முழுநாவல் மயிலிறகாய்... முழுக்கதை

Status
Not open for further replies.

Rosei Kajan

Administrator
Staff member
#1
அத்தியாயம் 1
“எவ்வளவு நேரமாக எழுப்புகிறேன்; ஆறுமணியாகப் போகுது எழும்படி!” தலைவரை போர்வையால் மூடியிருக்க, பெரிதாக மூச்செடுத்துவிட்டு உறங்கும் தங்கையை எழுப்பியவாறே, போர்வையை அகற்றினாள் அஞ்சலி.

“க்கா, இன்னும் பத்தே பத்து நிமிஷம்!” மீண்டும் இழுத்து மூடிக்கொண்டாள் அவள் தங்கை.

தங்கையை டியூஷனுக்கு அனுப்ப எழுப்பிக் களைத்துப் போனவள், “இனி நீயாக எழுந்தால் சரி, நான் எழுப்ப வரமாட்டேன்.” சலிப்போடு வெளியேற,

“மனிசருக்கு எப்பதான் பத்துமணிவரை நித்திரை கொள்ளக் கிடைக்குமோ!” அலுத்துக் கொண்டாலும் எழுந்துவிட்டாள் தங்கை.

வாயிலருகில் சென்றிருந்த அஞ்சலி, சகோதரியைச் செல்லமாக முறைத்தாள்.

“ஹ்ம்...முதல், எக்ஸாமில் நல்ல ரிசல்ட் எடுத்துவிட்டு ஒருகிழமைக்கு எழும்பாது தூங்கு; யாரும் எழுப்ப வரமாட்டோம்.” என்றவள், சிணுங்கிய தங்கையை கண்டிப்போடு பார்த்தாள்.

“அதை விட்டுவிட்டு, கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக எழுந்து, குளித்ததாக பேர் பண்ணிவிட்டு, டியூசனுக்கும் பள்ளிக்கும் அரக்கப் பறக்க ஓட வேண்டுமா?” என்றதும் விருட்டென்று எழுந்தமர்ந்து கொண்டவள்,

“போதும்கா போதும்; விடியவெள்ளன ஆரம்பிக்காதீங்க; என் காது இரண்டும் பாவம்கா; ஒரே அழுகை; மிச்சத்தை நாளைக்குச் சொல்லுங்க!” தமக்கையை கேலி செய்தவாறே, அறைமூலையில் இருந்த துணி ரக்கில் தொங்கிய தன் துவாயை இழுத்தெடுத்த வேகத்தில் வாயிலில் நின்ற தமக்கையை இடித்துவிட்டு, கிணற்றடி நோக்கிச் சென்றாள்.

செல்லமுறுக்கோடு விரைந்த தங்கையை முறுவலோடு பார்த்திருந்துவிட்டு, “ அம்மா கோப்பி” என்றபடி வந்த மூத்தமகளை வாஞ்சையாக வருடின தாய் தேவகியின் விழிகள்.

சிறுவயதிலிருந்து இன்றுவரை வீட்டுக்கு மூத்தவளாக , வயதுக்கு மீறிய பொறுப்புணர்ச்சியோடு ஒரு தாயைப் போலவே தங்கைகளைப் பாரமரிப்பவள் இவள். தன் அப்பம்மா , அம்மா போல அதிகாலையில் எழுவதும், வீட்டு வேலைகளில் உதவுவதும் இவளது சிறுவயது பழக்கங்களாகும்.

‘இந்த இருபத்தியொரு வயதிலேயே இவளுக்குத் தான் எத்தனை முதிர்ச்சி!’ எனும் திருப்தியான உணர்வு ஏற்படுத்திய உவகையோடு காஃபியைக் கலந்து மகளிடம் நீட்டினார் தேவகி.

மகள் காஃபியை வாங்கி உறிஞ்ச, “என்னம்மா, இந்த குளிருக்குள்ள தலைக்குக் குளித்து விட்டாயா? நன்றாகத் துடைத்தாயா?” கேட்டவாறே, மகளின் முதுகில் அடர்த்தியாய் படர்ந்திருந்த சுருண்ட சிகையில் கை வைத்தவர், மறுகணம், செல்லக் கண்டிப்போடு பார்த்தார்.

“ பார், அப்படியே ஈரமாக இருக்கு ! போய் வடிவாத் துடையம்மா. கையோடு சின்னவளையும் எழும்பச் சொல்லு; தோட்டத்திலிருந்து அப்பா வரும் நேரம், தூங்கிக் கொண்டிருந்தால் கத்துவார்.” என்றவாறே , காலைவேலைகளின் அழைப்பில் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் அவர்.

இக்குடும்பத்தின் ஆணிவேரான அமிர்தலிங்கம், ஒரு விவசாயி . கிளிநொச்சி உதயபுரத்தில், வீட்டின் பின்புறமாகப் பரந்து விரிந்து காணப்படுகின்றது அவர்களின் விவசாய நிலம்.

கச்சான், மிளகாய் , மரக்கறிகள் , மரவள்ளி , வற்றாளை என, எப்பக்கம் திரும்பினாலும் பசுமையின் சாரலை அள்ளித் தெளிக்கும் அத்தோட்டமே இக்குடும்பத்தின் ஆதாரம்.

தம் தேவைக்குச் சற்று அதிகமாகவே கிடைக்கும் தோட்ட வருமானம், மகிழ்வையும் அமைதியையும் அள்ளித்தரும் குடும்ப அங்கத்தினர் என, சந்தோசமாக வாழ்ந்து வரும் குடும்பம் இவர்களுடையது.

அமிர்தலிங்கம்,தேவகி தம்பதியனரின் மூன்று பெண்பிள்ளைகளும் மூன்று நல்முத்துக்கள். “மூவருமே பெண்ணாகப் போய் விட்டார்களே!” என்றோ, “ஒரு மகன் பிறக்கவில்லையே!” என்றோ, சற்றும் தோன்றா வண்ணம், தம் அன்பாலும் ஆளுகையால் அக்குடும்பத்தை வளைத்துப் போட்டிருந்தார்கள் மகள்கள் மூவரும்.

அதோடு, அமிர்ந்தலிங்கத்தின் பெற்றோரும் இவர்களோடு தான் வசித்து வருகின்றனர்.

“பைக்கா. பள்ளிக்கூடம் முடிய டியூசனுக்குப் போய்ட்டுத்தான் வருவேன்.” பெரியதங்கை தன் தோழியோடு புறப்பட்டுச் செல்ல, கேட்டை மூடிவிட்டு உள்ளே திரும்பிய அஞ்சலியின் கால்கள் வீட்டின் முன்புறம் பரந்து கிடந்த தோட்டத்தில் மென் நடைபோட்டன!

பனிப்புகார் விலகாத அக்காலையில் , மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கும் ஆதவனின் கள்ளச்சிரிப்பில் கண்சிமிட்டும் மலர்க்கூட்டத்தை, சொட்டுச் சொட்டாக இரசிக்க முற்பட்டன அவள் அழகு நயனங்கள்.

பனியின் தீண்டலில், பாரம் தாங்காது கனத்து நிற்கும் வண்ண வண்ண ரோஜாக்கள், அவள் விரலின் மென் ஸ்பரிசத்தில் ஆனந்தித்து, தம்மீது படர்ந்திருந்த பனித்துளிகளை செல்லமாய் உதிர்த்தன!

ஒருபுறமாக வரிசைகட்டி நின்ற பலவண்ண செம்பருத்திகள் , தூய வெண்மையில் கண்சிமிட்டிய நித்திய கல்யாணி , செம்மஞ்சலில் கொத்துக் கொத்தாக கனகாம்பரம் என, மொத்த மலர்க்கூட்டமே இவள் பார்வையின் ஸ்பரிசத்தில் மெல்லிய நாணத்தைப் பூசி, இவள் யௌவனத்தை இரசிக்க முயன்றன!

‘ரம்மியம் என்பதின் மொத்தப் பொருளும் நீதான் பெண்ணே!’ மலர்களின் பலத்த குரலோசைக்கு இவள் தரப்பிலிருந்து மறுப்புக் கிளம்பியது!

“மயக்கும் அழகு என்றால் உங்களை விட்டால் யார் பொருந்திப் போவார்!” முணுமுணுத்தபடி, நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒருவித பாசத்தோடு பராமரித்து வரும் தோட்டத்தை மீண்டும் ஒருமுறை விழிகளால் தழுவியவளின் பார்வை மெல்ல மெல்ல மங்கியது.

அக்கணம், மனதை வியாபித்திருந்த அதிருப்தி விழிகளால் தளும்ப முயன்றது!

“இன்னும் எத்தனை நாட்கள்!? ஒரு கிழமைக்குத்தானே! அதன் பிறகு? உங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவேன். அப்போதும் என்னை நினைத்துக் கொள்வீர்களா?” அவளின் செம்மொட்டு இதழ்கள் துடித்தன! மனமோ கனத்தது.

இவள் என்ன புத்தி பேதலித்தவளா? அல்லது அறியா வயதுச் சிறுமியா? என வியக்கும் வகையில் தளம்பி நின்றாள் அஞ்சலி!

'கொஞ்சும் அழகுடன் மிளிரும் அற்புத குருவிக்கூடு என் வீடு! ‘அதிலிருந்து நான் தூரமாகப் போகிறேனே!’ எனும் எண்ணம், தயை தாட்சண்யமின்றி அவள் இதயத்தை நசுக்கவே செய்தது.

திருமணம் என்பது, ஒரு பெண்ணை அவள் பிறந்த வீட்டிலிருந்து பிரித்தெடுத்து, மற்றுமொரு புதிய சுழலில் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பது புதிதல்லவே!

அதற்கென்று, ‘பிறந்து இத்தனை வருடங்களாக வளர்ந்த இடத்தை, உறவுகளை, பார்க்க வேண்டும் எனும் ஆசை எழும் போது வந்து பார்த்துச் செல்லும் சந்தர்ப்பம் கூட அற்றுப் போகும் வகையில் அத்தூரமாக வெளிநாட்டு மணவாழ்வு தேவையா?’

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
அவளது உள்ளத்தில் எழுந்த கேள்விக்கு விடைதேட முயலும் பாக்கியம் ஏனோ அவளுக்குக் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் .

“ஜாதகம் பொருந்தியிருக்கு; தம்பியும் தெரிந்த வீட்டுப்பிள்ளை; பார்வைக்கும் கம்பீரமாக இருக்கிறார்; இந்த இடத்தையே முடித்து விடுவோம்.” அவள் அன்புத் தந்தையின் முடிவல்லவா இது!

“எப்படித்தான் இவர்களையெல்லாம் பார்க்காது இருக்கப் போகிறேனோ!” முணுமுணுத்தவள், “அக்கா! அஞ்சலிக்கா!” சட்டென்று வந்து மோதிய உரத்த குரலில் தன்னுணர்வு பெற்று, விழிகளை அழுந்தத் துடைத்தாள்.

“எங்கங்கா இருக்கிறீங்க? என் தமிழ் கொப்பியைக் கண்டீங்களா? நேரம் போய்ட்டுது வந்து எடுத்துத் தாங்க.” தொடர்ந்த கடைசித் தங்கையின் கூச்சல், அவளை, விரைந்து வீட்டினுள் நுழைய வைத்தது.

“அது எப்படி எப்போது பார்த்தாலும் உனக்கு மட்டும் ஏதாவது தொலைந்து போகும்!? ஒரு பொருளை இதில் தான் வைக்க வேண்டும் என்று என்றைக்காவது நினைத்திருப்பாயா?” கண்டித்தவாறே எதிர்பட்ட அவள் அப்பம்மா சிவகாமி, “இந்தா, இந்த கொப்பியா பார்!” முறைப்போடு கொடுக்க, சட்டென்று பறித்தெடுத்தாள் அவரின் சின்னப்பேத்தி.

“படிக்கிற வயதில் கந்தையரை கல்யாணம் செய்துவிட்டு கிழவியான பிறகு என் கொப்பியை எடுத்துப் படிக்கிறாயா?” நெளித்தவாறே, “ஏய், இந்த வாய்க்கு என்னிடம் வாங்கப் போகிறாய்.” என, முறைத்த சிவகாமிக்கு பழிப்புக் காட்டியவாறே உள்ளே ஓடி மறைந்தாள் சின்னவள்.

“அப்பம்மாவோடு இதென்ன பேச்சு ஓவி!” சமையலறையிலிருந்து கண்டித்தார் தேவகி.

“எல்லோரும் செல்லம் கொடுத்துக் கொடுத்து அவளுக்கு வாய் நீண்டு போச்சு!” புத்தகப்பையோடு வந்த இளைய பேத்தியின் காதை வலிக்காது முறுக்கினாலும் அதில் ஏகத்துக்கும் பாசமே வெளிப்பட்டது.

“அக்கா சிகாமியின் கொடுமையிலிருந்து என்னைக் காப்பாத்துங்கோ!” வாயிலில் நின்றவாறே தங்கையின் கலாட்டாக்களை பார்த்து நின்ற அஞ்சலியை அழைத்தாள் சின்னவள்.

அப்போதுதான் பெரிய பேத்தியைப் பார்த்த சிவகாமி, அவள் நின்ற நிலையைப் பார்த்து, சின்னவளை விட்டுவிட்டு பெரியவளிடம் விரைந்தார்.

“என்னடாம்மா? முகம் ஏன் ஒருமாதிரியாக இருக்கு?” கேட்டவர் பார்வையில் அவள் விழிகளின் மினுக்கம் தப்பவில்லை.

“அஞ்சலி! அழுதியா என்ன?”

“இல்லை அப்பம்மா; நான்...ஏன்...அழப்போகிறேன்?” கேட்கும் போதே அவள் குரல் பிசிறியது.

“ராசாத்தி, இப்போ ஏன்டா கண் கலங்குறாய்?” பேத்தியை அணைத்துக்கொண்டார் அவள் கலக்கத்தின் காரணம் அறியாதவரா அவர்?! இவள் திருமணம் முற்றாகிய நாளிலிருந்து, பிரிவுத் துயரில் முழ்கி மூச்சுமுட்டிப் போய் நிற்பவரில் இவரும் ஒருவராச்சே!

கூடத்தில் நடந்த இவர்களின் உரையாடல்களை செவிமடுத்தவாறே வந்த சிவகாமியின் கணவர் கந்தையா, முடிந்த மட்டும் மனைவியை முறைத்தார்.

“நம்ம பிள்ளை கண்கலங்குவது ஏன் என்று உனக்குத் தெரியாதாக்கும்!” குற்றம் சாட்டும் குரலில் ஆரம்பித்த கணவரை சுட்டுவிடும் பார்வை பார்த்தார் சிவகாமி.

அதைச் சிறிதும் அசட்டை செய்யாத கந்தையா பேத்தியின் தலையைப் பரிவாகத் தடவினார்.


இதைப் பார்த்து, கலங்கிய விழிகளை மறைத்துக் கொண்ட சின்னவள், “பாச நாடகம் அரங்கேறுதம்மா!” சலித்துக்கொள்வது போல் நடித்தவள், “நீங்க எனக்குச் சாப்பாட்டைத் தாங்க; பள்ளிக்கு நேரமாச்சு!” சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

“அஞ்சலி, இங்க பார், பெண்ணாகப் பிறந்தால் இன்னொரு வீட்டுக்குப் போய்த்தானே ஆகவேண்டும்.” கந்தையாவின் குரலில் நெகிழ்ச்சி!

“எல்லோருக்கும், உன் பாட்டிபோல பிறந்த வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை கிடைப்பார்களா?” கேலி பேசியவர், மனைவியின் வெட்டும் பார்வையைத் தவிர்த்து பேத்தியோடு பேச்சைத் தொடர்ந்தார்.

“என்ன, எங்கட காலத்தில் என்றால் நினைத்தவுடன் போய்வரக் கூடிய இடங்களில் தான் பெரும்பாலும் சம்பந்தம் அமையும்.” என்றவர் குரலில் இயலாமைதான் குடி வந்திருந்தது.

 

Rosei Kajan

Administrator
Staff member
#3
“இப்போ நம்ம நிலமையைப் பார், நம்ம சாதி சனம் உலகம் முழுதும் பரந்து வாழ்கிறார்கள். இதில் சந்தோஷம் கொள்வதைவிட, இப்படி, கைக்குள்ள வளர்த்த பிள்ளைகளை பிரிய வேண்டியும் வருதே என்று நினைக்கும் பொழுது தான் மனம் தாங்குதில்லை!” தழுதழுத்தவர்,

“உன் அப்பாவுக்கும் எங்க பேச்சு காதில் ஏறவில்லை. வெளிநாடு எல்லாம் வேண்டாம் என்றால் கேட்டால் தானே!” தொடர்ந்து சலிப்போடு கடுகடுத்தார்.

“பச்...சரி விடு; இனி இதையெல்லாம் கதைத்துப் பயனில்லை.” சமாதானப்படுத்தியவர், “இன்னும் ஒரு கிழமையில் கொழும்பு போய் விடுவாய் ராசாத்தி; அதுவரை சந்தோஷமாக இருக்க வேண்டும்.” என்றவாறே, பேத்தியின் தலையை வாஞ்சையாகத் தடவியவரின் குரலில் பிரிவுத் துயரும் பாசமும் குழைந்து நின்றது.

கணவன் கூறுவதைக் கண் கலங்கக் கேட்டிருந்த சிவகாமியும் , அப்போது அங்கே வந்த தேவகியுமே, ' அதுதானே … இந்த ஊரிலேயே கல்யாணம் சரி வந்திருக்கலாம்!’ என, ஆதங்கம் கொள்ளாமல் இல்லை.

“அதுதான் அவ்வளவு இலகுவில் நடக்கவில்லையே! முடிந்ததைத் திரும்பத் திரும்பக் கதைத்துக் கண்ணைக் கசக்குவதை விடுங்க.” பொதுவாகச் சொல்லி, “வாம்மா, பசிக்குது சாப்பாடு எடுத்து வை; நீங்களும் வாங்க.” கணவரையும் பேத்தியையும் கையோடு அழைத்துச் சென்றார் சிவகாமி.

இச்சம்பந்தம் முடிவான அன்று , இதையே மிகுந்த மனக்குழப்பத்துடன் தன் மகனிடம் கேட்டிருந்தார் சிவகாமி. அப்பொழுது மகன் சொன்ன பதில் இப்போதும் அவர் மனதில் நிழலாடியது.

“ஏம்பா லிங்கம், இவ்வளவு தூரத்திலா மாப்பிள்ளை பார்ப்பது? தாய் தகப்பன் நமக்குத் தெரிந்தவர்கள்; அயலில் இருப்பவர்கள் என்பதும், பெடியனை வெளிநாடு போக முதல் நமக்குத் தெரியாதா என்பது எல்லாம் ஒரு கதையா தம்பி!” மகனைக் கடிந்தவாறே தன் மறுப்பைத் தெரிவித்தார் இவர்.

தாய் ஆரம்பிக்க, அமைதியாகக் கேட்டிருந்தார் அமிர்தலிங்கம்.

சிறுமௌனத்தின் பின் தாயை ஏறிட்டவர், “தேவகியும் அப்பாவும் கதைப்பது போலவே நீங்களும் கேட்கிறீங்க? நான் என்னமோ என் மகளை வேண்டுமென்றே வெளிநாடு அனுப்புவது போல சொல்லுறீங்களேம்மா!” என்றவர் குரலில் பிரிவுத்துயரின் சாயல் இல்லாமலில்லை.

“எத்தனை பாடுபட்டு கண்ணுக்குள்ள வைத்து வளர்த்த பிள்ளையை , சும்மா போனாப் போகுது என்று கட்டிக் கொடுப்பேனா சொல்லுங்க பார்ப்போம்?!

உள்ளுரிலும் இரண்டு ஜாதகம் பொருத்தமாக வந்தது தெரியும் தானே? அந்த இரண்டு வீட்டிலேயும், ‘சீதனம் எல்லாம் எதிர்பார்க்க இல்ல; உங்க பெண்ணுக்கு செய்யாமலா விடப்போறீங்க?’ என்று சொல்லிச் சொல்லியே என்ன எல்லாம் கேட்டார்கள்!

அதையெல்லாம் செய்ய நினைத்தால் நம்மிடம் இருப்பதில் முக்கால் வாசியையும் விற்க வேண்டுமேம்மா. பிறகு, மற்ற இரண்டு பிள்ளைகளின் பாடு? நம்ம பாடு?” என்றவர், அப்போதும் தெளியாது அமர்ந்திருந்த தாயைப் பரிவோடு பார்த்தார்.

''நீங்க பயப்பவது போல ஒன்றும் நடவாதம்மா! வெளிநாட்டில் இருக்கும் எல்லாப் பெடியளும்(பையன்கள்) கெட்டழிஞ்சா அலைகிறார்கள்?

அதோடு, மாப்பிள்ளை சுதாகர் நமக்குத் தெரிந்த குடும்பம்; அருமையான பிள்ளை. அவர் அக்காவும் அதேநாட்டில் தானே இருக்கிறா. அதனால், அதையும் இதையும் நினைத்துக் குழம்ப வேண்டாம்மா; தேவகிக்கும் அப்பாவுக்கும் நீங்க தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.” என, தன் முடிவில் உறுதியோடும் தான் பார்த்திருக்கும் மாப்பிள்ளையில் பெரும் நம்பிக்கையோடும் உரைத்தவர், மனைவி, தந்தையைச் சமாதானம் செய்விக்கும் பொறுப்பையும் தாயிடம் கொடுத்திருந்தார்.

“கம்பஸ் கிடைத்திருந்தால் இன்னும் சில வருடம் பொறுத்திருக்கலாம்; இது அதுவும் இல்லை.” என்றவாறே மகன் சென்றிருக்க, மகனின் வாதத்தை இவர் ஏற்றுக் கொள்ளவே செய்தார்.

பிள்ளைகள் மூவருமே படிப்பில் சுட்டியாக இருந்தாலும் இரண்டு முறை முயன்றும் விஞ்ஞானப்பிரிவில் படித்த அஞ்சலியால் பல்கலைக்குள் நுழைய முடியவில்லை .

இலங்கையில், எத்தனை கெட்டித்தனம் இருந்தாலும் பல்கலைக்குள் நுழைபவர்கள் ஒரு குறிக்கப்பட்ட வீதத்தினர் மட்டுமே என்கையில், பல்கலை போக வேண்டும் என்கின்ற கனவோடு படித்தாலும் அது பலிக்காது போய் விடுவதே அதிகம்.

பல்கலை அனுமதி கிடைக்கவில்லை என்று முதலில் மிகவும் மனம் வருந்திய அஞ்சலி , பின், தன்னைத் தேற்றிக்கொண்டு, வீட்டிலிருந்தே படிக்கக் கூடிய கம்ப்யூட்டர் கல்வியைத் தொடந்தவாறே, பிள்ளைகளுக்கு டியூஷனும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள்.

