முதல் விமானப்பயண அனுபவம்!- ரோசி கஜன் -இதழ் 8

#1
விமானப் பயணமென்பது எங்களின் இளமைக்காலத்தில், அதுவும், எங்கள் நாடிருந்த நிலையில் ஒரு எட்டாக்கனியேதான்!எட்டாக்கனியாயிற்றே என்று அதைப் பார்த்து ஆசைப்பட்டு …‘இதில் பயணம் செய்தால் எப்படியிருக்கும்?’ என்று கனவு கண்டு...அப்படியும் நினைவில்லை. கண்ணிமைக்கும் பொழுதில் எங்கள் உயிரைக் குடிக்கும் திறன் கொண்ட விமானங்களை, அநேக நேரங்களில் அதீத கோபத்துடன் தான் பார்த்திருக்கிறோம்.பொம்மர், கிபீர் சுழன்று சுழன்று குண்டு போடுகையிலோ, மிகச் சாதாரணமாக பரல்களைத் துப்பிச் செல்கையிலோ, படபடவென்று வெடித்துக்கொண்டு ஹெலி பறக்கையிலுமே பங்கருள் பாய்வதும் இல்லை, நடுநடுங்கி ஓடி ஒளிவதும் இல்லை.‘இளம் கன்று பயமறியாது’ ம்ம்ம் ...‘இப்ப என்னதான் செய்யவாய்? குண்டு போட்டுக் கொல்லப் போகிறாய், அவ்வளவுதானே? சரி...கொல்லு பார்ப்போம்!’ என்ற அசட்டுத் துணிச்சலில் வெளியில் நின்று அம்மாவிடம் மொத்து வாங்குவதுதான் அதிகம் நடந்திருக்கிறது.இப்படித்தான் ஒருநாள் உயர்தரத்தில் படித்துக்கொண்டிருக்கையில் ஒரு சனி என்று நினைக்கிறன், ஸ்ரீமாஸ்டரிடம் டியூசனுக்குப் போய்க் கொண்டிருந்தோம். நானும் இன்னும் இரு நண்பிகளுமாகத்தான் அநேகம் போவோம். அதில் ஒருத்தி கொஞ்சம் பயந்த சுபாவம். பெயரைச் சொன்னால் கொன்று போட்டாலும் போடுவாள், வேண்டாம்.அவளின் வீட்டிலிருந்து வெளிக்கிடும் போதே பொம்மர் சுற்றத் தொடங்கியிருந்தது.“இங்க பாருங்க பிள்ளைகள், இப்பப் போகவா வேணும்? அறுவான்கள்! இண்டைக்கு எங்க போட்டுத் துலைக்கப் போறாங்களோ!” அவளின் அம்மா முணுமுணுக்க முணுமுணுக்க, “அவன் எங்கயோ சுத்துறான், நீங்க உள்ள போங்கோம்மா!” என்றுவிட்டு, பாதையில் இறங்கி சைக்கிளை மிதிக்கத் தொடங்கியிருந்தாலும் அடிக்கொருதடவை எங்கள் பார்வை மேலேதான்.சைக்கிள்கள் மூன்றும் மின்னல் வேகத்தில் விரைந்து ஆஸ்பத்திரி வீதியிலிருந்து இராசாவின் தோட்ட வீதியில் இறங்கி நல்லூரை நோக்கி விரைந்தன.அதுவரை நல்ல உயரத்தில் சுற்றிய பொம்மர்கள் பதியத் தொடங்கியிருந்தன.“டீ! எனக்கென்னவோ பயமாகக் கிடக்கு; அம்மா சொன்னபோதே வீட்டில நின்றிருக்கலாம்; இங்க எங்கயாவது நின்றுபோட்டுப்போவமே?” சற்றே பின்தங்கியவள், பார்வை மேலே! தந்தி அடித்தாள் .