முழுநாவல் நேசம் கொண்ட நெஞ்சமிது..!

Status
Not open for further replies.

NithaniPrabu

Administrator
Staff member
#1
நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது..!!
அத்தியாயம்-1"எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்ல கற்றுக்கொண்டாள்?" என்று கேட்ட சங்கரனிடம், "போங்கப்பா" எனக்கூறி கலகலவென சிரித்தாள் மதிவதனி.


மகளின் சிரிப்பை ரசித்தவாறே, "என்னம்மா, பொய்தானே சொன்னாய்?” என்று அவரும் விடாமல் கேட்டார்.


ஒரு காலினை பூமிக்கு நோகாதபடி உதைத்து, "அப்பா" என்று சிணுங்கியவள், "சங்கரனின் மகள் பொய் சொல்ல மாட்டாளாக்கும். " என்றாள் கண்ணடித்து.


அவளின் அந்த சிறுபிள்ளைத்தனமான செய்கையில் பெருங்குரலெடுத்து சிரித்தார் சங்கரன். அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.


"உன் சிரிப்பே நீ பொய் சொல்கிறாய் என்பதை சொல்கிறது." என்றவர் மகளின் தாமரை முகத்துக்கு என்றே அளவாய் அமைந்த காதினை வலிக்காதபடி திருகி,


"அம்மாவிடம் இப்படி பொய் சொல்லலாமா வனிம்மா?" என்று கேட்டார்.


வில்லென வளைந்திருந்த தன்னுடைய புருவங்களை உயர்த்தி, நான் கேள்வி கேட்க போகிறேன் என்பதை முன்னே அறிவித்து, "செலவுக்கு போதாது என்று சொன்னால் மட்டும் அம்மா உடனே காசு தந்துவிடுவார்களா அப்பா? கோவிலுக்கு நேர்ந்திருக்கிறேன் என்றவுடன் தந்துவிட்டார்கள் பார்த்தீர்களா?" என்றாள் கயல் விழிகளில் குறும்பு கூத்தாட.


"ஆனாலும் பொய் சொல்வது தவறு தானேம்மா?” என்றவரின் மனதின் வருத்தத்தை நன்கே புரிந்து கொண்டாள் வதனி.


அவரின் கன்னங்கள் இரண்டையும் பிடித்து ஆட்டி, "என் செல்ல அப்பா! நான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன். சரியா?" என்று தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.


"அம்மாவிடம் சொன்னது போல பிள்ளையாரின் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டு விடுகிறேன். இப்போது உங்கள் மகள் பொய் சொல்லவில்லை. சரிதானா?" என்றாள் சலுகையுடன்.


"அப்படியே செய் கண்ணம்மா…" என்றவரின் முகம் மலர்ந்து விட்டது.


இது தான் சங்கரன். அன்பெனும் ஆசானைக் கொண்டே மகளை வழி நடத்தும் பாசமிகு தந்தை!


கடைத்தெருவில் தின்பண்டங்கள் வாங்குவதற்காக கலைமகள்

கொடுத்த பணம் போதாது என்று, நல்லபடியாக பரீட்சை முடித்தால்

கோவில் உண்டியலில் பணம் போடுவதாக நேர்ந்து இருக்கிறேன் என்றுசொல்லி தாயாரிடம் இன்னமும் பணம் கறந்துவிட்டாள் வதனி.


எதற்கும் கண்டிப்புக் காட்டும் கலைமகள் கோவில் விடயங்கள் என்றால் அனைத்து தடைகளையும் உதறிவிடுவார். அந்தளவுக்கு கடவுள் நம்பிக்கை கொண்டவர்.


தாயாரின் குணம் அறிந்த வதனியும், மற்றும்படி அம்மாவிடம் பணம் பறிக்கமுடியாது என்பதை அறிந்தே இந்த வழியினை கையாண்டாள்.


அவளுக்கும் தெரியும் தான் செய்வது பிழை என்று. தோழிகள் அனைவருடனும் இணைந்திருக்கப்போகும் கடைசி நாள் இன்று என்பதாலும், இனி எப்போது எல்லோரும் ஒன்றாக கூடப்போகிறோம் என்கிற ஏக்கமுமே இப்படி பொய் சொல்ல வைத்தது.


மகள் நடத்திய நாடகத்தை உள்ளே ரசித்துக்கொண்டும் வெளியே எதுவும் தெரியாத அப்பாவிபோல் முகத்தை வைத்தபடி பாத்திருந்தார் சங்கரன்.


மனைவியின் முன்னால் அவளிடம் கேள்வி கேட்டால் மகிழ்ச்சியோடு இருக்கும் மகளுக்கு திட்டு விழுமே என்று பயந்து, வழி அனுப்பும் பாவனையில் மகளுடன் தானும் வெளியே வந்தவர், நடத்திய விசாரணையின் லட்சணம்தான் மேலே நடந்தது.


"எங்கள் பிள்ளையார் கோவில் ஐயரின் மூன்று மகள்களுக்கும் அம்மா தான் சீதனம் கொடுத்தாராம், உண்மையா அப்பா?"


கேலியாகக் கேட்டவளை கேள்வியாய் பார்த்தவருக்கு தன் மனைவி பக்தியுடன் கோவிலுக்கு செய்யும் பண உதவிகளை, ஐயர் தன்னுடைய பிள்ளைகளுக்கு சீதனமாக எடுத்துக் கொண்டதாய் மகள் கேலி செய்கிறாள் என்பது புரிந்தவுடன், கோபமாக முறைக்க முயன்றும் அதிலே தோற்றுச் சிரித்தார்.


"ஆனாலும் உனக்கு வாய் மிகவும் நீளம்." என்றவர் அவளின் தோழி நித்தி வருவதை பார்த்துவிட்டு,


"நித்தி வருகிறாள். இருவரும் கவனமாக அம்மா சொன்னவைகளை நினைவில் வைத்து சந்தோசமாகப் போய் வாருங்கள்." என்று சொல்லவும் நித்தி அவர்களுக்கு அருகே வரவும் சரியாக இருந்தது.


"கரன் மாமா உங்கள் மகள் மீது உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை கூடவே கூடாது. அவளிடம் சொல்வதற்குப் பதிலாக இன்று அவளிடம் மாட்டி முழிக்கப் போகும் ஜீவன்களிடம் இதை சொன்னீர்கள் என்றாலாவது உங்கள் சொல்லுக்கு மதிப்பிருக்கும்."என்றாள் நித்தி.


"ஏய் என்னடி அப்பாவிடம் போட்டுக் கொடுக்கிறாயா?" தோழியிடம் பாய்ந்தாள் வாதனை.


அவளை கணக்கில் எடுக்காது, "என்னை நம்புங்கள், உங்கள் மகளை முடிந்தவரை யாரிடமும் வம்பிழுக்காமல் பார்த்துக் கொள்வதோடு, பத்திரமாக மறுபடியும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டியது என்னுடைய கடமை."என்றாள் தொடர்ந்து.


நித்தியை முறைக்கும் மகளைப் பார்த்தவுடன் வந்த சிரிப்பை அடக்கியபடி, "உங்கள் சண்டையை பிறகு தொடருங்கள். இப்போது இருவரும் கவனமாக விருந்துக்கு போய்வாருங்கள்." என்று அவர்களை அனுப்பி வைத்தார்.மனதை மயக்கும் மாலைப்பொழுதில், அந்த வருடம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக விழாக்கோலம் பூண்டிருந்தது வாணி தனியார் கல்விநிலையம்.


வாணிக்குள் நுழைந்த வதனிக்கும் நித்திக்கும் அதை பார்த்ததும் மலர்ச்சியும் சோகமும் ஒருங்கே தோன்றியது.


"படிப்பு முடிந்ததுவிட்டதே என்று பார்த்தால் நமக்கும் வாணிக்குமான தொடர்பும் இன்றோடு முடிந்தது. இல்லையாடி நித்தி?" கவலையோடு கேட்டாள் வதனி.


"ச்சு, இப்போ எதற்கு அதை ஞாபகப் படுத்துகிறாய்." என்றாள் நித்தி.


"போடி. எனக்கு ஏன் படிப்பை முடித்தோம் என்று இருக்கிறது. இவ்வளவு நாட்களும் இங்கே படிக்கிறோம் என்கிற பெயரில் எவ்வளவு கொட்டம் அடித்திருப்போம். இனி அதெல்லாம் முடியாதே..." என்றபடி திரும்பியவளின் கண்களில் அங்கே ஆண்களும் பெண்களுமாக நின்ற புதியவர்கள் பட்டார்கள்.


"யாரடி இந்த வேற்றுக்கிரக வாசிகள்?" அவர்களை ஆராயும் பார்வை பார்த்தபடி கேட்டவளின் குரலில் புது சுவாரசியம் பிறந்திருந்தது.


"எனக்கென்ன தெரியும்? நானும் உன்னோடு தானே வருகிறேன்." என்ற நித்தியின் முகத்திலும் அவர்கள் யார் என்ற யோசனை ஓடியது.


"அவர்களிடம் போய் ஓர் அறிமுகத்தை போட்டுவிடலாமா...?" குதூகலத்தோடு கேட்டாள் வதனி.


"உன் வேலையை வந்ததும் வராததுமாக ஆரம்பிக்காதேடி. அவர்கள் மூர்த்தி அண்ணாவுக்கு வேண்டியவர்களாக இருக்கலாம். அதனால் அடக்கிவாசி. அவர்களின் காதில் விழுந்துவிடப் போகிறது." என்றவள் அந்த புதியவர்களையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு நின்ற வதனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தங்கள் வகுப்புத் தோழிகள் இருக்கும் இடத்துக்கு சென்றாள்.


சற்று நேரத்திலேயே விழா ஆரம்பித்தது!


அங்கே திறந்தவெளியின் நடுவே ஒரு மேசை போடப்பட்டு, வாணி நிலையம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆனதை குறிக்கும் விதமாக ஒரு புத்தகத்தின் மீது ஐந்து என்கிற இலக்கம் இருப்பதை போன்று அமைந்த கேக் அழகுற வடிவமைக்கப்பட்டு இருந்தது.


அந்த மேசையை சுற்றி "ப" வடிவில் ஆசிரியர்களுக்காக கதிரைகள் போடப்பட்டு, அவற்றிற்கு நேர் எதிரே மாணவ மாணவிகள் அமர்வதற்கு வசதியாக வாங்கில்கள் அடுக்கப்பட்டு இருந்தது.


உயர்தரப் பரீட்சையை முடித்த மாணவர்களின் பிரியாவிடையோடு சேர்த்து, வாணியின் பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடுகின்றனர் அதன் நிர்வாகிகளான மூர்த்தி மற்றும் தமிழ்வாணி தம்பதியினர்.


தமிழ்வாணி உட்பட வாணி நிறுவனத்தின் பிற ஆசிரியர்கள் சூழ முன்னே நடந்துவந்தார் மூர்த்தி. வதனியும் நித்தியும் வாணிக்குள் நுழையும்போது நின்றிருந்த அந்த புதுக்குழுவும் அவர்களுடன் இணைந்து கொண்டது.


அவர்களை பார்த்தவுடன் மாணவர்களிடையே பலத்த கரகோஷம் எழுந்தது.


அதனைக் கவனித்த மூர்த்தி வாணியிடம், "என்ன வாணி, எங்களை இன்றுதான் பார்ப்பதுபோல் கை தட்டுகிறார்களே. அவ்வளவு நல்லவர்களா நாம்?" என்று கிசுகிசுத்தாள்.


அவரைப் பார்த்து வாணி முறைத்த முறைப்பில் படக்கென்று தன் வாயை மூடிக்கொண்டார் அவர்.


மூர்த்தி குழுவுடன் இந்த புதியவர்களும் இணைந்துகொள்வதை பார்த்த வதனி, "அட இவர்களும் வாத்துக்களா?" என்றாள் நித்தியிடம்.


அது நடந்துகொண்டிருந்தவர்களில் கடைசியாக சென்றுகொண்டிருந்த இளவழகனின் காதில் விழ கேள்வியாக தன் அடர்ந்த புருவங்களை உயர்த்தியபடி திரும்பினான் அவன்.


திரும்பியவனின் விழிகள் ஒரு தடவை ஒளிர்ந்து பின்னர் சுருங்கி வதனியை நன்கே அளவெடுத்தது.


அவனின் அளவெடுக்கும் பார்வை அவளைச் சீண்டியதில் சற்று முன்னே குனிந்து ஒரு கையினால் மட்டும் வணக்கம் வைத்து, "கும்புர்றேனுங்கோ சாமியோ.." என்று கண்களில் குறும்புடனும் இதழ்களில் சிரிப்புடனும் சொன்னாள்.


அதனை எதிர்பாராதவனின் விழிகள் வியப்புடன் சற்றே விரிந்து பின்னர் இயல்புக்குத் திரும்ப, அவனும் நடந்துகொண்டிருந்தவர்களுடன் இணைந்துகொண்டான்.


வதனியின் கையில் நறுக்கென்று கிள்ளினாள் நித்தி. "லூசாடி நீ? கொஞ்சமாவது உன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறாயா?வந்தவுடனேயே அவர்களை வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஓட வைக்காதே." என்றாள் கோபமாக.


"இது என்னடி கொடுமையாக இருக்கிறது, என் வாயை நான்தானே வைத்துக்கொண்டு இருக்கிறேன். நீ சொல்வதை யாராவது கேட்டால் என் வாயை உன்னிடம் தந்துவிட்டு நான் ஹாயாக இருப்பதாக என்னையல்லவா தப்பாக நினைப்பார்கள். எதைப் பேசுவதாக இருந்தாலும் நியாயமாக பேசு. நியாயம் செத்துப்போவதை என்னால் அனுமதிக்கவே முடியாது." என்றாள் நியாயத்தின் திருவுருவாக.


உன்னை திருத்தவே முடியாது என்பதாக நித்தி முறைக்க,


"சரியாத்தா சாமியாடாதே. அவர்கள் புது ஆசிரியர்கள் தானே. எங்களைப் பார்த்து பயந்துவிட்டால் நமக்குதானே நஷ்டம்.அதனால்தான் கொஞ்சம் கிண்டலாகப்பேசி அவர்கள் பயத்தை போக்க நினைத்தேன்." என்றவள் தொடர்ந்து,


"பாரடி, புது வாத்தியார்கள் எல்லோரும் மக்கு சாம்பிராணிகளாக தெரிகிறார்களே. இவர்கள் தேறுவார்கள் என்று நினைக்கிறாயா?" என்றாள் கேலியாக.


"வதனி!" என்றாள் நித்தி பல்லை கடித்துக்கொண்டு.


"சாந்தம்! சாந்தம்! இந்தச் சிறியவள் தெரியாமல் செய்த தவறுகளை பொருத்தருள்வீராக." என்ற வதனியின் முகத்திலோ அப்பட்டமாக அப்பாவித்தனம் குடியிருந்தது.


அவளின் பாவனையிலும், அதனை அவள் சொன்ன விதத்திலும் சட்டெனச் சிரித்துவிட்டாள் நித்யா.


"அப்பாடி, நித்தியானந்தி சாந்தியானந்தி ஆகிவிட்டார்" என்ற வதனியின் முகமும் தோழியின் சிரிப்பில் பங்கு கொண்டது.


வதனிக்கும் நித்திக்கும் இடையில் நடந்த வாயாடல்கள் அத்தனையும் இளவழகனின் காதிலும் விழுந்து அவனை சினம் கொள்ள வைத்தது.


'என்ன பெண் இவள். கற்பிக்கும் ஆசிரியர்களை இப்படி மரியாதை இல்லாமல் கேலி செய்கிறாளே...' என்று அவன் மனதில் தோன்றியது.


ஆசிரியர்கள் எல்லோரும் அவர்களுக்கான கதிரைகளில் அமர்ந்ததும் அன்றைய விழா ஆரம்பம் ஆனது.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2

அத்தியாயம் -2வாணியின் கண்ணசைவில், ஆசிரியர்களின் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மூர்த்தி எழுந்துகொள்ளவும், அவரின் உரையினை கேட்க மாணவர்கள் அமைதியாகினர்.


தான் சொல்லாமலே புரிந்துகொண்டு அமைதியாகிய தன்னுடைய மாணவச் செல்வங்களை பெருமையோடு பார்த்தவர் அனைவருக்கும் வணக்கங்களை கூறி தன்னுடைய உரையினை ஆரம்பித்தார்.


"இங்கு ஆசிரியர்களாக பணியாற்றும் என்னுடைய தோழமைகளுக்கும், புதிதாக ஆசிரியப் பணியினை ஏற்க வந்திருக்கும் சகோதர சகோதரியருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எங்களை உயிர்ப்புடன் நடத்தும் இந்த வாணியின் மாணவமணிகளுக்கும் என்னுடைய அன்பான மாலை வணக்கங்கள்.” என்றவர்,


வாணியை ஆரம்பித்த தினத்தில் இருந்து இன்றுவரையான அதன் முன்னேற்றத்தையும், வாணியில் இருந்து இதுவரை வெளியேறிய மாணவர்களின் வெற்றிகளையும் சுருக்கமாகச் சொல்லி இந்த முறை பரீட்ச்சையினை எழுதிய மாணவர்களுக்கு தன்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களையும் கூறினார்.


வாழ்த்தினை சொல்லும்போதே அவருடைய பார்வை வதனி தன்னுடைய தோழிகளுடன் இருந்த பக்கமாக சென்றது.


அவரின் பார்வையை சந்தித்த வனி உதடுகளை பிதுக்கி தலையினை இடமும் வலமுமாக ஆட்டி, 'எல்லாம் அவன் செயல்' என்பதாக கைகளை வானத்தை நோக்கி காட்டவும், தவிர்க்கமுயன்றும் முடியாமல் அவரின் முகம் சிறு சிரிப்பினை பூசிக்கொண்டது.


அங்கே புது ஆசிரியர்களுள் ஒருவனாக அமர்ந்திருந்த இளவழகனின் கண்களிலும் வனியின் செய்கை பட அவன் முகத்திலும் புன்னகை.


'குழந்தையை போல் இருக்கும் இவள் சில நேரங்களில் கோபம் வருவதைப்போலவும் எதையாவது பேசி வைக்கிறாளே. இவளின் பேச்சுக்களை பொருட்படுத்துவதா வேண்டாமா..' என்று குழம்பியே போனான் அவன்.


சற்றுமுன்னர் சினம் கொள்ள வைத்த அதே பெண் இப்போது அவனை புன்னகைக்க வைத்திருக்கிறாள்.


ஒரு பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவனை சினம் கொள்ளவும் சிரிக்க வைக்கவும் முடியுமா?


தன் குடும்பத்திலாகட்டும் நட்புக்களுக்கு மத்தியிலாகட்டும் எதையும் அந்த நொடியே சரியாக கணித்து செயல்படும் திறன் உள்ளவன் என்று எல்லோராலும் பாராட்டப்படும் அவனால் அவளின் இயல்பை கணிக்க முடியவில்லை.


அந்த தடுமாற்றமே அவளை இன்னும் கவனிக்க அவனை அறியாமலேயே தூண்டியது. தன்னை மறந்து அவளில் மூழ்கினான்.


"எங்கேடா பிராக்கு பாக்கிறாய்..?" என்று கோபாலன் இளாவின் கையை சுரண்டவும், கனவில் இருந்து விழித்தவன்போல் முழித்தான் இளவழகன்.


சில வினாடிகள் கழித்து தான் என்ன செய்துகொண்டிருந்தோம் என்று உணர்ந்தபோது முகம் கன்றிப்போனான்.


'இனி அவளைப் பார்க்கவே கூடாது!.' முடிவை என்னவோ மிக உறுதியாகத்தான் எடுத்தான்!


அந்தோ பரிதாபம், அதனை செயல் படுத்தத்தான் முடியவில்லை. விழிகள் அவளிடமே ஓடப்பார்த்தது.


இலகுவாக எடுத்துவிடும் முடிவினை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை தன்னுடைய வாழ் நாளிலேயே முதன்முறையாக உணர்ந்தான் இளவழகன்.


பெரும் சிரமப்பட்டு தன்னை அடக்கி, சரி.. மூர்த்தி சார் என்ன சொல்கின்றார் என்பதை இனியாவது கவனிப்போம் என்று அவர் பக்கம் தன்னுடைய பார்வையை மிகவும் கஷ்டப்பட்டு திருப்பினான்.


திருப்பியவன் கன்னத்தில் பலமாக அறைவதைப்போல இருந்தது அவரின் பேச்சு.


அவனுடைய நிலை என்ன? அவனின் குடும்ப நிலை என்ன? அவனுக்கான கடமை என்ன? இவை அனைத்தையும் நினைவு படுத்தியது அவரின் பேச்சு. அவற்றை கேட்டவுடன், அவனுடைய இயலாமை வனியின் மீது கோபமாக உருவெடுத்தது.


இளவழகனின் பன்னிரண்டாவது வயதிலேயே தந்தை தவறிவிட, அப்போது பதினெட்டு வயதான அவனின் அண்ணா கதிரவனிடம் குடும்பப்பொறுப்பு முழுவதும் வந்தது. உயர்தரம் மட்டுமே படித்த கதிரவன், கூலி வேலை முதல் கிடைத்த வேலையெல்லாம் செய்துதான் குடும்பத்தைக் காத்துவந்தார். அவரை தவிர அவனுக்கு ஒரு அக்கா மாதங்கி மற்றும் ஒரு தங்கை மாதவி என இரு பெண் சகோதரிகள்.


மாதங்கியின் பத்தொன்பதாவது வயதிலேயே அவளை சந்திரன் குடும்பத்தார் பெண் கேட்டுவர, தானாக தேடிவந்த வரனை உதறிவிடாது முடிந்தவரை சிறப்பாக திருமணத்தை செய்துமுடித்தார் கதிரவன்.


இளா தன்னுடைய இருபத்தி இரண்டு வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிடவும், இதுவரை குடும்பத்துக்காக உழைத்தது போதும் என்று கூறி கதிரவனுக்கு மல்லிகாவை திருமணம் முடித்து வைத்துவிட்டார் அவர்களின் தாய் வைதேகி.


அதுமட்டுமல்லாமல், என்றும் குடும்பத்தில் மனப்பிளவுகள் வந்துவிடக்கூடாது என்று கூறி அவர்களை தனியே குடியும் இருத்திவிட்டார்.


இப்போது இவனது தாயார் வைதேகி மற்றும் தங்கை மாதவியின் பொறுப்புக்கள் இவனது கடமையாகிப்போனது. அது அவனது விருப்பமான கனவும் கூட. தன்னை சுமந்தவளையும், கூட பிறந்தவளையும் மிக சிறப்பாக வாழவைக்கவேண்டும் என்பது அவன் வாழ்வின் மிகப்பெரிய லட்சியம்.


அந்த லட்சியம் மனதில் எப்போதும் இருந்ததில் தாய் சகோதரிகளை தவிர்த்து வேறு பெண்களிடம் அவன் பார்வை சென்றது இல்லை. எதற்காகவும் எந்த சந்தர்ப்பத்திலும் தன் மனம் சலனப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன்.


அப்படிப்பட்டவனை தன் சுயத்தை இழக்கவைத்து, அவளை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது வதனிதான் என்று அவள் மேல் அர்த்தமற்ற கோபம் உண்டானது அவனுக்கு.


வவுனியாவில் இயங்கும் இலங்கை தொலைத்தொடர்பு நிலையத்தில் பொறுப்பான பதவியில் வேலை செய்கிறான் இளவழகன். நல்ல சம்பளம் வருகிறதுதான். ஆனால் அவன் தன்னுடைய தாய் தங்கையை எப்படியெல்லாம் வைத்திருக்கவேண்டும் என்று கனவு காண்கிறானோ அதற்கு பத்தாமல் இருந்தது.


வீட்டுச் செலவுகளை மிகவும் சிக்கனமாக வைதேகி பார்ப்பதில் அவனின் சம்பளத்தில் ஒரு பங்கு தங்கையின் திருமணத்திற்கு என சேமிப்பாக சேர்கிறதுதான். என்னதான் சேமித்தாலும் போதுமான தொகையை எப்போது சேர்த்து எப்போது அவளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்துகொடுக்கப் போகிறான்?


ஒருவழியாக தங்கையை கரை ஏற்றினாலும் தாயை எப்போது சீமாட்டியாக வாழ வைப்பது?


அதனால்தான் மூர்த்தி வந்து வேலைக்கு கேட்டவுடன் சம்மதித்து விட்டான். மாலை வேளைகளை வீணாக ஓட்டுவதைவிட இது எவ்வளவோ மேல் என்கிற எண்ணத்தில்தான் அவனும் சம்மதித்து இன்று இங்கு வந்திருந்தான். அதையே மூர்த்தியும் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நல்ல மனிதர் செய்யும் நல்லவற்றில் இதுவும் ஒன்று.


ஒவ்வொரு வருடமும் இவர்களைப்போல வேலை இல்லாத அல்லது நல்ல வேலை தேடும் திறமைசாலிகளை தேடிப்பிடித்து, தன்னுடைய வாணிக்கு அவர்களின் சேவை தேவை என்று வேலை கொடுப்பார். தங்கள் எதிர்காலத்தை அவர்கள் தேடிக்கொண்டால் அவர்களை வாணியிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்துக்கு இன்னொரு படித்தவனை நியமிப்பார்.


அப்படி இந்த வருடம் நியமிக்கபட உள்ளவர்களில் இளாவும் ஒருவன்.


மறுபடியும் தன் சிந்தனை சிதறுவதை உணர்ந்து அவன் மூர்த்தி சாரின் பேச்சை கவனிக்க ஆரம்பிக்கவும், அவர் புதிதாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களை தங்களைத் தாங்களே சுருக்கமாக அறிமுகம் செய்துகொள்ளுமாறு கூறி தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.


மற்றவர்கள் தங்கள் பெயர்களையும் கல்வித்தகுதிகளையும் கூறினார்கள். இளவழகனின் தோழன் கோபாலன் தன்னுடைய பெயரை சொன்னவுடனே,


"பேசுங்கள் கோப்ப்பால் பேசுங்கள்! சுனாமி வரும்வரை பேசுங்கள். சூறாவளி சுழன்றடிக்கும்வரை பேசுங்கள். உங்கள் பேச்சை கேட்க ஓடிவந்திருக்கும் என்னை ஏமாற்றி விடாதீர்கள் கோப்ப்பால்.... ஏமாற்றிவிடாதீர்கள்! " என்று சொல்லியது சாட்சாத் நம் வதனியேதான்.


இதனை கேட்டவுடன் தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்த கோபால் முதல் மாணவர்கள் வரை எல்லோரும் சிரித்துவிட்டனர்.


வாணிக்கும் சிரிப்பு வந்தாலும் வதனி சொன்னதை கேட்டவுடன் சத்தமாக சிரித்த மூர்த்தியை முறைத்துவிட்டு, "வனி பேசாமல் இரு!" என்று அவளை அதட்டினார்.


"சரிங்கம்மா. உத்தரவு வாங்கிக்கறேன்!" என்ற வதனியை, "பேசாமல் இரடி" என்று நித்தியும் அதட்டினாள். அதன் பிறகே சற்றேனும் அமைதியானாள் அவள்.


கோபாலன் ஒருவழியாக தன்னைப்பற்றி சொல்லி முடித்தவுடன் கடைசியாக அமர்ந்திருந்த இளவழகனின் முறையும் வர அவனும் எழுந்துகொண்டான்.


அவனின் உயரத்தை பார்த்த வதனி, "ஒட்டகசிவிங்கிக்கும் ஒரு அண்ணா உண்டு." என்றாள் வாயை வைத்துக்கொண்டு இருக்கமுடியாமல்.


அதை தன் காதில் வாங்கியவன் அவளையே பார்த்தபடி, "அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் இளவழகன். பொறியியல் படித்திருக்கிறேன். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடிக்கொண்டிருந்தாலும், வவுனியா தொலைத்தொடர்பு நிலையத்தில் வேலை பார்க்கிறேன். மற்றும்படி என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக எதையும் இன்னும் சாதிக்கவில்லை." என்று உள்ளதை உள்ளபடி சொல்லவும் வனிக்கு அவனின் பேச்சு மிகவும் பிடித்துப்போனது.


அவன் பேச்சில் கவரப்பட்டு, தன்னை மறந்து அவனையே பார்த்தவளுக்கு, தன்னையே பார்த்துக்கொண்டு பேசிய அவனின் பார்வையை ஏனோ எதிர்கொள்ள முடியாமல் போகவும், தனது விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.


'ஏன் என்னால் அவனை பார்க்கமுடியவில்லை...' அவளுக்கே புரியவில்லை.


அவளின் அந்த செய்கையை பார்த்தவனின் கண்கள் ஒரு தடவை கனிந்து பின்னர் அது காணாமல் போனது. இந்த வருடம் பரீட்சை எழுதியவர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் அவன் கூற, மாணவர் கூட்டமே கைதட்டி ஆர்ப்பரித்தனர்.


ஆசிரியர்களின் அறிமுகம் முடிந்ததும் வாணியின் பிறந்தநாளை கொண்டாடும் முகமாக, கேக் வெட்டுவதற்காக மற்றைய ஆசிரியர்கள் மூர்த்தி சாரை அழைத்தனர். அவரோ வாணியின் செல்லப்பிள்ளை வதனியை அழைத்தார்.


அவளோ என்றுமில்லாமல் இன்று புதிதாக கூச்சப்படவும், "அட..அட! வனி வெட்கப்படுவதை யாராவது போட்டோ எடுங்கள். காணக்கிடைக்காத அரிய காட்சி.." என மாணவர் கூட்டம் கத்தியது.


கூச்சமாகப் போயிற்று அவளுக்கு!


‘இன்று எனக்கு என்ன நடந்துவிட்டது...’


தன்னை நினைத்தே வெட்கியவளாக முன்னே நடந்து தமிழ்வாணியின் அருகே சென்று நின்றுகொண்டாள்.


ஒருவழியாக அனைவரின் கைதட்டல்களுக்கும் வாழ்த்துகளுக்கும் இடையில் கேக்கை வெட்டி ஒவ்வொரு துண்டுகளாக ஆசிரியர்களுக்கு கொடுத்தாள். இளவழகனின் கைகளில் கேக் துண்டை கொடுக்கும்போது மட்டும் ஒருவிதமான தடுமாற்றம் அவளை தொற்றிக்கொண்டது.


"நான் ஐசிங் போட்ட கேக் உண்பதில்லை." என்று அவன் மெல்லிய ஆனால் கம்பீரமான குரலில் சொன்னபோதும், கேக்கை நீட்டிக்கொண்டிருந்தவளை என்ன செய்வது என்று தெரியாது பார்த்துவிட்டு அதனை வாங்கிக்கொண்டான்.


தனக்குமட்டும் பெரிய துண்டாக வெட்டியெடுத்து அதை மிக ஆவலுடன் ரசித்து உண்பவளை பார்த்தவனின் விழிகள், அவனின் உத்தரவையும் தாண்டி அவளின் அழகில் மயங்கி நின்றது.


எதேர்ச்சையாக அவன் பக்கம் பார்வையை திருப்பிய வதனியின் கண்களை சந்தித்ததும் இளவழகன் கண்களால் நகைத்தான்.


தான் சிறுபிள்ளை போல் உண்பதை பார்த்துவிட்டானே என்று வெட்கி தலையை திருப்பிக்கொண்டாள் அவள். அதனை பார்த்து சிரித்துக்கொண்டவன் அவளருகில் சென்று தன்னுடைய துண்டையும் அவள் கைகளில் வைத்து, "இதையும் நீயே சாப்பிடு. நான் உண்பதில்லை." என்று கூறிச் சென்றான்.


அவனின் அந்த செய்கை அவளுக்கு அதிர்ச்சியாகிப்போனது. அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கவும் அவனோ இவளை பார்க்காது தன்னுடைய நண்பர்களுடன் இணைந்துகொண்டான். உடனே சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள் யாராவது பாத்தார்களா என்று. யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட வதனி அந்த துண்டினையும் ஆசையாக உண்டாள்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
தொடர்ச்சி...

அவளை பார்க்காததுபோல் பார்த்துக்கொண்டிருந்த இளாவின் மனம் ஏனென்று அறியாமலே கனிந்து இருந்தது.


