போவோமா ஊர்கோலம் ? - ரோசி கஜன்- இதழ் 1

Rosei Kajan

Administrator
Staff member
#1
இன்றைய காலகட்டத்தில், எதைப்பற்றியாவது விபரங்கள் அறியவேண்டுமாயின் தாமதமின்றிப் பெற்றுக்கொள்ளும் வசதி வாய்ப்புகள் இணையத்தில் பரந்து கிடக்கின்றன. அதை நாமும் கையடக்கத்தில் வைத்துள்ளோம்.

இருந்தும், அவை தேவை என்று வரும் போதே நம்மால் தேடப்படும். அப்படிதானே?

அப்படியில்லாது, போகிற போக்கில் மிகவும் எளிமையாகவும் இலகுவாகவும் உலகநாடுகள் பற்றிய பார்வையை இந்த ‘ஊர்கோலம் போவோமா’ பகுதியில் எடுத்துச் சொல்லலாம் என்று நினைத்துள்ளோம்.

அந்தவகையில், இந்த இதழில் நான் வாழ்ந்து வரும் நெதர்லாந்து பற்றிய சிறு பார்வையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1541962599678.pngநெதர்லாந்து மிகச் சிறிய நாடுகளுள் ஒன்றென்பதை பலரும் அறிந்திருக்கலாம். என் சொந்தநாடான இலங்கையோடு ஒப்பிடுகையில் ஏறக்குறைய மூன்றில் இரு பங்களவு நாடே நெதர்லாந்து.

சனத்தொகை, அண்ணளவாக பதினேழு மில்லியன் ஆகும். அந்தவகையில் சனத்தொகைச்செறிவு மிகுந்த நாடுகளுள் இந்நாடும் அடங்கும்.

இந்நாட்டின் மூன்றில் ஒருபகுதி, குறிப்பாக வடமேற்குக் கரையோரமாக உள்ள பகுதி, கடல் மட்டத்துக்கும் கீழானது ஆகும். மொத்த நிலத்தில் ஏறக்குறைய அரைவாசி, கடல் மட்டத்திலிருந்து ஒரு மீற்றர் அளவே உயரம் கொண்டவையாக காணப்படுகின்றது.

தட்டையான நிலப்பரப்பை கொண்ட நெதர்லாந்தில் உள்ள குன்றுகள், கரையோரமாகக் காணப்படும் உயரமான அணைக்கட்டுகள் அனைத்துமே செற்கையாக அமைக்கப்பட்டவையாகும்.

உலகில், அமெரிக்காவுக்கு அடுத்து, ‘உணவு விவசாயபொருள்’ ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிற நாடு இதுவாகும். மண்ணின் தரமும், பதமான காலநிலையும், உயர் தொழில் நுட்பமுமே இதற்குக் காரணமெனலாம்.

இவர்களின் பாரம்பரிய உணவில் காய்கறி வகைகள் அதிகமாக இருந்துள்ளது. அது இடைப்பட்ட காலத்தில் அற்றுப் போயிருந்து, மீண்டும், மாமிசத்தைவிட காய்கறிகளை அதிகம் பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணவு பரப்பப்பட்டு வருகின்றது.

காலை, மதியம் பேக்கரி உணவுவகைகள், சீஸ், சாலட் என்றும், இரவுணவை பிரதான உணவுவேளையாக சுடச்சுட உண்ணும் வழக்கு இங்குண்டு. இவர்களின் பாரம்பரிய உணவு வகைகளுடன், இத்தாலி, சைனீஸ், இந்தோனேசிய உணவுவகைகளும் அதிக தாக்கம் செலுத்துகின்றன.

மதம் சார்பாக இனம்காணுதல் என்றால் ஏறக்குறைய ஐந்தில் இரு பகுதியனர் மட்டுமே உள்ளடங்குவர். அதிலும், முறையாக ஆலயம் செல்பவர்கள் மிகச் சிறு பகுதியினர் மட்டுமே. அதில் பெரும்பான்மையினர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். அடுத்து, புரட்டஸ்தாந்து மதத்தினரும், சிறுபகுதியினர் முஸ்லிம் மதத்தையும், மிகச்சிறிய அளவில் பௌத்தமும் இந்துமதமும் என பல மதங்களுடைய மக்கள் கலந்திருந்தாலும், சுதந்திரமும் நவீனமும் கொண்ட வாழ்க்கையே வாழ்கின்றனர்.

