தனிமை துயர் தீராதோ 10

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம்-10
இரண்டு வருடங்கள் கழித்து வந்த தமக்கை இரண்டு வாரங்கள் அன்பையும் அக்கறையையும் பொழிந்துவிட்டு மின்னல் மாதிரி மறைந்துவிட்டதில் வித்யாதான் மிகவும் சிரமப்பட்டுப் போனாள்.


“அம்மா, பார்க்குக்கு விளையாடப் போகவா?”


“வேண்டாம்!”


“இது எனக்கு விளங்கவே இல்லை. சொல்லித் தருகிறீர்களா?”


“நான் சமைக்கோணும். அண்ணாவைக் கேள்!”


இப்படி தன்னை எதிலும் கவனித்துக்கொள்ளாத அன்னையின் செயல்களை பொறுக்க முடியாது தமையனிடம் வந்து நின்றாள் வித்யா.


“எனக்கு அக்கா வேண்டும் அண்ணா. அக்கா இல்லாமல் இங்கே ஒன்றுமே பிடிக்கவில்லை.” கண்ணீருடன் சொன்னவளை அணைத்துக் கொண்டவனுக்கும் கூட அக்காவின் அருகாமையும் அவள் காட்டும் பாசமும் பரிவும் வேண்டும் என்றுதான் இருந்தது.


அதை அவனால் யாரிடம் சொல்லமுடியும்?


“கிறிஸ்மஸ்க்கு வருவாள்தானே.” என்று தேற்றினான்.


“அதுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கே அண்ணா.”


அவனுக்கும் அதே ஏக்கம் தானே!


“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? எனக்கும் தான் அக்கா வேண்டும் என்று இருக்கிறது. அதை நான் யாரிடம் போய்க் கேட்க?” என்று சிடுசிடுத்தான்.


தமையனின் கோபத்தில், “போ..! இனி உன்னோடு கதைக்கமாட்டேன்.” என்று அழுகையில் உதடு பிதுங்கச் சொல்லிவிட்டு ஒரு மூலையில் போய் முடங்கிக்கொண்டாள் வித்யா.


அடுத்து வந்த நாட்களிலும் சத்யனோடு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்த வித்யாவுக்கு, நாட்கள் செல்லச் செல்ல அக்கா வேண்டும் என்கிற பிடிவாதம் மெல்ல மெல்ல வலுத்தது. ஏழு வயதேயான பிஞ்சு இல்லையா. தாயைப்போல் வேளா வேளைக்கு உணவு தந்து, படிப்பு சொல்லிக்கொடுத்து, அவளோடு கூடச் சேர்ந்து விளையாடி, கிச்சுக்கிச்சு மூட்டிச் சிரித்து, குளிக்க உதவிசெய்து, இரவில் உறங்குகையில் கதைகள் சொல்லி அவர்கள் இருவரையும் இருபுறமும் அணைத்துக்கொண்டு உறங்கும் தமக்கையின் அருகாமைக்கும், அரவணைப்புக்கும் ஏங்கி ஏங்கியே அவளுக்குக் காய்ச்சல் பிடித்தது.


அந்தக் காய்ச்சலின் வேகத்தில், “அக்கா… அக்கா வேண்டும்.” என்று அவள் அரற்ற, இது என்ன புதுப் பிரச்சனை என்று பயந்துபோனார் ஈஸ்வரி. பின்னே, மகள் தமக்கைக்காக ஏங்குவது தெரிந்தால் அதுக்கும் ஒரு விழா எடுத்துவிடுவாறே அவரின் அருமைக் கணவர்!


கணவரின் காதுக்கு இந்த விஷயம் எட்ட முதலில் வித்தியை சமாளிக்க எண்ணி, “அக்காவுக்கு இப்போது பள்ளியில் பரீட்சை நடக்கிறதாம். அதனால் இன்னும் ஒரு மாதத்தில் உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறாள். ” என்று, எதையெதையோ பொய்யாகச் சொல்லி, அவளைத் தேற்றி காய்ச்சலை மாற்றுவதற்குள் படாத பாடுபட்டுப் போனார் ஈஸ்வரி.


ஆனால் தேறிவந்த வித்யாவோ, “கிறிஸ்மஸ்க்கு வரும் அக்கா என்னோடேயே இருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் வீட்டில் இருங்கள்.” என்று ஒரே பிடியாக நிற்கத் தொடங்கினாள்.


சத்யனும் அதையே சொல்ல திகைத்துப் போனார் ஈஸ்வரி. “அப்படி அவள் இங்கேயே இருக்க முடியாது வித்தி. அப்பாவுக்குப் பிடிக்காது.”


“அப்பாவுக்கு ஏன் அக்காவை பிடிக்காது? அவள் பாவம். அவளுக்கும் இங்கே இருக்கத்தான் விருப்பம்.” என்றான் சத்யன் பிடிவாதமாக.


அதிலே கோபம் கொண்டவரோ, “உங்கள் இருவருக்கும் ஒரு தடவை சொன்னால் புரியாதா? அவள் இங்கே வர முடியாது. அப்படி வந்தால் அப்பா திரும்பவும் குடித்துவிட்டு வந்து சண்டை பிடிப்பார். பிறகு போலிஸ் வரும். அப்பாவை வீட்டில் இருந்து துரத்திவிடும்.” என்று அவர்களை மிரட்டினார்.


“அப்போ நீங்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் இருங்கள். நீங்களும் இல்லாமல் அக்காவும் இல்லாமல் இருக்க முடியாது. அண்ணா ஒரே என்னோடு சண்டை பிடிக்கிறான்.” என்று அழுதாள் மித்ரா.


“இனி நீ அடிதான் வாங்கப் போகிறாய்.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “நீங்கள் அடித்தால் நான் போலீசிடம் சொல்லிக்கொடுப்பேன்.” என்றுவிட்டாள் வித்யா.


அதிர்ந்துபோனார் ஈஸ்வரி. ஏற்கனவே ஒருமகள் செய்த காரியத்திலேயே படாதபாடு பட்டாயிற்று! இதில் அடுத்தவளுமா? அவளுக்கு நன்றாக நான்கு வைத்தால் என்ன என்றுதான் ஆத்திரம் வந்தது. பிறகு சொன்னதுபோல் செய்துவிட்டாள் என்றால்?


அதுதான் ஒருத்தி ஏற்கனவே செய்து காட்டிவிட்டாளே! எல்லாம் அவளால் என்று அவள்மேல் கோபமும் எழுந்தது. இனியும் தன்னால் சமாளிக்க முடியாது என்று பயந்தவர் அன்றிரவே நடந்ததை கணவரின் காதுக்குக் கொண்டுசென்றார்.