“சாகிறது ஒருக்காத்தான், இதுக்கு எல்லாம் பயந்தா நாள் முழுதும் பங்கருக்கக் கிடக்க வேணும்; பேசாமல் வாடி!” என்றாள், என்னருகில் வந்த மற்றத் தோழி.“அதுதானே! அங்க இருந்து உன்னைப் பார்த்துத் தலையில போடப் போறானோ! விசரி! பேசாமல் வா! அப்பிடியே போட்டாலும் மூன்று பேரும் சேர்ந்தே போகலாம்.” நான் சொல்ல, ஏதோ பெரிய பகிடி விட்டதுபோல சிரித்தபடி குண்டும் குழியுமாகக் கிடந்த ரோட்டில் அனாயசமாக முன்னேறினோம்.“சிரிக்காதீங்க எருமைகள், இங்கதான் தட்டப் போறான்!” மீண்டும் அவள் பயந்தபடி சொல்கையில் உண்மையாகவே நல்ல பதிவாக வந்தது விமானம்.இராசாவின் தோட்ட வீதியில் தண்டவாளத்தடியை நெருங்கியிருந்தோம். இரயிலைக் காணாது மூழி மேடாக பெயரை மட்டுமே தாங்கி நின்ற தண்டவாளங்களை அண்மித்த நாங்கள் காதைக் கிழிக்கும் விமான ஓசையில் ஒரு கணம் இதயம் உறைந்து போனோம் என்றால், சற்றே பின் தங்கி வந்தவள் சைக்கிளை விட்டுவிட்டு அங்கு அடர்ந்துகிடந்த பற்றைக்குள் குதித்துவிட்டிருந்தாள் பாருங்க, நெஞ்சு நின்று துடித்தது.கண்ணிமைப்பொழுதில், குண்டு அந்த இடத்தில் விழுந்துவிட்டது போன்றதொரு அதிர்வில் பிரேக்கிட்டிருந்தோம்.மறுகணம், நண்பி கிடந்த கோலம் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கவைத்தது எங்கள் வயது. இப்போது யோசிக்கையில் அந்த நேரம், அங்கு எத்தனையோயோ உயிர்கள் பிரிந்திருக்கும்! ஊனம் அடைந்தோர் எண்ணிக்கையில் பலர் இணைந்திருப்பார்கள், சொத்துப்பத்து, வீடு வாசல் என்று உடைமைகள் அழிந்திருக்கும்.ம்ம்...இருந்தும் அந்த அபாயத்திலும் அந்தச் சிரிப்பும் கலகலப்பும் எங்களுக்குத் தேவையானதுதான். இல்லையேல்…வேணாம் ...இத்தோடு நிறுத்திவிட்டுச் சொல்ல வந்த விசயத்துக்கு வாறன்.அப்படியிருக்கையில், முதல் முதல் விமானப் பயணம் என்றதும், காலத்துக்கும் மறவா நினைவுடன் இராணுவ விமானம் ஒன்றில் பயணிக்கும் வாய்ப்பொன்று எனக்குக் கிட்டுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.நடந்தது இதுதான்…என் குட்டி நாட்டுகுள் பறந்த அனுபவம் தான்! என்றாலும் மறக்க முடியாத அனுபம். எல்லாமாக நாட்டுக்குள்ளேயே மூன்று முறைகள் பறந்து விட்டுத் தான், ஒரேயடியாக நெதர்லாந்து பறந்து வந்தேன்.

