முழுநாவல் நீயில்லாது வாழ்வேதடி!- முழுக்கதை

Status
Not open for further replies.

Rosei Kajan

Administrator
Staff member
#1
அத்தியாயம் 1.

கொழும்பு புறக்கோட்டையிலுள்ள தம் கடையிலிருந்து புறப்பட்டு, தெஹிவளையில் உள்ள தாய் வீட்டில் இரவுணவை முடித்துவிட்டு, அடுத்த தெருவிலுள்ள தம் வீடு திரும்பிய ரகுவை, வீட்டின் வெறுமை முகத்திலடித்தால் போல் வரவேற்றது!

இவன் திருமணம் முடித்த கையோடு, எவ்வளவோ தடுத்தும் கேட்காத இவன் தாய் சாரதா, தமக்கருகிலேயே ஒரு வீட்டை வாங்கி மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்து விட்டார் .

இனிமேலும், தன் ஆசைமகன் வாழ்வில் சிறு பிரச்சனையும் வரக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில்!

வேலை முடிந்து களைத்து வரும்போது, ஆவலாக காத்திருந்து வாயிலைத் திறக்கும் மனைவி இன்றில்லாதது, அவன் மனதுக்கு எதுவோ போலிருந்தது!

‘எவ்வளவுதான் கோபமிருந்தாலும் இப்படியா ஒருத்தி சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுப் போவாள்?’ மனைவியை மனதில் திட்டியவனால், என்னதான் முயன்றும் இதழில் படர்ந்த சிறு முறுவலை அடக்க முடியவில்லை.

‘‘ராட்ஷசி! என்ன மாதிரி என்னைப் போட்டு ஆட்டி வைக்கிறாள்!’’ வாய்விட்டே செல்லமாகத் திட்டியவன், எட்டு மாத திருமண வாழ்வில் இப்படி ஒருமுறை கூட அவளுடன் வெளிப்படையாகப் பேசியதில்லை!

ஏன், அப்படிப் பேச வேண்டுமென்று நினைத்து முயன்றதுமில்லை!

அவள் சமைக்கும் உணவை, அவள் செய்யும் உதவிகளை விரும்பி ஏற்பவனால், அவள் மனம் சந்தோசம் கொள்ளும் வகையில் ‘‘ நல்லாயிருக்கு..’’ என ஓர் வார்த்தை உதிர்க்க முடிவதில்லை!

பாராட்டுதலாக ஒரு பார்வை சிந்தினால், அவள் தன் தலையில் ஏறி அமர்ந்து அழிச்சாட்டியம் பண்ணிவிடுவாளோ என்ற கணக்கில், அதைக்கூட இதுவரை செய்ததில்லை!

உணவு பரிமாறும் போதே, ‘‘எப்படி இருக்கு? ருசியா இருக்கா?’’ என விடாது கேட்டால் மட்டும், ஒரு தலையசைப்பை பெருந்தன்மையாய் அள்ளி வழங்கிவிட்டு தொடர்ந்து சாப்பிடுவதில் முனைவான் இவன்.

பூர்வீகம் வேலணையாக இருந்தாலும், நீண்டநாட்களாக கொழும்பிலேயே வசிக்கும் சோமசுந்தரம் சாரதா தம்பதியினர் , சோமசுந்தரத்தின் தந்தை காலத்திலிருந்தே புடவை வியாபாரம் செய்து வருகின்றனர்.

யாழிலிருந்த தன் கடையை உயிர் நண்பனான நாதனிடம் ஒப்படைத்து விட்டு, பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் பொழுதே கொழும்புக்கு குடிபெயர்ந்திருந்தார் சோமசுந்தரம். அங்கே, புதிய செட்டித்தெருவில் ஒரு புடவைக்கடையைத் தொடக்கியவர், இன்று தம் மூத்தமகனால் அது மூன்றாகி நிற்பதைப் பார்க்கையில், பெருமையால் உள்ளம் நிறைந்து தான் போவார்.

இவர்களின் மூத்தமகன் ரகு, படிப்பை முடித்து விட்டுத் தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டான். அதுவரை தனியாளாக வியாபாரத்தைக் கவனித்து வந்த சோமசுந்தரத்துக்கு மகனின் வருகை மிகவும் உற்சாகமூட்டியது. அவனும் தந்தையின் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் வியாபாரத்தை மிகவும் திறமையாகவே நடத்தி வருகிறான்.

இவர்களின் அடுத்த மகள் ராஜி! வீட்டின் ஒரே பெண் வாரிசு! திருமணம் முடித்து கனடாவில் வசித்து வருகிறாள்.

வீட்டின் கடைக்குட்டி ரமேஷ்! பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் இறுதி வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறான்.

இயல்பிலேயே கொஞ்சம் இறுக்கமான சுபாவம் கொண்டவன் ரகு!

கலகலப்புக்கும் அவனுக்கும் நெருங்கிய நட்பென்று ஒருபோதும் இருந்ததில்லை!

அத்தோடு, வீட்டின் மூத்தவனாக பொறுப்புக்களும் அவனைச் சார்ந்தேயிருக்க, எப்பொழுதுமே வேலை, வீடு என்று அலைந்து திரிவான். அப்படியிருந்தவன், தன் முதல் திருமண முறிவுக்குப் பின் இன்னமும் இறுகி விட்டான்!

பெற்றோர் எத்தனையோ வரன்களைப் பார்த்து, அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஜாதகம் பார்த்து, அங்குமிங்கும் விசாரித்து, மிகவும் ஆசையாகத் தம்வீட்டு மருமகளாக முடிவு செய்யப்பட்டவள் தான், ரகுவிற்கு முதலில் பதிவுத் திருமணம் செய்திருந்த நீரஜா!

அவளது குணநலன்கள், குடும்ப விபரங்கள், சாதகப்பொருத்தம் என்பவற்றை உன்னிப்பாகப் பார்த்து, தமக்கு மிகவும் பொருத்தமான சம்பந்தம் என மனம் நிறைந்த சோமசுந்தரதுக்கு, தாம் தேர்வு செய்திருந்த பெண்ணின் மனதைப் புரிய முடியாமல் போய் விட்டதே!

அவளோ, ஏற்கனவே ஒருத்தனை உயிராகக் காதலித்துக் கொண்டிருந்தாள்! அப்படி காதலிக்கத் தெரிந்தவளுக்கும், அதைத் தன் பெற்றவர்களிடம் சொல்லுமளவுக்குத் துணிவு வரவில்லை.

தான் காதலித்தவன் வேற்று ஜாதி என்பதால் நிச்சயம் பெற்றவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என முடிவெடுத்தவள், அதை அவர்களிடமிருந்து மறைத்தே விட்டாள்.

அப்படி, காதலை மறைத்தாளே ஒழிய, தன் காதலை அவள் மறக்கவில்லை! மறக்க நினைக்கவுமில்லை!

அவளின் இச்செய்கையால், தாம் பெற்ற பெண்ணின் மனதை அறியாமலேயே பெரிய குடும்பத்தில் சம்பந்தம் கூடி வந்ததில் மகிழ்ந்திருந்தார்கள் நீரஜாவின் பெற்றோர்.

ரகு, தமக்கு மாப்பிள்ளையாக வரப்போவதில் மிகவும் மனநிறைவுடன் இருந்தார்கள் அவர்கள்.

எல்லோரது மகிழ்சியையும் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக, எந்தவிதத்திலும் தன்னுடன் சம்பந்தப்பட்டிராத ஒரு மனிதனுக்கு தான் எந்தளவில் தலைகுனிவை ஏற்படுத்தப் போகின்றோமெனச் சிறிதும் யோசியாது, யாரைப் பற்றியும் கவலைப்படாது, ‘என் காதல் மட்டுமே வாழ வேண்டும்! ஒருபோதும் யாருக்காகவும் என் காதலை விட்டுக் கொடுக்க முடியவே முடியாது!’ என நீரஜா எடுத்த முடிவு, திருமணத்திற்கு ஒருமாதம் இருக்கும் போது அவளைத் தன் காதலனுடன் செல்ல வைத்தது.

இதில், ரகுவின் பிழையென்று எதுவுமே இல்லாவிடினும், அவனால் இந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஒருத்தி, உன்னை நான் மணமுடிக்கிறேன் என்று சம்மதம் சொல்லி, பதிவுத்திருமணமும் நடந்து, திருமணநாள் அருகில் நெருங்குகையில் காதலனுடன் ஓடிப் போனால், ஊரறிய அவளைத் திருமணம் செய்ய இருந்தவன், தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வான்!?

ரகுவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது! அதைவிட, அவனுள்ளமோ ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது!

‘கடைசியில், ஒரு சிறுபெண்ணிடம் இப்படி ஏமாந்து போனோமே! வியாபாரத்தை இவ்வளவு திறம்பட நடத்தும் நாங்கள், வாழ்க்கைத் தெரிவில் இப்படிக் கோட்டை விட்டு விட்டோமே!’ என, நினைத்து நினைத்தே மிகவும் வெறுத்துப் போனான் அவன்.

தன்னில், தன் நிலையில் மிகவும் நம்பிக்கை கொண்டவனை இச்சம்பவம் அப்படியே அடித்து நொறுக்கி விட்டது!

‘என்ன நினைத்து என்னைப் பதிவுத்திருமணம் செய்திருப்பாள்? கேனயன் அகப்பட்டு விட்டான், ஒரு சாக்குக்கு செய்துவிட்டு மெல்ல கழன்று கொள்வோம் என்றா நினைத்துக் கொண்டாள்!?’ மனக்குமுறலில் வெந்து போனான்.

‘என்னைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் சிரித்திருப்பாள் அல்லவா! இன்னும் எத்தனை நாட்கள் நான் இருக்கப் போகிறேன், அதன்பின் உன் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்திருப்பாளே! ச்சே..’

வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாமல் மனதில் குமுறலுடன் குன்றினான் ரகு!

எக்காரணங்களாலும் சமாதானங்களாலும் அவன் மனதில் வாங்கிய அடிக்கு மருந்திட முடியவில்லை!

இச்சம்பவம் நடந்து முழுதாக இரு வருடங்கள், வீட்டினர் திருமணப்பேச்சை எடுக்கும் போதெல்லாம் எரிந்து விழுந்தான்! அசட்டையாகப் பார்த்து, ஒரே சொல்லில் மறுத்துச் சென்றான்! இறுதியாக, தாயின் கண்ணீரின் முன்னால் தோற்றுத் தளர்ந்தான்! விளைவு!? மீண்டும் தாய் பார்த்த பெண்ணையே மணக்கத் தலையாட்டினான்! அதுவும் அரை மனமாகவே தான்!

“இதுதான் சிந்துவின் புகைப்படம், பார் ராஜா; இதில் இருப்பதை விட நேரில் களையாகவும் கலகலப்பாகவும் இருக்கிறாள்!” மகன் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டானே என்கின்ற மகிழ்வில் மலர்வோடு தாய் நீட்டிய புகைப்படத்தைப் பார்க்காமலேயே, “அங்கே மேசையில் வையுங்கம்மா, பிறகு பார்க்கிறேன்!” எவ்வித உணர்வுமின்றிச் சொன்னவன், “ஆக, பெண்ணும் பார்த்து வைத்து விட்டுத்தான் என்னிடம் சம்மதம் கேட்கிறீங்களா?” தாயை முறைத்தான்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#2
“ராஜா! அப்படி எல்லாம் இல்லையடா; போன இடத்தில் பார்த்ததும் எனக்குப் பிடித்திருந்தது! உங்கள் எல்லோருக்கும் பிடித்தால் தானே! ஏன்யா?” உள்ளே போன குரலில் கேட்ட தாயைப் பார்த்தவன், “சும்மாதான் சொன்னேன்மா! உங்களுக்குப் பிடித்திருந்தால் சரிதான்!” அப்போதும் அசட்டையாகவே சொல்லிச் சென்றவனிற்கு, சிந்துவின் புகைப்படத்தைப் பார்க்கும் ஆவல் சிறிதும் வரவில்லை.

மாறாக, ‘ஒருத்தி நடித்து நடித்து என் தலையில் மிளகாய் அரைத்து விட்டுப் போய்விட்டாள்! இப்போது இன்னொருத்தியா!?’ என்றே மனதில் எண்ணிக்கொண்டான்.

மகனின் சம்மதம் கிடைத்ததும் துரிதமாகச் செயல்பட்டார் சாரதா. “பெண் பார்க்கப் போறோம்டா! நீயும் தயாராக இரு! பிறகு கடைசி நேரம் வேலையை என்று சாட்டுச் சொல்லக்கூடாது!”

மகிழ்வில் பறந்து திரிபவர் போகின்ற போக்கில் சொல்லிச் செல்ல, அவனோ ஒரேயடியாக மறுத்து விட்டான்.

“எனக்கு முக்கிய வேலை இருக்கும்மா! அங்கெல்லாம் வர முடியாது! நீங்களும் அப்பாவும் போய்விட்டு வாங்க!” சொன்னவனை முறைத்தாலும், திரும்பவும் திருமணம் வேண்டாமென்று முறுக்கிக் கொள்வானோ எனப்பயந்தார் சாராதா.

மகனுடன் மல்லுக் கட்டாது கணவரோடு யாழ் சென்று வந்தவர், புடவை எடுக்கும் சாக்கில் சிந்துவை கொழும்புக்கு வரவைத்தார்.

கோவிலில் வைத்துத்தான் முதன் முதல் சிந்துவைக் கண்டான் ரகு.

சிறிது தூரத்தில், தன் சித்தியுடன் வாயாடிக் கொண்டிருந்தவளை நோக்கிய சாரதா, “தம்பி, அதுதான்டா பெண்!” பெருமையாகச் சுட்டிக் காட்டினார்; அந்தளவுக்கு அவருக்கு சிந்துவை பிடித்திருந்தது.

தூரத்திலிருந்து அவளையே பார்த்துக்கொண்டு வந்தவனால், அருகில் சென்றதும் அவளைப் பார்க்க முடியவில்லை. காரணம், அவள் அவனை அப்பப்போ பார்த்த பார்வைகள்!

அவள் பார்வையிலிருந்து, ஏதோ கதைப்பதற்கு(பேசுவதற்கு) ஆசைப்படுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் நினைவில், நீரஜா மௌனமாக இருக்க இருக்க, தான் அவளைக் கதைக்க(பேச) வைக்க முயன்றதும், நீரஜாவை முதல் முதல் பெண் பார்த்ததும் தான் பளிச்சிட்டது!

நீரஜாவை பதிவுத்திருமணம் செய்தபின், வருங்கால மனைவி என்ற முறையிலும் உரிமையிலும் அவளுடன் தானாகவே அழைத்துக் கதைத்துக்கொள்வான் ரகு.

தான் நாற்பது சொற்கள் கதைத்தால், அவள் வாயிலிருந்து எண்ணி எண்ணி வார்த்தைகள் வருவதைப் பார்த்ததும், அதை வெட்கம் என்று தப்புக்கணக்கும் போட்டிருந்தான்.

‘‘நீர் மிகவும் அமைதி நீரஜா!’’ தாராளமான மனதுடன் நற்சான்றுப் பத்திரமும் வழங்கியிருந்தான். வெளியே அழைத்துச் செல்லக் கேட்கும் போதெல்லாம், அவளோ, தன் உடன் பிறப்புடன் ஒட்டிக்கொண்டு வருவதைப் பார்த்து, இவன் மனம் சுணங்கினால், இவன் தாய் சாரதாவோ பெருமையால் பொங்கிப் பூரித்துப் போனார்.

‘‘ஆஹா! இந்தக்காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?! நாம மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தம்பி! வீட்டில் பிள்ளையை மிகவும் அடக்கமாக வளர்த்து வைத்திருக்கிறார்கள்! கூச்ச சுபாவம் போல!’’ மனம் நிறைந்தவரோ, ‘இயற்கைக்கு முரணாக இருக்கிறதே!’ என, எண்ணாது விட்டு விட்டார்.

அப்படி, நீரஜா விடயத்தில் ஏமாந்திருந்தவனின் உள்ளம், தன் முன்னால் நிற்கும் சிந்துவை அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்க விளைந்தது யார் துர்ரதிஷ்டம்?

தன் வாழ்வில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் நினைவுகளின் படையெடுப்பு, அவன் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச இளக்கத்தையும் விடை கொடுத்தனுப்பியிருந்தது.

‘இவளுக்கு என் கதை எல்லாம் தெரியுமே! என்னை ஒரு இளிச்சவாயன் என்று நினைத்துக் கொள்வாள் போல!’ என நினைத்தவனால், அதன்பின் அங்கு நிற்கவே முடியாமலிருந்தது.

ஒரு பெண்ணிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டவன், அந்த வெறுப்பின் எச்சத்துடன் சிந்துவை அளவிட முயன்றான்.

‘ஏற்கனவே எத்தனை பட்டுவிட்டேன்! இனியொருதரம் ஏமாறுவேனா?’ அவன் மனம் முறுக்கிக்கொள்ள, ‘அம்மா, இந்தக்கல்யாணமே வேண்டாம்மா!’ வாய்விட்டுச் சொல்ல முயன்றவனால், தாயின் மகிழ்வையும் தந்தையின் நிறைவையும் பார்த்து வார்த்தைகள் எழவில்லை.

 

Rosei Kajan

Administrator
Staff member
#3
தன் திருமணம் தடைப்பட்டதில் தன்னைப் போன்றே தன் குடும்பமும் பாதிப்படைந்துள்ளதை நன்றாக அறிந்திருந்தவனால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால், எவ்வித உணர்வுகளுமின்றி, கடனே என்று தான் கல்யாணம் வரை வந்தான்.

கல்யாணத்தின் பொழுதோ, சிந்துவின் சிறுசிறு சீண்டல்களே அவள் சாதாரணமானவள் இல்லையென்பதை அவனுக்கு மிக நன்றாக உணர்த்திவிட்டிருந்தது.

“என்ன எப்ப பார்த்தாலும் அங்கேயும் இங்கேயும் பார்க்கிறீங்க?! என் முகத்தைப் பார்க்க அந்தளவுக்குக் கேவலமாகவா இருக்கு?” தாலி கட்டிய பின் ஒவ்வொருவராக வந்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கையில், கிடைத்த சிறு இடைவெளியில், திடீரென்று அழும் பாவனையில் கேட்டவளை இவன் திகைத்துப் பார்க்க, அவளோ குறும்பாகப் புன்னகைத்தாள்!

“எனக்கு மேக்கப் போட்ட ராகினி அக்கா, அதோ அங்கே தான் நிற்கிறார்! என் மேக்கப் சரியில்லை என்று நீங்க சொன்னதாகச் சொல்லி, கொடுத்த காசை திருப்பி வாங்குவோமா?” கண் சிமிட்டி இரகசியம் பேசியவளை, முதன் முதல் கொஞ்சம் ஆர்வமாகப் பார்க்க விளைந்தது அவன் மனம்!

கண்களில் எழுந்த ஆர்வத்தை மெல்ல அடக்கிக்கொண்டு திரும்பியவனை, “ரகு..” அடிக் குரலில் அழைத்தவள், “கல்யாணப் பெண் நானே வெட்கப்படவில்லை, நீங்க ஏன் இப்படி வெட்கப்படுகிறீங்க?” நேரடியாவே கேட்டு வைத்தாள்.

அப்படிக் கேட்டவளை நன்றாகத் திரும்பி முறைக்க முயன்றவனையும் மீறி, சிறு முறுவல் வந்திருந்து அவன் முகத்தில்!

அதுவே சிந்துவிற்குப் போதுமானதாக இருந்திருக்க வேண்டும். அதன்பின் அவனைப் பேச வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுபவள் போல, அவள் செயல்கள் ஒவ்வொன்றும் அமைந்திருந்தது!

அன்று, முதன்முதல் மனைவியைத் தனிமையில் சந்திக்கையில், பளிச்சிட்ட நிலாவதனத்தில் செஞ்சாந்துக் கும்குமம் துலங்க, காலையில் தான் அணிவித்திருந்த பொன்தாலி கழுத்தில் மினுமினுங்க, தளிர் மங்கையாக நின்றவளை காண்கையில், ‘இவள் என் மனைவி! எனக்கே எனக்கானவள்!’ என்ற உரிமையுணர்வு சட்டென்று அவன் மனதில் எழுந்தது!

அதோடு சேர்ந்து, மன இறுக்கங்களால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்த அவன் புலன்களோ மெல்ல மெல்ல விடுபடத் தொடங்கின! அங்கே, மனதிற்கும், அதில் அடைந்திருந்த கடந்தகால கசப்பான நினைவுகளிற்கும், ஐம்புலன்களிற்குமான தொடர்புகள் முற்றாக அறுபட, அவன் தன் மனையாளுடன் இல்லறத்தில் கலந்து விட்டான்.

கணவன் பற்றி முழுமையாக மாமியாரிடம் இருந்து அறிந்திருந்த சிந்துவோ, தன்னை நாடிய கணவனை முழுமனதுடனேயே அரவணைத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையில், தன் கைவளைக்குள் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் வதனத்தையே இமைக்க மறந்து பார்த்திருந்தவனுக்கு, நிச்சயம் வெறுப்பேதும் எழவில்லை; தனக்குச் சொந்தமானவள் என்கின்ற உரிமையுணர்வு அவன் நெஞ்சமெல்லாம் வியாபித்திருந்ததே உண்மை!

ஆனால், அவன் துர்ரதிஷ்டமோ அல்லது அவன் மனையாளின் போதாத காலமோ, சிந்துவின் முகத்தையே பார்த்திருந்தவனின் நினைவில் அழையாமலேயே நீரஜாக வந்து எட்டிப் பார்த்துச் சென்றாள்; அப்படியே விறைத்துப் போனான் ரகு.

அவள் நினைவு வந்ததும், அவள் தன்னைச் துச்சமாக நினைத்து ஒதுக்கியதை நினைத்துக்கொண்டவனுக்கு, தன் மனதிலிருந்ததை மனைவியிடம் வெளியே கொட்டி விட வேண்டுமென்ற எண்ணம் துளியும் வரவே இல்லை!

ஆனால், திருமணத்திற்கு முன் வருங்கால மனைவி என்று கைகாட்டப்பட்ட சிந்துவை தவிர்த்தவனால், மணமுடித்து வந்தபின் மனைவியைத் தவிர்க்க முடியவில்லை.

அவளும் ஒன்றும் விலகிச் செல்லவில்லையே! அதிகமாக உரிமை எடுத்து, அப்படியும் சொல்ல முடியாது, தனக்கான உரிமையைக் கைப்பற்றி, இவனை உண்டு இல்லை என்றல்லவா பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

இவனும் சிலநேரங்களில் மனம் விட்டு பேச நினைத்துப் பேசவும் செய்வான் தான். இறுதியில், அவையெல்லாம் பரிதாபகரமாக தர்க்கத்துக்கே வழி வகுத்தது!

இருவரும் வாய் திறந்தால் பேச்சு சுமுகமாகச் செல்வதைப் போலிருந்தாலும், இறுதியில் அது சண்டையில் தான் முடியும்.

இந்த எட்டுமாதங்களில் ஒரு மனைவியாக பல வேளைகளில் அவனைக் குளிர்விக்கும் சிந்து, அதேயளவிற்கு வார்த்தைகளால் அவனைச் சாடவும் மறப்பதில்லை.

இப்படியான சந்தர்ப்பங்களில் அவளின் இந்த சீறல்களின் காரணம் என்னவென்று ஆராய நினைக்காது, மனதில் மீண்டும் வலியாய் உணர்வான் அவன்! ‘‘மீண்டும் பிழை விட்டு விட்டேனா?’’ கலங்கித் தவிப்பான்!

ரகுவைப் பொறுத்த மட்டில் அவன் மனைவி சிந்து ஒரு புரியாத புதிர்தான்!

அன்றைய நாளின் அலுப்பு அகல, குளித்து விட்டு படுக்கையில் சாய்ந்தான் ரகு. திருமணத்தின் பின் முதல் முதல் மனைவியின்றித் தனிமையில் இருக்கும் இந்நேரம், அவள் அருகிலிருக்கும் போது எழாத அவள் பற்றிய நினைவுகள் அனைத்தும், மீண்டும் மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு அவனுள் எழுந்தது!

அதை உதறி, அதிலிருந்து மீள முடியாதவனாக, மீள விரும்பாதவனாக அந்நினைவுகளில் ஆழ்ந்தான் அவன்.