அவரும், “பார்த்தாயா அவள் செய்த வேலையை? இரண்டு வருடங்கள் நிம்மதியாக இருந்தேன். அதைக் கெடுக்க என்றே வந்துவிட்டு போயிருக்கிறாள். என் பிள்ளைகளின் மனதையும் கலைத்து விட்டாளே. இதற்குத்தான் அவள் இங்கே வரவேண்டாம் என்று சொன்னேன். நீ கேட்டாயா?” என்று தன் பங்குக்கு பாய்ந்தார்.


எல்லாப் பக்கமும் அடிவிழும் தன் தலைவிதியை நொந்தாலும், “சரிப்பா. நடந்தது நடந்துபோச்சு. இப்போ வித்யாவின் பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்கள். வேண்டுமானால் நான் வேலையிலிருந்து நிற்கவா?” என்று கேட்டார்.


மித்ராவை வீட்டுக்கு அழைக்க கணவர் கடைசிவரையிலும் சம்மதிக்க மாட்டார் என்று எண்ணித்தான் கேட்டார். அருமைக் கணவரோ முறைத்தார். “எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும், வேலையை விட்டு நிற்கலாம் என்று காத்துக் கிடந்தாய் போல.”


“ஐயோ அப்படி எல்லாம் இல்லையப்பா. நான் வேலையால் நிற்காவிட்டால் மித்ராவை வீட்டுக்கு கூப்பிட வேண்டும். அது உங்களுக்கு பிடிக்காதே என்றுதான் சொன்னேன்.”


“இரண்டுமே முடியாது என்று உன் பிள்ளைகளிடம் சொல்லு.”


“பிறகு… பிறகு அவர்களும் போலிசுக்கு சொல்லிவிட்டால் என்ன செய்வது?” பயந்துகொண்டே அவர் சொல்ல,


“விட்டால் நீயே சொல்லிவிடுவாய் போலவே..” என்று பாய்ந்தார் அவர்.


“இல்லை.. இல்லையப்பா.” என்று, என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறியவரிடம்,


“தொனதொனக்காமல் அந்தப் பக்கம் போ! நான் யோசித்துவிட்டு சொல்கிறேன்.” என்று எரிந்து விழுந்தார் சண்முகலிங்கம்.


முகம் கன்றிச் சுருங்க அறையை விட்டு வெளியேறினார் ஈஸ்வரி.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
ஓய்வாக கட்டிலில் படுத்துக்கொண்ட சண்முகலிங்கத்துக்கோ மித்ரா மேல் அடக்க முடியா ஆத்திரமும் கோபமும் எழுந்தது. என்னை வீட்டை விட்டு வெளியேற்றி மானம் மரியாதையை வாங்கியவளை வீட்டுக்குள் நான் விடுவதா? கூடாது! என்று மனம் முரண்டியது.


ஈஸ்வரியை வேலையிலிருந்து நிறுத்தவும் முடியாது.


பிறகு சம்பளம் நின்றுவிடும். தன் செலவுகளை சுருக்கவேண்டி வரும். பணமில்லாமல் கை கடிக்கத் தொடங்கும். இப்போதானால் இலங்கைக்கு காசும் அனுப்பிக்கொண்டு புகை, தண்ணிக்கு பஞ்சமின்றி தனக்குப் பிடித்த வாழ்க்கையும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அது கெட்டுவிடுமே! மாதா மாதம் கணக்குப் பார்த்துப் பார்த்து செலவழிக்கும் நிலை வருமே.


அதோடு மித்ராவை திரும்ப வீட்டுக்கு கூப்பிடும் வழிகளை பார்க்கவில்லையா என்று ஊரின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல்தான் அதுநாள் வரை தவித்துக் கொண்டிருக்கிறார்.


அவள் வந்தால் சத்யனையும் வித்தியையும் வேறு பார்த்துக்கொள்வாள். வேண்டுமானால் ஈஸ்வரியை இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் கூடுதலாக வேலை செய்யவும் சொல்லலாம். எல்லாமே அவர் பக்கத்தில் லாபக் கணக்குகளாகவே தென்பட்டன.


எனவே மனைவியிடம் சம்மதம் தெரிவித்தார்.


அவர் சொன்னதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் விழிகள் விரிய பார்த்த மனைவியிடம், “எல்லாம் உனக்காகவும் உன் பிள்ளைகளுக்காகவும் தான். ஆனால், அவள் வந்து எனக்கு எரிச்சல் மூட்டும் விதமாக நடந்துகொண்டால் என்று வை. இந்த வீட்டை விட்டு நான் வெளியேறிவிடுவேன்.” என்று உறுமினார்.


“அப்படி நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எப்போதும்போல இருக்கலாம். இதை அவளிடமும் சொல்லிவிடுகிறேன்.” என்று, அதுவரை பெரும் பிரச்சனையாக இருந்த ஒன்று தீர்வுக்கு வந்த நிம்மதியில் அவசரமாக சொன்னார் ஈஸ்வரி,


“நீங்களும் வருகிறீர்களா அந்த லீசாவிடம் போய் இதைப்பற்றி கதைப்பதற்கு.” என்று தன்மையாகக் கேட்டார். முதலில் மறுத்துவிட்டு இப்போது போய் மகளை வீட்டுக்கு விடுங்கள் என்று கேட்க தயக்கமாக இருந்தது அவருக்கு.


“அவளுக்காக ஒரு துரும்பையும் நான் கிள்ளிப் போடமாட்டேன். உன் பிள்ளைகள் தானே அவள் வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். அவர்களையே கூட்டிக்கொண்டு போ.” என்றார் அவர்.


வேறு வழியின்றி, ஒரு துணைக்காக என்று சத்யனையும் கையோடு கூட்டிக்கொண்டு சென்று திருமதி லீசாவை சந்தித்தார் ஈஸ்வரி.


மித்ராவை வீட்டுக்கு அனுப்பச்சொல்லி அவர் கேட்க, தாய்மை உள்ளம் கொண்ட அந்தப் பெண்மணி கோபத்தில், “அன்று அவளாக வீட்டுக்கு வருகிறேன் என்று கேட்டும் மறுத்த உங்களுக்கு இப்போது மட்டும் என்ன திடீர் பாசம்? இப்போது மட்டும் அவளால் பிரச்சனைகள் வராதா?” என்று கேட்டார்.