'குமரியின் உருவத்தில் குழந்தை' என்பதன் பொருள் புரிந்தது போல் இருந்தது அவனுக்கு. இவளின் செய்கைகளில் கோபம் கொள்வதும் குழந்தைகளின் செய்கைகளில் கோபம் கொள்வதும் ஒன்றோ என்றும் தோன்றியது.


எங்கும் சிரிப்பு சத்தம் மட்டுமே. கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுகள் அல்லவா. அவர்களின் துள்ளல்களுக்கும் துடிப்புகளுக்கும் கேட்கவா வேண்டும். அதுவும் வதனி இருக்குமிடம் தனியாகவே தெரிந்தது. வதனி தன் கண் பார்வையில் படும் விதமாகவே இளா தன்னுடைய இருப்பை அமைத்துக்கொண்டான். அவன் மூளை சொன்னது, செய்வது தவறு என்று. ஆனால் மனமோ சிறுகுழந்தையாய் அடம்பிடித்து மூளையின் சொல்லை கேட்க மறுத்தது.


ஒரு சிறு பெண்ணின் மீது ஆர்வம் வருவது நல்லதல்ல என்பதும், இப்போது தான் ஆசிரியர் ஸ்தானத்தில் இருப்பதும் புரியவே செய்தது.

எல்லாவற்றையும் விட தன்னுடைய எண்ணங்களின் வடிவம் என்ன என்பதே அவனுக்குப் புரியவில்லை. மனம் குழம்பிய குட்டையாக கலங்கிக் கிடந்தது.


திருமண வயதில் தங்கை, அவளின் திருமணத்தை சிறக்க நடத்தவேண்டும். தன்னுடைய தாயாருக்கு கடைசிவரை யாரையும் எதிர்பாக்காமல் வாழ நிரந்தர வழி செய்ய வேண்டும். இவற்றிக்கு அவனுக்கு ஒரு நல்ல வேலை வேண்டும். அது எப்போது கிடைத்து இவற்றையெல்லாம் அவன் எப்போது செய்து முடிக்கப்போகிறான்.


இவை எல்லாவற்றையும் செய்தபின்னரே அவன் அவனுடைய வாழ்க்கையைப் பற்றி யோசிக்க முடியும். அப்படி இருக்க இன்றைய அவன் மனநிலை, அவனின் திட்டங்கள் அனைத்தையும் தலை கீழாக மாற்றிவிடுமோ என்று பயந்து போனான்.


இன்றைய அவனின் சலனத்தின் பெயர் என்ன என்பதே கேள்விக்குறியாக இருந்தது. அதைவிட இதென்ன பார்த்த கணத்திலிருந்து ஒரு பெண்ணைப் பற்றியே சிந்திக்கிறோம் என்று தன்னைக் குறித்தே சற்றே அதிருப்தியும் ஆனான் அவன்!


தலையே வலித்தது இளவழகனுக்கு. முதலில் இப்படி யோசிப்பதை நிறுத்த வேண்டும். இது எல்லாம் தேவையற்ற சிந்தனைகள். இதன் பிறகு இவளை நான் சந்திப்பேனா என்பதே சந்தேகம். கண்ணில் படாதவள் கருத்திலும் பதியாமல் போய்விடுவாள் என்று எண்ணிக்கொண்டான்.


அவர்கள் இருவருக்குமான முடிச்சு ஆண்டவன் போட்டது என்பதை அவன் அறியவில்லையோ?
 

NithaniPrabu

Administrator
Staff member
#4
அத்தியாயம்-3

ஒரு வழியாக விழா முடிவுக்கு வரவும், மாணவர்கள் தங்கள் வீடு செல்ல ஆயத்தமாகினர். வனிக்கும் மற்றைய தோழிகளுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தது. இனி அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப மேல் படிப்புக்கள் முடிவாக, அவரவர் அவரவர் பாதையில் செல்வர். இன்னும் சிலர் இத்துடன் படிப்பை நிறுத்திவிட்டு திருமண வாழ்வில் விரும்பியும் விரும்பாமலும் இணைந்துகொள்வார்கள்.மறுபடியும் இப்படி ஒரு நாள் அமையுமா? அப்படியே அமைந்தாலும் இப்போதுபோல அப்போதும் கூடிக் கழிக்க முடியுமா?ஆக, அவர்களுக்கான அழகிய பள்ளிக்காலம் முடிந்தது என்பதை விருப்பு இல்லாமலே ஏற்றுக்கொண்டனர்.வருடாவருடம் எல்லா மாணவர்களுக்கும் நடப்பதுதான். இருந்தாலும் ஒவ்வரு வருடமும் பிரிவை சந்திக்கும் மாணவர்களின் தவிப்புக்கள் மட்டும் ஒரேமாதிரியானவை. எனவே கண்களில் கண்ணீரும் உதடுகளில் புன்னகையுமாக ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை சொல்லி அணைப்புக்களை இறுக்கி பிரியாவிடைக்கு வழிவகுத்தனர்.வதனியையே பார்த்துக்கொண்டிருந்த இளாவிற்கு, அவளை தோளோடு சாய்த்து ஆறுதல் சொல்லவேண்டும்போல் ஓர் உந்துதல். இதுவரை புன்னகையை தன்னுடைய ஆபரணமாக அணிந்திருந்த அந்த தாமரை முகம்,இப்போது கலங்கிய கண்களும் சிவந்த மூக்கும் பிதுங்கிய உதடுமாக பார்க்கவே முடியவில்லை.'என் கண்மணி, எதற்காக கலங்குகிறாய். எல்லாமாக உனக்கு நான் இருப்பேன் இறுதிவரை.' என்று மனம் சொல்லவும் திகைத்துப்போனான்.'கடவுளே! பார்த்த நிமிடத்தில் இப்படி ஒரு பெண்ணின் மேல் பித்து பிடிக்க முடியுமா? என்ன ஆனது எனக்கு? அவள் மட்டுமா, அங்கிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும்தானே கண் கலங்கி நிற்கின்றனர். அவர்களை என் கண்கள் காணவே இல்லையே....'இதென்ன என்று மனம் அதிரத்தொடங்கவும் அவளிடமிருந்து திரும்பிக்கொண்டான்.சரியாக வராது என்று தெரிந்த ஒன்றை நீ நினைப்பது பிழை என்று தன்னை தானே சமாதானப்படுத்த முயன்றான்.ஆனால், அவனின் சமாளிப்பில் அவனே பரிதாபகரமாக தோற்றுப்போனான்.தன்னால் ஒருவன் நிலை தடுமாறி நிற்கிறான் என்பதை அறியாத வதனி கண்களில் நீருடன் கலங்கி நின்றாள்.மீண்டும் மீண்டும் கண்ணீரோடு நிற்பவள் முகத்திடமே அவன் விழிகள் ஓட, தன்னையும் அறியாது அவளருகில் சென்றான். "ஹே குட்டிம்மா, எதற்கு இந்த அழுகை? பார்க்க சகிக்கவில்லை. முதலில் கண்ணை துடை." என மிக மெல்லிய ஆனால் அதட்டலான குரலில் கூறியவன்,தன்னுடைய கைக்குட்டையை எடுத்து அவனே அவளின் கண்களை துடைக்கப் போனான்.மனம் கலங்கிய அந்த நிலையிலும் அனிச்சையாய் சற்றே பின் நகர்ந்து, அவனுடைய கைக்குட்டையை வாங்கி தானே தன் கண்களை துடைத்தாள் வதனி.கைக்குட்டையை அவனிடம் நீட்டியபடி தலையை உயர்த்தி அவனை அவள் பார்க்க, அவளின் கண்களை சந்தித்தவனின் மனமும் முகமும் கனிந்தது."அழக்கூடாதுடா, எப்பவும் சிரித்தமுகமாக இரு. அதுதான் என்குட்டிக்கு அழகு." என்றான் தன்னை மறந்து.அவன் கூறியதை கேட்ட வதனியின் உதடுகளில் சிறு புன்னகை எட்டிப்பார்த்தது."இதுதான் உனக்கு நல்லாருக்கு. சரி.... இருட்டுகிறது. வீட்டுக்கு கிளம்பு." என்றுவிட்டு திரும்பி நடந்தான்.நடந்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான். என்ன நடந்தது இப்போது? நானா இதையெல்லாம் செய்தேன்? அதிர்ச்சியோடு திரும்பி வதனியை பார்க்க, அவளும் அவனையே பார்த்தபடி நின்றாள்.அப்போதும், அழுது சிவந்திருந்த அவளின் விழிகளில் இருந்து பார்வையை விலக்க முடியாமல் தவித்து பின்னர் தலையை உலுக்கி தன்னை மீட்டெடுத்தவன், விறு விறுவென நடந்து சென்றுவிட்டான்.அதன்பிறகு அவள் பக்கமே வரவில்லை அவன். ஆனால், அப்படி இருப்பதற்கும் படாத பாடுபட்டுப் போனான்.ஒருவழியாக மாணவர்கள் கிளம்ப, வனியும் நித்தியும் கூட கிளம்பினர். மூர்த்தி வாணி தம்பதியரிடம் அவர்கள் விடைபெற்றபோது,"நாளையில் இருந்து முடிந்தவரை இங்கு வந்து சாதாரண தரம் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார் வாணி.தமக்கும் இந்த வாணிக்குமான தொடர்பு இன்றுடன் முடிந்துவிட்டதே என்று தவித்துப்போய் இருந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து விடைபெற்றனர்.அவள் சென்றுவிட்டாள் என்று அறிந்துகொண்டதும் இளாவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. இனி அவளை எப்போது எங்கு காண்போமோ என்று மனது தவித்தது.அவன் எடுத்திருந்த முடிவுகள் அனைத்தும் அவனுக்கே மறந்து போனது.அவன் நண்பன் காந்தனை அழைத்து, "கிளம்புவோமா காந்தி? நான்கு கிலோமீற்றர்கள் சைக்கிள் மிதிக்க வேண்டுமேடா...."என்றான்.காந்தனும் "நானும் அதைத்தாண்டா நினைத்தேன். வா மூர்த்தி அண்ணாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவோம்." என்று மற்றைய நண்பர்கள், ஆசிரியர்களிடம் சொல்லிக்கொண்டும், மூர்த்தி தம்பதியரிடம் நாளையில் இருந்து வேலைக்கு வருவதாக சொல்லி வீடு நோக்கி கிளம்பினர்.காந்தனும் இளவழகனும் சாந்தசோலை என்கிற கிராமத்தில் வசிக்கின்றனர்.வவுனியா நகரின் குடியிருப்பு என்கிற சந்தியில் இருந்து வரும் ஒரே ஒரு பிரதான வீதி பூந்தோட்ட சந்தியை அடைகிறது. அங்கிருந்து ஒரு பாதை சாந்த சோலையை நோக்கியும் மற்றைய பாதை பூந்தோட்டம் கிராமத்துக்கும் செல்கிறது. இந்த இரண்டு கிராமங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் பூந்தோட்ட சந்தியை கடந்தே பிரதான வீதி வழியே வவுனியாவின் நகர்பகுதிக்கு செல்லவேண்டும்.இந்த கிராமங்களுக்கு செல்லும் அந்த பிரதான வீதியின் ஆரம்பத்திலேயே சித்திவிநாயகர் வீற்றிருக்கிறார். தெய்வீகம் நிறைந்த சித்திவிநாயகர் ஆலயமும் அவரின் பாதங்களை தழுவும் குளமும் அந்த ஊரின் அழகை இன்னும் அழகாய் காட்டுபவை.'இந்த ஊரில்தான் இருக்கின்றேன் ஆனாலும் அவளை சந்தித்ததே இல்லையே...' என்று யோசித்தபடி சைக்கிளை மிதித்தவனை காந்தன் தான் நினைவுலகத்துக்கு மீட்டு வந்தான்."என்னடா இன்று நீ சரியில்லையே. என்ன நடந்தது?" என்று அவன் கேட்கவும், 'எனக்கே என்ன நடந்தது என்று தெரியாமல் எதை என்று உன்னிடம் சொல்ல' என்று மனதில் நினைத்த இளா,"நாமும் இப்படித்தானே படிக்கும் காலத்தில் இருந்தோம், அதை நினைத்தேனடா." என்றான்.காந்தனும் சிரித்தபடி, "உண்மைதான்டா, அதுவும் அந்த வதனி என்கிற பெண்... நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. மிகவும் சுட்டியாக இருக்கிறாள். அவளின் வீட்டில் அவளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ தெரியாது." என்றான்.'மறுபடியும் அவளின் பேச்சா?'அவளையேதான் அவனின் மனம் சதா நினைக்கிறது. ஆனால் அந்த நினைப்பை அவனுக்குப் பிடிக்கவில்லை. என்ன மாதிரியான உணர்வித்து?பேச்சை மாற்றும் விதமாக, "உன் வேலை விஷயம் என்ன ஆச்சுடா?"என்று காந்தனை கேட்டான்."என்ன சொல்ல, பொறுத்திருக்க சொல்கிறார்கள். எவ்வளவு காலத்துக்கு பொறுப்பது என்று தெரியவில்லை. பேசாமல் அப்பா சொல்வது போல வெளிநாடு எங்காவது போகலாமா என்று யோசிக்கிறேன், பார்ப்போம்." என்றான் காந்தன்.என்றுமில்லாமல் மீண்டும் மௌனம் அவர்களுக்குள். இளாவின் மனதில் வதனியும் காந்தனின் மனதில் வேலை விஷயமும் நின்றதில் அமைதியாகவே மீதி தூரத்தை கடந்தனர்.

சாந்தசோலை கிராமத்தில் சற்று உள்புறமாக அமைந்திருந்தது அந்த வீடு.

மூன்று அறைகள்,பெரிய விறாந்தை, சமையலறை என்று கச்சிதமாக இருந்தது. வெளிப்புற சுவர்களில் பெயிண்ட் ஆங்காங்கே உரிந்தபடி, நான் வாழ்ந்துகெட்ட குடும்பத்துக்கு சொந்தமானவன் என்று பார்ப்பவருக்கு சொல்லியது.வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, முகம் கழுவி இரட்டை பின்னலிட்டு, சுவாமி கும்பிட்டதற்கு சான்றாக நெற்றியிலே திருநீறினை கீற்றாக தீட்டி இருந்தாள் மாதவி.மாலை மங்கிய பின்னர் வெளியே சுற்றுவதற்கு வைதேகி அனுமதிப்பது இல்லை. ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் வீட்டினை வேலியாக மறைப்பதால், ஆலமரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள்.இளாவின் சைக்கிள் சத்தம் கேட்டதும், "அம்மா, சின்னண்ணா வந்துவிட்டார்." என்று குரல் கொடுத்தாள்."இருட்டிய பிறகு வெளியில் என்ன வேலை உனக்கு? உள்ளே போ மாதவி." என்றபடி கேட்டை திறந்துகொண்டு வந்தான் இளா."போங்கண்ணா, வீட்டுக்குள் இருந்து நான் என்ன செய்ய?" என்று சிணுங்கினாள் மாதவி."எதை செய்தாலும் உள்ளிருந்து செய்" என்றவன் சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு, "அம்மா" என்று அழைத்தவாறே வீட்டினுள் சென்றான்.தங்கை மீது அளவுக்கு அதிகமாச பாசம் இருந்த போதும் அவள் செய்வது தவறு என்று தெரிந்தால் அந்த நிமிடமே அதட்டிவிடுவான் இளா.அவனின் குரல் கேட்ட வைதேகி, "இதோ வருகிறேன் தம்பி." என்றபடி வந்தார்.ஆங்கங்கே நரைத்திருந்தாலும் இன்றுவரை அடர்ந்து நீண்டிருக்கும் முடியினை நடு உச்சி பிரித்து ஒன்றாக சேர்த்து கொண்டையாக போட்டிருந்தார்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#5
தொடர்ச்சி...


கழுவிய சாந்தமான முகத்தின் நெற்றியில், திருநீறும் சந்தனமும் அழகாய் வீற்றிருந்தது. நைட்டி போன்ற முழு நீள சட்டை ஒன்று அணிந்திருந்தார்.அவரை பார்த்தவனின் மனம், இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகி அமைதியானது.தன்னையே பார்த்த மகனிடம், "என்னடா,இன்றுதான் அம்மாவை பார்ப்பதுபோல பாக்கிறாய். என்ன விஷயம்???" என்று கேட்டார்.சிறிதே மனம் தடுமாறினாலும் அதனை காட்டிக்கொள்ளாது, "இது என்ன கொடுமையடா சாமி. என் அம்மாவை நான் பார்ப்பது ஒரு குற்றமா?" என்றான் சிரிப்புடன்.அதை கேட்டு சிரித்த வைதேகி, "உன் மனதில் என்னவோ இருக்கு. மலிந்தால் சந்தைக்கு வரும்தானே. அப்போது தெரிந்து கொள்கிறேன்." என்றார்.அவன் கண்களில் சிறிது ஆச்சரியம் எட்டிப்பார்த்தபோதும் உடனே அதை மறைத்துக்கொண்டான். அம்மா அதையும் கவனித்துவிட்டால் அதுக்குமல்லவா விளக்கம் சொல்ல வேண்டும். ஆனாலும் இதைத்தான் தாய் அறியா சூழ் ஏது என்பார்களோ என்று மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.இங்கேயே நின்றால் தாயாரின் கூரிய பார்வையில் மனதின் சலனத்தை கொட்டிவிடுவோம் என்று பயந்து, "முகம் கைகால் கழுவிவிட்டு வருகிறேன்." என்றபடி வீட்டின் பின்பக்கம் இருந்த கிணற்றடிக்கு சென்றான்.முகம் கழுவிவிட்டு வந்தவனை, "சாப்பிட வா தம்பி. நீங்கள் சாப்பிட்டு முடித்தால் நான் பாத்திரங்களை கழுவி வைத்துவிடுவேன்." என்றார் அவர்.வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் அப்பாடா என்று சரியலாமே"சரிம்மா..." என்றவன்"மாதவி, சாப்பிட வா" என்று தங்கையையும் அழைத்துக்கொண்டு உணவருந்த நிலத்தில் அமர்ந்தான்.பரிமாற வந்த வைதேகியை, "அம்மா, எத்தனை தடவை சொல்வது? இருப்பதே மூவர். எதற்கு தனித் தனியாக சாப்பிடவேண்டும்? வாருங்கள் எல்லோரும் ஒன்றாகவே சாப்பிடுவோம்." என்று அவரையும் இருத்திக்கொண்டான்.தாயின் கை மணத்தில், என்றும்போல இன்றும் இருந்த சுவையான இரவு உணவை நல்ல வெட்டு வெட்டினான் இளா.மூவரும் உண்டு முடித்தவுடன், மாதவி சாப்பிட்ட இடத்தை ஒதுக்க வைதேகி பாத்திரங்களை கழுவ கழுவிய பாத்திரங்களை துடைத்தான் இளா.பிறகு கேட், வீட்டின் முகப்புக்கதவு, பின் கதவு அனைத்தும் சாத்தியிருக்கிறதா என்று ஒரு முறை உறுதிப்படுத்திக்கொண்டவன் விறாந்தைக்கு சென்று சிவரில் சாய்ந்தார் போல் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டான்.தன்னுடைய வேலையை முடித்துக்கொண்ட மாதவி, உள் அறைக்குச் சென்று ஒரு தலையணையை எடுத்துவந்து அதை இளாவின் மடியில் போட்டு அதிலே தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்."சாப்பிட்டவுடன் படுக்காதே என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்டுவிடாதே." என்று அவன் வாய் கடிந்து கொண்டாலும், கைகள் தாமாக அவளின் தலையை வருடியது."ஆனாலும் அண்ணா உங்களுடைய விடாமுயற்சிக்கு நான் தலை வணகுகிறேன்." என்றாள் அவள் புதிராக."எதை சொன்னாலும் அதற்கு குதர்க்கமாக ஒன்றை சொல்லிவிடு.""என்ன செய்வது அண்ணா, நான் உங்கள் தங்கைதானே... அதுதான் அப்படி இருக்கிறேன்." என்று மாதவி சொன்னதை கேட்டபடி வந்த வைதேகி,"இவளுக்கு புத்தி சொல்வதற்கு நீ பேசாமலே இருக்கலாம் இளா." என்றார்."விடுங்கம்மா, என்னிடம்தானே அவளும் வம்பு வளர்க்க முடியும். திருமணம் முடிந்தால் இப்படி சிறு பிள்ளை போல இருக்க முடியாதுதானே. நம்மோடு இருக்கும்வரை அவளுக்கு பிடித்தமாதிரியே இருக்கட்டும்."அதை கேட்ட வைதேகியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது மட்டும் இல்லாமல் கவலையையும் பூசிக்கொண்டது.திருமணமானால் மகள் வேறு வீடு சென்றுவிடுவாளே என்று நினைத்தவர், மாதவியின் கால் பக்கம் அமர்ந்து அவளின் கால்களை எடுத்து தன் மடியிலே போட்டு வருடிக்கொடுத்தார்.திருமணப்பேச்சை எடுத்தவுடனே மாதவியின் இதழ்கள் ரகசிய புன்னகையை ஏந்திக்கொண்டது. அவளின் உள்ளம் கவர் கள்வனின் நினைவில் மனமும் உடலும் சிலிர்க்க அவனை சந்திக்கும்போதெல்லாம் நடந்த நிகழ்வுகளை நினைத்து ரசித்தாள்.வைதேகியும் இளாவும் தங்களின் நினைவுகளில் இருந்ததில் திருமண பேச்சை எடுத்தாலே எப்போதும் தாம் தூம் என்று குதிக்கும் மாதவி இன்று அமைதியாக இருப்பதை கவனிக்க தவறினார்கள்.மூவரும் அருகருகே இருந்தபோதும் மூவரினதும் நினைவும் வேறு வேறாக இருந்தது. இதுதான் வாழ்க்கையின் விசித்திரமோ?மகளின் கல்யாண கனவில் இருந்து நிகழகாலத்துக்குத் திரும்பிய வைதேகி, "மூர்த்தி என்ன சொன்னார் தம்பி? வேலைக்கு வருவதாக சொன்னாயா?" என்று கேட்டார்."அவர் என்னம்மா சொல்ல இருக்கு. நான் சம்மதித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நம் நிலைமை? எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது? அடுத்த நிலைக்கு எப்போ போவது? மாதிக்கு சிறப்பாக திருமணம் செய்யவேண்டுமே அம்மா? தலையே வெடித்துவிடும் போல இருக்கு." என்றான் இளா.இதைக் கேட்டவர் உள்ளூரக் கலங்கிப்போனார். அவரின் சின்ன மகன் இப்படி தவிக்கிறானே... தங்களை வாழவைக்க நினைக்கும் அவனுக்கு ஒரு வழி கிடைக்காதா?கலங்கிய கண்களை அவனுக்கு தெரியாது துடைத்தவர், "உன் தங்கையின் திருமணத்தை மட்டும் உன்னால் முடிந்தவரை சிறப்பாக முடித்துவிடு கண்ணா. அதுவே போதும். என்னைப் பற்றி நீ யோசிக்க வேண்டாம். நான் நன்றாக வாழ்ந்தவள். இப்போதும் எனக்கு ஒரு குறையும் இல்லை. அந்தக் காலத்தில் இந்த ஊரிலேயே முதலில் பெரிய வீடு கட்டிய குடும்பம் நம் குடும்பம். என்னை எல்லோரும் பெரிய வீடு கட்டியவரின் மனைவி என்பதால் பெரியவீட்டக்கா என்றுதான் கூப்பிடுவார்கள்.அப்போதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா?" என்றவர் சிறிது நேரம் அமைதியானார்.இறந்துவிட்ட அருமைக் கணவரின் நினைவுகளில் தன்னை மறந்து மூழ்கியவர் ஒரு பெருமூச்சினை வெளியேற்றி, மனதின் பாரத்தை சற்றே இறக்கினார்."என்னுடைய இப்போதைய ஆசைகள் என்றால் அது உங்கள் இருவரினதும் திருமணத்தை கண்கள் நிறையப் பார்க்கவேண்டும்.அவ்வளவுதான்! பிறகு உங்கள் நால்வரிடமும் மாறி மாறி இருந்து என் காலத்தை கழித்துவிடுவேன்." என்றார் தொடர்ந்து.எப்போதும் இப்படி கதைப்பவர் அல்ல அவர். இன்று அவனின் மனக்குழப்பத்தால் அவனுமே தன்னுடைய தவிப்புக்களை வாய்தவறி தாயிடம் கொட்டியதில் அவரையும் வருத்தி விட்டிருப்பது நன்கு புரிந்தது.தான் செய்த மோட்டுதனத்தை நினைத்து மனதில் நொந்தபடி,"அம்மா, அது அப்பாவிடம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை. இனி உங்கள் மகனின் மூலம் நீங்கள் சந்தோசமாக வாழவேண்டாமா? பிறகு எதற்கு நான் உங்கள் பிள்ளை என்று சொல்லிக்கொண்டு இருக்க? உங்களை நல்ல இடத்தில் மறுபடியும் இருத்துவேன். இந்த சின்னனுக்கும் மிகச் சிறப்பாக திருமணம் செய்து வைப்பேன். நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருங்கள். அதுதான் எனக்கு முக்கியம். வீட்டுப் பொறுப்புகளை செய்ய நான் இருக்கும் வரை நீங்கள் எதற்காகவும் கலங்க கூடாது." என்றான் உறுதியான குரலில்."அப்பாவின் நினைவுகளை கிளறி விட்டேனா?" என்று மெல்லக் கேட்டான் கவலையுடன்.மிக மெதுவாக சிரிப்பதுபோல் இதழ்களை பிரித்தவர், "மறக்கும் சொந்தமா எனக்கு உன் அப்பா. என் உயிரோடு கலந்த சொந்தத்தை நான் மறந்தால் தானேடா நீ நினைவு படுத்த." என்றவர்,"எங்கிருந்தாலும் எங்களோடுதான் அவர் இருப்பார். என்ன, நம்மால்தான் அவரைப் பார்க்க முடியாது." என்றார் தொண்டை அடைக்க.சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது.பேச்சை மாற்றும் விதமாக, "என்னடா,இவ்வளவு நேரம் இந்த சின்னவள் வாய் மூடி இருக்கமாட்டாளே." என்றபடி மாதவியின் முகத்தை முன்னே குனிந்து பார்த்தார் வைதேகி."தூங்கிவிட்டாள் அம்மா. இதுவே தினமும் இவளுக்கு வேலையாக போனது." என்றான் இளா கைகளால் அவளின் தலையை தடவியபடி.தன் மடிமீது தூங்கும் தங்கையின் முகத்தை பார்த்தவன் மனதில், தன் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்கிற வெறியே எழுந்தது.எந்த கவலையும் இன்றித் தூங்கும் மகளையும், பாசத்துடன் கைகளால் அவள் தலையை வருடிக்கொடுக்கும் மகனையும் பார்த்த வைதேகியின் மனம் நிறைந்தது. என்றும்போல இன்றும் தன் சின்ன மகன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை அவர் மனதில் வந்தது.அப்போதுதான் நேரத்தை பார்த்தவர், "தம்பி, நேரம் ஒன்பது மணியாகிறது. நாளையில் இருந்து உனக்கு இரண்டு வேலை.ஓய்வும் இருக்காது. அதனால் நேரத்துக்கு தூங்க போ." என்றார்."இனி இவளை தூக்கி கட்டிலில் கிடத்தும் வேலை எல்லாம் வேண்டாம். இருபது வயதாகியும் இன்னும் உன் மடியில் தூங்குவதும், நீ தூக்கிக் கிடத்துவதும், சிறுபிள்ளை போலவே நடக்கிறாள். அவளை நான் எழுப்புகிறேன். நீ போய்த் தூங்கு."என்றார் தொடர்ந்து.மாதவியை எழுப்ப முனைந்தவரின் கையை பிடித்து தடுத்தவன், "சும்மா இருங்கம்மா. இரண்டு வேலைக்கு செல்வதற்கும் என் தங்கையை நான் தூக்குவதற்கும் என்ன சம்மந்தம்." என்றபடி அவளின் தூக்கம் கலையாது தலையணையுடன் அவளின் தலையை மிக மெதுவாக கீழே வைத்தவன், எழுந்து அவளை தூக்கினான்.தூகியவளை கட்டிலில் கிடத்தி போர்வையை எடுத்து கழுத்துவரை போர்த்திவிட்டான். அப்போதும் தூக்கம் கலையாதவளை பார்த்தவனின் மனம் 'சரியான கும்பகர்ணி' என்று செல்லமாக தங்கையை சீராட்டிக்கொண்டது.தங்கையின் அறையில் இருந்து வெளியே வந்து, "நீங்களும் போய் தூங்குங்கள் அம்மா." என்றுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான் இளா.அறைக்கு சென்ற இளாவின் மனதில் மறுபடியும் வதனியின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. மனதில் புதிதாய் புகுந்துகொண்ட ஆசையை வரவேற்பதா அல்லது அடியோடு அழிப்பதா என்று தெரியாமல் போராடினான்.தாயுடன் இருக்கும்வரை எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருந்த மனம், தனியிடம் கண்டதும் அவளின் நினைவாகவே துடிக்கிறதே.முதன் முதலில் அவனுக்கு என்று அவனிடம் தோன்றிய ஒரு தேடல். மனதை மயக்கிய மங்கையை மறக்கும் வழி தெரியாமல் தவித்தான்.

 

NithaniPrabu

Administrator
Staff member
#6
அத்தியாயம்-4


பூந்தோட்டத்தின் சாலையோரம் நடந்துகொண்டிருந்த அந்தச் சிறு பெண்கள் இருவரினதும் மனம் சஞ்சலத்தால் கலங்கிக் கிடந்தது. எதற்கு இந்த மௌனம் என்று தெரியாமலே நடந்தனர்.

எப்போதும் எதையாவது வளவளக்கும் வதனியின் அமைதி பொறுக்காத நித்தி, "அநியாயத்திற்கு அமைதியாக இருக்காதே வனி.."என்றாள் தவிப்போடு.

"ச்சு போடி! எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக இனி எப்போதும் சந்திக்க மாட்டோம். இன்றுதான் அந்தக் கடைசி நாள். அதுவும் முடிந்தது." என்றாள் வேதனையுடன்.

அதையே தானும் உணர்ந்த நித்தி அமைதியாக நடந்தாள். பிறகு நினைவு வந்தவளாக, "வனி மறந்தே போனேனடி. வருகிற சனிக்கிழமை நான் திருகோணமலையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகிறேன். எப்போது திரும்புவேன் என்று தெரியாது."என்றாள்.

"என்னடி இப்படி திடீரென குண்டை தூக்கி போடுகிறாய்." என்று பாய்ந்தவளின் கண்களில் நித்தியின் முகச்சிவப்பு பட்டது.

"ஓஹோ... அத்தை மகன் ரத்தினம் உன்னை அழைக்கிறானோ?"

"சும்மா இரு வனி. அப்படி எதுவும் இல்லை."

"என்னைப் பார்த்துச்சொல்? என் கண்ணைப் பார்த்துச்சொல்? பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்." என்றாள் வதனி சிரிப்பை சிந்தும் குரலில்.

"இன்னும் எதுவும் உறுதியாக தெரியாது வனி. எனக்கே பயமாக இருக்கிறது." கலக்கத்தோடு இருந்தது நித்தியின் குரல்.

"லூசாடி நீ. உன்னுடைய நேசன் அத்தான் உன்னை பார்க்கும் பார்வைகளை நானும் பார்த்திருக்கிறேன் தானே. நீ போன போக்கில் அவர் உன்னை தூக்கிச்சென்று குடும்பம் நடத்தாமல் இருந்தால் தான் ஆச்சரியப்படவேண்டும்."

வதனியின் பேச்சில் முகம் முழுதும் சந்தோஷ பூக்கள் பூக்க, "உண்மையாகத்தான் சொல்கிறாயா வனி?" என்று கேட்டாள் நித்தி.

குறும்பில் கண்கள் ஒளிர, "குடும்பம் நடத்துவதுதானே? கட்டாயம் நடக்கும்!" என்றவளை முறைத்தாள் நித்தி.

"நான் எதைக் கேட்கிறேன். நீ எதைச் சொல்கிறாய்."