சின்னச்சின்ன விடயங்களில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் சரி, வாக்குவாதம் என்றாலும் சரி, தன் மனைவியால் கோபத்தை தக்க வைத்திருக்க முடியாது என்பதையும் , தன்னுடன் பேசாதிருக்க முடியாதென்பதையும் இத்தனை நாட்களில் கண்டுணர்ந்திருந்தான் இவன்.

என்னதான் என்றாலும் சண்டை போட்ட சிறிது நேரத்திலேயே, தன்னிடம் வந்து இயல்பாய்ப் பேசும் , தன்னை வம்புக்கிழுக்கும் மனைவியை நினைத்தவன், ‘ நான் தான் பிழை விடுகிறேனோ?’ என, மனதுள் கேள்வி எழுப்பிக் குழம்பினான்.

‘அவள் என்னுடன் பழகுவது போல், என்னால் அவளுடன் இயல்பாய்ப் பழக முடியுதில்லையே!’ தன் இயலாமையை நினைத்து கழிவிரக்கத்தில் துடித்தான்! தன் மீதே அவனுக்கு வெறுப்பாக இருந்தது!

‘‘எல்லாம் அந்த நீரஜா புண்ணியம்! ஊமைக்கொட்டான் மாதிரி இருந்து என் வாழ்கையில் விளையாடி விட்டாள்!” வாய்விட்டே புலம்பியவன் , ‘‘என்னதான் என்றாலும், அன்று நான் சிந்துவோடு அப்படிக் கதைத்தது பிழைதான்! அது அவள் மனதை எவ்வளவு தாக்கியிருந்தால், ஊருக்குப் போவதை என்னிடம் சொல்லாது அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டுப் போயிருப்பாள்!’’ முணுமுணுத்துக் கொண்டவன், ‘அவளோடு கதைத்துப் பார்த்தால் என்ன?’ என நினைத்து, கைபேசியை எடுத்தான் .

‘நான் அன்று அப்படிக் கதைத்தபின் என் முகம் பார்த்தே கதைக்காதவள், ஊருக்குப் போய் வருகிறேன் என்று சொல்லிச் செல்லாதவள், இப்போது மட்டும் கதைப்பாளா?’ என, மனம் முரண்டினாலும், ‘எப்போதுமே வலிய வந்து கதைப்பது அவள் தானே! இந்த முறை சரி நாமே கதைப்போமே!’ என எண்ணியவாறே அவளுக்கு அழைத்தான்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#4
அத்தியாயம் 2.

‘‘ஹேய்! மெல்ல மெல்ல...பார்த்து!’’ ஓரெட்டு விரைந்து, ஓடி வந்த வேகத்தில் விழப்போன குழந்தையை அணைத்துத் தூக்கினாள் சிந்து.

குழந்தையோ, அறியாதவர் தூக்கியதும் மிரண்டு திமிறினாள்! கொழுகொழுவென்றிருந்த குழந்தையை இரசித்தவாறே சிநேகமாய் முறுவலித்து, ‘‘குட்டிப் பாப்பா, ஏன் இப்படி ஓடி வந்தீங்க? டொம்மா போட்டிருப்பீங்களே!’’ என்றவளை, மிரட்சி விலகாது நோக்கினாள் குழந்தை!

அப்போது, அவர்களை அணுகிய முதிய பெண்மணியொருவர், ‘‘சொன்னால் கேட்கவே மாட்டேன்கிறாள்மா! நீங்க பிடித்திருக்கவில்லை என்றால் விழுந்து அடிபட்டிருக்கும்!’’ என்றவாறே, குழந்தையை வாங்கிக்கொண்டவர், ‘‘இவள் என் பேத்திம்மா! இவளுக்கு தங்கச்சி பிறந்திருக்கிறாள், அதுதான் பார்க்க வந்தோம்; இரண்டு நாட்களாக, இவளைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுதம்மா! ஹப்பா...அதைச் சொல்லி மாளாது!’’ அயர்ச்சியாகத் தொடர்ந்தார்.

‘‘வாழ்த்துக்கள்மா! சின்னப்பிள்ளை தானே, துடுதுடுப்பாகத் தான் இருப்பார்கள்!’’ என முறுவலித்தவளிடம் நன்றி கூறியவாறே அவர் அப்பால் நகர, மிகவும் பரபரப்பாக காணப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு வாயிலால் வெளியேறினாள் சிந்து.

கொழும்பிலிருந்து இரவிரவாகப் பயணம் செய்து யாழ் வந்திருந்தாள் இவள்.

பயணக்களைப்பு முழுமையாக அக்கிரமித்திருந்தாலும், சோபை குறையாத வதனத்தோடு, அடங்கமறுத்துப் பறந்த சிகையை ஒற்றைக் கரத்தால் ஒதுக்கியபடியே, பயணப்பையையும் உருட்டிக்கொண்டு அருகிலிருந்த பேரூந்துத்தரிப்பில் சென்று நின்றவள், அச்சுற்றுப்புறத்தை விழிகாளால் துளாவினாள்.

காலைப் பொழுதில், சுளீரென்று அடிக்கும் வெயில்! சர் சர்ரென்று விரைந்து செல்லும் வாகனங்கள்! துவிச்சக்கர வண்டிகளில் விரையும் மக்கள்! இவர்களுக்கு கொஞ்சமும் குறையாத அளவில் பாதசாரிகள்!

இப்படி, ‘யாழ் ஆஸ்பத்திரி வீதி’ உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

பேரூந்துக்காக காத்து நின்றவளின் மனம் சுழன்றடிக்கும் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் குழம்பிக் கிடந்தாலும், அவற்றைப் புறம்தள்ளி, அவள் சிந்தை முழுவதும் தன் சித்தியையே சுற்றி வந்தது.

‘இம்முறை எப்படியும் சித்தியை கொழும்புக்கே அழைத்துச் சென்றுவிட வேண்டும்! தனியே இருப்பதால் அவர் தன்னை ஒழுங்காகக் கவனிப்பதில்லை!’ என நினைத்தவள், தனக்குரிய பேரூந்து வரவே அதில் ஏறி, ‘ஓல்ட் பார்க்’ சந்தியில் பேரூந்தை விட்டிறங்கி , ஐந்து நிமிட நடையில் பிரதான வீதியிலிருந்த தம் வீட்டைச் சென்றடைந்தாள்.

மூன்று படுக்கை அறைகளுடன் கூடிய அளவான அழகிய வீடு! இவர்கள் இருவருக்கும் அது ஒரு மாளிகை! தன் பன்னிரெண்டாவது வயதில் சித்தியுடன் வாழ வந்ததிலிருந்து, சிந்து தான் இம்மாளிகையின் இளவரசி! ! ஆமாம் அவள் சித்தி அவளை அப்படித்தான் பார்த்துக் கொண்டார்.

முன்புறத்தில், விலாட்டு மாமரத்துடன் கூடிய சிறு தோட்டமும் அத்தோட்டத்துக்கே அழகு சேர்க்கும் வகையில் ஒரு மல்லிகைப்பந்தலும்; பின்புறத்தில், பெரிய கிணறும் அதனைச் சுற்றி வாழை, பப்பாளி , நெல்லி மரங்களுமாக பசுமைக்குள் அமைந்திருந்தது அவள் வீடு!

‘ என்னதான் என்றாலும், இங்கிருக்கும் பசுமையும் அமைதியும் கொழும்பில் கிடைக்குமா?!’ நினைத்தவள், கைப்பையிலிருந்த வீட்டுத்திறப்பை எடுத்துக்கொண்டு, தோட்டத்தைச் சுற்றிப் பார்வையிட்டவாறே முன்வாயிலை நெருங்கினாள்.

இவள் கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததை தன்வீட்டு முற்றத்திலிருந்து எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, ‘‘ சிந்து, எப்போதம்மா வந்தாய்?! சித்தியை போய்ப் பார்த்தாயா? நானும் இன்று மதியம் தான் போகலாமென்று இருக்கிறேன்!’’ என்றவர், அவளைப் பேச அனுமதியாது, ‘‘தம்பி வரவில்லையாம்மா? எப்படிப் போகுது கொழும்பு வாழ்க்கை? தம்பி வீட்டுக்காரர்கள் எல்லோரும் உன்னில் பாசமாக இருக்கிறார்களா?’’ தனக்கேயுரிய விதத்தில், விடாது கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

அவரை நோக்கி அழகாகப் புன்னகைத்தாள் சிந்து.

‘‘அப்படியே ஆஸ்பத்திரிக்கு போய்விட்டுத் தான் வருகிறேன் ஆன்ட்டி. இவர் வரவில்லை. சித்தி ஹாஸ்பிட்டலில் என்று கணேஷ் ஃபோன் பண்ணினதும் அவசரமாக இரவு பஸ்ஸில் கிளம்பிவிட்டேன்!’’ என்றவள்,

‘‘நாங்களும் நன்றாக இருக்கிறோம் ஆன்ட்டி. மாமி வீட்டாக்கள் எல்லோரும் அன்பாக நடந்து கொள்கிறார்கள்!’’ பொறுமையாகப் பதிலளித்தவாறே முன்வாயிலைத் திறந்தவள்,

‘‘ சித்தி இன்றைக்கு அங்குதான் இருக்க வேண்டுமாம்; மத்தியானச் சாப்பாடு செய்து கொண்டு போக வேண்டும் ஆன்ட்டி; பிறகு ஆறுதலாகக் கதைப்போமே!’’ முறுவல் மாறாது சொல்ல,

‘‘ஓ...அப்படியா?! சரி சரி... நீ போம்மா; உனக்கும் பயணம் செய்து வந்தது களைப்பாக இருக்கும், நாம ஆறுதலாகக் கதைப்போமே!’’ என்றவருக்கு தலையாட்டிக் கொண்டே வீட்டினுள் நுழைந்து கதவைச் சாத்தினாள் அவள்.

சிந்துவின் பெற்றவர்களுக்கு ஆண் ஒன்றும் , பெண் ஒன்றுமாக இரு பிள்ளைகள். சிந்துவின் தந்தை சொந்தமாக அச்சகம் நடத்தி வந்தார். பெரும் பணமாக அவர் கைகளில் புழங்காவிடினும் , அவர்கள் தேவைக்கு போதுமான வருமானம் அதிலிருந்து வந்து கொண்டிருந்தது.

இப்படியிருக்கையில் ஓர் நாள், கோர விபத்தொன்றில் தன் பெற்றவர்களையும் சகோதரனையும் பலி கொடுத்து, கதறித்துடித்தவாறு அநாதரவாக நின்று கொண்டிருந்தாள் சிந்து.

இதுவரை, பாசமான குருவிக் கூட்டில், பாதுகாப்பாக, உறவுகளின் கதகதப்போடு வாழ்ந்தவள், கண்ணிமைக்கும் பொழுதில் தனியாளாக்கப்பட்டாள்! எதிர்காலம் பற்றிய பயம், முற்றிலும் புதியதாய் அவளை ஆசையோடு ஆக்கிரமித்துக் கொண்டது! அதன் சுமைதாங்காது, மூச்சுமுட்டி செய்வதறியாது ஒற்றையாய் தவித்து நின்றாள் சிறுமி சிந்து!

எவ்வளவுதான் அவள் நிலையில் மனமிரங்கினாலும், வருந்தினாலும், வெளிநாடுகளில் வாழும் அவள் உறவுகளோ, உள்நாட்டில் வாழ்பவர்களோ , இளம்பிராயத்தில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் அவளைத் தங்களோடு அழைத்துச் செல்லவோ , அவள் பொறுப்பை ஏற்கவோ மிகவும் தயங்கினர்.

அத்தருணத்தில், திருமணத்தில் நாட்டமில்லாது ஆசிரியர் தொழிலுக்கே தன்னை அர்ப்பணித்திருந்த அவளின் ஒன்றுவிட்ட சித்தி லக்ஷ்மி, தனித்துத் தவித்து நின்றவளின் பொறுப்புக்களைத் தனதாக்கிக்கொள்ள முன்வந்தார்.

ஆசிரியர் தொழில்மீது மட்டுமே அளவில்லாக் காதல் கொண்டு, அதுவரை தனிமையில் வாழ்ந்து வந்த அந்நல்ல உள்ளம், தன் வாழ்வின் ஆதாரமாய், துணையாய் அவளை அரவணைத்துக் கொண்டது. அதோடு, யாருடைய தயவுமின்றிச் சொந்த உழைப்பில் அவளைப் படிப்பித்து, ஆசிரியர் பயிற்ச்சிக்கும் அனுப்பி, தன்னைப் போலவே ஆசிரியராக்கினார் லக்ஷ்மி.

தன்னிடம் வந்த நாளிலிருந்து, மறைந்த குடும்பத்து நினைவுகளையும் துயரையும் அவளிடமிருந்து மறக்க வைக்க முடியாவிடினும், வேறெந்த வகையிலும் ‘நான் யாருமற்றவள்!’ என அவள் உணராத வகையில், தாயாய்த் தந்தையாய், உற்ற தோழியாய் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டார் லக்ஷ்மி.

ஆசிரியர் பயிற்சியை முடித்த கையோடு, வீட்டிற்கருகிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினாள் சிந்து.

 

Rosei Kajan

Administrator
Staff member
#5
பன்னிரண்டு வயதில் சிறுமியாய் தன்னிடம் வந்தவள், அழகிய இளம்பெண்ணாக மலர்ந்து நிற்பதைப் பார்க்கையில், பெற்றவள் போல பாசத்தில் நெகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து போகும் லக்ஷ்மிக்கு!

அதுவும், என்ன தான் வாயாடியாக இருந்தாலும், அவளது பொறுப்பான செய்கைகளும், நற்குணநலன்களும் பழகுபவர்களை அவளிடம் ஒட்டிக்கொள்ள வைத்துவிடும்!

நாட்கள் செல்லச் செல்ல, வளர்ந்த பெண்ணை வீட்டில் வைத்திருப்போர் எல்லோருக்கும் வரும் கவலை தான் லக்ஷ்மியையும் ஆட்டிப் படைத்தது!

தன்னைப் போலவே திருமண வாழ்விலிருந்து அவளை விலக்க நினைக்காத லக்ஷ்மி, மும்மரமாக வரன் வேட்டையில் இறங்கியவர், அதன் பின்னரே அதிலுள்ள கஷ்டங்கள் புரிய, முழி பிதுங்கிப் போனார்.

திருமணம் என்பதைத் தனியே, அழகோ, படிப்போ, அல்லது குணநலன்களோ தீர்மானிப்பதில்லையே! குறைவற்ற தனமும் இருப்பின், பெண்ணின் திருமணத்தை ஓரளவுக்குக் கஷ்டமின்றி நடத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டல்லவா?!

லக்ஷிமியைப் பொறுத்த மட்டில், பணமென்று பெரிதாக இருக்கவில்லை. இந்த வீடும், அவர் தொழிலும், சொற்ப நகைகளுமே அவரின் சொத்தாக இருந்தது!

பல வரன்கள் வந்தும், இறுதியில் ஒவ்வொன்றும் இழுபறியில் முற்றுப் பெறாமல் செல்லச் செல்ல, லக்ஷ்மியின் மனதைப் பயம் தனதாக்கத் தொடங்கியது! ‘எனக்குப் பிறகு இவளுக்கு யார்?’ கலங்கினார் லக்ஷ்மி! வயதுடன் சேர்ந்து சின்னச் சின்னதாக நோய்களும் தொட்டுப் பார்க்க, அவர் பயமும் கவலையும் அதிகரித்துக் கொண்டே சென்றது!

இச்சமயத்தில், அவரின் தூரத்து உறவான சாரதா, திருமணமொன்றிற்காக கொழும்பிலிருந்து யாழ் வந்தவர், திருமண வீட்டில் கலகலப்புடன் வளைய வந்த சிந்துவை கண்டதும், “பிள்ள, நீர் லக்ஷ்மியின் பெண் தானே?” சந்தேகமாகவே வினவினார்.

“ஆமாம் ஆன்ட்டி, அதோ உங்களுக்குப் பின்னால் கடைசியில் இருக்கிறார் சித்தி!” மணப்பெண்ணின் தங்கை அவளது தோழி என்பதால், வேலையாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தவள், லக்ஷ்மியை காட்டிவிட்டு அகன்று விட்டாள்.

அதன் பிறகோ, சிந்துவையே சுற்றிச் சுற்றி வந்தது சாரதாவின் விழிகள்! முடிவில், மனதிற்கு மிகவும் திருப்தியாக இருக்கவே லக்ஷ்மியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

திருமணங்களில் இளம்பெண்களுக்கு தகுந்த வரன்கள் கூடிவருவது இயல்பு தானே! அவ்வகையில், சாரதாவின் விருப்பத்தை மிகவும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் லக்ஷ்மி.

“உங்க மூத்தமகன் ரகுவிற்கு சிந்துவை கொடுக்க எனக்கு பூரண சம்மதம் அண்ணி. என்றாலும், ஒருதரம் பிள்ளைகளிடமும் விருப்பத்தைக் கேட்டு விடுவோமே!” தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.

“அதற்கென்ன லக்ஷ்மி, நீர் சிந்துவிடம் அவள் விருப்பத்தைக் கேளும்; ரகுவின் புகைப்படம் அனுப்பி விடுகிறேன்; நானும் வீட்டில் கதைத்து விட்டு மிகுதி வேலைகளைப் பார்ப்போம்!” என்றவர், போகும் பொழுது சிந்துவின் புகைப்படத்தையும் வாங்கிச் சென்றிருந்தார்.

வசதியிலும் பையனின் பழக்க வழக்கத்திலும் , ஏன் அவர்கள் குடும்பத்திலேயும் எதுவித பிரச்சனைகளும் இல்லாதவர்கள் என்பதை நன்கறிந்த லக்ஷ்மிக்கு, மாப்பிள்ளை ரகு , ஏற்கனவே திருமணப்பதிவு செய்து ஒருவருடத்தில் விவாகரத்துப் பெற்றிருந்ததெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!

சிந்துவிடம், மாப்பிள்ளையைப் பற்றி மிக்க மகிழ்வும் நிறைவுமாக மறைக்காது சொல்லி, அவன் புகைப்படத்தையும் கொடுத்துவிட்டு, “உனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார்மா! சாரதா அண்ணியும் மிகவும் நல்லவர். அந்தக் குடும்பத்தில் சந்தோசமாக வாழ்வாய் என்ற முழுநம்பிக்கை எனக்கிருக்கு! அதை விட வேறென்ன வேண்டும் சொல்லு!” தன் பூரண சம்மதத்தையும் அவளிடம் வெளிப்படுத்தி விட்டார் லக்ஷ்மி.

லக்ஷ்மி மிகவும் தீவிரமாக வரன் பார்ப்பதையும், “ஒன்றும் பொருந்தி வருகுதில்லையே!” என்று கவலைப்படுவதையும் பார்த்து, “இப்போ என்ன அவசரம் சித்தி? முதல் எனக்கென்ன வயது போய்விட்டதா? அதோடு, எனக்கென்று இனி ஒருத்தர் பிறந்தா வரப்போகிறார்? என்னை கட்டப் போகும் அந்த லக்கி ஃபெல்லோ எங்கேயோ ஒரு இடத்தில் இருப்பார்; நேரகாலம் கனிந்து வரும் போது எல்லாம் தானாகவே நடக்கும் சித்தி; கவலையை விடுங்க!”

தன் சுபாவத்தின் படி சொல்லித் திரிந்தவள், இன்றோ, அவர் இவ்வளவு நம்பிக்கையுடன் நீட்டிய ரகுவின் புகைப்படத்தை மெல்ல வாங்கிக்கொண்டே, அவரைத் தயக்கமாக ஏறிட்டாள்.

“அப்போ, உங்களுக்கு...உங்களுக்கு பிடித்திருக்கா சித்தி?” கேட்டவளுக்கு, ரகு விவாகரத்துப் பெற்றவன் என்பதை, சட்டென்று கேட்கையில் அதிர்ச்சியாக இருந்தது.

‘இரண்டாம் தாரமாகவா?’ மனம், அதே அதிர்வுடன் நினைத்துக் கொண்டது.

‘சித்திக்கு நல்ல விருப்பம் போல் உள்ளதே!’ தொடர்ந்து எண்ணியவளால், சித்தியின் சந்தோஷத்தை, “இரண்டாம் தாரமென்றால் முடியாது!” எனக் கூறிக் குலைக்கும் துணிவு வரவில்லை.

பெரிதாக திருமணக் கனவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், இரண்டாம் தாரமாக கட்ட வேண்டி வருமென கொஞ்சமும் எண்ணியிருக்கவில்லை அவள்.

என்னதான் மனதில் குழம்பினாலும் இறுதியில், அநாதரவாகத் தனித்து நிற்கையில் தன்னை அரவணைத்து இவ்வளவுக்கு பார்த்துக் கொண்டவரை, எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்த மனம் இடம் கொடாததால், “உங்களுக்குப் பிடித்திருந்தால் சரி சித்தி! உங்களை விட வேறு யார் எனக்கு நல்லதைச் செய்வார்கள்!” சொல்லி நகர்ந்தவளை, கரம் பற்றி நிறுத்தினார் லக்ஷ்மி.

அவள் வதனம் வெளிப்படுத்திய குழப்பத்தில் மனதைப் படித்தவர், “இங்கப்பாரும்மா, இப்படியொரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட, அந்தப் பெண்ணுக்கு கொடுத்து வைக்கவில்லை!” என்று தொடங்கி, ரகுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல சொல்ல, தன் மனக் குழப்பங்கள் நீங்கி விருப்பமாகவே கல்யாணத்திற்கு சம்மதித்தாள் சிந்து.

திருமணத்தின்பின் கொழும்பு சென்றவள் , எட்டு மாதங்களின் பின், இப்போதுதான் தன் சித்தியின் சுகயீனம் காரணமாக மீண்டும் யாழ் வந்திருக்கிறாள் .

இடையில் சிலதடவைகள் அவள் சித்தி கொழும்பு சென்று வந்திருந்தாலும், அவர்கள் எவ்வளவோ வேண்டிக்கேட்டும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ள சம்மதிக்கவில்லை.வீட்டினுள் சென்ற சிந்து, பயண அலுப்புத் தீர நன்றாகக் குளித்துவிட்டு, ‘சித்திக்கு பகல் சாப்பாடு கொண்டு போக வேண்டுமே!’ நினைத்தவாறே சமையலைத் தொடங்கினாள்.

சமைத்து முடிய, காலையிலும் உண்ணாத காலி வயிறு அடம் பிடித்துக் கத்தவே, சாப்பிடுவோம் என்று தட்டில் பரிமாறிக்கொண்டு அமர்ந்தவளின் நினைவுகளோ, தன்னவனைக் குறிவைத்து கொழும்பை நோக்கி விரைந்தோடியது.

தினமும் மதிய உணவைத் தயாரித்து ‘ஹாட்பாக்’கில் கொடுத்து விடுவது இவள் வழக்கம்! அப்படிக் கொடுப்பதை தவறாது எடுத்துச் செல்லும் அவள் கணவனோ, அவ்வுணவைப் பற்றி ஒத்த வார்த்தை பேசுவதில்லை என்றாலும், இவள் சமையலை விரும்பியே உண்பான் என்பது, ரகுவின் மனதுக்கு எப்படித் தெரியுமோ, அவ்வாறே அவன் மனைவிக்கும் தெரியும்.

‘இன்றைக்கு என்ன சாப்பிடுவார்? மாமி செய்து கொடுத்து விடுவாரோ? அல்லது, கடைச்சாப்பாடு தானோ?’ இப்படி, தன் மணாளனின் நினைவுகளுடனேயே உண்டு முடித்து, சித்திக்கான உணவையும், அவருக்கு தேவைப்படும் சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு வைத்தியசாலையை நோக்கிப் புறபட்டாள் சிந்து .

“ஹப்பா! எட்டு மாதங்களாச்சு சைக்கில் ஓடி!’’ வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே வேகமாகச் சைக்கிளை மிதித்தாலும், அதைவிட வேகமாகத் தன் மணவாழ்வையும் , மணாளனையும் நினைக்கத் தொடங்கியது அவள் மனம் !
 

Rosei Kajan

Administrator
Staff member
#6
“முழுமனதுடன் தானே சம்மதம் சொல்கிறாய் சிந்து? நிச்சயமாக நான் உன்னைக் கட்டாயப்படுத்த இல்லையம்மா! நல்ல சம்பந்தம் என்று தான் சொன்னேன்!” மீண்டும் மீண்டும் கேட்டு, ஐயமறத் தெளிவாக்க விரும்பினார் லக்ஷ்மி.

