'டென்ஹெல்டர்' மகளிர் மன்றம் - கலைவிழா 2019 - இதழ் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1
பங்குனி 8, அந்தக் குறிப்பிட்ட தினத்தை விட்டு விடுவோம்; பங்குனி மாதம் என்றதுமே இப்போவெல்லாம் நினைவில் வருவது மகளிர் தினம் மட்டுமே! எவருக்குமே இதில் மறுப்பிருக்காது.

அந்த வகையில் பேசப்படும் மகளிர் தினமென்பதன் தோற்றம் பற்றிப் பார்த்தோமேயானால், முதன் முதலில் நியூயோர்க்கில், 1909 ஆம் ஆண்டு மாசி மாதம் 28 ஆம் திகதியன்று சோஷலிச கட்சியினரால் மகளிர் தினம் நடத்தப்பட்ட பின்னர், 1910 இல் நடைபெற்ற சர்வதேச சோஷலிச மகளிர் மகாநாட்டில் இத்தினத்தை வருடா வருடம் நடத்துவதாக முடிவெடுத்தனர்.

பின், 1917 இல் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமை பெற்ற பின்னர் பங்குனி 8 ஆம் திகதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், 1967 இல் பெண் விடுதலை இயக்கத்தால் மகளிர் தினமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை, இந்நாள், சோஷலிச இயக்கங்கள், கம்புயூனிச நாடுகளால் பெருமளவில் கொண்டாடப்பட்டு வந்தது.

பின்னர் , 1975 இலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் இந்நாளையே மகளிர் தினமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.

இப்படி ஆரம்பித்து, இன்று சில நாடுகளில் பொதுவிடுமுறை நாளாகவும் , சில நாடுகளில்/ இடங்களில் கிடைக்கப் பெறாத தம் உரிமைகளை அழுத்திக் கூறி பெற்றுக்கொள்ளக் கூடிய புரட்சிகர நாளாகவும், சில இடங்களில் பெண்ணியத்தைக் கொண்டாடும் தினமாக, அவர்களின் திறமைகளைப் பாராட்டும் விதமாகவும் அதன் மூலம் பின்தங்கிய பெண்களுக்கு ஒரு உந்து சக்தி வழங்கும் நாளாக, தம் உணர்வுகள், உரிமைகள் ஒரு ஆணுக்குச் சமமாகவோ, ஆணாலோ மதிக்கப்படுவதைத் தெரிவிக்கும் முகமான மகிழ்வான தருணங்களைக் கொண்டாடும் நாளாகவும் இருந்து வருகின்றதைக் காணக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில், இம்முறை, நான் வசிக்கும் ஊரில் நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது . 'டென்ஹெல்டர்' மகளிர் மன்றத்தினரால், தமிழ் மணம் கமழும் இயல் இசை நாடக முத்தமிழ் விழாவாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இங்கு கடந்த நான்கு வருடங்களாக இவ்விழா நடைபெற்று வந்தாலும் இம்முறைதான் நான் செல்ல முடிவெடுத்தேன் . அதுவும் நம் 'செந்தூர உலா'வில் எழுதவேண்டும் என்ற நோக்கிற்காகவே சென்றிருந்தேன்.

மதியம் ஒரு மணிக்கு விழா ஆரம்பமாகும் என்றிருக்க, நான் இரண்டு மணியளவில் தான் சென்றிருந்தேன்.

நிகழ்ச்சி நிரலின் படி மங்கள விளக்கேற்றல், மௌன வணக்கத்துடன் ஆரம்ப நிகழ்வுகள் சில நடந்தேறியிருந்தன.

சிறு மண்டபமே என்றாலும் கலகலப்போடு நிறைந்தே காணப்பட்டது.

விழா நாயகிகள், அதாவது ஊர்ப் பெண்கள், அவர்களின் பெண் குழந்தைகள், பார்த்ததும் ஒரு கொண்டாட்ட மனநிலையைத் தரும் நம் ஆடை அலங்காரங்களில் அங்குமிங்கும் சென்றபடியும் மண்டபத்தின் இருக்கைகளின் பெரும்பகுதியை நிறைத்தபடியும் இருந்தார்கள்.

ஆண்கள், இளைஞர்கள் பின்புறத்தில் அமர்ந்திருந்தார்கள். சும்மா எல்லாம் இல்லை, மிகுந்த கலகலப்பாக!

அதுமட்டுமின்றி, முழுக்க முழுக்க அனைத்து நிகழ்ச்சிகளும் மகளிரால் நடத்தப்பட்டாலும் விழாவில் கலந்துகொண்டவர்களுக்குச் சிற்றுண்டி வழங்குவதாகட்டும், இராப்போசனம் வழங்குவது, தொழில் நுட்ப உதவிகள், புகைப்படமெடுத்தல் என்று ஓடியோடி கவனித்துக் கொண்டதும் ஆண்களே!

