செப்பனிடுவோம்!

Rosei Kajan

Administrator
Staff member
#1
1542049663381.png 1542049701708.pngஎனக்கும் எழுத்துக்குமான அறிமுகம் என்று பார்த்தால் மிகச் சில வருடங்களே. அதாவது, ஆரம்பப்பள்ளியில் பயில்கிறேன் என்று வைத்துக் கொள்வோமே!


அதிலும், நாவல்கள் எழுதுவதென்பது சிறுகதைகளில் இருந்தே ஆரம்பமானது. சிறுகதைகள் வாசிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். வரிவரியாக அனுபவித்து வாசித்தப் பல சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தும் இருக்கிறேன். அப்படி, மனதில் கல்வெட்டாகப் பதியும் எழுத்துகளைப் பார்க்கையில் உண்மையாகவே பொறாமையாக இருக்கும். ‘ப்பா! எப்படி எழுதியுள்ளார்கள்! நமக்கும் அப்படி எழுத முடிந்தால்…’ என்ற எண்ணம் தோன்றினாலும் சட்டென்று எழுதுவதற்கு வரவே வராதாம்.
விரல்விட்டு எண்ணுமளவுக்குச் சில சிறுகதைகள் எழுதியுள்ளேன். எழுதவேண்டும் என்று இருந்து எழுதியது என்றால் முதல் முதல் எழுதிய மூன்று சிறுகதைகளைச் சொல்லலாம். அதன் பின்னரோ, அதீத கோபத்தில் அல்லது மகிழ்வான மனநிலையில், இல்லையோ, மறையவே மாட்டேன் என்று அடிமனதில் கிடந்தது அழிச்சாட்டியம் செய்யும் துக்கத்தில் மட்டுமே சிறுகதைளை எழுத முடிந்தது.
எல்லோருக்கும் அப்படித்தானோ…என்னமோ! எனக்கு அப்படித்தான் .
அப்படி, மிகுந்த கோபத்தோடு எழுதிய இரு கதைகளே, ‘மறுதலிப்பு’மற்றும் ‘கண்ணம்மா இறந்துவிட்டார்’. இந்த வரிசையில் நான் எழுதிய ‘உன் வாசமே என் சுவாசமாய்’ என்ற நாவலையும் நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன கதைகளுள் பெரிய ஒற்றுமைகள் சிலவுண்டு, ஒரே நபரால் எழுதப்பட்டவை என்பதைத் தவிர்த்து.

முதலாவதாக, மூன்றினதும் அடிநாதமாக இருப்பது ஒரேவிடயம் தான், அதாவது சிறுவர் துஷ்பிரயோகம்.
இக்கதைகளில் இக்கொடுமைக்குட்படுத்தப்ட்டவர்களாகப் பெண்குழந்தைகள் காட்டப்பட்டிருந்தாலும், இந்த விடயத்தில் ஆண், பெண் வேறுபாடு இல்லவே இல்லை; இருபாலாரும் இந்த வதைக்குட்படுத்தப்படுகிறார்கள்; பெரும்பாலும், சபலமும் வக்கிர குணமும் கொண்ட ஆண்களால் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.
மேலே சொன்னச் சிறுகதைகளை எழுதிய பின்னர் ஒரு வாசகியாக அவற்றைப் பார்க்கையில் இன்னுமொரு ஒற்றுமையும் புலப்பட்டது. மிகப் பெரிய ஒற்றுமையென்பேன்.
அது என்னவென்றால், மூன்றிலும், நடந்த கொடுமை இதுதான், அது இன்னாரால் நடத்தப்பட்டது என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. சம்பந்தபட்டவர்களுள், சிறு வட்டத்துள் இரும்புச் சங்கிலி போட்டுப் பிணைத்து ஆழப் புதைக்கப்பட்டுவிட்டன.
அழுதார்கள் தான். கோபம் கொண்டு குமுறினார்கள். நாட்கள் கடக்க கடக்கத் துக்கத்தை விழுங்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
மறுதலிப்பில்… சின்னஞ்சிறு குழந்தை அவள்; ஐந்தே வயதுதான், நேர்சரி முடிந்து வந்தபின் சில மணிநேரம் தமக்கையின் கணவனின் பொறுப்பில் விடப்பட்டிருப்பாள்; அக்குழந்தை, அந்த மனித உருக்கொண்ட சாக்கடைக்குப் பலியாகியிருக்கும். இதை அறிந்ததும் வெகுண்டு எழுந்தாலும் அந்தக் குழந்தையின் வருங்காலம், இதைச் செய்தவனின் குழந்தையின் வருங்காலம், சுற்றம் சூழலின் எண்ணங்கள் எப்படியிருக்குமோ, மானம், அவமானம் என்றெல்லாம் எண்ணித் தம்முள் மறைத்துவிடுவார்கள். அதன் பின்னர், அவன் சார்பில், அவன் மனைவி அவன் தாயாலும் சுற்றத்தாலும் கொடியவளாகச் சித்தரிக்கப்படுவாள், அவன் எப்படிபட்டவன் என்று தெரியாததால்.