"எதற்காக இந்த சலிப்பு நித்தி? நிச்சயமாக நேசன் அண்ணா உன்னுடைய வரவை மிக ஆவலாக எதிர்பார்ப்பார். அதேபோல இந்தத் தடவை அவர் தன் மனதில் உள்ளதை சொல்வார். நீ திரும்பி வந்ததும் எனக்கு பார்ட்டி தரவேண்டும். இப்போதே சொல்லிவிட்டேன்."

அவள் சொன்னதைக் கேட்ட நித்தி வீதியில் நிற்கிறோம் என்பதையும் மறந்து, வதனியை கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

எப்போதும் கவனமாக இருக்கும் நித்தி, இப்போது தன்னை மறந்து செய்த செயலே நேசனை அவள் எவ்வளவுக்கு விரும்புகிறாள் என்பதை காட்டியது. அவளின் காதல் எந்த விதமான தடைகளும் இன்றி நிறைவேற வேண்டும் என்று வதனியின் மனம் கடவுளை வேண்டியது.

நித்தியின் பூரித்த முகத்தை பார்க்கையில் தன்னைக் கனிவோடு பார்த்தவனின் முகம் நினைவுக்கு வந்தது அவளுக்கு.

'நான் அழுதது அவனுக்கு எப்படி தெரிந்தது? கண்ணீரை அடக்கியபடிதானே இருந்தேன். ம்...கைக்குட்டை தரும்போது எதுவோ சொன்னான். ச்சு....காதுகொடுத்து கேட்காமல் விட்டுவிட்டேன். அவன் என்னிடம் வந்து பேசுவான் என்று நான் என்ன நினைத்தா பார்த்தேன். ஆனாலும் அன்பாக பார்த்தான். நான் அழுததை பார்த்தவுடன் அவனுக்கு பாவமாக இருந்திருக்கும். அதுதான் எதுவோ சொல்லி கைக்குட்டை தந்தான். முதலில் முறைத்தானே.... கொஞ்சம் நல்லவன்தான் போலும்.....' என்று அவளின் பெண் மனதை கலைத்துவிட்டான் என்பதை அறியாமலே, இளவழகனை பற்றிய எண்ணங்கள் அவள் மனதில் ஓடியது.

இருவரும் ஒருவழியாக வதனியின் வீட்டை அடைந்தனர். அங்கே தன் தந்தை மணிவண்ணனை கண்ட நித்தி, "என்னப்பா, இங்கே வருவதாக நீங்கள் சொல்லவில்லையே?" என்று கேட்டாள்.

"ஏனடி உனக்கு இந்தப் பொல்லாத குணம்? மாமா என்னைப் பார்க்க வந்திருப்பார். எப்போதும் அவர் உன்னை மட்டுமே செல்லம் கொஞ்ச வேண்டுமோ? என்னைக் கொஞ்சினால் கொஞ்சுப்படாதோ? நான் சொல்வது சரிதானே மாமா. என்னை பார்க்கத்தானே வந்தீர்கள்?" நித்தியிடம் ஆரம்பித்து மணிவண்ணனிடம் சலுகையுடன் முடித்தாள் வதனி.

"உன்னை பார்க்கத்தான்டா கண்ணா வந்தேன். மாமா நாளையே நித்தியையும் கூட்டிக்கொண்டு திருகோணமலை போகிறேன். உன்னிடம் சொல்லாமல் சென்றால் முகத்தை அந்த கேட் வரை நீட்டிக்கொண்டு என்னுடன் பேச மாட்டாயே என்கிற பயத்தில் வேலைகள் இருந்தும் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடி வந்தேன்." என்றார் பாசமாக அவளின் தலையை தடவியபடி.

அவர் சொன்னதைக் கேட்டதும் அவரின் கையை தட்டிவிட்டு, "என்னிடம் பாசமா இருப்பது போல் யாரும் நடிக்கத்தேவை இல்லை." என்றாள் வதனி கோபமாக.

"இதென்ன பழக்கம் வனி? மாமாவிடம் மன்னிப்பு கேள்." என்று அதட்டினார் கலைமகள்.

தந்தைக்கு சமமானவரிடம் மக்கள் காட்டிய கோபம் பிடிக்கவில்லை அவருக்கு!


"நான் என்ன பிழை செய்தேன் என்று மாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அவர் தானே என்னிடம் சொல்லாமல் திருகோணமலை போக முடிவு செய்தார்..."

கலைமகள் எதுவோ சொல்லத் தொடங்கவும், "பொறும்மா கலை." என்று அவரை தடுத்துவிட்டு,


"எனக்கே இப்போதான் கண்ணா தெரியும். பிறகு எப்படி உன்னிடம் முதலே சொல்ல முடியும்?" என்று பதில் கேள்வி எழுப்பினார் மணிவண்ணன்.

"அப்படி என்ன அவசரமோ?" அப்போதும் கோபம் தீரவில்லை அவளுக்கு.

"நித்தியின் அத்தைக்கு உடம்பு முடியவில்லையாம் வனிக்கண்ணா. நேசன் இப்போதுதான் அழைத்துச் சொன்னான். ராசமலருக்கு ஒரு பெண்ணின் உதவி கட்டாயம் தேவையாக இருக்கிறதாம். அதுதான் நித்தியை அழைத்து போகிறேனடா."


அதைக் கேட்டதும் பதறிப்போனாள் வாதனை.

"என்ன மாமா நீங்கள்? நேசன் அண்ணா சொன்னவுடனேயே நீங்கள் கிளம்பியிருக்க வேண்டாமா? வாணிக்கு வந்து நித்தியை அழைத்துப்போகாமல் இங்கு என்ன அப்பாவுடன் கதை அளந்துகொண்டு இருக்கிறீர்கள்?முதலில் நீங்கள் டவுனுக்குச் சென்று திருகோணமலைக்கு எத்தனை மணிக்கு பஸ் என்று தெரிந்துகொண்டு வாருங்கள். புறப்படுங்கள்." என்று படபடவென்று பயணத்துக்கான திட்டங்களை போட்டாள்.


எப்போதும் விளையாட்டுப்பிள்ளை போலவே இருந்தாலும், தேவை என்று வரும் இடங்களில் தானாகவே பொறுப்பை எடுப்பது மட்டுமல்லாமல் அதை சிறப்பாகவே முடிப்பவள்தான் வதனி.

அவரிடம் படபடத்தது போதாது என்று நித்தியின் பக்கம் திரும்பி, "என்னடி மரம் மாதிரி நிற்கிறாய்? புறப்படு." என்று அவளையும் அதட்டினாள்.

"மாமா, பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க நானும் அப்பாவும் நித்தியுடன் உங்கள் வீட்டுக்குப் போகிறோம்.நீங்கள் டவுனுக்குப் போய் பஸ் விவரம் அறிந்துவாருங்கள்." என்றாள் தொடர்ந்து.

"இல்லை கண்ணம்மா. நேசன் எதோ மருந்தும் வாங்கி வரச் சொன்னான். இப்போதே ஆறு மணியாகிறது. இனி எங்கே அதை வாங்குவது? கடைகள் எல்லாம் மூடிவிடுவார்களே... அதனால்தான் உடனே செல்லவேண்டும் என்று தவிப்பாக இருந்தாலும் நாளை காலையில் அதையும் வாங்கிகொண்டு அப்படியே புறப்படலாம் என்று இருக்கிறேன். நீ பதட்டபடாதே செல்லம்." என்றவருக்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது.

சங்கரனினதும் மணிவண்ணனினதும் இருபத்திஐந்து வருட காலத்து நட்புக்கு கிடைத்த பரிசல்லவா அவள் அவர் மீது காட்டும் அதிரடியான பாசம்.

மனைவியை நோய்க்கு பறிகொடுத்துவிட்டு துடியாகத் துடித்தவரை சங்கரனினால் கூட தேற்ற முடியாமல் போனது.

அப்போது ஐந்து வயதில் இருந்த சிறுமி வதனிதான், "மாமா அழாதே. மாமி சுவாமியிடம் போய்விட்டார்களாம். நாம் இனிமேல் மாமியை சுவாமி அறையில் வைத்து தினமும் கும்பிடுவோம். சரியா? நீ அழாதே." என்றாள் பிதுங்கிய உதடுகளுடன்.

தன்னுடைய தவிப்பை பார்த்து அழும் அந்தக் குழந்தையின் மழலையில் தான் அன்று மனைவியின் ஆறாப் பிரிவில் இருந்து வெளிவந்தார் அவர். அன்றிலிருந்து இன்றுவரை, அவருக்கு அவரின் தாயின் மறு உருவே வதனி.

"என்ன மாமா, இதை முதலே சொல்ல வேண்டாமா? எங்களோடு படிக்கும் சாந்தினியின் அண்ணா மருந்துக்கடை தான் வைத்திருக்கிறார். அவரின் கடை ஏழு மணிவரை திறப்பு என்று சாந்தி சொல்லியிருக்கிறாள். நீங்கள் அங்கேபோய் வாங்கி வாருங்கள்." என்றவள் நித்தியின் தோளில் தன் தோளினாள் இடித்து,

"உனக்கும் தெரியும்தானே? சொல்லேன்." எனவும்,

"ஆமாம் அப்பா, வனி சொல்வது சரிதான். நீங்கள் பஸ்சுக்கு முன்பதிவு செய்துவிட்டு அங்கே போய் மருந்தையும் வாங்கி வாருங்கள். நாம் இப்போதே புறப்படலாம். அங்கே அத்தான் தனியாக எப்படி அத்தையை சமாளிக்கிறாரோ தெரியவில்லை."என்றாள் தவிப்புடன்.

'இப்போதும் உன் அத்தானின் நினைப்புதானா…?' யாரும் அறியாமல் கண்களால் தோழியை சீண்டினாள் வதனி.

"வனி சொல்வதுதான் சரி. நீ கிளம்பு மிகுதியை நாங்கள் செய்கிறோம்." என்று மணிவண்ணனை கிளப்பிய சங்கரன் இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு நித்தியின் வீட்டுக்கு கிளம்பினார்.

ஒரு வழியாக வதனியின் திட்டப்படி கிளம்பிய மணிவண்ணனும் நித்தியும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.

அதற்குமுன், "கவனாமாக இரடா. யாரிடமும் வம்புகளுக்கு போகாதே என்ன..." என்றவர் தொடர்ந்து,

"எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது கண்ணா. நித்திக்கும் விடுமுறை தானே. அங்கும் கொஞ்ச நாள் தங்கி வரலாம் என்று நினைக்கிறேன்... தங்கி வரவா?" என்று கேள்வியாக இழுத்தார்.

"நடக்க முடியாத அத்தைக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் அனுமதிக்கிறேன். முடிந்தவரை விரைவாக வந்துவிட வேண்டும். சரிதானா?" என்றவளிடம்,

"சரி கண்ணா. ராசமலருக்கு உடல் சரியானவுடன் ஓடி வந்துவிடுகிறேன்..." என்றார் பெறாமகளின் சம்மதம் கிடைத்துவிட்ட மகிழ்வோடு.

"அடி நித்தி, அத்தையிடமும் உன் நேசன் அத்தானிடமும் நாங்கள் எல்லோரும் சுகம் கேட்டதாக சொல்லிவிடு. உன்னவர்களை கண்டவுடன் எங்களை மறந்துவிட மாட்டாயே." என்றாள் கண்களில் கேலி மின்ன.

அப்பாவையும் மாமாவையும் அருகில் வைத்துக்கொண்டு பேசும் பேச்சைப் பார் என்று பல்லைக் கடித்த நித்தி கண்களால் தீப்பொறியினை வதனிக்கு பாசல் அனுப்பினாள்.

தீப்பொறி எல்லாம் நமக்கு பூ உருண்டையப்பா என்பதுபோல் பதில் பார்வை பார்த்தவள், சிரித்தபடி அவர்களை இனிதே பயணம் அனுப்பி வைத்தாள்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#7
அத்தியாயம்-5காலையில் நேரம் செல்ல எழுந்து நேரத்தை நெட்டித் தள்ளிய வதனி மதியமானதும், "அம்மா வாணிக்கு போய்வரவா? வாணியக்கா வரச் சொன்னார்கள்." என்று தாயிடம் கேட்டாள்.

இவ்வளவு நேரமும் தன்னுடன் மல்லுக்கட்டியவளை கொஞ்ச நேரமாவது வெளியில் விட்டால்தான் தன் வேலைகளை தான் முடிக்கலாம் என்று நினைத்த கலைமகள், "ம்.. சரி! ஆனால், ஆறு மணிக்கு முதல் வந்துவிடவேண்டும். நித்தியும் இல்லை, கவனமாக போய்வா." என்றார்.

"சரிம்மா.." என்றபடி துள்ளியோடினாள் பெண்.


முகம் கழுவி நெற்றியிலே பொட்டிட்டு, கறுப்பில் வெள்ளைப் பூக்கள் போட்ட முழுநீள பாவாடையும், வெள்ளை நிறத்தில் சேர்ட் வடிவிலான சட்டையும் உடுத்தி, இரட்டை பின்னலிட்டு அதனை மடித்து கருப்பு ரிப்பணினால் கட்டி இருந்தாள் வதனி. மடித்து கட்டிய பின்னலே அவளின் முதுகுவரை இருந்தது.

வாணிக்குச் செல்ல தயாராகிவந்த மகளின் அழகில் மனது மட்டுமல்லாமல் முகமும் மலர, "கவனமாக போய் வா வனிம்மா.."என்றவர் மகளின் சைக்கிளை பிடித்தபடி கேட் வாசல் வரை வந்தார்.

சைக்கிள் மிதிக்க ஆயத்தம் செய்துகொண்டே, "கேட்டை மறக்காது பூட்டிவிடுங்கள். பிறகு என் பூமரங்களை மாடு வந்து தின்றுவிடும்." என்று கூறி வாணிக்கு கிளம்பினாள் வதனி.

மகளை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்த கலைமகளுக்கு வீடே வெறிச்சோடிப்போனது. 'அவள் இருந்தாலும் சும்மா இருக்கமாட்டாள். இல்லாவிட்டாலும் வீடு வீடாக இல்லை." என்று தனக்குள்ளேயே நினைத்து சிரித்துகொண்டார்.

வாணிக்குள் சென்று சைக்கிளை அதன் இடத்தில் நிறுத்தியவளுக்கு நேற்றைய தினம் நினைவில் வரவும் முகம் சற்றே வாடியது. வாணிக்காவது வரமுடிகிறதே என்று தன்னையே தேற்றிக்கொண்டாள்.

வதனியை கண்ட வாணி, "எங்கே உன் உயிர்தோழி? அவள் இல்லாமல் வரமாட்டாயே?" என்று கேட்கவும்,

"அவள் திருகோணமலைக்கு போய்விட்டாள் வாணியக்கா." என்றாள் சோகத்தோடு.


அதைக் கேட்ட மூர்த்தி அங்கிருந்த கோபாலனிடம், "அதுதானே பார்த்தேன், என்னடா சந்திரிக்கா அம்மையார் சத்தமில்லாமல் வருகிறாரே என்று யோசித்தேன். இப்போதான் புரிகிறது. பூனைப்படை இல்லாததில் புலி பதுங்கியபடி வருகிறது என்று." என்றார் சீண்டும் குரலில்.

கோபாலனும் நேற்று நடந்ததை நினைவில் வைத்து, "நேற்று ஆடிய ஆட்டம் என்ன ? இன்று அடங்கிய கோலம் என்ன?" என்றான் கேலிச்சிரிப்புடன்.

"புதிய வாத்திக்கு என்னைப் பற்றி தெரியவில்லை. சொல்லி வையுங்கள் வாணியக்கா."என்றாள் சிலிர்த்துக்கொண்டு.

"வாத்தியார்களைத்தானா நேற்று 'வாத்து' என்று சொன்னீர்கள்?" என்று கோபாலன் கேட்டான்.

இது எல்லாம் எப்போது நடந்தது என்பதாக வாணி முறைக்கவும், "அது... சும்மா வாணியக்கா." என வாணியிடம் திக்கியவள், "கோபாலன் சார் விளையாட்டுக்கு அப்படி சொன்னேன்." என்றாள் கோபாலனிடம்.

"என்னது சாரா?" என்று அலறினான் அவன்.

"என்னை அண்ணா என்றே கூப்பிடுங்கள். சாரும் வேண்டாம் மோரும் வேண்டாம்." என்றான் விழுந்தடித்து.

அவன் சொன்ன வேகத்தில் கேட்டிருந்த மூவருக்குமே சிரிப்பு வர வனியும் சிரித்தபடி, "அப்படி என்றால் நீங்களும் என்னை நீ என்றே சொல்லலாம்." என்றாள்.

"உங்கள் தங்கைதானே. இதைக் கூட விட்டுத் தரமாட்டேனா." என்றாள் பெரியமனதாய்.

"இது உனக்கு நல்லதற்கு இல்லை கோபால். வம்பை விலை குடுத்து வாங்குகிறாய்." என்று எச்சரித்தார் மூர்த்தி.


"அவள் அப்படியே கூப்பிடட்டும் மூர்த்தியண்ணா. எனக்கும் தங்கை இல்லாத குறை நீங்கட்டும்." என்றான் அவன்.

"உன் தலையெழுத்தை என்னால் மாற்ற முடியாது. " என்றபடி அவர் நகர்ந்துவிட, தமிழ்வாணியும் வதனியை கூட்டிக்கொண்டு நகரப்போனார்.

தமிழ்வாணியுடன் நடந்துகொண்டே, "கோப்பிக்கொட்டை அண்ணா, நாம் பிறகு பேசுவோம்." என்று வதனி சொல்லவும்,

"என்னது? கோப்பிக்கொட்டையா? நானா?" என்று அதிர்ந்து போனான் கோபாலன்.

போகிற போக்கில், "என்னுடைய அண்ணா நிறத்திலாகட்டும் பெயரிலாகட்டும் கோப்பிக்கொட்டைதான்." என்றாள் கண்களை சிமிட்டி.

அவள் சொன்ன அழகில் வாய் விட்டு சிரித்துக்கொண்டே பாடம் எடுக்கவேண்டிய வகுப்புக்குள் சென்றான் அவன்.

வாணியுடன் சென்ற வதனி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களை செய்வதற்கு உதவியபடி உற்சாகமாக தன்னுடைய நேரத்தை ஓட்டினாள்.

நேரம் மாலை ஐந்தரை ஆகவும், அவர்களிடம் நாளைவருவதாக சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

ஓலையினால் வேயபட்டிருந்த அந்த கொட்டகையை விட்டு வதனி வெளியே வரவும், இளவழகன் தன்னுடைய சைக்கிளை அங்கிருந்த ஆலமரத்தின் கீழ் கொண்டுவந்து நிறுத்தவும் சரியாக இருந்தது.

இளாவை முதலில் கண்ட வதனி கோபால் கூறியதை வைத்து, "ஹாய் இளவழகன் அண்ணா." என்றாள்.

'யார் நம்மை இவ்வளவு அன்பொழுக அண்ணா என்று கூப்பிடுவது, அதுவும் முழுப் பெயரை சொல்லி' என்று யோசித்துக்கொண்டே சிரித்த முகமாக, "ஹாய்...." என்றவாறே திரும்பினான் அவன்.

திரும்பியவனின் முகம், அழைத்தது வதனி என்று தெரிந்தவுடன் இறுகியது.

அவனின் முகமாற்றத்தை கவனித்தவள், 'இவனிற்கு என்னவாகிற்று. இன்று நான் ஒன்றும் சொல்லவில்லையே...' என்று யோசித்தபடி நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள்.

ஆள்காட்டி விரலை நீட்டி தன்னருகில் வருமாறு சைகை செய்தவனிடம், யோசனையுடன் அருகில் சென்றவள் கேள்வியாக அவனை நோக்கினாள்.

"நான் உனக்கு அண்ணனா?" இறுக்கமாக வந்தன வார்த்தைகள்.

'இதுதானா விஷயம்? புகழுக்கு அலையும் புண்ணாக்கா நீ..'

"சாரி சார்" என்றாள் வதனி.

இனியாவது மகிழ்வான் என்று வதனி நினைக்க, "நான் உனக்கு மாஸ்டரா?" அவன் வள் என்று பாயவும்,

'நாய்ப்பரம்பரையில் பிறந்திருப்பானோ' என்று திகைத்துப்போவது இப்போது வதனியின் முறையாகிற்று.

'அப்போ இவனை என்னவென்று அழைப்பது?' என்று மனதில் யோசித்தவள்,

'இது சரியாக வராது... அம்மா வேறு ஆறு மணிக்குள் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இவனுக்கு இன்னொரு நாள் காவடி ஆடுவோம்.' என்று நினைத்தவாறே நகரப்போனாள்.

"என்னை எப்படி அழைப்பது என்று முடிவு பண்ணிவிட்டாயா?"

அவனின் கேள்வியில் அவனை மேலும் கீழுமாக நன்றாக பார்த்தவள், தன்னுடைய பாணிக்கு சட்டென்று திரும்பி,

"கேள்விக்கு பிறந்தவரே, உங்களின் கேள்விக்கு பதில் சொல்லுமளவுக்கு கெட்டித்தனமற்றவள் நான். இந்தச் சிறியவள் ஒரு அறிவிலி. தாங்கள் தயை கூர்ந்து அடியவளை மன்னித்தருள்வீராக." என்றவள் தொடர்ந்து,

"தங்களின் கேள்விக்கான பதிலை தாங்களே கூறிவிட்டால் இந்த ஜென்மத்துக்கான புண்ணியத்தை நான் பெற்றவள் ஆவேன்." என்றாள் கண்ணின் கருமணிகள் மின்ன.

அவள் தன்னைக் கேலி செய்த விதத்தை பார்த்தவனின் முகம் சிரிப்பை சிந்த, எதையோ தன்னை மறந்து சொல்ல வந்தவன் அதனை தவிர்த்து, "எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு. ஆனால் இந்த சார் வேண்டாம். அதைவிட அண்ணா வேண்டவே வேண்டாம். நான் உனக்கு அண்ணா கிடையாது!" சிரிக்கும் குரலில் ஆரம்பித்து அழுத்தமான குரலில் முடித்தான்.

அவன் சொல்வது குழப்பமாக இருந்தாலும் சரி என்பதாக தலையை ஆட்டினாள் வதனி. அவள் தலையை ஆட்டிய அழகில் இளாவின் காதல் கொண்ட மனம் பெரிதாக ஆட்டம் கண்டது.

அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உறுதி படைத்த தன்னுடைய மனம் இவளின் சிறு அசைவில் கூட தடுமாறுகிறதே, அந்தளவு மனதைக் கட்டுப்படுத்தும் வலிமை அற்றவனா நான் அல்லது என்னுடைய மனதை அசைக்கும் சக்தி படைத்தவளா இந்த பெண் என்று குழம்பி நின்றான்.


இளாவின் முகத்தையே பார்த்திருந்த வதனிக்கு, அவனின் நினைவுகள் இங்கில்லை என்று புரிந்தது.

கண்களில் குறும்பு மின்ன, "அழகா, குடை மிளகா! தாங்கள் சிந்தை சிதறுவது அழகா?" என்றாள் மறுபடியும் நாடக பாணியில்.

அவளின் கிண்டலில் நினைவுக்கு திரும்பியவன், "என் பெயரையா கேலி செய்கிறாய். மரியாதை கொஞ்சமும் இல்லை. எப்போதாவது என்னிடம் மாட்டுவாய் தானே. அபோது இதற்கு பதில் சொல்கிறேன்." என்றான் சிரிப்புடன்.

"மாட்டும்போது பார்க்கலாம்.. யார் யாரிடம் சிக்குகிறார்கள் என்று!" சவாலாக தலையை சிலுப்பினாள் வதனி.

அவளின் அந்த சிலுப்பல் கூட அவனுக்கு அழகாய் இருந்தது.

'இனிமேலும் மாட்டுவதா? ஏற்கனவே மாட்டித் தவிப்பது போதாதா.... சந்தேகம் என்ன? நான்தான் உன்னிடம் மாட்டிவிட்டு மீளும் வழி தெரியாது முழிக்கிறேன்.' என மனதிற்குள் நினைத்துகொண்டான்.

'ஆட்டம் கண்ட மனதை ஒருவழியாக அடக்கிக்கொண்டு வந்தால், மறுபடியும் ஆட்டம் காண வைக்கிறாளே இவள். எப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிவிட்டாளே இந்த சிங்காரி' என நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு சிரிப்பு வந்துவிடவும் வாய்விட்டுச் சிரித்தான்.

எதையோ சொல்லிக்கொடு இருந்தவள் அவனை வித்தியாசமாக பார்த்தாள்.

'நான் எப்படிக் கூப்பிட என்றுதானே கேட்டேன். அதற்கு ஏன் இப்படி சிரிக்கின்றான். இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது. எதற்கு வம்பு. நைசாக விலத்துவதுதான் நல்லது.' என்று நினைத்தபடி நகரப்போனாள்.

"நான் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லாமல் எங்கே போகிறாய்..?"

அவனுடைய கேள்வி அவளை உசுப்பேத்தியது.

"நீங்கள் ஒரு லூசு. அதனால் இனிமேல் உங்களை லூசு என்றுதான் கூப்பிடுவேன்." என்றவள் ஒரு நிமிடமும் தாமதியாது அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

"லூசா?" என்று கேட்டவனுக்கு, 'உண்மையை சொல்லிவிட்டு போகிறாள்' என்றது அவன் மனது.

'இதுவரை எந்தப் பெண்ணிடமும் நின்று பேசாத என்னை, உன்னுடன் நின்று வம்பளக்க வைத்திருக்கிறாய் என்றால் நான் லூசாகித்தான் போனேன்..' என்று நினைத்துக்கொண்டே தான் பாடம் எடுக்கவேண்டிய வகுப்பு நோக்கி நடந்தான்.

'இவளுக்கு இங்கு என்ன வேலை? படிப்புத்தான் முடிந்துவிட்டதே. காணாவிட்டால் மறந்துவிடலாம் என்று நினைத்தால் கண்முன்னே வந்து நிற்கிறாள். இதுதான் எனக்கு வந்த சோதனையோ...' என அவனின் மனம் குழம்பியது.

அன்றைய வகுப்புக்கள் முடிய வீடு செல்லும் வழியில் கலங்கி கிடக்கும் தன்னுடைய மனதை பற்றி சிந்தித்தான் அவன்.

'நடப்பது நடக்கட்டும். நானாக அவளை தேடிச்செல்லவில்லை. அவளாக என் கண்களில் படுகிறாள். இதுதான் கடவுளின் சித்தமோ. இனி நடப்பதைக் கண்டுகொள்வோம்' என்று நினைத்துக்கொண்டது தடுமாறும் அவனின் மனம்.

அவளை நினைத்த மாத்திரத்திலேயே அவன் முகத்தில் புன்னகை சொல்லாமல் கொள்ளாமல் குடியேறியது.

'எவ்வளவு வாய் துடுக்கு அவளுக்கு. அதுவும் கதைக்கும்போது நாட்டியமாடும் அந்தப் பெரிய விழிகள், பேசும்போது குவிந்து விரியும் இதழ்கள், அப்பப்போ எட்டிபார்க்கும் அழகிய பல்வரிசை. அழகோ அழகு என்னவள்' என்று அவளை நினைத்து நினைத்து சொக்கிப்போனான் இளவழகன்.

அடுத்த நாள், எப்போதடா மாலை வரும் வாணிக்கு செல்லலாம் என்று அவன் மனம் ஏங்க தொடங்கியது. அவனுக்கே பயமாகிப்போனது அவனின் நிலை.

என்னுடைய நிலை என்ன???நான் காதலிக்கலாமா??இது சரிதானா???என்று தவித்தவனுக்கு அவனின் மனமே பதில் சொன்னது.

'அப்படியே காதலித்தால் தான் என்ன.. அவளும் படிக்கவேண்டும்... எனக்கும் தங்கையின் திருமணத்தை முதலில் முடிக்க வேண்டும்.. எனவே இருவரும் இப்போது திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை... ஆனால் அதுவரை காதலிக்கக்கூடாது என்று சட்டமா இருக்கிறது?'

அவளுக்கு இப்போதுதானே பதினெட்டு வயது என்கிற எண்ணம் வந்தபோது,

'திருமணமே செய்கிறார்கள் இந்த வயதில். காதல் செய்யக் கூடாதா? அதெல்லாம் செய்யலாம்... அதுவும் அந்த ராட்சசியின் வாய் துடுக்குக்கு நிச்சயமாகக் காதல் செய்யலாம்.... ' என காதல் கொண்டவனின் மனம், தனக்குச் சார்பாகவே எல்லாவற்றையும் நினைத்தது.

தன் காதலுக்கு தன்னிடமே அனுமதி கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து போனான் இளவழகன். அகமும் முகமும் மகிழ்ச்சியில் மலர, எப்போதடா மாலை வரும்... எப்போது அவளை பார்ப்பது... என்று இதுவே அவன் நினைவாகிப்போனது.

நேற்று ஏன் வந்தாள்? இன்றும் வருவாளா? எப்படியாவது அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் மனதில் குறித்துக்கொண்டான்.

ஆவலுடன் அவளை எதிர்பார்த்து வாணிக்கு சென்றவனை ஏமாற்றமே வந்து தழுவியது!
 

NithaniPrabu

Administrator
Staff member
#8
அத்தியாயம்-6


அன்று மாலை என்றுமில்லாத வழக்கமாய் தன்னில் கவனமெடுத்து தயாரானான் இளா.

அவனைப் பார்த்த மாதவிகூட, "என்னண்ணா நேற்றுத்தானே சவரம் செய்தீர்கள். இன்றும் செய்திருப்பதுபோல் இருக்கே. என்ன விசேசம்..?" என்று கேட்டுவிட்டாள்.

உன் அண்ணா காதலெனும் கடலில் மூழ்கித் தவிக்கிறேன் என்று சொல்லவா முடியும். என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிவிட்டு,

"நாளை நேரம் கிடைக்குமா தெரியாது. அதுதான் இன்றே செய்துவிட்டேன். இது ஒரு விஷயம் என்று கேட்கிறாயா?" என்று அவளை அதட்டிவிட்டு, நின்றால் இன்னும் என்ன கேட்பாளோ என்று பயந்து தாயிடமும் சொல்லிக்கொண்டு வாணிக்கு புறப்பட்டான்.

வெளியே வந்தபிறகு நேரத்தை பார்த்தவனுக்கு தன்னை நினைத்து சிரிப்பு வந்தது. புறப்பட வேண்டிய நேரத்தை விட இருபது நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டிருந்தான்.

வேலை அதை விட்டால் வீடு என்று இருந்தவனின் நினைவு முதல் கனவு வரை ஆட்கொண்டிருக்கும் பெண்ணை நினைத்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு பெண்ணினால் ஆண்மகன் ஒருவனை பித்தனாக மாற்ற முடியுமா? மாற்றி விட்டாளே.....!

போகும் பாதையெங்கும் தன்னை ஆட்கொண்டிருக்கும் இந்த புதுவிதமான உணர்வைப் பற்றியே சிந்தனை ஓடியது. முதலில் அவனுக்கு தெரிந்துகொள்ள வேண்டி இருந்த விடயம், இதுதான் காதலா?


பார்த்தவுடன் வந்தால்... அது இனக்கவர்ச்சி இல்லையா?

இரண்டே நாட்களில் சில மணித்துளிகள் மட்டுமே பார்த்த ஒரு பெண்ணின் மேல் காதல் வந்துவிடுமா? அல்லது இந்த உணர்வுக்கு பெயர் ஈர்ப்பா?

எத்தனை கேள்விகள்.... படிக்கும் காலத்தில் கூட இப்படி சந்தேகங்கள் வந்தது இல்லையே என்று தோன்றியது அவனுக்கு.

என்னதான் குழப்பமாக இருந்தாலும் அவனின் மனம் சிறகில்லாமல் வானத்தில் பறந்தது. புதிதாக பிறந்ததை போல இதயம் இனிதாக இசைத்தது. எதுவும் என்னால் முடியும் என்கிற எண்ணம் இன்னும் வலுவானது.

இந்த உணர்வுக்கு இத்தனை சக்தியா? என்று அதுகூட ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.