அதேவேளை, அவளைத் தொடர்ந்து இன்னும் இருவர் இருப்பதால் , இவளுக்கு நல்ல சம்பந்தம் அமைந்தால் திருமணத்தை நடத்துவோமே என்ற நோக்கத்தில் வரன் பார்க்கத் தொடங்கினார் அவளின் தந்தை.

அதையறிந்த அவர்கள் தெருவில் வசிக்கும் கணேசன் , இலண்டனில் இருக்கும் மகனின் ஜாதகத்தைக் கொடுக்க , அது அஞ்சலியின் ஜாதகத்துடன் பொருத்தமானதாக இருக்கவே , அந்த வரனையே பேசி முடித்தார் அமிர்தலிங்கம்.

மாப்பிள்ளை சுதாகர் , அஞ்சலியை விட ஒன்பது வயது பெரியவனாக இருந்தாலும் , ‘பத்து வருடங்களுக்கு முன்வரை தமக்குத் தெரிந்த பையன்; பிரச்சனை இல்லாத குடும்பம்; தனியாக இல்லாது சொந்தத் தமக்கையும் அதேநாட்டில் வசிப்பதால் நடத்தையைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படத் தேவையில்லை.’ என எண்ணியதால் தான், மனைவியும் பெற்றோரும் வெளிநாட்டுச் சம்பந்தம் வேண்டாம் எனக் கூறிய போதும் , இச்சம்பத்தத்தையே பேசி முடித்தார் லிங்கம்.

ஆனாலும், வீட்டினர்களுக்கும், பெற்றவர் மனம் நோகக் கூடாது என்று சம்மதம் தெரிவித்த அஞ்சலிக்கும் இத்திருமணத்தை முழுமனமாய் ஏற்க முடியாததாக இருக்கின்றதே!


மதிய உணவின் பின், “ தேவகி, இந்த டவுன் வரை போயிட்டு வாறேன்.” என, சைக்கிளில் வெளியேறினார் அமிர்தலிங்கம்.


மாலையில் டியூஷனிற்கு பிள்ளைகள் வருவார்களாதலால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக , வீட்டினருகில் போடப்பட்டிருக்கும் ஓலையால் வேய்ந்த கொட்டகைக்குள் சென்றமர்ந்தாள் அஞ்சலி.

இப்போதெல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தி தன் அன்றாட வேலைகளைச் செய்யத் தடுமாறி விடுபவள், எங்கெல்லாமோ கண்டபடி சுற்றிச் சுழன்ற மனதை ஒருநிலைப்படுத்த மிகவும் போராட வேண்டியிருப்பதை நினைக்கையிலேயே மனதுள் தொய்ந்து போனாள்.

என்று திருமணம் முடிவானதோ அன்றிலிருந்து இவள் இப்படித்தான் இருக்கிறாள். ‘வீட்டினரை விட்டு அவ்வளவு தூரமாகச் செல்வதா?’ என்பதில் ஆரம்பித்தது இவள் குழப்பம்.

இதுவரை, அவளுக்குத் தெரிந்து வீட்டினர் யாருமே தனித்து எங்கும் சென்று தங்கியதில்லையே! பல்கலை அனுமதி கிடைத்திருந்தால் கூட , தாத்தா அப்பம்மாவுடன் வீடு எடுத்திருந்தே படித்திருப்பாள்; அப்படித்தான் தீர்மானித்திருந்தார்கள். ஆனால் இப்போது!?
 

Rosei Kajan

Administrator
Staff member
#4
‘கல்யாணம் என்ற பெயரால், பெற்றவர்களை , அன்பே உருவான தாத்தாவை , இந்த வயதிலும் எங்களுக்கு ஈடு கொடுத்துக் கேலியும் கிண்டலுமாக இருக்கும் அன்பு அப்பம்மாவை , செல்லத் தங்கைகளை , ஏன், நான் பிறந்து வளர்ந்த இந்த ஊரினைப் பிரிய வேண்டியுள்ளதே!’ இந்த எண்ணம் தரும் துன்பத்தை ஜீரணிக்க மிகவும் கஷ்டப்பட்டுப் போகிறாள் இவள்.

அடுத்த பிரச்சனை, தந்தை அவளுக்குப் பார்த்துள்ள மாப்பிள்ளை சுதாகர்!

திருமணத்திற்குச் சம்மதம் சொன்ன இந்த இரண்டு மாதங்களுள் சில தடவைகள், குறிப்பாகச் சொல்வதென்றால் மூன்றுதடவைகள் அழைத்திருந்தான்; மிகச் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் உரையாடியும் இருக்கிறான். ‘அது போதுமா? போதாதே!’ என்கின்றது இவளுள்ளம்.

‘ஒவ்வொருநாளும் மணிக்கணக்கில் உரையாட வேண்டுமென்று எதிர்பார்க்கிறாயோ! அங்கே, அவர் என்ன வேலைவெட்டி இல்லாமலா இருக்கிறார்? பொறுப்பானவர் அவர்.’ அவன் தாய் மகனைப்பற்றி வாயோயாது சொன்னவற்றை வைத்து, இப்படி, அவனுக்காகவே யோசித்துப் பார்த்தாலும் எங்கோ இடித்தது அவளுக்கு!

‘ஒருவிடயத்தை அவ்வளவாக விருப்பமின்றி அரைமனதாகவே ஏற்றுக்கொள்ள முயன்றால் இப்படித்தான் தேவையற்ற பிரேமை தோன்றும்!’ என அதிலிருந்து வெளிவரவும் முயன்றாள் தான். காரணம், அவனும் அவன் குடும்பமும் ஒரேயடியாக அறியாத அந்நியர் அல்லவே!

அவனுடைய அம்மாவும் அப்பாவும் இவளின் தங்கை அபியுடன் படிக்கும் அவனது தம்பியும் அன்பாகக் கதைப்பார்கள். அயலிலும் வசிக்கிறார்கள். பிறகென்ன! இவ்வாறு, இவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சமாதானங்களும் வர வர வலுக்குறைந்துதான் போகின்றது. அவளையுமறியாது ஒரு வகைப் பயம் ஆட்டி வைத்து வேடிக்கை பார்க்கவும் விளைந்தது.

இப்படி, தன்னுள் உழன்று கொண்டிருக்கையில், “ ஏன்டி எருமை கண்ணத் திறந்து கொண்டே தூக்கமா?” என்ற குரலில் திடுக்கிட்டு நடப்புக்கு வந்தாள் அஞ்சலி.

“என்னடி அப்படிப் பார்க்கிறாய்? நான் யாரென்று தெரியவில்லை போலிருக்கே! ஒஹ்! மறந்து போனேன் பார்; லண்டன் பிரிட்ஜில் ஹீரோவோட ஆட்டத்தில் பிசிபோல!” கலகலத்தவாறே, உள்ளே வந்தாள் இவளின் தோழி ரோகினி.

இருவருமே சிறுவயதுத் தோழிகள். ரோகினி, இப்போது பல்கலையில் இளநிலை விஞ்ஞானம் பயில்கிறாள். அஞ்சலி கொழும்பு போக இருப்பதால் வழியனுப்பும் நோக்கில் ஊருக்கு வந்திருக்கிறாள்.

'' ஹேய்! வாடி , வா வா . எப்படி இருக்கிறாய்?” முறுவலோடு வரவேற்றாள் அஞ்சலி. தோழியைக் கண்டதில் சற்றுமுன் வாடியிருந்த வதனம் பூவாய் மலர்ந்திருந்தது.

“ இருக்கிறம் இருக்கிறம்; நாங்க நல்லா இருக்கிறம். நீ எப்படி? ஒரே கனவுலகிலா? அதுதான், டியூசனுக்கு வரும் பிள்ளைகளுக்கு பிழை பிழையாகச் சொல்லிக் கொடுக்கிறாயாமே! ஏன்டி எருமை உனக்கு இந்த நல்லெண்ணம்!” என, கேலி செய்தாள்.

திருமணப்பெண் இப்படியான கேலிக்கு ஆளாவது ஒன்றும் புதிதில்லையே! அக்கணமும் மிக இரம்மியமானதுதானே! ஆனால், அஞ்சலியால் அதை அவ்வளவாக இரசிக்க முடியவில்லை. அமைதியாகத் தோழியைப் பார்த்தவளின் விழிகள் கலங்கி விட்டன.

அதைக் கவனியாத ரோகினி, “சரி சொல்லுடி, என்னவாம் உன் ஆள்?” என்றபடி, இவளின் முன்னாலிருந்த வாங்கிலில் அமர்ந்தாள்.

இப்போது, தோழியை முறைத்தன அஞ்சலியின் விழிகள்.

“சும்மா விசர்க்(லூசு) கதை கதைக்காதேடி! நானே என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். இதில் நீ வேற!” என்றவளின் குரலின் பேதம், ரோகினியை, கேலியிலிருந்து விடுபட்டு தோழியை கூர்மையாக நோக்க வைத்தது.

“ கூல்டி செல்லம்...கூல். இப்ப என்ன கேட்டுவிட்டேன் என்று இப்படி சிடுசிடுக்கிறாய்! அப்போ, உன் ஆள் கால் பண்ணவில்லை போல. ஹ்ம்ம்... எதிர்பார்த்திருந்து ஏமாந்து போனாயாடி செல்லம்?” விழிகளைச் சுருக்கி வம்புக்கே வழி செய்தாள் ரோகினி.

வழமையாக, இப்படியான நேரங்களில் அவளுக்கு ஈடாக கதைசொல்லும் அஞ்சலியின் மௌனம் சட்டென்று உறைக்க, தோழியை உற்றுப் பார்த்தாள் ரோகினி. அப்போதுதான், அவளின் முகத்தின் இறுக்கமும் விழிகளின் கலக்கமும் இவள் கருத்தில் பதிந்தன.

“அஞ்சலி, உனக்கு மாபிள்ளையை பிடித்திருக்காடி?” நேராகவே கேட்டு விட்டாள். கல்யாணம் முற்றாகியதை தொலைபேசி மூலம் அறிந்திருந்தவளுக்கு இன்றுதான் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

‘இப்போ பார்த்தால் இவளுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையோ!’ பலத்த சந்தேகம் கொண்டாள் ரோகினி. அஞ்சலியின் மௌனம் தான் நினைத்ததையே ஊர்ஜிதம் செய்ய, “என்னடி, எதுவென்றாலும் சொல்லு; மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லையா?” சிறு கலவரத்தோடு கேட்ட தோழியை முறுவலோடு பார்த்தாள் அஞ்சலி.

“அப்படியெல்லாம் பிடிக்கும் பிடிக்கவில்லை என்றெல்லாம் இல்லையடி.”

“இதென்ன கதையடி? மழுப்பாமல் உண்மையச் சொல்லு.”

“ஒன்றையும் மழுப்ப இல்லையடி; பிடிக்குமா இல்லையா என்று யோசிக்க முதல், வீட்டை விட்டுப் போவதில் விருப்பம் இல்லை; அவ்வளவும் தான்.” இப்படிச் சொல்லும் போதே அவளது இமைகள் தவிப்போடு நீர் முத்துக்களைத் தவற விட்டன.

“இலங்கையிலேயே இருக்கத் தான் விருப்பம். கட்டாயமாக அவ்வளவு தூரம் போய் வாழத்தான் வேண்டுமா என்று இருக்கடி. சுத்திப் பார்க்க வேண்டுமென்றால் வெளிநாடு போயிட்டு வரலாம். ஆனால், அங்கேயே...” என்று இழுக்க,

“ நிறுத்துடி; விட்டால் பெரியபுராணமே படிப்பாய்! இங்கேயே … அதுவும் நாம விரும்புற மாதிரி வாழவேண்டும் என்றால் பெரிய கோடிஸ்வர வீட்டில் பிறந்திருக்க வேண்டும்; அதுவும் ஒத்தப் பிள்ளையாக!” குரலில் கேலியோடு இடையிட்டாள் ரோகினி.

“ஹ்ம்... இப்படி நமக்குப் பின்னும் முன்னும் வைத்துக்கொண்டு...சுத்திப் பார்க்கப் போகப் போறாளாம்; அதுவும் வெளிநாட்டுக்கு! ஆனாலும் உனக்கு ஆசை பெருசுடி!” தனது பாணியில் கிண்டலாகச் சொன்னவள், வாடிய முகத்தோடிருந்த தோழியின் கரங்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டாள்.

“இங்க பார் அஞ்சலி, உங்க அப்பாவைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார். பாவம் அவர்; வெளிநாடு என்ற ஒன்று தவிர மற்றும்படி சுதாகர் அண்ணாவ எந்த விதத்திலும் குறை கூற முடியாதே! அதனால் இப்படி அலட்டுவதை முதலில் நிறுத்து சரியா?” எடுத்துச் சொன்னாள்.

தோழி தீவிரமாகச் சொல்லச் சொல்ல அஞ்சலியின் வதனத்தை முறுவல் கைப்பற்றிக் கொண்டது. எப்போதும் ஆர்ப்பாட்டமும் கலாட்டாவுமாகத் திரிபவளின் பொறுப்பான பேச்சில் நெகிழ்ந்தது அவளுள்ளம்.

“ஒ.கே ஒ.கே பாட்டி, ஆனால் எனக்கு ஒரு சின்னச் சந்தேகம்; எனக்கே அவரை லேசாத்தான் நினைவிருக்கு! நீ என்னடா என்றால் நேற்றுவரை பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்லுறாய்! எப்படிடீ இப்படி?” என, அவள் கேட்டு முடிக்க முன்,

“அட! என்னடி நீ? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? அதுவும் நமக்கு! ஹா...ஹா…இப்போ வரும் போதுதான் கிளி ஜோசியம் பார்த்தேன்பா! உனக்காக இதைச்சரி செய்யமாட்டேனா சொல்லு பார்ப்போம்!” சளைக்காது குறுக்கிட்டாள் ரோகினி.

“ஆனால் ஒருவிஷயம்டி, உனக்கு குடிகாரன்களைக் கண்டால் பயம் தானே? அன்றைக்கு வட்டக்கச்சிக்குப் போயிட்டு வரும் போது சைக்கிளில் ஆடிக் கொண்டே வந்த மனிஷன் கீழ விழ இல்ல, அந்த ஆளைப் பார்த்துப் பயந்த நீ ... ஹாஹா.. ஹாஹா..விழுந்து …ஹாஹா …..கும்பிட்டாயே!'' அன்று நடந்ததை நினைத்து அடக்க மாட்டாமல் நகைத்தாள்.

“ஏய் எருமை, நீ பயந்து போய் என்னருகில் வந்ததால் தான் நான் விழுந்தேன்.” முறைத்தாள் அஞ்சலி.

'' ஹே...ஹே இது நல்ல கதையாக இருக்கே! எனக்கு குடிகாரன்களைத்தான் பிடிக்கும்; பிறகு பயமென்ன!” விழிகளை விரித்து அபிநயித்தாள் ரோகினி.

அதோடு, “கிளி ஜோசியத்தில அவர்... அதுதான் சுதாகர் அண்ண்ண்ண்ணன் ... நேர காலம் பார்க்காமல், குடிக்கிற தண்ணிக்குப் பதிலாக , வாய் கொப்பிளிக்க...போடி இந்தப் பெயரெல்லாம் எனக்கு சரியாத் தெரியாது ... அது ஏதோ ஒரு குடிவகை தான் ...அதைதான் பாவிப்பாராம்!” என்றவள்,

தோழியின் முகம் சிவப்பதைப் பார்த்தவாறே, “உண்மையாகத்தான்டி சொல்லுறன்; அந்தக்கிளி தொடர்ந்து இரண்டு மூன்று போத்தல் படங்களையே தேடித் தேடி எடுத்துப் போட்டுச்சடி...ஹா..ஹா...”

“எருமை உன்னை...” கிண்டல் செய்யும் தோழியை அடிக்கக் கையோங்கிக் கொண்டு எழுந்தாள் அஞ்சலி. அவளின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள் ரோகினி.

“ நீ பாவம் தான் …. ஆனால் என்ன செய்வது அப்படி இப்படிச் சமாளிடி. அது மட்டுமில்லாமல், அங்க போனதும் எனக்கும் ஒரு குடிமகனைப் பார்; நானும் உன்னோடயே வந்திடுவன். இரண்டு பேருமாகச் சேர்ந்து குடிமகன்களையும் லண்டனையும் ஒரு கை பார்க்கலாம்! ''

அவள் சொன்ன பாவனையில் இத்தனை நேரமாக இருந்து இறுக்கம் விலக, சிரித்தவாறே அவளைப் போட்டு அடிக்கத் தொடங்கினாள் அஞ்சலி.
 

Rosei Kajan

Administrator
Staff member
#5
பகுதி 2.

சூழவுள்ள மரங்களிலிருந்து வரும் பறவைகளின் குரலோசையும் அம்மாளிகை வீட்டினுள்ளிருந்து கசிந்து வரும் பக்திப் பாடல்களின் இசையும் இணைந்து அவ்வதிகாலைப் பொழுதின் இரம்மியத்தை அதிகரித்துக் காட்டியது.

கொழும்பு ‘பான்ஸ் பிளேஸி’லுள்ள அம்மாடி வீட்டின் வெளிப்புறத்தோற்றமே அதன் செல்வநிலையை தெள்ளத் தெளிவாக்கியது.

சுற்றி உயரமான மதில் சுவரும் வாயிலில் கூர்காவுமாக இருந்த வீட்டின் முன்புறம், இருமருங்கிலும் பச்சைப் புற்தரையுடன் பார்ப்போரை சொக்கவைக்கும் அழகிய மலர்த்தோட்டமும், நடுவில் கார் செல்லக் கூடிய பாதையுமாக கண்ணுக்குக்குளிர்ச்சியாக காட்சி தந்தது.

வீட்டின் பின்புறமாகச் சென்றால் பெரிய நீச்சல் குளத்துடன் கூடிய பசிய தோட்டம் ‘என்னோடு சிறுபொழுதைக் கழியுங்களேன்!’ என்றழைத்தது.

காலையில் எழுந்தவுடன் ஒரு சுற்று நடந்து விட்டு வந்த அவ்வீட்டின் உரிமையாளர் லோகன் , வெளிவிறாந்தையில் இருந்த கூடை நாற்காலி ஒன்றில் அமர்ந்தவாறே , கூர்க்கா கொண்டு வந்து வைத்த அன்றைய பத்திரிகையைக் கையில் எடுத்தார்.

கணவரைக் கண்டதும் தேநீரோடு வந்த மனைவி கமலா, கணவரிடம் ஒரு கப்பைக் கொடுத்துவிட்டு, “நடுப்பக்கத்தை என்னிடம் தாங்கோவன்.” கேட்டு வாங்கியவாறே அருகிலிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.

தேநீரை அருந்தியவாறே பத்திரிகையில் ஆழ்ந்திருந்த கமலா, ''இங்காருங்கப்பா நாளைக்கு காலையில் நாலு நாலரை வாக்கில ட்ரைன் வந்திடும் தானே? மறக்காமல் டிரைவரிடம் சொல்லி வைக்க வேண்டும்.” என, பேச்சைத் தொடங்க , சுவாரசியமாக பத்திரிக்கை பார்த்துக் கொண்டிருந்த லோகன் , மூக்குக்கண்ணாடி வழியாக கேள்வியாகப் பார்த்தார்.

“ என்னங்க மறந்திட்டீங்களா? நாளைக்கு அமிர்தலிங்கம் அண்ணா வாறார் என்று போன கிழமையே சொன்னேனே!” என்று கூறவும் தான் நினைவு வந்தவராய் புருவங்களைத் தூக்கினார் லோகன்.

“அட..மறந்தே போனேன்! நல்ல காலம் நினைவு படுத்தினீங்க .”

“ஏன்பா?”

“நாளைக்கு டிரைவர் வேலு லீவு; அதனால், பெரேராவை வரச் சொல்வோம்!”

“மறக்காமல் சொல்லிவிடுங்க. அமிர்தலிங்கம் அண்ணன் ஆட்டோ பிடிச்சி வாறேன் என்று தான் சொன்னவர்; நான் தான் தேவையில்லை, கார் அனுப்புகிறேன் என்றேன்.” என்றவர்,

“அஞ்சலி எவ்வளவு அருமையான பிள்ளை; விமலாவுக்குத் தான் கொடுத்து வைக்க இல்லை. ஹ்ம்... யார் யாருக்கு எவரெவர் என்று தலையில் எழுதியிருக்கோ அது தானே நடக்கும்.” என்றார் பெருமூச்சுடன்.

கையிலிருந்த பத்திரிகையை மடித்து அருகிலிருந்த சிறு மேசை மீது வைத்த லோகன், '' என்னப்பா நீங்க சொல்லுவது! சொந்தத்துக்க , அதுவும் சொந்த மச்சான் மச்சாள் கல்யாணம் செய்வதை மருத்துவமே வரவேற்பதில்லை. இப்படியான கல்யாணங்களைத் தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம் . அப்படிப் பார்த்தால் விமலாவின் மகன்கள் தங்களுக்கு அஞ்சலியைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று சொன்னது...எனக்கென்றால் சரியாப்படுது.” என்றார்.

“ நீங்க சொல்வதும் சரிதான் . ஆனால், விமலாவின் மகன்கள் இதைக் காரணமாகச் சொல்லி மாட்டேன் என்று சொல்ல இல்லையே! கனடாவில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு இலங்கையில் பெண், அதுவும் மாமா மகள் என்றாலும் வேண்டாம் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்.”

“அதிலேயும் பிழையில்லையே கமலா.”

“என்ன பிழையில்லை. இலங்கையிலிருந்து போற பெண்பிள்ளைகள் சரி வரமாட்டினமாம். தாங்க ஏதோ பாரடைசிலிருந்து குதித்தவர்கள் போலத்தான் பேச்சு!”

மனைவியின் கோபத்தில் சிரிப்புத்தான் வந்தது லோகனுக்கு.

கணவனின் சிரிப்பைப் பார்க்க முகம் சிணுங்கியது கமலாவுக்கு. “உங்களுக்கு நான் எது கதைத்தாலும் நக்கல் தான்.” என்றவாறே, குடித்து முடித்த தேநீர் கோப்பைகளோடு எழுந்தவர்,

“என்ன நாகரீகமோ! அவரவர் வாழ்க்கையில் நல்லா இருந்தால் சரிதான்; வேற என்ன சொல்வது!” என்றபடி வீட்டினுள் சென்று மறைந்தார்.

கல்யாணக் கதைகள் தலைகாட்டினால் போதும், கமலா ஏதோ ஒரு விதத்தில் வருத்தப்படுவார்.

“எல்லாம் தீபனுக்கு திருமணம் சரி வரவில்லையே என்கின்ற ஆதங்கம் தான்.” முணுமுணுத்தார் லோகன்.