கண்ணம்மா இறந்துவிட்டார்… கதையிலும், தன் மகனால் ஒரு குழந்தை கசக்கி எறியப்பட்டாள் என்று தெரிய வருகையில், அவனைச் சுமந்து பெற்றவள் அவனுக்கும் அவனைக் காப்பாற்ற முனைந்த கணவனுக்கும் உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொல்லுவாள். அதன் பின்னர் சிறை சென்று, கொலைகளுக்குத் தண்டனைப் பெற்றே தன் வாழ்வை முடிப்பவள், இந்தக் காரணத்தால் தான் இப்படிச் செய்தேன் என்று வெளியில் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அல்லவா…இப்படி நடக்க நினைக்கும் எந்த ஒரு குரூர உள்ளம் கொண்டவனுக்கும் உயிர்ப்பயம் வரும். அதன் பின்னர் வாயில் வைக்கும் ஒவ்வொரு உருண்டையும் உள்ளே போகுமா சொல்லுங்களேன்? உணவே விசமாகத் தெரிந்தால் பிறகென்ன வாழ்வு? அப்படியொரு நிலைக்குத் தன்னைத் தள்ள நினைக்கையில் மரண பயம் வரும் தானே? அதைச் செய்யவில்லைக் கண்ணம்மா.
உன் வாசமே என் சுவாசமாய் நாவலிலும் இதேதான். தந்தையால் சிதைக்கப்பட்டுக் குழந்தையும் பெற்றிருப்பாள் நாயகி. பதினைந்தே வயதில் . பின்னரோ, உலகின் அத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்திருப்பாள். இருந்தும் அவள் தந்தையால் இவளுக்கு நடந்த கொடுமை வெளியுலகுக்குக் காட்டப்படவில்லை.
இது கதைகளில் மட்டும் என்று இல்லை உண்மையிலும் அதுதான் நடக்கின்றது.
அன்றுதொட்டு இன்றுவரை, வலியவர் இளைத்தவரை பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்வதும் உளரீதியான தாக்குதலை ஏற்படுத்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை எவராலுமே மறுக்க முடியாது, வீம்புக்குப் பேசுவோரைத் தவிர!

