டிமென்ஷியா - ரோசி கஜன் - இதழ் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1
1558514070998.png ஒருவர் வழமையான தனது சிந்தனை, நினைவு மற்றும் புரிந்து கொள்ளும் தன்மையினைச் சிறிது சிறிதாக இழந்து நிற்கும் நிலையே 'டிமென்ஷியா' என்றழைக்கப்படுகின்றது.

ஒருவரின் ஆயுட்காலம் என்பது அதிகரித்துச் செல்கையில் 'டிமென்ஷியா' என்றழைக்கப்படும் 'மறதி நோய்'க்கு உட்படக்கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகரித்துச் செல்கின்றன. அதேநேரம், முதுமையில் நீண்ட நாட்கள் வாழ்வோர் எல்லோருமே இந்நோய்க்கு உட்படுவார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

இந்நோயின் அறிகுறிகள் என்றால், நினைவு இழப்பு ஏற்படுதல், மன நிலை மாற்றங்கள், தொடர்பாடலில் சிக்கல்களைச் சந்தித்தல், அதாவது பேச்சு , வாசிப்பு, எழுதும் திறன் குறைந்துவிடுபவற்றைக் குறிப்பிடலாம்.

உதாரணமாக, வெளியே செல்பவருக்கு வீட்டிற்குத் திரும்பிவரும் வழி மறந்து போதல், பெயர்கள், இடங்களை மறந்துவிடுதல் , கடந்த நாட்களில் நடந்த சம்பவங்களை நினைவில் கொள்ள முடியாது போதல் என்பவற்றைக் கூறலாம்.

இந்நோய்க்குட்படுகையில் மூளையில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பகுதிகள் பாதிக்கப்படுவதால், சோகம், பயம், கோபம் என்பவையும் அவர்களை ஆட்கொண்டுவிடும்.

இந்தநோயின் பிந்தைய கட்டங்களில், பாதிக்கப்பட்ட நபருக்கு அன்றாடப் பணிகள் செய்வதில் பிரச்னைகள் ஏற்படும்; மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்.

இதய நோய், புற்றுநோய் மற்றும் பக்கவாத நோய்க்கு அடுத்தபடியாக, இறப்பிற்கு முக்கிய காரணமாக மறதிநோய் உள்ளது. உலக அளவில், 2.4 கோடி பேர், இந்நோயால் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 46 லட்சம் புதிய நோயாளிகள் உருவாகின்றனர்.

இந்நிலையில், இந்நோயைக் குணப்படுத்தத் தேவையானமருந்துகள், தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பெரும்பாலான வகை மறதி நோய்களைக் குணப்படுத்த முடியாது. சில வகை மறதி நோயை, சில அறிகுறிகளைத் தற்காலிகமாகக் குறைக்க மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

மறதி நோயின் வகைகள்:

1அல்சைமர் மறதி நோய்: மூளையின் வேதியியல் தன்மைகளும், அமைப்புக்களும் மாறி, மூளையின் செல்கள் இறப்பதால் ஏற்படுகிறது.

2ரத்த நாள மறதி நோய்: மூளை, ஆக்சிஜனை தாங்கிய ரத்தத்தைப் பெற ஒரு நாள வலைப்பின்னலைச் சார்ந்திருக்கின்றது. மூளைக்கு ஆக்சிஜன் செல்வது நின்று விட்டால் அதன் செல்கள் அனேகமாக இறந்து விடும். இந்நிலையில் ரத்தநாள மறதி நோய் ஏற்படலாம். பக்க வாதத்தை அடுத்து இந்த நோய் ஏற்படும்.

3லெவி அமைப்புக்களைக் கொண்ட மறதி நோய்: இந்த வகை, நரம்பு செல்களுக்குள் உருவாகும் மிகச்சிறிய உருண்டை வடிவ அமைப்புக்களின் பெயரைக் கொண்டிருக்கிறது.

அவை, மூளையில் இருப்பதால் மூளைத்திசு படிப்படியாக அழிகிறது. நினைவுத்திறன், கவனம் செலுத்துதல், மொழித்திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

4ப்ரன்டோ - டெம்பொரல் மறதி நோய்: இந்த நோயில் மூளையின் முன்பக்கம் அதிகம் சேதமடைகிறது. முதலில் நினைவுத்திறனை விட ஆளுமையும், நடத்தையையும் பாதிக்கும்.

இப்போதெல்லாம் பலரும் தங்களுக்கு மறதி நோய் இருப்பதாக பயப்படுகின்றனர். குறிப்பாக, ஒருவரின் நினைவுத்திறன் குறைந்து வருவதாகத் தோன்றினாலோ, மறதி அதிகரித்தாலோ மறதி நோய் இருப்பதாகக் கருதி விட முடியாது. அது மன அழுத்தம், மனச் சோர்வின் அறிகுறியாகவும் இருக்கலாம். அரிதாக விட்டமின் பற்றாக்குறை, மூளைக்கட்டியாலும் மறதி நோய் அறிகுறிகள் ஏற்படலாம்.

இது விடயத்தில் உங்களைப்பற்றி அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப்பற்றிக் கவலையாக இருந்தால், உங்கள் வைத்தியரை அணுகுவது நல்லது. நோய் அறிதலைச் சரியாகச் செய்வது மிக முக்கியம். பொது மருத்துவர், முதியோர் சிறப்பு மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர், மன நல மருத்துவர்களால் இந்நோயைக் கண்டறிய முடியும். இதற்காக, ஒருவரின் நினைவுத்திறன், அன்றாட பணிகள் செய்யும் திறனையும் அறியும் பரிசோதனைகள் உள்ளன.

மறதி நோயை விளைவிக்கும் பெரும்பாலான நோய்கள் எதனால் ஏற்படுகின்றன என்பது தற்போது நிச்சயமாகத் தெரியாது. எனவே, மறதிநோயை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று உறுதியாக தீர்மானிப்பது கடினம். இருந்தாலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் மறதி நோயை தடுக்க உதவும். குறிப்பாகப் புகை பிடிக்காமை, தவறாமல் உடற்பயிற்சி செய்தல், கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்தல், முதுமை வரை மனதைச் சுறுசுறுப்பாக வைத்தலும் மறதி நோயால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

இந்நோய் உள்ளவர்களை, ஏறக்குறைய ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்நேரமும் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மருந்து, மாத்திரைகளைச் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொடுப்பதுடன், அவற்றைப் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஞாபக மறதியில் அவர்கள் மீண்டும் மீண்டும் மாத்திரைகளை உட்கொள்ள வாய்ப்புண்டு.

இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் புலப்படும் போதே சொத்து-பணம், முதலிய முக்கிய விவரங்களை, நம்பகமான பாதுகாவலர்களிடம் தெரிவிப்பது நல்லது.

வீட்டின் அனைத்து அறைகளிலும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் படங்களை மாட்டி, அன்றாட நடைமுறைச் செயல்களை எளிதாகப் புரிய உதவி செய்யலாம்.

கழிப்பறையில் வழுக்காத தரை இருத்தல்; உதவிக்கு கைபிடிகள் இருந்தால் நல்லது. அவர்களின் அறைகளை அடிக்கடி மாற்றக்கூடாது. அன்புடன், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவை.
 
Top