“காலநேரம் கூடி வர எல்லாம் நல்லதே நடக்கும்.” தனக்குத் தானே சொன்னவர் தொடர்ந்து பத்திரிகையில் ஆழ்ந்தார்.

கமலாவின் சொந்தத்தங்கை விலாவின் கணவர் ராஜன், அஞ்சலியின் சொந்தத் தாய்மாமன். அதாவது தேவகியின் ஒரே தமையன். ராஜன், விமலா இருவருமே தம் இருமகன்களில் ஒருவருக்கேனும் , தேவகியின் பிள்ளைகளில் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பினர். ஆனால், அஞ்சலியை விட மூன்றும் நான்கும் வயது பெரிய ராஜனின் பிள்ளைகள் , தமக்கு, தாம் பிறந்து வளர்ந்த கனடாவில் தான் பெண் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் , அவர்களைப் பெற்றவர்களின் ஆசை நிராசையானது.

இவ்விடயத்தில் பெரியவர்கள் அனைவருக்குமே மனவருத்தம் தான். வெளியில் அவ்வளவாகக் காட்டிக்கொள்ளாது இருக்கின்றனர்.

விமலா குடும்பம் விடுமுறைக்காக இலங்கை வந்தால் , அஞ்சலி குடும்பமும் கொழும்பு வந்து போகும். அப்போதெல்லாம் பிள்ளைகள் மூவரினதும் அமரிகையான பழக்க வழக்கங்களால் ஈர்க்கப்பட்ட கமலாவுக்கு , அவர்கள் மீது தனி அன்புண்டு!

அஞ்சலியின் திருமணத்திற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் , அதுவரையிலும் அவள் கொழும்பில் வந்திருந்து வெளியுலகைப் பழகட்டும் என்று ராஜனும் வற்புறுத்திக் கூறியதால், ‘சரி, கமலா வீடுதானே; பிள்ளை பத்திரமாக , பாதுகாப்பாய் இருப்பாள்!’ என்று நினைத்து கொழும்புக்குக் கூட்டி வருகிறார் அமிர்தலிங்கம். 

Rosei Kajan

Administrator
Staff member
#6
இதேநாள் , இலங்கையின் வடமேல் பகுதியில் அமைந்துள்ள , இத்தீவின் பெரிய நகரங்களில் ஒன்றான குருநாகல் மாவட்டத்தில், ‘ஹேவாபொல’ என்ற இடத்திலுள்ள, நூற்றியைம்பது ஏக்கருக்கும் மேலான பரந்த தென்னந்தோப்பில், காலைப்பொழுதின், மொத்த சுறுசுறுப்பையும் தம்பணிகளில் காட்டியவாறே இயங்கிக் கொண்டிருந்தார்கள் அத்தோட்டத் தொழிலார்கள்.

இதற்குக் காரணமாக, தோட்டத்தில் தேங்காய் பறிப்பு ஆரம்பித்திருப்பதைச் சொன்னாலும், இங்கு வேலை செய்யும் சிங்கள - தமிழ் ஊழியர்களின் பாசத்துக்குரிய ‘பொடி மஹத்தயா’(சின்னமுதலாளி என்பதின் சிங்களச் சொல் ) தற்போது தோட்ட பங்களாவில் தங்கியிருப்பதே முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

பிரதீபன், முப்பதை எட்டவிருக்கும் கம்பீரமும் கவர்சியுமான இளைஞன்!

இவனின் தந்தை, தனது தந்தை காலத்துச் சொத்துக்களையெல்லாம் , தன் காலத்திலும் அழகாகப் பராமரித்து வளர்த்தவர் , தற்போது, மகன்கள், மருமகன் பொறுப்பில் விட்டுவிட்டு, அப்பப்போ மேற்பார்வை செய்வதுடன் நிறுத்திக் கொண்டார்.

தொழிலை விருத்தி செய்கிறேன் என்று இராப்பகலாகத் திரியும் பிரதீபன், அப்பப்போ, வீட்டினரின் முணுமுணுப்பையும் முறுவலோடு எதிர்கொள்ளத் தவறுவதில்லை.

“கல்யாண வயது தாண்டிப் போய்க்கொண்டே இருக்கு தம்பி; எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு நொட்டை சொல்லுகிறாய்! யாருக்குத்தான் வேலையில்லை? அதற்காக, காலா காலத்தில் நடக்க வேண்டியதை தட்டிக் கழிப்பதா?” அடிக்கடி இவன் தாயின் வாய் உதிர்க்கும் வார்த்தைகள் இவை தான்.

இப்போதெல்லாம் தாயின் நச்சரிப்பு அதிகரிப்பதை உணர்ந்திருந்தவன், “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கம்மா. புதிதாகத் தொடங்கியுள்ள ஏற்றுமதி வியாபாரம் ஒரு நிலைக்கு வந்ததும் நீங்க பார்க்கும் பெண்ணை, எனக்கும் பிடித்திருந்தால்..” சற்று நிதானித்து குறும்போடு பார்த்துவிட்டு, “அடுத்தநாளே கல்யாணம் செய்து கொள்கிறேன்!” என, உறுதியளித்திருக்கிறான்.

“போடா தம்பி, நான் பார்க்கும் பெண்ணை உனக்கு அப்படியே பிடித்து விடுமாக்கும்! இத்தனை நாட்களும் எத்தனை ஃபோட்டோக்கள் பார்த்தாயிற்று! நீயாக யாரையாவது பார்த்துவிட்டு கைகாட்டு; எனக்கு வேலை மிச்சம்.” அவன் தாயின் சலிப்பு இது!

நான்கு வருடங்களுக்கு முன் , ஒரே தங்கை ஜீவாவுக்கு , தன் நீண்டநாள் தோழன் ரவியை மணமுடித்து வைத்தவன், அவனோடு சேர்ந்தே தொழில்களை கவனித்து வருகிறான்.

மேல் படிப்புக்காக இலண்டனில் தங்கியிருக்கும் இவன் தம்பி நிரஞ்சன் , இன்னும் சில மாதங்களில் படிப்பை முடித்துக்கொண்டு இலங்கை திரும்ப இருக்கிறான்.

தென்னைகளுடன் சேர்த்து பலவகையான பழமரங்களும் காணப்படும் இத்தோட்டத்தின் தெற்குப்பகுதியில் நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட்டவாறே வந்த தீபன், தன்னருகில் வந்து கொண்டிருந்த தோட்ட மேற்பார்வையாளரிடம் திரும்பினான்.

“ அங்கிள், வழமை போல இந்த முறையும் பழங்களை சிஸ்டரின் சிறுவர் இல்லத்துக்கே அனுப்பிவிடுங்க; அத்தோடு, அவர்களுக்குத் தேவையான தேங்காய்களையும் சேர்த்தே அனுப்புங்க !'' என்றவன் ,

“அடுத்த பக்கமும் போய்ப் பார்த்துவிட்டு சாப்பிடப் போகிறேன்.” என, அவரிடம் விடைபெற்று தொடர்ந்து முன்னேறியவன், தோட்டத்தின் மேல்பகுதியில் இருந்து, ஊசிமுனைக்கம்பி கொண்ட நீண்ட தடியின் துணையோடு தேங்காய்களைக் குத்திக்குத்தி இலாவகமாக வீசுவதைப் பார்த்துக் கொண்டே வந்து ஜீப்பில் ஏறி , அடுத்த பக்கத்தில் நடக்கும் வேலையைப் பார்க்கச் சென்றான்.

இதுவரை, பறிக்கும் தேங்காய்களை மொத்தமாக மட்டுமே விற்று வந்தவர்கள், இப்போது, தாங்களே சிறுதொழிற்சாலை ஆரம்பித்து பதப்படுத்தி, பூவாகவும், தேங்காய்ப் பாலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் , தேங்காய் எண்ணையும் தயாரிக்கின்றனர்.

இத்தோட்டம் முழுமையாக இவன் பொறுப்பில் இருந்தாலும், கண்டியிலுள்ள தேயிலைத் தோட்டத்தைக் கவனிக்கும் தங்கை கணவன் ரவியும், அப்பப்போ உதவிக்கு வருவான்; இவனும் அங்கே போவான் .

மதியம் ஒருமணிபோல் தோட்டத்திலேயே இருக்கும் அவர்களின் பங்களாவை வந்தடைந்தான் தீபன் .

அலைந்து திரிந்ததில் பசியெடுத்த வயிறு கதறியது ! எப்பவும் போல், அங்கேயே தங்கியிருக்கும் பொன்னம்மாவின் கைமணத்தில் சாப்பாட்டை நினைத்துப் பார்த்தவன் , விரைவாக கை கால் முகம் அலம்பியபடி சாப்பாட்டறைக்கு வந்தான்.

அப்போதுதான் கணவன் வேலுவிற்கு சாப்பாட்டை கொடுத்து முடித்த பொன்னம்மா, “வாங்க தம்பி; வாங்க . என்ன இன்றைக்கு நேரம் போய்ட்டுது ? நேரத்துக்கு வந்து சாப்பிட்டிட்டு வேலையைப் பார்க்கலாமே!” சொன்னவாறே, சிறுவயதில் இருந்தே பார்த்துப் பழகிய தீபனுக்கு தாயின் பரிவுடன் சாப்பாட்டைப் பரிமாறினார்.

அந்நேரம், “ அடடா மச்சான், நல்ல நேரத்துக்குத் தான் வந்திருக்கிறேன்!” என்றபடி உள்ளே வந்த மைத்துனன் ரவி. “சாப்பாட்டு நேரமாகப் பார்த்து வருவதே உங்க சாப்பாட்டை ருசி பார்க்கத்தான்.” என்றவாறே தீபனின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

'' வாடா மச்சான். என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய்?” என்று கேட்ட தீபன் , '' தம்பிக்கில்லாத சாப்பாடா '' என்றவாறே பொன்னம்மா உணவைப் பரிமாற, மைத்துனனைக் கேலியாகப் பார்த்தான்.

'' ஏன்டா, உனக்கு ஜீவா சாப்பாடு தந்து விடவில்லையா?'' அவன் கேட்ட பாவனையில் நன்றாகவே முறைத்தான் ரவி.

'' உன் தங்கச்சி சமைத்துத் தந்திட்டாலும்!” கேலி!

“காலையில் எழுந்து என் அம்மாதான் சமைத்துத்தர வேண்டும். இன்றைக்கு இங்க வரும் பிளானில் இருந்ததால் சாப்பாடு வேண்டாம் என்றேன்.” சொன்னபடி சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

நல்ல பசியில் வந்தவர்களிற்கு , பொன்னம்மாவின் உணவு அமிர்தமாக இருந்தது . அதுவும் அவர் சமைக்கும் ஈரப்பலாக்காய்க் கறி இருவருக்குமே பிடிக்கும். திருப்தியாய் உண்டுமுடித்து , கைகளை அலம்பியபடியே,

'' பொன்னம்மா, உங்க சாப்பாடு எப்போதும் போல் அருமையாக இருக்கு!” என்று சொல்லி , அவர் முகம் மலர்ந்ததைப் பார்த்தவர்கள் , ஹாலில் அமர்ந்தபடியே , ‘’அப்ப சொல்லுடா மச்சான், என்ன விஷயம்? ஏதாவது அலுவலாக வந்தாயா?” வினவினான் தீபன்..

'' பெரிசா ஒன்றுமில்லடா. கிளிநொச்சியில் இருந்து உன் மாமாவும் மகளும் வருகிறார்களாம்; அவர் திரும்பிப் போகும் பொழுது கொடுத்துவிட கொஞ்சம் பழங்கள் எடுத்துவரச் சொன்னார் மாமி.” என்று ரவி சொல்கையில் தான், மாமா வரப்போவது பற்றி தாய் சொன்னதே அவன் நினைவில் வந்தது.

'' ஆமாடா, அம்மா சொல்லிக்கொண்டு இருந்தார் தான்; எப்போது வருகிறார்கள்?” என்று , தொடர்ந்து கதைத்தவர்கள் , பின்னர், ரவி பழங்களை எடுத்துக் கொண்டு புறப்பட, சிறிது ஒய்வெடுப்பதற்காக மாடியிலுள்ள தன் அறைக்குச் சென்றான் தீபன்.

மின் விசிறியின் உபயோகமின்றியே தோட்டத்திலிருந்து வந்த குளுமையான காற்றும் , அருகிலிருந்த பெரிய விளாம் மரத்தில் கனிந்திருந்த விளாம்பழங்களின் மணமும் நாசியைத் தாக்க, கட்டிலில் அமர்ந்தவன் , தனது மெயில்களைப் பார்ப்பதற்காக மடிக் கணனியைத் திறக்க, அவன் கைபேசியோ தனக்கே முதலிடம் என்றவாறே சிணுங்கியது.

கைபேசியை எட்டி எடுத்தவன், இலண்டனில் இருந்து தம்பி அழைப்பதைப் பார்த்து, ' நிரஞ்சன் ஏன் இந்த நேரத்தில் எடுக்கிறான்!? வழமையாக இரவில் தானே கதைப்பான்; இன்றைக்கு வகுப்புகள் இல்லையோ!’ நினைத்தவாறே கைபேசியை இயக்கி, கதைக்கத் தொடங்கினான்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
பகுதி 3.

வவுனியா ரயில்நிலையத்திலிருந்து, இரவு ரயிலில் பிரயாணத்தைத் தொடர்ந்தாள் அஞ்சலி.

காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள் வவுனியாவிலுள்ள அமிர்தலிங்கத்தின் நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இதோ பயணப்பட்டுள்ளார்கள்.

அழுதழுது சிவந்து வீங்கிய விழிகளும் முகத்தில் அப்பிய சோகமுமாக அமர்ந்திருந்த அஞ்சலி, விடாது கசியும் கண்ணீரை அடக்கத் தெரியாமல் தடுமாறினாள்.

யன்னலில் முழங்கையை ஊன்றி அதில் தன் கன்னத்தை தாங்கிய வண்ணம் வெளியே பார்க்கும் சாக்கில் தந்தையின் பக்கமே திரும்பாது அமர்ந்திருந்தாள் அவள்.

வீட்டிலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து கலங்கியவாறே வரும் மகளைப் பார்த்துத் தானும் கலங்கினாலும் அதை மறைத்துக்கொண்டு புத்திமதிகள் சொன்னார் லிங்கம்; கடிந்தும் கொண்டார்; ஆனாலும் அவளது மனமும் விழிகளும் கட்டுப்பட மறுத்தன.

அவர்கள் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தனர்.

‘இனி, அனுராதபுரத்தில் வைத்துத்தான் நிறையப் பேர் ஏறுவார்கள் ; அதுவரை அமைதியாகப் போகலாம்.’ என எண்ணியவள் , தந்தை அழைக்கவே, அவர் காணாமல் கண்களைத் துடைத்தபடி, '' என்னப்பா?'' கேள்வியாய் நோக்கினாள் .

'' இல்லம்மா .வெளிய பார், லேசா மழை தூறுது .யன்னலை மூடலாமே' என்றதும், ஜன்னலை கொஞ்சமாக கீழே இறக்கி விட்டவள் , ''லேசான தூத்தல் தான்பா. ' என்றபடி திரும்பவும் வெளியில் பார்க்கத் தொடங்கினாள்.

அவள் மனமோ, பழகிய உறவு வட்டத்தை விட்டுத் தூரமாகப் போவதை நினைத்து வெகுவாய் ஏங்கியது.

'' இன்னும் ஆறு மாதங்கள் கொழும்பில இருக்கலாம்; அதன் பிறகு? கடவுளே! நாட்டை விட்டே போக வேண்டுமே! பிறகு எந்தக் காலத்தில் இங்க வரக்கிடைக்குதோ '' என நினைத்தவள் , தறிகெட்டு ஓடத்துவங்கிய மனவுணர்வுகளை அதட்டி அடக்கிய படி, கடந்து, மின்னிச் செல்லும் வெளிச்சங்களையும் , இருட்டிலேயே அழகிய ஓவியமாகக் காட்சி தரும் பெரிய வனப்பகுதிகளையும் இரசிக்கத் தொடங்கினாள்.

அவளுக்கும் சரி, தங்கைகளுக்குமே , இரயிலில் பயணம் செய்வதில் கொள்ளை விருப்பமுண்டு. ஆனால், இரவு இரயில் பிரயாணம் பெரிதாகக் கவருவதில்லை.

வழமையாக, இவளின் மாமா ராஜன் குடும்பம் வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் சமயங்களில் இவர்களும் குடும்பத்தோடு கொழும்பு சென்றால் குதூகாலத்தைக் கேட்கவும் வேண்டுமா? ராஜனுக்கு சொந்தமான வீடொன்று தெகிவளையில் உண்டு. அதை, வெளிநாட்டிலிருந்து கொழும்பு வந்து தங்கிச் செல்பவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தாலும், தாம் வரும் வேளைகளில் அதில் தங்கிக்கொள்வார்கள். இவர்களும் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள்.


இவர்களை அழைத்துவந்து விட்டு விட்டு ஓரிரு நாட்களில் கிளிநொச்சிக்கு திரும்பி விடுவார் லிங்கம். இவர்கள் இரண்டு மூன்று கிழமைகள் நின்றுவிட்டுத் தான் திரும்புவார்கள்.

கொழும்பில் நிற்கும் நாட்களில் , கமலா வீட்டிற்குப் போய் வந்தாலும் ,அவர்களை நன்றாகவே அறிமுகம் என்றாலும் அவர்கள் வீட்டில் இதுவரை தங்கியதில்லை.


‘அவர்கள் வீட்டில் எல்லாருமே மிகவும் நல்லவர்கள் தான்; ஜீவாக்காவும் ரவிஅண்ணாவும் கலகலப்பானவர்கள்; கமலா மாமி, லோகன் மாமா அன்பாகப் பழகக் கூடியவர்கள்; நிரஞ்சனுடன் அதிகமாகக் கதைத்திராவிடினும் , அவனுமே சாதாரணமாகப் பேசிப் பழகுவான்.’என, நினைத்தவளின் எண்ணத்தில் பிரதீபனின் உருவம் வந்து போனது.

 

Rosei Kajan

Administrator
Staff member
#8
‘ஹப்பா! சரியான லெவல் பிடித்த ஆள்; திமிர் புடிச்சது; பார்வையாலேயே முறைத்துக் கொண்டு திரியும்!’ இனி வரும் ஆறுமாதங்கள் தங்கியிருக்க வேண்டிய இடத்தைச் சுற்றி வந்தது அவள் சிந்தை.

இதுவரை அப்படி யார் வீட்டிலும் தங்கிப் பழகியிராதவளுள் மிகுந்த சங்கடம் எழாமலில்லை.

“அதெல்லாம் கொஞ்சநாட்கள் போகப் போக பழகிடும்; கமலா அருமையான பிள்ளை; அவள் புருஷனும் தான்.” இவள் தயக்கம் அறிந்த சிவகாமி, பேத்திக்கு ஆறுதல் கூறியிருந்தார்.

“இளம்பெடியன் உள்ள வீடு என்று எனக்கும் கொஞ்சத் தயக்கம் தான்; அதை ராசனிடம் சொல்ல காச்சு மூச்சுசென்று கத்தினான்; தங்கமான பெடியனாம்; அதோடு, அநேகம் குருநாகலில் தானாம்; வீட்டுக்கு எப்பவாவது இருந்திட்டுத்தான் வருவாராம்.” என்றவர்,

“நீயும் என்ன அவர்கள் வீட்டில் ஆண்டுக் கணக்கிலா இருக்கப் போகிறாய்? ஆறே ஆறுமாதம்; பார்த்திருக்கப் பறந்திடும்.” பேத்திக்கு ஆறுதல் சொல்லி, தயக்கத்தைப் போக்க முனைந்திருந்தார்.

யார் என்ன சொன்னாலும் புது இடத்தில் ஆரம்பிக்கப் போகும் நாட்கள் மனதில் தடுமாற்றத்தை உருவாக்காமலில்லை. அதோடு, கல்யாணம், பிரிவு என்கின்ற விடயங்களும் சேர, எப்போதும் அவளோடு இருக்கும் மலர்வு விடைபெற்றே இருந்தது.

அனுராதபுரத்தில் இரயில் நிற்க , அங்கு ஏறிய பயணிகளின் இரைச்சலால் நினைவுகளிலிருந்து மீண்டு, சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள், தன்னருகில் கண்ணையர்ந்திருக்கும் தந்தையையும் பார்த்துவிட்டுத் தான் கையோடு கொண்டு வந்திருந்த ஜேகேயின் ‘கந்தமியும் கலக்சியும்’ புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து வாசிக்கத் தொடங்கினாள்.

கதையோடு கதையாக விரவிக் கிடந்த பலத்த நகைச்சுவையில் அவளை ஆட்கொண்டிருந்த கவலைகளும் அயர்வும் ஓரம் கட்ட, முகத்தில் முறுவல் நன்றாகவே ஒட்டிக்கொள்ள இரசனையோடு கதைப்புத்தத்தில் ஒன்றிவிட்டாள்.


அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்தது புகையிரதம்.


ஆறுதலாக தமது பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்கியவர்கள், புகையிரத நிலையத்தை விட்டு வெளியே வந்து, கமலா வீட்டுக் கார் ஓட்டுனர் தென்படுகிறாரா எனத் தேடித் பார்த்தனர்.

துரத்தில் வைத்தே இவர்களைக் கண்டுவிட்ட பெரேரா , “சுகமாக வந்து சேர்ந்தீங்களா ஐயா?” எனச் சிங்களத்தில் கேட்டபடி , வணக்கத்தையும் கூறிக் கொண்டு , அவர்களது பெரிய பயணப் பைகள் இரண்டைத் தான் எடுத்துக்கொண்டு முன்னே நடந்தான்.

இருள் விலகாத அந்த அதிலாலை நேரத்தில் நிசப்தமாயிருந்த பாதையில் , வழுக்கிக் கொண்டு சென்ற கார், வீட்டு வாயிலில் போய் நிற்க, எதிர்பார்த்திருந்து கதவைத் திறந்த காவலாளிக்கு ஒரு தலையசைப்பை வழங்கிய பெரேரா, காரைக் கொண்டுபோய் வீட்டின் முன்னுள்ள நீளமான போர்டிக்கோவில் நிறுத்தினான் .

காரின் சத்தம் கேட்டதும் , அக்காலை வேளையிலும் குளித்து முடித்து மங்களகரமான முகமும் புன்னகையுமாக அவர்களை வரவேற்க வந்தார் கமலா .

காரைவிட்டிறங்கிய அஞ்சலி, “குட் மோர்னிங் கமலா மாமி ...சுகமாக இருக்கிறீங்களா?'' எனக் கேட்டுக் கொண்டே , விரைந்து வந்து பரிவாகக் கட்டியணைத்த கமலாவைத் தானும் கட்டிக் கொண்டாள்.