திருமதி சுஜாதா சிவகுமார் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். குடும்ப விழா போன்றதொரு உணர்வைத் தரும் வகையில், ஒவ்வொரு நிகழ்வு முடிந்த பின்னரும் அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை மேடையில் வைத்தே பாராட்டி, தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்திய அவரின் செய்கை மிகுந்த பாராட்டுக்குரியது.

ஊரில் எப்போதோ பாடசாலை நாட்களில் இரசித்துப் பார்த்த வில்லுப் பாட்டு... 'நட்பு' என்னும் கருப்பொருளில் கலகலப்பாக நடந்தேறியது. மீண்டும் ஒரு முறை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நாட்டிய நடனங்கள் ஒவ்வொன்றும் விழி விரிய பார்க்க வைத்தன. மிக மிக இரசித்துப் பார்த்திருந்தேன் . இன்றய நாட்களில் பிரபல்யமான தென்னிந்தியத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நடன நிகழ்வுகளின் பங்கேற்பாளர்களின் திறமைகளுக்குச் சற்றும் குறையாதளவில், உரிய பாவங்களும் வாயசைவும் நளினமுமாக கண்ணையும் மனத்தையும் நிறைத்தார்கள், நடனக் கலைஞர்கள்!

உண்மையைச் சொன்னால் 'இன்னொருமுறை' என்று கேட்கத் தோன்றுமளவில் சில நடன நிகழ்வுகள் அமைந்திருந்தன.

தனியே பிள்ளைகள் மட்டுமன்றி பெரியவர்களும் நடன நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

பாடல்கள், கவிதைகள் தம் பங்களிப்பையும் செய்து விழாவை அலங்கரிந்திருந்தன.

'சக்கரை வேண்டாம்' எனும் நாடகத்தின் மூலம் இன்றைய சிறார்களின் வளர்ப்பு முறை, உணவு முறை என்பன தவறாகச் சென்று கொண்டிருப்பதை, அதன் விளைவுகளைச் சுட்டிக் காட்டி விழிப்புணர்வைத் தருவதாகவும், 'பொன்ராமர் வீடு' எனும் நாடகம் மூலம், எப்பிரச்சனைக்கும் தீர்வுவென்பது அவசரத்திலும் அந்தரத்தில் கிடைப்பது கடினம், ஆழ்ந்து அமைதியாகச் சிந்திக்கையில் கிடைக்கலாம் எனும் செய்தியைச் சொல்லும் வகையிலும் வழங்கி இருந்தார்கள்.

பட்டி மன்றம் மிக மிக இரசித்து, குலுங்கி குலுங்கிச் சிரித்தபடி பார்க்க முடிந்தது.

'பெண்களுக்குச் சுதந்திரம் திருமணத்துக்கு முன்னரா ? பின்னரா ?' என்ற தலைப்பில், இரு அணிகளிலும் மூன்று மூன்று பேச்சாளர்களோடு, திருமதி விமலாதேவி சிவநேசன் அவர்கள் நடுவராக இருந்து நடத்தி வைத்தார்.

இப்பகுதியில், ஒவ்வொரு பேச்சாளர்களும் தம் கருத்துகளை அழுத்தமாக, நகைச்சுவையோடு பகிர்ந்திருந்தாலும், 'கடமைக்கும் சுதந்திரத்துக்கும் வேறுபாடு தெரியாது கதைக்காதீர்!' என்று அழுத்தமாக தம் வாதங்களை முன்வைத்து, 'திருமணத்துக்குப் பின்னரே ஒரு பெண் சுதந்திரத்தைச் சுவாசிக்கிறாள்' என்ற தீர்ப்பைச் சொல்ல வைத்தார்கள், அப்பிரிவிலிருந்து வாதாடியவர்கள்.

ஒவ்வொருவர் பேசும் பொழுதும் மண்டபத்தின் பின்புறம் விசிலும் கரகோசமுமாக அதிர்ந்தது. அங்கு யார் நின்றார்கள் என்பதை முதலிலேயே சொல்லிவிட்டேன் தானே மக்களே!

அது கூட நிகழ்வுக்கு மிகுந்த அழகு சேர்த்திருந்தது. ஆணும் பெண்ணும் சேர்ந்து, நீயா நானா பெரிசு என்று எவ்விதப் பாகுபாடு பேதங்களும் இன்றிச் செய்யப்படும் செயலொன்று கண்களையும் மனங்களையும் சுலபத்தில் கவர்ந்துவிடும் என்பதைச் சுட்டி நின்றது, அத்தருணம்!