“ஹைய்யோ சித்தி, எனக்கு உண்மையாகவே சம்மதம்! நீங்க மேலே ஆக வேண்டியதை உங்க விருப்பப்படியே பாருங்க!” மலர்வாகவே சொல்லி விட்டாள் இவள்.

“சிந்துவிற்கும் சம்மதம் அண்ணி, தம்பி என்ன சொல்கிறார்?” தாமதியாமல் சாரதாவை தொடர்பு கொண்டு வினவினார் லக்ஷ்மி.

அதன்பின், சாரதா தன் கணவருடன் யாழ் வந்திருந்தார். “முக்கிய வேலையிருப்பதால் ரகுவால் வரமுடியவில்லை!” என்ற சாரதா, திருமணத்துக்கு நாளைக் குறித்தவர்,‘‘புடவைகள், நகைகளை கொழும்பிலேயே வாங்கிக் கொள்ளலாம் லக்ஷ்மி! நீங்களும் எங்களோடு வாருங்களேன். அப்படி இல்லையென்றாலும் வசதிப்படும் போது ஒரு தரம் வந்து போங்க!’’ அன்பாக வரவேற்றார்!

‘‘அதுவும் சரிதான்! அடுத்த கிழமை வாக்கில் வரப் பார்க்கிறேன்!’’ என்ற லக்ஷ்மி, சொன்னவாறே சிந்துவையும் அழைத்துக்கொண்டு கொழும்பு சென்றிருந்தார்.

அப்படிச் சென்ற போதுதான் ரகுவை முதன் முதல் சந்தித்தாள் இவள்! அதற்குமுன் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும், நேரில் பார்த்ததும் அவனை மிகவும் பிடித்து விட்டது அவளுக்கு! அவனும் பார்ப்பதற்கு முசுடு போல் இறுக்கமாக இருந்தாலும், கண்ணுக்கு நிறைவாக, களையாகத் தான் இருந்தான்.

‘இவருக்கு என்னைப் பிடித்திருக்கா?’ அவனிடமிருந்து நேரடியாக அறியும் ஆவல் இவள் உள்ளத்தில் தத்தளித்தது!

அவனோ, ஓர் கடைக்கண் பார்வையில் கூட அதை உணர்த்தவில்லை!

அவன் மனதை அனுமானிக்க முடியாதிருக்கவே, ‘அட... பிடிக்காமல் யாராவது கல்யாணதுக்குச் சம்மதம் சொல்வார்களா?!’ என நினைத்து, தன் மனதை சமாதானம் செய்து கொண்டாலும், அவன் தன்னுடன் ஆவலாகக் கதைக்கவில்லையே என, அடிமனதின் ஏற்பட்ட இலேசான சுணக்கத்தை அவளால் போக்க முடியவில்லை!

அவனுடன் கதைக்கும் ஆவல் எழுந்தாலும், பட்டுக்கத்தரித்தது போல நல விசரிப்புகளுடன் நிறுத்திக் கொண்டவனுடன் பேச்சை வளர்க்க விரும்பாது, இவளும் அமைதியாகவே வந்து விட்டாள்.

‘‘என்ன மாதிரி அருமையான மரியாதை தெரிந்த பிள்ளை! தேவையில்லாத அலட்டல்கள் இல்லை! இந்தக் காலத்தில் ஒன்றுமே தெரியவில்லையென்றாலும் என்ன மாதிரி அலட்டிக் கொள்வார்கள்! ஆனால், மாப்பிள்ளை அப்படியெல்லாம் இல்லை! நீ கொடுத்து வைத்தனி ராஜாத்தி!’’ இவளின் கன்னம் வருடி, தன் மகிழ்வை வெளிப்படுத்தினார் லக்ஷ்மி.

அதன் பின்னரும், தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான் என அவளுள்ளத்தில் எழுந்த ஆவலையும், ‘‘இந்த வேலைகளுக்கெல்லாம் நாங்க ஆட்களில்லை!’’ என்ற கணக்கில், அழித்து விட்டான் ரகு.

‘ஆங்! சரிதான் போய்யா! கல்யாணம் முடிந்த கையோடு வாய்விட்டுச் சிரிக்கவும், மூச்சுவிடாமல் கதைக்கவும் சொல்லித் தரவில்லை என்றால் நான் சிந்து இல்லையாக்கும்!’ என, தன்னுள் சபதமே எடுத்துக் கொண்டாள் சிந்து; அது மிகவும் இலகுவான காரியம் என்றெண்ணி!

அதற்கு முதற்படியாக, திருமணத்திலும் வரவேற்பிலும் கணவனின் அமைதியைப் பார்த்து, அவனைப் பேசவைக்கும் முயற்சியில் இறங்கினாள்.

இயல்பிலேயே மிகவும் துடுக்குத்தனமும், கொஞ்சூசூசூசூண்டு வாயாடியுமானவள் என்பதால், ‘‘அட... நானே கல்யாணப்பெண் இந்தப் பேச்சு பேசுகிறேன்! நீங்க ஏன் இப்படி அமைதியாக இருக்கிறீங்க?’’ அவனைப் பார்த்து முணுமுணுக்க, விழிகளில் வந்து போன அதிர்ச்சியுடன், மௌனம் கலையாது, சிக்கனமாக ஒரு முறுவலை அள்ளிக்கொடுத்தான் மாப்பிள்ளை ரகு.

அன்றிலிருந்து, அவன் முகம் திருப்பல்களையும் முறைப்பையும் அசட்டையாகத் தள்ளி, எவ்வளவோ முயன்றும் அவள் அடைந்தது என்னவோ தோல்விதான்!

ஆம்! இந்த எட்டு மாதங்களில், தான் மேற்கொண்ட சபதத்தில் ஒரு சிறுபடி முன்னேற முடியவில்லை அவளால்! அவன் மௌனம் சாதிக்கச் சாதிக்க, இவள் பேச்சு வளர்ந்து கொண்டே போனது தான் மிச்சம்!

பல வேளைகளில் மிகவும் நெருங்கி வருவது போலிருந்தாலும், அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை அறிந்துகொள்ள மிகவும் கஷ்டப்பட்டுப் போவாள் இவள்.

சிந்து என்பவள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும்! தன்னுடன் வாழ்நாள் முழுதும் பங்கெடுத்துக் கொள்ளப் போகிறவனும் அப்படியே இருக்காவிடினும், கொஞ்சமே கொஞ்சமென்றாலும் திறந்த மனமாய் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள் அவள்.

அது தப்பா? அவள் எதிர்பார்ப்புக்கு நடந்தது தான் என்ன?

கடந்தவைகளின் நினைவுகளோடு சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவள், ‘‘முசுடு முசுடு! எப்பப்பாரு உம்மென்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, உம்மணாம் மூஞ்சி! அப்படி இருக்கும் போது தான் பெரிய அழகன் என்ற நினைப்போ?! கண்ணாடியே பார்க்காதா இந்த மனிஷன்!’’ வாய்விட்டே திட்டிக் கொண்டாள்.

‘‘அட! வாயைத் திறந்து சிரிப்பது இருக்கட்டும்; ஒரு வார்த்தையோடு இன்னொன்றைச் சேர்த்துக் கதைத்தால், அவர் வாயில் சேர்த்து வைத்திருக்கும் சொத்தெல்லாம் வெளியே கொட்டி விடுமாக்கும்!’’ என, மிக மிக அன்பாகத் தன் கணவனை போற்றிக்கொண்டே சைக்கிளை இறுக்கி மிதித்தாள்.

திருமணமான நாளிலிருந்து, எந்நேரமும் சண்டைகளும் வாக்குவாதங்களும் தான்!

அதற்கெல்லாம் முக்கிய காரணமே, கணவனைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றாலும் முடியாமல் அவள் அடையும் ஏமாற்றம் தான்!

அந்நேரங்களில், அவளுள்ளே சுறுசுறுவென எழும் கோப அலைகள், வார்த்தைகளைச் சிதற விட, சிறிதும் தயங்குவதில்லை!

அவனோ, காது கேளாதவன் போல் அமைதியாக இருப்பவன், பத்துக்கு ஒன்று என்ற கணக்கில் சரி வார்த்தைகளால் சுளீரென திருப்பி அடித்து விடுவான்.

‘அப்போ, என் மனம் அவரை ஏற்கவில்லையா? நேசிக்கவில்லையா?’ என, தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள், அந்த வேகத்திலேயே, ‘ ஏற்காமலா அவரோடு வாழ்கின்றேன்! நான் அவரை மனமார நேசிக்கிறேன்!’’ பதிலையும் சொல்லிக் கொண்டாள் .

‘ஆனால், என் அன்பையும் நேசத்தையும் அவர் புரிந்து கொள்ளவும் இல்லை! புரிய முனைவதும் இல்லை! என்னில் கொஞ்சமேனும் நேசமிருந்தால், என்னைப் பார்த்து அப்படிக் கேட்க முடிந்திருக்குமா?!’ இப்படி மனதில் வாக்குவாதம் நடத்தியபடியே வைத்தியசாலையை வந்தடைந்திருந்தாள் அவள்.

எதையுமே வெளிப்படையாகக் கதைத்துப் பழகுபவளால், கணவனின் மௌனத்தின் முன்னால் தன்னியல்பாக இருக்க முடியவில்லை! இதனால் பலவேளைகளில் மிகவும் தடுமாறிப் போவாள் இவள்.

வெவ்வேறு சுழலில் வளர்ந்த இருவரும், எவ்வித அறிமுகமோ பழக்கமோ இல்லாமல் ஒன்றிணைந்து வாழ்க்கையைத் தொடங்குகையில், அதைச் சுமுகமாகக் கொண்டு செல்ல, நிச்சயம் ஒருவர் ஒருவரை அறிதல் அவசியமாகின்றதே! இல்லையெனில், அம்மணவாழ்வு தான் இரசிக்குமா?!

ஆனால் இங்கோ, தம் மணவாழ்வின் ஆரம்பமே, ஒட்டுதல் இல்லாமல் அப்படியும் இப்படியுமாக மேலோட்டமானதாக காணப்படுவதில், தன் கணவனுக்கு எதுவும் பாதிப்பிருப்பதாகத் தெரியவில்லை இவளுக்கு!

இவளும் பல தடவைகள், ‘‘ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாத நேசத்துக்கு ஆயுள்தான் எவ்வளவு?!’’ தனக்குத்தானே கேட்டுப் பார்த்துக் கொள்கிறாள்.

‘இப்படியே போனால் இந்த மணவாழ்வு நிலைக்குமா? நீடிக்குமா?’ என்ற எண்ணமும் இவள் மனதை அலைகழிக்கத் தொடங்கியுள்ளது.

அந்தளவிற்கு கணவனின் அலட்சியம் அவளைப் பாதித்துள்ளது.
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
அத்தியாயம் 3.

‘‘சாப்பிடுங்கோ சித்தி!’’ உணவுத்தட்டை தன்முன் நீட்டியவளை பாசத்துடன் நோக்கினார் லக்ஷ்மி!

‘‘ நீ சாப்பிட்டியா ராஜாத்தி? என்னால் உனக்குத்தான் வீண் சிரமம்! இதெல்லாம் சின்ன விஷயம், உனக்குச் சொல்லத் தேவையில்லை என்று அப்பவே கணேஷிடம் சொன்னேன்; அவன் கேட்டால் தானே!’’

அலுத்துக்கொண்டே உணவுத்தட்டை வாங்கிக் கொண்டார்.

‘‘என்ன சித்தி நீங்க! எனக்குச் சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்வது? எனக்கு ஒன்று என்றால், பேசாமல் இருப்பீங்களா சொல்லுங்க பார்ப்போம்? அது மாதிரித் தான் இதுவும்!’’ அன்பும் கண்டிப்புமாகச் சொன்னவள்,

‘‘உண்மையாகவே கரைச்சல் எல்லாம் இல்லை சித்தி; இன்றைக்கு மட்டும்தான் இங்க இருக்க வேண்டுமாம்; நாளைக்கு வீட்டுக்குப் போய் விடலாம்; இப்ப சாப்பிடுங்க, மருந்து குடிக்க வேண்டும்.’’ என்றதும், அவரும் உணவை உண்ணத் தொடங்கினார் .

சாப்பிட்டபடியே அவளைப் பார்த்தவர், ‘‘அப்போம்மா, தம்பி கதைத்தவரா? அவரும் பாவம், நீ இல்லாமல் தனியாகக் கஷ்டப்படுவார்!’’ என்றதும் ஒருகணம் விழித்தவள், ‘‘ஹ்ம்..கதைத்தார் கதைத்தார்!” என்றவள்,

“நேற்றிரவு பஸ்சில் வரும் போது எடுத்தார்; எல்லோரும் நல்ல நித்திரை சித்தி; பிறகெப்படி கதைப்பது சொல்லுங்க? அதுதான் கட் பண்ணச் சொன்னேன்! இன்றைக்குத் திருப்பி எடுப்பார்!’’ அலட்சியக் குரலில் தொடர்ந்து சொன்னாள்.

‘‘ஏன்மா, கல்யாணம் செய்து இவ்வளவு நாட்களாகியும் இன்னமும் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே! அவரா எடுக்க வேண்டும்? நீ எடுக்கக் கூடாதாம்மா? அது சரி, நீ வந்து சேர்ந்ததைக் கூட சொல்லவில்லையா?” கண்டிப்போடு கேட்ட லக்ஷ்மி, மகளைக் கூர்ந்து நோக்கினார்.

“அதெல்லாம் காலையிலேயே மாமியிடம் சொல்லிவிட்டேன் சித்தி; அவரே ரகுவிடம் சொல்லி இருப்பார்!” என்றவள், லக்ஷ்மியின் பார்வையை உணர்ந்ததும்,

“எப்போதும் காலையில் வேலையில் ஓடித் திரிவார் சித்தி; அதனால்தான் மாமியிடம் சொன்னேன்!” சமாளித்தாள்.

“சரி விடு; இப்ப அங்க சாப்பாட்டு நேரம் தானே! எடுத்துக் கதைத்துவிட்டு, அப்படியே எனக்கும் தா பார்ப்போம்!’’ லக்ஷ்மியும் இலேசில் விடுவதாக இல்லை.

‘‘மருத்து குடிக்க வேண்டும் சித்தி, முதல் சாப்பிட்டு முடியுங்க; அதற்குப் பிறகு எடுக்கிறேன்!’’ அவரின் நச்சரிப்புத் தாங்காது சொன்னவள், அவர் உண்டதும் அவருக்குரிய மருந்தைக் கொடுத்துவிட்டு, கணவனின் கைபேசிக்கு அழைத்து, அவன் அழைப்பை ஏற்கும் முன்பே லக்ஷ்மியிடம் கொடுத்து, ‘‘நீங்க கதையுங்கோ சித்தி; பாத்ரூமுக்குப் போய்விட்டு வருகிறேன்!’’ என்றவாறே, அவர் பதிலுக்குக் காத்திராமல் அவ்விடம் விட்டு வெளியேறி விட்டாள்.பொழுது புலர, வழமை போல விழிப்படைந்த ரகுவிற்கு, அருகில் படுக்கை காலியாக இருப்பதைப் பார்த்த பின்னும், மனைவி வீட்டிலில்லை என்பதை உணர்ந்து கொள்ள வெகுநேரம் சென்றது.

காலையில் மனைவி சமையலறையில் எழுப்பும் சத்தங்கள் இன்று இல்லாததே அவளில்லை என்றுணர்த்த, மிகவும் ஆயாசமாக உணர்ந்தான் அவன் . எப்பொழுதும் மனஸ்தாபப்பட்டதும் அவளே ஓடி வந்து கதைப்பதால், நேற்றிரவு அவள் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் போயிருந்தாலும், ‘இம்முறை நாமே எடுத்துக் கதைப்போம்!’ என்றெண்ணி அவளுக்கு அழைத்திருந்தான்.

அவளோ, “ ‘பஸ்சில் எல்லோரும் நித்திரை கொள்கிறார்கள்; பிறகு கதைப்போம்!’ என, நறுக்கென்று சொல்லி கைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டாளே!” முணுமுணுத்துக் கொண்டவனுக்கு, அவள் செயலை நினைக்கையில் இலேசாகக் கோபம் எட்டிப் பார்த்தது.

‘சரி, கோபத்தில் சொல்லாமல் போனாள்! இப்போ நானே எடுத்துக் கதைத்தால், இந்த முறுக்கு முறுக்கிறாளே!’ மனதில் கடுகடுத்துக் கொண்டவனுக்கு, அதையும் மீறி மனைவியைக் காணும் ஆவல் எழுந்தது!

இந்த எட்டு மாதங்களில் மனைவியுடன் குடும்பம் நடத்தியிருந்தாலும், அவள் பற்றித் தெரிந்து அவளுடன் ஒன்றி வாழ அவன் முனையவில்லை. அதற்காக அவள் முனையும் பொழுதெல்லாம், தகுந்த ஒத்துழைப்பைத் தன் பக்கத்திலிருந்து கொடுக்க முனையவில்லை.

அவசர வாழ்க்கை, வேலை, வீடு என்று ஓடித் திரிபவன், இரவில் களைத்து வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கவே நேரம் சரியாக இருக்கும். அப்படியே நேரம் கிடைத்தாலும், மாறி மாறிக் கதைபேசி சண்டை பிடிக்கவே பொழுது ஓடிவிடும்.

ஆனால் இப்போது????

வெறுமையான வீட்டைப் பார்க்கையில், அந்த வெறுமை அவன் மனதுள் துள்ளியேறி அமர்ந்து மிகவும் வாட்டி எடுத்தது! சிட்டுக்குருவி போல சுற்றித் திரியும் மனைவியின் கைவண்ணம், வீட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் பளிச்சிட, ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், சோம்பலுடன் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வேண்டா வெறுப்பாகவே கடைக்கு கிளம்பினான்.

கடைக்கு வந்தவனை ,வேலைகள் எப்போதும் போல விழுங்கிக்கொள்ள, அதில் ஆழ்ந்து கடையின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, மனைவியின் அழைப்பை கண்டவுடன் மிகவும் மகிழ்வாக இருந்தது.

‘‘சிந்தூ!’’ ஆவலை அடக்காத குரலில் அழைத்தபடி கைபேசியைக் காதில் வைத்தவன், ‘‘ தம்பி, நான் தான் மாமி கதைக்கிறேன்(பேசுகிறேன்)!’’ என்று மோதிய லக்ஷ்மியின் குரலால் ஒருகணம் திகைத்தான்!

சட்டென்று உள்ளே பரவிய ஏமாற்றத்திலிருந்து கணத்தில் மீண்டவன், ‘‘ மாமி ! இப்ப உடம்புக்கு எப்படியிருக்கு? இப்படி அங்கே தனியாக இருந்து உடம்பையும் கவனிக்காமல் கஷ்டப்பட வேண்டுமா சொல்லுங்க பார்ப்போம்?’’ கண்டிப்பும் ஆதங்கமுமாகக் கேட்டான்.

‘‘மாட்டேன் என்றெல்லாம் சொல்லாமல், சிந்துவோடு இங்கு வாங்க மாமி; இனி உங்களை அங்கு தனியாக விட முடியாது!’’ அன்பாக மிரட்டினான்.

மருமகனின் கரிசனையான பேச்சு, லக்ஷ்மியின் விழிகளை கலங்கச் செய்தது. தன் பெற்றவர்களுக்கு பின் தனிமையில் இருந்தவருக்கு, அன்பைக் காட்டவும், அன்பை வாங்கவும் இதுவரை முழு உரிமையுள்ளவளாக சிந்து ஒருத்தியே இருந்தாள். ஆனால் இப்போது, அவள் கணவன் காட்டும் கரிசனையில் அவர் விழிகள் மெல்ல நனைந்தன!

‘‘எனக்கு ஒண்ணுமே இல்லை தம்பி! வயது போகப் போக, எல்லா வருத்தங்களும் ஆசையாக என்னை வந்து பார்க்கிறார்கள்; அவ்வளவும்தான்! இப்போது நன்றாகி விட்டேன்! அங்கு வருவதைப் பற்றி ஆறுதலாக யோசிப்போம்!’’ என்றவர், மறக்காது அவனையும் அவன் குடும்பத்தையும் நலம் விசாரித்தார்.

‘‘இவள் சிந்துவும் இங்கு வர, உங்களுக்குத்தான் கஷ்டமாக இருக்கும்!’’ சங்கடமாக ஆரம்பிக்க, ‘‘இதென்ன கதை(பேச்சு) மாமி? அவள் வராமல்? இதிலென்ன சங்கடம்! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! எனக்கு இங்கு வேலைகள் மாமி, தெரியும் தானே! இல்லையென்றால் நானும் வந்திருப்பேன்!’’ சட்டென்று இடையிட்டான் ரகு.
 

Rosei Kajan

Administrator
Staff member
#8
இப்படியே சிறிது நேரம் அவருடன் கதைத்தவன், ‘‘ பக்கத்தில் சிந்து நிற்கிறாவா மாமி?’’ மெதுவாகக் கேட்டுப் பார்த்தான்.

‘இதோ வருகிறேன் என்று போன பிள்ளை, இவ்வளவு நேரமாக அங்கு என்ன செய்கிறாள்!?’ மனதில் முணுமுணுத்துக்கொண்டே, ‘‘ இப்பதான் பாத்ரூம் போனாள் தம்பி, இதோ வந்திடுவாள்!’’ அவள் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே சொன்னார் லக்ஷ்மி.

மனைவி தன்னை தவிர்க்கிறாள் என்பதை, நன்குணர்ந்து கொண்டவனின் மனமோ மிகவும் சுணக்கம் கண்டது! அவளின் பாராமுகம், தன்னில் இந்தளவு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை, இதுவரை அவனே உணர்ந்திருக்கவில்லையே! இன்று உணர்ந்தவனுக்கோ, தன்னை நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது!

‘‘ பாரவாயில்லை மாமி, இரவைக்கு வீட்ட போனதும் எடுக்கிறேன்!’’ முயன்று சாதாரணமாகச் சொல்லி, அவரிடம் விடைபெற்றவன் மனமோ, தவிப்பிலிருந்து விடைபெறாமல் அதையே கட்டிப்பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது!

‘‘ என்றாலும், இவளுக்கு இப்படிக் கோவம் வரக்கூடாது; நாட்கணக்கில் பேசாது இருக்கிறாளே!’’ என்று நினைத்தவுடனேயே ,‘அந்தக் கோபம் நியாயம் தானே! இல்லையென்று அவளில் பிழைகாண உன்னால் முடியுமா ரகு?’ மனச்சாட்சி முறைப்புடன் வினவியது!

‘ஆமாம்! அன்று நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது தான். அது அவள் மனதை என்ன பாடுபடுத்தி இருந்தால், எதையும் கொஞ்ச நேரத்துக்கு மேல் வைத்துச் சாதிக்காமல் ஓடி வந்து சிரித்துக் கதைப்பவள், இத்தனை நாட்களாக பாராமுகத்தைத் தொடர்வாள்?’ என, நினைத்துக் கொண்டவன், தம்மிருவருக்கும் இடையிலான இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு வித்திட்ட அந்நிகழ்வினுள் நுழைந்தான்.

மூன்றுநாட்களுக்கு முன், ரகுவும் சிந்துவும் மயூரா அம்மன் கோவிலுக்கு வந்தவர்கள், ஸ்வாமி தரிசனம் முடித்து கோவில் பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்.

சிந்துவோ, மிகவும் மகிழ்சியாகவும் நிறைவாகவும் உணர்ந்தாள்!

வேலை வேலையென்று எப்போதும் திரியும் கணவன் இப்படிச் சிறுபொழுதை தன்னுடன் கழித்தாலும், அவள் வானில் பறப்பது போல மகிழ்வில் மிதந்து விடுவாள்!

அப்படியே இன்றும் சிறிது நேரமிருந்தவர்கள், ‘‘சரி..போவோமா சிந்து. எனக்கு வீட்டில் கொஞ்சம் வேலைகள் இருக்கு!’’ சொல்லிக்கொண்டே கணவன் எழ, ‘‘ம்ம்ம்..வாங்கோ..’’ என்று எழுந்து வெளியே வந்தவர்கள் தம் கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கிச் செல்கையில், ‘‘ சிந்தூ!’’ என்ற அழைப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே, தன் பின் வீட்டில் வசித்து வருபவனும், சிறுவயது நண்பனுமாகிய கணேஷ் நிற்பதைக் கண்ட சிந்து, ‘‘ ஹேய் கணேஷ்!! எப்போ வந்தீங்க? அட, நீங்க வரப்போவதாக சித்தியும் சொல்லவில்லையே! நீங்களும் வீட்டுப்பக்கம் வரவும் இல்லை.’’ என்றாள், நண்பனைக் கண்ட சந்தோஷக் குரலில்!