எத்தனை தடவைகள் விமானப் பயணம் செய்தாலும், இதுவரை நான் பார்த்ததில் மிகப் பெரிய அழகிய விமான நிலையமான

சிக்காகோவின் O’Hare International Airport ல் நின்றபொழுது எழுந்த வியப்பைவிடவும் அதிகமாக நினைவில் உள்ளதும் மறக்க முடியாததுமான அனுபவம் அந்த முதல் விமானப் பயண அனுபவம் என்பேன்.அந்தளவுக்கு அதில் என்ன விஷேசம் என்று கேட்கிறீங்களா?வாங்க... ஏதோ என்னால் முடிந்த மாதிரி சொல்கிறேன் கேளுங்கள்.

1999ம் வருடம் வைகாசி மாதம் .படிப்பு முடிந்ததும், ‘படித்த படிப்புக்கு வேலை கிடைக்காதா?’ என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொறுமையோ தேவையோ இன்றி, பல்கலை இறுதிப் பரீட்சை எழுதிய மறுவாரமே கிடைத்த ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் தொழிலில் ஆனந்தமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்த எனக்கு, ஓர் ஆனந்த அதிர்ச்சி!

“என்னது கல்யாணமா?’’ என்று நினைக்கிறீங்களா ?

படிப்பு... அது முடிந்தால் உடனே கல்யாணம் தானே என்று நினைப்பீங்க .போங்கப்பா, அதெல்லாம் இல்ல.எல்லாம் வேலை தான். அதுவும் யாழில் இருந்து கொழும்பு போவது கனவாக இருந்த காலமது. உள்நாட்டுக்குள்ளேயே வடபகுதியை விட்டு வெளியில் வருவதும் உள்ளுக்குள் போவதும், பெரும் சிம்ம சொப்பனமாக இருந்த நேரத்தில், விசா எல்லாம் எடுத்துப் பயணிக்க வேண்டி இருந்த வேளையில், அதுவும், ஓடித் திரிந்து தகுந்த காரணம் காட்டி ஒத்தக் காலில் தவமிருந்தாத் தான் ஏதோ போனாப் போகுதென்று “பாஸ்”’ தந்து, அதுவும் மிகவும் அவசியமான பட்சத்தில் மட்டுமே கொழும்புக்குப் போகக் கூடிய நேரமதில், எல்லாவற்றையும் விடப் பெரிய விடயம் கொழும்புக்கு அப்போ தரைவழிப் போக்குவரத்து இல்லாத நேரத்தில், என்னுடன் படித்து வெளியேறிய சிலருக்கும் எனக்கும், யாழை விட்டு வெளிமாவட்டங்களில் வேலை!

அதுவும் விண்ணப்பம் ஜனாதிபதி கையால்... என்றால் யாருக்குத்தான் சந்தோசம் வராது.

‘’வேலை கிடைக்கப் போகுது... கோழி மேய்த்தாலும் கவர்மேந்து உத்தியோகம்.’’ என்று கொண்டாடும் ஆட்கள் நாங்கள். அதுமட்டுமில்லை, “கொழும்புக்குப் போனால் ஏதாவது மேல படிக்கலாம்...இங்க அந்த வசதி இல்லையே.” என்று ஏங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த விடயம் இரட்டிப்பு மகிழ்வைத் தந்திருந்தது.

அன்றைய நிலையில், வட பகுதியில் அது யாழ் என்று மட்டும் இல்லை எல்லாப் பகுதியிலுமே ‘’வெளியேறக் கிடைத்தால்?!’’ என்ற ஏக்கம் எல்லோருக்குமே இருந்த நேரம் .

இந்நிலையில், வேலை நியமனத்தைப் பெற வருமாறு அழைப்பு வந்த அனைவரும், (ஆண்களும் பெண்களுமாக ஒரு பதினைந்து பேர் வருவோம்) பாஸ் எடுக்க இராணுவ அலுவலகம் சென்றோம்.அந்தோ பரிதாபம்! ஆனாலும் எங்களுக்குத் தான் அது மிகவும் பழகிய விடயமாச்சே! எது என்று கேட்கிறீங்களா ? பாஸ் விண்ணப்பம் வேண்டுவதற்கும், அதை நிரப்பிக் கொடுப்பதற்கும், பிறகு, அவர்கள் அழைக்கும் போது போய்க் கதைப்பதற்கும் என்று எல்லாவற்றுக்கும் வரிசை .
 
#2
வரிசை என்றால் சும்மா நினைக்காதீங்க. அனுமார் வால் போன்று நீண்ட வரிசை! காலையில் சூரியன் வாறானா வாறானா என்று ஆவலாய்ப் பார்த்திருந்து பாய்ந்து போய் வரிசையில் நின்றால், வாடி வதங்கி(நிற்கும் நாங்கள்),சூரியன் ‘’பாய் சொல்லப் போறேன்’’ என்ற பிறகுதான் வீட்டுக்கு வரும்வோம். அடைக்கலமாத ஆலய மதில் சுவர் சொல்லும் அந்தக் கதைகளை.

இதில் இன்னுமொரு விடயம், பயணம் போகப் போவதோ பதினைந்து பேர்; அவர்களுக்குத் துணை முப்பது பேர்!எல்லாம் நட்பு செய்யும் வேலை.இப்படி நின்று, தெரிஞ்ச சிங்களத்தில் ஒருமாதிரி அவர்களுடன் கதைத்து, உள்ளே போய் அவர்கள் கேள்விக்குப் பதில் சொல்லி பாஸ் வேண்ட ஒரு கிழமை ஆகிவிட்டது.

