நெஞ்சம் பேசுதே! - கோபிகை - இதழ் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1

அதிகாலை வேளையில் பாத்திரங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள் ஆதர்ஷா. வீட்டில் யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. ‘அவர்கள் எழுந்து கொள்வதற்குள் பாத்திரங்களைத் தேய்த்து அலசிவிட்டு, குளித்துத் தேநீர் தயாரிக்கவேண்டும்’ என எண்ணியபடியே வேலையில் இறங்கினாள். அவள் கைபட்டு பாத்திரங்கள் பளிச்சிட்டன.

‘நீ தேய்க்கும் பாத்திரத்தில் முகம் பார்க்கலாம்’ என அம்மா அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறாள். நான்கு ஆண்டுகளின் முன் அம்மா இறந்ததும், அப்பா தனி ஆளாய் அவளையும் இரண்டு தங்கைகளையும் வளர்த்து ஆளாக்கியதும், “இவர் தான், நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை" எனச்சொன்ன போது மறுத்து ஏதும் பேசமுடியாது அந்த வீட்டின் கடைக்குட்டியான கானகனைத் திருமணம் செய்து இந்த வீட்டில் அடி எடுத்துவைத்ததும் கனவு போல இருந்தது.அவளுக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், கணவன் கானகனோ, ஒரு நாள் கூட அவளோடு வெளியே வந்ததோ அரைமணிநேரம் கூட அமர்ந்திருந்து அவளிடம் பேசியதோ இல்லை. இல்லற வாழ்க்கையின் துயரத்தில் மனம் பாறாங்கல்லாய்க் கனத்தபோதும் அவள் மௌனமாய் இருக்கவே பழகிக்கொண்டாள். காரணம் இல்லாமல் இல்லை, எப்போதும் கண்முன்னால் வருவது அவளது பிறந்தவீடு தான். 'அப்பா பாவம், என் வாழ்க்கை போனாப் போகுது, மற்றவா்கள் சந்தோசமா இருந்தா போதும்' என நினைத்துக்கொள்வாள்.

விழிவழி வழிந்து கன்னங்களில் கோடிழுத்த விழிநீரைச் சுண்டியபடி கரியாய் கிடந்த பானையை எடுத்து அழுத்தித் தேய்க்கத் தொடங்கினாள்.

“என்னம்மா, இவ்வளவு காலையிலேயே எழந்திட்டாய்?” கேட்டபடியே வந்த மாமியாருக்கு , புன்னகையைப் பரிசாக்கியவள், “தூக்கம் வர இல்ல, இப்பவே தொடங்கினாத் தானே நேரம் சரியா வரும், அதுதான்..." இழுத்தாள்.

“கெட்டிக்காரிதான் போ” என்றபடியே “மருமகளா இந்த வீட்டில எல்லாரோட மனசிலயும் நல்லாவே இடம்பிடிச்சிட்டாய்” என்றார், அவர்.

'பிடிக்கவேண்டியவன் மனசில பிடிக்கவில்லையே, அந்த கைங்கர்யம் எனக்குத் தெரிய இல்லையே' மனசு தன்பாட்டில் முணுமுணுத்தது. வேலையில் கவனமாய் இருப்பதுபோலக் காட்டிக்கொண்டு மௌனமானாள்.

நேரம் விரைந்தது. அன்றைய வேலைகளை முடித்து அனைவரையும் அனுப்பிவிட்டு, சற்று நேரம் அமர்ந்துகொண்டாள். அருகில் வந்த மாமியார், “என்னம்மா...ஆதர்ஷா, கானகன் உன்னட்ட நல்லாத்தானே பேசிப்பழகிறான்?" கேள்வியாய்க் கேட்டார்.

“ம்...ம்” தலையை ஆட்டிவைத்தாள்.

“கானகனுக்குச் சின்ன வயசில இருந்து அவனோட மாமா மகள் தீப்தி மேல விருப்பம் இருந்தது, ஆனா தீப்தி அவனை அப்படி நினைக்க இல்லை. அவா கல்யாணம் செய்து வெளிநாடு போய்ட்டா. அதுக்குப்பிறகு அவன் இப்பிடி யாரோடயும் ஒட்டாமத் தான் நடந்துகொள்றான், அவனுக்குள்ள இப்பிடி ஒர விரக்தி வருமெண்டு நாங்கள் நினைக்கவேயில்ல. கல்யாணம் பண்ணிவைச்சாச் சரியாயிடும் என்றுதான் அவசரமாக் கல்யாணம் பண்ணிவைச்சம், அதுவும் கோயில்ல வைச்சு உன்னைப் பாத்ததும் நீதான் அவனுக்குப் பொருத்தமானவள் என்று நினைச்சம், உங்கப்பாட்ட கேட்டு செய்துவைச்சிட்டம், அவன் உன்னோட நல்லாதானே பழகிறான்?”