அவர்கள் அருகில் வந்த கணேஷ், ‘‘ டீச்சர்ஸ் செமினார் ஒன்றிற்காக இரண்டு நாட்களுக்கு முன் வந்தேன் சிந்து; இன்று இரவே யாழ்ப்பாணம் திரும்ப இருக்கிறேன். அடுத்தமுறை வரும் போது உங்க வீட்டுக்கு கட்டாயமாக வருகின்றேன்!’’ இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி சொன்னான்.

தம் திருமணத்தின் போது கணேஷ் குடும்பம் இந்தியா சென்றிருந்ததும் , அவர்களிற்கு தன் கணவனை அறிமுகமில்லை என்பதையும் நினைத்துக் கொண்ட சிந்து, ‘‘ரகு, இவர் கணேஷ்! யாழ்பாணத்தில் எங்க பின் வீடு; சின்னவயதில் இருந்தே மிக நல்ல பழக்கம்; இவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் சித்தி தனியாக இருக்கவே சம்மதித்தேன்!’’ என்றவள், ‘‘கணேஷ், இவர்...’’ தொடங்க, அவளை இடைமறித்தான் கணேஷ்.

‘‘நீர் சொல்லாமலேயே தெரிகின்றது இவர் உம் கணவர் என்று..’’ என்றவாறே, ரகுவின் கரங்களைப் பற்றிக்கொண்டவன், ‘‘ உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ரகு. ரகுதானே...’’ சிந்துவிடம் வினவி, அவள் தலையசைப்பைப் பெற்றுக்கொண்டே,

‘‘உங்கள் கல்யாணத்திற்கு வர முடியாமல் போச்சு! அந்த நேரம் என் அக்கா கல்யாணத்திற்கென்று எல்லோருமே இந்தியா சென்றிருந்தோம்! இல்லையென்றால், சிந்து கல்யாணத்தை முன்னின்று நான் தான் செய்து வைத்திருப்பேன்!’’ என்றவன்,

‘‘சிந்து போல ஒரு மனைவி கிடைக்க நீங்க மிகவும் கொடுத்து வைத்திருக்கிறீங்க ரகு! இரண்டு பேரும் எப்போதுமே சந்தோசமாக இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை!’’ உணர்வு பூர்வமாகச் சொன்னவன் பார்வையோ, அவனையுமறியாது சிந்துவின் முகத்தை ஒருவித ஏக்கத்தோடு தொட்டு மீண்டது!

சட்டென்று அவன் அப்படிச் சொன்னவிதமும் பார்வையும் அவளை கணத்தில் தடுமாற வைத்தது! என்றாலும், ‘சிறுவயது முதல் பழகியவன். மிகவும் நல்லவன். உண்மையான அன்பில், உள்ளத்திலிருந்து சொல்கிறான்!’ என நினைத்துக் கொண்டவள், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், அவள் கொஞ்சமும் அறியாததொன்றும் இருந்தது! அது, கணேஷ் தன் மனமார சிந்துவை விரும்பினான் என்பதேயாகும்.

தன் பெற்றவர்களிற்கு சிந்து மீது ஒருவகை அனுதாபமும் அன்பும் இருந்தாலும், அவள் மிகவும் நல்ல பெண் என்பதை அறிந்திருந்தாலும், திருமணம் என்று வரும் பொழுது, குறைவில்லாத சீதனமின்றி ஒரு பெண்ணை தம் ஒரே மகனுக்கு செய்ய கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள் என்று நன்குணர்ந்த கணேஷ், மனதில் எழுந்த ஆசையை அப்படியே ஆழப்புதைத்து விட்டான்.

அப்படியிருந்தும் எத்தனையோ தரங்கள், ‘வீட்டில் சொல்லிப் பார்ப்போமா?’ என்று முயன்றவன், பெற்றவர்களை மீறவோ அவர்களை நோகச் செய்யவோ துணிவின்றி தன் ஆசையை அப்படியே அடக்கிக் கொண்டான்.

என்ன தான் என்றாலும், சிறுவயதிலிருந்தே சிந்துவின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட நண்பன் அவன். அவளின் கல்யாணச்செய்தி காதில் விழுந்தபோது மனதில் சிறிதாக ஏக்கம் பிறந்தாலும், ‘அவள் எங்கிருந்தாலும் மகிழ்வுடன் நிறைவாக வாழ வேண்டும்!’ என்றே விரும்பினான்!

இன்றோ, ஜோடியாக இருவரையும் நேரில் கண்டதும் கொஞ்சமே கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.

ரகுவோ, மிகவும் இயல்பாக அவனுடன் கதைத்தான்.

‘‘அடுத்தமுறை கட்டாயமாக வீட்டுக்கு வாங்க கணேஷ்!’’ என்று சொல்லி விடைபெற்று வீடு வந்தவர்கள், இரவுணவை உண்டு முடித்துவிட்டு வரவேற்பறையில் வந்தமர்ந்தனர்.

தொலைக்காட்சியில் சென்று கொண்டிருந்த நாடகமொன்றில் சிந்துவின் கவனமிருக்க, ரகுவோ, இமைக்கவும் மறந்து மனைவியைப் பார்த்திருந்தான். அவன் நினைவோ, கணேஷை சந்தித்த இடத்திலிருந்து வர மறுத்து அடம் பிடித்தது!

சிந்து, அவனைக்கண்டு மிகவும் மகிழ்வாகக் கதைத்தாள் தான்! அவள் சுபாவமே அதுதான் என்பதை இந்த சில மாதங்களில் அறிந்திருந்தான் அவள் கணவன். ‘ஆனால், கணேஷ்! அவளைக் கண்டு முகம் மலர்ந்தவன், அதையும் தாண்டி...’ எதுவோ போல உணர்ந்தான் ரகு.

‘ஒருகணம் என்றாலும் கணேஷின் பார்வை ஏக்கத்தோடு சிந்துவில் படிந்ததல்லவா?!’ இவன் மனம் கிடந்தது அல்லாடியது!

அதுமட்டுமில்லாமல், அவன் கதைத்த ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ‘வேறு ஏதாவது அர்த்தங்கள் உண்டா?’ அவன் மனமோ ஆராயத் துணிந்தது!

“நீ இப்படிக் குழம்புவது தேவையற்றது ரகு! சிந்து உன் மனைவி! அவளைப் பற்றி இப்படி ஒருகணம் நினைத்துப் பார்ப்பதும் மிகவும் தப்பு!’’ அவன் மனசாட்சி விடுத்த எச்சரிக்கை ஓலைகளை பிடிவாதமாக நிராகரித்தவன், தேவையில்லாது தன் சிந்தனையைத் தட்டி விட்டு குழம்பித் தவித்தான்.

சிறிதுநேரக் குழப்பத்தின் பின், இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்ற முடிவில் தயங்கிக்கொண்டே மனைவியை நோக்கியவன், ‘‘நான் ஒன்று கேட்பேன் கோபிக்காது பதில் சொல்வீரா சிந்து??’’ ஒருநாளும் இல்லாது தயக்கமாக அவன் குரல் வந்ததை உணர்ந்தாலும், இப்படி நீளமாகக் கதைத்திராதவனை, அதுவும், எதையோ கேட்கிறேன் கோபிக்க மாட்டாயா என்றேல்லாம் அனுமதி கேட்கிறானே என நினைத்த சிந்து, இறக்கை இல்லாது வானவீதியில் பறக்கத் தயாராகிக்கொண்டே, ‘‘ஒன்றில்லை நிறையவே...சும்மா தாராளமாகக் கேளுங்க ரகு! நான் பதில் சொல்கிறேன்!’’ மிக்க மகிழ்வுடன் சொன்னாள்.

அவன் கேட்டதற்கு அவளால் இதே மகிழ்வுடன் பதில் சொல்ல முடிந்ததா?
 

Rosei Kajan

Administrator
Staff member
#9
அத்தியாயம் 4.

கட்டிலில் குப்புறக்கிடந்து, குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள் சிந்து!

அவள் மனமோ, வேதனையுடன் உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தது! ‘என்னைப் பார்த்து எப்படி இப்படிக் கேட்க முடிந்தது? அதுமட்டும் இல்லாமல் அடிக்கவும் செய்கிறாரே!’ மீண்டும் மீண்டும் சற்று முன் நடந்ததை நினைத்து, வேதனையில் குழறியது அவள் மனம்!

‘உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்!’ என்ற பாவனையில் கணவன் வினவ, ‘எதுவோ என்னைப்பற்றி அறிந்து கொள்வதற்காகக் கேட்கப் போகிறார்! இத்தனை மாதங்களாக இவர் இப்படியில்லை என்று தானே ஏங்கினோம்!’ என மனமகிழ்ந்தவள், ‘‘சொல்லுங்கப்பா...என்ன தெரிய வேண்டும்!’’ தயங்கியவனைத் தூண்டினாள்.

அவனோ இலேசான தடுமாற்றம் இருந்தாலும், மனதில் வைத்துக் குழம்புவதை விட, கேட்டு விடுவதே மேலென்ற முடிவிலிருந்தானே!

‘‘இல்ல சிந்து, அது வந்து... நான் சுத்தி வளைக்காமல் நேராகவே கேட்கிறேன்! வந்து...நீரும் கணேஷும் லவ் பண்ணினீங்களா? இல்ல இல்ல. அது வந்து, கணேஷ் உம்மை லவ் பண்ணினாரா? அப்படி ஏதாவது என்றால் என்னிடம் மறைக்கத் தேவையில்லை சிந்து!’’ தயங்கினாலும், அறிந்துகொள் என, மனமிட்ட கட்டளையை தெளிவாகவே நிறைவேற்றினான்!

தன் மன உளைச்சலுக்கு அக்கணமே விடைகாணத் துடித்தவன், அச்சமயம் வேறெதையும் எண்ணிப் பார்க்கவில்லை! அவன் வாயிலிருந்து தெறித்து விழுந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருப்பாகச் சுட, முள்ளாகக் குத்த, தவித்துத் துடித்துப் போனாள் சிந்து. கணவனிடமிருந்து இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லையே அவள்!

விழிகள் சிவக்க, உதடுகள் துடிக்க, கொந்தளிக்கும் உள்ளத்தோடு விசுக்கென்று எழுந்தவள், பார்வையால் கணவனைச் சுட்டுப் பொசுக்கினாள்!

‘‘இப்போ என்ன கேட்டீங்க?” தீப்பார்வையோடு மனைவி கேட்ட விதத்தில், மனதுள் தத்தளித்துப் போனான் அவள் கணவன்.

“இல்ல சிந்து, கணேஷ்...உம்மை..” தடுமாறியவனை, அடங்கா ஆத்திரத்தோடு முறைத்தவள், “லவ்வா? நானா? கணேஷை! ஹ்ம்ம்..” என்றவள் குரலில் வெளிப்பட்ட ஏளனத்தை, இதழ்களின் சுளிப்பும் விழி வீச்சும் தப்பாமல் அவனுக்கு உணர்த்தி நின்றன!

“இல்லை ரகு, தெரியாமல் தான் கேட்கிறேன், எல்லோருமே உங்க முதல் பெண்டாட்டி போலவே இருப்பார்கள் என்றா நினைத்...’’ அவள் சொல்லி முடிக்க முன் விருட்டென்று எழுந்தவனோ, ‘‘என்னடி சொல்கிறாய்?’’ கர்ஜனையுடன், அவள் பட்டுக்கன்னத்தில் தன் கரத்தை இடியாக இறக்கினான்!

அடிவாங்கியதில் அதிர்ந்து நின்றவள், மறுகணம் அவ்விடம் விட்டகன்று ஓடிச்சென்று கட்டிலில் விழுந்து நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தாள்.

பெற்றவர்களுடன் இருக்கும் போது, அவர்களால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவள் சிந்து. அவர்கள் மறைந்த பின்னரும், சித்தியால் அன்பாகவே வளர்க்கப்பட்டாள். இதுவரை அவள் யாரிடமும் அடியோ, அவப் பெயரோ வாங்கியதில்லை! இன்றோ, தன்னவனின் சந்தேகக்கேள்வியும் , அடியும் ஒன்றிணைந்து அவளை நிலை குலைய வைத்தது!

ரகுவிற்கோ, மனைவி ஏளனத்தோடு உதிர்த்த, ‘உங்க முதல் பெண்டாட்டி’ என்ற வார்த்தை துளியும் யோசியாது, ஆறிக்கொண்டிருந்த அவன் மன இரணத்தில் கூர் ஊசியாக ஆழக்குத்தி, தாங்கொணா வலியை ஏற்படுத்தியது. அதையும் மீறி, தான் செய்த காரியம் முழுமையாக உறைக்க கூனிக்குறுகிப் போனான் அவன்.

‘‘ச்சே! ஏன் தான் நான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறேனோ!? கடவுளே! கேட்கக் கூடாததைக் கேட்டது மட்டுமில்லாமல், கைநீட்டி...’’ முணுமுணுத்துக் கொண்டே தன் கரத்தைப் பார்த்தவனுக்கு, அதை எதிலாவது அடித்து உடைக்கும் ஆவேசம் எழுந்தது!

‘‘என்ன தெரிய வேண்டும் கேளுங்க!’’ என, ஆவல் கொப்பளிக்கக் கேட்ட மனைவியின் முகம் நினைவில் வர, வருத்தத்தில் துடித்தவனின் மனமோ, அடுத்த கணம் முறுக்கிக் கொண்டது!

‘அவள் செய்தது மட்டும் சரியா? அவளுக்கு இது போதாது! இன்னும் நான்கு கொடுத்திருக்க வேண்டும்! அதென்ன முதல் பெண்டாட்டி? அப்படியென்றால் இவள் யார்? விசரி! தன்னையே தான் இப்படிச் சொல்கிறாளே!’ கோபத்துடன் சலித்துக்கொண்டவன்,

‘‘நீ தான்டி, நீ மட்டும் தான் என் பெண்டாட்டி! முதல் கடைசி எல்லாம் நீதான்!’’ மெல்ல முனகிக்கொண்டே, உள்ளே எழுந்த வேதனையால் சிரசைக் கரங்களில் ஏந்திக்கொண்டு முன்புறமாகக் குனிந்தமர்ந்தான்.

‘தொம்...தொம்’ திடீரென்று அவன் முதுகில் சரமாரியான குத்துக்கள் விழ, விதிர்விதிர்த்துப் போய் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவன் , அளவிட முடியாத திகைப்புடன் இருக்கையை விட்டெழுந்தான்.

அதிர்ந்து போய் எழுந்து நின்றவன் முன்னால் வந்து நின்ற அவன் மனைவியோ, ‘‘ இங்க பாருங்க..இந்த அடிக்கின்ற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ள வேண்டாம்! அடித்தால் வாங்கிக் கொண்டிருப்பேன் என்றா நினைத்தீங்க?” சீறினாள்.

“அதற்கு வேறு ஆளைப் பாருங்க! இன்னொருதரம் இப்படி நடக்க வேண்டும், அப்போ தெரியும் நான் யார் என்று! அடிக்கிறாராம் அடிக்கிறார்!’’ கடகடவென்று பொரிந்து தள்ளியவள், அதிர்ந்து நின்றவனை கொஞ்சமும் பொருட்படுத்தாது, அதே வேகத்தில் அறைக்குள் சென்று மறைந்தாள்.


இதையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கும் போதே ரகுவால் நம்பமுடியாமல் இருந்தது.


‘‘உண்மையில் அவள் ஒரு ராட்ஷசி தான்! ஹ்ம்ம்..என் செல்ல ராட்ஷசி! அவளின் இந்த வெளிப்படையான குணம் தான் என்னை என் கூட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கு! அன்று நான் அப்படிக் கேட்டதின் பின், வழமை போல தானாக வந்து என்னுடன் கதைக்க முயலவே இல்லை. என் வேலைகளை மட்டும் முறைத்துக்கொண்டே கவனித்துக் கொண்டவள், கடைசியாக, சொல்லாமலே ஊருக்குப் போய் விட்டாளே!’’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், ‘இன்று இரவு எப்படியும் அவளுடன் கதைக்க வேண்டும்; அன்று அப்படிக் கதைத்ததற்கும் அவளை அடித்ததற்க்கும் மன்னிப்புக் கேட்க வேண்டும்!’ நினைத்துக் கொண்டவன், அதன் பின்னரே தன் வேலைகளில் மூழ்கினான்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#10
*****
“கண்ணைச் சுழற்றிக்கொண்டு வருது! டிவியை ஓஃப் பண்ணிவிட்டு நீயும் போய்ப்படு சிந்து! நாளையிரவு பயணம் வேறு செய்ய வேண்டுமே!” சொல்லிக் கொண்டெழுந்தார் லக்ஷ்மி!


“ம்ம்..படுப்போம், எனக்கும் நித்திரை வருகுது; குட்நைட் சித்தி!” எழுந்து தன்னறைக்குள் புகுந்தவள், மறுநாளிரவு கொழும்பு செல்லப்போவதை நினைத்துக் கொண்டதும், ‘பத்து நாட்களுக்குப் பின்னர் அவரை காணப்போகின்றோமே!’ என்ற, உவகையால் நிறைந்தவாறே படுக்கையில் சாய்ந்தாள்.

லக்ஷ்மியை கூடவே அழைத்துச் செல்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டே அவரது சம்மதம் பெற்றிருந்தாள் சிந்து. அவள் வந்து நின்ற இந்த சிலநாட்களுள், லக்ஷ்மி வைத்தியசாலையில் இருந்து வந்த பின், அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்வதால், வீட்டைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள ஒரு குடும்பத்தை அமர்த்துவதிலிருந்து, சிறிது சிறிதாக ஒவ்வொன்றுக்கும் அங்குமிங்குமாக அலைந்து திரிந்து மிகவும் களைத்துப் போனாள் இவள்.

‘எது எப்படியிருந்தாலும் சித்தியை என்னோடு அழைத்துப் போக முடிந்ததே! அதுவே போதும்!’ என்றெண்ணிக் கொண்டவளின் விழிகளில் உறைய முனைந்த உறக்கத்தைக் கலைத்து, அவளுள் புகுந்து, அவளை ஆட்கொண்டது, அவள் கணவனின் நினைவுகள்!

இதழில் உதித்த மந்தகாச முறுவலோடு, தான் இங்கு வந்த அன்று இரவு நடந்ததை, மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டாள் அவள்.

‘மனம் திறந்து பழகவே மாட்டாரா?!’ என, இவளை ஏங்க வைத்த அவள் கணவன், தன் மனக்கதவை திறந்த நாளல்லவா அது!

அன்றைய அவன் பேச்சை அடிக்கடி நினைத்துப் பார்த்து நெஞ்சம் நிறைவதே இவள் வேலையாகிப் போச்சு!

அன்று லஷ்மியோடு அவன் கதைத்து முடிக்கும் வரை, வெளி வராந்தாவில் நடைபயின்று விட்டு வந்து சித்தியின் முணுமுணுப்பிற்கு ஆளாகியவள், “எடுத்துக் கதை சிந்து! தம்பி உன்னைக் கேட்டார்?” என்று கண்டிப்பாகச் சொன்ன லக்ஷ்மியை முறுவலோடு நோக்கி, “வீட்டுக்கு போய்க் கதைத்துக் கொள்கிறேன் சித்தி!” மெல்லச் சமாளித்து விட்டாள்.

வீடு வந்த பின்னரோ, அவள் சுபாவத்தின் படி கணவனுக்கு அழைக்கத் துடித்த கரங்களையும், அதற்கு உறுதுணை செய்த கணவன் மீது நேசம் கொண்ட நெஞ்சையும், அதனதன் போக்கில் விட்டுவிடவில்லை அவள்! மிகவும் கஷ்டப்பட்டு தன்னைத் தான் அடக்கிக் கொண்டாள்! அந்தளவுக்கு அவன் மீது மனஸ்தாபத்தில் இருந்தாள் அவள்.

ஒரு கை தட்டி ஓசை எழுந்திடுமா? அல்லது ஓசையெழுமென்ற நம்பிக்கைதான் உருவாகிடுமா?

எத்தனைக்குத்தான் நாமே அன்பையும் அக்கறையையும் மனதாரக் கொடுப்பது!? அதை ஏற்றுக் கொள்பவர் புறத்திலிருந்து சிறு எதிரொலியேனும் இல்லையென்றால், அந்த அன்பின் மதிப்புத்தான் என்ன?

இவ்வாறு ஒரு எண்ணம் உருவாகிவிட்டால், கடமைக்காக, அன்பையும் அக்கறையையும் காட்டிட முடியுமா?

அதிலும், சந்தேகம் சிறு பொறியாக பட்டு விட்டால், உயர்தரப் பட்டாகப் போற்றிப் பராமரிக்க வேண்டிய மணபந்தம் தான் கரிகிடாதா?

சித்தியின் சுகயீனம் கொஞ்சமே கொஞ்சமாக அவள் நெஞ்சக் கனத்தை மறக்கச் செய்து, அவள் சிந்தையை அவர்பால் திருப்பியிருந்தாலும், யாழ் வந்து சித்தியைப் பார்த்த பின், அதுவும் அவரை தன்னோடு அழைத்துச் செல்வதென தன்னளவில் உறுதி கொண்ட பின், கணவனின் வார்த்தைகளும் செய்கைகளும் இவள் நினைவில் சுழன்று சுழன்று, அவன் மீதான கோபத்தை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டது!

இருவரும் ஒன்றாக இருந்திருந்தால், இந்தளவுக்கு இவளால் கோபத்தை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று அவளுக்கே தெரியவில்லை.

அவர்களுள் பிரச்சனை நடந்தபின் அவனோடு முகம் கொடுத்துக் கதைக்கவில்லைதான்! ஆனால், அந்நாட்களில் தன்னுள் தானே மிகவும் வருந்தினாள்! பலதடவைகள் அவனை நோக்கிச் சென்ற கால்களை கடிந்து கொண்டாள்! பேசத் துடித்த உதடுகளை அடக்கி அழுந்த மூடிக்கொண்டாள்!

அப்படியே யாழ் வந்திருந்தவள், திருமணம் செய்த நாளிலிருந்து கணவன் தன்னை அலட்சியம் செய்வதாகே முடிவெடுத்து விட்டாள்! அதுவே, அவன் மீதிருந்த கோபத்தைத் தக்க வைக்கத் துணை புரிந்தது!

இப்படியிருக்க, அன்றிரவே மீண்டும் அழைத்தான் ரகு!

அழைப்பது கணவன் எனத் தெரிந்தும், அழைப்பை ஏற்காது பார்த்திருந்தவள் விழிகளோ நீரில் தத்தளித்தன! அடுத்தடுத்து இருமுறைகள் அடித்து ஓய்ந்த கைபேசியோ பிடிவாதத்தோடு மீண்டும் அலறியது!

சட்டென்று இயக்கியவள், “ஹலோ! இப்போ உங்களுக்கு என்ன வேண்டும்? எனக்கு நித்திரை வருகுது, நான் தூங்கப் போகிறேன்!” மறுகணம் அழைப்பைத் துண்டிக்க, அழைத்தவனோ அதிர்வோடு பார்த்திருந்தான்.

“அட! தப்பு என் பக்கம் என்று சமாதானம் செய்யப் பார்த்தால் இந்தத் துள்ளு துள்ளுகிறாள்!” முணுமுணுத்துக் கொண்டவனுள், கோபத்துக்குப் பதிலாக இளநகையே அரும்பியது!

‘சிறுபிள்ளை போல அவள் முறுக்கிக் கொள்வதை நேரில் பார்க்க முடியவில்லையே!’ அவன் மனமோ ஏங்கியது! தன்னையே தான் மிகவும் வித்தியாசமாக உணர்ந்தான் ரகு. அவ்வுணர்வு தந்த இதத்தோடு ஒருவித பிடிவாதம் கலக்க மீண்டும் அழைத்தான்.

நித்திரை கொள்ளப்போகிறேன் தொந்தரவு செய்யாதே! என்கின்ற பாணியில் அழைப்பைத் துண்டித்த பின்னரோ, சிந்துவின் மனம் கணவனையே சுற்றிச் சுற்றி வரத் தொடங்கியது.

 

Rosei Kajan

Administrator
Staff member
#11
“பாவம், பஸ்சில் வரும் போதும் எடுத்தார்; ஒருசில சொற்களோடு வைத்துவிட்டேன். மதியம், சித்தி கதைத்த போதும் நான் கதைக்கவில்லை! இப்போதும்..ச்சா! அவராக எடுக்க எடுக்க நான் இப்படிச் செய்திருக்கக் கூடாதோ!?” வாய்விட்டே சொல்லிக் கொண்டாள்.

