையை நேர்த்தியாக உருவாக்கிய விதம், அடடா தான். கண்ணிமைக்க மறந்து பார்த்திருந்த தருணம் அது.

1550857839420.png

தொழிற்சாலையோடு சேர்த்து அவர்கள் வைத்திருந்த கடையில் ஞாபகார்த்தமாக ஒரு பென்டனும் தோடும் வாங்கிக் கொண்டேன். ஆனால் வெளியே வந்து வேறு கடைகளில் பார்த்தால், அதே அணிகலன்கள் பாதி விலையில் இருந்தது.

1550857860711.png 1550857873666.png

பின்னர் அங்கிருந்த அருங்காட்சிகத்திற்குச் சென்றோம். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் விதம் விதமாய் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடியாலான பாத்திரங்களிலிருந்து அணிகலன்கள் வரை எல்லாமே அத்தனை அழகு.
அங்கிருந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பொருட்களை மணிக் கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருந்தது.

1550857897370.png

வெனிஸ்க்கு செல்பவர்கள் தவறவிடாமல்ச் சென்று விட வேண்டிய இடங்களில் இந்த முரானோ தீவும் ஒன்று.
அடுத்த மாதம் மறுபடியும் உங்களை இன்னொரு புதிய இடத்தில் சந்திக்கும் வரை விடைபெற்றுக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்

யாழ் சத்யா.
 
Top