மருத்துவர் உமேஸ்வரன் அருணகிரிநாதன்- இதழ் 5

Rosei Kajan

Administrator
Staff member
#1
உமேஸ்வரன் அருணகிரிநாதன்வைத்தியராக வரவேண்டுமென்பது அநேகரது கனவாக இருக்கலாம். இருந்தும், அக்கனவு கைகூடுவதோ சிலருக்கு மட்டுமே. அதற்குக் கடின உழைப்பும், அசையாத மன உறுதியும், ஊக்கமும் நிச்சயம் வேண்டும். பெற்றவர்கள் அருகிருந் து, நாள்தோறும் பார்த்து பார்த்துச் சொல்லிக்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளே முடியாமல் தளர்ந்து விடும் பலநிகழ்வுகள் நாம் அறிந்ததே. அந்தளவு கடினமான கனவினைத் தனியொருவராக நின்று கையில் எட்டிப் பிடித்திருக்கிறார் ஒருவர்.

1542104761097.png

ஈழத்துத் தமிழர்களுக்கே பெருமையைத் தேடித்தந்து, ஜேர்மன் வாழ் மக்களின் புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்த வைத்தவர் அவர்! பெருமைக்குரிய திரு உமேஸ்வரன் அருணகிரிநாதன்!

இலங்கையில் அவருடைய ஐந்தாவது வயதுவரை நாட்டுப் பிரச்சனையை எதிர்கொண்டு பல இன்னல்களை அனுபவித்தவர். கூடப்பிறந்த சகோதரியை, சிறந்த மருத்துவ வசதி இல்லாத காரணத்தினால் நோய்க்குப் பறிகொடுத்தும் இருக்கிறார். இப்படி, தன் சிறுபராயத்தை நம்மில் பலர் போல மிகக் கடினமாகவே கடந்திருக்கிறார். ஆயினும் அந்த நாட்களை மறக்கமுடியாத நாட்களாக நினைவுகூரும் அவர், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் நாட்டிலிருந்து தனியாகப் புறப்பட்டிருக்கிறார்.

1542104808395.png

ஜேர்மன் நாட்டு கன்ஸ்லரின் அஞ்சலா மெர்கல் உட்பட, மந்திரிகள் அடங்கிய அவையிலே உரையாற்றும் போது, “கொழும்பு விமானநிலையத்தில் வைத்து, கவனமாகப் போய்வா தம்பி! என்று அம்மா சொன்ன போது, அந்த நிமிடத்தில்தான் அம்மா என்னுடன் கூடவர வில்லை, தனியாகப் பயணப் படப் போகிறேன் என்பதையே அறிந்தேன். கண்ணீருடன் நான் விடைபெற்றபோது அம்மாவுக்கு மூன்று சத்தியங்களை வழங்கினேன். என்றுமே மது அருந்தமாட்டேன், புகைக்கமாட்டேன். மீண்டும் திரும்ப உங்களைப் பார்க்க வரும்போது ஒரு வைத்தியனாகத்தான் வருவேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன். அன்றிலிருந்து ஒவ்வொரு நாடாக அலைந்து எட்டு மாதங்கள் கழித்து என்னுடைய பதின்மூன்றாவது வயதில் பிரங்புவர்ட் வந்திறங்கினேன்.” என்று கனத்த மனதோடு நினைவு கூறுகையில் கேட்பவர் மனமும் கனத்துப் போகிறது.

1542104878617.png

அதன்பிறகு மொழி படித்து, ஒன்பதாம் வகுப்பில், வகுப்புத் தலைவனாகவும் அதே வருடத்தில் பாடசாலை மாணவத்தலைவனாக வும் சிறந்து விளங்கியிருக்கிறார். தன் வகுப்பாசிரியர் மற்றும் சக மாணவர்களின் உதவியோடு பள்ளி ப்படிப்பை முடித்து, சிறந்த பெறுபேற்றுடன் பல்கலைக்கழகத் துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வைத்தியராகப் பட்டம் பெற்று, ஜேர்மன் நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருக்கிறார்.