மறுகணமோ, “இல்லை இல்லை! இதுதான் சரி! அன்று என்னவெல்லாம் கேட்டார். பாவம் கணேஷ்; அவரையும் சந்தேகக்கண்ணோடு அல்லவா பார்த்திருக்கிறார்! பச்..என்னை அடிக்கவேறு செய்தாரே!” கணவனே தன் முன்னால் நிற்பதாக நினைத்துச் சத்தமாகக் கூறி முறைத்தாள்.

இவள், இப்படி மாறி மாறிக் குழம்பித் தவிக்கையில், மீண்டும் ரகுவின் அழைப்பு வந்தது! அவள் வலக்கரமோ, அவள் மறுத்தாலும் என்கின்ற பயத்தில் மின்னலெனப் பாய்ந்து அழைப்பை ஏற்றுக் கொண்டது!

“சிந்து சிந்து...சிந்தும்மா... ப்ளீஸ் மா..” ஹலோ கூடச் சொல்லாது அவசரமாகக் கத்தினான் ரகு!

“ஃபோனை வைத்து விடாதேயும் சிந்து, ப்ளீஸ்! நான் சொல்வதைக் கேட்டு விட்டுப் பிறகு வையும்! சிந்து ப்ளீஸ்மா..’’ கெஞ்சினான்.

கணவன் குரல் கெஞ்சலுடன் வந்ததே சிந்துவை என்னவோ போல உணரச் செய்தது!

அவள் விழிகள் மழுக்கென்று நீரைச் சுரந்தன! திருமணம் முடித்த இத்தனை மாதங்களில், இவன், இப்படி நெருக்கமாக அவளை விளித்துப் பேசியதில்லையே!

‘கறாராக மட்டுமே பேசவோ பழகவோ செய்பவன் நான்!’ என்று, தன் நடவடிக்கைகளால் சொல்லாமல் சொன்னவன் அவள் கணவன்.

அப்படியிருக்க, இன்றோ, முற்றிலும் புதியவனாகத் தெரிந்தான் அவளுக்கு! கணவன் எப்போதும் முறைப்பாக இருந்தாலும், கதைத்தாலும், அதையே அவள் இரசித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்! அதுவே அவனுக்கு அழகு என நினைத்திருக்கிறாள்; அந்தளவுக்கு அவனை இவள் நேசித்தாள்! இப்போதோ, அவன் குரலில் கெஞ்சல் ஒட்டிக் கொண்டிருக்கவும், மனம் குழைய அமைதி காத்தாள்.

அவளின் அமைதியைப் பொருட்படுத்தாது, தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடும் நோக்கில் தொடர்ந்தான் அவளவன்.

‘‘ சிந்து, அன்றைக்கு நான் அப்படிக் கேட்டதற்கு என்னை மன்னித்து கொள்ளுடா! ப்ளீஸ்! முதல், அப்படி உம்மைப் பார்த்துக் கேட்டது பெரிய பிழை! அது அப்போது எனக்கு உறைக்கவில்லை! என் மனதில் வந்த குழப்பத்தைத் தெளிவு படுத்தவே விரும்பினேன்! மனசுக்குள்ள வைத்து குழம்பாமல் உம் வாய் வார்த்தைகளால் அறிய முயன்றேன்!’’ சொல்லி நிதானித்தவன்,

“ஆனால், அதற்கு நீர் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்?! அது என்ன, அவள் என் பெண்டாட்டியா சிந்து ? அதுவும் முதல் பெண்டாட்டி! என்ன கதை சிந்து அது? நீர் மட்டும் தான் என் பெண்டாட்டி, முதலும் கடைசியும் நீர் மட்டுதான்!’’ சொன்னவன் குரலில், கடினமும் வேகமும் கலந்து வந்தது!

‘‘இனியொருமுறை இப்படிச் சொல்லிவிடாதேயும்; என்னால் அதைத் தாங்கவே முடியாது!’’ இப்போது குரல் இலேசாக நடுங்கியதோ!

கணவனின் கவலை நிறைந்த குரலை கேட்டவளோ , தான் அவன் மீது வளர்த்து வைத்திருந்த கோபமெல்லாம், பொசுக்கென்று மறைந்து போவதை துல்லியமாக உணர்ந்து கொண்டாள்.

‘‘ஹைய்யோ...என்னங்க நீங்க! என்னிடம் போய் மன்னிப்பெல்லாம் கேட்கிறீங்க! சரி சரி விட்டுத் தள்ளுங்க. என்ன கஷ்ட காலமோ, அன்றைக்கு அப்படி நடந்து விட்டது; இனி அதைப் பற்றிக் கதைக்க வேண்டாம்!” ஒருவித அவசரத்தோடு வந்து விழுந்தன வார்த்தைகள்.

“நானும் தான் அப்படிக் கதைத்திருக்கக் கூடாது. பிழைதான்...கோவிக்காதீங்க!’’ கெஞ்சலாகத் தொடர்ந்தாள்.

மனைவியின் அமைதியைச் சம்மதமாகக் கொண்டு படபடவென்று சொல்ல நினைத்தை உரைத்தவனோ, தன் மனைவியின் இயல்பில் கரைந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் முதல், நாட்கணக்கில் கட்டிப்பிடித்து வைத்திருந்த கோபத்தை, கணத்தில் அவள் உதறியவிதத்தில் அவன் நெஞ்சத்தில் குற்ற உணர்வு சுரந்தது!

‘அவளை நான் சிறிதும் புரிந்து கொள்ள முனையவில்லையே! நிறையவே கஷ்டப்படுத்தி விட்டேன்! இனிச்சரி அவளைப் புரிந்து நடக்க முயல வேண்டும்! என்ற அவன் எண்ணத்தைக் கலைத்தது அவள் குரல்!

‘‘ஆனாலும் ரகு...’’ மெல்ல நிறுத்தியவள், ‘‘நான் உங்களைக் கல்யாணம் செய்யும் வரைக்கும் எந்தத் தடியனையும் காதலிக்கவில்லை; அப்படி நினைத்தும் பார்க்கவில்லை; இனியொருதரம் உங்களுக்கு இப்படியொரு சந்தேகம் வரவே தேவையில்லை!’’ அவள் குரல் நடுங்கிக் கொண்டு வந்து விழுந்தது; கைகோர்த்து வழிந்தது விழிநீர்!

அதைக் கேட்டவனோ, வெகுவாகத் துடித்துப் போனான்.

‘‘என்ன சிந்து மறுபடியும்? அன்றைக்கு ஏதோ ஒரு மனக்குழப்பம்! அதுமட்டுமில்லை, அந்தக் குழப்பமே என் முதல் அனுபவத்தால் வந்தது என்று வைத்துக் கொள்ளுமன்! இனிமேல் அப்படி எல்லாம் நினைத்தும் பார்க்க மாட்டேன்மா! ஸாரி சிந்து, உண்மையாகவே ஸாரி!’’ சொன்னவனின் நிலையையும் தவிப்பையும் இவளுக்கு உணர்த்தியது அக்குரல்.

தன் விழிநீரை அழுந்த துடைத்துக்கொண்டே, ‘‘ம்ம்ம்...போனாப் போகுது விட்டுத் தள்ளுங்கப்பா!” சமாதானம் செய்தவளை, “அழுகிறீரா சிந்து?” அவளின் குரல் பேதத்தை உணர்ந்து விசாரித்தான்!

“ஹ்ம்ம்..அழாமல் வேறென்ன செய்வதாம்! என் கடைவாய்ப் பல்லு இரண்டு இங்கு வந்து விழுந்து விட்டது தெரியுமா?’’ திடீரென்று சீறினாள் அவன் மனைவி!

‘‘என்ன!? பல்லு விழுந்து விட்டதா? ஏன்? என்ன நடந்தது?’’ பதட்டமாக இடையிட்டது அவன் குரல்.

‘‘ஆங்! ஏனா? எல்லாம் உங்க கைங்கரியம் தான்! அன்று அப்படி அடித்து விட்டு, ஏன் என்றா கேட்கிறீங்க? அதற்காக இன்னுமொருதரம் மன்னிப்பு கேளுங்க பார்ப்போம்!’’ பொய்யாக கோபம் காட்டி மிரட்ட, வாய்விட்டே பெரிதாக நகைத்தான் ரகு.

‘‘ஒரு கணம் பயந்து விட்டேன் சிந்து; எங்காவது விழுந்தெழும்பி விட்டீரோ என்று நினைத்து விட்டேன்! மன்னிப்புத்தானே! எத்தனை தரம் வேண்டும் என்றாலும் கேட்கத் தயார்.’’ சொல்லி, மீண்டும் நகைத்தவன் புதியவனாகத் தெரிந்தான் அவன் மனைவிக்கு!

“ரகு.... இது.... இது நீங்க தானே!” அவளையுமறியாது கேட்டே விட்டாள் சிந்து.

அவள் கேட்டதன் பொருள் புரிந்தவன், “ஹ்ம்..நானேதான் சிந்து! எல்லாமே சகவாசதோஷம்! இதெல்லாம் உடனே வேலை செய்யாது சிந்து, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வேலை செய்யும்..ஹ்ம்ம்..விளங்குதா?” கேலிக்குரலில் சொல்லி மீண்டும் நகைத்தான்.

‘இவர் இப்படி மகிழ்வாக இருக்கையில் அவரருகில் நான் இல்லையே! அவர் சந்தோஷத்தைக் கண்ணால் பார்க்க முடியவில்லையே!’ நினைத்ததும் ஏக்கப்பெருமூச்சு அவளையும் அறியாமல் வெளியேறியது!

‘‘என்ன சிந்து பெருமூச்சு பலமாக இருக்கு?” கேட்டவனுக்கு பதில் புரிந்தே இருந்தது. அவன் மனைவியும் பதில் சொல்ல முனையவில்லை. சிலநிமிடங்கள் இருவர் மூச்சுக்காற்றையும் அங்குமிங்கும் கடத்தும் வேலையை செவ்வனே செய்தது அலைபேசி!

அந்த அமைதியின் கனத்தை தாங்க விரும்பாத ரகுதான் முதலில் மௌனத்தை கலைத்தான்.

“அது சரிம்மா, நான் ஒரு அடி அடித்தேன்; அதற்கு எவ்வளவும் மன்னிப்பும் கேட்கத் தயார் என்று சொல்லியும் விட்டேன். ஆனால்....’’ இலகுவாகச் சொல்லி நிறுத்தி, மீண்டும் அடக்கமாட்டாமல் நகைத்தவன்,

‘‘தாங்கள் மறந்து போனீர்கள் என்று நினைக்கிறேன்! ஹப்பப்பா! என் முதுகு புண்ணாகிப் போச்சு!! ஒன்றா இரண்டா? எத்தனை குத்துக்கள்? அம்மாடியோவ்! இப்படி மட்டும் இன்னுமொருதரம் நடந்துதோ, என் எலும்புக்கூடு நொறுங்கிப் போயிடும் சொல்லி விட்டேன்!’’ சொன்னவன் சிரித்த சிரிப்பில் தானும் மலர்ந்தாள் சிந்து.
 

Rosei Kajan

Administrator
Staff member
#12
‘‘ஸாரி ஸாரி ரகு! அன்றைக்கு வந்த கோபத்தில்...’’ தயக்கமாகச் ஆரம்பித்தவள், ‘‘அந்தளவோடு தப்பியதே என்று சந்தோசப்பட்டுக் கொள்ளுங்க!” மிரட்டல் விட்டாள்.

“எது தப்பியது சிந்து?” விளக்கம் கேட்டான் அவள் கணவன்!

“ஹா..ஹா..எல்லாம் உங்க முதுகைத்தான் சொல்கிறேன்! உங்களுக்கு ஏதோ அன்றைக்கு நல்ல காலம் போல! ஆனால், எப்போதும் அப்படி இருக்காதுப்பா...சொல்லிவிட்டேன்!’’ கலகலத்துச் சிரித்தாள், அவன் மனையாள்.

‘‘சார்...இனியொருதரம் அப்படி என்னிடம் வேண்டுமளவுக்கு நடந்து கொள்ளாதீங்க சரியா?’’ அன்பாக எச்சரிக்கை விட்டவளை, உடனேயே பார்க்கும் ஆவல் ஏற்பட்டது ரகுவிற்கு!

‘‘சிந்து...’’ கணவனின் குரல் அவள் சிரிப்பைத் தேக்கியது!

‘‘ம்ம்...’’ அவன் குரல் வேறுபாடே அவளை ‘உம்’ கொட்ட வைத்தது.

‘‘உம்மைப் பார்க்கவேண்டும்; அதுவும் உடனே!’’ என்றவனிற்கு, மௌனத்தையே மறுமொழியாகியவள், சிறு தாமதத்துக்குப் பின் ‘‘எனக்கும் தான் ரகு!’’ முணுமுணுத்தாள்.

அவன் மௌனத்தைப் பார்த்தும், ‘‘எப்படியும் பத்து நாட்களில் அங்கு வந்து விடுவேன் ரகு!” என்றவள், “வரும் போது சித்தியையும் கூட்டிக்கொண்டு வரட்டுமா? இனி அவர் நம்மோடு இருக்கலாமா ரகு??’’ பேச்சை மாற்றும் விதத்தில் துள்ளலோடு ஆரம்பித்தாள்.

‘‘இதென்ன கேள்வி சிந்து! உம் வீட்டுக்குச் சித்தியை அழைத்து வர என் அனுமதி எதுக்கும்மா?! மாமி இனி நம்முடன் இருக்கட்டும், நானும் மாமியிடம் அப்படித்தான் சொல்லி இருக்கிறேன்; அவர் மாட்டேன் என்று சொன்னாலும் நீர் கூட்டிக்கொண்டு வாரும்! பெரியவர்கள் கூட இருப்பதே உதவியும் ஆறுதலும் தானே!’’ இப்படியே, சிறிது நேரம் என்றுமில்லா மகிழ்வுடன் மனைவியுடன் வார்த்தையாடியவன், இலேசான மனதுடனும் மிகவும் தெம்புடனும் அலைபேசியை அணைத்தான்.

அன்றைய நினைவும் அதன் பின்னர் கைபேசி வாயிலாகவே தம்மிரு மனங்களிடையே ஏற்பட்ட நெருக்கத்தையும் நினைத்துக்கொண்டவள், மலர்ந்த வதனத்தோடு நித்திரை வசப்பட்டாள்.அடுத்தநாள், விடிகாலை நான்கு மணிக்கே துயில் கலைந்தெழுந்தாள் சிந்து.

அன்றிரவு லக்ஷ்மியையும் அழைத்துக்கொண்டு கொழும்பு செல்லவிருப்பதால் , என்னென்ன செய்ய வேண்டுமென மனதில் வரிசைப்படுத்திக் கொண்டே காலைக்கடன்களை முடித்துவிட்டு , தேநீர் தயாரிக்கவென சமையலறைக்குள் நுழைந்தவளின் கவனத்தை ஈர்த்தது, வீட்டின் முன் கேட்ட ஆட்டோ சத்தம்!

‘இந்த நேரத்தில் நம் வீட்டுக்கு யார் வரப்போகிறார்கள்? பக்கத்து வீடுகளுக்கு யாராவது வந்திருப்பார்கள்!’ நினைத்துக்கொண்டே தேநீருக்கான நீரை அடுப்பில் வைக்கவும், அவர்கள் வீட்டு முன்கதவு மெல்லத் தட்டுப் படவும் சரியாக இருந்து.

‘‘ யாராக இருக்கும்?! அதுவும் இந்த வெள்ளனக் காலையில்!’’ முணுமுணுத்துக் கொண்டே சென்று, முன் யன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கிப் பார்த்தவள், மறுநொடி, விழிகளிரெண்டும் வியப்பில் விரிய கணநேரம் அசைவற்று நின்றுவிட்டாள்.

அக்கணம், அவள் உடலெங்கும் உவகையின் உணர்வுகள் மின்னலெனக் கோலமிட, நம்பவே முடியாது, நயனங்களை இமைத்து தான் காண்பது நிஜமா என உறுதி செய்து கொண்டாள் அவள். மறுகணம், பாய்ந்து சென்று கதவைத் திறந்தவள், வெளியில் நின்ற கணவனையே இமைக்கவும் மறந்து பார்த்து நின்றாள்.

அவனோ, தன்னைக் கண்ட மகிழ்வை துளியும் மறைக்காது வெளிப்படுத்தி நிற்கும் மனையாளின் வதனத்தை, நேசமுடன் விழிகளால் வருடியவன், ‘‘ஹலோ! வீட்டுக்கு வந்தவர்களை வாவென்று உள்ளுக்கு அழைக்க மாட்டீர்களா?’’ ஏகத்துக்கும் மரியாதை துள்ளக் கேட்டான்.

அதற்கும் அசையாமல் நின்றவளின் மூக்கை செல்லமாகப் பிடித்துத் திருகியவன், ‘‘என்னடா சிந்து? அதற்கிடையில் அடையாளம் தெரியாத அளவுக்கு மறந்து விட்டீரா?! நான் யாரென்று தெரியவில்லையா?’’ சோக இராகம் பாடினான்.

அப்போதுதான் தன் உணர்வுக்கு வந்தவள், ‘மறப்பதா? உங்களையா?’ மனதுள் வினவிக்கொண்டே, ‘‘உள்ளுக்கு வாங்க ரகு. என்னங்க நீங்க, நேற்று பின்னேரம் கதைக்கும் போதும் இப்படி வரப் போவதாகச் சொல்லவே இல்லையே! தெரிந்திருந்தால் பஸ் ஸ்டாண்டுக்கு கணேஷை...’’ சொல்லிக்கொண்டு வந்தவள், நாக்கைக் கடித்துக்கொண்டே கணவனை தவிப்புடன் ஏறிட்டாள்.

அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவன், ஏன் நிறுத்தினாள் என்பதையும் விளங்கிக் கொண்டதும், தன்னையே தான் நொந்து கொண்டான். தான் அன்று கதைத்தது அவள் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் மறையாதென்பதை உணர்ந்து கொண்டவன், தன் அன்பாலும் செய்கைகளாலும் அந்த வலி தரும் நினைவின் சுவட்டையே அழித்து விட வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டே, சிறு முறுவலுடன் மனைவியை ஏறிட்டவன்,

“என் மனதிலிருந்து வேண்டாத குப்பைகள் எல்லாவற்றையும் வழித்துத் துடைத்தெறியத்தான் நானும் முயல்கிறேன் சிந்து! நீரும் அதை மறந்து விடும்! உம் புருஷன் ஒன்றும் அந்தளவுக்கு கெட்டவன் இல்லை!’’ எனச் சொல்ல, ‘‘அதில்லை ரகு..’’ தடுமாற்றத்தோடு இடையிட்டாள் சிந்து.

மனைவியை ஆதரவாகப் பார்த்தவனோ, “நாம் கொழும்பு போகமுதல் கணேஷ் வீட்டுக்கு ஒருமுறை போயிவிட்டே போவோம் சரியா?’’ என்றான் கனிவாக.

தன்னவனின் உள்ளம் திறந்த சிறு பேச்சால் மனம் நிறைந்த சிந்து, ‘‘ம்ம்..’’ என்று தலையாட்டியவாறே, ‘‘ நீங்க போய் கைகால் அலம்பிக் கொண்டு வாங்கோ , நான் தேத்தண்ணி போடுகிறேன்!’’ என்றபடி சமையலறைப் பக்கமாகச் செல்லத் திரும்பினாள் .

அவளை எட்டிப் பிடித்து நிறுத்தியவன் , அவளின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு, ‘‘ அத்தூரமிருந்து ஒருத்தன் விழுந்தடிச்சி வந்திருக்கிறான், அவனை கவனிக்கிறதை விட்டுவிட்டு, தேத்தண்ணிதான் இப்ப முக்கியமா? இதெல்லாம் உமக்கே சரியாகப் படுதா சொல்லும் பார்ப்போம்!’’ கூறியவாறே மனைவியை இழுத்துக்கொண்டு அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தான் .

அவன் செய்கையில் முற்றாக அதிர்ந்தவளோ, கணவனையே ஆச்சரியமாகப் பார்த்தாள்.

தன் சிறுபிரிவு அவனைத் தன்பால் இழுத்துள்ளது என்று புரிந்து உள்ளம் துள்ள, ‘‘ ஹைய்யோ என்னங்க நீங்க!! சித்தி முழிக்கின்ற நேரம்!” எனச் சிணுங்கியதெல்லாம் அவள் கணவன் செவிகளில் நுழையவே இல்லை.
 

Rosei Kajan

Administrator
Staff member
#13
அத்தியாயம் 5.


கடற்காற்று முகத்தில் மோத, வேகநடை பயின்று கொண்டிருந்தார் சதாசிவம்.

ஓய்வு பெற்ற கஸ்டம்ஸ் டைரக்டரான இவர், வீட்டில் ஓய்ந்திருப்பதை எப்போதுமே விரும்புவதில்லை! தினமும் அதிகாலையில், வெள்ளவத்தை ஹம்டன் லேனிலுள்ள தம் வீட்டிலிருந்து கடற்கரை நோக்கிப் புறப்பட்டு, கடலைன்னையோடு பேசிக்கொண்டே நடைபயில்வதை பெரிதும் விரும்புவார் இவர்.

சில்லென்ற காற்று உடலில் மோத, விரைந்து நடந்தவரின் உடலோ புத்துணர்வில் குளித்திருந்தது. அதற்கு நேர்மாறாக, அதைச் சிறிதும் உணரவோ, அனுபவிக்கவோ அடியோடு மறுத்து அடம் பிடித்தது அவரது மனம்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவருள்ளத்தை அழுத்தும் சுமையின் கனம், நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துள்ளதேயொழிய சிறிதும் குறையக் காணோமே!

என்றும் போல் இன்றும், தான் கடந்து வந்த காலம் அவர் மனதில் திரைப்படமாக ஓடியது!

வீட்டின் தலைமகனாக, சிறுவயதிலேயே தன் தோள்களில் விருப்பமாக ஏந்திக்கொண்ட குடும்பப் பொறுப்புகள்! இவற்றிலிருந்து மீளும் முன்னரே, “காலா காலத்தில் நடக்க வேண்டியதை முறையாகச் செய்ய வேண்டும் ராசா!” என்ற பீடிகையுடன், இவரின் திருமணம் பற்றி பேச்செடுத்தார் அன்னை!

‘மனையாளாக வருபவளால் என் குடும்பத்தை அனுசரித்துப் போக முடியுமா? என் தம்பி தங்கைகளுக்கு உதவி, அவர்களுக்கு நல்வழி காட்ட உதவுவாளா?’ என்ற, இவரின் கவலைகளை இருந்த இடம் தெரியாது போக்கினார் இவரின் தர்மபத்தினி.

கணவன் சொல்லே அவருக்கு வேதம்! பிறகென்ன! கடும் உழைப்பால் தானும் உயர்ந்து தன் சகோதரர்களையும் வாழ வைத்தவர், தன் இரு பெண் குழந்தைகளையும் நற்பண்புடனேயே வளர்த்தார்! அல்லது ‘அப்படிதான் வளர்த்தேன்!’ என நம்பி, ஏமாற்றமடைந்தாரா?!

மூத்தமகளிற்கு பொருத்தமான இடத்தில் திருமணம் பேசி , அவள் வாழ்க்கை நன்றாக அமையும் எனப் பெருமிதம் கொண்டிருந்த வேளையில், அவளது செய்கையில் நிலைகுலைந்தது அக்குடும்பம்!

இத்தனை காலமும், ‘எப்பாடுபட்டாவது எல்லாவற்றையும் நேர்மையாக செய்து முடிப்பவன் நான்!’ என, இறுமாந்திருந்த அக்குடும்பத்தலைவனது நிமிர்வும் மரியாதையும் அங்கே கேள்விக்குறியானது!

அக்குடும்பம் பேணிப் பாதுகாத்த கௌரவமோ, அங்குமிங்குமாக குட்டுக்களை, அடிகளை வாங்கி பலத்த காயங்களுக்குள்ளானது!

இவை எதுவுவே அவர் மகளின் கருத்தில் பதியவில்லையே! தன் செய்கையால், தங்கையின் வாழ்வே கேள்விக்குறியாகிட வாய்ப்புகள் உள்ளதென்பதையும், அவள் சற்றும் எண்ணிப் பார்க்கவில்லையே!

வருத்தும் என்று அறிந்தே கடந்தவற்றை நினைத்தவர், இயலாமையோடு பெருமூச்செறிந்தார்.