இந்த இடைவெளியில் கொழும்பில் எல்லோருக்கும் நியமனக்கடிதம் கொடுத்தும் முடித்தாயிற்று.

‘’சரி, இப்ப என்ன? அதை ஜனாதிபதி கையினால் தான் வாங்க வேண்டுமா?” என்று சிலிர்த்துக் கொண்ட நாங்கள், தொடர்ந்து பல பாடுகள் பட்டு ஒருமாதிரி பயண நாளையும் குறித்துக் கொண்டோமா…

இராணுவம் எங்களுக்கு விமானவசதி செய்து தருவதாகக் கூறினார்கள்.அங்கு, அந்த நேரம், விதிவிலக்குகளை விலக்கிப் பார்த்தால் என்னதான் பிரச்சனைகள் நடந்தாலும் அரச ஊழியர்கள் என்று அணுகும் போது இராணுவம் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யும். பல்கலை மாணவர்களுக்கும் தான். அதனால், நாங்களும் அரச ஊழியர் ஆகப் போறோம் தானே? எங்களுக்கும் மரியாதைக்குக் குறைவிருக்கவில்லை.

யாழ்ப்பாணம் சிங்கள மாஹாவித்தியாலய மைதானத்திற்கு அருகில் (அன்று அப்பாடசாலை அங்கு இயங்கவில்லை. அந்த இடம் இப்பெயரால் அழைக்கப்படும்) பஸ்சுக்காகக் காத்திருக்கும் போது எங்களை அணுகிய இராணுவ அதிகாரி, அன்று போகும் விமானத்தில் (பெரிய விமானத்தைக் கற்பனை பண்ணாதீங்க. சின்ன ரக விமானங்கள். அப்போது அத்தியாவசிய போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன.) இடம் இல்லாததால், எங்களுக்கு வேறு ஏற்பாடுகள் செய்திருப்பதாகச் சொல்லி பலாலிக்குக் கூட்டிப் போனார்கள்.

அந்தநேரம் அப்படிப் போன எங்களைப் பார்த்துப் பெற்றவர்கள் பயந்து தவித்தாலும், நாங்கதான் பயத்துக்கே பயம் காட்டுறவங்களாச்சே! அதுவும் ஒத்த வயதுக்காரர் ஒன்றாகப் படித்தவர்கள் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா?பலாலி என்ற இடத்துக்கு மற்றப் பயணிகளுடன் சென்ற நாங்கள் இல்லாத பொல்லாத சோதனைகள் எல்லாம் முடித்து (சாதாரன விமான நிலையங்களில் இப்படிப்பட்ட சோதனைகளைக் கேள்வியும் பட்டிருக்க மாட்டீர்கள்.) விமானத்தில் பறக்க ஆவலாய் இருந்தால்...எங்கள் முன்பாக?

பல வருடங்களாக எங்கள் தலைமேல் வகை வகையாகக் குண்டுப் பூக்கள் தெளித்ததைப் பார்த்து பார்த்துச் சபித்த ஒரு விமானம் நிற்கிறது.அப்போது எங்களை அணுகிய இராணுவ அதிகாரி, ‘’வேறு வசதி இல்லை... போறதென்றால் இதில் தான் போக வேணும். இதைக் கூடக் கஷ்டப்பட்டுத்தான் ஒழுங்கு செய்தோம்’’ என்றார் பாருங்க.எல்லோர் முகத்திலும் ஈயாடவில்லை. அதற்குக் காரணங்கள் பல பல..முக்கியமாய் நாங்கள் அதில் பறக்கும் போது அதில் நாங்க இருப்பது கீழே இருப்பவங்களுக்குத் தெரியுமா என்ன? சண்டை நேரம் தானே? இராணுவம் என்று கீழிருந்து... விட்டால்...(என்ன ஏதென்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்.) ஒரேயடியாகப் பரலோகம் போற நிலையும் வரலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தாலும், அதையெல்லாம் ஒருவர் ஒருவருடன் கதைத்து ஒதுக்கித் தள்ளிய நாங்கள், ‘’திரும்பிப் போறதா? அதவும் கிடைத்த வேலையை விடுவாதா?” என்று யோசித்து, “சரி இதிலயே வாறோம்.” என்று ஏறினோமா…