அவளைக் கட்டி உச்சிமுகர்ந்த பெரியவரும், “நல்லா இருக்கிரோம்மா!” என்றவர், '' வாங்க … வாங்க அண்ணே ..எப்படிப் பயணம் எல்லாம் நல்லா இருந்துதா? உள்ளுக்கு வாங்க அண்ணே .வாம்மா அஞ்சலி.” உள்ளே அழைத்துச் சென்றார்.

அவரைப் பின் தொடரப் பார்த்த அஞ்சலி, நினைவு வந்தவளாக தங்கள் பயணப் பைகளை எடுப்பதற்காக திரும்ப , அவளின் நோக்கறிந்து , '' பாக்ஸ் எல்லாம் பெரேராவே உள்ளுக்கு கொண்டு வந்து வைப்பார்; நீங்க வாங்க. '' என, அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#9
வீட்டினுள் சென்ற அஞ்சலியின் விழிகள் ஒரு சுழற்றுச் சுழற்றி வீட்டை இரசனையோடு வருடியது. எப்போது இங்கு வந்தாலும் அந்த வீட்டின் அழகிலும் நேர்த்தியிலும் அதிகமாகக் கவரப்படுபவள் இன்றும் அவ்வாறே இரசித்து நின்றாள்.

அவள் பின்தங்கியதைப் பார்த்த கமலா, ''அஞ்சும்மா, மாடியில் ஏறியதும் வரும் முதல் அறை தான் உங்களோடது ; போய் , முகம் கை கால் அலம்பிக்கொண்டு வாம்மா ; டீ குடிப்போம். '' என்றதும் தன்னுணர்வு பெற்று, அவருக்கு ஒரு தலையாட்டலை பதிலாகக் கொடுத்துவிட்டு மேலே சென்றாள். லிங்கமும், கீழேயுள்ள விருந்தினர் அறையில் தன் காலைக் கடன்களை முடிக்கச் சென்றார்.

அறையினுள் சென்ற லிங்கத்தின் மனதில் இன்னமும் சிறுதயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. என்னதான் தேவகியின் அண்ணியின் தமக்கை வீடு என்றாலும் , இவர்கள் இதுவரை இங்கு வந்து தங்கியதும் இல்லை ; உதவிகளைப் பெற வந்ததும் இல்லை. உறவுக்காரர் என்றாலும் , அந்தஸ்த்தில் ஏணி வைத்தாலும் எட்டமுடியாத உயரத்தில் இருப்பவர்கள் இவர்கள் . ராஜனின் கட்டாயத்தின் பெயரில் தான் அஞ்சலியை இங்கு கொண்டுவந்து விட்டுள்ளார்.

என்றாலுமே '' பிள்ளை கல்யாணம் முடித்து லண்டன் போகும் வரை, மனக்கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டுமே! '' என்று யோசித்தபடியே, தனது காலைக் கடன்களை செய்து முடித்தார்.

தனக்கு ஒதுக்கிய அறையினுள் சென்ற அஞ்சலியும் , மெல்லிய ஊதா வண்ணத்தில் , அதற்குப் பொருத்தமான திரைச்சீலைகளும் , பொருத்தமான தளபாடங்களுடனும் இருந்த விசாலமான அறையை விழி விரியப் பார்த்தவள் , ‘லண்டன் வீடுகளும் இப்படித்தான் இருக்குமோ!’ என நினைத்தபடி , அறையை ஒட்டியிருந்த பாத்ரூமுக்குள் சென்று , கீழே செல்வதற்குத் தயாரானாள்.


மணி காலை ஆறைக் கடந்து விட்டதால் , எழுந்து வந்த லோகன்,அறையிலிருந்து வெளிவந்த லிங்கத்தைக் கண்டதும், விரைந்து சென்று அவரின் கைகளைப் பற்றியவாறே நலன் விசாரித்தார் . பின், கதைத்துக் கொண்டே இருக்கைகளில் அமரவும் , கமலா தேநீருடன் வரவும் சரியாக இருந்தது.

'' அண்ணே ….டீ எடுங்கோ '' என்று , லிங்கத்திடம் ஒரு கப்பைக் கொடுத்தவர் , கணவனுக்கும் கொடுத்து விட்டு அஞ்சலிக்கானதை அருகிலிருந்த சிறு கண்ணாடி மேசையில் வைப்பதற்கும் , அஞ்சலி வருவதற்கும் சரியாக இருந்தது.

கடும் நீல நிற டெனிம் முழுப் பாவாடையும் , அதற்குப் பொருத்தமாக மெல்லிய நீல நிறத்தில் பிளவுஸ்சும் போட்டு, தனது சுருள் முடியை இறுக்கிப் பின்னி ரப்பர் பேண்ட் போட்டு , நெற்றியில் குட்டிப் பொட்டுடன் வந்த அஞ்சலியை , 'இந்தப் பிள்ளைதான் சாந்தம் குடி கொண்ட முகத்துடன் எவ்வளவு அழகா இருக்கிறாள்!’ அவள் முகத்திலிருந்து விழிகளை அகற்றாமல் பார்த்தார் கமலா.

“அட! நம்ம அஞ்சலியா? பெரிய பெண்ணாகிட்டீங்க! நான் பார்த்தே இரண்டு வருடங்களாச்சி இல்லையா? நீங்க போனமுறை வரும் போதும் பார்க்க முடியவில்லை.” என , லோகன் கதைதத்தில் தன்னுணர்வுக்கு வந்த கமலாவும் ,

''ம்ம்... உண்மைதான்; பெரிய பொண்ணாகீட்டாள். அதோட, கல்யாணக்களையும் சேர்ந்திருக்கு! அதுதான் இவ்வளவு அழகாக இருக்கிறாள்! ''என்று வாய் விட்டுக் கூற , வெட்கச் சிரிப்போடு தந்தையைப் பார்த்தவள் , “எப்படி இருக்கிறீங்க மாமா ?” மெல்லிய குரலில் கேட்டாள்.

“என்னைப் பார்த்தாலே தெரியவில்லையாம்மா! உம் மாமி புண்ணியத்தில் நல்லா இருக்கிறேன்மா.” மனைவியைப் பார்த்து முறுவலித்தவாறே சொன்னவர், “அதென்ன குரல் வெளியே வருகுதில்லை! உங்க வீடு போல இங்க இருக்கலாம் அஞ்சலி; தயங்கவே தேவையில்லை.”அவளது தயக்கம் புரிந்து சொன்னார்.

''ராஜாத்தி டீயக் குடிம்மா '' என்று அவளுக்குத் தேநீரைக் கொடுத்த கமலா , ''அதென்ன என் புண்ணியத்தில் நீங்க நல்லா இருக்கிறது. ஹ்ம்ம்... எல்லாம் காலம் லிங்கம் அண்ணன்; நீங்க எதுவும் நினைக்காதீங்க . இவர் இப்ப வேலைகளையெல்லாம் சின்னப்பிள்ளைகளிட்ட கொடுத்திட்டு ஹாயா வீட்டிலிருந்து என்னோடு வம்பு பண்ணிக் கொண்டிருக்கிறார்; அவ்வளவும் தான் '' கேலிபோலச் சொன்னாலும் அன்போடு கணவரைத் தொட்டுவிட்டு அஞ்சலியில் நிலைத்தது கமலாவின் பார்வை.

''அஞ்சும்மா இப்ப தானே வந்திருக்கிறாள், போகப் போகப் பழகிவிடுவாள்; என்னம்மா நான் சொல்வது சரிதானே?” கமலாவின் கனிவில் உள்ளிருந்த தயக்கம் விலக, ஆமென்பதாகத் தலையசைத்தாள் அஞ்சலி.

இப்படியே அளவளாவிக் கொண்டு தேநீரை அருந்தியவர்கள் , ''அப்ப நீங்க இருங்க லிங்கம், நான் ஒரு சுற்று நடந்திட்டு வாறன் '' என்று லோகன் எழ,

“போயிட்டு வாங்க , நானும் வந்து சேர்ந்துவிட்டதாக வீட்டுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.” என்று எழுந்த லிங்கம் , மகளைப் பார்க்க,

“கொஞ்சம் பொறுங்கப்பா, ஃபோனை எடுத்துக் கொண்டு வாறன்.” என்று மேலே செல்லத்தொடங்கிய அஞ்சலியை கமலாவின் குரல் தடுத்து நிறுத்தியது.

“இப்போதானே இது உங்க வீடுமாதிரி என்றோம்! இப்படிப் பக்கத்தில் ஃபோன் இருக்க ..” சொல்லி முடிக்காது அன்பாக முறைத்தவர்,

“இதில் எடுத்துக் கதையுங்க!” என்றவாறே, குடித்து முடித்த கோப்பைகளை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கிச் சென்றார் கமலா .
 

Rosei Kajan

Administrator
Staff member
#10
பகுதி 4.


காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறான் தீபன். தோட்டத்திலும் தொழிற்சாலையிலும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய வேலைகள் குவிந்திருந்தாலும் அவசரமாக கொழும்புக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறானே! போவதற்கு முதல் இயன்றளவு முக்கிய வேலைகளை முடித்து, ஒழுங்குபடுத்தி, பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்து விட்டுப் புறப்பட எண்ணியவன் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

‘இரவு 11 மணிக்கு இங்கிருந்து வெளிக்கிட்டாலும் இரண்டு மணிநேரத்தில் கொழும்பு போய்விடலாம்; இல்லையென்றால் விடியவெள்ளனத்தோடு வெளிக்கிடுவோம்!’ என நினைத்தவனின் மனம், இரண்டுநாட்களுக்கு முன், தன் தம்பி லண்டனிலிருந்து அவசரமாக அழைத்துச் சொன்ன அதிர்ச்சியான விடயத்தையும், கூடவே, அந்த அமைதியான அழகு முகத்தையும் அடிக்கடி நினைத்துக் கொண்டது.

தம்பி கூறியதை தொலைபேசியில் சொல்வதை விட தானே நேரில் சென்று தாயாருடன் கதைக்க எண்ணியிருக்க ,அலைபேசியில் அழைத்த கமலா, “ மாமா வந்திருக்கிறார், நாளை இரவு ஊருக்கு திரும்பிப் போய் விடுவார்'' என்று சொன்னதும், மாமாவிடமே நேரில் கதைப்பது நல்லதென்று முடிவெடுத்தான் இவன்.

“ அம்மா , எப்படியும் இன்று இரவு அல்லது விடியக்காலையில் அங்க வந்து சேர்வேன். மாமாவோட முக்கியமான விஷயம் கதைக்க வேண்டும். இப்படி வந்த உடனே திரும்புவார் என்று நினைக்க இல்லை. இன்னும் ஒருநாள் நின்றுவிட்டுப் போகச் சொல்லுங்கம்மா.” என்று கூறி, தாயின் பதிலையும் எதிர்பார்க்காமல் தொலைபேசியை அணைத்து விட்டான் .

பிறகு இரு தடவைகள் தாய் அழைத்ததற்கும் '' நான் நேரில் வந்து கதைக்கிறேன்'' என்று சொல்லி முடித்து விட்டான்.

விடிகாலையில், குருநாகலில் இருந்து தனது காரில் புறப்பட்ட தீபன் , பழகிய பாதைகளில் கையும் கவனமும் காரைச் செலுத்துவதில் நிதானத்துடன் இருந்தாலும் , மனமோ அடிக்கடி அஞ்சலியைச் சுற்றி வந்தது .

அஞ்சலியையும் அவர்கள் குடும்பத்தவர்களையும் சிறு வயதிலிருந்து தெரியும் என்றாலும் , அவ்வளவாகக் கதைத்துப் பழகியதில்லை. அதுவும் தன்னை விட மிகவும் சிறியவர்களாக அவர்கள் இருந்ததாலும் ,பெண்பிள்ளைகளாக இருந்ததாலும் ,பழகும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன.

ஆனாலும், விமலா சித்தி வீட்டினர் விடுமுறைக்காக கனடாவில் இருந்து வந்தால் , அஞ்சலி குடும்பமும் கொழும்பு வந்து நிற்பதால், அவர்கள் நன்கு பரிச்சயம் அவ்வளவே! சித்தியின் பிள்ளைகள் இனிதனுக்கும் இந்துஜனுக்கும் அஞ்சலியும் அவள் தங்கைகளும் மச்சாள் முறை என்பதால் , அவர்கள் கேலி கிண்டல்கள் செய்யும் போது, அவற்றில் தன் தம்பி நிரஞ்சனும் கலந்து கொண்டாலும், இவன் தள்ளி நின்றே வேடிக்கை பார்ப்பான்.

''என்னதான் என்றாலும் அஞ்சலி சரியான அமைதியான சுபாவம் தான் , இந்தக் காலத்தில் இப்படி இருந்தாலும் சமாளிப்பது கஷ்டம் '' என்று நினைத்தவன் , எப்படியாவது தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்தவாறே , கொழும்பு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான்.

காலையிலேயே துயில் கலைந்தெழுந்த அஞ்சலி ,சோம்பல் முறித்தவண்ணம் யன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள்.

“ஹப்பா! ஒருமாதிரி வீட்டைப் பிரிந்து ஒரு இரவு தனியே தூங்கி எழுந்தாச்சி!” உதடுகள் முணுமுணுக்க, வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருப்பதை இரசித்துப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள்.

சோவென்று கொட்டும் மழையில் நனைவதும் , நனைந்தவாறே சைக்கிள் ஓடுவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

‘கொழும்பில், அதுவும் இந்த பான்ஸ் பிளேசில் சைக்கிள் ஓடினால்!’ என நினைத்தவள் , தெப்பலாக நனைந்தவாறே கற்பனையில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சற்றும் விருப்பமின்றி உள்ளே வந்து சேர்ந்தாள்.

‘இப்போ மட்டும் ஊரில் இருந்தால் கற்பனையில் ஓட்டத் தேவையில்லை.’ என்ற நினைவில் கண்கள் கலங்க மெல்லச் சுதாகரித்துக் கொண்டவளுக்கு, “முக்கியமாக நேரில் கதைக்கவேண்டும் என்று சொல்லி உங்களை ஒருநாள் நின்றுவிட்டு போகச் சொல்கிறான் தீபன்.” என நேற்று மாலை கமலா சொன்னது நினைவில் வந்தது.

என்ன விடயம் என்று லிங்கமும் லோகனும் கேட்க, “என்னவென்று கேட்டால் சொன்னால் தானே! நின்று கதைக்க நேரமில்லாது ஓடுவான் அண்ணன்; இதைச் சாட்டாக வைத்து வாறானே, என்வென்று பார்ப்போம்.” என்றிருந்தார் கமலா.

 

Rosei Kajan

Administrator
Staff member
#11
இரவு இவர்கள் நித்திரைக்குப் போகும் வரை அவன் வந்து சேரவில்லை, “அவன் இப்படித்தான், சாம ஏமம் எல்லாம் காரோடுவான்; விடியப்புறம் வருவான் என்று நினைக்கிறேன்.” என்றிருந்தார் லிங்கம்.

‘சிலவேளை, நாங்க தூங்கிய பிறகு வந்திருப்பாரோ!’ என்ற எண்ணத்தோடு, பயணத்தை நிறுத்திப் பேசுமளவுக்கு என்ன விஷயமாக இருக்கும்!’ என்ற எண்ணமும் சேர, விரைவாக காலைக் கடன்களை முடிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்தாள்.

குளித்துத் தயாராகி கீழே இறங்கியவள், ஹாலில் அமர்ந்திருந்த தீபனோடு தந்தை கதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு சற்றே தயங்கினாலும், தன்னை நோக்கிய தந்தைக்கு மெல்லத் தலையசைத்தவள், முதுகுப் புறத்தைக் காட்டி அமர்ந்திருந்தவன் பார்க்க முன் சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்.

அவ்வளவு காலையில் அஞ்சலியை கண்ட ராசாத்தி வியப்பாகப் பார்த்தாள்.

“புது இடம் என்பதால் வெள்ளனத்தோட வந்திட்டீங்களா அஞ்சலிம்மா?” என்றதும், “சும்மா அஞ்சலி என்றே சொல்லுங்கக்கா.” இலகுவாக ஆரம்பித்தாள் அஞ்சலி.

“வீட்டிலேயும் நேரத்துக்கே எழுந்துவிடுவோம்கா, விடிந்த பிறகும் தூங்கிக் கொண்டிருந்தால் அப்பாவுக்குப் பிடிக்காது.” என்று, முறுவலித்தவள், “சரி தள்ளுங்க, நான் டீ போடுறேன்.” என்றதும்,

“இல்லையம்மா, ஆயத்தம் செய்து வைத்தால் பெரியம்மா வந்து போடுவார்; எப்போதும் அப்படித்தான்.” என்றவளைப் பிடித்து அப்பால் விலக்கினாள் அஞ்சலி.

“ம்ம்... இருக்கட்டும்கா, இன்றைக்கு நான் போடுறேன்; நீங்க வேறு வேலை இருந்தால் பாருங்க.” என்றவாறே தேநீர் தயாரிப்பில் இறங்க, முறுவலோடு நகர்ந்த ராசாத்தி,

“ இன்றைக்கு சின்னய்யாவும் வந்திருப்பதால் காலைச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவிக்க வேண்டும். வேலை வேலை என்று திரிபவர் இப்போதெல்லாம் வீட்டில் வந்து நிற்பது குறைவு; வந்தால் அவருக்குப் பிடித்தமான சமையல் தான்.” என்றபடி அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்.

அதேநேரம் அவசரம் அவசரமாக கீழே இறங்கி வந்த கமலா, ஹாலில் அமர்ந்திருந்த மகனோடும் லிங்கத்தோடும் சிலவார்த்தைகள் கதைத்தவர் , “அப்பாவும் எழும்பீட்டார்; இப்ப வருவார், கதைத்துக் கொண்டிருங்க; தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன்.” என்றபடி சமையலறை நோக்கி விரைந்தார்.

அங்கே, அஞ்சலி எல்லோருக்கும் தேநீர் தயாரித்து வைத்திருப்பதைக் கண்டதும், “காலையிலேயே எழுந்து வந்துவிட்டாயாம்மா? நித்திரை என்று நினைத்தேன்.” என்றவர்,

“தேத்தண்ணியும் போட்டாச்சா?!” என்றதும் , அவர் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என, சிறு தடுமாற்றம் தோன்ற, “வீட்டிலும் நேரத்துக்கே எழும்பிவிடுவோம் மாமி..” என்றவள்,

“நானும் நல்லாவே தேத்தண்ணி போடுவேன்; அதுதான் ...அப்பவும் ராசாத்தி அக்கா சொன்னாதான் ...ஆனாலும்...”அவளின் தடுமாற்றம் பார்த்த கமலா நன்றாகவே முறுவலித்தார்.

“இப்படியெல்லாம் தயங்கத் தேவயில்லையம்மா; தேத்தண்ணி போட்டதற்கு ஏதாவது சொல்வேன் என்று நினைத்துவிட்டாய் போல!” என்றவர்,

“ராசாத்திக்கே தெரியும், என் மகள் ஜீவா சாப்பிட மட்டும் தான் இந்தப் பக்கம் வருவாள்; நம்ம வீட்டுச் சமையலை நாம செய்யவேண்டும், நம்பார்வையில் நடக்க வேண்டும் என்றால் காதிலும் வாங்கிக்கொள்ள மாட்டாள்!

ஏதோ, கல்யாணம் செய்து போன வீடு தெரிந்தவர்கள் என்பதால் பிரச்சனை இல்லை;அவளைப் பற்றித் தெரிந்த மாமியாரே எல்லாம் செய்துவிடுவார். அதனால், நீ தேத்தண்ணி போட்டதில் எனக்குச் சந்தோசம் தான்மா.” என்றார் அன்போடு.

தொடர்ந்து, “ம்ம்...அப்போ எல்லோருக்கும் நீயே கொண்டு வந்து கொடு; மாமாவும் எழுந்துவந்து விட்டார்.” என்று நகர ,

“ இல்ல... இல்ல நீங்களே கொண்டு போங்க; ....நான் ராசாத்தியக்காவுக்கு காலைச் சாப்பாட்டுக்கு ஹெல்ப் பண்ணப் போறேன் '' என்று அவள் சொல்ல,

“ இல்ல, இப்ப என்ன அவசரம் ராசாத்தி? நீயும் டீயக் குடித்துவிட்டே செய்யத்தொடங்கு.” என்றவர், “நீ வாம்ம்மா, பிறகு வந்து ஹெல்ப் பண்ணலாம்.” கையோடு அவளை அழைத்துச் சென்றார்.

ஹாலில் அமர்ந்திருந்த ஆண்கள் பொதுப்படையாக அளவளாவிக் கொண்டிருந்தனர்.

“எல்லோருக்கும் நீயே கொடம்மா...” என்றபடி, தன் கப்பை எடுத்துக் கொண்ட கமலா மகன் அருகில் சென்று அமர்ந்து கொள்ள, அப்போதுதான் அவளைக் கண்ட தீபனின் விழிகள் சில கணங்கள் அவளில் நிலைத்துவிட்டு விலகின.
 

Rosei Kajan

Administrator
Staff member
#12
‘நான் சொல்லப் போவதை எப்படி எடுத்துக் கொள்வாள்?’ மனதுள் எழுந்த கேள்வியை மெல்ல ஒதுக்கிவிட்டு தன்முன் நீண்ட தட்டிலிருந்து தேநீரை எடுத்துக் கொண்டவன், “எப்படி இருக்கிறீர் அஞ்சலி? வீடெல்லாம் பிடித்திருக்கா?” சம்பிரதாயமாக கேட்க நினைத்தாலும் குரலில் கனிவு எட்டிப் பார்த்தது.

இதுவரை இவர்கள் வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் ஒரு பார்வையோடு விலத்திப் போய்விடுபவனின் நலவிசாரிப்பில் திடுக்கிட்டுப் போனாள் அஞ்சலி.

‘திமிர் பிடித்தவன்’ என்று அவனை உருவகப்படுத்தியிருந்தவள் அல்லவா?

'நான் என்ன இந்த வீட்டை விலைக்கு வாங்கவா வந்திருக்கிறன்; வீடு எனக்குப் பிடிக்க! ' உள்ளே சிலிப்பிக்கொள்ளவே செய்தாள். அதைச் சிறிதும் வெளியில் காட்டாதிருக்க முனைந்தபடி, “நல்லா இருக்கிறேன்.” என்றவள், தன் கப்போடு தகப்பன் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.

அவள் மனதில் நடத்திய அர்ச்சனையையோ தன்னைப் பற்றிய அவளின் ஊகமோ தெரியாதவன், அவளின் அமைதியில் மிகவும் கவரப்பட்டான் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும், தான் சொல்லப் போகும் விடயம் அவளை எந்தளவுக்கு தாக்கும் என்பதை நினைத்தவுடன் அவள் பால் ஒருவகை இரக்கம் கலந்த பரிவும் தோன்றச் செய்தது.