அதுநாள் வரை அப்பாவுக்குத்தான் அக்காவை பிடிக்காது என்று நினைத்திருந்த சத்யன் அதிர்ச்சியோடு தாயைப் பார்த்தான்.


அவன் விழிகளில் தெரிந்த வெறுப்பில், கோபத்தில், “அது.. அப்பாக்கு பிடிக்காது என்றுதான்டா..” என்று தமிழில் அவனிடம் முணுமுணுத்து விட்டு, “அவள் வந்துவிட்டுப் போனதில் இருந்து அவளுக்காக மனம் ஏங்குகிறது. தயவுசெய்து அவளை எங்களோடு அனுப்பி வையுங்கள்.” என்றார் டொச்சில்.


வாய் கூசாது தாய் பொய் சொல்வதை உணர்ந்த சத்யனுக்கு தாயை வெறுத்தே போனது! அக்காவின் இந்த நிலைக்கு அவரும் ஒரு காரணம் என்று அறிந்தவனின் மனதில் அவர் மீதான கறுப்புப் புள்ளி மிக அழுத்தமாக விழுந்தது. அதுநாள் வரை தந்தையோடு மட்டுமே ஒட்டுதல் இல்லாமல் இருந்தவன் அந்த நிமிடத்தில் இருந்து தாயிடம் இருந்தும் விலகத் தொடங்கினான்.


திருமதி லீசாவிடம் திரும்பி, “எங்களுக்கு எங்கள் அக்கா வேண்டும். அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை. அவளை நானும் என் தங்கையுமே நன்றாகப் பார்த்துக் கொள்வோம். அவளை எங்களோடு அனுப்பி வையுங்கள்.” என்றவன் தாயை பார்த்து முறைத்துவிட்டு, “இனியும் ஏதாவது பிரச்சனை வரும் என்றால் நாங்களே உங்களுக்கு தெரிவிப்போம்.” என்றான் பணிவும் கெஞ்சலுமாக.


“உங்களுக்காக எதையும் செய்யப் பிடிக்காவிட்டாலும் உங்களின் பிள்ளைகளுக்காக, அவர்கள் ஒருவர் மேல் மற்றவர்கள் வைத்திருக்கும் பாசத்துக்காக இதை செய்கிறேன்.” என்றவர், சட்டப்படி செய்ய வேண்டியவைகளை செய்து கிறிஸ்மஸ் லீவோடு அவளைப் பள்ளிக்கூடமும் மாற்றி அவர்களின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தார்.


அதோடு, இனி குழந்தைகளின் மீது கைவைக்க கூடாது என்றும், தாங்கள் எப்போது என்றில்லாமல் வீட்டுக்கு வந்து பார்ப்போம் என்றும் பெற்றவர்களிடம் கண்டிப்போடு சொன்னவர், அப்படி எதுவும் நடந்தால் எதற்கும் பயப்படாமல் தங்களிடம் சொல்லவேண்டும் என்று பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டுச் சென்றார்.


போன முறையைப் போன்ற குதூகலம் மனதில் இல்லாதபோதும் மகிழ்ச்சியாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மித்ரா. அவள் அறைக்குள் வந்ததுமே மகிழ்ச்சியோடு அவளைக் கட்டிக்கொண்ட சத்யனும் வித்யாவும் நடந்தவைகளைச் சொல்ல, தான் அந்த வீட்டுக்கு எதற்காக வரவழைக்கப் பட்டிருக்கிறோம் என்பது மிக நன்றாகவே விளங்கியது அவளுக்கு.


தாய்க்கு தன்மேல் அன்பில்லை என்பதை போனமுறையே அறிந்துகொண்டாள் தான். ஆனாலும் அது திரும்பவும் நிரூபிக்கப் பட்டதில் அவளது குழந்தை நெஞ்சத்தில் தான் பெரிய அடி விழுந்தது.


ஆனாலும், தம்பி தங்கையின் சந்தோசத்துக்காக, ஒற்றைக் காலில் நின்று அவளை வரவழைத்தவர்களுக்காக தன் வேதனைகளை மறைத்துக் கொண்டவள், “அப்படி போலிசுக்கு சொல்வேன் என்று இனிமேல் சொல்லக்கூடாது வித்தி. அக்காவைப்போல் தனியாக இருப்பது ஆகக் கொடுமை. அதை நீ அனுபவிக்க வேண்டாம்.” என்றாள் சற்றே கண்டிப்பாக.


அவள் அனுபவித்த தனிமையை, துயரை, இரவில் கூட தனியறையில் தனியாகப் படுக்கப் பயந்து நடுங்கியதை எல்லாம் தங்கை எந்தக் காலத்திலும் அனுபவித்து விடக்கூடாது என்று பதறியது அவள் உள்ளம்.


“அதுதான் நீ வந்துவிட்டாயே. பிறகு ஏன் நான் அப்படிச் சொல்லப் போகிறேன்.” என்றாள் வித்யா.


“நான் இல்லாவிட்டாலும் நீ சொல்லக்கூடாது!” என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக சொல்லி அவள் மனதில் பதியவைத்தாள் மித்ரா.


ஆனால், அவளே அந்தத் தவறை மீண்டும் செய்து வாழ்வின் மாறாத் துயரை பின்னாளில் அனுபவிக்கப் போகிறாள் என்பதை அன்று அவள் அறிந்திருக்கவில்லை!


புதுவருடம் தொடங்கி, மித்ரா அதே ஊரில் இருக்கும் பள்ளிக்கு செல்லத் தொடங்கினாள்.


அவள் வந்த அன்று, “அப்பா நிற்கும்போது அவர் முன்னால் வராதே.” என்றும், “திரும்பவும் ஏதாவது பிரச்சனைகளை கிளப்பி என் நிம்மதியை கெடுத்துவிடாதே.” என்றும் அன்னை சொன்னது மனதை தைத்தாலும், சண்முகலிங்கம் வீட்டில் இல்லாத வேளைகளில் கூட, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அவளுக்கும் வித்திக்கும் பொதுவான அறையை விட்டு வெளியே வருவதே இல்லை மித்ரா.