நம் சமுகத்தில் இதை வெளிப்படையாகச் சொல்வது என்றால் அது பெரிய குற்றமாகப் பார்க்கப்படுவதால் சிறார்களால் பெற்றோர்களின் பார்வைக்கே இவை வராதும் போய்விடும். அந்த நாவல் எழுத முன்னர் நான் சிலரோடு இது சம்பந்தமாகக் கலந்துரையாடினேன். மனநல மருத்துவர் ஒருவர், இப்படியான நிலைக்குட்பட்டவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்குபவர் ஒருவர் இதனுள் அடக்கம்.
குடும்ப உறவுகளுள் இப்படியான நிகழ்வுகள் அதிகம் நடப்பதையும் சிலவேளைகளில் சிறார்கள் அதற்குப் பழக்கப்ட்டுவிடுவதையும் கூடக் கூறினார்கள்.
இப்படி, காலா கலாமாகச் சிறுவர், வேலைக்குச் சொல்வோர், வீட்டில் இருப்போம் என்ற பாகுபாடின்றி உடல் உள ரீதியான தொல்லைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதை முழுமையாக நிறுத்தியே ஆகவேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் நினைப்போமானால் அதில் தவறு உண்டா என்ன? நினைக்கவேண்டும், நிச்சயம் முடியும்.
பிரபலங்கள் என்று இல்லை, இப்படியான கயவர்களை அது பெண்ணோ ஆணோ தயங்காது வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும். அப்படிக் காட்டுபவருக்குத் துணை நிற்க வேண்டும். உன்னோடு நானிருக்கப் பயமேன் என்று உத்திரவாதம் கொடுக்க ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முதல் #Me too என்று ஆரம்பமான செயல்பாடு உலகம் முழுவதும் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எச்சரிக்கையை வழங்கி வருகின்றது.
‘சபலம் கொள்ளும் உள்ளமா? கடிவாளம் போடேன். இல்லையோ, கொடிய மிருகங்களைவிட நீ எந்தவிதத்தில் வேறுபட்டுவிடுகிறாய்?’ என்கின்றது கடுமையாக!
‘நீ சபலம் கொள்வது பெரும் சுவாலை மீது. தொட்டுவிட்டு சுட்டுக்கொள்ளதே!’ இனி இப்படியான மனநிலையில் இருக்க முற்படுவோருக்கு எச்சரிகின்றது.
இன்றுவரை பல நாடுகளில் பெரிய பதவியில் உள்ளவர்கள், தொலைத்தொடர்பு சார்ந்த பணியில் உள்ளவர்கள், திரைத்துறையில் உள்ளோர், மத போதகர்கள், ஆசியர்கள், குடும்ப உறுப்பினர், உயிரோடு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்கள், உலகத்தின் பார்வையில் நிறுத்தபட்டு வருகின்றார்கள்.
உயிரோடு உள்ளவனை வேண்டுமென்றால் நிருபித்துத் தண்டனை கொடுக்கலாம் உயிரோடு இல்லாதவர்களைக் காட்டுவது ஏன்? என்ற மிகப் பெரிய கேள்விக்கு விடையே …இச்செயல்பாட்டின் உச்ச பட்ச எச்சரிக்கைதான்.
எந்தக் கட்டத்தில் நீ அப்படி நடந்துகொண்டாலும் என்றாவது வெளிப்படும் என்று சுட்டபடுகின்றது.
இது பெண்களுக்கானது என்றெல்லாம் சித்தரிக்காதீர்கள். உண்மையை உடைத்த ஆண்களும் உள்ளார்கள். அளவில் குறைவாக இருக்கலாம், அவ்வளவே!
கண்ணம்மா கதை வாசித்த வாசிகி ஒருவர் தன் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். உள்பெட்டியில்தான் . சொந்தத் தமக்கையின் கணவன் பெரிய இளம்பிள்ளைகளின் தந்தை, ஐம்பது வயதைக் கடந்தவன் தன்னைத் தவறாகப் பார்பதாக, கதைப்பதாக இன்னும் சில சில விசயங்களைச் சொல்லிவிட்டு, இதுக்கு உங்கள் தீர்வு என்ன என்று என்னிடம் கேட்டிருந்தார்.
அவன் மனைவி, பிள்ளகைகள், உற்றம் சுற்றமிடம் அவனைப் பற்றிப் போட்டுடைத்துவிடுங்கள் என்றேன் . அது சொல்வது இலகு செய்வது கடினம் என்று பல காரணங்களை அடுக்கினார். விலத்திப் போவதைச் செய்வதைத் தவிர வேறு என்ன செய்வது என்றவர், அவன் என்னோடு மட்டும் இல்லை இன்னும் சிலரும் அவனைப் பற்றி என்னிடம் கூறியுள்ளார்கள் என்றும் சொன்னார். இருந்தும் வெளிப்படையாகக் கதைக்க மிகவும் தயங்கவே செய்தார். இதுதான் இன்றைய சாதாரண குடும்பங்களின் நிலை . குடும்பங்கள் உடையலாம், உறவுகளில் விரிசல் வரலாம் என்றெல்லாம் இப்படியாவனர்களை வளர விடுவானேன். நிமிர்வாகச் சுற்றித் திரிய விடுவானேன்? உடைத்துச் சொல்லுங்கள்…

சக மனிதரை, அவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த ஆரோக்கிய சுமுகத்தை உருவாக்குதல் வருங்காலச் சந்ததியின் கடமை மட்டும் இல்லை, அதற்காகப் பாதை அமைத்துக் கொடுத்தல் இன்றைய சந்ததியினரான நம் கடமையே! செப்பனிடுவோம்!
 
Top