'' மாற்றம் ஒன்றே மாறாதது! ஆனால், எம்நிலையில் மூன்று வருடங்களுக்கு மேலாக எம்மாற்றமும் இல்லை! போதாக்குறைக்கு சின்னமகள் இப்போது சொல்வதோ!” வேதனையோடு முணுமுணுத்துக் கொண்டார்.

தன் பிள்ளைகளிற்கு முழுச்சுதந்திரம் கொடுத்து , அதை எப்படி நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்றும் நற்தந்தையாய் வழிகாட்டினார். ஆனால் நடந்ததோ, ‘மூத்தவள் தான் அப்படிச் செய்தால் என்றால், இப்போது சின்னவள் செய்திருக்கும் காரியம் ?’ சதாசிவத்தால் தொடர்ந்து யோசிக்க முடியவில்லை!

'' இற்கெல்லாம் முடிவுதான் என்ன? என்னால் எதைச் செய்ய முடியும்!” வாய்விட்டு அங்கலாய்த்தவாறே, வீட்டை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினார் அவர்.

இதேநேரம், ஹம்டன் லேனிலுள்ள சதாசிவத்தின் வீட்டுமாடியில், தன்றையில் துயில் கலைந்த இந்திரஜா(இந்து) படுக்கையை விட்டெழாது மணியைப் பார்த்தவள், ‘அப்பா நடக்கப் போயிருப்பார், என்னாலும் அவருக்கு மனவேதனை! நானும் தான் வேறென்ன செய்ய!?’ நினைத்தவாறே சிறிது நேரம் படுத்திருந்தவள், போட்டி போட்டுக் கொண்டெழுந்த நினைவலைகளை கண்டிப்போடு அழுத்தி அடக்கியவள்,

'' காலையிலேயே வேதனை வேண்டவே வேண்டாம்! ரதி கடைக்குப் போக வரச் சொன்னாள்! போய்விட்டு வந்து வேலைக்குப் போகச் சரியாக இருக்கும்!’ என்ற முடிவுடன் எழுந்து, குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

இவள், தன் முகாமைத்துவ(மானேஜ்மென்ட்) பட்டப்படிப்பைத் தொடரும் போதே , ‘இலங்கை பட்டயக் கணக்காளர்(ஸ்ரீலங்கன் சார்ட்டட் அகௌன்டன்ஸ்)’ தேர்வுகளையும் எடுத்து வந்தாள். அப்போதிருந்தே தந்தையின் நண்பர் நடத்தும் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலையும் செய்து வந்தாள்.

இப்போது பல்கலைப்படிப்பு முடிந்து விட்டது. கணக்காளர் பரீட்சையின் இறுதிப்பகுதியும் எழுதிவிட்டால், முழுநேரமாக வேலை தருவதாக அவளின் நிறுவனத்தில் கூறி இருக்கின்றனர்.

தாய் தந்த தேநீரை அருந்தியபடியே அன்றைய ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தாள் இந்திரஜா.

''எத்தனைக்கம்மா கடைக்குப் போக வேண்டும்?''

“மஜெஸ்டிக்சிட்டிக்கு’ போய்விட்டு பிறகு ‘பெட்டா’ போவோம் என்றாள் ரதி! ஒரு ஒன்பதரை போல இங்கிருந்து வெளிக்கிடுவேன்மா.” என்று, சொல்லிக் கொண்டிருக்கையில் வீட்டினுள் நுழைந்தார் சதாசிவம்.

தந்தையை முறுவலுடன் எதிர்கொண்டாள் இந்து! ''மோர்னிங்பா, நடந்துவிட்டு வாறீங்களா?”

“மோர்னிங் இந்தும்மா, ஆமாம்டா!” என்றவாறே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டவர், '' கனகம், எனக்கும் ஒருகப் டீ தாறீங்களா?'' மனைவியிடம் கேட்டவர்,

“ஷாப்பிங் போகப் போவதாக அம்மா சொன்னார்மா! அலைந்து திரியாமல் நேரத்தோடு போயிட்டு வாங்க! பிறகு வேலைக்கும் போக வேண்டும்தானே!” என்றதும்,

“போய்விட்டு நேரத்துக்கே வந்துவிடுவேன்பா!” என்றவள், கையிலிருந்த பத்திரிகையை தந்தையிடம் கொடுத்துவிட்டு, புறப்படுவதற்காக மேலே சென்றாள்.

காலை உணவை உண்டபின் புறப்பட்டவள் , வெள்ளவத்தை சந்தையடியில் காத்திருந்த தோழி ரதியுடன் சேர்ந்து, பஸ் எடுத்து ‘மஜெஸ்டிக்சிட்டி’க்கருகில் இறங்கிக் கொண்டனர்.

தன் உக்கிரத்தை காட்டிக் கொண்டிந்த பகலவனிடமிருந்து தப்பி, அளவலாவியவாறே ‘மஜெஸ்டிக்சிட்டி’க்குள் நுழைகையில், இந்துவின் பார்வையில் தற்செயலாகப் பட்டான் அவன்.

ஓரமாக நின்று அவளையே கூர்மையாகப் பார்த்திருந்தவனைக் கண்டதும், அடுத்தநொடி நடையை மறந்து, ஸ்தம்பித்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டாள் இந்து!

'' எத்தனை நாளாச்சு இவரைக் கண்டு?! '' அவளிதழ்கள் மெல்ல முணுமுணுத்துக்கொண்டன! விழிகளோ, மெல்ல மெல்ல நீரில் மிதக்கத் தொடங்கியது!

இவர்களின் வரவை எதிர்கொண்டு நின்றவனின் பார்வை உறைத்ததும், சட்டென்று அருகில் நின்ற தோழியை முறைத்தாள் இந்து. அவள் பார்வையை ஒரு முறைப்புடன் ஏற்ற ரதி, தோழி கோபமாக ஏதாவது சொல்லமுன் தான் முந்திக் கொள்ளும் வகையில், '' என்னடி அப்படிப் பார்க்கிறாய்? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்!” முறைப்புடன் ஆரம்பித்தாள்.

“உங்கள் இரண்டு பேருக்கும் இந்தக் காதல் தேவை தானா? பொல்லாத காதல்! அவனவன் காதலிக்கிறேன் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்ற இக்காலத்தில், நீங்க பண்ணுற அலட்டல், ஹப்ப்பா!! என்னால் தாங்கவே முடியவில்லையடி!'' சலிப்பும் கேலியுமாகத் தொடர்ந்தாள்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#14
நண்பிகள் இருவரும் கதைத்துக்கொண்டு, இல்லை இல்லை ஒருவரை ஒருவர் கடித்துக் கொண்டிருக்கையில், இவர்களை நெருங்கினான் ரமேஷ்!

நான்கு வருடங்களுக்கு முன், இந்துவின் இதயத்தை உரிமையாக்கிக் கொண்டவனும் இவனே!

விதியின் சதிச் செயலோ, இவள் தமக்கையின் நடவடிக்கை தந்த பரிசோ, இக்காதலர்களின் காதலுணர்வு இருவருள்ளும் ஆல்போன்று செழித்தாலும், ஒருவர் ஒருவரை சந்தித்துக் கொள்ளவோ தொலைபேசியில் உரையாடவோ இருவரும் முனையவில்லை.

“ஹாய் ரதி, எப்படி இருக்கிறீர்? '' விழிகளோ, இந்துமீது படிந்திருக்க, தம்மிருவருக்கும் பொதுவான தோழியிடம் நலம் விசாரித்தான் ரமேஷ்.

பின், ''எப்படி இந்து இருக்கிறீர்? '' சாதாரணமாகக் கேட்க நினைத்தவனுடன் குரல் ஒத்துழைக்காததில், உள்ளத்தின் வேதனை மிகையாகவே வெளிப்பட்டது!

''ம்ம்...நன்றாக இருக்கிறேன்! நீங்க? '' என்ற தோழியின் கலங்கிய விழிகளை நோக்கிய ரதி, '' ஹேய் ரமேஷ்! நீர் எப்படி இருக்கிறீர்? பார்த்து மூன்று, நான்கு மாதங்கள் இருக்குமே! இப்போ, உங்கள் கடையிலா வேலை செய்றீர்?” என்று கலகலப்பாக கதைக்கத் தொடங்கினாள்.

இவர்கள் மூவரும் ஒன்றாக , ஒரே பிரிவில் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். ரமேஷ், இந்து காதல் விடயத்தை அறிந்தவளும் இவள் மட்டுமே! இரு குடும்பங்களுக்குமிடையில் நடந்த பிரச்சனைகளையும் ரதி அறிவாள். எப்பாடுபட்டாவது தன் நண்பர்கள் இருவரும் வாழ்வில் இணைய வேண்டும் என்கின்ற ஆவலில், “ முக்கிய விடயமாக இந்துவைக் காண வேண்டும் ரதி.” இப்படி, உன்னால் உதவ முடியுமா என மறைமுகமாகக் கேட்ட ரமேஷிடம், தாம் கடைக்கு வருவதைக் கூறி அவனையும் வரவைத்தாள் இவள்.

அவர்கள் இருவரும் பேச வேண்டியதைப் பேசிக் கொள்ளட்டும் என நினைத்தவள், ''நான் மேலே சல்வார் கடையில் நிற்கிறேன், கதைத்து விட்டு வா இந்து! '' என்ற படி, இந்துவின் பதிலுக்குக் காத்திராது நகர்ந்து விட்டாள்.

ரதி அப்பால் நகர, இந்துவின் வதனத்தையே ஆராய்ந்தது ரமேஷின் பார்வை!

“காதலித்தோம் தான்! ஆனால், அந்தக் காதலுக்கு ஆயுள் அவ்வளவு கெட்டி இல்லை போலும்!” இவர்கள் பிரிந்த அன்று, கன்றிச் சிறுத்த முகத்தோடு ஆரம்பித்தான் ரமேஷ்.

“தெரியும் ரமேஷ்! அதற்கு எனக்கு கொஞ்சமும் அருகதையுமில்லை. இனி நாம் ஒன்றிணைவது சாத்தியமில்லை என்பதும் நன்றாகவே தெரியும்!” முகம் கன்ற கூறிய இந்து, அதன்பின், ஒன்றாகப் படித்த போதும் அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை!

‘நானும் தான் இவளை ஒதுக்கினேன்! ஆனால், அதை என்னால் மனமாரச் செய்ய முடிந்ததா?’ நெஞ்சம் கசக்க நினைத்துக்கொண்ட ரமேஷ், '' இந்து” மென்மையாக அழைத்தான்.

“இப்போ எதற்கு என்னை இங்கு அழைத்து வரச் சொன்னீங்க ரமேஷ்? அப்படி நாம் தனியாகக் கதைக்க என்று ஏதாவது இருக்கா என்ன?!” கேட்டவள் குரலிலிலும் கசப்பே வழிந்தது!

“ப்ளீஸ் இந்து, அப்படி இருக்கா இல்லையா என்று உமக்கே நன்றாகத் தெரியும். நான் உம்மோடு தனியாகக் கதைக்காமல் வேறு யாரோடு கதைக்கப் போகிறேன்?” கனிந்தொலித்தது அவன் குரல்!

சட்டென்று கலங்கிய விழிகளை அப்பால் நகர்த்திக் கொண்டவளுக்கு, தன் நெஞ்சத்தில் திரண்ட துக்கப்பந்தை சமாளித்து, சீராக மூச்சுவிடவே மிகவும் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது.

அவளையே பார்த்திருந்தவன், சட்டென்று நெருங்கி அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அவன் கரம் தந்த அழுத்தத்தில் மளுக்கென்று உடைப்பெடுத்த விழிநீர் அவள் கன்னங்களைத் தழுவிச் சென்றது.

துடிக்கும் இதழும், நனைந்த விழிகளும், வேதனையில் கசங்கிய வதனமுமாக தடுமாறி நின்றவளைப் பார்த்து, துடித்துப் போனான் ரமேஷ்.

“ஸ்ஸ்.. இந்து பிளீஸ்!” என்றவாறே அவள் கண்ணீரை விரைந்து துடைத்தவன் கரங்களை மெல்லப் பற்றிக்கொண்டே, தன்னைச் சுற்றி நோக்கியவள் சற்று நகர்ந்து நின்று கொண்டாள்.

அவளையே சில கணங்கள் உற்றுப் பார்த்தவன் ஒரு முடிவோடு, “வாரும் இந்து, அங்கே அமர்ந்திருந்து கதைப்போம்!” பற்றிய கரத்தை விடாது அருகிலிருந்த காஃபி ஷாப் முன்னிருந்த இருக்கைகள் நோக்கி நடந்தான்.

‘இல்லை, வேண்டாம், சரிவராது’ என ஒதுங்கியிருந்தாலும் மனதளவில் தன்னவன் என்று வரித்துக் கொண்டவனல்லவா இவன்!

‘ஆமாம் காதலித்தோம்! இப்போது தான் பிரிந்துவிட்டோமே! இத்தனை மாதங்களில் அவரோ நானோ காதலைப் புதுப்பிக்க முனையவும் இல்லை அதில் சாத்தியமும் இல்லை!’ என நினைத்து, மனதில் உறைந்திருந்த அவன் பிம்பத்தை இலகுவில் அழிக்க முடியாது, வேறு வாழ்வென்பதை கணமும் நினைக்க முடியாது தடுமாறி நிற்பவள் அல்லவா இவள்!

நீண்ட நாட்களின் பின்னரான அவன் அருகாமையை இரசித்தவாறே, அவனில் பதிந்த பார்வையை விலக்க மறந்து அவனோடு சேர்ந்து நடந்தாள் இந்து.

அங்கு சென்று அமர்ந்த பின்னும் சிறிது நேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை! மௌனமே நிலவியது. தலை குனிந்திருந்த இந்துவைப் பார்த்த ரமேஷ், '' வீட்டில் எனக்கு கல்யாணம் பேசுகிறார்கள் இந்து!'' நேரடியாக விசயத்திற்கு வந்தான் .

இத்தனை நாட்களின் பின் அவனைச் சந்தித்ததில், தன்னைப்போலவே அவன் தன்நினைவில் இருப்பதை உணர்ந்து துக்கத்தை மீறிய மகிழ்வில் அமிழ்ந்திருந்தவள், அவன் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து, விழிகளில் அதிர்வோடு நோக்கினாள்.

மறுகணம் சுதாகரித்துக் கொண்டவளின் இதழ்களோ, '' ஓ அப்படியா?! சந்தோஷமான விஷயம் தானே!” முணுமுணுத்தன!

தொடர்ந்து, “வாழ்த்துக்கள்!” இப்போது இயலாமையுடன் வெளிவந்தது வார்த்தை! சற்றுமுன் உவகையை ஆசையோடு போர்த்த முனைந்த அவள் மனமோ, அதை உதறி, விரக்தியில் குப்புற விழுந்தது! தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனை நோக்கிய அவள் விழிகள், சிறிது சிறிதாக கோபத்தைப் பூசிக் கொண்டன!

‘அப்போ, என்னிலுள்ள நேசத்தில் சந்திக்க வரவில்லையா? பார், எனக்குத் திருமணம் ஆகப் போகின்றது என்று சொல்லிக் காட்டவா வரச் சொன்னார்! இவர் என் ரமேஷ் தானா? என் அக்கா செய்த தவறுக்குத் தண்டனையை வாழ்நாள் முழுமைக்கும் எனக்குத் தர முடிவெடுத்துவிட்டாரா?’ மனதில், ஆற்றாமையோடு அரற்றினாள்.

அவனோ, '' ஆமாம்! ஆமாம்! உங்க வாழ்த்துக்காகத் தான் இதை இப்போ வந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்!” எரிச்சலை அடக்கமறந்து சீறினான்.

“வேண்டாம் விலகிவிடுவோம் என்று சொன்னதன் படி என்னை மறந்து, வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தயாராகிவிட்டீர் போலிருக்கே இந்து! அப்படியா? இதுதெரியாது நான் தான் முட்டாள் மாதிரி உம்மைத் தேடி வந்தேனா?” கேட்டவனின் குரலோடு போட்டி போட்டுக்கொண்டு கோபத்தில் ஜொலித்தன விழிகள்.

“என்ன! வேறு வாழ்க்கையா? நானா? இது என்ன புதுக்கதை!” அவளும் பதிலுக்குச் சீறினாள்.

“இப்போ எனக்கு வாழ்த்துச் சொன்னீரே அதற்கு என்ன அர்த்தம்! நான் வேறு ஒருவாழ்வைத் தேடினால், உமக்கு அதிலொன்றுமில்லை என்பதுதானே!” என்றவன், சட்டென்று அமைதியானான். அவளும் மௌனியாகி, அருகே போவோர் வருவோரை வெறித்துக் கொண்டிருந்தாள்

“இங்க பாரும் இந்து, இவ்வளவு நாட்களாக ஒருவர் ஒருவரோடு பேசாமல் இருந்தாச்சு! நீரோ நானோ வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போவதில்லை என்பதும் நமக்கு நன்றாகவே தெரியும்!” தொடர்ந்தவன் குரல், ஒரு தீர்மானத்தோடு வெளிவந்தது.

சட்டென்று அவனைப் பார்த்தவள் விழிகள் மீண்டும் கசிந்தன!

“நம் விடயத்தை வீட்டில் சொல்லும் நேரம் வந்துவிட்டது இந்து. இனியும் என்னால் தாமதிக்க முடியாது! இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் அதையும் எதிர்நோக்கத்தான் வேண்டும்!” அவளையே கூர்மையாகப் பார்த்து, தீர்மானமாகச் சொன்னான்.

அவளோ, தளம்பி வெளியேறத் துடித்த விழிநீரை, உள்ளிழுக்கப் பிரயத்தனம் செய்தவாறே அவனை ஏறிட்டாள் . ''நான்...நான்...” திக்கியவள், “நம்விடயத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பே வீட்டில் சொல்லிவிட்டேன் ரமேஷ்! அப்பா எனக்கு கல்யாணம் பேசப் போவதாகச் சொன்னதும் சொல்லிவிட்டேன்!” என்றவளை, சற்றுமுன் தான் அவளைக் கடிந்து கொண்டதை நினைத்தவாறே நேசமுடன் நோக்கியவன், “அப்போ, உம் வீட்டில் என்ன சொன்னார்கள் இந்து?” கேட்டவன் குரல் அவனையும் மீறி இறுகியே வந்தது.

“ அம்மாவோ அப்பாவோ இது பற்றி ஒரு வார்த்தை கூட இதுவரை கதைக்கவில்லை தெரியுமா?” என்றவள், இருக்கும் இடம் மறந்து விம்மினாள்.

‘இது தெரிந்த விடயம் தானே!’ என்ற வகையில் அவளை நோக்கினாலும் , “முதல் அழுவதை நிறுத்தும் இந்து!” என்றான் அவசரமாக!

'' எப்படி … எதைக் கதைப்பதென்று உங்க வீட்டில் யோசித்திருப்பார்கள் இந்து! முகம் கொடுத்துக் கதைக்கின்ற மாதிரி நிலையிலா நம் இரண்டு குடும்பமும் இருக்கு! எல்லாம் உம் அக்..'' இறுக்கத்தோடு சொல்லிக்கொண்டு வந்தவன், அவள் முகம் கன்றுவதைப் பார்த்துப் பேச்சை நிறுத்தினான்.

அதைக் கேட்டவளும் அமைதியாக இருக்கவில்லை.

'' ப்ளீஸ் ரமேஷ், நாம் நம் விடயம் பற்றி மட்டுமாகக் கதைப்போம். மறக்க முயன்றும் முடியாமல் தவிக்கின்ற விஷயத்தை திரும்பத் திரும்ப கதைப்பதால் ஒரு பயனும் இல்லையல்லவா!? '' கவலை தோய்ந்த குரலிலும் உறுதியாகச் சொன்னாள்!

என்னதான் சகோதரி செய்த விடயத்தால் இரு குடும்பங்களும் பிரிந்து , அவர்கள் காதல் கேள்விக்குறியாக நின்றாலும், சகோதரி எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டுமெனவே மனமார விரும்பினாள் இவள்.

''அவளைத் திட்டுவதாலோ, துற்றுவதாலோ நன்மை ஏதாவது நடக்கவா போகிறது!?'' தன்னை முறைத்தவனைப் பார்த்து தொடர்ந்துரைத்தவள் குரலில் கசப்பே வழிந்தது.

'' பார், இவ்வளவுக்கும் பிறகும் உமக்கு அக்கா பாசம்!?'' கோபத்தை அடக்காமல் உறுமினான் ரமேஷ்.

அதற்குப் பதில் சொல்லாது அவனையே பார்த்திருந்தவள், '' இப்ப என்ன செய்யப் போறீங்க? ´´ என்றாள், மெல்லிய குரலில்.

'' அதுதான் எனக்கு விளங்கவில்லை!” என்றவாறே அருகில் போவோர் வருவோரை வெறித்துக் கொண்டிருந்தவன், “ஆனால், வீட்டில் சொல்லிவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்! இதைச் சொல்லத்தான் உம்மைச் சந்திக்க நினைத்தேன்! ''

இத்தனை நாட்களுக்குப் பிறகு அவளை நேரில் பார்த்து இரு வார்த்தைகள் பேசும் ஆவலில் தான் வந்ததை மறைத்து அவன் சொன்னதும், இந்துவின் இதழ்களில் சிறு முறுவல் ஒன்று நெளிந்து மறைந்தது!

“ ம்ம்...நீங்க யோசித்து என்ன செய்யலாம் என்று கால் பண்ணிச் சொல்லுங்க.” என்றவள், ''ஐஸ் குடிப்போமா? ரதியை வரச் சொல்லி கால் பண்ணுகிறேன்!” என்று, அவன் தலையசைப்பைப்பெற்று தோழியை வரும்படி அழைத்தாள்.

கீழே வந்த ரதியோ, இவர்கள் இருவரையும் வழமை போல கடி கடியென்று கடிக்க , அவளின் முயற்சியால் கொஞ்சமே கொஞ்சமாக இயல்பாயிருந்தவர்கள், “மீண்டும் சந்திப்போம்!” எனக் கூறிப் பிரிந்தனர்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#15
அத்தியாயம் 6.

பலத்த காற்று இடியோடு மழை கொட்டிக் கொண்டிருந்தது!

வெளிபுறத்தில் கவிந்திருந்த இருளைக் கிழித்துக்கொண்டு, பாதையோர மின்விளக்குகளும் வீடுகளின் வெளிச்சங்களும் ஒளிர்ந்து கொண்டிருந்தன!

கொட்டும் மழைக்கொதுங்கி தம் வீட்டின் மாடி பால்கனியில் நின்றவாறே, இருள் சூழ்ந்த வெளியை வெறித்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.


சுழன்றடிக்கும் காற்றின் குளிரும் , கண்ணைப் பறிக்கும் மின்னலும் , காதைக்கிழிக்கும் பேரிடியும் , கொட்டும் மழையும், அவன் கவனத்தைத் தம்பால் ஈர்க்க முடியவில்லையே என்கின்ற ஆதங்கத்தில் ஆக்ரோஷமாகச் செயல்பட்டன!

இவற்றை உணராத அவன் விழிகளோ, இலக்கின்றி இருளை வெறித்த வண்ணமிருந்தன!

மனமோ, வேதனையில் கசங்கிக் கிடந்தது!

தன்னவளை, அவள் பார்க்காத தருணங்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து அடிக்கடி கண்டிருந்தாலும், மூன்று நான்கு மாதங்களின் பின் இன்று அருகில் பார்த்ததும் , அவளுடன் சிறிது நேரமேனும் கதைத்ததும் , அவன் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தினாலும் , அவளின் துயர முகமே மீண்டும் மீண்டும் நினைவுகளில் உலா வந்து, அச்சந்தோஷத்தையும் அழித்து, தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியது.

ஓராயிரம் தரத்திற்கு மேல், திரும்பத் திரும்ப வினவியதையே அவன் மனம் இன்றும் வினவியது. '' உன்னை ஏன் சந்தித்தேன்! காதலித்தேன்! இப்படிக் கையாலாகாத் தனத்துடன் உன்னை வருத்தவா?” என, அவன் மனம் ஓங்கிக் குரலெடுத்து ஓலமிட்டது!

நான்கு வருடங்களுக்கு முன், பல்கலைக்குச் சென்ற இரண்டாவது நாளன்று , தன் நண்பர்கள் சிலருடன் விரிவுரை மண்டபத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், தன் பெயர் சொல்லி அழைத்தவாறே ஓடிவந்த பெண்ணொருத்தி அவன் முன் நின்று, “ஐ லவ் யூ ரமேஷ்! என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா?'' என வினவ, முதலில் அதிர்ந்து விழித்தான் இவன்.