ஆனால், அந்தப் பதின்நான்கு வயதிலேயே தாயாக மாறி தாய்ப்பாசத்தை சத்யனுக்கும் வித்யாவுக்கும் வழங்கத் தொடங்கினாள்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
இருவரையும் பாட்மிண்டன் சேர்த்துவிட்டாள். அவளே கூட்டிக்கொண்டுபோய் கூட்டிவந்தாள். பின்னேரங்களில் பார்க்குக்குப் போய்வந்தார்கள். ஸ்விம்மன் பழகினார்கள். கூடச் சேர்ந்து விளையாடினார்கள். ஒன்றாக இருத்தி படிப்பித்தாள். உணவை ஊட்டிவிட்டாள். நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்தாள்.


என்னவெல்லாம் தான் அனுபவிக்க ஆசைப்பட்டாளோ.. என்னவெல்லாம் அவளுக்கு மறுக்கப்பட்டதோ அத்தனையையும்.. ஏன் அதற்கும் மேலாகவே அவர்களுக்கு கொடுத்தாள். அவள்தான் அவர்களுக்குத் தாய். அப்படித்தான் இருவருமே உணர்ந்தார்கள்.


இப்படியே நாட்கள் நகர, அவள் கையிலிருந்த பணமும் பென்சில், பேனை, புத்தகம், கொப்பிகளுக்கு என்று மெல்ல மெல்லக் கரைய, இனிவரும் தேவைகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினாள்.


அம்மாவிடம் கேட்டால் அப்பா கத்துவாரோ? ஒவ்வொரு குழந்தைகளுக்கும், பதினெட்டு வயதுவரை அவர்களின் செலவுகளுக்காக என்று தனியாக ஜேர்மன் நாட்டு அரசாங்கம் மாதா மாதம் பணம் கொடுக்கும். அப்படி அவளுக்கான பணம் வரும் தானே. அதில் இருந்து கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்து தாயிடம் கேட்க, அவர் அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார்.


அன்றிரவு, பிள்ளைகள் எல்லோரும் உறங்கிவிட்டார்கள் என்றெண்ணி கணவரிடம் பேச்செடுத்தார் ஈஸ்வரி.


அதைக்கேட்டு அப்படியே பொங்கிவிட்டார் சண்முகலிங்கம். “என்ன? கணக்குக் கேட்கிறாளா உன் மகள்? அப்போ இந்த வீட்டில் மூன்று நேரமும் வயிறு நிறைய கொட்டிக்கொள்கிறாளே, அதற்கு யார் பணம் தருவதாம்? என் வீட்டில் இருக்கிறாளே, அதற்கு யார் பணம் கொடுப்பார்களாம்? கண்ட கழுதைக்கெல்லாம் உழைத்துப்போட நான் என்ன விசரனா? அவள் தேவையை அவளையே பார்த்துக்கொள்ளச் சொல்! ஒரு நயா பைசா கூட கொடுக்கமாட்டேன் நான். எனக்குத் தெரியாமல் நீ கொடுத்தாய் என்று வை. நான் மனிதனாகவே இருக்கமாட்டேன்.” என்று உரத்த குரலில் அவர் கத்த, உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்த மித்ராவின் காதில் அது நன்றாகவே விழுந்தது.


திருமதி லீசாவிடம் இதை சொன்னால் அவளால் மிக இலகுவாக அவளின் பணத்தை பெற்றுவிட முடியும் தான். ஆனாலும் வேண்டாம். அவர்களுக்கு சுமையாக அவள் இருக்கவேண்டாம். அவர் சொன்னதுபோல அவளது சாப்பாட்டுக்கும், அங்கே தங்குவதற்கும் அதை வைத்துக் கொள்ளட்டும்.


அப்போ கைச் செலவுக்கு? ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம் என்று அதே யோசனையிலேயே உறங்கிப்போனாள் மித்ரா.


அடுத்தநாள் பள்ளிக்கூடம் முடிந்து வந்துகொண்டு இருந்தவளின் பார்வையில், ஒரு தள்ளு வண்டிலில் பேப்பர்களை வைத்து தள்ளிக்கொண்டு வந்த முதியவர், ஒவ்வொரு வீட்டினதும் போஸ்ட் பெட்டிக்குள்ளும் பேப்பர் போடுவதைக் கண்டவளுக்கு அந்த யோசனை உதித்தது.


தினசரி பேப்பர்களையும், ஒவ்வொரு கடைகளினதும் விளம்பரப் பேப்பர்களையும் அச்சடிக்கும் நிறுவனங்கள் அந்த முதியவரை போன்ற பென்ஷன் எடுத்தவர்களுக்கும், அவளைப் போன்ற பள்ளி மாணவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அந்த வேலைகளை முதலுரிமை கொடுத்து வழங்கும்.


பெரிய வருமானம் என்றும் இல்லாமல் கைச்செலவுக்கும் கடிக்காமல் இருப்பதற்காக இருக்கும் சின்ன சின்ன வேலைகளில் இந்த பேப்பர் போடும் வேலையும் ஒன்று.


அதை அவளும் செய்யலாமே. இந்த எண்ணம் உதித்ததுமே உற்சாகத்தோடு வீட்டுக்கு வந்தவள், அவளுடைய பதின்நான்காவது பிறந்தநாளுக்கு நீக்கோ பரிசளித்த கைபேசியில் அவனுக்கு அழைத்தாள்.


“ஹேய் ஏஞ்சல்! என்னையெல்லாம் உனக்கு நினைவில் இருக்கிறதா?” என்கிற உற்சாகக் குரல் அந்தப் பக்கம் கேட்கவும், அதுவரை கலக்கத்தோடு இருந்தவள் தன்னை மறந்து சிரித்தாள்.


“நான் இங்குவந்து ஒரு மாதம் ஆகிறது. இதுவரை நீயும் என்னை தேடி அழைக்கவில்லை. அதை மறந்துவிடாதே.”


அதைக்கேட்டு சத்தமாகச் சிரித்தான் நீக்கோ.


“ஹேய் வாயாடி! தினமும் உன்னோடு கதைக்க ஆசையாக இருக்கும். அனாலும், உன் குடும்பத்தோடு இப்போதுதான் சேர்ந்து இருக்கிறாய். அந்த சந்தோசத்துக்கு இடைஞ்சல் தரவேண்டாமே என்றுதான் நான் கூப்பிடவில்லை.”


சந்தோசமாக இருக்கிறேனா? ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “பொய்யாக சாக்கு சொல்லாதே கள்ளா!” என்று அவனை மேலும் வம்பிழுத்தாள் மித்ரா.


“ப்ச்! போ ஏஞ்சல்! நான் என்ன பொய் சொன்னலும் நீ கண்டு பிடித்துவிடுகிறாயே.” என்று பொய்யாக அலுத்து சிரித்தான் அவன்.