நடுவர் தீர்ப்புச் சொல்கையில் 'திருமணத்துக்கு முன்னராக அவ்வளவாகச் சுதந்திரம் இல்லை , கட்டுப்பாடுகள் அதிகம்' என்ற வாதங்களுக்கு, 'நாற்றுக்கள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டாலே இன்னொரு இடத்தில் பெயர்த்து நடுகையில் செழிப்பாக வளரும்' என்பதை உதாரணமாகச் சொல்லி, அதனால்தான் , ஒவ்வொரு பெண் குழந்தையையும் அவர்களின் பிற்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டே கட்டுப்பாடுகளோடு வளர்க்கிறார்கள் என்றும் கூறினார்.

இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள், அவர்கள் ஆணோ பெண்ணோ மிகுந்த கண்காணிப்போடும் உடல், உள நலத்தோடும் வளர்க்கப்பட வேண்டியவர்கள்; அங்கு ஆண், பெண் பாகுபாடே தேவையில்லை என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. பொத்திப் பாதுகாத்துப் பெண்ணை மட்டும் வளர்ந்துவிட்டால்...கட்டாக்காலிகளாக வளரும் எதிர்ப்பாலாரால் அவள் வாழ்வு சிதைந்து போகவும் சந்தர்ப்பம் உண்டே!

ஆணோ, பெண்ணோ நல் நாற்றுக்களாக வளர்த்து, சமுதாயம் என்னும் பூமியில் உறுதியாக ஊன்றிடச் செய்விக்கும் தலையாய கடமை ஒவ்வொரு பெற்றவர்களுக்கும் உண்டு. முனைந்து செய்திடுவோம்!

இன்னுமொரு நடனத்தின் மூலம், பிள்ளைகளின் சிறுவயதில் இருந்தே பெற்றோர் அவர்களோடு இணைந்து ஒவ்வொரு செயல்களிலும் கைகோர்த்துச் செல்கையில், அதாவது, அவர்களைக் கீழே வைத்தோ, ஒதுக்கி வைத்தோ நடக்காது சின்ன விசயங்களில் இருந்து பெரிய விசயங்கள் வரை அவர்களோடு சேர்ந்து செல்கையில், அவர்களும், என்றும் பெற்றோருடன் கைகோர்த்து நிற்கவே விரும்புவார்கள் எனும் மிகப் பெரிய உண்மையை மிகவும் தத்துரூபமாகச் சொல்லி இருந்தார்கள் .

சிறுமி நிலோமிகா குமார், தமிழ் மொழியைப் பற்றி ஒரு பேச்சு வழங்கினார். மனனம் செய்ததை மிகவும் தெளிவாக அறுத்துறுத்து அவர் சொன்ன போது, வீட்டில் வைத்தே மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அத்தாயின் முகம் பெருமையால் மூடியிருந்தது.

நிகழ்வு முடிந்து வீடு வர இரவு ஒன்பது கடந்திருந்தது.

"என்னப்பா இவ்வளவு நேரம்? நன்றாகப் பழகிய ஒருவரின் பிறந்த நாள் வீட்டில் கூட சிலமணிகளைச் சேர்ந்தால் போலக் கழிப்பதென்றாலே கஷ்டப்படுவீங்களே! எப்படி இருந்தீங்க ? அவ்வளவு நல்லா இருந்ததோ?" என்று கஜன் கேட்டபொழுதுதான், எவ்வளவு நேரம் அங்கு இருந்திருக்கிறேன் என்பதையே உணர்ந்தேன்.

நான் கொஞ்சமும் தயங்காது , "உண்மையாகவே நேரம் போனதே தெரிய இல்லையப்பா!" என்று பதில் சொல்லி இருந்தேன்.

அந்த நிகழ்வை நடத்த எவ்வளவோ மினக்கடல்கள், ஆயத்தங்கள், பயிற்ச்சிகள் செய்திருப்பார்கள் அல்லவா? அதற்குக் கிடைத்த பரிசே நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் இத்தகைய மகிழ்வான மனநிலை!

எதிர் வரும் காலங்களில் எம் சமூகத்தின் அடையாளங்களோடும், தேவையான பல நல்ல நல்ல அம்சங்களோடும் மகளிர் மன்றத்தின் செயல்பாடுகள் அமைய செந்தூரத்தின் சார்பாக 'நெதர்லாந்து டென்ஹெல்டர் மகளிர் மன்றத்தினருக்கு' வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்வடைகின்றேன்.
 
Top