அண்மைகாலங்களில், தேவாலயங்கள் மூடப்பட்டு வீடுகளாக மாற்றப்பட்டு வரும் அதேவேளை, குற்றங்கள் மருகி வருவதன் அர்த்தமாக, சிறைச்சாலைகள், சீர்த்திருத்தப்பள்ளிகள் மூடப்படுவதும், அக்கட்டிடங்கள் அயல் நாடுகளுக்கு வாடகைக்கு விடப்படுவதையும் அதிகம் காணக் கூடியதாகவுள்ளது.

சமுதாயம் என்பதைக்கடந்து தனிமனித அடையாளமே முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது. என்ன வேலை என்பதை விடுத்து உழைப்பவனுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

அறிந்தவர் தெரிந்தவர் என்றில்லாது நேருக்கு நேராகக் காண்கையில் இன்முக வரவேற்பு, எதையும் நேருக்கு நேராகவே கண்ணும் கண்ணும் பார்த்து கதைத்தல், அடுத்தவர் பேச்சுக்கு செவிமடுத்து அவர்களின் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை வழங்குதல் போன்ற அழகிய விடயங்களையும் இங்குள்ளவர்களில் அவதானிக்கலாம்.

தரம் பேணப்படும் அரச பாடசாலைகள், வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி என, சுமையின்றி, குழந்தைகளின் நலன் முன்னிறுத்தி கற்றல் செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உலகில், ஆரம்ப பாடசாலைக்கு குழந்தைகள் சந்தோசமாகச் செல்லும் நாடுகளில் முதலிடம் நெதர்லாந்துக்கே உரியது. நான்கு வயதில் முழுநேரமாக பாடசாலை செல்லும் எந்தக் குழந்தையும் அழுது கொண்டோ, மனச் சுணக்கத்தோடோ செல்வதில்லை. ஆசையாக செல்லும் வகையில் பாடசாலைகள் இயங்குகின்றன.

அதிகளவில் கால்வாய்கள் ஊடறுத்துச் செல்லும் நாடாகும். நாட்டில் மொத்தமாக 2500 பாலங்கள் அமைந்துள்ளன. தலைநகர் அம்ஸ்டர்டாமில் மட்டும் உலகில் எந்த நாட்டிலும் இல்லாதவகையில் 500 பாலங்கள் உண்டு. இவற்றில் பதினைந்தாம், பதினேழாம் நுற்றாண்டில் கட்டப்பட்ட பாலங்களும் உள்ளடங்கும்.

இப்படி, இலகுவான நீர் போக்குவரத்து இருப்பதே படகு வீடுகளையும் இங்கு பிரசித்தி பெற வைத்துள்ளது.

சைக்கிள் பாவனை என்பது மிகவும் அதிகம். அதற்கென்று தனியான பாதைகள் முறையாகப் பேணப்படுகின்றன. வீடுகளில் ஒன்றுக்கு இரண்டாக கார் இருந்தாலும், மோசமான காலநிலையைத் தவிர்த்து சைக்கிள் பாவனைக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

சுத்தமும் நேர்த்தியும் கொண்ட நாட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ண வண்ண மலர்ப்படுக்கைகள் பற்றிச் சொல்லவில்லை என்றால் எப்படி? அதிலும் முக்கியமான டியூலிப் மலர்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.1541962625889.png 1541962637166.pngதுருக்கியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் டியூலிப்மலர்களுக்கு நெதர்லாந்தே பிரசித்தம். இங்கிருந்தே இம்மலரின் கிழங்குகள் உலகெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. சித்திரை மாதத்தில் நெதர்லாந்தின் பலபகுதிகளில் பரந்த மலர்ப்படுக்கைகளை கண் குளிரக் காணலாம். அதிலும், நாட்டின் வட பகுதியில் டியூலிப் மலர்ப்படுகைகள் செறிவாகக் காணப்படும்.

கடந்த அறுபத்தியைந்து ஆண்டுகளாக, நெதர்லாந்து வடபகுதியில் அமைந்துள்ள ‘அன்னபௌலோனா’ என்ற ஊரில், சித்திரை மாதக் கடைசியில் ஆரம்பித்து நான்கு நாட்களுக்கு மலர்களில் ஆன உருவங்களை அமைத்து கண்காட்சியும் போட்டியும் நடத்தப்பட்டு வருகின்றது.

நெதர்லாந்தின் ரொட்டர்டாம் துறைமுகம் ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகமாகும்.

விளையாட்டுகளிலும் நெதர்லாந்து சோடை போகவில்லை. பனிக்கால உள்ளக விளையாட்டுகள், நீச்சல், சைக்கிள் ஓட்டம், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் என்று பலதரப்பட்ட விளையாட்டுகளில் பிரகாசிக்கும் அதேவேளை, இங்குள்ள மக்களும் அன்றாடம் உடற்பயிற்சியில் மிகுந்த கவனமுள்ளவர்களாகவே உள்ளார்கள்.