“சரி சொல்லு. நீ எப்படி இருக்கிறாய்? உன் தம்பி தங்கைகள் நலமா?” என்று கனிவோடு விசாரித்தான்.


அதற்கு பதில் சொன்ன மித்ரா, அவனையும் மரியாவையும் பற்றி விசாரித்துவிட்டு, “நீ சொல்லு, லூசி எப்படி இருக்கிறாள்? அவள் உன் தோழி ஆகிவிட்டாளா?” என்று குறும்போடு கேட்டாள்.


அதைக்கேட்டு உரக்க நகைத்தான் நீக்கோ. பின்னே, ‘லூசியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவளை எப்படியாவது என் நெருங்கிய நண்பியாக மாற்ற வேண்டும்.’ என்று, அவனின் வகுப்புக்கு புதிய மாணவியாக வந்து சேர்ந்த லூசியை கண்ட நாளில் இருந்து மித்ராவிடம் தானே புலம்பித் தள்ளினான் அவன்.


“அவள் இப்போது என் தோழி மட்டுமல்ல, அதற்கும் மேலே…” என்று சொல்லிச் சிரித்தான் அவன்.


“காதலியா?”


“ச்சே ச்சே அந்தளவுக்கு இல்லை. அதற்குக் கீழே, நெருங்கிய நண்பி.”


“அப்போ.. நீ நினைத்ததை நடத்திவிட்டாய் என்று சொல்.”


“ஆமாம். உனக்கு ஒன்று தெரியுமா? அவளுக்கும் என்னை பார்த்ததும் பிடித்துவிட்டதாம். என்னோடு கொஞ்ச நாட்கள் பழகிவிட்டு சொல்லலாம் என்று நினைத்து இருந்தாளாம்.” என்று பெருமையோடு அறிவித்தான் அவன்.


“இப்போது நீ சொல். உனக்கு யாராவது புது நண்பர்கள் கிடைத்தார்களா? எனக்கு லூசி மாதிரி..” வேண்டும் என்றே அவன் கேட்க,


“கிட்டே இருந்தாய் என்றால் உன் தலையில்தான் கொட்டுவேன்.” என்றவள் கலகலத்துச் சிரித்தாள்.


அந்தச் சிரிப்பில் அவனும் இணைந்துகொள்ள, “உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச எடுத்தேன் நீக்கோ. பார் உன்னோடு அலட்டியத்தில் மறந்துவிட்டேன்.” என்றவள் சற்றுத் தயங்கிவிட்டு, “நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டுமே.” என்று கேட்டாள்.


“என்ன? சொல்லு செய்கிறேன்.” என்றான் எந்தத் தயக்கமும் இல்லாமல்.


ஆனால், அவளுக்குத்தான் உடனே பேச்சு வர மறுத்தது. “அது.. எனக்கு.. இங்கே பள்ளிக்கூடம் முடிந்தபிறகு வீட்டில் இருக்க அலுப்பாக இருக்கிறது…” என்று அவள் இழுக்க,


“அதற்கு?” என்று கேட்டவனின் குரலில் இப்போது கூர்மை ஏறியிருந்தது.


அவன் கோபப்படப் போகிறான் என்று தெரிந்தாலும், வேறு யாரிடம் இதைப்பற்றி கேட்பது என்றும் தெரியவில்லை அவளுக்கு.
 

NithaniPrabu

Administrator
Staff member
#4
எப்படியாவது அவனை சமாளிப்போம் என்று எண்ணியபடி, “அதனால் மாலையில் பேப்பர் போடும் வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கு யாரிடம்.. எங்கே கேட்பது என்று தெரியவில்லை நீக்கோ.” என்று தயக்கத்தோடு சொன்னாள் மித்ரா.


“உன் வீட்டில் செலவுக்கு பணம் தரவில்லையா?” சட்டென விஷயத்தை ஊகித்துக் கேட்டான் அவன்.


அவனது புத்தி கூர்மையை எண்ணி வியந்தாலும், “இல்லையில்லை. அப்படி இல்லை. நானாகத்தான்… அதுதான் சொன்னேனே பொழுது போகவில்லை என்று.” என்று தடுமாறினாள் மித்ரா.


“என்னிடம் பொய் சொல்லக்கூட உன்னால் முடியுமா ஏஞ்சல்?”


அந்தக் கேள்வியில் தொண்டை அடைத்தது அவளுக்கு.


“ப்ளீஸ் நீக்கோ. கோபிக்காதே. யாருக்கும் என்னால் எந்த சிரமமும் வரக்கூடாது என்று நினைக்கிறேன். அதனால்தான். தயவுசெய்து என்னை புரிந்துகொள்.” என்று தழுதழுத்தாள்.


“இதற்கு நீ இங்கேயே இருந்திருக்கலாம்.” என்றான் அவன் பொறுக்க முடியாமல்.


அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க, “அந்த வேலை செய்தால் அதற்கே நேரம் ஓடிவிடும். பிறகு எப்படிப் படிப்பாய்?” என்று கேட்டான் அவன்.


“தினமும் இல்லை தானே. வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டும் செய்யலாம் என்று நினைக்கிறேன். மற்ற நாட்களில் படித்துக்கொள்வேன்.”


“வாரத்தில் இரண்டு நாட்கள் என்றால் நூறு நூற்றியம்பது யூரோக்கள் தான் வரும். அவ்வளவுதான் உன் தேவை என்றால் அதை நானே உனக்கு அனுப்புகிறேன். நீ நன்றாக படிக்கும் வேலையை மட்டும் பார்.”


வார இறுதிகளில் வேலைக்கு போகும் அவன் அதை சொன்னபோது, அவளுக்கு கண்களில் நீர் திரண்டது. அவனுடைய மாத வருமானமே முன்னூறு யூரோக்கள் தொடங்கி நானூறுக்குள் தான் இருக்கும். அதில் நூற்றியம்பதை அவளுக்குத் தந்துவிட்டு? அப்படியிருந்தும் எந்தத் தயக்கமும் இன்றித் தர முன்வருகிறான்.


யாரோ ஒருவன். அவளுக்கு அடைக்கலம் தந்த வீட்டின் பிள்ளை. அவளோடு நட்பாக பழகிய ஒரே காரணத்துக்காக பணம் தருகிறேன், நீ படி என்கிறான். இந்த மனம் அவளை பெற்றவர்களுக்கு இல்லாமல் போயிற்றே!