என்ற மாமியாரிடம் உண்மையைச் சொல்லவோ, கணவனைக் காட்டிக்கொடுக்கவோ அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் இவர்களின் அவசரத்தில் பரிதாபமாகிவிட்டதே அவளது வாழ்க்கை? மனதை மறைத்து, தலையைக் குனிந்தபடி, “இல்ல, அவர் நல்லாத்தான் நடக்கிறார்” என்றாள்.

“அப்பாடா...இது போதும்” எழுந்து நடந்தார் மாமியார்.

வாசலில் நிழலாடியதும் நிமிர்ந்து பார்த்தாள். கணவன் கானகன். அவசரமாய் எழுந்துகொண்டாள். அரைநேரத்துடன் வந்திருக்கிறான். உடம்பிற்கு ஏதாவது? அவளது பேதை மனம் அடித்துக்கொண்டது.

அவனது கையில் இரண்டு ஆடைப்பெட்டிகள் இருந்தன. தங்கையை அழைத்து ஒன்றைக் கொடுத்தவன், மற்றதை மனைவியிடம் கொடுக்க நீட்டிய போது ஆச்சரியத்தில் அப்படியே நின்றுவிட்டாள் ஆதர்ஷா.

“வாங்கிக் கொள்ளம்மா” மாமியாரின் வார்த்தைகளைக் கேட்டதும்தான் சுரணை வந்தது, அவளுக்கு. அவசரமாய் வாங்கிக்கொண்டாள்.

உடனே தன்னுடையதை விரித்துப் பார்த்த மைத்துனி வித்யா, “அண்ணி உங்களோடதைக் காட்டுங்க” என்றாள்.

விரித்துப்பார்த்ததும் “அண்ணி இந்தக்கலர் நல்ல எடுப்பா இருக்கு, இதை எனக்குத் தாங்க” என்றதும் “சரி” என்றபடியே கொடுத்துவிட்டாள்.

கணவன் அவசரமாய் உள்ளே சென்றதைக் கண்டு, தண்ணீர் எடுத்துக் கொண்டு பின்னால் சென்றாள்.

“வைச்சிட்டுப் போ!” கண்டிப்பாக வந்தது அவனது குரல். ‘என்னவாயிற்று இவருக்கு, ஏன் தான் இப்படி பாய்கிறாரோ?’ எண்ணியபடியே செம்பை வைத்துவிட்டு நகர்ந்தாள். அன்று இரவு வரை கானகன் வெளியே வரவேயில்லை. ராத்திரி உணவைக்கூட மறுத்துவிட்டான்.

தாங்கமுடியாதவளாய் அருகில் சென்ற ஆதர்ஷா,

“என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?” என்றாள்.

விருட்டென்று நிமிர்ந்து பார்த்தான். கண்களில் கோபக்கனல்.

“நீ பேசாத, உன்னால தான்” என்றான்.

“என்னாலயா?” அப்பாவியாய் விழிவிரித்தாள் மனைவி.

“நான் ...என்ன?" திக்கித்திணறிய மனைவியை முறைத்தபடியே, “பாக்காதடி, இப்பிடிப் பாத்து பாத்துத்தான், என்னை பைத்தியமாக்கிட்டே” என்றான்.

கணவன் சொன்னதன் பொருள் அவளுக்குப் புரியவேயில்லை.

“என்ன சொல்றீங்க?” இவள் பயத்துடன் பவ்யமாய் கேட்ட விதத்தில் அவனுக்கு கோபம் பறந்தது.

“அது சரி, நான் நல்லாதான் நடந்து கொள்றேன்னு அம்மாட்ட ஏன் பொய் சொன்னாய்?"

“ஓ...“ அதைக்கேட்டுவிட்டானா, மனதிற்குள் எண்ணியவள், “அது...வந்து...."

“என்னைக் காப்பாத்துறியா?”