இப்படி, தனக்குள்ளேயே தன்னுடைய மாற்றத்தைப் பற்றி அசைபோட்டபடி ஒருவழியாக வாணியை வந்தடைந்தவனின் விழிகள், தன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவளை ஆர்வத்துடன் தேடியது.

எங்கு தேடியும் அவளைக் காண முடியவில்லை என்றதும், எவ்வளவு மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் வந்தானோ அந்தளவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

'நேற்று ஐந்தரைக்கு தானே கண்டேன். இன்னும் நேரம் இருக்கிறதே...' என்று நினைத்தபடி வாணியின் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

அவனை கண்டவுடன் மகிழ்ந்த வாணி, "இளா உங்களுக்கு ஐந்தரைக்கு தானே முதல் வகுப்பு. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறதுதானே. அதுவரை பத்தாம் வகுப்பு மாணவர்களின் கொட்டகைக்குள் இருக்க முடியுமா?" என கேட்டார்.

"இருக்கிறேன் வாணி அக்கா. ஆனால், ஏன் யாராவது ஆசிரியர்கள் வரவில்லையா?"

"ஆசிரியர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். இந்த வனிக்குத்தான் இன்று வரமுடியாதாம். அவள் வந்து பார்த்துக்கொள்வாள் என நினைத்து நான் மாணவர்களுக்கு பரீட்சைப் பேப்பர்களை கொடுத்து விட்டேன். இனி திரும்ப வாங்கவும் முடியாது. எனக்கும் இன்று வகுப்பு இருக்கிறது. அதுதான் என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்க நீங்கள் வருகிறீர்கள்." என்றார் தன் பிரச்சினை தீர்ந்துவிட்ட மகிழ்வுடன்.

வாணியின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. ஆனால் இளாவின் பிரச்சினை அல்லவா ஆரம்பித்துவிட்டது. அவனுக்கோ மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

இது எதுவும் அறியாத வாணி, "என்ன இளா, பார்த்துகொள்ள முடியுமா?" என்று கேட்டார்.

எதைப் பார்த்துக்கொள்ள கேட்கிறார்கள் என்று முழித்துவிட்டு சற்று யோசித்து சம்மதமாக தலையை அசைத்தான். வாயை திறந்து பதில் சொல்லகூடிய நிலையில் கூட அவன் இல்லை.

வதனி ஏன் வரவில்லை, நாளை தன்னும் வருவாளா என்று அறிந்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் இருந்தான் அவன்.

'எப்படி இவர்களிடம் இருந்து விஷயத்தைப் பிடுங்குவது...'

"என்ன வாணியக்கா, இப்படி பொறுப்பில்லாத விளையாட்டுப் பிள்ளையை நம்பி, நீங்கள் அதுவும் பரீட்சையை வைக்கலாமா?" என்று கேட்டான்.

"அவள் காதில் நீங்கள் கேட்டது மட்டும் விழுந்தால் உங்கள் நிலை என்னாகிறது.." என்று சிரித்தார் அவர்.

தன்னவள் தன்னுடன் எப்படியெல்லாம் சண்டைக்கு வருவாள், அதுவும் வாயாடும்போது அந்த பெரிய கண்கள் படும்பாட்டை மனக்கண்ணில் கண்ட இளாவுக்கும் சிரிப்பு தன்னாலே வந்தது.

"விளையாட்டுப்பிள்ளை போல இருந்தாலும் மிகவும் பொறுப்பானவள் வதனி. அவளின் அம்மா கலைமாமி கிணற்றடியில் வழுக்கி விழுந்துவிட்டாராம். கால் வீங்கி நடக்கமுடியாமல் இருக்கிறாராம். அதுதான் அவள் வரவில்லை இளா. இல்லாவிட்டால் அவளாவது இங்கு வராமல் இருப்பதாவது. எங்கள் எல்லோரையும் அவளுக்கு பிடிக்கும். அதுவும் வாணியை மிகவும் பிடிக்கும்."என்று நீளமாக வதனியை பற்றி அவர் சொல்லிக்கொண்டே போக, வாணிக்கு வதனி மேல் தனிப்பிரியம் உண்டு என்பதை புரிந்துகொண்டான் அவன்.

அவளைப் பற்றி அறிந்துகொண்ட விடயம் கூட அவனை சந்தோசப்படுத்தியது.

மலர்ந்த முகத்துடன், "என்னை மன்னித்துகொள்ளுங்கள் அக்கா. தெரியாமல் உங்கள் செல்லப் பெண்ணை பற்றி குறையாகச் சொல்லிவிட்டேன்." என்றான் கேலியாக.

வாணியும், "முதல் தடவை என்பதால் உங்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கின்றேன்." என்றார் சிரிப்புடன்.

"சரிக்கா. அப்போ நான் பத்தாம் வகுப்புக்கு போகிறேன்."

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கொட்டகைக்குள் நுழைந்தவன், அவர்கள் அமைதியாக பரீட்சையினை எழுதுவதைப் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான். அவர்களை கண்காணிப்பது மட்டுமே அவனின் வேலை என்பதால், கண்கள் அதனை செய்தபோதும் மனமோ மந்திரித்துவிட்ட கோழி போல தன்னவளை தாங்கி நின்றது.

அவளைக் கண்டே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் தவியாய் தவித்துப்போனான்.


'அத்தைக்கு நடக்க முடியாவிட்டால் மாமாவை பார்க்கச் சொல்லிவிட்டு இவள் வந்திருக்கலாமே. அங்கிருந்து மட்டும் என்ன செய்யப்போகிறான்? அத்தைக்கு பதிலாக இவள் நடக்கப் போகிறாளாமா. இப்படி என்னை பைத்தியம்போல் புலம்ப வைத்துவிட்டாளே. அவள் சொன்னதுபோல் லூசாகித்தான் போனேன்..'

வேலையில் ஏன் என்றே தெரியாது எரிச்சல் வந்தது. எங்கு என்ன நடந்தாலும் வீட்டினுள் நுழைந்துவிட்டால் அமைதி கிடைத்துவிடும் அவனுக்கு. அதுவே இதுவரை வழக்கமாக இருந்த விடயம்.

இன்றோ, சோலையாகக் காட்சியளிக்கும் அந்த வீட்டில் கூட அவனுக்கு மூச்சு முட்டியது.

வீடு வந்தவனுக்கு உடை மாற்றப் பிடிக்கவில்லை. ஒரு வழியாக உடை மாற்றினால் முகம் கழுவப் பிடிக்கவில்லை. வைதேகி சாப்பிட அழைக்கவும், அமர்ந்தவனுக்கு பசி என்கிற ஒன்றையே காணவில்லை.

ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்தவனுக்கு எப்போதும் தாயுடனும் தங்கையுடனும் கழிக்கும் அந்த நேரம் கூட பிடிக்கவில்லை.

"தலை வலிக்கிறதும்மா. இன்று கொஞ்சம் நேரத்துக்கே படுக்கப்போகிறேன்."

இதுவரை அவனின் முகத்தை பார்த்திருந்த வைதேகியும், "ஓய்வாக போய்ப் படு தம்பி." என்றபடி ஒரு பனடோலை எடுத்துக் கொடுத்தார்.

அதையும் வாங்கி விழுங்கிக்கொண்டான். அப்போதாவது இந்த அவஸ்தை தொலைகிறதா என்று நினைத்தபடி.

தன்னுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கு குற்ற உணர்வும் சேர்ந்து ஆட்டியது. இதுவரை அம்மாவிடம் பொய் சொன்னதே கிடையாது.
எல்லாம் அவளால். இன்று அவளைக் கண்டிருக்க இந்த தவிப்பு இருந்திராதே.

அவளின் வீட்டு ரோட்டில் சென்றாவது அவள் வெளியில் வந்தால் பார்த்துவிட்டு வரலாம் என்றால், எந்த வீதியில் வசிக்கிறாள் என்றும் தெரியாது.

தவியாய் தவித்தவனுக்கு அப்போதுதான் தோன்றியது, இந்த தவிப்புத்தான் காதலா? என்று!
அன்று வெள்ளிக்கிழமை, கலைமகளுக்கு ஓரளவுக்கு காலின் வீக்கம் வற்றி இருந்தது. ஆனாலும் நடப்பது சிரமமாக இருக்கவே சித்திவிநாயகர் கோவிலுக்கு வதனியை சற்று நேரத்தோடு போய்வரச் சொன்னார் அவர்.

"சரிம்மா, நான் நேரத்தோடு வாணிக்கு போய்விட்டு அப்படியே கோவிலுக்கும் போய் வருகிறேன்." என்றவள் தாயாரின் தேவைகளை கவனித்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

தலைக்கு குளித்து, அழகிய சுடிதாரில் வந்தவள் கொஞ்ச முடியினை மட்டும் இழுத்து ஒரு கிளிப்பில் அடக்கி, இடை தாண்டும் கருங்கூந்தலை விரித்துவிட்டாள்.


தயாராகி வந்த மகளிடம், "கவனமாகப் போய்வா வனிம்மா, அம்மாவும் வரவில்லை. நித்தியும் இல்லை. பார்த்து போய்வாம்மா." என்று கலைமகள் திரும்பாத திரும்ப சொல்லவும்,


"என்னம்மா, நான் என்ன குழந்தையா? எப்போது பார்த்தாலும் கவனமாகப் போய்வா என்கிற பாட்டையே படிக்கிறீர்கள்." என்று சிணுங்கினாள் அவள்.

"இனிமேல் மாற்றி சொல்கிறேன். பார்த்து போய்வாடா." என்று கலைமகள் மகளின் காலை வாரவும்,"அம்ம்ம்ம்மாஆ!" என்றவளின் சிறுபிள்ளைக் கோபம் கூட அந்த தாய்க்கு அழகாய் தோன்றியது.

"எப்போதும் சொல்வது தானேடா. கோவித்துக்கொள்ளாமல். போய்வா." என்றார் மகளின் முகத்தை ஆசையாக வருடி.

"சரிம்மா." என்று கிளம்பினாள் அவள்.


வாணிக்கு சென்று அங்கே மாணவர்களுக்கு தன்னால் முடிந்தவைகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தாள்.

ஐந்து மணியளவில் வாணிக்கு வந்த இளா தான் எடுக்க வேண்டிய வகுப்புக்கு சென்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தான். என்னதான் பாடம் எடுத்தாலும், மனமோ இன்றும் அவளை காணவில்லையே என்று அரற்றியது.இதையறியாத வதனி நேரமானதும் 'கோவிலுக்கு செல்லவேண்டும்...' என்று நினைத்தபடி மாணவர்களிடம் சொல்லிக்கொண்டு வாணியிடம் சென்றாள்.

"வாணியக்கா நான் கிளம்புகின்றேன். இன்று சித்திவிநாயகரை சந்திக்கும் நாள் இல்லையா?" என்று சொல்லவும் இளா அங்கு நுழையவும் சரியாக இருந்தது.

"சரி! நீ போ! நானும் அவரை விசாரித்ததாக சொல்லு." என்றவர் இளாவை பார்த்துவிட்டு,

"கொஞ்சம் பொறுங்கள் இளா. இந்த பேப்பர்களை கண்ணன் சாரிடம் கொடுத்துவிட்டு வருகிறேன்." என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறினார்.

வாணி சொன்னது இளாவின் காதில் விழவே இல்லை. விழுவதற்கு அவன் சுயநினைவுடன் இருக்கவேண்டுமே!

தன் மனதைக் கொள்ளைகொண்டவளை எதிர்பாராமல் கண்டதே வானத்தில் பறக்க வைத்தது என்றால், தேவதைதான் நேரில் வந்துவிட்டதோ எனும்படியாக இருந்த அவளின் அழகில் சொக்கியே போனான்.

அவனை பார்த்த வதனிக்கும் ஏனோ படபடப்பாக இருந்தது. அவனின் பார்வை மாறியதை உணரவும் முடிந்தது. ஏன் இப்படி மனதை என்னவோ செய்யும் பார்வை பாக்கிறான் என்று யோசித்தவள், அவனை பார்த்து சிறிதாக சிரித்தாள்.

அவனின் பெயரை சொல்லி அண்ணா என்பதா அல்லது சார் என்பதா என்கிற குழப்பம் ஒரு பக்கம் என்றால், அவளுக்குமே அந்த இரண்டையும் சொல்லி அழைக்க பிடிக்கவும் இல்லை. எனவே சிரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.

இதை எதையும் கண்டுகொள்ளாத இளாவோ அவளை அப்படியே அள்ளிப் பருகுவதைப்போல பார்க்கவும், கூச்சமாக உணர்ந்த வதனி அறையை விட்டு வெளியேற நினைத்து வாசலை நோக்கி நடந்தாள்.

தன்னிலை மறந்திருந்த இளாவிற்கு அவள் தன்னை விட்டே செல்வதாக தோன்ற எட்டி அவளின் கையை பற்றி, "எங்கே என்னை விட்டு போகிறாய்...? உன்னை காணாமல் நான் இந்த மூன்று நாட்களும் தவித்தது போதாதா?" என்று கேட்டுவிட்டான்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#9
தொடர்ச்சி....

அவன் சொன்னதை கேட்ட வதனிக்கோ அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

'என்ன சொல்கின்றான் இவன்? என்னை தேடினானா? தவித்தானா? எதற்கு? அதைவிட இது என்ன கையை பிடிதிருக்கிறான்?'

தானும் கையை பறிக்காது இருக்கிறோம் என்று பதறி கையை இழுக்க பார்க்கவும், பிடித்த அவளின் கையை விடாது தன்னை நோக்கி இழுத்தான் இளா.

அவன் இழுத்த இழுப்பில் அவனுடனே மோதியவளின் இடையை தன் கைகள் இரண்டினாலும் வளைத்து தன்னுடன் இறுக்கி, "ஏன்டா இந்த மூன்று நாட்களும் வரவில்லை? என்னால் உன்னை பார்க்காமல் இருக்கவே முடியாது என்று தெரியாதா உனக்கு?"என்றான் அவளின் நெற்றியில் தன் நெற்றியினால் முட்டியபடி.

வதனிக்கோ மூச்சே நின்று போனது. இதயம் துடிப்பதை விடுத்து இடியாக இடித்தது.

தான் இருக்கும் இடமும் நிலையும் பிழை என்பதை மனம் உணர்த்த, "என்ன செய்கிறீர்கள்? இப்படித்தான் ஒரு பெண்ணிடம் நடந்து கொள்வீர்களா? என்ன மனிதர் நீங்கள்? அறிவில்லை? விடுங்கள் என்னை!" என்று அவள் சீறவும்தான் சுயநினைவுக்கு வந்தான் இளா.

சுற்றும் முற்றும் பார்த்தவன் தான் செய்து கொண்டிருக்கும் செயலை உணர்ந்து சட்டென்று அவளை விட்டான்.

"இந்த இடம் தான் பிழையானதே தவிர நான் செய்தது தவறு கிடையாது." என்றான் அழுத்தமாக.

செய்ததே மகாதவறு. இதில் அழுத்தமான பதில் வேறு. அவனின் அந்த பதில் அவளை இன்னும் கோபம் கொள்ளச் செய்யவும், ஓங்கி அறைந்து விட்டாள் அவனின் கன்னத்தில்.

"இந்த மாதிரியான இழி செயல்களை உங்களைப் போன்ற பெண்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்! என்னிடம் அல்ல! புரிந்ததா?!"கோபத்தில் மூச்சிரைத்தது அவளுக்கு.

அவள் அடித்ததனால் உண்டான அதிர்ச்சியில், கையினால் தன் கன்னத்தை தாங்கியவனின் கண்களோ காதலை மட்டுமே கொட்டியது.

'பார்வையை பார். அந்தக் கண்களில் பச்சை மிளகாயை வைத்துத் தேய்க்க வேண்டும். என்னைப் பிடித்த கைகளை மரத்தில் கட்டி வைத்து கடித்து வைக்க வேண்டும்....'

மனதினுள் திட்டிக் கொண்டே அவனை முறைத்தபடி அந்த அறையை விட்டு வெளியேறியவள் சைக்கிளை எடுத்துகொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த இளாவின் முகத்தில் அறை வாங்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

மாறாக, மகிழ்ச்சியிலும் மயக்கத்திலும் மனம் பொங்கி வழிந்தது. பூப்பந்தாய் தன் மீது மோதிய அவள் மேனியின் செழுமை, இடையை அழுத்திய போது அறிந்து கொண்ட அவளின் மென்மை, நெற்றியில் முட்டிய போது நுகர்ந்து கொண்ட அவளுக்கேயான வாசனை அனைத்தும் அவனை கிறங்கடித்தது.

பட்டாம் பூச்சியாய் படபடத்த கண்கள், கோபத்தில் துடித்த இதழ்கள், இவற்றை மிக அருகில் பார்த்ததால் உண்டான கிறக்கம் எல்லாமே அவனை அவனுக்கு புதிதாக காட்டியது.

இன்று என்னுடன் பேசாமலேயே ஒடிவிட்டாளே...

'நீ செய்த செயலுக்கு இன்று மட்டும் அல்ல என்றுமே பேசுவாள் என்று நினைக்கிறாயா?' என்று கேட்ட மனதை தூக்கி குப்பையில் போட்டான்.

'இனி நாளைதான் காணமுடியுமா அவளை...' என்று நினைத்தவனுக்கு மூளையில் பளிச்சிட்டது.

'கோவிலுக்கு போகிறேன் என்று வாணி அக்காவிடம் சொன்னாளே. அப்போ நாமும் அங்கே சென்றால் அவளை காணலாம்.' என்று தோன்றிய அந்த நிமிடமே அவனின் முகம் பிரகாசமானது.

 

NithaniPrabu

Administrator
Staff member
#10
அத்தியாயம்-7குடியிருப்பு பிள்ளையார் கோவிலை நோக்கி செல்லும் வீதியின் இருமருங்கிலும் நெற்கதிர்கள் காடாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிரித்தபடி நின்றது.

எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கும் அந்த வீதியில், சைக்கிளில் செல்ல எப்போதுமே வதனிக்கு பிடிக்கும். காரணம் அவ்வளவு அழகு இருமருங்கிலும் கொட்டிகிடக்கும். பச்சை நிற அலைகள்தானோ என்கிற அளவுக்கு நெற்கதிர்கள் அசைந்தாடும் அழகை வார்த்தையில் வடிக்க முடியாது.

இன்று அந்த அழகு கூட அவளின் மனதை சாந்தப்படுத்த முடியாது தோற்றுப் போனது.

ஏன் செய்தான்? எப்படி அப்படிச் செய்யலாம்? என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது அவனுக்கு? இதைத் தவிர அவளின் மண்டைக்குள் வேறு எதுவுமே தோன்ற மறுத்தது.

வாகனம் ஒன்று எதிரே வரவும், பிரேக்கை அழுத்த நினைத்த போது கை எரிந்தது வதனிக்கு.

'ப்ச்! இந்தக் கைக்கு என்ன நடந்தது...' என்று தூக்கி பார்த்தவளுக்கு சிவந்து கண்டியிருந்த கையை பார்க்க்கவுமேதான், தான் அவனுக்கு அறைந்தது நினைவில் வந்தது.

இதுவரை கோபத்தில் சிவந்திருந்த அவளின் முகம் இப்போது கன்றிச் சிவந்தது. அவளுக்குத் தெரிந்து யாரிடமும் அவள் கோபமே கொண்டது இல்லை. அவள் கொள்ளும் கோபம் அனைத்தும் செல்லக் கோபமே. இதனை, அவளை அறிந்த அனைவருமே அறிவர்.

இன்று கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டியதும் அல்லாமல் கையை வேறு நீட்டிவிட்டாளே.

'நான் அடித்தது தப்போ' என்று கலங்கியது அவளின் பூமனம்.

'கோபம் கொண்டு எதுவும் செய்துவிடுவானோ. அப்பாவுக்கு தெரிந்தால் என்னிடம் கோபித்து கொள்வாரோ. சிறு பொய் சொன்னாலே வேதனைப்படும் அப்பா, இது தெரியவந்தால் எவ்வளவு கவலைப்படுவார். அம்மாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்....'

இந்த நினைவுகளே அவளை வதைத்தது.

எல்லாவற்றிற்கும் அவனே காரணம் என்று அவன் மீது கொண்ட கோபத்தில், எப்போதும் இருபது நிமிடம் பிடிக்கும் தூரத்தை இன்று பத்து நிமிடத்திலேயே ஓடி முடித்தாள் வதனி.

கோவிலுக்குள் நுழைந்தவளுக்கு சிறிது நேரத்திற்கு அங்கு என்ன செய்யவேண்டும் என்பதே புரிய மறுத்தது. பழக்கதோசத்தில் கைகள் இரண்டையும் விநாயகரை நோக்கி கூப்பினாலும், மனதில் எதுவுமே தோன்றவில்லை. படபடப்பும் அடங்கவில்லை.


ஆழ மூசுக்களை எடுத்து விட்டவள், 'கடவுளே எனக்கு நிதானத்தை தா...' என்றுதான் வேண்டினாள். தன்னை நாடிவரும் அனைவருக்கும் சாந்திகொடுக்கும் விநாயகரின் அருள் தவழும் முகம், வதனியின் மனதை சற்றே மட்டுப்படுத்தியது.

கோவிலைச் சுற்றி வந்தவள் ஒரு தூணின் அருகே அமர்ந்து கொண்டாள். இப்போது மனம் ஓரளவுக்கு அமைதி அடைந்திருந்தது.

அவனைக் கெட்டவன் என்றும் நினைக்க முடியவில்லை. காரணம் மூர்த்தி ஒருவரை வாணிக்குள் அனுமதிக்கிறார் என்றால் அவர் நிச்சயம் நல்லவராகவே இருக்கவேண்டும். அதிலெல்லாம் வலு கவனமாக இருப்பார் மூர்த்தி. அதோடு அவளுக்குமே அவனைப் பெண் பித்தனாக நினைக்கத் தோன்றவில்லை.

அப்படியானால் அவன் நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று நினைத்தவள், அவன் பேசியவைகளை அசை போட்டாள்.

நிதானமாக யோசித்த போது அவனின் செயல் உணர்த்திய விடயம் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனோ மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவிதமான கலவையான உணர்வில் மீண்டும் நெஞ்சு படபடக்கத் தொடங்கிற்று!

'அப்படி என்றால்.. அப்படி என்றால்.. அவன் என்னை விரும்புகிறானா??? அது எப்படி சாத்தியப்படும். இரண்டு நாட்கள் பார்த்துக்கொண்டதில் காதல் வருமா? எனக்கு வரவில்லையே. இந்த வயதில் காதல் தேவைதானா?' என்று நினைத்தவளுக்கு அவன் காதலைச் சொல்லவே இல்லை, அதற்குள் நானாகவே பலதையும் நினைக்கிறேனே என்று தோன்றியது.

'காதலை சொல்வானா? சொன்னால் அதற்கு நான் என்ன சொல்வது....' மண்டை காய்ந்தது.

'இல்லை சொல்லமாட்டானோ? சொல்லாமல் மட்டும் இருக்கட்டும். அவனை கட்டிவைத்து உதைக்க வேண்டும்..'

பின்னே காதல் இல்லாமல் ஒரு பெண்ணை ஒருவன் தொட்டால் அதற்கான பெயர் வேறல்லவா!

பொழுது போக்கிற்கு செய்கிறானோ? அதற்கு நானா கிடைத்தேன் என்று கோபம் வந்தாலும், அவனின் செயல் பார்வை எதுவும் நடிப்பாக தெரியவில்லை.

'கடவுளே.. இப்படி என்னை குழம்பித் தவிக்க விட்டுவிட்டானே. வீதியில் போகும்போது அவனுக்கு மாடு முட்டட்டும். இல்லை சைக்கிள் பிரேக் பிடிக்காமல் மரத்தில் போய் மோதட்டும். விசரன் விசரன்! என்னை இப்படி புலம்ப வைத்துவிட்டானே...' என்று அவனை வைதபடி நிமிர்ந்தவள் தன் முன்னே நின்றவனைப் பார்த்து அதிர்ந்து விழித்தாள்.

உண்மையாகவே முன்னால் நிற்கிறானா இல்லை நான் கனவு காண்கிறேனா என்று தோன்றவும், கண்களை நன்றாக கைகளினால் தேய்த்து விட்டு மறுபடியும் நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான் கையினை அவள் முன்பாக நீட்டியபடி நின்றான்.

'ஏன் கைகளை நீட்டியபடி நிற்கிறான். ஒரு வேலை கோவிலில் பிச்சை ஏதும் எடுக்கிறானோ..' என்று நினைத்தபடி அவனின் கைகளை பார்த்தவளுக்கு விஷயம் புரியவே அவனை முறைத்தாள்.

ஏனெனில் அவள் சுவாமி கும்பிட்ட லட்சணம் அப்படி. கோபத்தில் வந்தவள் கோவிலை சுற்றி கும்பிட்ட போதும், திருநீறோ சந்தனம் குங்குமமோ நெற்றியில் வைக்க மறந்துபோனாள்.

அதற்கும் அவன் தானே காரணம் என்கிற எண்ணம் தோன்றவே அவனை இன்னும் நன்கு முறைத்தாள்.

"அவ்வளவு அழகாகவா இருக்கிறேன் வதனி. வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாய். இனி எப்போதும் பார்க்கத்தானே போகிறாய்.. அதனால் இப்போது திருநீறு சந்தனம் பூசிக்கொள்." என்று கூறியபடி அவளுக்கு அருகில் இளா வரவும், முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் வதனி.

"பூசிக்கொள் வனிம்மா.."

'அம்மாவைப் போலவே அழைக்கிறானே...' என்று மனதின் ஒரு மூலையில் இதமான தென்றல் வீசிய போதும் கோபம் குறையாததால் முகத்தை திருப்பாமலே இருந்தாள் அவள்.

சற்று நேரம் அவளையே பார்த்தவன், தன் கைகளில் இருந்த திருநீறினை அவளின் நெற்றியில் பூசியது மட்டுமல்லாமல் சந்தனத்தையும் குங்குமத்தையும் ஒன்றாக கலந்து பொட்டாக அவளின் நெற்றியிலே வைத்தும் விட்டான்.

நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வில் மறுபடியும் ஸ்தம்பித்தது வதனியின் இதயம்.

'இதற்கு என்ன பொருள் என்று தெரிந்துதான் செய்தானா இவன்.....' என்று நினைத்த மாத்திரத்தில் அவளின் கண்கள் கலங்கிப்போனது!


அவளின் அருகில் அமர்ந்து, ஒற்றை விரலினால் அவளின் முகத்தை தன் புறமாக திருப்பி, "கலங்க வேண்டிய அவசியம் இல்லை வதனி. பொட்டு வைத்ததற்கான அர்த்தம் புரியாத சிறுபிள்ளை இல்லை நான். தெரிந்துதான் வைத்தேன். அதைவிட உயிரினும் மேலாக உன்னைப் பிடித்ததால் தான் வைத்தேன்..." என்றவனை விரிந்த விழிகளால் பார்த்தாள்.

அவளின் பார்வையை தயங்காது தாங்கிய அவன் விழிகளும் அவனின் காதலை அப்பட்டமாக வெளிப்படுத்த, அதையும் தாங்கும் சக்தியற்று அவளின் விழிகள் கண்ணீர் முத்துக்களை சரமாக தொடுத்தது.

அவனோ பதறிப்போனான். "ஏன் குட்டி, என்னைப் பிடிக்கவில்லையா? அல்லது இரண்டு நாட்கள் அதுவும் சற்று நேரம் மட்டுமே பழகிய ஒருவனை எவ்வளவு தூரத்திற்கு நம்புவது என்று யோசிக்கிறாயா?" என்று குரல் கரகரத்தபோதும், தனது கம்பீரம் குறையாமல் கேட்டவனுக்கு பதில் சொல்ல தெரியாமல் தன்னுடைய அமைதியை தொடர்ந்தாள் வதனி.

"என்னைப் பிடிக்கவில்லையா வனி?"

பதிலின்றிப் போகவே, "அப்போ அப்படித்தானா....?" இளாவின் குரல் இப்போது கம்பீரத்தை முற்றிலுமாக இழந்து தவித்தது.

அவன் மீது எவ்வளவுதான் கோபம் இருந்தபோதும், அவன் அவசரப்படுகிறான் என்பது புரிந்தாலும் அவனின் கம்பீரம் இழந்த முகத்தை பார்க்க முடியாது தவித்தாள் வதனி.

"இல்..லை. அப்ப..டி இல்லை...." வார்த்தைகளின்றித் திக்கினாள்.


என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தபோதும் அதனை நம்பாது அவளையே பார்த்தவனின்மேல், கோபம் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது அவளுக்கு.

"இப்படி திடீர் என்று நீங்கள் கேட்டால் நான் என்ன சொல்ல? அங்கே என்னடா என்றால் அந்த அநியாயம் செய்தீர்கள். இங்கு என்னடா என்றால் சடாரென நெற்றியில் பொட்டை வைத்துவிட்டீர்கள். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்னை பற்றி. ஒழுக்கம் இல்லாதவள் என்றா? அல்லது தரமற்றவள் என்றா....?"


அவளால் தாங்கவே முடியவில்லை. சடாரென்று ஒருவன் தன்னிடம் அத்துமீறுகிறான் என்றால், அதற்கு அவனைத் தூண்டும் விதமாக தான் நடந்துகொண்டோமா என்று உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்தாள்.

"என்ன பேச்சுப் பேசுகிறாய் வனி. நான் அப்படி நினைப்பேனா. என் மனதில் உனக்கான இடம் தெரியாமல் உளறாதே! அதிர்ச்சியில் இருக்கிறாய் என்பதால் இந்த முறை விடுகிறேன். இனிமேல் தயவுசெய்து இப்படி தரக்குறைவாய் பேசி எனக்கு கோபத்தை உண்டாக்காதே......" என்றான் அவன் கண்டிப்பான குரலில்.

"நன்றாக இருக்கிறது உங்கள் பேச்சு. கோபம் வரவேண்டியது எனக்கு. செய்வதை எல்லாம் செய்துவிட்டு பிடித்திருக்கிறதா என்கிற கேள்வி வேறு...."

அவளின் படபடப்பு அவனிடம் சிறு புன்னகையை தோற்றுவிக்கவும் அழகாக புன்னகைத்தபடி,

"சரிதான்! எனக்கென்னவோ நெடுநாள் பழகிய ஒரு உணர்வு. உனக்கும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா..." என்றான் ஏமாற்றத்தை மறைக்கும் குரலில்.

அவளுக்கும் அவனின் நிலை புரிந்தபோதும் பதில் சொல்ல முயலவில்லை. நிறைய யோசிக்க வேண்டும் என்று தோன்றியது.

என்ன யோசித்தாலும் தன்னால் அவனிடம் மறுப்புச் சொல்ல முடியாது என்றும் புரிந்தது. அவன் எதை நினைத்து பொட்டினை இட்டானோ தெரியாது, ஆனால் வதனிக்கு எதுவோ நிச்சயமானதைப் போன்ற எண்ணம் மனதிலே உண்டானது.

"நா...ன் கிளம்புகிறேன். அம்மா தேடுவார்.." என்றவள் எழ முயன்றபோது தான் புரிந்துகொண்டாள், தன் கை அவனிடம் சிக்கிக் கிடப்பதை.

சிறு வெட்கத்துடன் கையை அவள் உருவ முயலவும், அவளின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்தவன் தன் கைக்குள் அடங்கியிருந்த அவளின் கையை அழுத்தினான்.

இளாவின் அழுத்தலில் கண்டியிருந்த கை வலிக்கவே, "ஸ்..ஸ்" என்றாள் வதனி தன்னை மறந்து.

அவளின் அந்தச் செய்கையில் பதறியவன், "என்ன நடந்தது வனி? எங்காவது விழுந்தாயா? கையில் நோகிறதா?" என்று கேள்விகளை தொடுத்தபடி, அவளின் கையினை மிக மிக மென்மையாக விரித்து பார்த்தான்.

கண்டியிருந்த கையை பார்த்துப் பதறி, "என்ன நடந்தது என்று கேட்கிறேனில்லையா. சொல்!?" என்றான் பதட்டமும் அதட்டலும் கலந்த குரலில்.

கன்றிய முகத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள் வதனி.

அவளின் செயலில் குழம்பி, "என்ன நடந்தது வனிம்மா. சொல்லுடா?" என்றான் இதமாக.

