திருக்கோணேஸ்வரம் - இலங்கை - இதழ் 4

Rosei Kajan

Administrator
Staff member
#1


1543602173821.png

இலங்கைத் தீவானது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக விளங்கி வருகிறது.

பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. மூன்று புறங்களும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரம்.


1543602215706.png

1543602227224.pngஉலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயம், இலங்கையை ஆண்ட ‘மனு மாணிக்கராஜா’ என்ற மன்னனால் கி.மு.1300ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டது என்று சான்றுகள் கூறுகின்றன.

திருக்கோணேஸ்வர ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புமிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேஸ்வரரும் இறைவி மாதுமையாலும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் ‘பாபநாசம்’ என அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம், பாவங்களைக் கழுவித் தீர்க்கவல்லது என்பதாகும். தலவிருட்சமாக ‘கல்லால மரம்’ விளங்குகின்றது.

இத்தலம் திருஞானசம்மந்தரால் தேவாரப்பதிகமும், அருணகிரிநாதரால் திருப்புகளும் பாடப்பெற்ற தலமாகும்.
இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே ‘தட்சிண கைலாயம்’ எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று ‘மட்டக்களப்பு மான்மியம்’ என்னும் நூல் கூறுகின்றது.


இராவணன், தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணம் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப்பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது.

1543602287916.png


1543602376850.png

திருகோணேசப்பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்குப் பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.

ஆடிமாதம் போலவே, மகாமத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத்திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நிதனிபிரபு
 
Top