சைக்கிள் ... இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
1554066352899.png


சிறுவயதில் மூன்று சில்லுகள் கொண்ட சிவப்பு நிறச் சைக்கிள் ஒன்று எங்களிடம் இருந்தது. அந்நாட்களில் அதற்காக நானும் தம்பியும் கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டு சண்டையெல்லாம் போட்டிருக்கிறோம். நான் சிறுவயதில்...ம்ம்... அந்த வயதில் என்றில்லைப் பொதுவாகவே மெலிந்த உடல்வாகு கொண்டவள்.ஒல்லிக்கோம்பை என்பான் தம்பி! ஆனாலும், பொல்லாத நரம்பி என்றும் சொல்வான். இத்தனைக்கும் அவன் ஒரு அடிபோட்டால் நான் சுருண்டு விழுந்து விடுவேன். என்னை விட இரண்டு வயதுகள் சிறியவனாக இருந்தாலும் அப்பவே ...அப்பவே என்றால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனோடு சண்டை வந்தால் முடிவில் ...ரோசி அழுவாள். விக்கி விக்கிச் சத்தம் போட்டு அழுவாள். கோபத்தில் அடித்துவிடுபவனேபயந்து போகும் அளவுக்கு அழுது கரைவாள், அம்மா அல்லது அப்பாவிடமிருந்து அவனுக்கு அடி கிடைக்கும் வரை." நீலிக்கண்ணீர் வடிக்கிறாள் ...நம்பாதீங்க!" என்று கத்துவான் தம்பி. நாங்கள் இருவரும் போட்ட சத்தத்தில் எரிச்சலோடு வரும் அம்மா அவனுக்கு இரண்டு மொத்துக் கொடுத்துவிட்டு, "உன்னையல்லா அவனோட பிரச்சனைக்குப் போகாத என்று சொல்லி இருக்கிறன்?" என்று எனக்கும் அதே இரண்டு தந்துவிட்டு, சைக்கிளை வாங்கி அவனிடமே கொடுத்துவிட்டுப் போவார்.அவன் ஓடிக் களைத்துப் போகையில் தான் என் கைக்கு வரும். இப்போ யோசித்துப் பார்த்தால் எனக்கு அந்தக் சைக்கிள் அவ்வளவாக அளவும் இல்லை, உயரத்தில். நான் கொஞ்சம் உயரமாகையால் கஷ்டப்பட்டுத்தான் அதில் ஓடுவேன். ஆனாலும் அவ்வளவு பிடிக்கும்.அப்பவெல்லாம் கோபத்தில் எனக்குத் தம்பியே இல்லாமல் இருந்திருந்தால் என்றும் நினைத்திருக்கிறேன். அதையெல்லாம் கேட்டுவைத்துவிட்டுத்தான் அவனை அவ்வளவு விரவிவில் எடுத்துக் கொண்டாரோ இறைவன் என்று இப்போதும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.சைக்கிளுக்கு வருவோம்.பிறகு 1977 இலங்கையில் கலவரம் நடந்த காலத்தில் நாங்கள் அனலைதீவில் கொஞ்ச காலம் சென்று இருந்தோம் . நான்கு வருடங்கள் என்று நினைக்கிறன். அங்கு நான் முதலாம் வகுப்பில் படிக்கும் போதுதான் பெரிய ஆண்களின் சைக்கிளில் ...முதல் முதல் பாதையில் சைக்கிள் ஓடிப் பழகினேன்.அங்கே அம்மாம்மாவின் வீட்டு முன் பாதையில்... பாதை என்றால் வாகனங்களின் சில்லுப் போற இரு பகுதியும் மண்ணும் கரையிலும் நடுவிலும் குட்டி குட்டிக் கற்களுமாக இறுகி இருக்கும் பாதை. சைக்கிளை நேராக நிறுத்திப் பிடிக்கவே கொஞ்சம் தள்ளாடுவேன். ஆனாலும், அதை ஓடிப் பழகவேணும் என்ற ஆசை பெரிசு.