பின், அப்பெண் மிகுந்த பதற்றத்துடனும் கலக்கத்துடனும் நிற்பதைப் பார்த்து ‘ராகிங்’ என்பதையுணர்ந்து கொண்டவன், சிறு தலையசைப்புடன் அவ்விடம் விட்டகல, அவர்களுக்கான பாட விரிவுரையாளரும் அவ்விடத்தால் வர, அப்பெண்ணும் தூரத்தில் நின்ற சீனியர்சை திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் இவர்களுடன் இணைந்து கொண்டாள்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, தன் பிரிவிலிருக்கும் அவளையும் அவளது தோழியையும் கண்டு அவ்வப்போது கதைப்பதில் தொடங்கிய இவர்களது நட்பு , காதலில் வந்து நின்றது!


இருவர் வீட்டிலிருந்தும் இவர்கள் காதலை எதிர்ப்பதற்கு ஏதுமில்லாததால், வீட்டினருக்குச் சொல்லாவிடினும் , இவர்கள் காதல் தன்பாட்டில் வளர்ந்து கொண்டிருந்தது!

இவை எல்லாம், சில மாதங்களில் ஏற்பட்ட ஒரு பேரிடியின் மூலம் சடுதியில் நிறுத்தப்பட்டது.

ஒருநாள் தன் தமக்கையை பெண் பார்க்க வருகிறார்கள் என்ற இந்து, தானும் விரிவுரைக்கு வரவில்லை. பின், பதிவுத் திருமணம் செய்யவிருப்பதாக அவள் கூறிய பொழுது தான் அம்மாப்பிள்ளையே தன் தமையன் என இவனுக்குத் தெரிய வந்ததது.

அண்ணனுக்குப் பெண் பார்த்துப் பதிவுத்திருமண ஆயத்தம் நடப்பது தெரிந்திருந்தாலும் , அப்பெண் இந்துவின் அக்கா என்பது அவனுக்குத் தெரியாது. இப்போது தெரிந்து கொண்டதும், இருவரும் மட்டற்ற மகிழ்வடைந்தனர்.

பதிவுத்திருமணத்தின் பின், கடைகள் , கோவில் என்று தமக்கை தன் வருங்காலக் கணவரோடு செல்லும் போதெல்லாம், தமக்கையின் வற்புறுத்துதலில் இந்துவும் கூடச் சென்றாள்.


அவர்கள் இருவராக வருவதால், ரமேஷின் அண்ணனும் இவனை அழைத்துச் சென்றான்.

ஏற்கனவே ஒருவர் ஒருவரை விரும்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, இது ஒன்றும் கஸ்டமான காரியம் அல்லவே! அப்படியான பொழுதுகளை மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கத் தொடங்கினர் இருவரும். அவ்வாறு அமையும் பொழுதுகளை, சிறுசிறு தருணங்களை, அற்புதமாக இரசிக்கவும் தொடங்கினர்.

இந்த மகிழ்வும் ஒருநாள் சடுதியில் முற்றுப் பெற்றது! அதுவும், இனிமேல் தொடராது என்கின்ற முடிவோடு!

இந்துவின் அக்கா செய்த சுயநலச்செயல், அது ஏற்படுத்திய காயம்; இன்னமும் இரணமாக நின்று இவர்களை வருத்துகின்றதே!

இருபகுதி பெற்றவர்களும் ஆறாத மனவருத்தத்துடன் இருப்பதால், தாமும் அவர்களை வருத்தக்கூடாதென இதுவரை இருந்தவனை, தந்தை தன் திருமணத்திற்குப் பெண் பார்த்துள்ளார் என்ற செய்தி , நிலைகுழைய வைத்தது மட்டுமன்றி , வீட்டிலே கட்டாயமாகப் பேச வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

‘ ‘உங்கள் பிரச்சனைகளுக்கு முன்னிருந்தே ரமேஷை விரும்புகிறேன். என்னால் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முடியாது. திருமணம் என்பது என் வாழ்வில் இல்லையென்ற நிலைவந்தாலும் இந்த முடிவு மாறாது’ என, இந்து தன் தந்தையிடம் துணிந்து கூறியது போல், என்னால் என் வீட்டில் சொல்லிவிட முடியுமா? அதற்கான தைரியம்தான் என்னிடம் உண்டா?’ நினைத்தவுடன், மனதில் சோர்ந்து போனான் ரமேஷ்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#16
பெற்றோரும் தமையனும் இந்துவின் குடும்பத்தில் கொண்டுள்ள வெறுப்பை அறியாதவனா இவன்? அதில் தவறு இருப்பதாகவும் இவன் உணரவில்லை. ஆனால், ‘இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு முன்னரே தெரியுமா? இருகுடும்பங்களுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்ட பின்னரா நான் அவளை விரும்பினேன்; அல்லவே!’ தன்னுள் தான் தவித்தவன் நினைவில், சட்டென்று தோன்றினாள் அவன் அண்ணி சிந்து.

“ ஆம்! அண்ணியால் மட்டுமே இது சாத்தியம். எப்படியிருந்த அண்ணனையும் , அப்பா, அம்மாவையும் மாற்றிச் சந்தோஷச் சுழலை வீட்டில் கொண்டு வந்தார்! அப்பாவுக்கும் அண்ணி என்றால் உயிரல்லவா? மறுவார்த்தை பேசுவதில்லை! அதனால் நம் விடயத்தையும் அண்ணி கையில் ஒப்படைப்போம்!” என முடிவெடுத்தவன், தன் முடிவை இந்துவிடம் சொல்வதற்காக, நீண்ட இடைவெளியின் பின் அவள் கைபேசிக்கு அழைத்தான்.


இரவு , அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் புறப்பட்ட இந்து, '' எப்படித் தாத்தா இருக்கிறீங்க?'' கேட்டுக்கொண்டே, அலுவலக வாசலில் காத்திருந்த ஆட்டோவில் ஏறினாள்.


தெரிந்த, நம்பிக்கையான, அவ்வயோதிப ஓட்டுனரும் கதைத்துக்கொண்டே ஆட்டோவை எடுத்தார்.

சிறிது தூரம் வரை அவருடன் கதைத்துக்கொண்டு வந்தவளின் வாய் அளவளாவினாலும், மனமோ குழம்பித் தவித்தது! காலையில் ரமேஷை சந்தித்ததையும், அவன் கூறியதையும் அசைபோட்டுக்கொண்டே வந்தது.

இப்படியே வீடு வந்து சேர்ந்தவளை, வாசலில் காத்திருந்து வரவேற்றார் அவள் அன்னை.

''இப்போ ஏன்மா மழைக் குளிரில் நிற்கிறீங்க? நான் என்ன சின்னப் பிள்ளையா?” கடிந்து கொண்டவாறே உள்ளே வந்தவளின் வாடிக் கசங்கியிருந்த முகத்தைப் பார்த்த தாய், '' இன்றைக்கு ஒரே அலைச்சல் என்னம்மா? போய்க் குளித்துவிட்டு வா சாப்பிடலாம்!'' என்றார், கரிசனையாய்!

''சரிம்மா...” என்வாறே, மேலே செல்லும் மகளைப் பார்த்த தாயின் உள்ளத்திற்குத் தெரியாதா தன் மகள் படும் வேதனை! அப்படியிருந்தும், அதனைத் தீர்க்கும் வழிதெரியாது தவிக்கின்றன, அவளைப் பெற்ற உள்ளங்களிரெண்டும்!

இரவுணவுக்குப் பின் பெற்றவர்களுடன் சிறிது உரையாடிவிட்டு, நித்திரைக்காக வந்து தன் படுக்கையில் சாய்ந்தவளை , பல்கலை வாழ்வும் , அது பரிசளித்த காதல் நினைவுகளும் சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைத்தன!

‘ சமுத்திரத்தில் கரை தெரியாது தத்தளிப்பவரின் நிலையில் தான் எங்கள் காதலும் இருக்கிறது !' என நினைத்தவள் , என்றும் போல் இன்றும் தன் பல்கலைக்கழக புகைப்பட அல்பத்தை எடுத்து , அதில், அநேக படங்களில் தன்னருகில் நிற்கும் தன்னவனுடன் மெளனமாக உரையாடத் தொடங்கினாள்.

அப்போது அவள் கைபேசி அழைக்கவே, ''யார் இந்த நேரத்தில் ..ரதியோ! '' நினைத்தவாறே எடுத்து, ரமேஷ் அழைத்திருப்பதைப் பார்த்து சிறிது நேரம் அப்படியே இருந்தாள்.


பலமாதங்களின் பின்னர் வரும் அவன் அழைப்பு, அவள் உள்ளத்தை, நிச்சயம் துள்ளச் செய்தது என்பதில் ஐயமில்லை! அதோடு இணைந்து ஒருவகை பதை பதைப்பும் அவளை ஊடுருவியது!

‘என்ன இந்த நேரத்தில் எடுக்கிறார்!? வீட்டில் ஏதும் பிரச்சனையோ! எங்கள் விடயத்தைச் சொல்லிவிட்டாரோ! ' பதை பதைப்புடன் கதைக்கத் தொடங்கியவள், அவன் சொன்னதைக் கேட்டவுடன் மௌனம் காத்தாள்.

''இது சரியா வருமா ரமேஷ்? உங்கள் அண்ணி நமக்காகக் கதைப்பாரா? முதல் அவர் ..அவர் ...நம்விடயத்தை ஏற்றுக் கொள்வாரா?” சிறிது நேரத்தின் பின் நம்பிக்கையற்ற குரலில் வினவினாள்.

அதற்கு அவன் சொன்னதைக் கேட்டவள், '' சரி வருகிறேன்! '' என்றபடி கைபேசியை அணைத்தாள்.

அவள் அறையின் அருகில் தான் பெற்றவர்களின் அறை. ‘இங்கிருந்து கதைப்பது அவர்களுக்கு கேட்கவும் கேட்கலாம் ; ஏன் தேவையில்லாத பிரச்சனை!’ என, நீண்ட நேரம் தொலைபேசியில் கதைப்பதை தவிர்த்தவளின் மனமோ,“நம்விடயத்தை வீட்டில் கதைப்பதற்குச் சரியான ஆள், என் அண்ணி தான்!” என்றும், “நாளை நாம் இருவருமாக அவவைப் போய்ப் பார்ப்போம்!'' என்றும், ரமேஷ் சொன்னதையே நினைத்தது.

‘நாம் நினைப்பது நடக்குமா?’ அவள் மனம் கிடந்தது அல்லாடத் தொடங்கியது.

*****

அதிகாலையிலேயே சமையலில் அவசரம் அவசரமாக ஈடுபட்டிருந்தாள் சிந்து. தேநீர் அருந்தியபடி, அவளுக்குக் கையுதவிகளை செய்தவாறே அருகில் முக்காலியில் அமர்ந்திருந்தார் அவள் சித்தி!


ஆமாம்! சிந்து சித்தியையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் கடந்து விட்டது. முதலில் விருப்பமின்றி சிந்துவின் வற்புறுத்தலுக்காக வந்தவருக்கு , இப்போது கொஞ்சம்கொஞ்சமாக கொழும்பு வாழ்க்கை பழகிவிட்டது.

வீட்டு வேலைகளில் உதவுவது , கடைகளுக்குப் போவது, மாலை நேரத்தில் கொஞ்சப் பிள்ளைகளிற்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என, அவர் பொழுது சந்தோசமாகக் கழிகிறது.

குத்தரிசியை கழுவி, பிரஷர் குக்கரில் வைத்தவள் , லக்ஷ்மி கழுவி வைத்திருந்த பொன்னாங்காணிக் கீரையை மிகச் சிறிதாக அரிந்து ‘வறை’ தயாரித்தாள். மீன் குழம்புக்குக் கூட்டி அடுப்பில் வைக்கும் போது , “சிந்து!” மாடியிலிருந்து அவள் கணவன் அழைக்கும் குரல் கேட்டது.

'' சித்தி...கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்க; நீங்க ஒன்றும் செய்ய வேண்டாம்; என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேன்!'' கூறியபடி, தன் ஈரக்கையை அருகில் இருந்த துண்டினால் துடைத்தவாறே மாடியை நோக்கி ஓடினாள் சிந்து.

அலாரம் இல்லாமலேயே குக்கர் விஸில் சத்தத்தால் விழித்து விடும் ரகு, மனைவியை அழைத்து , கொஞ்ச நேரம் செல்லம் கொஞ்சி விட்டுத் தான் எழுவது வழக்கம்.


அதே போல் இன்றும் அழைத்தவன், மனைவியின் வருகைக்காக வாயிலை நோக்கியபடியே படுத்திருந்தான்.

வேகமாக உள்ளே ஓடி வந்தவள், '' இங்க பாருங்க ..சமையல் வேலை அரைவாசிக்கு மேல இருக்கு; ப்ளீஸ் பா, பேசாமல் எழும்புங்கோ!” என்றபடி அவனருகில் வர, ´´எழும்பத்தான் போகிறேன்; எந்த நேரம் பார்த்தாலும் உமக்கு ஏதாவது வேலை. அவசரம் …. அவசரம். ம்ம்..இப்பவெல்லாம் என்னைக் கண்டு கொள்ளுவதே இல்லை!´´ அதிகாலையிலேயே சோககீதம் வாசித்தபடியே அவள் கரம்பற்றி இழுத்தவன், கட்டிலில் தன் அருகில் விழுந்தவளிடம், ''சின்னப் பெடியன் ஆசையாகக் கூப்பிட்டா வந்து அவனைக் கவனித்து விட்டு போய் சமையலைச் செய்யலாம் தானே!” என்றபடி வழமை போல அவளுடன் செல்லம் கொஞ்சத் தொடங்கினான்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#17

இப்பொழுதெல்லாம் ரகு மிகவும் மாறி விட்டான். இல்லையில்லை, சிந்து அவனை மாற்றி விட்டாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவி பின்னாலேயே வால் பிடித்துக்கொண்டு அலைவான் ரகு.

அவன் பெற்றவர்களுக்கும் , தம்பிக்குமே இவனைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் தான். நன்றாகக் கேலி கிண்டல்களுக்கும் அவனைப் பழக்கி விட்டாள் சிந்து.

வார நாட்களில் மட்டும் தான் அவர்கள் இங்கிருப்பது. வெள்ளி இரவு மூவருமாக ரகுவின் பெற்றோர் வீட்டுப் போய்விடுவர் . இங்கும் மூன்று பேர் மட்டுமே இருந்தாலும், வீட்டில் இருக்கும் போது கலகலப்புக்குக் குறைவிருக்காது.

இரண்டு மாதங்களாக, கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தற்காலிகமாக வேலைக்குப் போகின்றாள் இவள். அதனால் தான் காலையில் இத்தனை அவசரம்.


கணவனை ஒருவாறு சமாளிக்கிற விதத்தில் சமாளித்து, எழுப்பி , குளியல் அறைக்குள் தள்ளியவள் , சமையலறைக்கு விரைந்தாள். அங்கே, சமையலை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார் லக்ஷ்மி.

'' இதென்ன சித்தி! போதும்…போதும், நீங்க இங்கால வாங்க; மிகுதியை நான் செய்கிறேன்!” என்றாள் பதறியபடியே!

'' நான் சும்மா தானே இருக்கிறேன்மா! இதையெல்லாம் செய்ய மாட்டேனா? பெரிய வேலைபார்! நீ தான் விடுகிறாய் இல்லை.” என்றபடி வெளியே சென்ற லக்ஷ்மியின் மனம், நிம்மதியாலும் பெருமையாலும் நிறைந்திருந்தது .

'' பெற்றவர்கள் இல்லாத பிள்ளை! நான் வளர்த்த வளர்ப்பும் பிழையாக இல்லை!'' என்று மனதில் நினைத்தவாறே மேலே சென்றார் அவர்.

சித்தியை சமாளித்து வெளியே அனுப்பியவள், மிகுதி வேலைகளைச் செய்து சமையல் அறையை ஒழுங்கு படுத்திவிட்டு கணவனுக்கான தேநீருடன் வெளியே வர , ரகுவும் கீழே வந்தான்.


தேநீரைக் குடித்த ரகுவும் சிந்தும், ஒருத்தரை ஒருத்தர் வம்பிழுத்த படியே வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி ,சிந்து பாடசாலை பஸ்சிலும் , ரகு தன் காரிலுமாக வேலைக்குக் கிளம்பிச் சென்றனர்.

பாடசாலையில், இடைவேளையின் போது ஆசிரியர் ஓய்வறையிலிருந்து தன் சக ஆசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்த சிந்து, தன் கைபேசியில் அழைப்பு வரவே , எடுத்துப் பார்த்தாள்.

அவளை அவளின் மைத்துனன் அழைத்திருந்தான்.

'ரமேஷ் ஏன் இப்ப கூப்பிடுகிறார்?’ என்று எண்ணியவாறே, அவன் அழைப்பை ஏற்று கதைக்கத் தொடங்கினாள்.

அவனுடன் கதைத்தவள் யோசனையில் ஆழ்ந்த முகத்துடன் , தன் தலைமை ஆசிரியரிடம் சென்று ஒருமணி நேரம் முன்னதாக வீட்டுக்குச் செல்ல அனுமதி கோரினாள்.

தலைமை ஆசிரியரும் ஒத்துக்கொள்ளவே , தனது அடுத்த பாடவேளைகளை முடித்தவள், பாடசாலை விடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அங்கிருந்து கிளம்பி , காலி முகத்திடலில் உள்ள ‘கார்னிவேல்’ ஐஸ் கிரீம் கடைக்கு ஆட்டோவில் சென்றாள்.

ஆட்டோவில் செல்லும் போதே, ' ஏன் காரணம் சொல்லாது அவசரமென்று வரச் சொல்கிறார்?!’ என்று யோசித்தவள், ‘ரமேஷ் பொறுப்பின்றி நடந்து கொள்ளும் பிள்ளை அல்லவே! காரணமில்லாமல் சந்திக்கவேண்டும் என்றிருக்க மாட்டார். குரல் கூட வித்தியாசமாக இருந்ததே! என்னவென்றாலும் வீட்டில் கதைக்கலாமே!’ மனம் குழம்பியவாவாறே ‘கார்னிவேலை’ வந்தடைந்தவள், ஆட்டோவுக்குப் பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கே ஒரு மேசையில் ரமேஷ் அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு, முறுவலுடன் அவனிருக்குமிடம் சென்றவள், ''என்ன விஷயம் ரமேஷ்? அதுவும் அண்ணாவுக்குத் தெரியாமல்!” நேரடியாகக் கேட்க, கணம் தடுமாறினான் ரமேஷ். தன் அண்ணியின் முகத்தைப் பார்க்கவே மிகவும் சங்கடம் கொண்டான் அவன்.

'நான் இதை எப்படிச் சொல்லி முடிப்பேன்! அண்ணி உதவுவாவா?' என, ஆயிரமாம் முறையாக மனதில் புலம்பியவன் , தயக்கத்துடனே சிந்துவைப் பார்த்து , ''ஸாரி அண்ணி, இந்த வேகாத வெயிலில் உங்களை வர வைத்துவிட்டேன்! ஆனால், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; கோபிக்காதீங்க அண்ணி.” என்றான் கெஞ்சலாக.

'பெடியன் நசுங்கிறதைப் பார்த்தால் விஷயம் பெரிசு போலிருக்கே!' என நினைத்த சிந்துவும், “இதிலென்ன இருக்கு ரமேஷ், நான் என்ன நடந்தா வந்தேன்!” முறுவலித்தவாறே கதிரையை(இருக்கையை) இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டாள்.

“ம்ம் சொல்லுங்க ரமேஷ் என்ன விடயம்?” மீண்டும் வினவவும் செய்தாள்.

“சொல்கிறேன் அண்ணி; அதற்கு முதல் ஐஸ் குடிப்போமா?” என்றவன், அவள் பதிலுக்குக் காத்திராது எழுந்து சென்று, ஐஸ்கிரீம் ஆடர் பண்ணியவாறே, கைபேசியில் இந்துவை அழைத்தான்.

அவள் அழைப்பை ஏற்றவுடன், '' இந்து …..அண்ணியும் வந்திட்டா , நீர் வரவில்லையா? '' அவசரமும் அந்தரமுமாகக் கேட்டான்.

''இதோ பஸ்ஸால் இறங்கி அங்க தான் வந்து கொண்டிருக்கிறேன்! '' என்ற இந்துவின் பதிலில் அமைதியானவன், அவளுக்கும் சேர்த்தே ஐஸ்கிரீமை வாங்கினான்.

தன்முன் மூன்று ஐஸ்கிரீம் கப்களுடன் வந்தமர்ந்தவனை கேள்வியாய் நோக்கினாள் சிந்து.


'' என்ன ரமேஷ் இது! யாருக்கு இரண்டு ஐஸ்!?” ஆச்சரியமாக வினவிக் கொண்டிருக்கையில், அருகில் வந்த நின்ற இந்து, ''ஸாரி ரமேஷ், பஸ் வர கொஞ்சம் லேட்டாவிட்டது!” அவனைப் பார்த்து மெல்லிய குரலில் கூறியவள், ஆராய்ச்சியும் ஆர்வமுமுமாகத் தன்னை நோக்கிய சிந்துவிடம், ''ஹாய்!'' என முறுவலித்தாள்.

பதற்றமும் அதை மறைக்கும் மென்முறுவலுமாக, வேர்த்து விறு விறுக்க வந்து நின்ற, அவ்வழகிய இளம் பெண்ணைக் கண்ட சிந்து, தடுமாற்றத்தோடு இருக்கும் ரமேஷையும் அவளையும் மாறி மாறி ஆச்சரியம் ததும்பப் பார்த்தவளுக்கு, மெலிதாக விஷயம் விளங்கியது.

ஆனாலும் அவ்விடயத்தின் தீவிரம் தெரியாததால், “ஹாய், நான் ரமேஷின் அண்ணி சிந்து; உட்காருங்க.” முறுவலோடு தன்னருகில் இருந்த இருக்கையைக் காட்டி உபசரித்தாள்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#18
அத்தியாயம் 7.


இரவுணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள் சிந்து.


அரிசி மாப்பிட்டும் , நெத்தலிப்பொரியலும் , இடித்த தேங்காய்ச்சம்பலும் என்றால் அவள் கணவன் மிகவும் விரும்பி உண்பான்.

கரங்கள் அவற்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்க, அவள் சிந்தையோ, மாலை ஐஸ்கிரீம் கடையில் நிகழ்ந்தவற்றையே சுற்றி வந்தது.

''ஹாய் '' என பதற்றத்துடன் வந்து நின்றவளையும், சங்கடமும் கலவரமும் கலந்து, தவிப்புடன் அமர்ந்திருந்த மைத்துனனையும் மாறி மாறிப் பார்த்தாள் சிந்து.

இருவரும் நின்ற நிலை பிரச்சனை இதுவாகத் தானிருக்கும் என்ற ஊகத்தைத் தர, “ஏன் நிற்கிறீர் உட்காரும்!” மீண்டும் மலர்வுடன் உபசரித்தாள்.

மறுகணம், சட்டென்று அமர்ந்து கொண்ட இந்துவின் பார்வையோ, தவிப்பு விலகாது ரமேஷைத் தொட்டுத் தொட்டு மீண்டது.

அவனோ, எதுவுமே சொல்லத் தோன்றாது அமைதி காத்தான்.

அண்ணியைக் கொண்டு அனைத்தையும் சமாளித்துவிடலாம் என்ற அசையாத நம்பிக்கையில்தான் புறப்பட்டு வந்திருந்தான். தான் நேசித்தவளையும் வரவைத்திருந்தான்.

ஆனால் இப்போதோ, வார்த்தைகள் எங்கோ சென்றுப் பதுங்கி, கண்ணாமூச்சி ஆட்டம் ஆட விளைகின்றதே! அதுவும், தன் அண்ணியின் கூரான பார்வையைத் தாங்க முடியாது, அங்குமிங்குமாக அலைமோதியது அவன் பார்வை!

அவர்கள் இருவரும் இருந்த நிலையே அவள் மனதில் எண்ணியதை ஊர்ஜிதம் செய்ய, “ ஐஸ்கிரீமைக் குடித்துவிட்டு ஆறுதலாகப் பேசுவோமே! '' என்றபடி தன்னுடயதைக் குடிக்கத் தொடங்கினாள் சிந்து.

அவளைத் தொடர்ந்து, தாமும் ஐஸ்கிரீமைச் சுவைக்கத் தொடங்கினர் ரமேஷும் இந்துவும்.