அதுவரை எத்தனையோ விமானங்களின் உட்புறங்களை, விமான நிலையங்களை, விமானப் பயணங்களை படத்தில் பார்த்திருப்போம் தானே?போங்கப்பா, என்னதான் என்றாலும் கொஞ்சம் சரி கற்பனை இருக்காதா என்ன? முதல் முறையல்லவா? அப்படி ஏறினால்...அந்தோ பரிதாபம்?!அதன் உள்ளே...இதுவரையும் காணாதவகையில் இருந்தது.எந்த சொகுசு இருக்கையும் இருக்கவில்லை. பள பள என்று சுத்தமாகவும் இருக்கவில்லை .இருமருங்கிலும் மர வாங்கில்கள் போட்டு அதில் பெல்ட்டுகள் தொங்க, நடுவில் பெரிய வலைக் கயிறு. (பொருட்களை மூடிக் கட்டுவதற்கு) இவ்வளவும் தான் பா இருந்தது .இதைப் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? எங்களுடன் வந்த சிலர் கண்ணீர் விட்டு அழுதே விட்டார்கள்...பயத்தில் .

ஹி..ஹி..உங்களுக்கு ஒருவிடயம் தெரியுமா? நான் துணிச்சல்காரி (நம்போனும் சரியா?)

அழுதவர்களுக்கு ஆறுதல் சொல்லி ,எங்கள் பயணப் பைகளை நடுவில் போட்டுக் கட்டிவிட்டு நாங்கள் அமரவும், திபு திபுவென்று கொஞ்ச இராணுவ வீரர்களும் புன்னகை முகங்களுடன் எங்களோடு பறக்கத் தயாராக ஏறினார்களா…

எங்களுக்கு அதைபார்த்து இன்னும் இன்னும் பல கற்பனைகள், படு பயங்கரமாக. ஒன்றுமே கூடாமல் நினைக்காதீங்க! ஒருவேளை செத்தால் அவர்களோடு சாகப் போறோமே என்ற கற்பனைதான். அப்பவெல்லாம் சாகிற கற்பனை எங்களுக்குத் தராளமாக வந்து போவது இயல்பு!

‘’சரி... இப்ப விமானம் புறப்படப் போகுதாம்.’’ மைக்கில சொல்ல இல்லை, எங்களோடு நின்ற ஒரு ஆமி தான், ‘’உங்க பெல்டுக்களைப் போட்டுக்கோங்க, வெளிகிடப் போறம்,’’ என்றார்.பெண்பிள்ளைகளுக்கு முன்னே பையன்கள் பெல்ட்டை மாட்டி அப்படியே பல்லி போல விமானத்துடன் ஒட்டிக் கொண்டிருக்க, எனக்குச் சும்மாவே ஒரு அசட்டுத் தைரியம் எப்போதுமே உண்டு. அது எவ்வளவோ நேரமாக வரவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்து சரியா? கடைசியில் வந்துதான் பார்ப்போமே என்று வெளியே வந்து பெல்ட்டைப் போட விடவே இல்லை .

ஹா..ஹா..உண்மையாகவே அந்த ஆமிக்காரன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ‘பொறு! என்ர வீரத்த உனக்கு இன்றைக்கு காட்டுறன்.’ (இதில சரி ) என்று நானும் பெல்ட்டைப் போடாமல் அப்படியே வாங்கிலோடு ஊன்றி அமர்ந்து ,மேலே பஸ்களில் தொங்குமே கை பிடிக்க...அப்படி அங்கு தொங்கிக் கொண்டிருந்த பட்டியொன்றில் இறக்கிப் பிடித்துக் கொண்டு எல்லோரையும் வீரப் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தேனா...