“ம்ம்...ஏன் உங்களைக் காட்டிக்கொடுக்கோணும்?”

“உனக்கு என்னில கோபம் இல்லையா?”

“உண்மையைச் சொல்லவா? பொய் சொல்லவா?”

“உண்மை சொல்லு”

“கோபம் இருக்கு, ஆனா மத்தவங்களிட்ட காட்டிக் குடுக்கிற அளவுக்கு வெறுப்பு இல்ல”

“எனக்கு உன்னில என்ன கோபம் தெரியுமா?”

கண்களை உருட்டி உதட்டைச் சுழித்த மனைவியை வைத்தகண் வாங்காமல் பார்த்தவன், “நான் முதல் முதலா, உனக்காக எடுத்துவந்த ஷல்வாரை

ஏன் என்ர தங்கச்சிட்ட குடுத்தாய்?”

“அவ உங்க தங்கச்சி தானே? தங்கச்சி என்றா உங்களுக்கு உயிர் என்று மாமி சொன்னா”

“அதென்னவோ உண்மைதான், வித்யா மேல எனக்குக் கொள்ளை பாசம் தான், ஆனா அதுக்காக?

உனக்கு அது பிடிக்கலயா?”

“நல்லாப் பிடிச்சிருந்தது, அப்பிடியாவது உங்க மனசில இடம் பிடிச்சிடமாட்டேனான்னுதான்” ----

தன் மீதே கோபமாய் வந்தது கானகனுக்கு.

" அசடு, எனக்கு மற்றவேல இருக்கிற பாசமும் உன் மேல இருக்கிற பாசமும் ஒன்றாயிடுமா? நான் பேசாட்டி பாசமில்ல எண்டு அர்த்தமா? என்னோட பாதி மனசு உனக்கு, பாதி மனசுதான், இந்த வீட்ல இருக்கிற மற்றவே எல்லாருக்கும்”

வெட்கத்தில் சிவந்து போனாள் ஆதர்ஷா.

தன் காதுகளையே அவளால் நம்பமுடியவில்லை, இதற்காகவா சாப்பிடாமல் முகத்தைத் தூக்கிவைத்திருக்கிறான்,

“என்னை நிமிர்ந்து பார்!” அதட்டினான் கானகன்.

மெல்ல நிமிர்ந்தவளிடம், “நான் உனக்காக வாங்கிறது எல்லாம் உனக்கானது; அதை யாருக்குக் குடுத்தாலும் எனக்குக் கோபம் வரும், அது யாரா இருந்தாலும் சரி, இனிமே இப்பிடிச் செய்யாதே!” என்றான்.

தலையை ஆட்டிய மனைவியை பார்த்தவனுக்கு, மனம் வலித்தது. இவ்வளவு நாள் எவ்வளவு உதாசீனம் அவளிடம், அவளை வலிக்கவைத்தபோது புரியாதது, அவள் செய்த இந்தச் செயலில் புரிந்ததே,

மனைவியின் கரங்களைப் பற்றியபடி “ என்னை மன்னிச்சிடு!” என்றான்.

அப்போது கதவு தட்டப்பட விலகிக்கொண்டவன், தாயாரையும் தங்கையையும் கண்டதும் வியப்பாய் பார்த்தான்.

“அண்ணி இத நீங்களே போடுங்க!” என்றுவிட்டு “எனக்கு இதே மாதிரி வேற வாங்கிட்டு வா அண்ணா” என்றாள் வித்யா தமையனிடம்.

வியப்பாய் மாமியாரைப் பார்த்த ஆதர்ஷாவிற்கு பார்வையால் பதில் தந்தார் கானகனின் அன்னை.

சட்டென்று மனைவியைப் பார்த்தான் கானகன். ‘நான் எதுவும் சொல்லவில்லை' என்பது போல கலவரமாய் பார்த்த மனைவியைப் பார்வையாலேயே அமைத்திப்படுத்தினான்.

“ ரெண்டு பேரும் சாப்பிடவாங்க” சொல்லிவிட்டுச் சென்ற மாமியாரைப் பின்தொடர்ந்த மனைவியை பின்தொடர்ந்து அவளது கரம்பற்றி நடந்தான் கானகன்.

புரிதல்கள் இல்லாத இல்லறங்கள் தான் பிரிதலில் முடிந்துவிடுகிறது
.
 
#2
Super story. Last vasanam taching.
 
#3
அருமை
 
#4
Very nice
 
Top