அவன் பணத்தை நேரடியாக மறுக்க முடியாமல், “எனக்கு வேலைதான் வேண்டும்!” என்றாள் மித்ரா.


“அதாவது உன் பணம் எனக்குத் தேவையில்லை என்கிறாய்.”


“ப்ளீஸ் நீக்கோ. இப்படியெல்லாம் பேசாதே. எனக்கு கவலையாக இருக்கிறது. உன் பணம் வேண்டாம் என்று நினைத்திருந்தால் நீ தந்த கைபேசியையும் வாங்கியிருக்க மாட்டேன். நீதானே சொன்னாய், நாம் உழைத்து நம் பணத்தில் வாழவேண்டும். அடுத்தவரை எதிர்பார்க்கக் கூடாது என்று.”


அவன் தானே அவளின் போதகன், வழிகாட்டி எல்லாமே! முதன் முதலில் வேலைக்கு போகையில் அவன் சொன்னதை நினைவில் வைத்து சொன்னாள் மித்ரா.


“அதற்கு உனக்கு இன்னும் வயதிருக்கிறது.”


சற்றும் இறங்கிவர மறுத்தான் அவன். இந்தக் கோபம் கூட அவளுக்காகத்தான்!


அவனின் அன்பிலும் நட்பிலும் கண்ணைக் கரித்தாலும், “எந்த வயதாக இருந்தால் என்ன? உழைக்க ஆசைப்படுவதில் தப்பில்லையே.” என்று அவளும் தன் பிடியிலேயே நின்றாள்.


“ஆக, என்ன சொன்னாலும் உன் முடிவிலிருந்து நீ மாறமாட்டாய்?”


பதில் சொல்லாமல் அவள் அமைதியாக நிற்க, “உன் மாநிலத்துக்கான பேப்பரில் கடைசிப் பக்கத்தில் பார். அவர்களின் தொலைபேசி இலக்கம் இருக்கும். அதற்கு அழைத்து உன் விபரத்தை கொடு. யாராவது வேலையை விடும்போது அந்த இடத்தை உனக்குத் தருவார்கள்.” என்று அறிவித்தான்.


தனக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட்ட போதும், அவனது கோபம் அவளை பாதித்தது.


“உனக்கும் என்மேல் கோபமா நீக்கோ?” தழுதழுத்த குரலில் கேட்டாள்.


அந்த ‘உனக்கும்’ என்ற வார்த்தை அவனை பாதித்தது. அப்போ வேறு யாருக்கோவும் அவள் மீது கோபம் இருக்கிறது என்றுதானே பொருள். வேறு யாருக்கோ என்ன யாருக்கோ? அவளின் தாய் தந்தையருக்குத்தான்!


அதுதான் போனமுறை விடுமுறையை அவர்களின் வீட்டில் கழித்துவிட்டு வந்தவள், நடந்ததை சொல்லி, “அம்மா கூட என்னை தூக்கி எறிந்துவிட்டார் நீக்கோ.” என்று அவன் தோளில் சாய்ந்து அழுதாளே.


அவளை அவனும் அழ வைப்பதா? சட்டென தன் கோபத்தை கைவிட்டுவிட்டு, “ஹேய் ஏஞ்சல்! உன்மீது எனக்கு கோபம் வருமா என்ன? அதனால் முட்டைக் கண்ணீர் வடிக்காதே.” என்றான் இலகுவான குரலில் கேலி இழையோட.


“ஹப்பாடி! இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. நீக்கோவின் கோபம் போய்விட்டதே..” என்று துள்ளிக்குதித்தாள் அவள்.


“இல்லாவிட்டால் மட்டும் என் கோபத்துக்கு பயந்தவள் பார் நீ.” என்று சொல்லிச் சிரித்தான் அவன்.


“ஆனால் ஒன்று! உன் படிப்பில் எந்தக் குறையும் வரக்கூடாது. அதேபோல வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை செய்யவேண்டும். அதையும் தாண்டி என்ன உதவி வேண்டுமானாலும் நீ என்னை கேட்கவேண்டும். புரிந்ததா?” என்றான் அழுத்தமாக.


“கட்டாயம் நீக்கோ. நீ சொன்னதை நிச்சயம் மீறமாட்டேன். என் படிப்பு எனக்கும் மிக முக்கியம்.” என்றவள், மேலும் சற்றுநேரம் அவனோடு உரையாடிவிட்டு கைபேசியை வைத்தாள்.


அடுத்த கணமே அவர்கள் வீட்டு போஸ்ட் பெட்டியில் போடப்பட்டிருந்த பேப்பரை எடுத்துவந்து, அதிலிருந்த இலக்கத்துக்கு அழைத்து, தான் அந்த வேலை செய்ய ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தாள்.


அவளின் வீட்டு தொலைபேசி இலக்கத்தையும், பிறந்த திகதி முதல் படிக்கும் பள்ளியின் பெயர், வீட்டு விலாசம் என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டவர்கள், நீக்கோ சொன்னது போலவே ஏதாவது வெற்றிடம் கிடைத்தால் அதை அவளுக்குத் தருவதாக சொல்லி வைத்தார்கள்.


ஏற்கனவே சிரத்தை எடுத்து படித்தவள், அதன் பிறகான நாட்களில் நீக்கோ சொன்னதற்காகவும் இன்னுமே கவனமெடுத்து படித்தாள். தம்பி தங்கைகளையும் மிக நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.


கையில் பணமே இல்லை என்கிற தறுவாயில், அவர்களின் வீட்டை சுற்றி இருக்கிற இருநூறு வீடுகளுக்கு பேப்பர் போடும் வேலையும் கிடைத்தது.


சத்யனையும் வித்தியையும் பார்த்துக் கொள்வதிலும், அவளின் படிப்புக்கும் எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்று எண்ணி, மாலை நேரத்தை அதற்காக ஒதுக்கியவள் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டுவிட்டு வந்தாள்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#5
அவளே அவளின் செலவுக்கு வழி செய்து கொண்டதிலும், சண்முகலிங்கத்தின் வழிக்கே அவள் வராமல் இருந்ததிலும், சத்யன் வித்தியை பார்த்துக் கொண்டதிலும் எந்தப் பிரச்சனையும் எழாமல் நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. இல்லையில்லை வருடங்கள் மிக வேகமாக ஓடின!