விமானம் மெல்ல ஓடியது. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க எடுக்க அப்படியே அந்த இடந்திலேயே தான் இருந்தேன். 'ம்ம்... யாரிட்ட"...என்ற பார்வையோடு!எல்லாம் கணப்பொழுதுதான். விமானம் ஓடிக்கொண்டே இருக்க முடியுமா? பறக்கத்தொடங்க …ஹி ...ஹி ...முன்னால் இருந்த பெட்டிகள், பைகள் கட்டிய வலையில் ...சும்மா …இங்க பாருங்க, உடனே எழுந்து அமர்ந்துவிட்டேன், வாங்கிலில் தான். அது போதாதா என்ன? யாரோ கைகொடுத்தது போலவும் நினைவு…'விழுந்தால் கைபிடித்து எழுவது பெரிய விசயமா? விடுங்கப்பா!’ என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்தக் கணத்தில் பெருத்த அவமானமாக இருந்தது என்றதே உண்மை. அதைக் காட்டிக் கொள்ளாது சாமாளித்துவிட்டேன்.என்ன? அதுவரை பீதியில் உறைந்து பயந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும், என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கியவர்கள் கொழும்பு வந்து இறங்கும் வரை சிரித்தார்கள்.ஆமாம்! என் முதல் விமானப் பயணம் சிரிப்பா சிரிச்சுட்டுது .‘’அதனால் என்ன... எல்லாமே அனுபவம் தானே?’’ என்று நான் அதை விலக்க முயன்றாலும், பாருங்க... எனக்கு எப்போதும் பசுமையாய் படமாய் விரியுது அந்தக் காட்சி … நினைவில் இருந்துவிட்டுப் போகட்டும்.அதுதான் போர்க்காலம். அன்று ‘பயம்’ மலிந்து கிடந்த நேரம் விமானப்பயணத்தில் பயத்துக்கும் இடமிருந்தது என்றால், இன்று?அண்மையில் கோடை விடுமுறைக்கு விமானப் பயணம் செய்யும் சந்தர்ப்பம் வந்ததா? ஏறும் பொழுது, "அம்மா ...இப்ப நாம போகேக்க கீழ இருந்து ரொக்கட் விட்டால்...?" சின்ன மகனின் கேள்வி."குடும்பமாகப் போகிறோமே...விட்டுட்டுப் போகட்டும். என்ன தம்பிக்குப் பயம் போல?" கேட்ட விதத்தில் வெட்கத்தில் சமாளித்துவிட்டார். இருந்தும் விமானம் தரையிறங்கியதும், "அப்பாடியோ! ஒரு பிரச்சினையும் இல்லாமல் வந்து சேர்ந்திட்டம்! "என்று சொன்னார் பாருங்க...அன்று எங்களுக்கு இருந்த அதே பயம்!இத்தனைக்கும் போர் சண்டை பற்றிய எந்தவித நேரடி அனுபவமும் இல்லாதவர்கள். செய்திகளில் மட்டுமே அறிந்த சிறுவர்கள்.மனித மனங்களில் உள்ள விகாரங்கள் மறையுமோ!மாறுமா இந்த நிலைகள்?நம்பிக்கையே வாழ்க்கை. மாற்றமே மாறாதது!
 
#3
அருமை அக்கா. படிக்க தொடங்கும் போது நீங்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன, வாழ்வின் ஒவ்வொரு நாளும் எல்லா நிலைகளிலும் வலிகளோடே பயணம் செய்து இருக்கிறீர்கள். செய்தியாக படிக்கும் போதே அதை கடந்து செல்வது கடினமாகதான் இருக்கிறது.
 

Rosei Kajan

Administrator
Staff member
#4
அருமை அக்கா. படிக்க தொடங்கும் போது நீங்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன, வாழ்வின் ஒவ்வொரு நாளும் எல்லா நிலைகளிலும் வலிகளோடே பயணம் செய்து இருக்கிறீர்கள். செய்தியாக படிக்கும் போதே அதை கடந்து செல்வது கடினமாகதான் இருக்கிறது.
எல்லா வசதிகளோடு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத இன்றைய நிலையில் எங்கள் இளமைக்காலம் பற்றி ஒவ்வொரு கணமும் நினைத்துப் பார்ப்பேன் மா . மகன்களுக்கும் சொல்வேன் .நிச்சயம் முழுமையாக அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது .

இத்தனைக்கும் மத்தியில் சோக ராகம் பாடிக்கொண்டு திரிந்தோமா என்றால் நிச்சயம் இல்லை என்பேன். ஒருவகையில் பார்த்தால் பகட்டான முறையில் இல்லை என்றாலும் வாழ்க்கையை ரசித்துத்தான் கடந்து வந்தோம்.

நன்றிடா
 
Top