முதல் முதல் அங்கும் இங்கும் உருட்டிப் பழகினேன், சிலநாட்களுக்கு. அதிலும் இவன் தம்பியின் இடையூறு நிறைய...பிறகு இடது காலை மட்டும் ஒரு பக்க பெடலில் வைத்துக் கெந்திக் கெந்திச் சுற்றி வந்தேன். சைக்கிள் கிடைக்கும் பொழுதெல்லாம் இதே வேலைதான்.அடுத்த கட்டமாக பாருக்குள்ளால் வலது காலை விட்டு ஓடுவது ...அந்த நேரங்களில் விமானம் ஓட்டுவது போன்றதொரு பெருமை!அப்படி ஓடப் பழகுவதற்குள் பலதடவைகள் விழுந்திருக்கிறேன். பூவரசம் இலையில் பீப்பீ செய்து, ஒன்றில்லை இரண்டை ஒன்றாகச் சேர்த்து வைத்து ஊதிச் சிரிப்பான் தம்பி. எழும்பின வேகத்தில் கைக்கு ஒரு தென்னங்குரும்பை கிடைக்காதா என்ன? விட்டெறிவேன். உச்சி ஓடிருவான்.எனது இடது கால் பெருவிரல் ஓரமாக இப்பவும் தழும்பு உண்டு. தொடர்ந்து அடிபட்ட இடத்திலேயே அடிபட்டு இரத்தம் வந்தாலும் அந்த 7, 8 வயதில் சைக்கிளை ஓடியே தீரவேண்டும் என்பதே குறியாக ஓடிப் பழகி முதல் முதன் அந்தப் பாதையில் ஓடிச் சென்றது இன்னும் நினைவில் இருக்கு.பிறகு ஊரில் இருந்து வந்துவிட்டோம். சைக்கில் ஓடும் சந்தர்ப்பம் அவ்வளவாக அமையவில்லை. வீட்டில் அப்பாவிடம் சைக்கிள் இருந்தாலும் வளர்ந்த பிறகு அதில் ஓடினால் வெட்கமாச்சே!பாடசாலைக்கு நடந்துதான் போவேன்; எப்பவாவது அப்பாவோடும் . ஒன்பதாம் வகுப்பில் தனியார் வகுப்பு என்று போகத் தொடங்கிய போதும் வீட்டுக்கு அருகில் இருந்தால் பிரச்சனை வரவில்லை. உயர்தரத்தில் தான் ஆரம்பத்தில் நண்பிகளோடு பின்னால் தொத்திச் சென்றிருக்கிறேன். அதன் பிறகே ரொபின்சன் எனக்கே எனக்கெனக் கிடைத்தது.


1554066417101.png மிகச் சிலதடவைகள் அப்பாவோடு சைக்கிளில் முன்புறம் அமர்ந்திருந்து சென்றதைத் தவிர ஆண்களோடு சைக்கிளில் ஏறிச் சென்ற நினைவு எனக்கு இல்லை. தம்பியின் சைக்கிளில் சிலதடவைகள் பின்னால் தொத்திச் சென்றதும் உண்டு.அதுவே 90 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்கையில் , 95 இடம் பெயர்வின் பின்னரான வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் செல்கையில் எல்லாம் சைக்கிளில் மட்டுமே கடந்து செல்லவேண்டிய இடங்களும் இருந்ததுண்டு.யாரென்றே தெரியாத இளம் வயது ஆண்கள் தான் அநேகம் சைக்கிள் ஓட்டுவார்கள். எங்கள் பயணப்பைகளைப் பின்புறத்தில் கட்டிவிட்டு முன்னால் எங்களை ஏற்றிச் செல்வார்கள். ஒரு வார்த்தை தேவையற்ற கதை இருக்காது. குண்டும் குழியுமான (பாதை?) பகுதியால் கடக்கையில் கண்ணியம்...பொறுப்பையும் கண்ணியத்தையும் மட்டுமே காட்டும் அவர்கள் வாழ்ந்த இடத்தில் இன்று? என்ன என்ன எல்லாம் நடந்தேறுகின்றது? அவர்களின் பிள்ளைகள் இன்று இளம் வயதினராக இருக்கலாம். அதே கண்ணிய எண்ணத்தோடு இருப்பார்களாயின் இதெல்லாம் எப்படி நடக்க முடியும் என்ற எண்ணம் எழாது இல்லை.99 வரை யாழில் இருந்தேன். அதுவரை எங்கு சென்றாலும் சைக்கிள் தானே. அது எவ்வளவு தூரம் என்றாலும் அதைவிட்டால் வேறு எதையும் நாங்களும் எதிர்பார்த்தில்லை. பிறகு கொழும்பு வந்துவிட்டதால் சைக்கிள் ஓடும் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை, இங்கு வரும் வரை.
1554066440680.png
நெதர்லாந்து வந்ததில் இருந்து நான் தனியாக வெளியில் செல்வதென்றால் சைக்கிள் தான். பிள்ளைகள் பள்ளி செல்வதும் சைக்கிள்தான். சைக்கிள் இல்லாமல் இங்கு யாருமே இருக்கவும் மாட்டார்கள். இன்றுவரை இங்கு நம்ம ஊர் போலவே என்னை உணர வைப்பது இந்தச் சைக்கிள் ஓட்டமே. ஆனால், அங்குதான் இப்போது சைக்கிள் ஓட்டுபவர்களைக் காண்பது அரிதாம்.
 
Top