அதே நினைவோடு மீண்டும் அவளைப் பார்த்தான் தீபன்.

எவ்வித அலங்காரமும் இல்லாது பளிச்சென்றிருந்த அவள் வதனம் இதுவரையும் இல்லாத வகையில் அவனை வசீகரிக்க முயல, அதையுணர்ந்தவனின் விழிகள் அவள் வதனத்தின் ஒவ்வொரு இடத்திலும் நின்று நிதானித்து உலாவர முயல, சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவன், சுற்றியிருந்தவர்களை அவசரமாக ஆராய்ந்துவிட்டு பெரியவர்களோடு பேச்சைத்தொடர முயன்றான்.

தேநீர் குடித்து முடிய, “நான் வாக் போயிட்டு வாறன்; இருங்க.”என லோகன் வெளியேற, காலையில் இவனைக் கண்ட தருணத்தில் இருந்து தன் பிரயாணத்தைத் தடுத்து, தன்னோடு பேச முயன்ற முக்கிய விடயம் என்ன என்று அறியும் ஆவலில் இருக்கும் லிங்கம், அப்போதும் எதையும் சொல்லாது எழுந்து செல்லும் தீபனைப் பார்த்தவர் யோசனையோடு அன்றைய காலைப்பத்திரிகையில் கவனம் செலுத்தினார்.

கமலா தடுத்தும் கேளாது காலைச் சமையலுக்கு உதவி செய்கிறேன் என்று சென்ற அஞ்சலி தானே சமையலைக் கவனித்துக் கொண்டாள். அவளின் சமையல் நேர்த்தியையும் விரைவையும் பார்த்த கமலா , ''அம்மா எல்லா வேலைகளையும் அழகாகச் சொல்லித் தந்து தான் விட்டிருகிறார்.'' என்றதும், லேசான வெட்கத்தில் புன்னகைத்தவள், '' ஜீவாக்கா வீடு தூரமா மாமி '' என, கமலாவின் மகள் பற்றிக் கேட்டாள்.

''தூரம் என்று சொல்ல முடியாதம்மா , கொள்பிட்டியில் தான்.” என்றவர் “பார்ப்போம், தீபனும் வந்திருக்கிறதால் பகலைக்கு(மதியம் ) வரச் சொல்லிச் சொல்லுறன். நீங்க வந்ததும் வாறன் என்று சொன்னாள்; பிறகு தலைசுத்து, சத்தி பிறகு வாறன் என்றாள்.” என்றவர், கேள்வியாகப் பார்த்த அஞ்சலியிடம், “ ஆமாம்மா , இப்ப நான்கு மாதம்.”என்றார் மகிழ்வோடு.

“சந்தோசம் மாமி..மூத்த குட்டிப் பெண்ணுக்கு இப்ப இரண்டு வயதிருக்கும் என்ன? ''

'' ஆமாம் மா. அடுத்த மாதம் லக்ஷிக்கு இரண்டாவது பிறந்த நாள் வருது '' என, கதைத்த படி காலைச் சாப்பாட்டை தயாரித்தவர்கள் , சாப்பாட்டு மேசையில் கொண்டுபோய் வைத்தனர்.

காலைச் சாப்பாடு தயாரித்த பின்னர், மகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்காக ராசாத்தி தனது வீட்டுக்குச் செல்ல, எல்லோரும் வந்தவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே '' இன்றைக்கு சமையல் செய்தது நான் இல்லை! '' ஆரம்பித்தார் கமலா.

அவரை இடைமறித்த லோகன் ,'' அதுதானே! என்னடா, இத்தனை நாளும் இடியப்பம் என்று சொல்லி மேசைக்கு வருவதை ஒருமணிநேரம் சொதியில் ஊறவைத்தால் தான் கொஞ்சமே கொஞ்சமாச் சரி சாப்பிடக் கூடியதாக இருக்கும். இன்றைக்கு இத்தனை மென்மையா இருக்கே என்று!”அளவுக்கு மீறி வியந்தவர் விழிகளில் குறும்பு!

மனைவியைப் பார்த்து நகைக்கிறார் என்று அவர் விழிகள் காட்டிக் கொண்டுத்தன.

“என்னப்பா, ராசாத்தியின் கைப்பக்குவம் போல!”என்றவரை முறைத்தார் கமலா.

கணவனின் பார்வையும் பேச்சும் தன்னை வம்புக்கிழுப்பதை உணர்ந்தவர் லிங்கத்தை சிறு சங்கடத்தோடு பார்க்க, அவரோ, அதைக் காதில் வாங்கியவர் போலில்லாது ஏதோ யோசனையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

“அப்போ, ராசாத்தியின் சமையல் தான் போல; அதைச் சொல்ல இவ்வளவு தயக்கம் வேண்டாம் கமலா.” விடாது தொடர்ந்தார் லோகன்.

‘ இந்த மனிசனுக்கு …வர வர இளமை திரும்புது!’ மனதில் கடுகடுத்தபடி, பொங்கும் நகைப்பை அடக்க முயலும் மகனையும், சுவாரஸ்சியமாகத் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அஞ்சலியையும் பார்த்தவர் , ''இது ராசாத்தி செய்தது இல்லை; இனிமேல் அவளையே மூன்று வேலையும் சமைக்கச் சொல்கிறேன்.” என்றவர் குரலில் தெறித்த காரத்தில் வாய்விட்டு நகைத்தார் லோகன்.

“போதும் புரையேறப் போகுது!இப்படிச் சிரிக்க என்ன சொல்லிவிட்டேன் . எனக்கு வேறு வேலையே இல்லை பாருங்க; பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போட்டால்...” செல்லமாகக் கோபித்த மனைவியை ஒருகணம் பார்த்தார் லோகன்.

“இல்ல லிங்கம், என் கமலாவின் சமையல் போல வரவே வராது ஆனால் இது ..சரி விடுங்க...” மீண்டும் கேலியாகவே சொன்ன லோகன் சாப்பாட்டைத் தொடர , “இன்றைக்கு முழுச் சமையலும் அஞ்சலியின் கைவண்ணம்!”அஞ்சலியை அன்பாகப் பார்த்தவாறே சொன்னார் கமலா.

அவர் சொல்ல முன்னரே இது மகளின் கைப்பக்குவம் எனத் தெரிந்து கொண்ட லிங்கத்துக்கு பெருமையாக இருந்தது .

‘ கல்யாணம் கட்டிப் போற வீட்டிலும் என் மகள் நல்ல பெயரெடுக்க வேண்டும்!’ என நினைத்தது அவருள்ளம். தீபன் அப்படி என்ன விடயதைக் கதைக்க நினைக்கிறான் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவரால் வேறெதையும் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

மனைவி சொன்னதைக் கேட்ட லோகன் , ''ஓ அப்படியா!? அஞ்சலிக்கு இவ்வளவு நல்லாச் சமைக்கத் தெரியுமா? அப்போ, மாப்பிள்ளைத் தம்பி உண்மையாகவே கொடுத்து வைத்தவர்!” என்றவர், “ம்ம்… எல்லாம் அவரவர் வாங்கி வரும் வரம்; நமக்குக் கிடைக்காத பாக்கியம் அந்தத் தம்பிக்கென்றாலும் கிடைச்சிருக்கே! ''என்றார் , மீண்டும் மனைவியைச் சீண்டும் விதமாக!

தாய் சொன்னதையும் அதற்கு தந்தை சொன்ன பதிலையும் கேட்டுக் கொண்டிருந்த தீபனின் பார்வை தன் முன்னிருந்து சாப்பிடும் அஞ்சலியை நோக்கியது. அவளும் தற் செயலாக அவனைப் பார்க்க, அவன் விழிகளில் தென்பட்ட பொருளறியாப் தன்மையில் தடுமாறி, சட்டென்று விழிகளை விலத்திக் கொண்டவளுக்கு அவ்விடமிருந்து சகஜமாக உண்ணவே ஒரு மாதிரி இருந்தது.

‘ இப்ப எதற்காக இப்படிப் பார்க்கிறார்.’மனதிலோடிய எண்ணங்களோடு சாப்பிட முனைந்தவள், தொடர்ந்து இவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றிய கதை வந்துவிடவே, சிறு சங்கடத்தோடு உண்பதைத் தொடர்ந்தாள்.

அதுவரை, தனக்குப் பிடித்த சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த தீபனோ , ‘ மாப்பிள்ளை கொடுத்து வைத்தவர்’ என்ற சொல் ஏற்படுத்திய ஆத்திரமும், தொடர்ந்து அவனைப் பற்றிய இவர்களின் உரையாடலும் காதில் நாரசாரமாகப் பாய சட்டென்று எழுந்துவிட்டான்.

“என்ன தம்பி , சாப்பிட்டு முடிய முதல் ஏன் தம்பி..?” என்றார் கமலா.

''எனக்குக் காணும் மா, ரவிக்கு ஒரு கால் பண்ண வேண்டும் ; நீங்க சாப்பிடுங்க '' என்றபடி , தனது தட்டையும் எடுத்துக் கொண்டு நடர்ந்தான் அவன்.

மகனை யோசனையாகப் பார்த்தார்கள் தாயும் தகப்பனும்; லிங்கம் கூட ஒருமாதிரிப் பார்த்தார். அவன் யாரையும் பார்க்கவில்லை, கரத்தை அலம்பியவன் மேலே சென்று மறைந்தான்.

‘நல்லா சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென்று ஏன் எழுந்தார்? அதுவும் என்னை ஏன் அப்படிப் பார்த்தார்?’ யோசனையோடு அவனைத் தொடர்ந்த அஞ்சலியின் விழிகள்,அவன் மேலே சென்று மறைய முன்னர் திரும்பிப் பார்க்க சட்டென்று தாழ்ந்தன.

அதோடு, தொடர்ந்து உண்ண முடியாது தடுமாறினாலும் மற்றவர்களுக்காக அமைதியாக உண்ண முயன்றாள் .
 

Rosei Kajan

Administrator
Staff member
#13
பகுதி 5.

வீட்டின் பின்புறம், நீச்சல் குளத்தினருகில் போடப்பட்டிருந்த நிழற்குடையின் கீழிருந்து ஜீவாவின் மகள் லக்க்ஷிக்கு சாப்பாட்டை ஊட்டிக்கொண்டிருந்தாள் அஞ்சலி.

காலை பத்து மணியளவில் மகளுடன் வந்த ஜீவா, “கல்யாணப் பெண்ணே எப்படி இருக்கிறீங்க? கண்டு நிறைய நாட்களாச்சு இல்லையா?” எப்போதும் போல் கலகலத்தவாறே அஞ்சலியோடு உரையாடினாள்.

அவ்வளவாக எவரோடும் சேராத அவளின் மகளும் அஞ்சலியோடு ஒட்டிக் கொண்டாள். மதிய உணவின் போது அஞ்சலிதான் ஊட்டி விடவேண்டும் என்று அடம் பிடிக்குமளவுக்கு இருந்தது அவர்களின் சிநேகம்.

மதிய உணவும் முடிய, எல்லோரும் கலகலப்பாக கதைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களோடு முழுமையாக ஒன்ற முடியாது தவித்தான் தீபன்.

‘மாமாவிடம் இந்த விடயத்தை எப்படிச் சொல்லப் போகிறேன்!’ மனதுள் பலவாறாக ஒத்திகை பார்த்தான்.

‘எப்படியென்றாலும் அஞ்லியின் முன் வைத்து எதையும் கதைப்பதில்லை!’ என எண்ணியவன், தங்கையோடு அவளை வெளியே அனுப்பிவிட்டு கதைப்போம் என்ற முடிவுக்கு வந்தான்.

வழமைக்கு மாறான மகனின் அமைதியும் யோசனையும், அவன் பெற்றோர் கருத்தில் பதியாமலில்லை. ஒருபோதுமில்லாதவாறு காலைச் சாப்பாட்டில் எழுந்து சென்றதையும் அவனது சகஜமற்ற போக்கையும் கவனித்தவர்கள், லிங்கத்தைத் தடுத்து நிறுத்தியதுக்கும் அவனது குழப்பத்துக்கும் தொடர்பிருக்குமோ என்ற ஐயத்துக்கும் ஆட்பட்டனர்.


அவனோடு தனியாக உரையாடி என்ன விடயமென்று அறிய முயன்ற கமலா, மகளும் பேத்தியும் வரவே அக்கலகலப்பில் மகனை அணுக முடியாது போய்விட, ‘என்னதான் என்றாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். பயணம் போகப் புறப்பட்டவரை நிறுத்தி வைத்தவன் அமைதியாக இருக்க முடியாதே!’ என்ற முடிவில் தன் வேலைகளில் ஆழ்ந்துவிட்டார்.

ஊரில், அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்த லிங்கத்தின் பாடுதான் பெரும் திண்டாட்டமாக இருந்தது . அதோடு, எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை அறிந்துகொண்டால் போதும் என்றிருந்தது அவருக்கு !

உணவின் பின்னர் மகள் கண்ணயர அஞ்சலியை அழைத்துக் கொண்டு புறபட்டாள் ஜீவா.

“தங்கச்சிகளுக்கு உடுப்பு வாங்க , முதலில் ‘ஓடேல்’க்கு போயிட்டு பிறகு ‘பெட்டா’ போவோம் சரியா..?'' என்ற ஜீவாவுக்கு சம்மதமாகத் தலையாட்டியவள்,

“நீங்க கடைக்குப் போகவேண்டும் என்று சொல்லிக் கேட்டதால் தான் நானும் அவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று நினைத்தேன் கா; உங்களுக்கு கஷ்டம் இல்லையே! '' தயக்கத்தோடு கேட்டாள். கர்ப்பவதியான பெண்ணை அலைக்கழிக்கிறோமோ என்ற எண்ணம் அவளுள்!

''ஹையோ அஞ்சலி, ஷொப்பிங் போவதென்றால் எனக்குச் சரியான விருப்பம். முன்பென்றால் ஃப்ரெண்ட்ஸாகச் சேர்ந்து அடிக்கடி போவோம் ;கல்யாணத்துக்குப் பிறகு ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரவி கூட்டிக் கொண்டு போவார்.'' என்றவள் ,

'' நிரஞ்சன் கூட கூட்டிக் கொண்டு போவான்; அண்ணாவுக்குத் தான் அப்படியான விசயங்களில் பொறுமையில்லை. '' என்றவள் மனதில், ‘அண்ணா ஏன் அஞ்சலியை வெளியே எங்காவது கூட்டிக் கொண்டு போ என்று வற்புறுத்திச் சொன்னார்!’ என்ற எண்ணம் தான் உழன்று திரிந்தது.

''ஆனாலும் அக்கா நீங்க இந்தமாதிரி இருக்கேக்க ...''என்று சொல்லிக் கொண்டு வந்த அஞ்சலியை இடைமறித்தவள்,

'' ம்ம்ம்... அப்படியெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை அஞ்சலி. நேற்றுத்தான் கொஞ்சம் உடம்புக்கு முடியாமல் போய்ட்டுது; அதுதான் உடனே வந்து உங்களைப்பார்க்க முடியவில்லை.” என்று அளவலாவியவாறே ஷாப்பிங் செய்தவர்கள், தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பினார்கள்.

வீட்டுப் போர்டிக்கோவில் கார் நிற்கவும் திறந்திருந்த கதவால் வெளியே ஓடி வந்த லக்க்ஷி , தாயின் கால்களை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் .


 

Rosei Kajan

Administrator
Staff member
#14
பேத்தியின் பின்னால் ஓடிவந்த கமலா , “ நித்திரையால் எழுந்த நேரம் தொடக்கம் அம்மா அம்மா என்று நச்சரிக்கத் தொடங்கீட்டாள். தீபன் தான் அங்கேயும் இங்கேயும் கொண்டு திரிந்து சாமளித்தான்.” என்றவரின் முகம், ஏனோ ஒரு மாதிரி இருந்ததாக உணர்ந்தார்கள் அஞ்சலியும் ஜீவாவும்.

“என் செல்லக்குஞ்சு அழுதாளா? இல்லையே! எங்க செல்லம் அம்மம்மாவோடு இருப்பாளே! ஏன்டா குஞ்சு?”மகளைக் கொஞ்சியவாறே தாயைப் பின்தொடர்ந்தாள் ஜீவா. தாங்கள் வாங்கிய ஆடைகள் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு அவளைத் தொடர்ந்தாள் அஞ்சலி.

உள்ளே ஹாலில் ஒருவரும் இல்லாததைக் கண்ட அஞ்சலி , தான் வாங்கிய ஆடைகளை 'மாமிக்கு பிறகு காட்டுவோம் 'என நினைத்தவாறே , தந்தை இருந்த அறையினுள் வைக்கச் சென்றாள் .

நேரம் ஆறைக் கடந்திருந்ததால் , அறையில் இலேசான இருள் கவிந்திருந்தது.


யன்னலால் வந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் தந்தை கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டவள், ‘அப்பாவா?..அதுவும் இந்த நேரத்தில்! ஒருநாளும் படுக்கமாட்டாரே! உடம்பு ஏதும் சரி இல்லையோ!கடைக்குப் போகும் போது நல்லாத்தானே இருந்தார்!' மனதில் மிகுந்த குழப்பத்தோடு பைகளை அங்கிருந்த மேசையில் போட்டுவிட்டு கண் மூடிக் கிடந்தவரின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

இயலாமை , வருத்தம் , கோபம் , ஆத்திரம் என்ற எல்லா உணர்வுகளும் ஒன்றாகச் சேர்ந்து குதியாட்டம் போட , நிலை குலைந்து படுத்திருந்த லிங்கம் , மகள் நெற்றியில் கைவைத்ததும் சடக்கென்று கண்களைத் திறந்தவர் , கட்டிலிலிருந்து எழுந்தமர்ந்தார் .

சிவந்திருந்த அவர் கண்களையும், கவலை தோய்ந்த முகத்தையும் பார்த்தவள் இதுவரை தன் தந்தையை இப்படி ஒரு நிலையில் பார்த்திராததால் , அதிர்ச்சியும் பதற்றமுமாக அவரருகில் அமர்ந்து , அவர் கைகளைப்பற்றிக் கொண்டாள்.


உள்ளம் எதையெதையோ நினைத்துக் கலங்க, “என்னப்பா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க? வீட்டிலிருந்து யாராவது எடுத்தார்களா? அப்பம்மா, தாத்தா சுகமாக இருக்கிறார்கள் தானே? உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது செய்யுதாப்பா? நான் போகும் போது நன்றாகத்தானே இருந்தீங்க ?” மடமடவென்று கேள்விகளைக் கேட்டவளின் முகம் கவலையைப் போர்த்தத் தொடங்கியிருந்தது.

மகளின் கேள்விகளும் அவள் பதற்றமும் கருத்தில் பதிந்தாலும் பதில் சொல்ல முனையவில்லை லிங்கம்.விழிகள் கலங்கிச் சிவக்க மகளின் தலையை வருடியபடி தன் தோளில் சாய்த்துக் கொண்டார் அவர்.

இவர், எந்தளவுக்கு கண்டிப்பானவரோ, அதேயளவு, பிள்ளைகள் மூவர் மீதும் அளவில்லாப் பாசமும் காட்டுவார் . அஞ்சலி பெரியவளான பின் தந்தையுடனான நெருக்கம் சிறிது தள்ளிப் போய்விட்டது தான். ஆனால், தந்தை மகள் அன்பும் பாசமும் அக்கறையும் அற்றுப் போகுமா என்ன? அதற்கு ஒருபோதும் குறை வந்ததில்லை!

என்னதான் என்றாலும் தந்தை இலகுவில் இப்படி உணர்ச்சி வசப்படுபவர் இல்லை என்பதால் , ஏதோ பெரிதாக நடந்திருக்கின்றது என உணர்ந்த அஞ்சலி , சிறிது நேரம் எதுவுமே பேசாது அவரின் தோளில் சாய்ந்திருந்தாள்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#15
மகளின் தலையை ஆதுரமாகத் தடவிக் கொண்டிருந்த லிங்கம் திடீரென்று வாய் திறந்தார். “ராஜாத்தி தயவு செய்து என்னை..இந்த அப்பாவை மன்னித்துக் கொள்ளம்மா!” தந்தையின் தழுதழுத்த குரலில் விசுக்கென்று நிமிர்ந்தாள் அவள்.

முற்றிலும் அதிர்வு தாக்க, விழிகள் மினுங்க, கசங்கிய முகத்தோடு இருந்த தந்தயைப் பார்த்தவளின் நெஞ்சம் பதறிப் போனது! என்ன ஏதென்று அறியாததில் உடல் நடுங்கியது.

''அப்பா! என்னப்பா? என்ன சொல்லுறீங்க? மன்னிப்பா? நான் உங்களையா? இதெல்லாம் என்ன கதையப்பா? என்றவள், “ என்ன நடந்தது என்று மறைக்காமல் சொல்லுங்கப்பா ;எனக்குப் பயமா இருக்கு.” என்று கேவியவாறே அவர் நெஞ்சில் தலை சாய்ந்தாள்.

வீட்டை விட்டுப் பிரிந்ததில் வாடிக் கிடந்த உள்ளம் ஸ்த்திரம் அடைய முதல், தந்தை என்னவோ ஏதோ என்று பயம் காட்டியதில் சிறிதும் பலமற்றுப் போனது அவளுள்ளம்!

சிறு குழந்தைபோல தன்னில் ஒன்றி அழும் மகளின் முகத்தை நிமிர்த்தி,
கண்ணீரைத் துடைத்து விட்டார் லிங்கம் . மேலும் சிறிது நேரம் அமைதி காத்து மகளின் மனதைப் பந்தயக் குதிரையாக ஓடவும் விட்டார்.


அப்போதுதான் அஞ்சலிக்கு ஒரு விடயம் பளிச்சென்று புரிந்தது.

தீபன் அவ்வளவு முக்கியமாகக் கதைக்க வேண்டும் என்றதற்கும் தந்தையின் கவலைக்கும் தொடர்பிருக்குமோ ! முதலில் ஐயப்பட்ட மனம் பின்னர் நிச்சயம் செய்து கொண்டது.

‘அப்படி எதைச் சொல்லி இந்தக் கலக்குக் கலக்கி விட்டிருக்கிறார்? ஒருவேளை நான் அவர்கள் வீட்டில் இருப்பதில் விருப்பம் இல்லை என்றாரோ! அதனால்தான் காலையில் சாப்பிடும் போதும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து போனாரோ! மண்டைக் கனம் பிடித்த ஆள்; அப்படிச் சொல்லியும் இருக்கும் ! அதுக்குப் போய் இப்படிக் கலங்க வேண்டுமா? கொழும்பில் வேறு வீடுகளே இல்லையா? அல்லது கொழும்பில் தான் இருக்க வேண்டுமா ?’ பலவாறு குழம்பினாள்.