உலகநாடுகளை செல்வநிலையை கொண்டு தரப்படுத்துகையில் பதினான்காம் இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை எந்நாட்டவர்கள் வாழ்கின்றனர் என்று பார்க்கையில், வலிய, பெரிய நாடுகளை இலகுவாகப் புறந்தள்ளி ஆறாவது இடத்தைக் கைப்பற்றி நிற்கின்றது.

இறுதியாக, நெதர்லாந்தின் வரலாற்றைப் புரட்டினால், கடல் பிராந்தியத்தில் வலுவோடு இருந்து வர்த்தக ரீதியில் சிலநாடுகளில் நிலைகொண்டிருந்திருக்கிறார்கள்; சில நாடுகளை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருந்து சுதந்திரம் வழங்கியிருக்கிறார்கள். இன்றும் சில இடங்கள் இவர்களின் ஆட்சிக்குட்பட்டு இருக்கின்றது. அதுவே, இங்கு பலதரப்பட்ட மக்களும் சுமூகமாக வாழும் நிலையை உருவாக்கி உள்ளது.

பாலங்கள், அணைகள் கட்டுமாணத்துறையில் தம் திறமையைத் தனித்துக்காட்டும் இந்நாட்டின் அடையாளமாக, காற்றின் உதவியால் இயங்கும் ஆலைகள், மரத்தாலான காலணி, ஹாரிங் என்றழைக்கப்படும் பதப்படுத்திய மீன், டியூலிப் மலர்கள் என்பவற்றைச் சொல்லலாம்.


1541962663771.png 1541962674445.png 1541962685874.png 1541962698460.png


இதேபோல் நீங்கள் வாழும் இடம் பற்றி செந்தூரத்தில் பகிர்ந்து கொள்ள விருப்பமா? உங்கள் வார்த்தைகளில் எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.
 
Last edited:

emilypeter

Well-known member
#2
Nedharlandil chruchkal veedukalaga maruvathai padithapothu manam vedhanai adaikirathu.
 

Rosei Kajan

Administrator
Staff member
#3
Nedharlandil chruchkal veedukalaga maruvathai padithapothu manam vedhanai adaikirathu.
என்னைக் கேட்டால் இதில் வேதனை கொள்ள எதுவும் இல்லை என்பேன் எமிலி. கடவுள் நம்பிக்கை என்பது மனிதனைச் சீர் படுத்தும் நோக்கில் உருவானது என்பதே என் எண்ணம் . (அதுக்காக நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவள் என்று பொருளில்லை . )


இன்றய வளர்ந்து வரும் இளம் தலைமுறை எந்த விடயத்தையும் தர்க் ரீதியாகவே பார்க்க முனைகின்றது . சிறு வயதிலேயே காரண காரியங்களைத் தெளிவாகவே ஆராய்கின்றனர் . சும்மா நாம் சொல்வதெல்லாம் நம்பி விடுவதில்லை . அவர்களுக்கான கல்வி முறையும் அப்படியே .( இந்த நாட்டை வைத்துக் கொண்டு சொல்கிறேன் )

இங்கு, இப்பொழுதெல்லாம் ஞாயிறு பூசைகுத் தேவாலயம் சென்றால் வயதில் முதிர்ந்தவர்கள் தான் அங்கு பெரும்பான்மை.

என்னோடு வாழும் உயிரை என்னைப் போலவே மதிக்கிறேன் எந்த வித ஊறும் நினைக்கவில்லை. எங்கள் மனதில் தீமை இல்லை அமைதியான எங்கள் மனமும் நாம் வாழும் சுற்றமும் தான் ஆலயம் என்றளவில் விவாதிக்கும் இளையவர்களைக்காணக் கூடியதாக இருக்கின்றது.

இந்த வருடம் இங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒரு முறையும் இல்லாதவகையில் 55% க்கு மேற்பட்டவர்கள் எவ்வித மதச் சார்பும் அற்றவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. மிகுதி 45% வீதத்தில் பெரும்பான்மை முஸ்லீம் மதத்தினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தில் குடியேறியவர்கள்.

அதை வரவேற்கும் வகையில் தான் கதைக்கிறார்கள் . நாட்டில் தீமையின் அளவு மிகவும் குறைந்துள்ளதாகவும் கணிப்பீடுகள் காட்டுகின்றன. அதுதானே வேண்டும்.
 
Top