தனிமையில் வசிக்கும் தாய்க்கு மகனின் பதில்- தமிழ் நிவேதா -இதழ் 8

#1


கொஞ்ச நாட்களுக்கு முன் வாட்ஸ்அப்பில் ஒரு கவிதை உலா வந்தது. நீங்களும் படித்திருக்கலாம். ஒரு தாய் தனது முதுமைக் காலத்தில் மகனிடம் இறைஞ்சுவதாக அமைந்திருந்தது. இளமைப் பருவத்தில் அவன்செய்த குறும்புளையும், உபத்திரவங்களையும்

நினைவு கூர்ந்து, தன்னைச் சகித்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் உருக்கமான கடிதம் அது.கிட்டத்தட்ட முதுமையை நெருங்கும் பலரின் வாட்ஸ்அப் மெமரியிலும் இன்னமும் பதிவிலிருக்கிறது.

தாயின் உருக்கமான வேண்டுதலுக்கு

மகனாக இருந்து பதில் அளிக்க வேண்டும் என்ற ஆவலே என்னை இது பற்றி எழுதத் தூண்டியது.

மகனின் பதில்:
"அம்மா

உன்னிடம் சில சமயங்களில்

நான் கடின முகம் காட்டுவது

கோபத்தினால் அல்ல.

என் இயலாமையால்!

என் சிறு வயதில்

உன் உலகம் என்னைச்

சுற்றியே இயங்கியது.

உன் வாழ்க்கையின் மையப்புள்ளி

நானாக மட்டுமே இருந்தேன்.

என்னை வளர்த்தெடுப்பதே

உன் லட்சியம்.

நான் அருகிலிருந்த

பள்ளிக்குப் போனேன்.

தீபாவளிக்கும், பொங்கலுக்கும்

புது உடை பார்த்தேன்.

மேல் படிப்பிற்கு வழியில்லை என்றாய்

கேட்டுக் கொண்டேன்.

தகப்பனின் பாரம் குறைக்க

குடும்பத் தொழிலில்

கை கொடுத்தேன்.

பக்கத்து ஊரில், தூரத்து உறவில்

நீ நிச்சயித்த பெண்ணுக்கு

முணுமுணுக்காமல் தாலி

கட்டினேன்.

ஆனால் அம்மா,

இன்று என் உலகம்வேறு.

அது

உனக்கும் ,என் பிள்ளைகளுக்கும்

இடையே சிக்கித் தவிக்கிறது.

இந்த என் உலகில் என்னைத்

தவிர எல்லோரும் இருக்கிறார்கள்.

இன்று ஒரு தனி மனிதன்

சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தை

கொள்ளையடிக்க அரசும்,கல்விக் கூடங்களும்,மருத்துவமணைகளும்

மும்முனைத் தாக்குதல் நடத்துகின்றன.

எனக்காக ஆயுசுக்கும் பாடுபட்டு

நீங்கள் சேர்த்து வைத்த சொத்து

என் மகனின் தொடக்கக் கல்வி

கட்டணத்திற்கும் போதவில்லை.

அவன் கல்லூரிக்குப் போகையில்

லட்சியங்களைத் துறந்து

லட்சங்களைக் கொட்டி

நான் பட்ட கடனில்

கழுத்துவரை வட்டி!

வயலில் உரமும்,யூரியாவும் தெளித்து

செழித்த பயிரில் போனசாய்

விளைந்தது புற்று நோய்.

என் தோட்டத்தில் வியர்வை சிந்தி

நான் விதைக்கிற விதை

என்னவாக இருக்க வேண்டும்

என்பதை அயல் நாட்டுக் கம்பெனிகள்

முடிவு செய்கின்றன..

வரப்புக்கும், வாய்க்காலுக்கும்

நீங்கள் பங்காளிச் சண்டை போட்டது போய் ,

இப்போது பெருமுதலாளிகள்

என் அனுமதியின்றி என் நிலத்தில் குழாய் பதித்து ,அது பழுதுபட்டால் என்னையே பொறுப்பேற்கச் சொல்லி அராஜகம் செய்கிறார்கள்.

அப்பாவுக்குத் தெரியாமல்

சிறுவாடு சேர்த்து அவசரத்துக்கு

நீ உதவி செய்த மாதிரி இல்லாமல்

இப்போது நான் வாங்கும்

உள்ளாடைக்கும் கவர்மென்ட்டுக்கு

கணக்குச் சொல்லணும்.

சிரமதிசையில் உதவிக் கரம் நீட்டும்

மனிதாபிமானம் வற்றிப் போச்சு.

கொள்கைகாரர்கள் காலம் போய்

கொள்ளைக்காரர்கள் நாடாளும்

காலம் வந்தாச்சு.

இங்கு விவசாயம் செத்துப் போச்சு!

பூமி சூடாகி இயற்கை குழம்பிப் போச்சு!

சிறு தொழில் அழிவின் விளிம்பில்!

நடுத்தர தொழிலும் நட்டத்தில்!

விலைவாசியோ கைக்கு எட்டாத உயரத்தில்!

இப்போது கல்யாண மார்க்கெட்டில்

எதிர்பார்ப்புகளுக்கும் ,யதார்த்தத்திற்கும் இடையே ஒரு

சூதாட்டமே நடக்கின்றது.

சூதாட்டத்தில் ஜெயித்த மகன்

மணம் முடித்து,மனைவியுடன்

கையசைத்து விட்டு

விமானம் ஏறி விட்டான்.அம்மா,

இந்த ஐம்பது வயதில்

ஆளில்லாத வீட்டில் அமர்ந்து கொண்டு

வெளிநாட்டிலிருந்து மகனின் பிள்ளைகள் தமிழ் தெரியாது என

ஆங்கிலத்தில் கூறுவதைத் தொலைபேசியில் கேட்டு மகிழ்ந்து கொண்டு,

பேரக்குழந்தைகளைக் கவனிக்க

மனைவியை அனுப்பி விட்டு,

இருமலுக்குச் சுடுநீர் வைக்கையில்

கையை சுட்டுக் கொண்டு,

வாங்கின கடனுக்கு வங்கி அனுப்பியிருக்கும் கடிதத்தைப் படித்துக் கொண்டு ,

புது புது பெயர்களுடன் வரும் நோய்களைச் சமாளிக்க முடியாமல்

திணறுகையில் உன் மடியில் சாய்ந்து

கொள்ளத்தான் தோன்றுகிறது!

உனக்கு எண்பதுகளில் ஏற்பட்ட வெறுமை

எனக்கு ஐம்பதுகளில்!

அம்மா,

பல சமயங்களில் உன் புலம்பல்களுக்கு நான் காது கொடுக்காததன் காரணம் பொறுமையின்மை மட்டுமல்ல

என் இரத்த அழுத்தமாகவும் இருக்கலாம்.

நாற்பத்தைந்து வயதில் எனக்கு மாரடைப்பு வந்தபோது உன்

நான்கு நாள் ஜுரம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை..

நிகழ்காலத்தைக் கையில் பிடித்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி ஓட வேண்டிய நிர்பந்தத்தில் இறந்த காலமாகிய உன்னைச் சில சமயங்களில் பறக்கணித்திருக்கலாம்.

ஆனால்

நான் உன்னிடம் எப்படி நடந்து கொண்டாலும் அதற்கெல்லாம் ஒரே காரணம்தான் .

அது

"நீ என்னை எப்போதும் மன்னித்து விடுவாய் என்பதுதான்."

- தமிழ் நிவேதா
 
Top