மித்ராவுக்கு பதினெட்டு வயதாகியிருந்தது. இப்போது வருமானம் போதாது என்று பேப்பர் போடும் வேலையை விட்டுவிட்டு, ஒரு ரெஸ்டாரன்ட்டில் திங்கள் முதல் வெள்ளிவரை மாலையில் இரண்டு மணித்தியாலங்களும், சனி ஞாயிறுகளில் முழு நாளும் என்று ஒரு வேலையை தேடிக் கொண்டிருந்தாள்.


டிரைவிங் லைசென்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். அன்று கார் ஓடிவிட்டு வீட்டுக்கு அவள் வந்தபோது, காலில் கட்டுடனும் முகத்தில் பெரும் வலியுடனும் சோபாவில் சாய்ந்திருந்தார் ஈஸ்வரி.


அதில் பதறி, “என்னம்மா? என்ன நடந்தது? ஏன் காலில் கட்டுப் போட்டிருக்கிறது?” என்று அவரருகில் ஓடிவந்து கேட்டாள் மித்ரா.


“ஹாஸ்பிட்டலில் வழுக்கி விழுந்துவிட்டேன். அது என்னவோ எலும்பு பிசகிவிட்டதாம். வலி தாங்கவில்லை.” என்றார் அவர் வேதனையோடு.


சற்றே எடை அதிகரித்துவிட்ட அன்னை நெடுங்காலமாக வேலை செய்வதால், இதற்கு முதலும் அவர் முகத்தில் தெரிந்த அதீத களைப்பையும் கவனித்து வைத்திருந்தவள், “இனி நீங்கள் வேலைக்கு போகவேண்டாம் அம்மா. வீட்டிலேயே ஓய்வாக இருங்கள்.” என்றாள் அன்போடு.


“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த மனுஷன் என்ன சொல்கிறாரோ தெரியவில்லை.” என்று முனகினார் அவர்.


அம்மாவின் சம்பளம் நிற்பதை அப்பா விரும்பமாட்டார். விரும்பமாட்டார் என்ன, பெரிய ஆட்டாமே ஆடிவிடுவார் என்று யோசித்தவள், “அப்பாவுக்கு உங்கள் சம்பளம் நிற்கக் கூடாது என்பதுதானே பிரச்சனை. வேண்டுமானால் நான் என் சம்பளத்தை தருகிறேன். நீங்கள் நில்லுங்கள்.” என்றாள் எந்த தயக்கமும் இன்றி.


மகளுக்கு என்று எதையுமே செய்யாதவருக்கு அவளின் பேச்சு குத்தியது போலும், ஒன்றுமே சொல்லாமல் அப்படியே அமைதியாகிவிட்டார். அதை அறியாதவளோ, தாய் தன் பணத்தை வாங்கத் தயங்குகிறார் போலும் என்றெண்ணி, “நான் வேண்டுமானால் அப்பாவிடம் கதைக்கட்டுமா?” என்று கேட்டாள்.


“இல்லையில்லை. வேண்டாம். நானே கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.”


அவள் சண்முகலிங்கத்தின் முன்னால் வந்தாலே அவருக்கு பிடிக்காது. இதில் பேசினால்? ஏதாவது சண்டை வந்துவிடும் என்று பயந்து அவசரமாகச் சொன்னார் ஈஸ்வரி.


“சரிம்மா.” என்றவள், அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டாள்.


அடுத்தநாள், “அப்பாவிடம் பேசினீர்களா?” என்று அவள் கேட்டதற்கு, “ம்.. அவருக்கு சம்மதமாம்.” என்றார் ஈஸ்வரி.


முகம் மலர, “அப்போ நீங்கள் சத்யனையும் வித்யாவையும் வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் இனித் தினமும் ஐந்து மணித்தியாலங்கள் வேலைக்கு போகிறேன்.” என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் மித்ரா. சொன்னதோடு மட்டுமல்லாமல் அப்படியே செய்யவும் செய்தாள்.


அந்த மாதம் அவளுக்கு வந்த சம்பளத்தில் டிரைவிங் ஸ்கூலுக்கு கட்டவேண்டியத்தை கட்டிவிட்டு, மாதச் செலவுக்கு என்று கொஞ்சத்தையும் வைத்துகொண்டு கார் வாங்குவதற்கு என்று பாங்கில் போடும் மீதிப் பணம் முழுவதையும் அன்னையின் கையில் கொடுத்தாள் மித்ரா.


அடுத்தநாள் காலை பள்ளிக்கூடம் செல்வதற்கு தயாராகி வெளியே வந்தவள், அன்னையும் வேலைக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள்.


“எங்கேம்மா வெளிக்கிட்டீர்கள்?” எதையும் காட்டிக்கொள்ளாமல் அவள் விசாரிக்க,


“வேலைக்கு” என்றார் அவர் சுருக்கமாக.


“நான் என் சம்பளத்தை தந்தேனே அம்மா. பிறகும் ஏன் வேலைக்கு போ..” என்று அவள் கேட்டு முடிக்க முதலே,


“அது எந்த மூலைக்கு காணும் ஈஸ்வரி. நீயும் வேலைக்கு போ!” என்று மனைவியிடம் கர்ஜித்தார் சண்முகலிங்கம்


அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள்.


“ஈஸ்வரி வேலைக்கு தொடர்ந்து போகவேண்டும் என்று அர்த்தம்!” என்றார் அவர் நக்கலாக.


“அப்போ என் பணத்தை திருப்பித் தாருங்கள். அம்மா வீட்டில் இருக்கவேண்டும் என்றுதான் அதை நான் தந்தேன்.”


“தரமுடியாது! இனி உன் பணம் முழுவதும் என்னிடம் தான் வரவேண்டும்! இங்கே யாரும் சும்மா இருந்து உண்ண முடியாது!”


“அதற்குத்தான் எனக்கு அரசாங்கம் தரும் பணம் இருக்கிறதே.”


“ஏன் பத்து வயதில் தின்ற அதேயளவுதான் இப்போதும் நீ சாப்பிடுகிறாயா? நீ திண்பதற்கே அந்தப் பணம் பத்தவில்லை! இதில் நீ இங்கே தங்குவதற்கு யார் பணம் தருவார்கள்?”


வேதனையோடு அவரைப் பார்த்தாள் மித்ரா. பணத்தாசை பிடித்த மிருகமாகவே அவள் கண்ணுக்கு தெரிந்தார் சண்முகலிங்கம். அதோடு அவள் என்ன அண்டா அண்டாவாகவா உண்கிறாள்?