"அது...ஒன்றுமில்லை..."

"எது ஒன்றுமில்லை.. இதுவா?" என்றான் இளா அவளின் கையை அவளுக்கே காட்டி.

"சொல்லப்போகிறாயா இல்லையா வனி?" இளாவின் குரல் சற்று இரைந்தது.

அவன் விடப்போவதில்லை என்பதை உணர்ந்து, "அடித்ததில் கை கண்டிவிட்டது." என்றாள் மொட்டையாக.

என்ன சொல்கிறாள் என்பதாக புருவங்களை சுருக்கி யோசித்தவனுக்கு அவள் சொன்னது புரிந்ததும் வாய் விட்டுச் சிரித்தான்.

மறுபடியும் திகைப்பாக இருந்தது வதனிக்கு. அவனை கை கன்றிப்போகும் அளவுக்கு அறைந்திருக்கிறாள். அவனோ அதை நினைத்து கோபம் கொள்ளாமல் சிரிக்கிறான்.

அவளின் திகைத்த முகம், இளாவிற்கு அவளின் நிலையை உணர்த்தியது.

"நான் செய்த பிழைக்கு நீ செய்தது மிக ச் ரியானது. அதனால் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. பெருமையே! என்னவளை நினைத்து!" என்றான் கனிவுடன் காதலையும் கலந்த குரலில்.

மலைத்துப்போனாள் வதனி. இவனின் காதல் எத்தகையது? புரிந்துகொள்ள முடியவில்லை அவளால்.

தன்னுடைய கையினை அவனிடம் இருந்து மீட்டவள் சற்றே தயங்கி, "அடித்ததற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் செய்ததும் தவறே." என்றுவிட்டு,

"வருகிறேன்." என்றவாறே எழுந்துகொண்டாள்.

"எதற்கு மன்னிப்பு கேட்கிறாய் வனி? நீ செய்தது பிழை கிடையாது. அதனால் அதை மறந்துவிடு." என்றவன் தொடர்ந்து,

"நான் மட்டும் இங்கிருந்து என்ன செய்ய. உன்னுடன் கதைக்கும் ஆவலில் தான் வந்தேன். நானும் வருகிறேன்." என்றபடி அவனும் எழுந்துகொண்டான்.

'என்ன.... என்னுடன் கதைக்கவா இவ்வளவு தூரம் வந்தான்...' அவளின் மனம் இன்னும் பாரமானது.

"வீட்டுக்கு சென்றதும் மறக்காமல் கைக்கு கிறீம் அல்லது எண்ணை தடவிக்கொள்." என்றான் அன்புடன்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#11
தொடர்ச்சி..

எதுவுமே பேசாமல் நகர்ந்தவளை பின் தொடர்ந்தான் இளா.

சைக்கிளை வீதியின் புறம் அவள் திருப்பவும், "வனி, குளக்கட்டால் போவோமா..." என்றான் ஆவலுடன்.

"குளக்கட்டு வழியாகவா. எனக்கு பயம்.... வேண்டாமே..."

"என்ன பயம்? நான் ஏதும் செய்து விடுவேன் என்றா...?" என்றான் கோபமாக.

"உங்களிடம் பயம் என்று நான் சொன்னேனா? அங்கே குடித்துவிட்டு நிற்பார்கள். அதைத்தான் பயம் என்றேன். எதையும் புரிந்துகொள்ளாமல் நீங்களாக ஏதோ ஒன்றை உளறாதீர்கள்" என்றாள் பட்டென்று.

என் கோபம் அவளுக்கு உளறலாகத் தெரிகிறதா என்று சிரிப்பு வந்தபோதும், மனதுக்கு இனியவளின் திட்டுக்களை கூட அப்படியே சேகரித்துக்கொண்டது அவனின் இதயம்.

"உன் விடயங்களில் நான் அடிக்கடி நிலை தடுமாறி விடுகிறேன். என்னை அறியாமலே.. அந்தளவுக்கு உன் மீது பைத்தியமாகிப்போனேன்." என்றான் வெளிப்படையாகவே.


இதென்ன இப்படிச் சொல்கிறான் என்று பார்த்தாள் வதனி.

தரம் கெட்டவள் என்று நினைத்தாயா என்று கேட்டால் என்னிடம் எனக்காகவே கோபம் கொள்கிறான். அவனை ஒரு வார்த்தை சொன்னால் பணிந்து போகிறான். இதற்கு என்ன அர்த்தம்... விடை காண முடியாது மனம் அடித்துகொண்டது அவளுக்கு.

குளக்கட்டில் இருவரும் அமைதியாக தங்கள் தங்களின் சைக்கிள்களை உருட்டியபடி நடந்தனர்.

கிடைத்த தனிமையை நழுவ விட்டுவிட விரும்பாதவனாய், "உன்னைப் பார்த்தபோது, உன் கண்கள்தான் என்னை முதன் முதலில் கவர்ந்தது. ஆயிரம் விண்மீன்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒளி வீசியது போல அப்படி ஒரு பிரகாசம், அழகு, கவர்ச்சி எல்லாமே கொட்டிக்கிடக்கும் அழகிய கண்கள் உன்னுடையவை.... " என்றவன்,

"அவை எப்போது இங்கே பதிந்தன என்பது எனக்கு தெரியாது...." என்றான் தன்னுடைய நெஞ்சை சுட்டிக்காட்டி.

அவனின் செயல் மனதை அள்ளிய போதும், சிவந்த முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள் வதனி. செவிகளோ அவனின் வார்த்தைகளை வரவேற்க ஆயத்தமாகவே இருந்தது.

"நீ செய்யும் குறும்பகளை பார்த்தபோது கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது."

"கோபம் வந்ததா? நான் அப்படி என்ன செய்தேன். சும்மா கேலி கிண்டல்தானே..." என்றவளை பார்த்து இதமாக சிரித்தவன்,

"நீ ஒன்றும் செய்யவில்லை வனி. எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. அதுதான்!" என்றான் விளக்கமாக.

தொடர்ச்சியாக, "முதலில் எதுவும் தோன்றவில்லை. ஆனால் பிரியாவிடையின் போது உன் கண்களில் கண்ணீரைக் கண்டதும் என் மனம் துடித்த துடிப்பிருக்கே. எனக்கே அது அதிர்ச்சிதான். இதுவரை அப்படியான துடிப்பை நான் அனுபவித்தது கிடையாது. என்னை மறந்துதான் உன்னருகில் வந்து கைக்குட்டையை தந்தேன்..."

"இது ஈர்ப்பாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் திங்கள் அன்று என்னை அண்ணா என்று அழைத்தாயே அப்போதுதான் எனக்கே தெளிவாகப் புரிந்தது. நான் கற்பிக்கும் மாணவர்களைக்கூட அண்ணா என்று அழையுங்கள் எனக்கூறிய என்னால் உன்னுடைய அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சொல்லக்கூடாத எதையோ நீ சொல்லிவிட்டதாகத்தான் எனக்கு இருந்தது." என்றவன் தொடர்ந்து,

"பிறகு நீ மூன்று நாட்களாக வரவில்லையா.... எவ்வளவு தவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்லவே முடியாது வனி. இது காதல்தான் என்பதையும், அதன் ஆழத்தையும் அந்த மூன்று நாட்களில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது." என்றான் ஆழமான குரலில்.

"நான் நானாகவே இல்லை வனி. ஏன் என்றே தெரியாத தவிப்பு. எதையோ இழந்துவிட்ட துடிப்பு. ஆனாலும் மனதில் ஓர் ரகசிய கனவு. எப்படி சொல்ல.. புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு..." அவளுக்கு தன்னை தன் நிலையை புரியவைக்க முயன்றான்.

"உன்னை எப்போதடா பார்ப்போம் என்று தவித்தபடி வந்தவனின் கண் முன்னால் தேவதைபோல நீ நிற்கிறாய். மூன்று நாட்களின் தவிப்புத்தான் உன்னை பார்த்தவுடன் என்னை மறந்து வாணியில் நிகழ்ந்தது..." என கூறியபடி அவளின் முகத்தை சிறு சங்ககடத்துடன் பார்த்தவன் அவளின் முகச்சிவப்பில் மகிழ்வாக சிரித்தான்.

அந்த முகச்சிவப்பு ஆர்வத்தை தூண்ட, "என்னை பிடித்திருக்கிறதா வனி? சொல்லிவிடேன். என்னால் இன்று இரவு தூங்க முடியும் போல் தோன்றவில்லை..." என்றான் தவிப்புடன்.

அவனின், அவளின் மீதான தவிப்பு இதமான இனிமையாக அவளை தாக்கியபோதும் பதில் சொல்லத் தயங்கினாள் வதனி.

 

NithaniPrabu

Administrator
Staff member
#12

அத்தியாயம்-8


குழந்தை உள்ளத்துடன் குறும்புகளை விரும்பிச் செய்பவள்தான் வதனி. ஆனாலும் குழந்தை அல்லவே. குழந்தை உள்ளம் கொண்ட குமரி அல்லவா. குமரிக்கான சிந்தனைகள் இல்லாமல்போய்விடுமா?

கம்பீரமான ஆண்மகனின் தன்மீதான மையல் அவளுக்கு பிடித்தபோதும், பிடித்தது என்பதற்காகவே காதலைச் சொல்லிவிடவோ அல்லது வாழ்க்கையை அவனுடன்தான் என்று முடிவு செய்திடவோ முடியுமா?

பிடிதிருக்கிறதுதான்.. ஆனால் எவ்வளவு ஆழத்திற்கு?

அவனுக்கு காதலாக இருந்தபோதும், எனக்கு இது இனக்கவர்ச்சியாக இருந்துவிட்டால்? ஈர்ப்பாக இருந்துவிட்டால்? எத்தனை நாட்களுக்கு இந்த பற்றுதல் நிலைக்கும்?

முதன் முதலில் என்னிடம் அன்பைச் சொன்னவன் என்பதற்காகக் கூட எனக்கு அவனை பிடித்திருக்கலாம். அதற்காக அதைக் காதல் என்று சொல்லிவிட முடியுமா?

எப்படி புரிந்து கொள்வது? இவனின் ஓயாத இந்தக் கேள்விக்கு என்ன பதிலை சொல்வது? தலை மறுபடியும் வலிப்பதுபோல் இருந்தது வதனிக்கு.

பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

அவள் விழிகளில் தெரிந்த இயலாமை அவனை என்ன செய்ததோ, "உன்னை மிகவும் வதைக்கிறேனா வனி? என்னால் புரிந்துகொள்ள முடிகிறதுடா. ஆனால் என்னுடைய தவிப்பைப் போக்கும் வழிதான் புரிய மாட்டேன் என்கிறது..." என்றான் அவனும் தவித்த மனதுடன்.

அவனுக்குமே அவனின் நிலை ஆயாசமாக இருந்தது. அவளை வருத்துவதும் விளங்காமலில்லை. வாணியில் நடந்துகொண்ட விதமே அளவுக்கு அதிகமானது என்பது தெரியாதவனல்ல அவன்.

கோவிலில் நடந்தது அதிகப்படியின் உச்சம் என்பதும் விளங்கியது.

மூளையினால் புரிந்துகொண்ட அனைத்தையும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதுவே போதாது என்றது இதயம். அவளை தன்னவளாக ஆக்கியே தீரவேண்டும் என்கிற வைராக்கியமே வந்தது. சம்மதத்தை இப்போதே சொல்லிவிட மாட்டாளா என்று தவித்தது காதலில் சிக்குண்ட நெஞ்சம்.

சைக்கிளை உருட்டும் தெம்பைக்கூட இழந்தவனாக அதனை நிறுத்தியவன், குளத்தின்பக்கம் திரும்பி இரண்டு கைகளினாலும் தன்னுடைய அடர்ந்த சிகையினை கோதிக்கொண்டான்.

கண்ணுக்கு எட்டியவரை தெரிந்த நீரின்அழகு, அங்கே கொட்டிக்கிடந்த பசுமை எதுவுமே அவன் பார்வையில் விழவில்லை. எங்கேயோ வெறித்தபடி நின்றான்.

இப்படியே எவ்வளவு நேரம் நிற்பது. அம்மா தேடுவார்களே என்று நினைத்தவள்,

"வந்து... போவோமா? அம்மா பயந்துவிடுவார்கள். நடக்கவும் சிரமம் அவர்களுக்கு. நான் போகவேண்டும்." என்றாள் மெதுவாக.

சிந்தனைகளை எங்கேயோ தொலைத்து நின்றவனுக்கு அவள் சொன்னது புரிய கொஞ்ச நேரமெடுத்தது. அது புரிந்ததும் தன்னுடைய தாயாரின் நினைவும் வந்தது. தான் செய்துகொண்டிருக்கும் செயலும் புரிந்தது.

குடும்பப்பொறுப்பு, அவனின் கடமைகள், இவற்றை மறந்து தான் நடந்துகொள்ளும்முறை.... போதாக்குறைக்கு இவற்றை மறந்து காதலைச் சொல்லியும் அதற்கான பதில் இல்லாது போன விரக்தி அனைத்துமே அவனை கோபம்கொள்ள வைத்தது.

"அம்மாதேடுவார்களா? போ. போய் அவர்களையாவது நன்கு கவனி. எப்போதாவது என்னுடைய நினைவு வந்தால் என்னைப்பற்றியும் கொஞ்சம் யோசி." என்றவன்,

வேகமாக தன்னுடைய சைக்கிளில் ஏறி அமர்ந்தபடி "போவோமா..." என்றான் கோபம் தீராமலே.

திகைத்து விழித்தாள் வதனி. என்ன சொன்னோம்... அம்மா தேடுவார் என்று சொன்னதில் என்ன பிழை கண்டான் என்று யோசித்தவளுக்கும் கோபம் எட்டி பார்த்தது.

நிதானமாக அவனின் முகத்தை பார்த்து, "இப்போது நேரம் ஆறு முப்பது. இரவாகிறது. உங்களை உங்கள் அம்மா காணவில்லையே என்று தேடமாட்டார்களா?ஆண்பிள்ளையையே தேடும்போது என்னை என் வீட்டில் தேடமாட்டார்களா? இதற்கே இந்தக் குதி குதிக்கிறீர்கள். இதில் உங்களை நம்பி என் வாழ்க்கையை உங்கள் கையில் தந்தால் என் நிலைமை என்னாகிறது?" என்றவள் தன்னுடைய சைக்கிளை வேகமாக மிதித்தபடி முன்னால் சென்றுவிட்டாள்.

ஒருகணம் அசையாமல் நின்றுவிட்டான் இளா. தன்னுடைய இயலாமையை அவள்மீது கோபமாகக் காட்டியது புரிந்தது. அதோடு எதோடு எதை ஒப்பிடுகிறாள் என்று தோன்றியபோதும், தன்னையே குற்றவாளி ஆக்கிய அவளின் சாமர்த்தியம் மிகவும் பிடித்தது.

பிடித்திருக்கிறதா என்று கேட்டால் மட்டும் வாயே திறக்கமாட்டாள். மற்றும்படி வங்காள விரிகுடாவையும் தாண்டும் அவளின் வாய் என்று நினைத்து தனக்குள்ளேயே சிரித்தபடி, அவளுடன் சேர்ந்துகொள்ள சைக்கிளை எட்டி மிதித்தான்.

வரும்போது இருந்தது போலவே போகும்போதும் கோபம் இருக்கவே வேகமாக பறந்தது அவளின் சைக்கிள்.

தானும் வேகமாக மிதித்து அவளை எட்டிய இளா, "சாரிமா. கொஞ்சம் சைக்கிளை நிறுத்தேன்..." என்றவனை முறைத்தவள் தொடர்ந்து நிறுத்தாது மிதித்தாள்.

அவன் மறுபடியும் கெஞ்சிய போதும் அவள் கேட்காது மிதிக்கவும், "இப்போது நீ நிறுத்தாவிட்டால் உன் சைக்கிளில் இருக்கும் உன்னை அப்படியே தூக்கி என் சைக்கிளில் இருத்திவிடுவேன். செய்யவா?" எனவும் சடாரென பிரேக்கை பிடித்து சைக்கிளை நிறுத்தியது மட்டுமல்லாமல் அதை விட்டு இறங்கியும் விட்டாள் வதனி.

பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்கிற்று! கோபத்தில் முகம் சிவக்க அவனை முறைத்தாள்.

அவளின் முறைப்பை பார்த்தவனின் உதடுகள் சிரிக்கத் துடித்தபோதும் அதை அவள் அறியாது அடக்கினான்.

"ஏதோ கோபத்தை உன்மீது காட்டிவிட்டேன். சாரிடா குட்டி." என்றவனை அவள் தொடர்ந்து முறைக்கவும்,

"அதுதான் மன்னிப்பு கேட்டுவிட்டேனே. உன் அழகனை மன்னிக்க மாட்டாயா..." என்றான் அவளை கவரும் ஒரு பளீர் புன்னகையோடு.

அவன் "உன் அழகன்" என்று சொன்னது மயிலிறகாய் மனதை வருடியபோதும், "என்னைப் பார்த்தால் குட்டி மாதிரியா தெரிகிறது. நீங்கள்தான் பனைமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறீர்கள். நான் ஒன்றும் குட்டி கிடையாது. எங்கள் வகுப்பில் நான்தான் உயரம் தெரியுமா?" என்றாள் ரோசமாக.

கோபத்தில் கத்தப் போகிறாள் என்று எதிர்பார்த்த இளா சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை. அடக்க முயன்றும் முடியாமல் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினான்.

சைக்கிளில் இருந்தபடியே ஒரு காலை பெடலிலும் மற்றக்காலை நிலத்திலும் ஊன்றியபடி பெரிதாக வாய் விட்டு சிரித்தவனுக்கு, 'இவன் ஏன் சிரிக்கிறான்...' என்று யோசனையுடன் பார்த்தவளின் முகம் மனதைக் கொள்ளை கொள்ள, அவளின் கையை எட்டிபிடித்து தன்னருகே இழுத்தான்.

அவன் இழுப்புக்கு இழுபட்டுக்கொண்டே அதிர்ச்சியுடன் விழி விரிய பார்த்தவளின் மூக்கோடு மூக்கை உரசி,

"குழந்தையைப்போல் இருக்கும் குமரியாடா நீ..." என்று கண்களில் காதல் பொங்கக் கேட்டவனின் குரலோ கனிந்து கவி பாடியது.

அவனின் அருகாமை அவளை என்னவோ செய்ய, அவனின் காதல் ததும்பும் பார்வையையும் அருகாமையையும் எதிர்கொள்ள முடியாது முகம் திருப்பிய வதனிக்கு, தான் இருக்கும் சூழல் படவே அவனிடமிருந்து திமிறி விலகினாள்.

"தயவு செய்து இப்படி என்னைத் தொடும் வேலை வைத்துக்கொள்ளாதீர்கள். எனக்குப் பிடிக்கவில்லை." என்றாள் கோபத்துடன்.

அவளை விட்டவன், "நீ சொல்வது சரிதான். நானும் வேண்டுமென்று உன்னைத் தொடவில்லை. இதெல்லாம் என்னைக் கட்டுபடுத்த முடியாமல் நடப்பவை. முதலிலேயே சொன்னேனே உன் விடயத்தில் நான் நானாக இருப்பதில்லை. அதேபோல் உனக்குப் பிடிக்கவில்லை என்றும் பொய் சொல்லாதே!" என்றான் அவளை அறிந்துகொண்ட சிரிப்புடன்.

பிடிபட்ட உணர்வை மறைத்தபடி, இந்த சிரிப்பிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதில் நினைத்தவள்,

"இனியாவது நான் என் வீட்டுக்கு போகலாமா?" என்றாள் நக்கலாக.

"என் வீட்டுக்கு வந்துவிடேன்..." என்றான் அவன் கண்களை சிமிட்டி.

அவனின் கண்சிமிட்டலில் தொலையப் பார்த்த இதயத்தை கைப்பற்றியபடி, "நான் வருகிறேன்." என்று முணுமுணுத்தவளுக்கு பதிலாக தலையை ஆட்டியபோதும்,

"நாளை வாணிக்கு வருவாய் தானே...?" என்றான் கேள்வியாக.

"இல்லை. வார இறுதி நாட்களில் அப்பா வீட்டில் இருப்பார். அதனால் வரமாட்டேன்." என்றவளை ஏமாற்றமாகப் பார்த்தான் இளா.

அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தபோதும், பேசாமலேயே நின்றாள் வதனி.

"அப்போ திங்கள்தான் மறுபடியும் உன்னைப் பார்க்க முடியுமா...." என்று இழுத்தவன்,

"அப்படியானால் திங்கள் அன்று எனக்கு உன் பதில் கட்டாயம் வேண்டும்." என்றான் அழுத்தமாக.

இப்போது விட்டால் போதும் என்று மனதில் நினைத்தாலும் சரி என்பதாக தலையை அசைத்துவிட்டு அவள் சைக்கிளை மிதிக்கத் தொடங்கவும்,

"நீ முன்னே செல். நானும் உன் பின்னால் வருகிறேன். வேகமாக மிதிக்காதே..." என்றபடி அவளை பின்தொடர்ந்தான் இளவழகன்.

பூந்தோட்ட சந்திவரை வந்தவள், அந்தச் சந்தியில் அவன் சாந்தசோலைக்கும் தான் பூந்தோட்டத்துக்கும் செல்லும் பாதைகளில் திரும்ப வேண்டும் என்று நினைத்தவளாய், அவனைப் பார்த்து 'போய்வருகிறேன்' என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்துவிட்டு தன் பாதையில் சைக்கிளை திருப்பினாள்.

சற்று தூரத்தில் தன்னை யாரோ பின் தொடர்வதை உணர்ந்து திரும்பி பார்த்தவள் இளா வருவதைக் கண்டுவிட்டு வியப்புடன் விழிகளை விரித்து வேகத்தைக் குறைத்தாள்.

அவள் வேகத்தைக் குறைக்கவும் அவளுக்கு பக்கத்தில் தன்னுடைய சைக்கிளை கொண்டு சென்றவன், "என்ன?" என்றான் கேள்வியாக.

"இங்கு எங்கு நீங்கள் வருகிறீர்கள்?"

"இருட்டிவிட்டது. நீ தனியாகச் செல்வது நல்லதில்லை. நீ உன் வீட்டிற்குள் போனதும் நான் என்வீட்டிற்குப் போகிறேன..." என்றான் இளா.

அவனின் அந்தக் கரிசனம், அவளுக்கு அவன் மீதான நெருக்கத்தை விதைக்க,

"நீங்கள் போங்கள். இந்த வீதியில் இருப்பவர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும்.. அதனால் பயமில்லை..." என்றாள் கனிவாக.

அவளின் அந்தக் கனிவு அவனின் மனதை இன்னும் அசைக்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் தன் சைக்கிளை அவளுடனே மிதித்தான்.

அவளின் வீட்டு முனை வரவும், "அதுதான் எங்கள் வீடு. இனியாவது நீங்கள் போங்கள்..." என்றவளை விட்டுப் பிரியவே மனமற்றவன் போல தன்னுடைய சைக்கிளை நிறுத்திவிட்டு அவளையே பார்த்திருந்தான் இளா.

அவன் நின்ற நிலை அவளின் மனதை தாக்க, "என்..ன போகவில்லையா..." என்று திக்கியவளின் அருகே சைக்கிளை கொணர்ந்து நிறுத்தினான்.


"ப்ளீஸ் குட்டிமா என்னை தவிக்க விடாதே. திங்கள் அன்று உன் பதில் எனக்கு வந்தே ஆகவேண்டும். அதுவும் சம்மதம் என்பதாக. இப்போது போய்வா." என்று கரகரத்த குரலில் கூறியவன், அவள் அவளுடைய வீட்டுக்குள் நுழையும்வரை பார்த்திருந்துவிட்டு தன் வீட்டை நோக்கி சைக்கிளை திருப்பினான்.


 

NithaniPrabu

Administrator
Staff member
#13
அத்தியாயம்-9


வீட்டிற்குள் நுழைந்த வதனிக்கோ மந்திரித்துவிட்டது போலிருந்தது. இன்று என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று யோசித்தவளுக்கு, இல்லையே மதியம் வரை எப்போதும் போல சந்தோசமாகத்தானே இருந்தேன். மூன்று மணிக்கு பிறகுதானே வாணிக்கு போனோம். இந்த நான்கு மணித்தியாலங்களில் தன்னுடைய மனதில் எத்தனை வகையான உணர்வுகள் வந்து போய்விட்டது என்று நினைத்தவளுக்கு அத்தனையுமே அந்நியமாகத் தோன்றியது.

மகிழ்ச்சி, சங்கடம், திகைப்பு, கோபம், ஆச்சரியம், அழுகை இவை போதாது என்று ஏதோ ஒருவிதமான மயக்கம் இப்படி எத்தனை உணர்வுகளை இந்த கொஞ்ச நேரத்திற்குள் அனுபவித்துவிட்டோம்!

ஆனாலும் அவனின் பார்வைகள், அவை சொல்லிய சேதிகள் அவனின் தொடுகைகளின்போது உண்டான வேதியல் மாற்றங்கள் எல்லாம் பிடித்துதான் இருந்தது.

பிடித்திருந்தபோதும் மனதில் எதோ ஒருவிதமான பதட்டமும் இருந்தது. அவளின் மென்மையான பெண் மனதிற்குள் திடீர் என்று எதுவோ நுழைந்ததைப் போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வு பிடித்தும் இருந்தது. இது வேண்டுமா என்கிற பயமும் இருந்தது.

"வனிம்மா. வந்துவிட்டாயா. இன்னும் காணவில்லையே என்று யோசித்தபடி இருந்தேன்...." என்ற தாயாரின் குரலே அவளை இந்த உலகுக்கு இழுத்து வந்தது.

"கோவிலில் ஒரு ப்ரெண்டை பார்தேன்மா. கதைத்துக்கொண்டிருந்ததில் நேரத்தைக் கவனிக்கவில்லை. பயந்து விட்டீர்களாம்மா.." என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.

"இல்லை கண்ணம்மா. வழமையான நேரம் தாண்டிவிட்டதே என்று கொஞ்சம் யோசித்தேன். நீ உடையை மாற்றிவிட்டு வா." என்றவருக்கு பொய் சொல்கிறோமோ என்று மனதில் தைத்த போதும், எனக்குத் தெரிந்தவர் என்பது பொய் இல்லையே என்று மனதை தேற்றிக்கொண்டாள்.

உடையை மாற்றிவிட்டு வந்து, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருந்த தாயின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

தொலைக்காட்சியை பார்க்க அமர்ந்தவளுக்கு அதிலும் அவன் முகமே வந்து அது தொல்லைக்காட்சியாக மாறிப்போனது.

'கண்களால் காதலை சொல்லும் கலையை எங்கு கற்றான். பல பெண்களிடம் இப்படி கண்களினால் பேசிப்பேசியே வந்த அனுபவமோ...'

'சே சே,அவன் அப்படி கிடையாது. அன்று பிரியாவிடை தினத்தின்போதும் அவன் எந்தப் பெண்களையும் பார்க்கவில்லையே....'

அவன் யாரையும் பார்க்கவில்லை என்பது எப்படி எனக்கு தெரிந்தது... அப்படி என்றால் நான் அவனையே பார்த்திருந்தேனா என்று தோன்றியவுடனே பதறியடித்து, "இல்லை...இல்லை..." என்றாள்.

"என்னடா கண்ணா இல்லை?" என்று தாயார் கேட்கவும்தான் தான் உளறியது புரிந்தது.

சற்றே முழித்து, "அது அம்..மா ஒரு கேள்விக்கு.... பிழையாக.... பதில்..." என்று இழுத்தவளை பாசமாக நோக்கிய கலைமகள்,

"அதற்கு என்னடா? திங்கள் போய் மறுபடியும் அவர்களுக்கு சரியானதை சொல்லிக்கொடு. இப்போது அதை மறந்துவிட்டு இந்த நிகழ்ச்சியை பார். உனக்கு பிடித்து நீ பார்க்க ஆரம்பித்துதானே எனக்கும் பிடித்தது..." என்றவரின் இடையை பாசத்துடன் தன் கைகளினால் வளைத்தவள் தன் தாயின் மடியில் தலை சாய்த்தாள்.

தன் பெற்றவர்களை நினைத்து அவளின் மனம் பேரானந்தம் கொண்டது.

இருக்காதா பின்னே, அவளுக்குப் பிடித்த நிகழ்ச்சியை தனக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்ளும் அம்மா. அவளுக்கு பிடித்த உணவுகளையே தனக்கு பிடித்ததாக மாற்றி மனைவியிடம் சமைக்கச் சொல்லும் அப்பா. இப்படி அவர்களின் அன்றாட தேவைகள் கூட அவளை மையமாக வைத்தே இருக்கும் பெற்றவர்களை நினைத்தால் பெருமைதானே தோன்றும்.

அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் முதல் பெற்றவர்கள் அணியும் ஆடைகள் வரை அவளுக்கு பிடித்ததுதான்.

தாய்மடி கொடுத்த சுகமா அல்லது தாயவளின் கைகள் தலையை தடவிக்கொடுத்ததில் கிடைத்த இதமா.. அல்லது இரண்டும் சேர்ந்தோ மனதால் களைத்திருந்த வதனியை விழிசாய வைத்தது.

பதினெட்டு வயதான போதும்கூட இன்னும் சிறு பிள்ளையாக தன் மடி தேடும் மகளை கண்வெட்டாது பார்த்து ரசித்தார் கலைமகள்.

மோட்டார் சைக்கிளின் ஓசை வீட்டு வாசலில் கேட்கவும், கணவர் வருவதை உணர்ந்து வாசலை நோக்கி பார்வையை திருப்பிய கலைமகள், அவர் பூனை நடை நடந்து வருவதை பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் வாயை கைகளினால் பொத்தியபடி ஓசையின்றிச் சிரித்தார்.

அவரின் வருகையை அவரின் வாகனத்தின் சத்தம் உணர்த்திவிடுவதால், கலைமகள் எப்போதும் வாசலுக்கு வந்து கணவரை மலர்ந்த முகமாய் வரவேற்பார். காலுக்கு முடியாத போதுகூட வாசலில் கதிரையை போட்டு கணவருக்காக காத்திருப்பார்.

இன்று மனைவியை வாசலில் காணவில்லை என்றதுமே சங்கரனுக்கு புரிந்துவிட்டது, தங்களின் செல்லக்கண்ணம்மா தாய்மடி சாய்ந்துவிட்டாள் என்று.

மகளின் துயில் கலைந்துவிடக்கூடாது என்று மெதுவாக வந்தவருக்கு, மனைவியின் அந்த அழகிய கோலம் மனதை அள்ளவும், நேசத்தோடு மனைவியை பார்த்த சங்கரனின் கண்கள் பொய்யாக முறைத்தது. மனைவியின் மடியில் அழகிய பூங்காவாய் உறங்கும் மகளை கண்டவரின் பார்வை இப்போது பாசத்தை பறைசாற்றியது.

அந்த அழகிய தம்பதியினரின் பார்வைகள் ஒருங்கே மகளை தடவிக்கொடுத்து பின் தங்களுக்குள் இணைந்தபோது, தங்கள் மகள் அவள் என்கிற பெருமிதம் மட்டுமே உறவாடியது அவர்களின் கண்களில்.

விடை தெரிந்தபோதும் சாப்பிட்டு விட்டாளா என்று சைகையில் கேட்ட கணவரைப் பொய்யாக முறைப்பது இப்போது கலைமகளின் முறையாகிப்போனது.

'உங்களை விட்டு உங்கள் செல்ல மகள் எப்போது இரவு உணவை உண்டிருக்கிறாள்...' என்கிற கேள்வியை மனையாளின் மை விழிகளில் கண்டவரின் கண்கள் இப்போது பெருமையை பூசிக்கொண்டது.

உடை மாற்றி வருகிறேன் என்று சைகையில் கூறிச்சென்ற கணவர் வரும்வரை மகளின் தலையை கோதும் பணியை தொடர்ந்தார் கலைமகள். கணவர் வந்தவுடன், மகள் தூங்கும் மடியாக கணவரின் மடியை மாற்றிவிட்டு மிக மெதுவாக எழுந்து இரவு உணவினை கணவரின் முன் கொண்டுவந்து வைத்தார்.

