
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருக்கவேண்டும் என்பார்கள். ஆனால், உபத்திரவம் செய்வதற்காகவே உதவி செய்ய வருபவர் என் அருமை மகள் சிந்து. முட்டை, சர்க்கரை, தேங்காய்ப்பால் கலவை இவற்றை ஒன்றாகச் சேர்த்து கை மிக்சியால் நான் அடித்துத் தருகிறேன் என்று வாங்கி, மிக்சி சற்றே சரிந்ததில் அது அந்தத் தேசம் முழுவது பறந்து, கடவுளே.. மிக இலகுவாகச் செய்யவேண்டிய வட்டிலாப்பத்தை, ஏனடா ஆரம்பித்தோம் என்று நொந்துபோக வைத்து என்னைச் செய்ய வைத்த பெருமை என் மகளுக்கு மட்டுமே உண்டு! உண்ட களைக்குச் சமையலறையைத் துப்பரவாக்கவைத்தாலும் வெகு ருசியாகத்தான் இருந்தது வட்டிலாப்பம். அதனால் அவரை மன்னித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
100கி சக்கரை
பெரிய தேங்காயில் பாதியில் பிழிந்து எடுத்த திக்கான பால்
மூன்று முட்டைகள்
ஏலக்காய்த் தூள் அரைத் தேக்கரண்டி
பட்டர் கொஞ்சமாக
கஜூ நட்ஸ் தேவைக்கேற்ப
செய்முறை:
அளவான பெரிய கிண்ணத்தில் முட்டைகளோடு அரைக் கரண்டி ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். அதனோடு திக்காக எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பால் கலந்து, சர்க்கரையையும் சேர்த்து சர்க்கரை கரையும் வரைக்கும் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை கரையும் வரைக்கும் அடித்ததும், அதனை நல்லதொரு வடிகட்டியால் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் எடுத்துவைத்திருக்கும் கஜூவினை அதற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு கொஞ்சம் சர்க்கரை எடுத்து ஒரு துளி நீர் விட்டு அடுப்பில் வைத்து உருக்கி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது எந்தப் பாத்திரத்தில் வட்டிலாப்பம் அவிக்கப் போகிறீர்களோ அந்தப் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க பட்டரினைத் தடவி, கரமல் போன்று உருக்கி வைத்திருக்கும் சர்க்கரைப் பாணியினை அதில் தடவிய பிறகு நாம் செய்து வைத்திருக்கும் வட்டிலாப்பக் கலவையை அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் அலுமினியத் தாளினால் சுற்றி, நீரோ நீராவியோ உள்ளே செல்லாதபடிக்கு இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, ஸ்டீமரின் மேலே வட்டிலாப்பக் கலவையை இட்டு வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து, நீராவியில் ஒரு நாற்பது நிமிடங்கள் வைத்து எடுத்தால் மிக மிகச் சுவையான வட்டிலாப்பம் தயாராகிவிடும்.
Attachments
-
311.9 KB Views: 0