மீண்டும் நிமிர்ந்து தந்தையை ஏறிட்டவள், வாய்திறக்க முதல்,'' அஞ்சும்மா '' என்றழைத்தார் லிங்கம்.

'' என்னப்பா சொல்லுங்க ;.என்ன நடந்திச்சு? '' அவசரப்பட,அவரோ மகளைத் தவிப்போடு பார்த்து, அவள் கரமிரண்டையும் பற்றிக் கொண்டவர்,

“அஞ்சும்மா, நான் சொல்வதை பொறுமையாக குறுக்க பேசாமல் கேட்கவேண்டும்; கேட்பாயா ?”என்றவர்,

“வாயே திறக்கவில்லை; என்னவென்று சொல்லுங்கப்பா!” பரிதவிப்போடு கேட்டவளை ஆதுரமாகப் பார்த்தார்.

“அது வந்தும்மா ...இந்தக் கல்யாணம் உனக்கு வேண்டாம்மா! அவன் அவன் நல்லவன் இல்லை;வீட்டில் எல்லோரும் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல என் மகளுக்கு இப்படி ஒருத்தனை கட்டி வைக்க இருந்தேனே!” என்றவரின் கரங்கள் நடுங்க, கண்கள் கண்ணீரைத் தள்ளியது.

திடுமென்று தந்தை சொன்ன செய்தியில் அதிர்ந்து விழித்தாள் அவள்.

“அப்பா? என்னப்பா ?ஏன்?”மிகவும் தடுமாறினாள். “திடீரென்று என்னப்பா நடந்தது?” இப்போது குரல் சற்றே தெளிந்திருந்தது. வீட்டில் யாருக்கும் எதுவோ, தந்தைக்கு வருத்தமோ என்று கலங்கிய மனம் முதல் வேலையாக ஆசுவாசமே கொண்டது.

கேள்வி கேட்கும் மகளையே பார்த்திருந்தார் லிங்கம் . தீபன் தன்னிடம் சொன்னதை இவளிடம் சொல்வதா? அல்லது ‘அஞ்சலிக்கு இப்போ தெரியத் தேவையில்லை; ஆறுதலாகச் சொல்லலாம்.’ என்று கமலா சொன்ன மாதிரி பட்டும் படாமலும் விசயத்தைச் சொல்வதா?’ கணம் யோசித்தார்.

அதற்கிடையில் அவள் பொறுமை போயிருந்தது.

‘ஹ்ம்... சொல்லிவிடுவதே நல்லது; அவள் ஒன்றும் சிறு குழந்தையல்ல; சொன்னால் புரிந்து கொள்வாள்.’ என்று நினைத்த லிங்கம் என்ன நடந்தது என்று சொல்லத் தொடங்கினார்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#16
பகுதி 6 .

அஞ்சலி, தந்தையை நாடிச் செல்ல , அதுவரை அவள் கண்ணில் பாடாதிருந்த லோகனும் தீபனும் ஹாலில் வந்தமர்ந்தனர் .


'' என்னம்மா நடந்தது'' என வினவிய மகளுக்கு, நடந்தவற்றைக் கூறிக் கொண்டே தானும் கணவர் அருகில் வந்தமர்ந்தார் கமலா.

தந்தையும் மகளும் அறையினுள் கதைத்தவை எல்லாம், திறந்திருந்த கதவு வழியாக ஹாலில் அமர்ந்திருந்தவர்களை எட்டவே செய்தாலும் , இடையில் எதுவும் கதைக்க வேண்டாமென நினைத்து ,பேசாதிருந்தனர்.

‘இவ்வளவு சொல்லியும் எல்லாவற்றையும் உடனே சொல்லவா வேண்டும்!’ என மனம் சுணங்கினான் தீபன்.


அவனைப் பொறுத்த வரை அஞ்சலி ஒரு அப்பாவி , மிகவும் அமைதியான சின்னப் பெண். ‘அவளால் இதை எப்படி தாங்க முடியும்? ' என்றே நினைத்தான் .

நடந்தவற்றை கேட்ட அஞ்சலியிடமிருந்து , சிறிது நேரம் எவ்விதமான சத்தமும் வரவில்லை . திடீரென அவளின் அழுகுரல் கேட்டு பதைபதைத்துப் போயினர் ஹாலில் அமர்ந்திருந்தவர்கள்.


தந்தையைக் கட்டிப் பிடித்து, அவர் நெஞ்சில் தனது முகத்தை வைத்து அழுதவள், சிறிது நேரத்தில் தலையை நிமிர்த்தித் தந்தையைப் பார்த்தாள்.

'' இதுக்காப்பா இவ்வளவு கவலைப்பட்டீங்க?! ஹய்யோப்பா..எனக்கு இதைக் கேட்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? '' என்றவளை அதிர்வோடு பார்த்தார் லிங்கம். ஹாலில் அமர்ந்திருந்தவர்களும் திகைத்துப்போனார்கள் தான் .

''அப்பாடா! இனி லண்டன் போகத்தேவையில்லை; இங்கேயே உங்களோடு இருக்கலாம். பார்த்தீங்களா, தாத்தா எப்பவும் சொல்லுவது தான் சரி, இந்த வெளிநாட்டு ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது ; சரி ..சரி..விட்டுத் தள்ளுங்கப்பா; இனிமேல் மட்டும் வெளிநாட்டில் கல்யாணம் பேசாதீங்க! '' படபடவென்று சொன்னவள்,

''ஏன், எனக்கு கல்யாணமே பேசாதீங்க; நான் இப்படியே உங்களோட இருக்கிறேன்.'' என்றவள், அடக்க முடியாது கேவினாள்.

''ஏன்மா இப்படியெல்லாம் சொல்கிறாய்?”' என்ற தந்தையை தீர்க்கமான பார்வையோடு இடையிட்டாள் அவள்.

'' வேண்டாம் பா, இனி இதைப்பற்றி ஒன்றும் கதைக்காதீங்க!” என்றவள்,

“எழும்பி வெளிக்கிடுங்க, இப்பவே வீட்ட போவோம்; பாக்குகளை எடுத்துக்கொண்டு வாறன்; எனக்கு உடனே அம்மாவைப் பார்க்கவேண்டும்பா!” என்றபடி விரைந்தெழுந்து கதவை நோக்கி நடந்தவள்,

இவளின் அழுகுரலில் திகைத்திருந்துவிட்டு, “வீட்ட போவோம் வாங்க '' என்றதும், இருக்கையை விட்டெழுந்து அறையை நோக்கி வந்த தீபனை கதவுத் திரைச்சீலை மறைத்ததால், அவன் மேல் மோதி நின்றாள்.

தன் மீது வந்து மோதியவளின் தோள்களில் சட்டென்று பற்றியிருந்த தீபன், அடுத்த நொடி திரைச்சீலையை விலக்கி அவள் விழிகளை ஊன்றிப் பார்த்தான்.


அவ்விழிகள் பிரதிபலித்த வேதனைக்கும் ஏமாற்றத்துக்கும் சற்றும் பொருந்தாத வார்த்தைகளை இதழ்கள் உதிர்த்துள்ளன என்பதை நிச்சயமாக உணர்ந்து கொண்டவன் பார்வை கனியத் தொடங்கியது.

அதைச் சற்றும் உணரவில்லை அவள். அவன் மீது மோதியதும் திகைத்தவள், மறுநொடி விலகிவிட்டாள்.

அவன் பின்னால் லோகன் , கமலா ஜீவா எல்லோரும் நிற்பதைப் பார்த்தவள், “ஸாரி ஸாரி, அவசரமாக வந்ததில் ...கவனிக்கவில்லை ; கோபிக்காதீங்க!”சொன்னவேகத்தில் அதில் நின்று யாருடைய பரிதாபத்துக்கும் ஆளாவதை விரும்பாது விருட்டென்று நகர்ந்துவிட்டாள்.

விரைந்து வந்து அறையினுள் நுழைந்த அஞ்சலியால் அழுகையை அடக்க முடியாமல் இருந்தது . அப்படியே கட்டிலில் குப்புற விழுந்தவள், தலையணையில் முகம் புதைத்துக் கதறி அழுதாள்.

‘ கலியாணம் மட்டும் முடிந்திருந்தால் …இப்ப என் கதி?’ என்ற நினைவே உடலைச் சில்லிட வைத்தது. இதுவரை யாரிடமிருந்தும் பரிதாபத்தைப் பெறும் சந்தர்ப்பம் அவளுக்கு வந்ததில்லை . ஆனால் இன்று?

கல்யாணம் என்று ஊரெல்லாம் சொல்லி, புறப்பட்டு வந்த வேகத்தில் ஏமாற்றத்துடன் திரும்பிப் போவதையும் , இதனால் தன் குடும்பம் படப்போகும் வேதனையையும் நினைத்தவளால் , அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை..

அப்படி அழுதுகொண்டிருந்தவளின் தோள்களை அன்பாக வருடியது ஒரு கை!


சட்டென்று எழுந்தமர்ந்து விழிகளை அழுந்தத்துடைத்துக் கொண்டே கமலாவை ஏறிட்டவளாள் தாளமுடியவில்லை. அடுத்தநொடி, தன்னையுமறியாது அவரது இடுப்பைக் கட்டிக்கொண்டு முகத்தை அவரது வயிற்றில் புதைத்து அழுகையில் குலுங்கினாள் அவள்.

'எப்போதும் அமைதியாக இருக்கிறவள் இந்த மாதிரி வேதனைப்படுகிறாளே! நேற்று வந்ததிலிருந்து கலகலத்துக் கொண்டு திரிந்தாளே!’ என நினைத்தவாறே அவளின் தலையைப் பாசமாக வருடினார் கமலா .

“ அஞ்சும்மா...முதல்ல இப்படி அழுவதை நிறுத்துடா;இப்ப என்ன நடந்துவிட்டுது?! என்னைக் கேட்டால் இந்தளவில் கடவுள் காப்பாற்றினார் என்று சந்தோசப்படவேண்டும் என்றுதான் சொல்வேன். இங்க பார் , இப்ப நீ அழுகையை நிறுத்தவில்லையோ, அங்க பார்,லக்க்ஷியும் அழத் துவங்கப் போறாள்!” என்றதும், மெதுவாகத் தலை நிமிர்த்திப் பார்த்த அஞ்சலியின் பார்வையில் பட்டனர், லக்க்ஷியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் ஜீவாவும் , அவளின் பின்னால் வாயிலில் சாய்ந்தவாறே துளைக்கும் பார்வையோடு நிற்கும் தீபனும்.

சட்டென்று கமலாவின் இடுப்பைச் சுற்றியிருந்த கரங்கள் விடுபட, அதேவேகத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டாள் அஞ்சலி.

இந்தக் கண்ணீரை மறைக்கத்தானே ஓடி வந்தேன். இப்ப ..ச்சே! முதல், நான் ஏன் அழவேண்டும்? இனி அழுவே மாட்டேன்.’ நினைத்தவாறே கமலாவை ஏறிட்டவள்,

“எதை நினைத்தும் அழ இல்ல மாமி, அம்மாவின் நினைவு வந்துட்டுது... அது தான் '' என்றவள் ,

 

Rosei Kajan

Administrator
Staff member
#17
'' உங்களோட கொஞ்சநாள் இருக்கலாம் என்று நினைத்தேன்; இப்ப உடனே வீட்ட போக விருப்பமாக இருக்கு; இப்ப வெளிக்கிட்டால் பஸ்சில் போகலாம் தானே? '' என்றபடி எழ முற்பட்டவளை, மீண்டும் அமர்த்தித் தானும் அமர்ந்தார் கமலா.

'' இங்க பாரும்மா, இப்ப ஏன் இப்படி அவசரப்படுறாய்? கொஞ்சம் பொறுமையாக இரம்மா. இப்ப நீ அங்க போனால் உன்னைப் பார்த்துப் பார்த்து வீட்டில் எல்லோரும் கவலைப்படுவார்களா இல்லையா? என்னைக் கேட்டால் இதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை; சம்பந்தம் பேசினோம் ,அது சரியில்லை என்று கடவுள் புண்ணியத்தில் தெரிய வந்துது; விலகிக் கொள்கிறோம் அவ்வளவும் தான்.” என்றவர், ஆதரவாக அவளை அணைத்துக்கொண்டார்.

“ அஞ்சும்மா...உங்கட விமலா மாமி அல்லது ராஜன் மாமா சொன்னால் அதைக் கேட்காமல் இருப்பீரா சொல்லும் பார்ப்பம்! அப்படித் தான்மா நாங்களும், நாங்க உங்களை இந்த வீட்டு ஆட்களாத் தான் பார்க்கிறோம். அதனால்தானே இந்த விசயமே இப்ப நமக்குத் தெரிய வந்திச்சி . அதனால் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளம்மா. இப்ப அப்பா போகட்டும், அதுவும் இப்ப இல்ல காலையில்; தீபனே கூட்டிக் கொண்டு போவான் .அங்க போய் , அந்த கணேஷ் வீட்டில கதைச்சி , இந்த விசயத்துக்கு முற்றுப் புள்ளி வைப்போம் சரியா...'' என்றவர்,

''இப்ப அங்க போய் நீ என்ன செய்யப் போகிறாய்? கொஞ்ச நாளைக்குப் பேசாமல் எங்களோடு இரம்மா ; இங்க ஏதாவது படிக்கத் தொடங்கு; தீபனும் மாசத்தில் இரண்டு தடவைதான் வருவான் , நாங்க தனியத் தானே இருக்கிறம். ''என்றவர்,

“ராஜன் மட்டும் நடந்ததைக் கேள்விப்பட்டால் இப்பவே வெளிக்கிட்டு வருவார்; வந்தாலும் உன்னை கிளிநொச்சி போக விட மாட்டார்.” என்றார் தீர்மானமாக.

இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் மறுபக்கத்தில் மகளோடு அமர்ந்தாள் ஜீவா.

''ஆமாம் அஞ்சலி, நீர் எங்கேயும் போகத் தேவையில்லை. அம்மா சொல்வதுதான் சரி ; பேசாமல் போய் முகத்தை கழுவிவிட்டு கீழ வாரும். லிங்கம் அங்கிள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். சின்னப்பிள்ளை, அதுவும் இரு உயிராக இருக்கிற என்னால் பசி பொறுக்க முடியாது அஞ்சலி; ப்ளீஸ்.” இராகமிழுத்தாள்.

அவள் பாவனயில் முழுதாக சுதாகரித்திருந்த அஞ்சலி, '' ஹையோ! நீங்க போய் சாப்பிடுங்க ஜீவாக்கா, எனக்கு பசிக்க இல்லை.”என்று ஆரம்பிக்க,

“அம்மா கலையில் நாலு மணிக்குச் சரி வெளிக்கிட்டால் தான் ஈசியா , நேரத்தோட கிளிநொச்சிக்குப் போய்ட்டுத் திரும்பி வரலாம். சாப்பட்டை எடுங்க; மாமாவையும் வரச் சொல்லுங்க; அஞ்சலியும் வருவா.” என்ற தீபன்,

'' ரவிக்கு ஃபோன் பண்ணிப் பாரம்மா ,வந்திட்டாரா என்று'' என , தங்கைக்கும் ஒரு வேலை சொல்லி கீழே அனுப்பியவன், அவர்கள் செல்லும் வரை கதவடியில் பொறுமையாக காத்திருந்து விட்டு உள்ளே வந்து அவளருகில் அமர , அவளோ விறுக்கென்று எழப் போனாள்.

சட்டென்று அவள் கையைப் பற்றியவன், “நான் ஒன்றும் உம்மைக் கடித்துத் தின்ன மாட்டேன் ; கொஞ்சம் கதைக்க வேண்டும் அஞ்சலி, ப்ளீஸ் இரும்.”

கையை விட்டால் வெளியே ஓடிவிடுவாள் என்றதால் விடாது சொன்னான்.

‘ஆமாம் ஆமாம், நீர் கடிக்கும் மட்டும் நாங்க பூப்பறிச்சுக் கொண்டு தானே இருப்போம்!’ என்று நினைத்தவள்,

'' இங்க பாருங்க, உங்களுக்கு வாயால் கதைக்கத் தெரியாதா? இந்த கையைப் பிடிக்கிற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். சரியா?” சீறினாள்.

சட்டென்று அவன் பிடி இளகியது . அப்படியே அதிர்ந்து போனான் அவன் .

“அதோடு, எனக்கு காதும் நன்றாகக் கேட்கும். இங்க நிற்கிறேன், என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்க.” சட்டென்று நகர்ந்து , சற்றுத் தள்ளியிருந்த மேசையில் சாய்ந்து நின்று கொண்டவளை அதிர்வாக பார்த்தான் அவன்.

''கடவளே! எழும்பிய வேகத்தில் வெளியே போய்விடுவீர் என்று சும்மா இப்படி இரும் என்று சொல்லத்தான் கையைப் பிடித்தேன்; அதில் இவ்வளவு கோபம் வர என்ன இருக்கு அஞ்சலி!” என்றவன் மனமோ, ‘ஆள் நீ நினைத்தவாறு அப்பாவி இல்லை; உருவத்தை வைத்து எடை போடாதே தீபன் ! சரியான காரமிளகாய் .’ முணுமுணுத்துக் கொண்டது.

சொல்ல வந்ததைச் சொல் என்கின்ற மாதிரி நின்றவளை ஒருகணம் ஊன்றிப் பார்த்தவன், “அஞ்சலி” என்றழைத்து சற்று நிதானித்தான்.

“மூத்தமகளுக்கு ஏற்பாடு செய்த கல்யாணம் நிற்கும் நிலை என்பதையும் கடந்து, கல்யாணம் நடந்திருந்தால் மகள் கதி என்னவாகி இருக்கும் என்று நினைத்து அதிர்ந்து போயிருக்கிறார் மாமா. இந்த நேரத்தில் நீரும் உம் பங்குக்கு வீட்ட வாறன் என்றால்...” சொல்லி நிறுத்தி அவளை ஊன்றிப் பார்த்தான்.

அவன் பார்வையுணர்ந்து கலங்கிய விழிகளை அவனுக்கு காட்ட விரும்பாது பார்வையைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

“அம்மா சொன்னது போல கொஞ்ச நாட்களுக்கு இங்க நில்லும்; எதையாவது படியும்; ஆறுதலாக ஊருக்குப் போகலாம்” தன்னை மீறிய கனிவோடு சொன்னவன், அவள் கைபேசியின் அழைப்பில் பேச்சை நிறுத்தினான்.

இக்கணம் எவரோடும் உரையாடும் மனநிலையில் இருக்கவில்லை அவள். கைபேசியோ விடாது அடிக்க, எடுத்துப் பார்த்தவள், அதில் ஒளிர்ந்த ‘சுதாகரன்’ எனும் பெயரைப் பார்த்த மட்டில் முகம் இறுகிப்போனாள்.


அக்கணம், அவன் மட்டும் எதிரில் இருந்திருந்தால் கிழியக் கிழிய செருப்படி நிச்சயம் வாங்கியிருப்பான்; அந்தளவு நெஞ்சில் ஆத்திரம் கனன்றது !

அவளின் முகமாற்றத்தைப் படித்த தீபனின் முகம் யோசனையில் சுருங்க,அவளோ, “வாடா வா; நல்ல நேரத்தில் தான் கால் பண்ணுகிறாய்!” சத்தமாகச் சொல்லிக் கொண்டு அழைப்பை ஏற்க , சட்டென்று எழுந்தான் தீபன்.

“யார் அஞ்சலி” என்று இவன் கேட்டதைக் காதில் வாங்காது கிரீச்சிட்டாள் அவள்.

“நான் எப்படி இருக்கிறேன் என்பது இருக்கட்டும்; முதலில் நீ எல்லாம் ஒரு மனிதப்பிறவியா? டேய், வெட்கம் கெட்ட ஜன்மமே, உன்னையெல்லாம் ...” கடகடவென்று கதைத்துக் கொண்டு போனவளின் வாயை இறுகப் பொத்தி கைபேசியைப் பறித்து அழைப்பைத் துண்டித்திருந்தான் தீபன்.

தீபனின் இச் செய்கையை சிறிதும் எதிர்பார்த்திராதவள் ஒரு கணம் அதிர்ந்து செய்வதறியாது நின்றாள் தான், மறு கணமோ, சுதாகர் என்கின்ற அற்பப்பதரில் காட்டமுடியாது போன கோபத்தை இவன் மீது காட்ட நினைத்தாள்.

கதைத்துக் கொண்டிருக்கும் போது கைபேசியைப் பறித்து அழைப்பைத் துண்டித்தது மட்டுமா? வாயைப் பொத்துகிறேன் என்று தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டு நின்றான் அவன்.

சட்டென்று திமிறி விலகியவள், “ஹலோ! உங்க மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீங்க?” சீறியவளை சுவாரஸ்சிய முறுவலோடு பார்த்தான் அவன் .

“இப்போ இந்த நிமிடம், சரியாப் பசிக்குது சாப்பிடவேண்டும் என்றுதான் நினைக்கிறேன் அஞ்சலி!” குறும்போடு சொன்னவன்,

“அந்த ராஸ்கல் கால் பண்ணினால் எடுத்துக் கதைக்க வேண்டுமா? நீர் இங்கிருந்து திட்டினால் அவன் அப்படியே நொந்து போவானா? உம்மட கோபம் அவனுக்கு சிரிப்பாக இருக்கும்! பச்... வீண் வேலை அஞ்சலி.” என்றவாறே முறைத்துக் கொண்டு நிற்பவளை உற்றுப் பார்த்தான்.

ஏனோ அவளை இப்படிப் பார்க்க அவன் மனம் சற்றும் விரும்பவில்லை.

“இப்போ என்ன அஞ்சலி நடந்திட்டுது? ஒரு அயோக்கியனைக் கல்யாணம் செய்ய இருந்த பெரிய விபத்திலிருந்து தப்பி இருக்கிறீர் என்று சந்தோசப்படும்.” கொஞ்சமாகக் கடித்து கொள்ள முயன்றான்.

அதற்கு எதையோ சொல்ல முயன்றவளுக்கு இடம் தராது, “ஹப்பா! உம்மைப் போய் அமைதியான பிள்ளை என்று நினைத்திருந்தேனே, என்னைச் சொல்ல வேண்டும்.” என்றவன் குரலில் குறும்பு வழிந்தது!

என்றைக்குமில்லாத அவனின் இலகுப் பேச்சில் அவனை நம்ப முடியாது பார்த்தாள் அஞ்சலி.

‘லெவலும் திமிரும் பிடித்த முசுடுக்கு இப்படியும் கதைக்கத் தெரியுமா?’

“எப்படி இருக்கிறீர் ?நான் எடுப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தீரா?” என்று சற்றுமுன் அலைபேசியில் வழிந்த சுதாகரனில் இருந்த ஆத்திரத்தையும் கடந்து, தன் முன் நிற்பவனை ஆராய முயன்றது அவள் மனம்.