உணவு வந்ததும், "வனிம்மா.. எழுந்திரடா. சாப்பிட்டுவிட்டு தூங்குவாயாம்." என்று மகளை மென்மையாகத் தட்டி எழுப்பினார் சங்கரன்.

"போங்கப்பா. எனக்கு நித்திரை வருகிறது..." என்று சிணுங்கியவளை,

"எழுந்திரு வனி. சாப்பிட்ட பிறகு உறங்கலாம்..." என்று சிறிதே கண்டிப்பை கலந்த குரலில் அதட்டினார் கலைமகள்.

தாயாரின் அதட்டலில் எழுந்து அமர்ந்தவள் தகப்பனுடன் ஒட்டிக்கொண்டாள்.

"இந்தா கண்ணா..." என்றபடி தந்தை ஊட்டவும் வாங்கி உண்டவள்,

"அப்பா நீங்கள் தீத்துவதால் அம்மா சமைத்த உணவுகூட ருசியாக இருக்கிறது." என்றாள் தாயார் அதட்டியதால் உண்டான கோபத்தைக் காட்டும் முகமாக.

"ஆமாடா செல்லம். உன் அம்மாவுக்கு சமைக்கத் தெரியாது என்று நமக்கு தெரியும்தானே..." என்றவர் மனைவியிடம் அவசர மன்னிப்பு ஒன்றை கண்கள் வழியாக அஞ்சல் அனுப்பினார்.

"சாப்பிடும் போது கதைக்ககூடாது என்று எத்தனை தடவை சொல்வது உங்கள் இருவருக்கும்." என்கிற அடுத்த அதட்டல் அவர்கள் இருவரையும் சத்தமின்றி இரவு உணவை முடிக்க வைத்தது.

உணவுக்குப் பின்னான இரவு வேலைகள் அனைத்தும் முடியவும், பிறக்க முதலே மனதில் தாங்கிய மகளை நெஞ்சிலும் தாலியைக் கட்டிய தினத்திலிருந்து சகலதுமாகிப்போனவளை தோளிலும் தாங்கியபடி அந்த வீட்டின் தலைவர் தலை சாய்த்தார் கட்டிலில்.


வதனிக்கு வார இறுதி மின்னலாக பறந்தது என்றால் இளாவிற்கு கொடுமை நிறைந்த இரு நெடிய நாட்களாக நகர்ந்தது.

ஒரு வழியாக திங்கள் அன்று, காலை நேரத்தை வேலைத்தளத்தில் நெட்டி தள்ளினான். ஆர்வத்தில் பரபரக்க எதிர்பார்ப்பில் மனம் கிடந்து தவிக்க தன்னவளை இன்னும் சிறிது நேரத்தில் பார்த்துவிடுவோம் என்கிற ஆசை மனதில் முட்டி மோத வாணிக்கு விரைந்து வந்தவனை, வதனி வந்துவிட்டு சென்றுவிட்டாள் என்கிற பதில் பேரிடியாய் தாக்கியது.

ஆற்றாமை, கோபம், இயலாமை, தவிப்பு, கசப்பு இப்படி எதிர்மறையான அத்தனை உணர்வுகளும் சேர்ந்து வந்து அவனை தாக்கியதில் நிலை குலைந்தே போனான் இளவழகன்.

'ஏன்? ஏன்? ஏன் இப்படி செய்கிறாள்? நான் என் காதலின் தவிப்பைச் சொன்னது போதாதா... அல்லது அதன் ஆழத்தை அவள் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது விளையாட்டுப்பிள்ளையாக மாறி என் காதல் கொண்ட மனதுடன் விளையாடிப் பார்க்கிறாளா?'

மூளை பனிக்கட்டிக்குள் அகப்பட்டு உறைந்துவிட்டதுபோல் செயல்பட மறுத்தது. இதயமோ ஏமாற்றத்தில் பலமடங்காக துடித்தது.

உணர்வுகளின் தாக்கத்தால் தவித்தவன் தன்னால் வகுப்பெடுக்க முடியாது என்று தோன்றவே, வாணியிடம் சொல்லி மன்னிப்பையும் கேட்டுவிட்டு வெளியே வந்தான். வதனியின் வீட்டுக்கே சென்று கேட்டுவிட்டு வந்தால் என்ன என்கிற எண்ணம் எழுந்தது.

அடங்க மறுத்த மனதிடம் நாளை வருவாள் தானே, அப்போது கேட்போம் என்று சொல்லிய போதும் எதோ ஒரு வேதனை அப்படியே ஒட்டிக்கொண்டது அவனின் இதயத்தில்.

'ஏன் இப்படி செய்தால்.. நான் எதிர்பார்ப்பேன் என்று சொல்லி இருந்தேனே. காதல் சொன்ன மனதை உதாசீனப்படுத்தும் அளவுக்கு கொடியவளின் மீதா என் காதல் நிலைகொண்டது. இல்லையே அப்படியானவள் இல்லையே... பின் ஏன் இப்படி நடந்துகொண்டாள்...'

வீட்டுக்கு போகவும் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன், அவளின் வீடு இருக்கும் வீதியை நோக்கி தன் சைக்கிளை திருப்பினான்.

அங்கும் அவனின் கண்களுக்கு எட்டிய வரையில் அவளை மட்டுமல்ல யாரையுமே காணாது மனம் சோர்ந்தது.

அந்த வீதியிலேயே அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக சைக்கிளை ஓட்டினான்.

நேரம் மாலை ஆறை தொடவும், அவளை காணவில்லையே என்கிற ஏமாற்றத்துடனும், ஆற்றாமையுடனும் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து, பூந்தோட்ட சந்தியை நோக்கி சைக்கிளை மிதித்தவனின் கண்களில் வதனி தென்பட்டாள்.முகமும் மனமும் சட்டென ஒளிர, அங்கேயே நின்றான். தன்னை மறந்து அவள்தானா என்று அவளையே பார்த்திருந்தான்.


 

NithaniPrabu

Administrator
Staff member
#14
அத்தியாயம்-10சாலையில் பார்வையைப் பதித்து சைக்கிளில் வந்த வதனி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து பார்வையை உயர்த்தினாள். இளாவை கண்டதும், கண்கள் ஒளிர அவனையே பார்த்தபடி சைக்கிளை மிதித்தாள்.


அவள் அவனைக் கடக்கவும், இளாவும் அவளைப் பின்தொடர்ந்தான். அவன் பின்னால் வருவது தெரிந்தபோதும் அமைதியாகவே முன்னே சென்றாள் வதனி. காரணம் அவளின் சைக்கிளின் பின்னுக்கு கலைமகள் அமர்ந்திருந்தார். கூர்மையுடன் எதையும் கவனிக்கும் அவருக்கும், காலுக்கு மருந்து கட்டியதில் கிளம்பிய வலி, வீதியில் நடந்த பார்வைப் பரிமாற்றத்தை கவனிக்கவிடாமல் செய்தது.


வதனி தனது வீட்டுக்குள் சென்றபிறகும் அவளின் வீட்டுக்கு சற்றுத் தள்ளி நின்றுகொண்டு இருந்தான் இளா. எதற்காக நிற்கிறோம் என்பதை அறியாமலேயே நின்றவனின் மனதில், எதோ ஒரு பட்சி சொன்னது அவள் வருவாள் என்று.


அவனின் காத்திருப்பைப் பொய்யாக்காமல் வந்த வதனி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பூந்தோட்டத்துக்கு செல்லும் திசைக்கு எதிர் திசையில் சைக்கிளை ஓட்டினாள்.


பின்தொடர்ந்து வரும் அவனை கண்டபோது அவளின் இதயம் மட்டுமல்ல உடலின் அத்தனை பாகமும் நடுங்கியது. ஏதோ ஒரு உத்வேகத்தில், அவன் காத்திருக்கிறான் என்கிற தவிப்பில், தெரு முனையில் இருக்கும் கடைக்கு சென்றுவருவதாக தாயிடம் சொல்லிவிட்டு வந்தவளுக்கு இப்போது பதட்டம் தொற்றிக்கொண்டது.


பொட்டு வைத்த அந்த நிமிடமே அவன் அவளுக்கானவன் என்பது வதனிக்கு ஊர்ஜிதமாகி இருந்தது. ஆனாலும் சம்மதம் சொல்வதா வேண்டாமா என்கிற கேள்வி தோன்றிக்கொண்டே இருந்தது.


அவன் தனக்காகக் காத்திருப்பதைக் கண்டதும் மனதில் இருந்த அந்தக் கேள்வியும் காணாமல் போனது.


அவர்களின் தெருவில் சற்றுத் தள்ளியிருந்த நேசரி குழந்தைகளுக்கான பூங்காவினுள் சைக்கிளை விட்டவள், அங்கிருந்த மரத்தின் கீழ் அதனை நிறுத்திவிட்டு அந்த மரத்தை அண்டி நின்றுகொண்டாள்.


இளாவும் சைக்கிளை நிறுத்திவிட்டு அவளை நோக்கி வரவும், பதட்டம் இன்னும் பற்றிக்கொள்ள தலையை குனிந்துகொண்டாள் வதனி.


"ஏன் இன்று வாணியிலிருந்து நேரத்திற்கே வந்துவிட்டாய்?"


"அப்பாவுக்கு ஏதோ வேலை வந்துவிட்டதாம். அதனால் அம்மாவின் காலுக்கு மருந்து கட்ட நான்தான் கூட்டிச்செல்ல வேண்டும். அதனால்தான் நேரத்தோடு வந்துவிட்டேன்." என்றாள் முணுமுணுப்பாக.


"ஓ...." என்றவன்,


"பிறகு?" என்றான் கேள்வியாக.


எதுவுமே சொல்லாது தலையைக் குனிந்து கைகளை பிசைந்தபடி நின்றாள் அவள்.


"வனிக்குட்டி, பதிலைச் சொல்லேன்....." ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் இருந்தது அவன் குரல்.


"என்னைக் குட்டி என்று கூப்பிடாதீர்கள் என்று சொல்லி இருக்கிறேனா இல்லையா. பிறகும் எதற்காக திரும்பத் திரும்ப கூப்பிடுகிறீர்கள்?" என்று தலையை நிமிர்த்தி அதட்டலாகக் கேட்டவளால் அவனிடமிருந்து பார்வையை அகற்றமுடியாமல் போனது.


விழிகளில் சிரிப்பை சிந்தாமல் சிதறாமல் குடியேற்றி, அதனோடு காதலையும் கலந்து அவளை வசியம் செய்தான் அவன். தன் விழிகளை அவனிடமிருந்து அகற்றமுடியாமல் தவித்தாள் வதனி. முகம் நாணத்தில் முத்துக்குளிக்க மறுபடியும் தலையைக் குனிந்துகொள்ள போனவளுக்கு அதுவும் முடியாமல் போனது.


அவளின் முகத்தை குனியவிடாது ஏந்தி இருந்தது அவனின் கைகள்.


"சொல்லேன்டா, சம்மதமா...." என்றவனுக்கு நாணத்தையே பதிலாகக் கொடுத்தவளின் முகச்சிவப்பு பதிலைச் சொன்னபோதும் எதிர்பார்ப்புடன் இப்போது தவிப்பும் சேர்ந்துகொள்ள,


"சம்மதம்தானே......" என்றான் மனதின் மொத்த எதிர்பார்ப்பையும் குரலில் தேக்கி.


அவளின் தலை ஆமென்பதாக அசைய, "உண்மையாவா???" என்று நம்பாமல் கேட்டவனின் கண்களில் தெரிந்த ஆனந்தம் சொல்லில் அடங்காதது.


அவனின் சந்தோசம் அவளுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


"உண்மையாகவா சொல்கிறாய்??"


"ம்..ம்..."


"சம்மதம் தானே...?"


தலையை மேலும் கீழும் சம்மதமாக அசைத்தாள்.


"சும்மா சொல்லவில்லையே...?"


செல்லமாக அவனை முறைத்தாள். அந்த பார்வை 'சும்மா சொல்வேனா?' என்று கேட்டது.


"சத்தியமாக...?"


இதமான புன்னகையை சிந்தினாள்.


நிஜம்தானே...?"


பொறுமை பறந்தது வதனிக்கு!


எத்தனை முறை சம்மதம் சொன்னாலும் திருப்தி கொள்ளாது திரும்பத் திரும்ப கேட்கிறானே என்று அவனை முறைத்தாள் இப்போது.


அவளின் முறைப்பு அவனுக்கு விளங்க அவன் இந்த உலகத்தில் இருக்கவேண்டுமே. அவனோ, அவனுக்கும் அவளுக்குமான உலகில் சிறகில்லாமல் பறந்துகொண்டிருந்தான்.


"பிள்ளையாரின் மேல் சத்தியமாக சொல் சம்மதமா..." என்று மறுபடியும் ஆரம்பித்தான்.


'இவனை என்ன செய்யலாம்' என்பதாக பார்த்தவளின் கண்களில் அவனின் சைக்கில் படவே அதை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டாள்.


அவளின் செய்கையின் அர்த்தம் புரியாமல் திகைத்து விழித்தவனிடம், "இனியும் சம்மதமா கிம்மதமா என்று கேட்டால் குரல் வளையை கடித்து பேசமுடியாமல் செய்துவிடுவேன்!" என்றாள் கடுப்புடன்.


ஒரு நொடி திகைத்த இளா அகமும் முகமும் மலர வாய் விட்டு சிரித்தான்.


அவனின் மனதில் விழுந்த காதலின் விதை அவளின் மனதில் செடியாக செழித்திருக்கிறதே இதுதான் காதலின் அற்புதமோ!


மனதின் இறுக்கங்கள் அனைத்தும் பனியென விலக, கண்கள் மலர, முகம் விகசிக்க, புதிதாய் பிறந்த காதலும் மெருகூட்ட மனம் விட்டு சிரித்தவனை பார்த்த வதனிக்கு, ஒரு ஆணின் முகம் சிரிக்கும்போது இவ்வளவு களையாக இருக்குமா என்று தோன்றியது. தன் மனதில் காதல் விதைத்தவனை, கண்களில் நேசம் பொங்கப் பார்த்தாள்.


வதனியின் பார்வையை உணர்ந்துகொண்டவன் கண்களில் காதலும் சந்தோசமும் போட்டி போட அவளை நெருங்கி,அவளின் இடையில் கைகளை கோர்த்து தன்னோடு இறுக்கி அப்படியே தூக்கியவன், "மிகவும் சந்தோசமாக இருக்கிறது வனி." என்றபடி நின்ற இடத்திலேயே சுழன்றான்.


அவன் சுற்றவும் அவளுக்கு பயமும் வெட்கமும் சேர்ந்துகொள்ளவே "ஹையோ... என்னை விடுங்கள். இறக்கிவிடுங்கள். யாராவது பார்க்கப் போகிறார்கள். விடுங்க..." என்று கத்தியது அவன் செவியில் விழவே இல்லை.


"எனக்கு எவ்வளவு நிறைவாக இருக்கு தெரியுமா. இந்த நிமிடம் இந்த உலகிலேயே மகிழ்ச்சியானவன் நான்தான்..." என்றவனை பார்க்கும்போது வதனிக்கும் மனம் நிறைந்திருந்தது.


சுற்றுவதை அவன் நிறுத்த மறந்ததில் அவளுக்கு தலையை சுற்றியது. அவளை அறியாமலே அவனின் கழுத்தை தன் கைகளால் இறுக்கி வளைத்தவள், அவனின் மார்பில் தலையை சாய்த்தாள்.


நெஞ்சமதில் தங்கியவள் தஞ்சம் நீயே என்பதாய் தன் நெஞ்சினில் சாய்ந்ததை உணர்ந்தவனின் மனதில் சொல்லில் அடங்கா பரவசம். சுழல்வதை நிறுத்திவிட்டு காதல் வழியும் கண்களால் தன்னவளின் மதிமுகத்தை மெய்மறந்து பார்த்திருந்தான்.


மஞ்சமாய் மாறிய அவனின் நெஞ்சினில் சாய்ந்தவளோ எழுந்திருக்க மறந்துபோனாள். காலம் காலமாய் அதுதான் அவளிடமாக இருந்து வந்ததுபோலும், அறிந்துகொண்டவளுக்கு பிரிந்துவர விருப்பத்தை காணோம்!


இருட்டிவிட்டதை உணர்ந்து, அவளின் பஞ்சுமிட்டாய் கன்னத்தில் தன்னுடைய உதடுகளை மெல்லப் பொருத்தி, அவளை எழுப்ப நினைத்தான் இளா.


அவனின் அடர்ந்தமீசை அவளை இம்சை செய்யவும், "ம்ம்.. ம்ம்..ம்... சும்மா இருங்கள்...." என்று சிணுங்கினாள்.


அவளின் சிணுங்கள் அவனை சுக்கு நூறாகத் துண்டாட தன் உணர்வுகளை அடக்க முடியாமல், "இப்படியே சிணுங்கியபடி இருந்தாயானால் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாதுடா..." என்று அவளின் காதருகில் தாபத்துடன் கரகரத்தவனின் உதடுகள், அவளின் செவியோடு உறவாடியது.


வாகாக அவனின் மார்பினில் இன்னும் புதைந்து கொண்டவள் எதற்கு தன்னைக் கட்டுபடுத்த முடியாது என்கிறான் என்று யோசிக்க, அவனின் உதடுகளும் கிறங்கிய குரலும் விஷயத்தை விளக்கவே, "என்னது???" என்றபடி அவனைத் தள்ளிவிட்டாள்.


அவளின் செயலில் பெரிதாக சிரித்தவன், "போவோமா நேரமாகிவிட்டதே.." எனவும்தான் அவளுக்கு சுற்றுப்புறம் கண்ணில் பட்டது.


"அச்சச்சோ.... எவ்வளவு இருட்டிவிட்டது. அம்மா தேடப்போகிறார்கள். எல்லாம் உங்களால் வந்தது...." என்றவளை மறுபடியும் தன் கைகளுக்குள் கொண்டுவந்தவன்,


"ஆமாம். என்னால்தான் வந்தது. நான்தான் என் நெஞ்சில் வாகாய் சாய்ந்து சுகம் கண்டது. அதனால் நீ சொல்வது மிகவும் சரிதான்."என்றான் கேலியாக.


சிவந்த முகத்தை மறைத்த இருளுக்கு மனதில் நன்றியை சொல்லியபடி, "வளவளக்காமல் வாருங்கள் போவோம்." என்றாள் பொய் மிரட்டலாக.


அவளை புரிந்துகொண்டவனுக்கு ஆனந்தமாக இருந்தது. எப்போது இறுக்கமாக இருக்கும் தானா இப்படி காதலில் திளைக்கிறோம் என்று புதினமாகக்கூட இருந்தது அவனுக்கு.


"நாளை வாணிக்கு வருவாய் தானே..."


ஆமென்றவள் தன்னுடைய சைக்கிளை எடுக்கவும், "உனக்கு கோபம் கொஞ்சம் கூடுதலாகவே வருகிறது வனி. என்னுடைய சம்பாத்தியத்தில் நான் முதன் முதலாக வாங்கிய என் சொத்தை தள்ளிவிட்டு விட்டாயே..." என்றான் இளா.


விழுந்துகிடந்த அவனின் சைக்கிளைப் பார்க்கவும் அவளுக்கு சிரிப்பு பீறிட்டது.


"பின்னே, மறை கழண்டவர் போல திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டால் நானும் எத்தனை தடவைதான் பதில் சொல்வது. அதுதான் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தேன்." என்றாள் சிரித்தபடி.


மனதில் பூத்த காதலை பரிமாறிக்கொண்ட மகிழ்வோடு கதைத்துக்கொண்டே இருவரும் சைக்கிளை மிதித்தனர்.


அவளின் வீடு வரவும் பிரிந்துசெல்ல மனமே இல்லாது, "வருகிறேன்" என்றாள் மெல்ல.


சரியென தலை அசைத்தவன் அவள் வீட்டுக்குள் சென்றதும் மனமின்றி தன் வீடு நோக்கி சென்றான்.


இருவரும் தங்கள் தங்கள் வீட்டில் இருந்தபோதும் இருவரின் மனங்களும் இணைந்தே இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம் அவன் மனதில் அவளும், அவள் மனதில் அவனும் இருந்தனர்.


இனிய கனவுகளின் துணையுடன் அன்றைய இரவினை கடத்தியவர்களுக்கு, விடிந்ததும் மாலை எப்போதடா வரும் என்றிருந்தது.


நகரமாட்டேன் என்று அடம்பிடித்த காலைப் பொழுதினை பெரும் சிரமப்பட்டு நகர்த்திய வதனி, மூன்று மணி என்றவுடனே வாணிநிலையத்துக்குச் செல்வதற்கு தயாரானாள்.


அங்கே சென்றவளுக்கு எப்போதையும் விட இன்று மிகவும் பிடித்தது வாணியை. அவளின் மனதைப் பறித்துக்கொண்டவனை முதன்முதலில் கண்டது இங்குதானே. இப்போது யோசிக்கையில் பல விஷயங்கள் புரிந்தது.
 

NithaniPrabu

Administrator
Staff member
#15
தொடர்ச்சி...


முதலில் அவனின் பார்வையை சந்தித்தபோதே தான் தடுமாறி இருக்கிறோம் என்பது புரிந்தது. சொல்லாமல் கொள்ளாமல் அவன் தன் மனதுக்குள் புகுந்திருக்கிறான் என்பது புரிந்தது. இதயம் எப்படி தன்னுடைய இணையை கண்டு பிடிக்கிறது என்று அதிசயமாக இருந்தது.


அவனுக்குப் பிடித்த அவளுக்கு, எப்படி அவனை பிடித்தது. இதுதான் காதலோ?


'விட்டால் காதலை பற்றி ஆராய்ச்சியே செய்வேன்...' என்று தன்னை நினைத்து சிரித்தவள் தமிழ்வாணியை காணச்சென்றாள்.


அங்கு வந்த கோபாலன், "உனக்கு எப்போது முத்தியது?" என்று கேட்க எதுவும் புரியாது விழித்தாள் வதனி.


அவள் விழிகள் கேள்வியாய் அவனை நோக்கவும், "தனியே நின்றபடி சிரித்தாய். அதுதான் தெளிவு படுத்திக்கொள்ள கேட்டேன்..." என்றவனை முறைக்க நினைத்தும் மனதின் மகிழ்ச்சி கலகலத்து சிரிக்க வைத்தது.


"நான் நினைத்தது சரிதான். உனக்கு மேல்மாடியில் ஏதோ பிரச்சினை." என்றவன்,


"என்ன விஷயம் என்று சொன்னால் நானும் சந்தோசப்படுவேனே.." என்றான் தொடர்ந்து.


அவளின் மகிழ்ச்சிக்கான காரணத்தைக் கேட்கிறான் என்று புரிந்தது வதனிக்கு. அதை சொல்லவா முடியும்.


எனவே "அதுவா கொக்கோகோ....பாலன் அண்ணா. துன்பத்தின் போது சிரிக்கவேண்டும் என்பார்களே. அதுதான் சிரித்தேன்..." என்றாள்.


அவளை நம்பாமல் பார்த்தவன், "உனக்கு ஒரு துன்பமா? உன்னால் தானே மற்றவர் துன்பப்படுவார்கள்..." என்று சந்தேகமாக கேட்டபோதும்,


"என்னம்மா ஏதும் பிரச்சினையா?" என்றான் பரிவாக.


முகத்தை மிகவும் தீவிரமாக வைத்தவள், "உங்களால் என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லமுடியுமா அண்ணா?" என்று கேட்டாள் சோகமாக.


"என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன். முதலில் என்ன பிரச்சினை என்று சொல்?" என பாசமாக கேட்டவனிடம்,


"எலிசபெத் மகாராணி என்னுடைய இந்தப் பாவாடையை தரச்சொல்லி ஒற்றைக் காலில் நிற்கிறார்." என்று தான் அணிந்திருந்த ஆகாய நீலநிற பாவாடையை காட்டியவள்,


"அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். நான் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன். ஆனாலும் இந்தப் பாவாடை இல்லாமல் லண்டன் திரும்ப மாட்டேன் என்று பூந்தோட்ட சந்தியில் உண்ணாவிரதம் இருக்கிறார் அண்ணா..." என்றாள் சிரிப்பை அடக்க முயன்றும் முடியாத குரலில்.


அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு கொலை வெறியே வந்தது.


"எது? இந்த நாசமாப்போன பாவடைக்கு எலிசபெத்மகாராணி உண்ணாவிரதம் இருக்கிறார்? அதுவும் பூந்தோட்ட சந்தியில்? உனக்கு அதை கொடுக்க மனம் இல்லை?" கடுப்பாக கேட்டவன்,


"இங்கு ஏதாவது கொட்டான் இருக்கிறதா பார். உன்னை நன்கு சாத்தினால் தான் சரியாக வருவாய்." என்றான் பொய்க் கோபமாக.


"அண்ணா கோபத்தில் கூட நீங்க அழகில்லையே. இதன் ரகசியம் என்ன?" என்றவள், அவனின் முறைப்பில் சிரிப்பை அடக்க முடியாது சிரித்தபடி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.மாலை ஐந்து முப்பதுக்கு தொடங்கும் வகுப்புக்கு ஐந்து மணிக்கே வாணிநிலையத்துக்கு வந்துவிட்டான் இளா. தன் உயிரினில் உயிராய் கலந்தவளை காணும் ஆவல் அவனின் முகத்தில் நிறைந்திருந்தது.


அவன் வந்ததை தானிருக்கும் வகுப்பில் இருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தாள் வதனி. அவனின் ஆவல் நிறைந்த முகம், அவனின் கூரிய விழிகள் வாணியை வலம் வந்த வேகம் அனைத்தும் அவனின் தேடலைச் சொல்லியபோதும், வெளியில் சொல்ல முடியா ஒரு கூச்சம் அல்லது வெட்கம் அவளை சூழ்ந்துகொண்டது.


அவனை ஆசை தீர பார்த்துக்கொண்டவளுக்கு இப்போதுதான் அவனின் கம்பீரம் இன்னும் அழகாக தெரிந்தது. பனைமரத்து உயரம். நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் கம்பீர நடை. கண் முதல் உதடுவரை அழுத்தக்காரன் என்று சொன்னபோதும், நான் பாசக்காரனும் கூட என்று சொல்லும் கண்களின் சிரிப்பு. அவளுக்கு இன்னும் இன்னும் அவனை பிடித்தது.


அதுவும் அவனின் பரந்துவிரித்த தோள்களை பார்த்தவளுக்கு ஓடிப்போய் அதில் தஞ்சமாக மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.


'எவ்வளவு அதிரடியாக நடந்துகொள்கிறான்...' என்றவளுக்கு யோசனை ஓடியது.


'என்னை பார்க்கத்தான் நேரத்திற்கு வந்தான் என்றால் பார்ப்போம் இப்போது என்ன செய்து என்னைப் பார்கிறான் என்று. நான் வெளியில் செல்லப் போவதில்லை...' என்று நினைத்தவளுக்கு இதழில் எழிலாய் அழகிய புன்னகை.

 

NithaniPrabu

Administrator
Staff member
#16
அத்தியாயம்-11மாணவி ஒருத்தி கேட்ட கேள்விக்கு விளக்கத்தை சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தவளுக்கு விரிந்த புன்னகையுடன் கண்களில் காதல் கசிய அந்த கொட்டகைக்குள் நுழைந்த இளாவை பார்த்ததும் இதயம் இனிதாய் அதிர்ந்தது.


கண்களில் மகிழ்ச்சியும் நாணமும் போட்டியிட அவனை நிமிர்ந்து பார்த்தவளை விட்டால் விழுங்கியே விடுவேன் என்றது அவனின் பார்வை.


அங்கிருந்த மாணவர்கள் அவனை கண்டதும், "வணக்கம் இளா அண்ணா.." என்றதும் வதனிக்கு தான் அன்றொரு நாள் கூறிய, "இளவழகன் அண்ணா" நினைவு வரவே அவள் விழிகள் நகைத்தது.


அவளின் பார்வை சொன்ன சேதி அவனை சென்றடைய வந்த சிரிப்பை புன்னகையாக மாற்றி, தலை அசைப்பில் தன்னுடைய வணக்கத்தை மாணவர்களுக்கு தெரிவித்தான்.


"நீங்கள் எல்லோரும் தந்த பேப்பரை செய்யுங்கள். உங்களுக்கு பிரயோசனப்படும் என்று நான் எடுத்துவந்த நோட்ஸில் சில விளக்கங்கள் வதனியிடம் சொல்ல வேண்டும். அதனால் நாங்கள் கடைசி வாங்கில் இருக்கிறோம்." என்றவன் அவளை கண்ணசைவால் தன்னுடன் அழைத்தான்.


மலைத்தே போனாள் வதனி. எப்படியெல்லாம் திட்டம் போடுகிறான். இவன் மகா கில்லாடியாகத்தான் இருப்பான் என்று மனதில் ஓடியபோதும் அவனின் செயல் அவளுக்கு பிடித்துத்தான் இருந்தது.


அவனுடன் சென்றவள் வாங்கிலில் அமர்ந்தவுடன் அவனும் அவளை அண்டி அமர்ந்துகொண்டான்.


திகைத்துப்போன வதனி, "என்ன செய்கிறீர்கள். தள்ளி அமருங்கள்." எனவும்,


"இன்னுமா? அப்போ உன் மடியில்தான் இருக்கவேண்டும். இருக்கவா?" என்று கேட்டான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.


"ப்ளீஸ். அவர்கள் சிறு பிள்ளைகள் இல்லை. மாணவர்கள் முன் நீங்கள் இப்படி நடப்பது நல்லதல்ல..." என்று முன்னே பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவர்களைக் காட்டி அவள் சொல்லவும் மனமின்றி சற்றே தள்ளி அமர்ந்தான் இளா.


"அப்படி என்ன அவர்களின் பரீட்சைக்கு முக்கியமானதை கொண்டுவந்தீர்கள்." கொஞ்சம் நையாண்டிக் குரலில் கேட்டவளுக்கு, அவன் காட்டியவைகளைப் பார்த்தபோது அவன் சும்மா சொல்லவில்லை என்று தெரிந்தது.


மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமாவைதான் எனவும் முகம் மலர்ந்துபோனாள். என்னதான் அவளை பார்க்கும் ஆவல் என்றாலும் சிறு விடயத்தில் கூட அவன் பொய்ப்பதை, அவளின் மனது ஏற்க மறுத்தது.


அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தவனின் கண்களில் நேசம் பொங்கியது.


"நான் பொறுப்பில்லாதவன் இல்லை வனி." என்றான்.


அவனும் தன் மனதை புரிந்துகொண்டான் என்பதை அறிந்து கொண்ட வதனி சங்கடமாக அவனை பார்த்தாள்.


அவளின் கையை பிறர் அறியாமல் இதமாய் அழுத்தியவன், "இது என்ன பார்வை? நான் பொய்த்துவிடக் கூடாது என்று நீ நினைக்கிறாய் என்பது, என் மீதான உன் அன்பை காட்டுவது..." என்றான் காதலுடன்.


அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவள் அவனின் பார்வையை தொடர்ந்து சந்திக்கும் திறன் இல்லாது விழிகளைத் தாழ்த்தவும்,


"எப்போது நாம் சந்திப்பது?" என்றான் ஆவல் நிறைந்த குரலில்.


"வருகிற வெள்ளி கோவிலில்..." என்று ஆரம்பித்தவளை முறைத்தான்.


"எனக்கு இன்றே உன்னுடன் தனித்துப் பேசவேண்டும்!"


"இன்று எப்படி....?"


"அது எனக்கு தெரியாது. ஆனால் நாம் சந்தித்தே ஆகவேண்டும்..."


"இது என்ன சிறுபிள்ளை போல் இவ்வளவு அடம்..." என்றவளை முறைத்தவன்,


"நான் கிளம்புகிறேன்..." என்று கோபமாக எழுந்தான்.


அவனின் அந்தச் சிறு கோபத்தையே தாங்கும் சக்தி அற்று, தன்னை மறந்து அவனின் கையை பிடித்து இழுத்து இருத்தினாள் வதனி.


"ச்சு, எதற்கு எடுத்தாலும் இது என்ன கோபம். கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்." என்றவளுக்கு பதிலைச் சொல்லாது அவளையே பார்த்தான்.