சிந்துவின் பார்வையோ, மைத்துனனை அடிக்கடி அளவெடுத்தது! அதனை கண்ணுற்ற ரமேஷால் தொடர்ந்து மௌனம் காக்க முடியவில்லை. தடுமாற்றத்தை மென்று விழுங்கிக்கொண்டு, “அண்ணி!” ஐஸை வெறித்தவாறே அழைத்தான்.

“ஹ்ம்ம்..சொல்லும் ரமேஷ், என்ன விஷயம்?” அவள் கேட்ட தொனியில் இலேசான கேலி எட்டிப் பார்த்தது. சட்டென்று அண்ணியாரை நிமிர்ந்து நோக்கியவன் பார்வையோ, கெஞ்சலோடு இருந்தது.

“அண்ணி, இவ..இந்து ...வந்து ..நாங்க இருவரும் ஒன்றாகத்தான் கம்பஸில் படித்தோம். வந்து நாங்க... அண்ணி...” வெகுவாகத் தடுமாறியவன், சிந்துவுக்கு மிகவும் புதியவனாகத் தெரிந்தான்.

‘காதல்தான் மனிதனை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது!’ மனதுள் நகைத்துக்கொண்டவள், '' என்ன லவ்வா ரமேஷ்?” விழிகளால் நகைத்தவாறே, அவனையும் இந்துவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

சட்டென்று அவள் கேட்க, இருவரும் அவஸ்தையாகத் தடுமாறியதென்னவோ ஒருகணம் தான்; மறுகணம், இருதலைகளும் ஒருசேர ‘ஆமென’ ஆடியன!

சிந்துவோ, இருக்கையில் வாகாகச் சாய்ந்தமர்ந்து, முன்னிருந்தவர்களையே இளமுறுவலுடன் பார்த்திருந்தாள்.

பேச்சொலி தற்காலிகமாக விடைபெற்றிருக்க, அமைதித்திரை போர்த்திருந்தவர்களில் முதலில் அத்திரையை விலக்கினாள் சிந்து. இப்போது அவள் முகத்தில் சற்று முன்னிருந்த கேலி வடிந்து, ஒருவகைத் தீவிரம் குடி வந்திருந்தது.

மனதுள் உருவான பல கேள்விகளோடு ரமேஷை நோக்கியவள், “சரி ரமேஷ், அதையேன் இங்கு வைத்து அதுவும் பயந்துகொண்டு சொல்கிறீங்க?'' என்றவள் , ‘ரமேஷ் அப்படியொன்றும் பயந்தாங்கொள்ளி இல்லையே! நேரடியாகவே தன் அப்பா, அண்ணாவிடமோ இல்லையேல் அம்மாவிடமோ கதைக்கும் தைரியமானவன் தானே! இப்போ இப்படிப் பதுங்குகிறானே!’ சிந்துவின் மனதில் எச்சரிக்கை மணியோசை துல்லியமாகக் கேட்கத் தொடங்கியிருந்தது!

“சொல்லுங்க ரமேஷ்! என்ன பிரச்சனை?” சிந்து அப்படிக் கேட்டதும்தான் தாமதம் , மளமளவென மடை திறந்த வெள்ளமாய் சொல்லத் தொடங்கினான் ரமேஷ்.

கேட்டிருந்த சிந்துதான் அடியோடு கலங்கிப் போனாள்! 'இந்தப் பிள்ளைக்கு என்ன தைரியம்!?’ இப்படித்தான் அவள் மனம் முதலில் நினைத்தது. மைத்துனனில் கட்டுக் கடங்காத கோபமும் வந்தது!

'பெரும் பிரச்சனை, அவமானத்தின் பின் பிரிந்த குடும்பங்கள்; திரும்பவும் கல்யாணத்தில்!? மாமா இதை ஏற்கவே மாட்டார் ; அவருக்கு முதல் ரகு? நினைத்துக் கூடப் பார்க்க முடியாததை , இவன் என்ன துணிவில் என்னைக் கதைக்குமாறு கூறுகிறான்?’ மனதில் குழம்பியவளின் முகமும் அதையே பிரதிபலித்தது!

அதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் வேதனையால் கசங்கிய படி, தம் நிலையை அவளிடம் தெளிவாகக் கூறினர்.

அப்போதும் சிந்துவின் மனம் இளக்கம் காட்டவில்லை.

“நாங்க இப்படிச் சொல்கிறோமென்று தப்பாக நினைக்காதீங்க அண்ணி!” மனதில் குடைந்து கொண்டு அடைத்திருந்ததை சிந்துவிடம் கொட்டிவிட்ட ஆறுதலில் மனம் சமநிலைக்கு வந்திருக்க, பொறுமையாக உரைத்தான் ரமேஷ்.

கலங்கியாவாறே தலைதாழ்த்திருந்த இந்துவை ஒருகணம் உற்றுப் பார்த்தவன், “அண்ணாவின் விசயத்துக்கு முன்பிருந்தே நாங்க விரும்புகின்றோம் அண்ணி. அப்படியெல்லாம் நடக்குமென்று நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அப்படியிருந்தும், இவ்வளவு நாட்களாக அமைதியாக ஒதுங்கி இருந்தோம். ஆனாலும் பாருங்க, எங்கள் மனம் மாறவில்லை!” சொல்லி நிறுத்தியவன், முறைப்போடு கேட்டிருக்கும் சிந்துவை ஒரு முடிவோடு நோக்கினான்.

“ஒருவர் ஒருவரை மறந்து...இது சரிவராது என்று ஒதுங்கியிருந்தோம் தான்; ஆனால், கடைசிவரை எங்களால் முடியவே முடியாது !” தீர்மானமாக மறுத்தவனை அதிர்வோடு பார்த்தாள் சிந்து .

“அப்படியென்றால், இப்போ என்ன சொல்ல வாறீர் ரமேஷ்?” கூர்மையாக ஆரம்பித்தாள். “உம் இஷ்டத்துக்கு உம் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போறீரா?” தொடர்ந்தவள் குரலில், கோபமே பிரதானமாக வெளிப்பட்டது.

“இல்லையில்லை. நான் அப்படிச் சொல்ல வரவில்லை!” அவசரமாக மறுத்தவன், “என்ன அண்ணி, என்னைப் போய் இப்படிக் கேட்கிறீங்க!” வருத்தப்பட்டான்.

“குடும்பத்தை மீறி, எங்கள் இஸ்டத்துக்கு, கஷ்டம் தரும் வகையில் நிச்சயம் நடக்க மாட்டோம் அண்ணி. அதேவேளை, வேறு வாழ்க்கை என்பதுவும் இனிமேல் எங்களுக்கு இல்லை!” என்றவன் குரலில் இப்போது கடினமே பிரதானமாக நின்றது.
 

Rosei Kajan

Administrator
Staff member
#19

அவனை ஆமோதிக்கும் வகையில் கசிந்த விழிகளுடன் ஏறிட்டாள் இந்து .

“இப்போது கூட, அப்பா கல்யாணப் பேச்சை ஆரம்பித்ததால் தான் இதை உங்களிடம் சொல்ல நினைத்தேன். ஏனென்றால், அப்பாவோ அல்லது அம்மா , அண்ணாவோ நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள் அண்ணி!” என்றவன்,

“ஒருவேளை, இந்து வேறு வாழ்க்கையைத் தேடுவதென்றால் எனக்கு அதில் ஒருவித பிரச்சனையும் இல்லை!” என்று சொல்லிக்கொண்டே சென்றவனை, தீவிழியால் சுட்டுப் பொசுக்கினாள் இந்து.

அதைக் கவனித்த சிந்துவுக்கு தலைவலி அதிகரித்தது. அவர்கள் ஒருவர் ஒருவரில் கொண்டுள்ள நேசம் புலப்பட்டதில் மனதில் இருந்த கோபத்தையும் மீறி அவர்களில் பரிதாபமே எழ முயன்றது .

“இவர் இப்போதுதான் உங்களிடம் சொல்கிறார் அக்கா, நான் ஏற்கனவே வீட்டில் சொல்லிவிட்டேன்!” ரமேஷை முறைத்தவாறே வாய்திறந்தாள் இந்து.

“என் அக்கா செய்தது மஹா துரோகம்! அப்படி இல்லையென்று நாங்க யாருமே ஒருபோதும் சொல்லப் போவதில்லை அக்கா!” என்றவள் விழிகளால் நீர் வடிந்தது. தமக்கையின் செயல் அவளை இன்றும் குன்றிக் குறுக வைக்கின்றதே!

"அவள் காதலித்தது எங்களுக்குத் தெரியவே தெரியாதக்கா. அப்படித் தெரிந்து ரகு அண்ணாவுக்கு அவவைப் பேசவில்லை!” என்றவள் அழுதே விட்டாள்.

“ஸ்ஸ்.. இப்போ என் அழுகிறீர் இந்து? அழுவதால் நடந்தது எதுவும் இல்லையென்று ஆகிவிடுமா?” இந்துவைக் கடிந்து கொண்டான் ரமேஷ்.

‘உன் அக்கா விலகியதால் தான் எனக்குக் கிடைத்தார் என் ரகு!’ சட்டென்று இப்படித்தான் சிந்துவின் மனதில் தோன்றியது. இவ்வெண்ணமே அவள் மனதை ஒருநிலைக்கு கொண்டுவரத் துணைபுரிந்தது.

‘இவர்கள் இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் தங்கள் நிலையைக் கூறியபின், இப்போ அவசரப்பட்டு எதுவுமே கதைக்கக் கூடாது!’ மனதில் உறுதியாக நினைத்துக் கொண்டவள், ‘கோபத்திலும் குழப்பத்திலும் வார்த்தைகளை விட வேண்டாம். ஆறுதலாக யோசித்து ஒருவழி கண்டு பிடிப்போம்!’ என்ற முடிவுக்கு வந்தாள்.

'' எனக்கு இலேசாகத் தலை வலிக்குது; இதைப்பற்றி நாம் பிறகு கதைப்போம்; இப்போது நான் போயிட்டு வருகிறேன்!” அவர்கள் இருவருக்கும் பொதுவாக கூறியபடி எழுந்தவள், ''அண்ணி! '' என அவசரமாக எழுந்த ரமேஷையும் கவனிக்காது வெளியில் வந்துவிட்டாள்.

இப்படி மாலையில் நடந்தவற்றை நினைத்துக்கொண்டு பிட்டுக் குழைத்துக் கொண்டிருந்த சிந்துவை .''சிந்தூ!'' என்ற சித்தியின் குரல் இவ்வுலகுக்குக் கூட்டி வந்தது.

அவர் அழைத்தவுடன் திடுக்கிட்டு , தன்னைச் சமாளித்துக் கொண்டே, '' என்ன சித்தி? '' உள்ளத்தின் குழப்பத்தை மறைத்தது வினவினாள்.

“குழைத்த பிட்டையே எத்தனை தரம்தான் குழைபாய்மா?” என்ற லக்ஷ்மி , “ஏன்மா, ஏதாவது பிரச்சனையா?” என்றார் பரிவாக.

அவள் வீடு திரும்பியதிலிருந்து பல தடவைகள் இதே கேள்வியை அவர் கேட்டு விட்டார்; சிந்துவால்தான் பதில் சொல்லவும் முடியவில்லை. தன்னை நம்பிக்கையோடு அணுகிய ரமேஷின் உள்ளத்து ஆசையையும் அவ்வளவில் அசட்டையாக ஒதுக்க முடியவில்லை!

“இல்லை சித்தி அப்படியேதுமில்லை! இருந்தால் சொல்லமாட்டேனா? கொஞ்சம் தலைவலி அவ்வளவும் தான்!” என்றாள் மழுப்பலாக!

“அப்போ நீ விலகு, நான் மிகுதியைப் பார்க்கிறேன்; நீ போய் இரண்டு பரசிட்டமோல் குடி!” அவளை வெளியே அனுப்ப முயன்றார் லக்ஷ்மி.

“இல்லை சித்தி, வந்ததும் குடித்து விட்டேன்; இப்போ கொஞ்சம் பரவாயில்லை; நீங்க வெங்காயம் மட்டும் உரித்துத் தாங்க, மிகுதியை நான் செய்கிறேன்!” என்றவாறே வேலையைத் தொடர்ந்தாள் அவள்.

வழமை போல தான் வம்பிழுக்கும் போதெல்லாம் பதிலடி தந்தும் , அன்று பாடசாலை பஸ்ஸில் போகும் போதும், வரும் போதும் நடந்தவைகள் , பள்ளியில் நடந்தவைகள் என ஒன்று விடாது கூறி , கலகலத்துக் கொண்டிக்கும் மனைவியின் அமைதி, யோசனையில் மூழ்கியிருந்த அவள் முகம், இரவு வீடு வந்த ரகுவை வெகுவாகக் குழப்பியது.

''ஏன்டா ஒரு மாதிரி இருக்கிறீர்? '' எனக் கேட்கவும் செய்தான்.

அவளின் மழுப்பலான பதிலில், அவள் எதையோ சொல்லத் தயங்குவதைப் புரிந்து கொண்டவன், நிச்சயம் தன்னிடமிருந்து எதையும் மறைக்க மாட்டாள் என்கின்ற நம்பிக்கையில் , வழைமைபோல அவளுடன் சேட்டைகள் செய்வதும் ,லக்ஷ்மியோடு சேர்ந்து அவளைக் கேலி செய்வதுமாக இருந்தான்.

இரவு படுக்கையில் சாய்ந்திருந்த சிந்துவிடம், “ இன்று உன்னை நெருங்கவே மாட்டேன்! '' என, அடம் பிடித்துச்சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் நித்திராதேவி.

தன்னருகில் நிம்மதியாய் உறங்கும் கணவனைப் பார்த்துக்கொண்டே இருந்தவள், ' இப்போ என்ன செய்யப் போகிறேன்! ' மனதுள் அங்கலாய்த்தாள். அவளுக்கோ, இந்தப் பிரச்சனையை அணுகும் வழி புலப்படவே இல்லை.

இவ்வாறு நீண்ட நேரம் நித்திரையின்றிப் புரண்டவள், '' சிந்து! இதென்ன முழிச்சா இருக்குறீர்? என்னடா நடந்தது! சொல்லாமல் இருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? உமக்கு இப்ப என்ன பிரச்சனை? '' கேட்டபடி எழுந்த கணவனைப் பார்த்து, ‘பேசாமல் சொல்லிடுவோமா?’ ஒரு நிமிடம் நினைத்து, மறுகணம், ‘இப்போது வேண்டாம்!’ அந்த எண்ணத்தைக் கைவிட்டவள்,

''ம்ம்...ஒன்றுமில்லையப்பா! இந்தச் சின்னப்பெடியன்(பையன்) தூங்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்ததில், எனக்கு நித்திரை வரமாட்டேன் என்குதே! இப்போ என்ன செய்யலாம்?!” அவனோடு நெருங்கிப் படுத்தவாறே முணுமுணுத்தாள்.

“ஓ! அதுவா விடயம்? அப்படியே நம்பிட்டேன் சிந்து!” நித்திரைக் கலக்கம் விலகாது சொன்னவன், “எதுவென்றாலும் இப்போது தூங்கும் சிந்து; மிகுதியைக் காலையில் பேசிக்கொள்ளலாம். பாரும் எத்தனை மணியாச்சு! நாளை காலையில் கொஞ்சம் நேரத்தோடு போக வேண்டும்!” சொல்லிக்கொண்டே நித்திரையைத் தொடர, அவளும் வலுகட்டாயமாக நித்திரா தேவியை அணைத்துக்கொள்ள முயன்றாள்.

‘இவர்களை மனம் நோகச் செய்யாது இந்த விடயத்தை எப்படி கையாள்வது?’ அவள் தலைக்குள் இக்கேள்வி விழிப்போடு குறுகுறுத்துக் கொண்டிருந்தது!
 

Rosei Kajan

Administrator
Staff member
#20
அத்தியாயம் 8.

முதல் நாளிலிருந்து நடத்திய மனப்போராட்டத்தை ஒருவழியாக முடிவுக்குக்கொண்டு வந்தாள் சிந்து.

மைத்துனனின் காதலை கணவனிடம் சொல்வதென முடிவெடுத்தவள், அதற்குமுன் லக்ஷ்மியிடம் அதைத் தெரிவிக்க விரும்பினாள்.

இவ்விடயத்தைத் தெரிந்து கொள்கையில், நிச்சயம் கணவனிடமிருந்து அமைதியை இவள் எதிர்பார்க்கவில்லை.

அப்படித் தம்மிடையே மனஸ்தாபம் ஏற்படுமாயின்,‘சித்தி நிச்சயம் குழம்பிப் போவார்!’ என எண்ணிக்கொண்டவள், முதலில் அவரைத் தயார்ப்படுத்த முடிவெடுத்தாள்.

அன்றாட வழக்கப்படி காலையில் எழுந்து, அவசரம் அவசரமாக வேலைகளை முடித்து , முடிந்தவரை கணவன் , சித்தியுடன் இயல்பாய் இருந்தவள் , பாடசாலை சென்றுவந்து மதிய உணவை உண்ட பின், தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த லக்ஷ்மியின் அருகில் அணைந்தவாறே வந்தமர்ந்தாள் .

முதல் நாளிலிருந்து அவளையே உன்னிப்பாகக் கவனித்து வரும் பெரியவர், மகளை உற்று நோக்கினார். “என்னடாம்மா?” கனிவோடு ஆரம்பித்தவர்,

“நீயாக சொல்வாய் என்றுதான் நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் சிந்து; அப்படி என்னதான் உனக்குப் பிரச்சனை? நேற்றிலிருந்து நீ கொஞ்சமும் சரியாக இல்லை!” என்றவர் முகத்தில் என்னவென்று அறிந்துகொள்ளும் தீவிரம் குடிவந்திருந்தது.

அவளை, சிறுவயதிலிருந்து தாயாய் தந்தையாய் பேணி வளர்த்தவர் அல்லவா? அவருக்குத் தான் அவளின் ஒவ்வொரு அசைவும் அத்துப்படியாச்சே!

தடுமாற்றமும் குழப்பமும் குடியிருந்த சிந்துவின் வதனத்தில் மெல்லிய முறுவல் மலர, சிறிய தாயாரைப் பார்த்தவள்,


''சித்தி...அது வந்து...நான் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக் கேட்பீர்களா? கோபப்படக் கூடாது! என்ன சொல்லுறீங்க? சொல்லவா? '' இதற்குச் சம்மதமென்றால் சொல்கிறேன் என்ற தோரணையில் ஆரம்பித்தவளை, பொய்யாக முறைத்தவாறே இடையிட்டார் லக்ஷ்மி.

“அப்படியென்றால், கோபம் கொள்ளவைக்கும் விடயத்தைத் தான் சொல்லப் போகிறாயா?” கேட்டவர், பார்வை கூர்மையானது.

அதைக் கேட்ட சிந்துவின் பார்வை தொலைக்காட்சியில் நிலைத்து நகர மறுத்து நிற்க, சிறிது நேரம் மௌனம் காத்தாள்.

'' நான் சொல்லப் போவது என் சம்பத்தப்பட்ட விடயமில்லை சித்தி! ஆனால், நம் குடும்பம் சம்பந்தப்பட்டது. இதை அவரிடம் சொல்ல வேண்டும். அதற்குமுதல் உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்!” என்றவள், அதன் பின் காத்திராது, ரமேஷ் சொன்னதை அப்படியே ஒப்புவித்தாள்.

கேட்டிருந்த லக்ஷ்மியோ, அவள் கூறி முடித்த பின்னும் அதிர்விலிருந்து விடுபடவில்லை! கேட்ட செய்தியில் உறைந்த அவர் இதயமோ, மகள் சொல்வதை ஜீரணிக்கவே முக்கி முனகியது! அப்படியே சிலையாக இருந்தவர், ''சித்தீ! '' என்ற சிந்துவின் உலுக்கலில் கலைந்தார்.

'' ஈஸ்வரா! இது என்ன சோதனை? இந்த ரமேஷின் புத்தி இப்படியாப் போகவேண்டும்! எனக்கு என்ன சொல்வதென்றோ செய்வதென்றோ புரியவில்லையே!” அரற்றினார்.

“இந்தப் பரந்த உலகத்தில் வேறு பெண்ணே அவனுக்கு கிடைக்கவில்லையா? தேடிப்போய் திரும்பவும் அந்த வீட்டிலேயே விழுந்திருக்கிறானே!” புலம்பத் தொடங்கினார் லக்ஷ்மி.

சித்தியின் புலம்பலை, சிறிது நேரம் அமைதியாகப் பார்த்திருந்தாள் சிந்து. “ மாற்ற முடியாதென்று தெரிந்த பின்னரும் நடந்ததைக் கதைப்பதால் பயனென்ன சித்தி!? அதை விட்டுவிட்டு இப்போதைய பிரச்சனையைப் பார்ப்போம்!” என்றவளைப் புரியாது பார்த்தார் லக்ஷ்மி.

“ஆமாம் சித்தி! மாமா ரமேஷுக்கு பெண் பார்த்திருக்கிறாராம்! ஜாதகமும் பொருத்தமாக இருக்கென்று சொல்லிக் கேட்டவராம். இப்போ வந்து ரமேஷ் இப்படியொரு குண்டைத்தூக்கிப் போட்டிருக்கிறார்! அதுமட்டுமில்லை, அவர்கள் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள். இந்துவைப் பார்க்கும் போதும் பாவமாக இருக்குச் சித்தி! அவள் என்ன தப்புச் செய்தாள்?” என்றவளை, இப்போது முறைத்தார் அவள் சித்தி.

''ஐயோ சிந்து! இப்போ யார் தப்புச் செய்தது என்றா பார்ப்பார்கள்? அவர்கள் வீட்டுப்பெண் செய்த காரியத்தை இலேசில் மறந்து, மன்னித்து மீண்டும் அதே குடும்பத்தில்...கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார் பார்ப்போம்!” அவர்களுக்காக சிந்து பேசுவதை அவர் இரசிக்கவில்லை என்பதை அவர் குரலின் தொனி தெளிவாக்கியது.

“ஐயோ! என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லையே! ரகுவின் அப்பா? அதோடு, உன் புருஷன் பற்றி உனக்குத் தெரியாதா?” தன் விருப்பமின்மையை மகளுக்கு உணர்த்த முயன்றார் லக்ஷ்மி.

அவளோ, தான் தீர்மானித்ததில் நிதானமாக நின்றாள்.

“அதனால் தானே நேற்றிலிருந்து மண்டையப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறேன்! ஆனால், இந்த விசயத்தை சும்மா விடவும் இயலாது தானே? இன்றைக்கு அவர் வந்ததும் கதைக்கப் போகிறேன் சித்தி. முதல் எப்படியோ! இப்போ வீட்டில் எல்லோரும் சந்தோஷமாகத் தானே இருக்கிறார்கள்!” என்றாள்; கணவனிடம் கதைப்பது உறுதி என்பதை அவருக்குத் தெரிவிக்கும் முகமாக!

லக்ஷ்மியின் மனமோ, கொஞ்சமும் இசைய மறுத்தது. '' பிள்ள, எனக்கு இது சரியாகப்படவில்லை! பழசை எல்லாம் நினைவுபடுத்தி உன் நிம்மதியை நீயே கெடுக்கப் போகின்றாயா?”

மகளின் அருமையான குடும்ப வாழ்வில், திருப்தியும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த அவருள்ளம், அது கெட்டுவிடுமோ என அச்சம் கொண்டேங்கியது.

அப்படியும் இப்படியும் கலங்கிய லக்ஷ்மியை படாது பாடுபட்டுச் சமாதானம் செய்த சிந்து, “இதைப் பற்றி நான் அவரோடு கதைக்கும் போது நீங்களும் கூடவே இருங்க சித்தி; கொஞ்சம் கோபப்படாமல் சொல்வதை முழுதும் கேட்பார்!” லக்ஷ்மியிடம் மிகவும் தன்மையாக கேட்டுக் கொண்டாள்.

லக்ஷ்மி மீது கணவனுக்குள்ள பாசமும் மரியாதையும் தெரிந்தவள் , அவரருகில் இருந்தால் கணவனின் கோபத்தின் வீரியத்தைக் குறைக்கலாம் என்று நினைத்தே இவ்வாறு கேட்டுக்கொண்டாள்.

சமாதானமோ , விருப்பமோ சிறிதுமின்றியே சிந்துவின் கோரிக்கைக்குத் தலையாட்டினார் லக்ஷ்மி.

*****
 
Status
Not open for further replies.
Top