சம்பளத்தை கொடுப்பதில் அவளுக்கு ஒன்றுமில்லைதான். அம்மாவின் நிம்மதிக்கு முன்னால், அவரின் உடல்நலத்துக்கு முன்னால் பணமெல்லாம் அவளுக்கு ஒன்றுமேயில்லை. ஏன் தன் செலவுகளை நிறுத்தக்கூட அவள் தயார்தான். ஆனால், சத்யன் கால்பந்து பழகிக்கொண்டு இருக்கிறான். அதற்கு காசு வேண்டும். வித்யா ஜேர்மன் நாட்டு பாரப்பரிய நடனம் பழகிக்கொண்டு இருக்கிறாள். அதற்கும் வேண்டும்.


“நான் மேலே அதற்குப் படிக்கப் போகிறேன், இதற்கு படிக்கப்போகிறேன்” என்று கனவுகளோடு இருக்கும் அவர்களுக்கு என்ன செய்வாள்?


அவரிடம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் அனைத்துமே நின்றுவிடும். அது நன்றாகவே தெரியும் அவளுக்கு


“தரமுடியாது என்றால்?”


“நீ இந்த வீட்டில் இருக்க முடியாது!”


அழுகை வரும் போலிருந்தது அவளுக்கு. இந்த அப்பாவுக்கு அவள் மீது அப்படி என்னதான் கோபம்? அவள் செய்த பிழைதான் என்ன? எதற்கு எடுத்தாலும் அவளை துரத்துவதிலேயே குறியாக இருக்கிறாரே.


“ஏன் அப்.. இப்படி சொல்கிறீர்கள்? இவ்வளவு நாட்களும் இருந்தது போல் இந்த வீட்டில் ஒரு மூலையில் நான் இருந்துகொள்கிறேனே. வேண்டுமானால் மாதா மாதம் கொஞ்சம் பணம் தருகிறேன்.” என்றாள் கலங்கிய குரலில்.


அவள் கலங்கிவிட்டதை கண்டுகொண்டவரின் முகத்தில் வெற்றிக்குறி!


“முடியாது! உன் முழுச் சம்பளமும் என் கைக்கு வரவேண்டும். இல்லையோ நீ வெளியே போகலாம்!” என்றார் கொடூரனாக.
 

NithaniPrabu

Administrator
Staff member
#6
கலங்கிய விழிகளோடு திகைத்துப்போய் அவள் பார்க்க, “என்ன பார்க்கிறாய்? உனக்கு பதினெட்டு வயதாகிவிட்டது. இப்போது இந்த வீட்டில் இருந்து உன்னை வெளியேற்ற எனக்கு சகல உரிமையும் இருக்கிறது.” என்றார் எக்களித்த குரலில்.


சண்முகலிங்கத்தின் பேச்சில் வெளியேறுவதற்கு பயந்து அவரின் பேராசைக்கு அவள் சம்மதிப்பாள் என்கிற நிச்சயம் இருந்தது.


ஆனால், அம்மாவின் உழைப்பையும் விழுங்கி, அவளின் உழைப்பையும் அவரே வாங்கிக்கொண்டால் தம்பி தங்கைகளை யார் பார்ப்பது?


அதோடு அவள் படிக்க நினைக்கும் படிப்புக்கு பணம் வேண்டும். போக்கு வரத்துக்கு கார் வேண்டும். அதெல்லாம் இருந்தால் தான் அவளால் வாழ்க்கையில் உயர முடியும்.


தனிமைக்கு பயந்து இதற்கு சம்மதித்தால் அவளின் எதிர்காலம் மட்டுமல்ல சத்தி, வித்தியின் எதிர்காலம் கூட பாதிக்கும். அவர்கள் விரும்பும் படிப்பை அவளால் படிக்கவைக்க முடியாது.


யாருக்காக இல்லாவிட்டாலும் சத்திக்கும் வித்திக்குமாகவாவது அவள் வாழ்க்கையில் போராடியாக வேண்டும்! தனிமை அவளுக்கு புதிதா என்ன? அதைத்தான் பிறக்கும்போதே வரமாக வாங்கி வந்துவிட்டாளே!


கடைசி நம்பிக்கையாக தாயை பார்த்தாள் மித்ரா. அவளுக்கு ஆதரவாக ஏதாவது சொல்வாரா என்று.. அப்போதும் அமைதியாக நின்று அவளைக் கைவிட்டார் அவர்! அடிபட்டுப் போனது அவள் உள்ளம்!


என்ன ஆனாலும் அவரின் அதிகாரத்துக்கு பணியக் கூடாது என்று எண்ணி, “நான் தனியாகவே போகிறேன்.” என்று அவரை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்துக்கு சென்றாள் மித்ரா.


அடுத்து வந்த நாட்களில், அவளின் நண்பர்களின் துணையோடு ஒற்றை அறையோடு கூடிய சின்ன சமையலறை, குளியலறை கொண்ட ஒரு வீட்டுக்கு இடம் மாறினாள்.


கண்கள் கலங்கிய சத்யனிடமும் வித்யாவிடமும், “உங்கள் பள்ளிக்கூடத்துக்கு அருகில் தானே அக்கா இருக்கிறேன். பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக அங்கே வாருங்கள். படுக்க மட்டும் இங்கே வாருங்கள்.” என்று சமாளித்தாள்.


மீண்டும் தனிமை வாழ்க்கை! சின்ன வயதிலேயே பழகிவிட்ட ஒன்று என்பதால், பெரிதாக பாதிக்கவில்லை. தம்பி தங்கையர் இன்றி இரவில் தனியாகப் படுக்க முடியாமல் துயர் தொண்டையை அடைத்தது. விழுங்கிக்கொண்டாள்.


பகுதிநேர வேலை, படிப்பு என்று அவளுடைய நாட்கள் நகர்ந்தது.


ஒருநாள் ரெஸ்டாரன்ட்டில் வேலை முடிந்து வெளியே வந்தவள், களைப்போடு காரை நோக்கி நடக்கையில், “ஹேய் ஏஞ்சல்!” என்றபடி ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டான் நீக்கோ!


நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதுவும் எதிர்பாராமல் அவனை சந்தித்த மகிழ்ச்சியில், “நீ எங்கேடா இங்கே ?” என்று கேட்டபடி தானும் அவனைக் கட்டிக்கொண்டாள் மித்ரா.தொடரும்...
 
#7
மனசு மரத்து போன ஜென்மங்கள்
 
#8
:cry::cry::cry:
 
#9
சண்முகலிங்கத்தின் மனம் என்ன கல்லா?..
 
#10
அருமையான பதிவு
எத்தனை மோசமான மனிதர்கள்
 
Top