முறைப்போடு அவன் முகத்தை பார்த்தவளுக்கு, அவனின் ஏக்கம் நிறைந்த முகம் பார்த்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை அவளுக்குள்ளும் விதைத்தது.


சற்று யோசித்தவள் நினைவு வந்தவளாக, "நான் நித்தி வீட்டுக்கு தினமும் மாலையில் விளக்கு ஏற்றப் போவேன். அங்கு வேண்டுமானால் இன்று சந்திக்கலாம்." என்றவள் நொடியில் மலர்ந்த அவனின் முகத்தைப் பார்த்து,


"பொறுங்கள். ஆனால் நான் இங்கிருந்து நேராக அங்குதான் போவேன். அப்போது உங்களுக்கு வகுப்பு இருக்குமே..." என்றாள்.


யோசித்த இளா, "மூர்த்தி அண்ணாவிடம் வகுப்பை மாற்றிக் கேட்கிறேன். வேலையில் இருந்து வந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு வரலாம் என்று நான்தான் ஐந்து முப்பதுக்கு வகுப்பு எடுப்பதாக கூறினேன்." என்றான்.


"இனி வகுப்பை மாற்றிக்கொள்கிறேன். இன்று மட்டும் நீ அங்கு கொஞ்சம் காத்திரு. இல்லை இல்லை.. யாருமில்லாத இடத்தில் நீ நிற்பது சரியாக வராது. நீ உன் வீடு செல். இன்று நான் ஆறு பதினைந்துக்கு வகுப்பை முடித்துவிட்டு உன் வீட்டடிக்கு வருகிறேன். சேர்ந்தே போகலாம்.." வேகமாக திட்டமிட்டான்.


தலையை சம்மதமாக அசைத்தவள், "ஆனால் வீட்டிற்கு முன்னால் நிற்காதீர்கள்.." என்றாள்.


"எனக்கு புரியாதா வனி.." கேலி கலந்திருந்தது அவன் குரலில்.


தன் வகுப்புக்குச் செல்ல எழுந்தவனுக்கு அப்போதுதான் தன் கை அவளின் கையில் சிக்கிக் கிடப்பது தெரிந்தது. அதை அவளும் உணர்ந்துகொள்ளவில்லை என்பது அவளின் மனம் அவன் பால் சாய்ந்து கிடப்பதை நன்கே வெளிச்சமிட்டுக் காட்டியது.


மனம் நிறைய, "வருகிறேன் வனி. நேரத்திற்கு வகுப்பை ஆரம்பித்தால் தான் நேரத்தோடு முடிக்கலாம்." என்றவனிடம் சரி என்பதாக தலையை அசைத்தாள் வதனி.


அவன் நகராமல் இருக்கவே கேள்வியாகப் பார்த்தாள். அவளையும் அவளின் கையையும் குறும்போடு அவன் மாறிமாறிப் பார்க்க, விடயம் புரிந்து வெட்கத்துடன் கையை பிரித்தவளின் கையை தன் கையால் அழுத்திவிட்டு வெளியே சென்றான்.


அவன் சென்ற பின்னாலும் அவளின் வெட்கம் அவளை விட்டுச் சென்றபாடில்லை. எப்படி உணராமல் போனேன்... என்று தோன்றியது. அவளின் வெட்கம் கூட அவளுக்கு பிடித்திருந்தது.


வகுப்பு முடிந்து வீடு சென்ற வதனி மணி ஆறு பதினைந்து ஆனதும், "அம்மா, நித்தி வீட்டுக்குபோய் விளக்கு வைத்துவிட்டு வருகிறேன்..." என்றபடி புறப்பட்டாள்.


அம்மா அப்பாவிற்கு தெரியாமல் தவறு செய்கிறோமே என்று மனம் வலித்தது. ஆனாலும் காதல் கொண்ட மனம் அவனின் அருகாமையை விரும்பியது.


தன்னுடைய பெற்றவர்கள் அவளின் ஆசையை மறுக்க மாட்டார்கள் என்கிற பெரிய நம்பிக்கையும், இந்த வயதில் காதல் தேவையா என்று கேட்டுவிட்டால் என்ன சொல்வது... எனக்கு காதல் வந்துவிட்டதே என்றா... அதனால் இப்போது சொல்லாமல் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்கிற எண்ணமும்தான் அவளை அவர்களிடம் தன் காதலை சொல்லாமல் தடுத்தது.


எப்படியும் அம்மா அப்பாவிடம் சொல்லுவேன் தானே என்று தன் மனதை சமாதானம் செய்தவள் அவனின் வரவை எதிர்பார்த்து மெதுவாக சைக்கிளை மிதித்தாள்.


சற்று தூரம் சென்றவுடன் அவன் வருவதை கண்டவள் ஆர்வமாக திரும்பி பார்க்கவே, "நீ முன்னுக்குப் போ வனி. என்னை திரும்பி பார்க்கவேண்டாம்...." என்றபடி அவளை முந்திக்கொண்டு சென்றான். சிறிது தூரத்தில் அவனை முந்திசென்றவள் நித்தியின் வீட்டிற்குள் சைக்கிளை கொண்டுபோய் நிறுத்தினாள்.


சுவாமிக்கு வைப்பதற்காக நித்தியின் வீட்டு முற்றத்தில் பூத்திருந்த மல்லிகையை அவள் பறித்துக்கொண்டு இருக்கும்போது உள்ளே வந்தான் இளா.


"சுவாமிக்கு வைக்கவா...?" என்று கேட்டபடி அவளுடன் சேர்ந்து தானும் பூக்களை பறித்தான்.


மல்லிகைகளை பறிக்கிறேன் என்கிற பெயரில், அவளின் கையினை பிடிப்பதும் அவள் முறைத்துப் பார்த்தால் அடுத்த மல்லிகையை பறிப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தான்.


முறைத்து முறைத்துப் பார்த்தவள் அடுத்த தடவை தன் கை மீது அவன் கையை வைக்கவும் பிடித்துக் கிள்ளிவிட்டாள்.


"அம்மா...." என்றபடி கையை உதறினான் இளவழகன்.


"ராட்சசி! இப்படி கிள்ளுவாயா?" என்றவனை பார்த்து ஒற்றைப் புருவத்தினைத் தூக்கி எப்படி என்பதாக கண்களாலேயே கேட்டாள்.


"உன்னை..."


வாயில் விரல் வைத்து, "ஸ்ஸ்ஸ்..." என்றவள் சுவாமி அறைக்குள் நுழைந்தாள். அவளின் பின்னால் பூனைக்குட்டி போல சென்றான் இளா.


பூக்களை சுவாமிக்கு வைத்து விளக்கினை ஏற்றி அவள் சுவாமி கும்பிடும் அழகை ரசித்தவனை, 'சுவாமியை கும்பிடுங்கள்' என்பதாக கண்களால் ஆணையிட்டாள்.


'தெரியாத்தனமா காதலிச்சு, இப்போ அவ கண்ணால் சொல்வதை எல்லாம் செய்ற நிலைக்கு வந்திட்டியே இளா' என்று மனம் கேலி செய்த போதும் வெகு சிரத்தையாக கண்மூடி கைகளைக் கூப்பினான்.


அவன் மனதோ இதை தங்கள் வீடாகவும் அவனும் அவளும் கணவன் மனைவியாகவும் ஒன்றாக சுவாமி கும்பிடுவதாய் கற்பனை செய்யவும், 'ஆண்டவா...அந்தக் கொடுப்பினையை எங்களுக்கு கொடு' என்று மனமுருகி வேண்டிக்கொண்டான்.


கண்களை திறந்தவனுக்கு இமைக்குடையினை மூடி கைகளைக் கூப்பி கடவுளை வணங்கும் அழகு அப்படியே மனதை அள்ளியது. அவளிடம் தெரிந்த அந்த தெய்வீகமான அழகு கல்வெட்டாய் அவன் மனதில் அச்சானது.


கண்களைத் திறந்தவள் தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவனை, "என்ன?" என்பதாக ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.


'ஒரு புருவ அசைவிலேயே உயிரை அசைக்கிறாளே' என்று மனதில் நினைத்தவன் ஒன்றுமில்லை என்பதாய் தலையை அசைத்தான்.


அவனை சந்தேகமாக பார்த்தவள் திருநீறு சந்தன தட்டை எடுத்து அவன் முன்பாக நீட்டினாள். அவளின் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டபடி தட்டிலே இருந்த திருநீறு சந்தனனத்தை அவளின் நெற்றியிலே இட்டான் இளா.


செவ்வானத்தின் நிறம் கொண்ட அவளின் முகம் மலர்ந்து விகசித்தது. கண்கள் சற்றே கலங்கிய போதும் அழகாய் சிரித்தது. அவளின் மலர்ந்த முகம் பார்த்து அவனின் முகமும் மலர்ந்தது.


வதனியின் கைகளில் இருந்த தட்டினை வாங்கி, சுவாமித்தட்டில் அவன் வைக்கவும், "நீங்கள் பூசிக்கொள்ளவில்லையா?" என்று கேட்டவளை நெருங்கினான். அவளின் முகத்தினை இரு கைகளிலும் ஏந்தியவன், அவளின் பிறை நெற்றியில் தன்னுடைய நெற்றியினை ஒட்டிக்கொண்டான்.


விரிந்த விழிகளால் அவனை பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவளின் நெற்றியில் முட்டிவிட்டு அவன் தன்னுடைய நெற்றியை பிரிக்கவும், அவனின் நெற்றியிலும் திருநீறு சந்தனம் அழகாய் வீற்றிருந்தது. அதை பார்த்தவளுக்கு மனமும் உடலும் நெகிழ்ந்தது.


மனதின் நெகிழ்வு உடலின் அதிர்வு எல்லாம் சேர்ந்து அவளின் உடல் நடுங்கவும், நிற்கமுடியாமல் அவனின் மார்பில் சாய்ந்தாள்.


மார்போடு சாய்ந்தவளை அன்போடு அணைத்துக்கொண்டான் இளவழகன். இருவரின் மனமும் நிறைந்துகிடந்தது.


எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்களோ தெரியாது, இப்போதும் இளாவே வதனியின் நெற்றியில் தன்னுடைய உதடுகளை பொருத்தினான்.


அப்போதும் அசையாதவளைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது. அவனின் உடல் சிரிப்பில் குலுங்கவும், அவனின் இடுப்பு பகுதியில் கிள்ளினாள் வதனி.


வலியில் அவன் துள்ளி விலகவும் வெள்ளிச்சலங்கையாய் சிரித்தபடி சமையல் அறைக்குள் புகுந்துகொண்டாள் அவள்.


 

NithaniPrabu

Administrator
Staff member
#17

அத்தியாயம்-12அவளின் பின்னால் வந்தவன், "உனக்கு சமைக்க தெரியுமா?"என்று கேட்டான்."நன்றாக சாப்பிட தெரியும். ஏதாவது ஒன்று தெரிந்திருந்தால் போதும்தானே. எனக்கு பேராசை பிடிக்காது. அதனால் சமையலை பழகவில்லை.." என்றாள் நகைத்தபடி."இந்த வாய்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை""ஆமாம். என்னுடைய வாய் அழகிய வாய். அதிலே எதுவும் குறைச்சல் இல்லைதான். எப்படி கண்டு பிடித்தீர்கள்? நீங்கள் ஓரளவு கெட்டிகாரன் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்!" என்றவளின் தேனூறும் இதழ்களில் அவன் பார்வை மையம் கொண்டது.தேநீருக்கு தண்ணியை கொதிக்க வைத்தவள், அவனிடம் இருந்து எந்த பதிலையும் காணாது போகவே 'என்ன சத்தத்தை காணோமே' என்று நினைத்தபடி திரும்பினாள். முகம் அந்தி வானமாய் சிவந்தது அவனின் பார்வையில்.தலையை குனிந்தவள் அவனை திசை திருப்பும் பொருட்டு, "நீங்கள் விறாந்தையில் இருங்கள். நான் டீ கொண்டுவருகிறேன்." என்றாள் மெல்லிய குரலில்.அவளை நெருங்கியவன், அவளின் இரண்டு கைகளையும் பிடித்து தன்னருகே இழுத்து, தானே அவளின் கைகளை தன் இடுப்பை சுற்றிப் போட்டான்.எதுவும் செய்ய முடியாது தவித்து நின்றவளின் மதி முகத்தை கைகளில் ஏந்தி, "தேன் சுவை தரும் இதழ்கள் இங்கிருக்க எனக்கு எதற்கு டீ" என்றபடி தன்னுடைய பெரு விரலினால் அவளின் ஈர உதடுகளை வருடினான்.தேகமெங்கும் சிலிர்க்க, மொழியறியா மனுஷியாய் அவனையே வட்ட விழிகள் விரியப் பாத்திருந்தாள். தன் மயக்கம் கொண்ட விழிகளை அவளின் விழிகளுடன் விளையாட விட்டவன், அவளின் உதட்டருகே குனிந்து பின்னர் சற்றே நிமிர்ந்து, "தேன் சுவையறிய அனுமதி உண்டா?" என்றான் கிறங்கிய குரலில்.இது கூடாது என்று அவளின் பெண்மை உணர்த்திய போதும்,

ரோஜா நிறம் கொண்டிருந்த அவளின் முகம் அடர் சிவப்பினை கடன்வாங்க அவனின் பார்வை வீச்சை தாங்கமுடியாது அவளின் இமைக்குடைகள் தன்சோடியுடன் சாய்ந்துகொண்டது.சாய்ந்த இமைகள் சம்மதத்தை சொல்ல, ஈரம் தோய்ந்த அவளின் இதழ்களை அவனுடைய உதடுகள் அணைத்துக்கொண்டது.மென்மையாக ஆரம்பித்தவனின் இதழ் முத்தம் வன்மையான யுத்தமாக மாறியபோது தளிர் உடல் தாங்காது தொய்ந்துபோனாள் வதனி. அவளின் தொய்ந்த மேனியை தன் கரம்கொண்டு தாங்கியவன், தீராத் தாகம் கொண்டவனாய் அவளின் இதழ்களுக்குள் புதைந்துபோனான்.முடிவில்லா முதல் முத்தம் கொடுத்த மயக்கத்தில் தங்களை மறந்திருந்த அந்தக் காதலர்களை கலைக்கும் எண்ணம் காற்றுக்கு கூட வரவில்லை போலும்.தடுப்பார் இன்றி துடிப்புடன் கலந்த உதடுகளுக்கு இளைப்பாறும் வேளை வந்தபோது, இணைந்திருந்த நேரம் எவ்வளவு என்பதை கணக்கிடவே முடியாமல் போனது.தன் இதழ்களை விருப்பமின்றியே பிரித்த இளாவுக்கு, அப்போதும் கண்மூடி தன் தோள் சாய்ந்திருந்தவளை பார்க்கையில் முகத்தில் ஏனென்று அறியா நிறைவு!இயல்பில் ரோஜா நிறம்கொண்ட அவளின் அழகிய உதடுகள் இப்போது சிவப்புநிறம் கொண்டு சிவந்திருந்த விதமே அவை தன்னிடம் பட்ட பாட்டை சொன்னது. முகத்தில் சிறு புன்னகையுமாய் கண்களில் காதலுமாய் அவளின் நொந்திருந்த உதடுகளுக்கு மிக மிக மென்மையாய் தன்னுடைய உதடுகளால் ஒத்தனம் கொடுத்தான் இளா.காயம் செய்தவையே மருந்திட்ட மாயம் அழகாய் நடந்தேறியது!அப்போதும் கண் திறவாமல் அவன் தோள் சாய்ந்திருந்தவளை சண்டைக்கு இழுக்கும் விதமாய் அவளின் காதருகில் குனிந்து,"யாரோ தன்னை தொடக்கூடாது என்று சொன்னார்களே. உனக்கு தெரியுமா வது, அது யாரென்று???" என்றான் குறும்புக்குரலில்.சட்டென்று கண்களைத் திறந்து அவனின் மலர்ந்திருந்த முகத்தை காதலும் வெட்கமும் போட்டி போடப் பார்த்தவளை,ஆசையுடன் பார்த்தான் அவன்."இப்படி பார்த்து என் நிலைமையை இன்னும் மோசமாக்காதே வது" என்றான் கிசுகிசுப்பான குரலில்.அவனின் மார்புக்கூட்டுக்குள் புகுந்தவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவன், "அது என்ன எப்போது பார்த்தாலும் என் மார்பிலேயே சாய்ந்து கொள்கிறாய்?" என்றான்."எனக்கு மிக பிடித்த இடம் அதுதான்..." என்றாள் வெட்கத்துடன்.மகிழ்வாய் சிரித்தபோதும் "ஏன்டா?" என்றான் காதல் பொங்க."தெரியவில்லை...""சரி. எப்படி தெரிந்துகொண்டாய்?""எதை தெரிந்துகொண்டேன்?" என்றாள் புரியாமல்."அதுதான்... என் நெஞ்சம் தான் உனக்கு பிடித்த இடம் என்பதை?" என்றவனிடம் கிறங்கிய விழிகளை திறந்து,"உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் இருப்பது என் இதயம். அதனால் அவ்வப்போது அதனை சுகம் விசாரித்துக்கொள்கிறேன்."என்றவள் அவனின் மார்பினை தொட்டுக்காட்டி,"இது எனக்கான இடம். அதனால் எப்போதும் அதற்குள் புகுந்துகொள்கிறேன்" என்றாள் காதலில் குரல் மயங்க."எந்தக் காரணதிற்காகவும் இந்த இடத்தை நீங்கள் யாருக்கும் கொடுக்க கூடாது. எனக்கு மட்டுமே சொந்தமானது...." என்றாள் அவனின் முடிகள் நிறைந்த மார்பினை தடவியபடி."உத்தரவு மகாராணி!" என்று கேலியாகச் சொன்னபோதும்,"இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அது உனக்கு மட்டுமே சொந்தமான இடம்." என்றவன் தொடர்ந்து,"அதுமட்டுமல்ல வது. என்றுமே நானும் உனக்கானவன்தான்!" என்றான் உறுதியாக.அப்போதுதான் கவனித்தவளாய், "அது என்ன வது?" என்று கேட்டாள்.கண்களில் குறும்பு மின்ன, "இதழ் மதுவை கொடுத்தவள் என் வது!" என்றான் மயக்கத்துடன்.இதுவரை அவனுடன் ஒட்டிக்கொண்டிருந்தவள் அவனை தள்ளிவிட்டு, "நீங்கள் மிகவும் மோசம்!" என்றாள் சிவந்த முகத்தை மறைக்க முயன்றபடி.வாய்விட்டு பெரிதாக நகைத்தவன், அவளின் தலையில் வலிக்காது குட்டி, "வதனிக்குள் ஒரு 'வது'வை கண்டுபிடித்திருக்கிறேன்." என்றான் சந்தோசமாக."நீ என்ன கண்டுபிடித்தாய்?" என்று அவன் கேட்க,"கண்டை பிடிக்கவில்லை. ஒரு மாட்டினை பிடித்திருக்கிறேன்" என்றாள் சிரித்துக்கொண்டே."என்னை பார்த்தால் மாடு மாதிரி தெரிகிறதோ..." செல்லமாய் கோபம் கொண்டு அவளின் செவியை வலிக்காது திருகினான்."சொல்லேன் வது. என்னை எப்படி கூப்பிடப்போகிறாய்?" என்றான் ஆவலுடன்.அவளின் கண்களோ அவனை பார்த்து நகைத்தது.அவளின், "அண்ணா" என்ற அழைப்பை அது நினைவுபடுத்த,"உதைதான் வேண்டுவாய்...." என்றான் மிரட்டலாக.சலங்கையின் சங்கீதமாய் சிரிப்பவளை ஆசையுடன் பார்த்துக்கொண்டே, "சொல்லுடா..." என்று ஆவலோடு கேட்டான்."நீங்களே சொல்லுங்கள். நான் எப்படிக் கூப்பிட்டால் உங்களுக்கு பிடிக்கும்?" என்றவளிடம்,"பெயரைச் சொல்லி கூப்பிடு" என்றான் இளா.உதட்டை சுழித்து மறுப்பை தெரிவித்தாள்.அவனின் பார்வை அவளின் இஇதழ்களில் குவியவும், பொத்துக்கொண்டு வந்த சிரிப்புடன், "தொலைத்துவிடுவேன்.." என்றாள் ஒற்றை விரலை நீட்டி மிரட்டி.சற்றே அசடு வழிந்தவன், "ஒரு நாளைக்கு ஒருமுறை போதும்..." என்றான் தன் தடுமாற்றத்தை மறைத்து."கிடைக்கும் கிடைக்கும்! அடிதான் கிடைக்கும்." என்றவளை பெறாமல் விட்டு விடுவோமாக்கும் என்பாதாய் பதில் பார்வை பார்த்தான் அவன்.அதை அந்த நேரம் பார்ப்போம் என்று பார்வையிலேயே பதில் சொன்னவள், "எப்படி கூப்பிட சொல்லுங்கள். என் ஆசை அத்தான் என்று கூப்பிடவா..." என்று சிரித்தவளிடம்,"ஹே வது. அத்தான் என்றே கூப்பிடு. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது." என்றான் அவன்.தயங்கி நின்றவளை நெருங்கி, "ப்ளீஸ்டா.. அப்படியே கூப்பிடு!" என்றவனின் எதிர்பார்ப்பு அவளை அசைக்க மிக மெதுவாய்,"அத்தான்!" என்றாள் வெட்கத்துடன்.அவளை அணைத்து நின்றவனின் உடலில் ஓடிய சிலிர்ப்பு அவளை ஊடுருவி சென்றது. அவனை ஆர்வமாய் நிமிர்ந்து பார்த்தவளின் நெற்றியில் ஆசையாய் முத்தமிட்டவன்,"எப்போதும் நீ அத்தான் என்றுதான் கூப்பிடவேண்டும். என் உயிரை தீண்டும் அழைப்புடா!" என்றான் காதல் பொங்க.எனக்கும்தான் என்று அவளுக்கும் தோன்றியது. விலக மனமே இல்லாத போதும் வீடு செல்லும் நேரமாகி விட்டதால்,தன்னை மறந்து கண்மூடி அவளில் சாய்ந்து இருந்தவனை பார்த்தவள், "அத்தான் நேரமாகிவிட்டது!" என்றாள் மனமே இன்றி!அவளின் அழைப்பில் மிக மெதுவாய் கண்களை திறந்தவன் மனமே இன்றி அவளை விட்டான்."போவோம் வா" என்றவன்,"நாளை இன்னும் நேரத்துக்கு இங்கு வந்துவிடலாம்" என்றான் ஆர்வத்துடன்.அவனை சங்கடமாக பார்த்தாள் வதனி.அதை உணர்ந்து, "என்னம்மா?" என்றவனின் புரிதலில் மகிழ்ந்தவள்,"அத்தான், எப்போதும் இப்படி நாம் சந்தித்துகொள்வது நல்லதல்ல. யாராவது பார்த்தால்..." இழுத்தாள் வதனி.புரிகிறது என்பதாய் தலையை அசைத்தான் அவன்."ஆனால் வது, என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாதேடா..." என்றான் பரிதாபமாக.என்னால் மட்டும் முடியுமா என்று மனதில் தவித்தவள், "வெள்ளியில் கோவிலில் சந்திக்கலாம்தானே அத்தான்." என்று சொன்னாள்."கிழமையில் ஒருநாள் எனக்கு போதாது." அடம் பிடிக்கும் குழந்தையாய் இருந்தது அவனின் பேச்சு.அவள் அமைதியாக நிற்கவும், "வது, நித்தி குடும்பம் எப்போது திரும்புகின்றனர்?" என்று கேட்டான்."தெரியாது. அத்தைக்கு சுகமாகியவுடன் வருவார்கள்...""அப்படியென்றால் அவர்கள் வரும்வரை தானே. அதுவரை இங்கு சந்திக்கலாமே. கருணை காட்டுடா கண்ணம்மா...!" என்றான் அப்பாவியாக.அவளுக்குமே அவனைப் பார்க்காமல் இருக்க முடியாதுதான். அவன் சொன்னதுபோல மணி மாமா வரும்வரைதானே இந்த சந்திப்பும். எனவே சம்மதமாக தலையை அசைத்தாள்.அவளின் சம்மதம் கிடைத்தவுடனேயே மகிழ்ச்சியுடன், "கிளம்புவோமா?" என்றவனின் முகம் அவளின் முடிவை ஆதரித்தது. 

NithaniPrabu

Administrator
Staff member
#18

அத்தியாயம்-13அடுத்தடுத்த நாட்களும் வாணியில் சந்தித்துக்கொண்டார்கள். கண்களால் காதல் மொழி பேசிக்கொண்டனர். ஆனாலும் இளா அவளுடன் ஒரு வார்த்தை கூட நேரடியாக பேசவும் இல்லை. அதற்காக முயலவும் இல்லை.


மாலையானதும் ஒருவர் பின் ஒருவராய் நித்தியின் வீட்டை அடைவதும், வழமை போல சுவாமி படத்திற்கு வதனி விளக்கு ஏற்ற அவன் அவளுக்கு பொட்டு வைக்க என்று மனதளவில் ஒருமித்த நெஞ்சங்களாக புரிதலுடன் கூடிய இணைவு அவர்களிடம் இருந்தது.


இப்படியே நாட்கள் நகர, அன்றொருநாள் நித்தியின் வீட்டில் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் இருவரும். இல்லை...இல்லை.வதனி கதைக்க அவன் கேட்டுக்கொண்டு இருந்தான்.


அவன் தோளில் சாய்ந்திருந்தவள், “இன்றாவது தேநீர் குடிப்போமா அத்தான்? எனக்கு குடிக்கவேண்டும் போலிருக்கிறது.." என்று கேட்டாள்.


"ஓ, நான் ரெடிடா செல்லம்..." குறும்போடு அவள் முகம் நோக்கிக் குனிந்தான் அவன்.


அவனை பிடித்துத் தள்ளியவள் ஆட்காட்டி விரலை நீட்டி,


"அத்தான், அடிதான் வாங்குவீர்கள்." என்றாள் நாணச்சிரிப்போடு.


பின்னே, அவன் அருந்தும் தேநீரே வேறல்லவா....!


"இப்படி ஒரு சின்னப்பிள்ளைக்கு ஆசையை காட்டி மோசம் செய்யலாமா கண்ணம்மா..." அவன் கொஞ்ச,


"யார்? நீங்கள் சின்னப்பிள்ளையா? இதை நான் நம்பவேண்டுமாக்கும். எனக்கு தெரியாதா உங்களைப்பற்றி.." என்று கலகலத்து சிரித்தவள் எழுந்து சமையலைறைக்கு சென்றாள்.


அவளோடு அவனும் சென்று சமையல் கட்டில் சாய்ந்தபடி, அவள் தேநீர் தயாரிக்கும் அழகை ரசித்தபடி நின்றான்.


தேநீர் கப்புக்களில் ஒன்றை அவனிடம் நீட்டி விட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டாள் வதனி.


ஒரு மிடறு அருந்தியவன், "என் வீட்டம்மாக்கு தேநீராவது நன்றாக போட தெரிகிறதே!" என்றான் கேலியாக.


அவனின் கேலியில் சிரித்தபோதும், "சொல்லுங்கள் அத்தான். என்ன யோசிக்கிறீர்கள்?" என்றாள் இதமாய்.


இளாவின் முகம் பிரகாசமானது. ஆனாலும் அதை மறைக்க முயன்றபடி, "என்ன சொல்ல? என்ன கேட்கிறாய்?" என்றான் எதுவும் தெரியாதவன் போல்.


"நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதைச் சொல்லுங்கள் அத்தான்." என்றாள் அவன் மனதில் குடியிருப்பவள்.


தேநீர் அருந்தி முடித்த கப்பினை சிங்கிள் வைத்துவிட்டு அவளருகில் வந்து அவளின் கைகளை தன் கைகளால் பிடித்தபடி, "நான் எதுவோ சொல்ல நினைக்கிறேன் என்பதை எப்படிப் புரிந்துகொண்டாய்...?" என்றான் ஆச்சரியமான குரலில்.


"அத்தான், நான் இங்கே இருக்கிறேனாக்கும்." அவனின் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே சொன்னாள் வதனி.


பிடித்த அவளின் இரண்டு கைகளையும் தூக்கி அதிலே இதமாய் உதடு பதித்து, "என் மனதுக்கு பிடித்தவள் என் மனமறிந்து நடப்பது மிகவும் பெருமையாக இருக்குடா!" என்றான் பெருமை பொங்க.


"சரி அத்தான். ஆறுதலாக என்னை நினைத்து பெருமை பட்டுக்கொள்ளுங்கள். இப்போது விசயத்துக்கு வருகிறீர்களா. சும்மா வள வளக்காதீர்கள்!"


கேலியாக சொன்னபோதும் தன்னுடைய மனதை மாற்றவே என்பதை அறிந்தவன்,


"உன்னுடைய இந்த வாயை என்ன செய்யலாம்?" என்றான் அவளின் உதடுகளை கண்களால் விழுங்கியபடி.


அவனின் எண்ணம் புரிய சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாது திருப்பியபடி அவனை விட்டு விலகி, "சொல்ல நினைப்பதை சொல்லுங்கள் அத்தான்!" என்றாள் சற்றே அழுத்தமாக.


விலகியவளை தடுத்து அவளின் தோளைச் சுற்றித் தன் கைகளைப்போட்டு அவளை வாகாக அணைத்தவன், விறாந்தைக்கு வந்து இருவர் அமரும் சோபாவில் அவளுடன் அமர்ந்துகொண்டான்.


அமர்ந்துதான் தாமதம் அவனின் நெஞ்சத்தை தனக்கு மஞ்சமாக்கிகொண்டாள் அவனின் மனதுக்கு இனியவள்.


"நீ தூங்கினால் நான் யாரிடம் சொல்ல?"


"நான் எங்கே தூங்கினேன். சாய்ந்து இருக்கிறேன்." அவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் சற்றே தலையை உயர்த்தி அவனை பார்த்து சொன்னாள்.


உயர்ந்த அவளின் பிறை நெற்றியில் உதடுகளை ஒற்றி, "கண்ணம்மா, உனக்கு சொல்லி இருக்கிறேன். எனக்கு அப்பா கிடையாது.." என்று ஆரம்பித்தவன் தன்னுடைய குடும்ப நிலை, தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது முதல் தாயாருக்கு அவன் என்னென்ன செய்ய நினைக்கிறான் என்பது வரை அனைத்தையும் சொன்னான்.


கேட்டிருந்தவளுக்கோ மனம் பெருமிதத்தில் விம்மியது. 'என்னுடையவன் பொறுப்பு மிக்கவன்' என்கிற கர்வம் பார்வையில் மின்ன தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், அவனின் தாடையில் முதன் முதலாய் இதழ் பதித்தாள்.


நிகழ்ந்த அதிசயத்தில் மெய் மறந்துபோனான் இளா. அவன் செய்யவேண்டிய கடமைக்கு கிடைத்த பரிசல்லவா அது!


தன் கனவுகளை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்த நொடி முதல் அவனின் மனதில் பாரமொன்று ஏறி இருந்தது. தன்னை சுயநலக்காரன் என்று நினைத்துவிடுவாளோ என்று கலங்கித்தான் இருந்தான்.


'உன்னுடையவள் அப்படியானவள் அல்லடா!' என்று அவனின் மண்டையில் ஓங்கிக் குட்டியது அவள் கொடுத்த இதழ் ஒற்றுதல்.


தன்னுடைய மகிழ்ச்சியை இறுகிய அணைப்பில் வெளிப்படுத்தினான் இளா.


"உனக்கும் இப்போதுதான் பதினெட்டு வயது. எனக்கும் என் கடமைகள் முடிக்க சிறிது காலம் எடுக்கும். எனவே நம் திருமணம் நடக்க எப்படியும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் செல்லலாம் வது. உனக்கு சம்மதம் தானே!" என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாது அவனின் மார்புக்குள் மண்டியிட்டாள் வதனி.


"என்னடா.. பதில் சொல்லேன்." என்றபடி அவளின் முகத்தை நிமிர்த்தியவனுக்கு வெட்கத்தில் விகசித்த அவளின் முகம் அப்படியே மனதை அள்ளியது.