“காளி வேஷம் போடுறீரே! எங்கோ இருக்கிற தடியனை வெருட்டுவதாக நினைத்து உம் முன்னால் இருந்த என்னைப் பயபடுத்தி விட்டுட்டீர்!” என்றவாறே அவள் தலையில் ஆதரவாகத் தடவிவிட்டு வாயிலை நோக்கி நகர்ந்தவன்,

“அதையும் இதையும் போட்டு குழம்பி வீணாக யோசிக்காது முகம் கழுவீட்டு சாப்பிட வாரும். நீர் தைரியமாக இருந்தால் தான் மாமா நிம்மதியாக ஊருக்கு வெளிக்கிடுவார் . ஃபோனுக்கு வேற சிம் போட்டுத் தாரேன்.” என்றபடி வெளியேறினான்.

அவளோ அசையாது நின்றாள். ‘இதுவரை எனக்குத் தெரிந்த தீபனுக்கும் இவருக்கும் நூறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கலாமே!’ என்று எண்ணியவள் ‘அந்த நாய்க்கு எவ்வளவு துணிவிருந்தால் எனக்கு எடுப்பான்!’ என்று கொதித்தாலும்,

‘காளியா..காளி என்ன செய்வா என்று ஒரு நாளைக்குக் காட்டுறேன்.’ சிலிப்பிக் கொண்டாலும் ,அவனும் கமலாவும் சொல்வதைப் போலவே இந்த விடயத்தில் மனம் நொந்துள்ள தந்தையையும் வீட்டினரையும் மேலும் வருத்தும் வகையில் நடக்கக் கூடாது என்ற உறுதியோடு குளியலறைக்குள் புகுந்தாள்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#18
பகுதி 7 .

அதிகாலையில், பொழுது விடிந்தும் விடியாத வேளையில், கொழும்பிலிருந்து வவுனியா செல்லும் பாதையில் விரைந்து கொண்டிருந்தது தீபனின் கார் .

காரை ஓட்டிக் கொண்டிருந்த தீபனும்,பக்கத்தில் அமர்ந்திருந்த லிங்கமும் மெளனமாக தத்தமது யோசனைகளில் மூழ்கியிருந்தனர்.

லிங்கத்தின் மனம் வேதனையில் சுருண்டு கிடந்தது! அவரால் இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை; தான் ஏமாற்றப்பட்டுள்ளார்; அதுவும் அயலில் வசித்த அறிந்தவர்களால், நம்பிக்கையானவர்கள் என்று நினைத்தவர்களால் !


' தலைக்கு வந்தது தலைப் பாஹையுடன் போய்விட்டது' என மனதைத் தேற்றினாலும் , 'எத்தனை பேருக்கு மன உளைச்சல்! ஊருக்குள் எத்தனை வீண் கற்பனைக் கதைகள் உலாவும்! இதெல்லாம் தேவையா? அதுவும் வரிசையாக மூன்று பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் எனக்கு !' என அங்கலாய்த்தது அவருள்ளம்.

'வீட்டில் எத்தனைதரம் வேண்டாம் என்றார்கள்; அதுவும் வெளிநாட்டுச் சம்பந்தம் வேண்டவே வேண்டாம் என்றாரே அப்பா! அவர்களின் பயம் நிஜமாகிப் போனதே!’ என்று எண்ணினாலும் , ‘வெளிநாடு போறவர்கள் வாழ்வெல்லாம் கேள்விக் குறியானதா? பொத்தாம் பொதுவாக அப்படிச் சொல்ல முடியாதே! எத்தனையோ பெண்கள் சீரும் சிறப்புமாக வாழவில்லையா?என் போதாத காலம் இப்படியாகிவிட்டது.’ என்றும் எண்ணாமல் இல்லை அவர்.


‘இல்லையே! என் நல்ல காலமோ என் மகளின் நல்ல காலமோதான் அவன் கயவன் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது .’ என்ற எண்ணம் தோன்றி, மனதின் சஞ்சலங்களை ஓட்டி நிம்மதியை உணரவைக்காமலும் இல்லை.

இந்த விடயத்தை தக்க நேரத்தில் அறியத் தந்த நிரஞ்சனையும், “மனக்குழப்பத்தில் இருக்கிறீங்க அங்கிள்; தனியாகப் போகவேண்டாம்; நானும் கூடவருகிறேன் . அவன் வீட்டில் கதைத்து இந்தக் கல்யாணப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவோம் .’ என்று, தனக்குள்ள வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஊருக்கு வரும் தீபனையும் நன்றியுடன் நினைத்துக் கொண்டது அவரிதயம்.

அதிகாலையில் போக்குவரத்து குறைவாக இருந்த பாதையில் , காரை ஓட்டிக்கொண்டிருந்த தீபனின் மனமும் பல கலவையாக குழம்பிக் கிடந்தது தான். இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டான் அவன்.


இத்தனை காலங்களில் இப்படி ஒரு உணர்வுப் போராட்டத்தில் சிக்கிக்கொண்டதோ, கலங்கியதோ அவன் நினைவில் இல்லை. 'ஆனால் இன்று , அதுவும் யாருக்காக?' என்ற கேள்வி அவன் மனதில் எழுந்ததும் , கண் முன்னே இருக்கும் இத்தனை பிரச்சனைக்கும் மத்தியில் சின்னஞ்சிறு முறுவல் வந்து போனதை ஒரு இதத்தோடு உணர்ந்துகொண்டவன் , மெல்ல லிங்கத்தைத் திரும்பிப் பார்த்தான் .

உழைப்பில் கறுத்திருந்த அவர் முகம் வேதனையில் கசங்கிச் சுருண்டிருந்தது.

‘என்னதான் ஆறுதல் சொன்னாலும் உள்ள வேதனையை வழித்துத் துடைப்பதும் இலகுவல்லவே!’ என எண்ணினாலும், அவர் துன்பம் தேவையற்றது என்றும் அஞ்சலி வாழ்வு நனறாகவே இருக்கும் என்பதிலும் அவனுக்குச் சிறிதும் ஐயம் வரவில்லை.

‘ அத்திடம் இவர் மனதிலும் இருக்க வேண்டுமல்லவா ?’ எண்ணியவன் , “மாமா ஒன்றுக்கும் யோசியாதீங்க; எல்லாம் நல்லபடி நடக்கும். நாங்க எல்லாம் இல்லையா?” ஆறுதலாக அவர் கரத்தைப் பற்றியவன், “சூடாக டீ குடிச்சிட்டுப் போவோமா?'' என்று வினவி ,பொருத்தமான இடமொன்றில் காரை நிறுத்தினான்.

அதிகாலையில் கிளிநொச்சி செல்லப் புறப்பட்ட தந்தையையும் தீபனையும் வழியனுப்பிய பிறகு படுக்கையில் விழுந்த அஞ்சலியை உறக்கம் அணுக மாட்டேன் என்றது!


மீண்டும் மீண்டும், நினைக்கவே கூடாது என்று எண்ணினாலும் தந்தை சொன்னவையே மனதுள் சுழன்றடித்தது.

“அஞ்சலிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை இலண்டனில் தான் இருக்கிறாராம்; நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வா! '' என்று இளைய மகனிடம் சொல்லியிருந்திருந்தார் கமலா .

“கட்டாயம் போய்ப் பார்க்கிறேன்மா.” என்றவனுக்கோ நேரமின்மையால் சென்று பார்க்க முடியவில்லை.

இப்படியிருக்கையில் சமீபத்தில் ஒருநாள், “ போய்ப் பார்த்தியா தம்பி? அஞ்சலியும் கல்யாணம் வரை நம்மோடுதான் நிற்கப் போகிறாள்; முடிந்தால் ஒருதரம் சென்று பார்த்துவாவன்.” என்றிருந்தார் கமலா.


“கட்டாயம் இந்தமுறை போய்ப் பார்க்கிறேன்.” என்றவன் , சுதாகரன் பற்றிய விபரங்களைக் கூறி நண்பனொருவனிடம் விசாரிக்க, அவனோ அவனை நன்றாகத் தெரியும் என்றும், தன் அங்கிளின் கடையில் தான் வேலை செய்கிறான் என்றும் சொன்னதோடு, “ஏன் திடீரென்று கேட்கிறாய்?”என்றதும், அஞ்சலியின் திருமண விடயத்தைச் சொன்னான் நிரஞ்சன்.

சட்டென்று அமைதியானான் நண்பன். பின்னரோ, சுதாகரன் லண்டன் வந்த ஆரம்ப காலங்களிலிருந்து பல வகைகளிலும் உதவியாக இருந்த ஓர் வெள்ளைக்காரப் பெண்ணுடன் சேர்ந்து வசித்து வருவதாகச் சொல்ல, நம்பமுடியாது தடுமாறிவிட்டான் நிரஞ்சன்.

“என்னடா நான் சொல்வதை நீ நம்பவில்லை போலிருக்கே! அப்போ ஒன்று செய், நேரில் வந்து பார்த்துவிடு; கல்யாண விடயம் உனக்கும் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.” என்றான் அந்த நண்பன்.

நிரஞ்சனுக்கும் அதுவே சரியெனப் பட்டது. அதன்படி, சுதாகர் வசிக்குமிடம் சென்று பார்த்து நண்பன் சொன்னதன் நிஜத்தை அறிந்தவன் , இந்த விடயம் அவன் தமக்கை, தாய்க்கும் தெரியும் என்று சுதாகர் வேலை செய்யும் கடை உரிமையாளர் சொல்லத் திடுக்கிட்டான் .

“தெரிந்தே அறிந்தவர் வீட்டுப்பிள்ளையை பேசியுள்ளார்களே!” அவன் சொல்ல, “ம்ம் எத்தனையோ கல்யாணங்களை மறுத்தவன் தெரிந்த பிள்ளை என்பதால் தான் தலையாட்டி இருக்கிறான். கல்யாணத்துக்குப் பிறகாவது இவன் திருந்தமாட்டானா என்ற ஏக்கம் அவர்களுக்கு!” கடை உரிமையாளர் சொல்ல, அதற்குப் பிறகும் தாமதியாது, எந்த விடயத்தையும் பொறுப்பாகக் கையாளும் தமயனிடம் சொல்லியிருந்தான் அவன்.

இதையெல்லாம் தந்தை சொல்லக் கேட்டிருந்ததும் , அதன் பிறகு நடந்ததையும் நினைத்துப் பார்த்த அஞ்சலி , தான் கொஞ்சம் கூட நினைத்துப் பாக்காத மாதிரி , சமீப காலமாத் தன் வாழ்வு எங்கெங்கோ எப்படி எப்படியோ அடித்துச் செல்லப்படுவதை உணர்ந்துகொண்டவளால், இன்னமும் சுதாகரன் இவர்கள் சொல்வது போலச் செய்தான் என்று நம்ப முடியாதிருந்தது.

வேறுயாரும் தெரியாதவர்கள் என்றால் கூடப் பரவாயில்லை , இது இவ்வளவு சின்னவயதில் இருந்து தெரிந்தவர்கள் , அருகருகில் வசித்துக் கொண்டு இருப்பவர்கள் , அதுவும் அவன் அக்காவும் சேர்ந்து , தன் தம்பிக்கு இப்படியொரு தொடர்பு இருப்பதை மறைத்து , தன்னைப் பெண் பார்த்ததை ஏற்கமுடியாமல் இருந்ததுஅஞ்சலிக்கு .

''சுயநலம் மட்டும் தான் இப்போ எங்கும் காணப்படுகிறது. தங்கள் தேவைக்காக , நலத்துக்காக ஒவ்வொருவரும் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றனர் .'' என்று நினைத்தவள் , '' இனி எந்த ஆணையும் சந்தேகம் இல்லாது பார்க்க முடியுமா '' என்று, தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் .


*****


மகன் அமிர்தலிங்கம் இல்லாததால் தோட்டங்களைப் பார்வையிடச் சென்ற கந்தையா, களைத்து வந்து வீட்டின் முன் வரண்டாவில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தவர் ,


'' சிவகாமி...குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்கோ '' என, மனைவியை அழைக்க , தண்ணீர் செம்புடன் வந்த தேவகி , '' இந்தாங்கோ மாமா தண்ணி '' என்று , சில்வர் செம்பு நிறைய தண்ணீரைக் கொடுக்க , அதை வாங்கிக் கொண்டே,

'' எங்கம்மா உங்க மாமி? சமையலறையில் அப்படி என்ன பெரிசா வெட்டி முறிக்கிறா! '' வேண்டுமென்றே உரத்துக் கேட்டார்.

இதைக் கேட்டுத் தன் மனைவி சண்டைக்கு வருவார் என்று தெரிந்தே கேட்க , இவர்கள் இருவரதும் வாக்குவாதங்களையும் சீண்டல்களையும் இத்தனை நாட்களாக அருகிலிருந்து பார்க்கும் தேவகியோ , மாமனாருக்கு பதில் எதுவும் சொல்லாது சிறு சிரிப்புடன் சமையலறையை நோக்கிச் சென்றார்.

தேவகி உள்ளே நுழைய , சமையலறையினுள் இருந்து வேகமாக வெளியே வந்த சிவகாமி,'' இங்க பாருங்க, வந்ததும் வராததுமா என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க? இன்னும் ஒரு மணித்தியாலத்தில் வருவீங்க தானே, அதுதான், சப்புக் கொட்டிச் சாப்பிட . அப்ப தெரியும் நாங்க என்னத்த வெட்டி முறிச்சோம் என்று'' என படபடத்தவர், கணவர் அருகில் வந்து ,


''இங்காருங்க ... இப்ப தோட்டத்தில் போய் நின்று என்ன செய்தனீங்க? அங்க வேலை செய்ற பெடியளையும் குழப்பிக் கொண்டு நின்றிட்டு வாறீங்க தானே! அது எங்களுக்குத் தெரியாதென்றா நினைக்கிறீங்க !இதில எனக்குச் சொல்ல வந்திட்டீங்க'' தொடர்ந்த மனைவியின் சீறலில் முறுவல் பூத்தார் கந்தையா.

'' போயிட்டு உடனே வாறன் என்று சொன்ன லிங்கத்தை இன்னும் காண இல்ல! அதுவும் இல்லாமல், நேற்று முழுதும் ஃபோன் எடுக்க எடுக்க கதைக்கவும் இல்ல.பிறகொருதரம் இரவுபோல வீட்டுக்கு எடுத்துப் பார்த்தாள் நம்ம அபி; ஜீவா தான் கதைத்தாளாம்; ‘எல்லோரும் வெளிய போய்ட்டீனம் , பிந்தித் தான் வருவீனம்.’ என்று சொன்னாளாம்.” என்றவர்,

“இந்த அஞ்சலியின் ஃபோன் கூட வேலைசெய்ய இல்லை. எனக்கு என்னமோ மனம் திக்கு திக்கு என்று இருக்குங்க.'' என்று, சாதாரணமாகத் தொடங்கி புலம்பலில் முடித்தார் .

திருமணம் செய்து இத்தனை வருடங்களில் , தமது ஒரே மகனின் பெண்ணுக்கும் திருமணம் செய்ய இருக்கும் இந்த நேரத்திலும் , இந்த இரு வயோதிபர்களும் மனதில் இளமையுடன் , ஒருவரை ஒருவர் கோபித்துக் கொள்வதும், கந்தையா கேலியாக ஒருவார்த்தை பேசினால் , சிவகாமி திருப்பி நூறு வார்த்தை பேசுவதுமாக இருப்பார்கள். இவர்களின் இந்தக் கலகலப்பாலேயே பேரப் பிள்ளைகள் மூவருக்கும் தாத்தா ,அப்பம்மாவில் பாசமும் ஒட்டுதலும் அதிகம் .


 

Rosei Kajan

Administrator
Staff member
#19
எப்போதுபோல் மனைவிக்குப் பதில் சொல்ல வாயெடுத்த கந்தையா , வீட்டு வாசலில் காரொன்று வந்து நிற்பதைப் பார்த்து, ''இது யாரடா... நம்ம வீட்டுக்கு கார்ல வாறது; அதுவும் இந்த நேரத்தில்! '' வாய்விட்டே முணுமுணுத்தபடி, தோளில் கிடந்த துண்டை உதறியவாறே இருக்கையை விட்டெழுந்து, கேட் நோக்கி நடக்கத் தொடங்க , அவரைப் பின் தொடர்ந்தார் சிவகாமி. அவர்கள் பத்தடி நடக்கும் முன்னர் , காரிலிருந்து இறங்கிய தீபனும் ,லிங்கமும் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தனர் .

இத்தனை நேரமாக மகனைக் காணோமே என்று புலம்பிக் கொண்டிருந்த சிவகாமிக்கும் சரி , காரிலிருந்து ஒரு நெடியவனுடன் வந்திறங்கிய மகனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த லிங்கத்துக்கும் கூட , தீபனை யாரென்று அடையாளம் தெரியவில்லை .

அவர்கள் இருவரும் அதே இடத்தில் நகராது நிற்க , அருகில் வந்த லிங்கத்தின் வாடிய முகமே ஏதோ சரியில்லை என்று பெரியவர்களுக்கு உணர்த்தினாலும், புதியவன் யாரென்று தெரியாததால் கேள்வியாய் மகனைப் பார்த்தனர் .

பெற்றவர்கள் இருவரும் தீபனைப் பார்த்து அமைதியாய் நிற்பதைக் கண்ட லிங்கத்துக்கு , அப்போதுதான் அவனை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை என்று விளங்கியது.


“அப்பா..தம்பியைத் தெரிய இல்லையா? நீங்க பார்த்து பல வருசங்கள் ஆச்சு ; அதுதான் அடையாளம் தெரிய இல்ல ; தம்பிதான் நம்ம கமலாவின் மூத்த மகன் தீபன்!” என்றவர்,

''தம்பி இவர்கள் '' என்று தாய் தகப்பனை அறிமுகம் செய்யத் தொடங்க , “தெரியும் மாமா'' என்றவாறே , '' பாட்டி ,தாத்தா எப்படி இருக்கிறீங்க?” என்றவாறே இருவரையும் ஒன்றாகச் சேர்த்தணைத்தவன் , “ பார்த்தீங்களா, என்னைப் போய் ஏதோ பொல்லாத ஆமிக்காறனைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்களே! '' முறுவலோடு கூறியவன் ,

'' வாங்க மாமா உள்ள போவம்'' என்று அவர்கள் வீட்டினுள் , அவர்ளை அழைத்துச் செல்லவும் தான், வீட்டுக்கு வந்தவனை வரவேற்கவில்லை என்றுணர்ந்த சிவகாமி ,

'' ராசா கோபிக்காதேப்பு... பார்த்து எவ்வளவு நாளாச்சி! சின்னப் பொடியனாப் பார்த்தது , இப்ப பெரிய ஆம்பிள்ளையாகி வந்தால் , எப்படி அடையாளம் தெரியும் சொல்லுங்க பார்ப்போம். '' என்றவர்,

''சரி சரி உள்ளுக்குள்ள வா ராஜா..அம்மா அப்பா எல்லாரும் சுகமாக இருக்கீனமா ?'' என்றபடி , '' தேவகி..தேவகி..இங்க வாம்மா .. யார் வந்திருக்கீனம் என்று பார்!'' என மருமகளை அழைத்தவாறே வீட்டினுள் சென்றார் .

மாமியாரினது அழைப்பையும் , வெளியில் பேச்சுக் குரல்களையும் கேட்ட தேவகி, ‘ யார் வந்திருக்கிறார்கள்!?’ என்று யோசித்தவாறே, அடுப்பை அணைத்தவர் , ஈரக்கையை அடுப்படியில் இருந்த துணியில் துடைத்தவாறே வெளியில் வந்தார் .

அங்கே, கணவரோடு நின்ற தீபனைக் கனடவரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. '' தீபன் ! அதுதான் இன்றைக்கு இங்க ஒரே மழை இருட்டு; வராத நீங்க வந்திருக்கிறீங்க!” சிறுகேலியோடு சொல்ல, '' தேவகி, இதென்ன பேச்சு ? அத்தூரமிருந்து வந்த பிள்ளையை வா என்று சொல்லாது ...”கண்டிப்போடு சொன்னார் சிவகாமி.


முதல் முதல் வந்தவனை தானும் வரவேற்கவில்லையே என்கின்ற ஆதங்கம் அவருக்கு!

முறுவலோடு தேவகியை நெருங்கிய தீபன், '' அது ஒன்றும் இல்லை பாட்டி, நான் இங்க வாறதே இல்ல என்ற கோபத்தில சொல்கிறார் மாமி; இவர்கள் கொழும்பு வந்தாலும் கூட நின்று கதைக்க நேரமில்லாமல் ஓடிவிடுவேன் இல்லையா ? அந்தக் கோபம் , அப்படித்தானே மாமி '' என்றவாறே அவர் தோள்களைப் பிடித்து லேசாக அணைத்து ,

'' இப்போ பாருங்க மாமி , வா என்று கூப்பிடாமல் நானாக வந்திருக்கிறன்; அதுவும் அத்தனை முக்கியமான வேலைகளையும் விட்டுட்டு'' என்றவன் , '' வழியில் ஒன்றுமே சாப்பிட இல்ல மாமி, ; ஏனென்றால் உங்க சமையலை ஒரு கை பார்க்கத் தான் . சரியாப் பசிக்குது ;முதல் சாப்பாடு…. பிறகு தான் மிச்சக் கதை. '' வயிற்றைத் தடவியவாறே சொன்னான்.

இதுவரை, அவர்கள் பேசுவதை பார்த்திருந்த லிங்கமும் , ''பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கா தேவகி?” நெஞ்சில் அழுத்தும் பாரம் மனைவி பெற்றோரைக் கண்டதும் இன்னும் அதிகரித்தது போல் உணர்ந்தவர் , விடைதெரிந்தே வினவியர் “சாப்பாட்டை எடுங்க, முகம் கை கால் கழுவிக் கொண்டு வாறம்'' என்றபடி , தீபனையும் அழைத்துக் கொண்டு வீட்டினருகில் இருந்த கிணற்றடிக்குச் சென்றார் .

பிறந்ததில் இருந்தே மிகவும் செல்வச் செழிப்புடனும் , நவீன வசதிகளுடனும் வாழ்ந்த தீபனுக்கு , லிங்கம் வீட்டில் பலதும் புதுமையாக இருந்தது . வாயிலாக ஒரு சிறிய இடைவெளி விட்டு , மிகுதி நாலாபுறமும் , சிவப்பு , வெள்ளை , செம்மஞ்சள் நிறங்களிலான, செவ்வரத்தை(shoe flowers) பூமரங்களால் சூழப்பட்டு , பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது அவர்கள் வீட்டுக் கிணற்றடி .