‘இதையெல்லாம் சாதிக்க நிறையப் போராடியிருக்கிறேன்’ என்று சொல்லும் அவர் இன்றைய தலைமுறையினருக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

‘என் இலக்கை எட்டியதும் ஓய்ந்துவிடவில்லை நான். என் கனவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.’ என்றவர், வைத்தியராகப் பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல், ‘இதய சத்திர சிகிச்சை நிபுணராகவும்’ தன் மேற்படிப்பை முடித்து, தலைசிறந்த வைத்தியராகத் திகழ்கிறார்.

‘இலக்கை அடைந்ததும் அடுத்த கனவைக் காணவேண்டும். அதை நோக்கி நகரவேண்டும்.’ என்று அவரின் வாழ்க்கைப் பாடத்திலிருந்து நமக்கு பாடம் சொல்லித் தருகிறார் திரு உமேஸ்கரன் அருணகிரிநாதன் அவர்கள்!

இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட சின்ன மாமரக்கன்று வளர ஆசைப்படுகிறது. அதற்கு வேரும் உண்டு. ஆனால், அந்த வேர்கள் சிதைவடைந்திருக்கிறது. அதற்குப் புது வேர்கள் தேவைப்பட்டது. ஜேர்மன் மண்ணிலே புது வேர்களை உருவாக்கி அது வளர்ந்தும் நிற்கிறது என்று உதாரணம் சொல்கிறார்.

‘என் வேலைகள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் பாத்திரம் கழுவுகிறவனாக, மாக் டொனால்ட்சில் விற்பனையாளனாக, வைத்தியனாக, இதய சத்திரசிகிச்சை நிபுணனாக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது’ என்று சிரித்துக்கொண்டே சொல்லும் அவர், நம் புருவங்களை உச்சிமேட்டுக்கே கொண்டு சென்றுவிடுகிறார் என்றால் பொய்யில்லை. எங்கு ஆரம்பித்து எங்கு வந்து நிற்கிறார் என்று பாருங்கள்.

‘என் தோற்றத்தைக் கொண்டோ, என் நிறத்தைக் கொண்டோ எங்குமே தேங்கவில்லை நான். எனக்குத் தேவையாக இருந்தது என் இலக்கை நான் அடைகிறேனா என்பது மட்டும்தான். அதனை நோக்கி ஓடினேன். ஒவ்வொரு இலக்கையும் அடையும்போது அடுத்த ஒன்றை என் இலக்காக நிர்ணயித்து விடுகிறேன்.’ அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்குள் பெருமிதத்தையும், கண்திறப்பையும் ஒரே சமயத்தில் உருவாக்கிக் கொண்டே போகிறது.

‘சரியான காலத்துக்காகக் காத்திருக்கக் கூடாது. கிடைக்கும் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்கிறார் ஆணித்தரமாக.

‘அன்று சின்ன மாமரக் கன்றாக வந்த நான் இன்று வளர்ந்த மாமரமாய் கிளை பரப்பி நிற்கிறேன். இன்று என் வேர்கள் இங்கே ஆழமாய் வேர்விட்டுவிட்டன. ஆனால், நான் ஜேர்மன் நாட்டின் ஐஷல் மரமாக மாறவில்லை. மாறவும் முடியாது. மாமரமாகவேதான் இருக்கிறேன். ஆனால், ஆழமாக வேர்விட்டு தழைத்தோங்க முடியும்’ என்று தன்னையே உதாரணமாகக் காட்டிச் சொன்னவர், தான் யார் தன் பின்னணி என்ன என்பதையும் அப்பெரிய மேடையில் உணர்த்தத் தவறவில்லை.

1542104928083.png

அறிவில் செறிந்த, ஆற்றல் மிகுந்த, நமக்கெல்லாம் பெருமை சேர்த்த நம் தாயகத்து உறவான வரை, இன்னுமின்னும் பல வெற்றிகள் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தி, அவரைப் பற்றி நம் செந்தூரத்தின் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மிகவுமே பெருமை கொள்கிறோம்.
 

Attachments

Last edited:
Top