"என்றாவது ஒரு நாள் நடக்கப்போகும் நம் திருமணத்திற்கு இன்றே வெட்கப்பட ஆரம்பித்துவிட்டாயா.." என்றான் ரகசிய குரலில்.


கண்களில் திருமணக் கனவு மின்ன அவனை விழி விரித்து பார்த்தவள், "எத்தனை வருடமானாலும் சரிதான், நான் காத்திருப்பேன் உங்களுக்காக." என்றாள் உறுதியான குரலில்.


மனது நிறைந்தவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.


"அத்தான், உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்." அவள் தயக்கத்தோடு சொல்ல,


"என்னிடம் எதைச் சொல்வதற்கும் உனக்கு எதற்கு தயக்கம்? எதுவாக இருந்தாலும் சொல்லு" என்றான் அவன்.


"இல்லை.. நாம்... அது... நீங்க.... கொஞ்சம்... ச்சு..... அத்தான் உங்களுக்கு புரியவில்லையா?"


வாய்விட்டுச் சிரித்தான் இளா.


"இப்போது நீ என்ன சொன்னாய் என்று நான் புரிந்துகொள்வது.. ம்?" என்றவன் அவளின் முகசிவப்பை வைத்தே அவள் சொல்ல வருவதை ஊகித்தான்.


"கண்ணம்மா..... இங்கே பார். நான் உன்னவன். என்னால் உன்னை புரிந்துகொள்ள முடியும் செல்லம். உன் மீது கொண்ட காதல் செய்த மாயம் தான் உன்னை முத்தமிடுவதும் இப்படி அணைத்துக்கொள்வதும். அதற்காக எல்லை மீற மாட்டேன்." என்றான் மிக மிக மென்மையான குரலில்.


அவளின் மலர்ந்த விழிகள் நன்றியைச் சொல்லவே, "ஆனால் நானும் பாவம். என்னையும் நீ கொஞ்சம் அப்பப்போ கவனிக்க வேண்டும்." குறும்புடன் வந்தது அவன் குரல்.


"கவனிக்கிறேன். நன்றாக கவனிக்கிறேன். உங்கள் சைக்கிளை கவனித்ததைப் போல் மிக நன்றாக கவனிக்கிறேன்." என்றாள் அவளும் அவன் பாணியிலேயே.


இப்படியே அவனின் கதகதப்பான கைவளையத்துக்குள் புகுந்தபடி, மயிர்கற்றைகள் நிறைந்த அவனின் மார்பினில் தலை சாய்த்தபடி, எதை எதையோ பேசிச் சிரித்தபடி தன்னை மறந்திருந்தாள் வதனி.


காதடியில் சுருண்டிருக்கும் முடி முதல், அவளின் அழகிய இதழ்கள் பிரியும்போதெல்லாம் எட்டிப் பார்க்கும் வெண்ணிற முத்தாய் மின்னும் பற்கள் வரை அவளின் அழகை மிச்சம் விடாது பருகியபடி, அவள் சொல்வதை எல்லாம் தலையசைத்து கேட்டிருந்தான் இளா.


இருவருக்குமே இப்படியே இருந்துவிட மாட்டோமா என்கிற ஏக்கம் மனதில் நிறைந்திருந்தது.


வெள்ளிகிழமையில் சித்தி விநாயகர் கோவிலிலும் மற்றைய நாட்கள் நித்தி வீட்டிலும் என்று அவர்களின் சந்திப்புக்கள் எந்தவிதமான தடைகளும் இன்றி நன்றாகவே நடந்தேறியது.


நித்தி வீட்டில் தினமும் பார்த்துகொண்ட போதும் எல்லை மீற இளாவும் நினைத்ததில்லை வதனி இடம் கொடுத்ததும் இல்லை.


இப்படியே நாட்கள் நகர, அன்று வேலை முடிந்து வீடு வந்தவனை தாயின் ஆத்திரம்மிகு முகம் வரவேற்றது.


தங்கையின் அழுது சிவந்த முகமும் பதட்டத்தை கொடுக்க,


"என்னம்மா?என்ன நடந்தது. உங்கள் இருவர் முகமும் சரியில்லையே?" என்று கேட்டான்.


"உன் தங்கைக்கு காதல் வந்துவிட்டதாம் இளா. அது மட்டுமல்ல. அவளுக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசையும் வந்துவிட்டதாம்...." என்றார் கோபமாக


அவரளவு பதட்டம் அவனுக்கு வரவில்லை. காரணம் காதலில் முத்துகுளிப்பவனுக்கு தங்கையின் காதலை எதிர்க்கும் எண்ணமில்லை.


ஆனாலும் நல்லவனைத்தான் தங்கை தேர்ந்து எடுத்தாளா என்று அறிந்துகொள்ள, "யாரவன்?" என்றான் அதட்டலாக.


தமையனின் கோபத்தில் மாதவியின் மேனி நடுங்கியது. தலையைக் குனிந்துகொண்டு நின்றவளின் கண்களில் கண்ணீர்.


"சொல்லேன். இப்போது எதற்கு ஊமையாக நிற்கிறாய்..." என்றார் வைதேகி ஆத்திரம் பொங்க.


தாயின் முன்னால் எதையும் முழுதாக அறிந்துகொள்ள முடியாது என்று நினைத்தவனாக,


"அம்மா. நான் என்னவென்று விசாரிக்கிறேன். வேலை எதுவும் இருந்தால் நீங்கள் அதைப் பாருங்கள்." என்று தாயாரை உள்ளே அனுப்பியவன் அழுதுகொண்டு நின்ற தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாது முகம் கழுவ கிணற்றடிக்கு சென்றான்.


எதைச் செய்ய கிணற்றடிக்கு வந்தானோ அதை மறந்து கிணற்றுக் குந்திலேயே அமர்ந்தவனுக்கு யோசனை பலமாக இருந்தது.


தங்கை காதலிப்பவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கும் அவர்களின் காதலில் ஆட்சேபனை கிடையாதுதான். அனாலும் திருமணமும் உடனே நடக்க வேண்டும் என்பது மாதிரி அல்லவா அம்மா சொல்கிறார் என்று யோசித்தவனை, "அண்ணா....!" என்று மாதவியின் குரல் கலைத்தது.


என்ன என்பதாய் பார்த்தவனிடம், "நா....ன்... அண்......ணா.... அது...."


"சொல்ல நினைப்பதை தடுமாற்றம் இல்லாமல் சொல்!" என்ற இளாவின் அதட்டலில் அவள் மேனி நடுங்கியது.


"என்னை மன்னியுங்கள் அண்ணா. எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். இப்போது அவருக்கு அவர் வீட்டில் திருமணம் பேசுகிறார்களாம். அவர் உங்களிடம் இதுபற்றி பேசுவதாகச் சொன்னார். நான்தான் என்னுடைய அண்ணாவிடம் நானே சொல்லவேண்டும் என்று சொன்னேன்." என்றாள் திக்கித்திக்கி.


அவனே இளாவிடம் பேசுவதாக சொன்னதிலிருந்து அவனும் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைத்த இளாவுக்கு, தங்கை தானே தன்னிடம் சொல்ல நினைத்ததை நினைத்து பெருமையாக இருந்தது.


காதல் சொல்லிக்கொண்டா வருகிறது. அவள் தன்னிடம் சொல்லிவிட்டு காதல் கொள்ள என்று அவனின் காதல் கொண்ட மனம், தங்கைக்காக பரிந்து வந்தது.


அவளை ஒரு கையால் அணைத்து தன்னருகில் அமர்த்தி அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.


"அழாதே மாதவி. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப்போவது இல்லை. அவனின் பெயரைக் கூட நீ இன்னும் சொல்லவில்லையே?"


கோபத்திலோ அவசரத்திலோ பேசும் விஷயம் அல்ல இது என்பது புரிந்ததில் நிதானமாக அவளிடம் பேசினான்.


"சாரி அண்ணா. அவர் பெயர்... நித்திலன்" என்றாள் சற்றே வெட்கம் எட்டிய குரலில்.


அவனின் பெயரைச் சொல்லும்போதே அவளில் தோன்றும் பாவங்களை பார்த்தவனுக்கு, தங்கைக்கு அவனை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது புரிந்தது.


ஆனாலும் அதைக் காட்டாது, "சரிம்மா. அவனை என்னை வந்து பார்க்கச் சொல். இல்லை வேண்டாம்... எங்கு அவனைப் பார்க்கலாம் என்று சொல்...." என்று அவளிடம் விவரங்களை சேகரித்தான்.


"திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்..." என்று கேட்டவனிடம்,


"அவரை வெளிநாட்டுக்கு அவரின் வீட்டில் அனுப்பப் போகிறார்களாம். அதற்க்கு முன் திருமணத்தை நடத்திவிட நினைத்து பெண் பார்க்கிறார்களாம்." என்றாள் மெல்லிய குரலில்.


"ஒ...." என்று அவள் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டவனுக்கோ மலைப்பாய் இருந்தது.


அவளிற்கு பெண்ணிற்கு எதைச் சொல்லி புரிய வைப்பான்? அல்லது என்ன செய்து திருமணத்தை நடத்துவான்?
 

NithaniPrabu

Administrator
Staff member
#19
தொடர்ச்சி...


மாதவியோ கண்களில் ஏக்கத்தோடு அவனையே பாத்திருந்தாள்.


அவள் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய, "சரிம்மா.. முதலில் நான் அவனை சந்தித்து பேசுகிறேன். பிறகு என்ன செய்வது என்று முடிவு செய்யலாம்." என்றான் பட்டும் படாமல்.


எழுந்தவள் நகராமல் நிற்கவே "என்ன?" என்று கேட்டான்.


"அண்ணா, சம்மதிப்பீர்கள் தானே?" என்றாள் எதிர்பார்ப்பே உருவான முகத்துடன்.


"நல்லதே நடக்கும் மாதி. நீ எந்த விதமான யோசனையும் இல்லாமல் சந்தோசமாக இரு. உன்னுடைய மகிழ்ச்சிக்காக அண்ணா எதுவும் செய்வேன். புரிந்ததா?" என்று அவன் சொன்னபோது, தமையனின் நெஞ்சில் சாய்ந்து கதறியே விட்டாள் மாதவி.


"எனக்கு தெரியும் அண்ணா. அந்த நம்பிக்கையில் தான் உங்களிடம் எல்லாவற்றையும் சொன்னேன். நானும் என் ஆசைகளை யாரிடம் சொல்வது. என்னுடைய அண்ணா இதை நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கையில் தான் அவர் காதலைச் சொன்னபோது நானும் சம்மதம் சொன்னேன். ஆனாலும் உங்கள் மனதை வருத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா. அம்மா இன்று முழுக்க என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்..."என்றாள் அழுகையின் ஊடே.


மனம் பிசைந்தபோதும் அவளின் கண்ணீரை துடைத்து அழுகையை நிறுத்தும்படி அதட்டினான்.


தாயின் மனநிலையும் புரிந்தவனாக, "அம்மாவையும் நீ புரிந்துகொள்ள வேண்டும் மாதி. அவர்கள் மிகவும் பாவம். நம்மை விட்டால் அவருக்கு யார் இருக்கிறார்கள், சொல்...?" என்றவனிடம் புரிகிறது என்பதாக தலையை அசைத்தாள் மாதவி.


"சரிம்மா. நீ உள்ளே போ. நான் முகம் கழுவிவிட்டு வருகிறேன்." என்றவனின் மனதில் எப்படி இதை முடிக்கப் போகிறோம் என்கிற யோசனையே முழுதாக நின்றது.


ஆனாலும் நித்திலன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கே தங்கையைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டான்.


உறுதி கொண்டால் மட்டும் போதுமா..? இருப்பதோ ஒரே ஒரு தங்கை. அவளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக செய்து வைக்காவிட்டால் அண்ணன் என்று நான் இருந்து என்ன பிரயோசனம். அதற்கு சேமித்திருக்கும் பணம் போதுமா? என்ன செய்வது??? இப்படியே தங்கையின் திருமணத்தைப் பற்றி யோசித்தபடி இருந்தவனின் தோளில் கரம் ஒன்று பதியவே சுய நினைவுக்கு வந்தான் இளவழகன்.


"என்னய்யா யோசிக்கிறாய்...." என்று கேட்ட தாயாரிடம்,


"வேறு எதை நான் யோசிக்க அம்மா. எல்லாம் மாதியின் திருமணத்தைப் பற்றித்தான்..." என்றவன் தாய் எதுவோ சொல்ல வரவும் சொல்லவிடாது தானே முந்திக்கொண்டு,


"எதுவும் சொல்லாதீர்கள் அம்மா. காதலிப்பது தவறில்லை. அவன் நல்லவானாக இருந்தால் மாதியை அவனுக்கே கட்டி கொடுத்துவிடலாம்."


"எனக்கு புரிகிறது தம்பி. ஆனாலும் நம் மாதியா என்று மனம் கிடந்து அடிக்கிறது. குழந்தை போல ஒவ்வொரு நாளும் உன் மடியில் தூங்குவாளே. அவள் இவ்வளவு பெரிய மனுஷியானதை நான் கவனிக்கவேயில்லையே." என்கிறார் ஆற்றாமையுடன்.


"அம்மா...." என்று அவரின் கையை ஆதரவாக பற்றியவன்,


"நம் குழந்தைகள் எப்போதும் நமக்கு குழந்தைகள் தானேம்மா. அதனால்தான் அவர்கள் வளர்ந்தாலும் நமக்கு மட்டும் சிறு பிள்ளைகளாகவே தெரிகின்றனர்." என்றான் இதமாக.


"என்னவோ போப்பா. எனக்கு மனது பாரமாகவே இருக்கிறது." என்றார் கண்கள் கலங்க.


"அம்மா. தயவு செய்து நீங்கள் கலங்க கூடாது. அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்று நம்மிடம் சொல்லி இருக்கிறாள். அது தவறு இல்லையேம்மா. வாழப்போகிறவள் அவள்தானே. அவளுக்கு பிடித்தவனோடு தானே மகிழ்ச்சியாக அவளால் வாழ முடியும்"


அரை குறையாக சமாதானம் ஆனவர், "சரி தம்பி. மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்.


நித்திலனை சந்தித்து பேபேசப்போவதாகச் சொன்னான் அவன்.


விடயத்தை ஆறப்போட விரும்பாத இளா, காந்தனிடம் இன்று வாணிநிலையத்துக்கு வரமுடியாது என்று சொல்லும்படி சொல்லிவிட்டு நித்திலனை சந்திக்கச் சென்றான்.


இருக்கும் அத்தனை கடவுள்களை எல்லாம் வேண்டியபடி மாதவியும், மனம் போல நல்ல வாழ்க்கை என் மகளுக்கு அமைய வேண்டும் என்கிற வேண்டுதளுடன் வைதேகியும் இருக்க, இருட்டிய பிறகு வந்த இளாவின் முகத்தில் எதையுமே இருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.


தன் முகத்தையே ஆவலுடன் பார்க்கும் தங்கையின் முகம் மனதில் பட்ட போதும் எதுவும் கூறாத இளா, மாதவியை அக்கா மாதங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.


 

NithaniPrabu

Administrator
Staff member
#20

அத்தியாயம்-14
நடந்ததை அறிய ஆவல் இருந்தபோதும், மகனின் முகமே அவனின் களைப்பை உணர்த்த, எதுவும் பேசாது உடல் கழுவி வந்தவனுக்கு இரவு உணவை கொடுத்தார் வைதேகி.


உணவு உண்டதும் கேள்வியாக பார்த்த தாயிடம், "மிகவும் நல்ல சம்மந்தம் அம்மா. நம் மாதிக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்." எனவும் வைதேகியின் முகம் மலர்ந்தது.


"உண்மையாவா தம்பி. நன்றாக விசாரித்தாயா?"


"விசாரித்துவிட்டேன் அம்மா. அண்ணாவிடமும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அவரும் விசாரிக்கட்டும். நித்திலன் மிகவும் களையாக இருக்கிறான். மாதிக்கு பொருத்தமானவன்." என்றான் புன்னகையுடன்.


"பிறகு ஏன் உன் முகம் யோசனையாகவே இருக்கிறது?"


"அவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் திருமணத்தை நாம் நடத்தவேண்டும். அதுதான்.. மாதிக்கு தெரிந்தால் அண்ணாவைக் கஷ்டப்படுத்துகிறேன் என்று கவலைப் படுவாள். அதுதான் அவளை அக்கா வீட்டுக்கு அனுப்பினேன்."


"என்ன செய்யலாம் தம்பி..." என்றார் வைதேகியும் வழி தெரியாது.


"ஏதாவது செய்யவேண்டும்! வழி கிடைக்காமல் போகாது. நான் பார்த்துக்கொள்கிறேன் எல்லாவற்றையும்."


"அண்ணாவிடம் கேட்டுப்பாரேன்." தனக்குத் தெரிந்ததைச் சொன்னார் அவர்.


"இல்லையம்மா. அண்ணா இதுவரை செய்தது போதாதா? அக்காவை படிக்கவைத்து கட்டிக்கொடுத்தார். என்னை படிக்கவைத்தார். எல்லாமே அவர்தானே செய்தார். இதையாவது நான் செய்ய வேண்டாமா? மாதியின் திருமணத்தை நல்ல படியாக நடத்தவேண்டும் என்பது என் கனவு. நிச்சயம் நல்ல படியாக முடிப்பேன்.." என்றவன் தாயின் மடியில் தலை சாய்த்து,


"என் மேல் நம்பிக்கை இல்லையாம்மா..." என்றான் கலங்கிய குரலில்.


மகனின் தலையை ஆதுரத்துடன் தடவியவர், "என்னப்பு இப்படிக் கேட்கிறாய். உன்னை நினைத்து நான் பெருமைப்படாத நாளில்லை. உன் வாழ்க்கை என்று நினைக்காமல் அம்மா தங்கை என்று நினைப்பவன் நீ. உன் மேல் நம்பிக்கை இல்லாமலா? இப்போது நீதான் சிறுபிள்ளை போல் பேசுகிறாய்....." என்றவர் தொடர்ந்து,


"உனக்கு அண்ணா தோள் கொடுப்பானே என்கிற எண்ணத்தில்தான் சொன்னேன்.. உன்மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை." என்றார் பாசத்தோடு.


"அண்ணா எப்படியும் செய்வேன் என்றுதான் சொல்வார். ஆனால் அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். எல்லாமே நானே செய்து மாதவியின் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்துவேன் அம்மா...." என்றான் நம்பிக்கையுடன்.


மகனின் தலையை தடவிக்கொடுத்தவரின் மனமோ, "பிள்ளையாரப்பா.. என் பிள்ளைக்கு நல்ல வழியினை காட்டு." என்று வேண்டியது.


அடுத்தநாள் வேலை முடிந்து வந்தவனை முகம் முழுதும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற வைதேகி, "தம்பி. அண்ணா இன்று லண்டனில் இருந்து என்னுடன் கதைத்தாரடா. மாதியின் விஷயம் சொன்னேன். உன்னுடன் கதைக்கவேண்டும் என்று சொன்னார்." என்றார்.


வைதேகி சொன்னதின்படி இளா அவனின் மாமா வைத்தியநாதனுக்கு அழைத்தபோது குசலம் விசாரித்தவர், மாதிக்கு நல்ல வரன் அமைந்ததுக்கு சந்தோசப்பட்டவர், அவளின் திருமணத்திற்கான பணத்தை தான் தருவதாக சொன்னவர், தன்னுடைய மகள் ராகவியை நீயே கட்டிக்கொள் என்கிற மறைமுக வற்புறுத்தலையும் சேர்த்துச் சொன்னார்.


கேட்ட இளாவுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.


பதில் சொல்ல வார்த்தைகளே வரவில்லை. கோபமாக மறுப்பானா அல்லது ரோசம் பொங்க உங்கள் பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தூக்கி எறிவானா? என்ன செய்ய முடியும் அவனால்? எதிரே இருப்பது அன்புத்தங்கையின் திருமணம்.


தன்னுடைய ரோசத்தையோ கோபத்தையோ காட்டும் நேரம் அல்லவே இது. எனவே எதற்கும் பிடிகொடுக்காது யோசித்துச் சொல்வதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தான்.


இதை அறிந்த வைதேகிக்கோ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முகம் மலர, "என்ன தம்பி உனக்கு சம்மதமா?" என்றார் ஆர்வம் பொங்க.


"எதற்கு சம்மதமா என்று கேட்கிறீர்கள்?" என்று புரியாமல் கேட்டான்.


"ராகவியை மணந்துகொள்ளத்தான்!"


"என்னது?! அம்மா, முக்கியமான விஷயம் மாதியின் திருமணமே தவிர என்னுடையது அல்ல! அத்துடன் இப்போது நான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. அதற்கு இன்னும் காலமிருக்கிறது. எனவே இந்தப் பேச்சு வேண்டாம்." என்றான் கண்டிப்பான குரலில்.


ஏமாற்றம் நிரம்பிய குரலில், "ஏனப்பு, ராகவி அழகாய்த்தானே இருக்கிறாள்?" என்கிறார் அவர்.


"இப்போது நான் சொன்னேனா ராகவி அழகில்லை என்று. அதைவிட அழகாய் இருக்கும் எல்லோரையும் பிடித்துவிடுமா?" என்றான் கோபம் எட்டிய குரலில்.


"மாமாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?" ஏமாற்றத்தோடு கேட்டார் வைதேகி.


"கடனாகத் தருவதாக இருந்தால் தரட்டும். லண்டன் சென்றாவது உழைத்து திருப்பிக் கொடுக்கிறேன். வேண்டுமானால் வட்டியும் சேர்த்து கொடுக்கிறேன். ஆனால் பணத்தை தந்துவிட்டு பெண்ணைக் கட்டு என்பது சரிவராதும்மா...." என்றான் ரோசம் கோபம் இரண்டுமே நிறைந்த குரலில்.


அடுத்தநாள் இளா வேலைக்குச் சென்றதும் முதல் வேலையாக தன்னுடைய அண்ணனுக்கு அழைத்து, இளா சொன்னதை ஒப்பித்தார் வைதேகி.


அழகான அன்பான பெண்ணான ராகவி தனக்கு மருமகளாக வந்துவிட்டால் அண்ணாவின் சொந்தமும் விட்டுப்போகாது. மாமியார் மருமகள் பிரச்சினையும் வராது. மகனும் சந்தோசமாக வாழ்வான் என்கிற எண்ணம் வைதேகியை அவரின் அண்ணாவிடம் அனைத்தையும் சொல்ல வைத்தது. அண்ணனும் தங்கையும் தங்களுக்குள் ஒரு திட்டத்தை தீட்டினர்.


ராகவியை திருமணம் செய்ய மறுத்தால் பணம் தருவாரா? அப்படியே பணம் தந்தாலும் அந்தக் கடனை எப்படி அடைப்பது? லட்சக் கணக்கில் கடனை பெற்றுவிட்டு ஆயிரக்கணக்கில் சம்பளத்தை எடுத்து வீட்டைப் பார்ப்பானா அல்லது கடனை அடைப்பானா? விருப்பம் இல்லாவிட்டாலும் வெளிநாடு செல்லும் நிலை வந்துவிடுமோ?


ஒருவேளை பணம் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டால் என்ன செய்வது?


அப்படி மறுக்கமாட்டார் என்று தோன்றியது. அந்தளவுக்கு சுயநலம் மிக்கவர் அல்ல மாமா. அந்தக் காலத்து மனிதர். சொந்தத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல நினைக்கிறார் என்பது புரிந்தது. அதில் தவறில்லை. ஆனால்......


இதை எப்படி அவருக்குப் புரிய வைப்பான்? தலையே வெடித்துவிடும் போல் வலித்தது.


எதையும் இப்போதே யோசிக்காது முதலில் மாமாவிடம் என் முடிவைச் சொல்லுவோம். அவர் என்ன சொல்கிறார் என்பதை வைத்து மிகுதியை யோசிப்போம் என்று நினைத்துகொண்டான்.


மாலை வீடு சென்றதும் இன்றும் வாணிக்கு வர முடியாது என்று காந்தனிடம் சொல்லிவிட்டவன் தன் மாமாவுக்கு தொலைபேசியில் அழைத்து, கதைத்தான்.


அவரின் மனம் நோகாதபடிக்கு தான் சொல்ல நினைத்ததை சொன்னவனிடம் உற்சாகக்குரலில், "சரி இளா. முதலில் உன் தங்கையின் திருமணத்தை சிறப்பாக முடி. பிறகு இங்கு வா. மிகுதியை பிறகு பார்ப்போம்." என்றார் சிரித்தபடி.


மனதில் சிந்தனைகள் பல இருந்தபோதும் அவரிடம் சம்மதம் சொன்னவன் பணம் சம்மந்தமான மிகுதி விபரங்களை அவருடன் கதைத்துவிட்டு, தாய் தங்கையிடம் விபரங்களை பகிர்ந்துகொண்டான்.


மாதவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தாயையும் அண்ணனையும் கட்டிக்கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியைக் கொண்டாடினாள்.


சில திருமண விஷயங்கள் பேச கதிரவன் வீடு சென்றான் இளவழகன்.

கதிரவனுடன் கதைத்துவிட்டு வீடு வந்தவன், "அம்மா. மாதியின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி விடலாம். இனிக் கவலை வேண்டாம்..." என்றான் உற்சாகமாக.


"சந்தோசம்தான். ஆனாலும் தம்பி.... பிறகு லண்டன் செல்லவேண்டி வருமே. உனக்குத்தான் வெளிநாடு போகப் பிடிக்காதே...."


"இப்போதும்தான் பிடிக்கவில்லை.. ஆனாலும் என்னுடைய விருப்பு வெறுப்புக்களை விட மாதியின் திருமணம் முக்கியம். அதற்கு தடையாக வர எதையும் அனுமதிக்க மாட்டேன்." என்றான் திடமாக.


இரவு உணவினை முடித்துக் கட்டிலில் சாய்ந்தவனுக்கு நிம்மதியாக இருந்தது.


தங்கையின் திருமணதிற்கு ஏற்பாடு செய்துவிட்டோம் என்கிற நிறைவு மனதை அமைதிப் படுத்த, காதல் கொண்ட மனம் விழித்துக்கொண்டது.


படுத்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். மூன்று நாட்களாய் தங்கையின் விடயம் மனதில் இருந்ததில் வதனியை மறந்தே போனான் அவன். உண்மை அதுதான்! அவன் மறந்துதான் போனான். இல்லாவிடில் காந்தன் மூலம் எப்படியும் அவளுக்கும் தகவலை தெரிவித்து இருக்கலாம் அல்லவா!


மனம் குற்ற உணர்ச்சியில் வெந்தது.


தாய் தங்கை என்று வந்துவிட்டால் அவனுக்கு மற்ற எதுவுமே அவன் நினைவில் வருவதில்லைதான். ஒரு அண்ணாவாக ஒரு மகனாக அது சிறப்பாக இருந்த போதும் ஒரு சிறு பெண்ணின் மனதில் காதலை விதைத்த காதலனாக அவன் செய்தது தவறல்லவா!


அதோடு இன்னொன்றும் உறைத்தது. தான் மறுத்தபோது வருந்திய அம்மாவின் முகத்தில் அந்த வருத்தம் இப்போது மருந்துக்கும் இல்லை. உங்கள் மகளை மணக்கமாட்டேன் என்று சொல்லியும் மாமாவிடம் சிறு மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் இன்னும் உற்சாகமாகவே கதைத்தார்.


ஆக, அம்மாவும் மாமாவும் அவனுக்குத் தெரியாமல் வேறு எதுவோ திட்டம் போட்டிருக்கிறார்கள்!


தன்னை நினைத்தே அவனுக்கு பயமாகப் போயிற்று! தான் வெளிநாடு சென்ற பின்னர் மாமாவும் அம்மாவும் சேர்ந்து அவர்களின்மேல் தான் வைத்திருக்கும் பாசத்தைக் காட்டி ராகவியுடனான திருமணத்துக்கு கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது?


அவனால் அவர்களின் பேச்சை முற்றிலுமாக மீற முடியுமா? அப்படி மீறமுடியா நிலை வந்துவிட்டால்..... அந்த நிலையில் அவனை அவர்கள் நிறுத்திவிட்டால்?


வதனியன்றி அவனால் இன்னொருத்தியை கனவில் கூட நினைக்க முடியாது. இதில் நிஜத்தில் வாழ முடியுமா... அந்த நிமிடமே அவன் இதயம் வேலை நிறுத்தம் செய்துவிடுமே!


என்ன செய்யலாம்....? என்ன செய்யலாம்...? என்று அவன் மனம் தவியாக தவித்தது.


தாய் தங்கையின் கடமைகளை நிறைவேற்றினாலும், மது அவனுக்குக் கிடைத்தால் மட்டுமே அவன் வாழ்க்கை முழுமைபெறும்! அவளோடு மட்டுமே அவன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள முடியும்! இல்லையேல் உயிரற்ற உடலாக அல்லவா மாறிப்போவான்.


இல்லை நிச்சயமாக இல்லை! எந்தக் காரணத்திற்காகவும் என்னவளை இழக்கவோ இன்னொருவன் கைக்கு பறிகொடுக்கவோ முடியாது! அவள் எனக்குச் சொந்தமானவள்!


அதுமட்டுமல்ல, அவன் அவளுக்கு உரிமையானவன்! அவனை அவனால் கூட இன்னொருத்தியிடம் கொடுத்துவிட முடியாது


ஊருக்கு வேண்டுமானால் அவர்கள் காதலர்கள். என்றைக்கு கோவிலில் வைத்து சித்திவிநாயகர் சாட்சியாக அவளின் நெற்றியில் திலகம் இட்டேனோ அன்றே அவள் என் பாதி.


மனைவியைக் கைவிட முடியுமா? முடியாதே! ஆனால் ஊருக்கும் அம்மா மாமாக்கும் அதைச் சொல்லி புரிய வைக்கவும் முடியாது. அப்படியே சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் தெரியாது.


இதற்கு வழிதான் என்ன? என்று தவித்தவனின் மூலையில் மின்னல் வெட்டியது.


அவனின் பரிதவிப்பை தீர்க்கும் வழி கிடைத்துவிட்டது என்று நினைத்து மகிழ்ந்தவனுக்கு வாழ்க்கையையே ஜெயித்துவிட்ட ஒரு உணர்வு!


மாதவிக்கு நல்ல இடத்தில் சிறப்பாக திருமணம் செய்துவைக்கப் போகிறான். வதனியும் அவனுக்கே ஊரறிய சொந்தமாகப் போகிறாள். தாயையும் வெளிநாடு சென்று நல்லநிலையில் வாழவைக்கப் போகிறான். இன்னுமென்ன வேண்டும் அவனுக்கு? அவனின் ஆசைகள் அத்தனையும் நிறைவேறப் போகிறதே


மனதில் துள்ளிக் குதித்தான் இளவழகன்.


அவனது வதுக்குட்டியைப் பிரிய வேண்டுமே என்று சோர்ந்த மனதை என்றிருந்தாலும் என் செல்லம் எனக்குதான் என்று தேற்றினான். உழைத்து மாமாவின் கடனை அடைத்துவிட்டு அம்மாவின் மிகுதி வாழ்க்கைக்கும் வழி செய்த பின்னர் என் வதுவை இந்த உலகில் யாருமே வைத்திராதபடி சந்தோசமாக வாழ வைக்க வேண்டும். என் வீட்டின் மகாராணி அவள்! என் இதயத்தின் ராணி!


அவனின் கற்பனைகள் விண்ணைத் தாண்டி சிறகு விரித்தது.


ஆனால் இளா ஒன்றை மறந்துவிட்டான். ஆணும் பெண்ணும் கொள்ளும் உண்மை நேசத்திற்குப் பெயர்தான் காதல். அங்கே இருவரும் ஒருவர் எனும்போது இருவருமே கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்! அதுதான் புரிதலின் தெரிதல்!


இங்கே இளா தானே ஒரு முடிவை எடுத்துவிட்டான். அதற்கு வதனி என்ன சொல்வாள் என்று யோசிக்க மறந்துவிட்டான்.


அனைத்தும் கைகூடிவிட்டது என்று துள்ளிக் குதிப்பவனுக்கு தெரியவில்லை வாழ்க்கைப் போராட்டமே இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறதென்று!

 
Status
Not open for further replies.
Top