கப்பி கிணற்றிலிருந்து வாகாக தண்ணீரை இறைத்து அருகிலிருந்த பெரிய வாளியில் ஊற்றிய லிங்கம் , “தம்பி கைகால் கழுவில் கொள்ளுங்க!” உபசரித்தவர் , அவனோ, பொறுமையாக சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு, '' தம்பிக்கு இதெல்லாம் பழக்கமில்லை என்ன ?” என்றவர், வீட்டில் பாத்ரூமும் இருக்கு தம்பி , யாருமே பாவிக்கிறது இல்ல ; இதுவே பழகிப் போச்சு ! உங்களுக்கு வேண்டும் என்றால் அதையே பாவிக்கலாம். நானும் யோசிக்காமல் இங்க வந்துவிட்டேன் .” என்றார் , அவன் தயங்குவதாக நினைத்து!


“ இல்ல இல்ல வேண்டாம் மாமா , ஒரு பிரச்சனையும் இல்ல ; இங்கயே கழுவுகிறன் .'' என்றவன், ''உங்க வீடும் , தோட்டமும் நல்ல அழகாவும்.... காற்றோட்டமாகவும் இருக்கு ;எனக்கு பிடிச்சிருக்கு !'' என்றவாறே முகம் கழுவத் தொடங்கினான்.

முகம் கழுவிக் கொண்டு வந்தவர்களிற்கு உணவைப் பரிமாறினார் தேவகி. கந்தையாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். '' தீபன் வருவதைச் சொல்லியிருந்தால் இறைச்சி சமைச்சிருப்பேன்!'' என்று கவலைப்பட்ட தேவகியைப் பார்த்தவன்,

''இல்ல மாமி, இறைச்சி எப்பவும் சாப்பிடுறது தானே; மீன் குழம்பும் மரக்கறிகளும்(vegetables) சூப்பரா இருக்கு! '' என்றவன் , இன்னொருவாய்ச் சோற்றை சாப்பிட்டு விட்டு ,

'' உங்களுக்கு இன்றைக்கு சாப்பாடு பத்தாமல் போகப் போகுது... '' என்று இழுக்க, மருமகளுடன் சேர்ந்து உணவு பரிமாறிக் கொண்டிருந்த சிவகாமி , ''ராசா வடிவாச் சாப்பிடய்யா; அதெல்லாம் தேவைக்கு அதிகமாகவே தான் சமைத்திருக்கு; எங்கள் வீட்டில்அப்படித்தான்.” பெருமையாகச் சொல்லி, பொரிச்ச மீனை எடுத்துப் பரிமாறினார் .

சாப்பிட்ட பின், பிள்ளைகள் பாடசாலையால் வர இரண்டு மணிக்கு மேலாகும் என்பதால் , தேவகியும் சிவகாமியும் தாமும் சாப்பிட்டனர்.

பின், முன் முற்றத்திலுள்ள பெரிய வேப்ப மரநிழலில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த ஆண்களுடன் அவர்களும் இணைந்து கொண்டனர் .


பொதுவாக, தீபன் வீட்டார் பற்றி நலம் விசாரித்த தேவகி , ''அஞ்சலி எப்படிப்பா இருக்கிறாள்? அவ்வளவாக விருப்பம் இல்லாமல் தானே வெளிக்கிட்டாள்; சந்தோசமாக இருக்கிறாளா?” கேட்டவர் குரல் கமறியது.கலங்கிய விழிகளை மெல்ல மறைத்தும் கொண்டார் .

வந்ததிலிருந்து ஒரு விதமான அசாத்திய அமைதியுடன் லிங்கம் இருப்பதை கவனித்திருந்தவர்கள் , அவர் சொல்லப் போகும் பதிலுக்காய் காத்திருக்க , லிங்கமோ எதுவுமே சொல்லாது தயக்கமாகத் தீபனைப் பார்த்தார் .

அவரது செய்கையே எதுவோ சரியில்லை என்று உணர்த்தியதால், பதற்றமான கந்தையா , '' அப்பு உன்னட்டத் தான் கேட்கிறோம், நீ பேசாமல் இருக்கிறாய்! பிள்ள சுகமாக இருக்கிறாள் தானே? நீ விட்டுட்டு வந்ததால வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறாளா? அதோட, நீ ஏன் இப்ப முகத்தைத் தூக்கி வைச்சிக் கொண்டு இருக்கிறாய்? '' என்று கேட்டவர் மனதில் ,


' திடீரென்று, அதுவும் இதுநாள் வரை இந்தப் பக்கம் ஒருமுறை கூட வந்திராத தீபன் ஏன் வந்தான்?' என்ற கேள்வி இருந்தாலும் , அப்படிக் கேட்பது சரியில்லை என்பதால் அதைத் தவிர்த்தார்.

தந்தை அப்படிக் கேட்டதும் தன்னை வெகுவாகச் சமாளித்துக் கொண்ட லிங்கம் , 'நடந்ததைக் கூறினால் வயது போனவர்களாலும் தேவகியாலும் தாங்க முடியுமா?' என்று யோசிக்க, “தாத்தா, அது வந்து ஒரு சின்னப் பிரச்சினை, வேறொன்றும் இல்லை...”பட்டென்று ஆரம்பித்தான் தீபன்.


தீபனை ஒருதரம் ஏறிட்ட லிங்கத்தால் மனவருத்தத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அதே , வாய் திறக்கவும் முடியவில்லை.தீபனே சொல்லட்டு என்பது போல அமைதி கார்த்தார்.

லிங்கத்தின் நிலையை உணர்ந்து கொண்டான் தீபன். மெதுவாக ஆரம்பித்து, தம்பி கூறியதிலிருந்து நடந்ததைச் சொல்லத் தொடங்க, கேட்டுக் கொண்டிருந்த மூவரின் நிலையையும் வார்த்தைகளால் சொல்ல வேண்டுமா என்ன?

தேவகி, வாயைப் பொத்திக் கொண்டு அழவே தொடங்கிவிட்டார். ‘ஐயோ என்ற ராசாத்தி, இதைக் கேட்டுத் துடிச்சிப் போயிருப்பாளே!’ மனம் அரற்ற , அக்கணமே மகளைப் பார்க்க வேண்டும் போலிருந்து அவருக்கு . மகளின் மனம் பூரணமாகத் திருமணத்தை ஏற்கவில்லை என்றறிந்திருந்தும், கல்யாணம் நடந்தால் எல்லாம் சரிவரும் என்று நினைத்திருந்தாரே! தன்னைத் தானே கடிந்து கொண்டவரின் நெஞ்சு காந்தியது.

சிவகாமியோ, “அடப் பாவி மனுசங்களா! இவங்களுக்கு இதுக்கெல்லாம் நாங்க தான் கிடைத்தோமா? என்ன நினைத்துக் கொண்டான் இந்த கணேசன் ;இன்றைக்கு அவனை என்ன செய்கிறேன் என்று பார்;கேட்கிற கேள்வியில் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவான்; குடும்பத்தோட! '' ஆவேசமாகக் கத்தியவர், விருட்டென்று எழுந்து கேட்டை நோக்கி விரைந்தார்.

ஒரே பாய்ச்சலில் அவரை மறித்தான் தீபன் , ''பாட்டி, தயவு செய்து அவசரப்படாதீங்க; கொஞ்சம் பொறுமையாக இருங்க.”


“எதுக்குப் பொறுமையாக இருக்க வேண்டும்? நீ கையை விடு தம்பி;இன்றைக்கு அவனை...” திமிறினார் சிவகாமி. அவருக்கு வெறியே வந்துவிட்டது .

“பார்த்துப் பார்த்து வளர்த்த என் பேத்தியை காவாலி கழிசடைக்கு கல்யாணம் கட்ட நினைத்திருக்கிறானே!” கண்ணீரோடு புலம்பியவருக்கு மனம் தாளவில்லை .. “டேய் கணேசா, இருடா உனக்கு வாறன்.” குரலையும் உயர்த்தினார்.

“பாட்டி”கண்டிப்போடு வந்தது தீபனின் குரல்.

“இங்க பாருங்க, அவர்களோடு கதைக்கத்தான் வேண்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்காக, தேவையில்லாமல் ஏன் ஊரைக் கூட்ட வேண்டும் ? நாம இங்க தானே இருக்க வேண்டும் . அதோட படிக்கிற பிள்ளைகளும் வீட்டில் இருக்கிறார்கள்...” நிலைமையை எடுத்துரைக்க முயன்றான் .

ஆனால், மனைவியுடன் சேர்ந்து கொண்ட கந்தையா, “ஏன்டா லிங்கம் ....உனக்கு நான் உப்புப் போட்டுத் தானே சாப்பாடு தந்தன்? வந்ததும் அவனைப் போய் நாலு சாத்துச் சாத்தாமல், ஆறுதலாக இருந்து சாப்பிட்டுட்டு விசயத்தைச் சொல்கிறாய்!”கோபத்தில் உடல் நடுங்க, தீவிழி விழித்துப் பேசினார்.


“ இதுக்குத்தான் அப்பவே தலை தலையா அடித்துக் கொண்டேன்; கண்டறியாத வெளிநாட்டுச் சம்பந்தம்; எத்தனை கதை சொன்னாய்; இப்ப பார், தற்சமயம் கல்யாணம் முடிந்திருந்தால்...என் பேத்தி வாழ்வு? நீ என்னடா செய்வாய்? இப்படி ஆசை ஆசையாய் பொத்திப் பொத்தி வளர்த்தது கண்டவங்களுக்கும் தாரை வார்க்கவா?” ஆங்காரமாகக் கத்த தொடங்கினார்.

தாங்கள் பார்த்த மாப்பிளையின் தவறான நடத்தை தெரிந்தவுடன், லிங்கம் அடியோடு நிலை குலைந்து தவித்தார் என்றால் , அவர் அப்பா, அம்மா மாப்பிள்ளை வீட்டினரை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம் என்று கொதித்தெழுந்தனர்.
கணவர் சொல்லே மந்திரமாக , பிள்ளைகளை வளர்ப்பதும், வீட்டைப் பாரமரிப்பதுமாக இருந்த தேவகியோ செய்வதறியாது திகைத்து விழித்தார்.

இவர்களை எல்லாம் எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு ஒருவாறு அமைத்திப்படுத்திய தீபன், தானும் லிங்கமும் மட்டுமாக கணேசன் வீட்டில் போய் கதைத்து வருவதாகக் கூறி , அவர்கள் வீட்டில் இருக்கிறார்களா என்று விசாரித்த பின் , அங்கு செல்லக் கிளம்பினான் .
 

Rosei Kajan

Administrator
Staff member
#20
பகுதி 8.


காலையில் தோட்டத்துக்குத் தண்ணீர் இறைக்கத் தொடங்கிய லிங்கம் அந்த வேலை முடிந்தவுடன் , களைப்பில் தங்கள் தோட்டத்தின் மூலையில் உள்ள பெரிய வேப்ப மரநிழலில் வந்தமர்ந்தார் .


முன்னெல்லாம் எவ்வளவு வேலை செய்தாலும் களைப்பு என்றால் என்ன என்றே தெரியாதிருக்கும் அவருக்கு , இப்பவெல்லாம் அடிக்கடி சோர்வு ஏற்படுகிறது .

ஆசைஆசையாக மூத்த மகளிற்கு திருமண ஏற்பாடுகள் செய்தததும் , அவை கனவாகிக் கலைந்ததும் , இன்று போல இருந்தாலும் , நடந்து ஏறக்குறைய ஒன்றரை மாதம் ஆகி விட்டது. ஆனாலும் அன்று கணேசன் வீட்டிக்கு சென்றதும் , அதன் பின் நடந்தவையும் இன்று நடந்தது போல் பளிச்சென்றிருந்தது. ‘ எப்படி ஏமாந்து போக இருந்தேன்!’ என்பதே அவர் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது!

தானும் கூட வருவேன் என்று அடம்பிடித்த தந்தையை , ஒருவாறு சமாளித்து அடக்கிய லிங்கமும் தீபனும் , கணேசன் வீட்டிற்குச் சென்றார்கள் . அங்கே, வந்தவர்களை அன்பாக வரவேற்ற கணேசனின் மனைவி விசாலம் ,


'' இங்காருங்க, லிங்கம் அண்ணன் வந்திருக்கிறார்! '' உள்ளேயிருந்த கணவனை அழைக்க , சிரித்தமுகமாக வரவேற்றுக் கொண்டு வந்த கணேசனும் , தீபன் யாரென்று தெரியாததால் அவனையும் அறிமுகம் செய்து கொண்டார் .

பார்த்தும் லிங்கத்தின் இருளடைந்திருந்த முகம் அவர்களுள் யோசனையை உருவாக்காதில்லை. திடீரென்று தீபன் வரக் காரணம்? யோசிக்காமலும் இல்லை. ஆனாலும் , வருங்காலச் சம்பந்தியினரை உபசரிக்கும் விதமாய், “தேத்தண்ணி குடிப்பீங்க தானே ?'' விசாலம் கேட்க, '' இல்ல இல்ல, ஒன்றும் வேண்டாம்; இப்போதான் குடித்திட்டு வாரோம்.” மறுத்த லிங்கம் , ஒரு தீர்மானத்துடன் கணேசனைப் பார்த்தார்.


“இங்க பாருங்க கணேசன், முக்கியமாக கதைக்க வந்தனான்;சுற்றி வளைத்துக் கதைப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை; என்ன என்றால்...இந்தக் கல்யாணம் சரிவராது ; அந்த எண்ணத்தை இத்தோடு விட்டிடுவம்; இதைச் சொல்லத்தான் வந்தனான். '' ஒரே மூச்சில் சொன்னவருக்கு, அங்கு நிற்கவோ அவர்களைப் பார்க்கவோ பிடிக்கவில்லை.

கெட்டவர்களோ திகைத்துப் போயினர்.

“ இதென்ன அண்ணே, விசர்க் கதை (லூசுப்பேச்சு ) கதைக்கிறீங்க?இப்ப போய் ஏன் …ஏன்.... திடீரென்று இப்படிச் சொல்லுறீங்களே, தாயா பிள்ளையா பழகிட்டு நீங்க செய்வது உங்களுக்கே நல்லதாப்படுதா? '' மெல்ல மெல்ல குரலை உயர்த்தினார் விசாலம்.

இந்த விடயம் கேள்விப்பட்டதிலிருந்து , தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த லிங்கமோ பொறுமை எல்லை கடக்க, கடகடவென்று தான் அறிந்தவற்றைச் சொல்லி ,

“ இப்ப சொல்லுங்க … தாயா பிள்ளையா பழகினால் இப்படித்தான் கழுத்தை அறுப்பீங்களா?கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல், இப்படிச் செய்திருக்கிறீங்களே ! நானென்றதால் வந்து நின்று பொறுமையாகக் கதைக்கிறேன்; இன்னொருவராக இருந்தால் காறித் துப்பி காலில் கிடக்கிறதால் விலாசியிருப்பான்!” திருப்பிக் கத்தினார் .

மகன் பற்றி லிங்கம் சொல்லச் சொல்ல மலைத்து அதிர்ந்து , 'இதென்ன புதுக்கதை; அதுவும் என்பிள்ளையைப் பற்றி!' என்ற பாவனையில் இருந்த கணேசனையும் , ' அட அப்ப விஷயம் வெளிச்சிட்டுதா?(வெளியில் பரவுதல் )' என்று மலங்க மலங்க விழித்த விசாலத்தையும் கூர்மையாக அளவிட்ட தீபனால், இந்த விடயம் தமக்குப் போல கணேசனுக்கும் புதுசே என்றும் , சுதாகரனின் அக்கா போல , அவன் தாய்க்கும் தெரிந்தே இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.

லிங்கம் குரல் உயர்த்திக் கத்தியதும் , அதிர்ந்துபோய்நின்ற கணேசன் வாய் திறந்தார்.


“இதென்ன பேச்சு லிங்கம்? நீங்க கதைக்கிறது நல்லாவா இருக்கு! என் மகன் ஒருநாளும் …. கடைசி வரை... நான் அடித்துச் சொல்லுவன் …. இப்படிக் கீழ்த்தரமான வேலையெல்லாம் செய்ய மாட்டான். “கோபத்தில் தடுமாறினார்.

“அதுவும் என் மகளுக்கும் தெரியும் என்று சொல்லுறீங்க, அவளுக்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கு; அவள் அஞ்சலியில் பாசமானவள், ஏன் சுதாகரன் கூட முதல் எத்தனையோ பெண் பார்க்க வேண்டாம் என்றவன் அஞ்சலி என்ற உடனே சம்மதம் சொன்னான்.” என்றவர் லிங்கத்தையும் தீபனையும் வெறுப்போடு பார்த்தார்.

“இந்தக் கல்யாணத்தில் உங்களுக்கு இப்போ விருப்பம் இல்லைபோலும்; அதைச் சொல்லுவதுக்கு பதிலா என் மகனில் பழி போட்டுப் பேசுறது நல்லா இல்ல சொல்லிட்டன்.'' உறுமினார்.

அதற்கு பதில் சொல்ல முயன்ற லிங்கத்தை , ''மாமா ப்ளீஸ், கொஞ்சம் பொறுங்கோ...'' தடுத்த தீபன் , '' இங்க பாருங்க, இப்ப உங்களோட தகராறு பண்ண வரவில்லை.” என்று தொடங்க ,


''நீர் ஏன் தம்பி இதுக்குள்ள வாறீர்? இது எங்கட குடும்ப விஷயம். '' என்று விசாலம் இடை மறிக்க, அவரை முறைத்துப் பார்த்த தீபன், '' நானும் எங்கட குடும்பவிசயமாகத் தான் கதைக்க வந்திருக்கிறன், என் மாமாவின் குடும்பம் என்குடும்பம் தான்.'' தீர்மானமாய்க் கூறியவன் ,

'' உங்க மகனுக்கு இப்படி ஒரு தொடர்பு பல வருடமா இருக்கு என்பது நூறு வீதம் உண்மை; அது உங்க மகளுக்கும் நல்லாத் தெரியும்; அவ்வளவுதான். எங்க அஞ்சலிக்கு உங்க மகனைப் பேசியது பேசியதோட நிற்கட்டும். வேற கதை எங்களுக்கு தேவையில்லை. வேண்டும் என்றால் உங்க மகளிடம் கேட்டுப் பாருங்க. உங்க பிள்ளைகள் உங்களுக்கு உண்மையாக இருக்கிறார்களா இல்லையா என்று அப்போ தெரியும்.”ஆத்திரமாகச் சீறினான்.

“வாங்க மாமா, இனி இது சம்பந்தமா யாரோடும் ஒரு வார்த்தை கதைக்க வேண்டாம் ; கண்டவர்களோடும் கதைத்து நம்மை நாம் தாழ்த்திக் கொள்ளவேண்டாம்.” என்றபடி, முன்னே நடக்கத் தொடங்கினான்.

அவன் அப்படிக் கூறியதும் மிகவும் கோபம் கொண்ட விசாலம் , ''இங்கபாரு தம்பி, நீ என்ன இடையில வந்து நியாயம் கதைக்கிறாய்? எங்களுக்கு லிங்கம் அண்ணாவோட தான் கதை; சரியா? ''என்றவர் தொடர்ந்து,


'' சாதகம் பொருத்தம் என்றவுடனே சீதனம் ஒன்றும் வேண்டாம், பிள்ளையைக் கல்யாணம் செய்து தந்தால் போதும் என்று சொன்னதற்கு பல்லக் காட்டிக்கொண்டு வந்தீங்க அண்ணே ....இப்ப என்ன கதைக்கிறீங்க, இல்ல கேக்குறன்!’’ என்று கத்தியவர்,

“ ஊருலகத்தில் இப்ப இப்படி நடக்காமலா இருக்கு சொல்லுங்க பாப்பம்!

ஆம்பிளைப்பிள்ளை இப்படி அப்படித் தான் இருப்பான்; கட்டுறவள் தான் கெட்டித்தனமா, பொறுமையா அவனைக் கைக்குள்ள கொண்டு நடத்தோணும்!

என்னவோ பெரிய ரதியைபெத்து வைத்திருக்கின்ற மாதிரி அலட்டுறீங்க!

வரிசையாக மூன்று வைத்திருக்கிறீங்க , இந்தக் கல்யாணம் நின்றால்... என் பிள்ள ஆம்பிளை ...இவள் இல்லாட்டி இன்னொருத்தி; அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ள என்றால் சனம் இப்ப வரிசையில் நிக்குது! பாப்போமே, உங்க ரதிக்கு என்னமாதிரி மாப்பிள்ளை பார்க்கப் போறீங்க என்று! '' தொடர்ந்து கத்தினார்.

அவர் கதைக்க கதைக்க, அவருக்கும் நடந்தவை தெரியும் என்பதை தெளிவாக உணர்ந்துகொண்டார்கள் லிங்கமும் தீபனும் . அதேநேரம், கணேசனோ, மிக மிக அதிர்வடைந்தார்.

‘ அப்படியென்றால் இவர்கள் சொல்வது உண்மைதான் ; அதுவும் இவளுக்கும் தெரிந்திருக்கு; என்ன துணிவிருந்தால் என்னிடம் மறைத்திருப்பாள்?

என் மானமே போச்சு; தலைநிமிர்ந்து நடக்க முடியாதவாறு செய்துவிட்டார்களே!

அந்த ராஸ்கல் இப்படிச் செய்துள்ளான் என்பது தெரிந்திருந்தால் அவனுக்குக் கல்யாணம் பேச எனக்கு என்ன விசரா ?’ மனதுள் கொதித்துப் போனார்.

தன் முன்னால், வெறுப்புப்பார்வையும் உக்கிரமுமாக நிற்கும் லிங்கத்தை ஏறிடவே துணியவில்லை அவர் விழிகள். நெஞ்சம் கனக்க தலைகுனிந்தார் அவர்.

கணவரின் அமைதியும் சேரவே விசாலத்தின் குரல் ஏகத்துக்கும் உயர்ந்தது . அவ்வளவு இலேசில் தன்பக்கத்தின் பிழையை ஏற்க அவர் சற்றும் தயாராக இல்லை!

தம் பிள்ளைகளுக்கு பல்லில் சொத்தை வந்தால் கூட, 'அட! இதெல்லாம் இப்ப எல்லாப் பிள்ளைகளுக்கும் இருக்கு; இல்லாதவர்களைக் காண்பது கஷ்டம் ' என்று , இலகுவாகச் சொல்லுவது போலவே, சிலர், எந்த விடயமானாலும் தமக்குச் சாதகமாகவே சிந்தித்து, தம்மைத்தாமே தேற்றிக் கொள்வர்.

ஒருகாலத்தில் கூடாததாக , வெறுக்கப்பட்டதாக ,ஏன் பிழையாக இருந்தவை கூட , இப்பொழுது ‘சரி’ என்று வாதாடும் , ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துக்கு நம்மவர்கள் வந்து கொண்டிருக்கிறார்களே!

 
Status
Not open for further replies.
Top