காற்றாய் மாறிக் காதலிக்கிறேன்! - யாழ் சத்யா - அத்தியாயம் 1 (இதழ் 8)

#1அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தமிழர்கள் அதிகம் வாழும் அந்தக் குடியிருப்பை நோக்கிக் காரைச் செலுத்தினாள் யாழினி. மார்கழி மாதத்துச் சூரியன் சுட்டெரித்தது. காரில் ஏஸி போட்டிருந்தாலும் கூட வெளியே பார்க்கும் போது உச்சி வானில் சாவகாசமாய் உலாப் போய்க் கொண்டிருந்த கதிரவன் தன் வேலையைக் காட்டுவது தெளிவாகப் புரிந்தது.காரை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு தானியங்கியில் தனது வீட்டை அடைந்தவள் விடுவிடுவென வரவேற்பறைக்குச் சென்று தொப்பென ஸோபாவில் விழுந்தாள். ரிமோட்டை எடுத்து ஏஸியைப் போட்டு விட்டு அந்தப் பெரிய ஸோபாவில் காலை நீட்டிப் படுத்துக் கொண்டாள்.மதியத்திலிருந்து நின்றபடி வேலை பார்த்திருந்தது உடல் களைத்து ஓய்வுக்குக் கெஞ்சியது. தமிழர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ‘யாழ் அழகு நிலையத்தின்’ உரிமையாளர்தான் இவள். அன்று மெல்போர்னில் இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களினால் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.அதற்கு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்கள் சிலரும் சூப்பர் சிங்கரில் வென்ற போட்டியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். பாடகிகள் அனைவருக்கும் யாழினி தான் தலையலங்காரம், ஒப்பனை எல்லாம். உதவிக்கு ஒரு பெண் இருந்தாலும் ஐந்து பாடகிகளையும் திருப்திப்படுத்தும் விதத்தில் அலங்காரம் செய்து முடித்ததும் இவள் களைத்துத் தான் போனாள்.நிகழ்ச்சியைக் கூட நின்று பார்க்க விருப்பமின்றி வீட்டிற்கு ஓடி வந்திருந்தாள். களைப்பும் ஒரு காரணமாக இருந்தாலும் தனக்குப் பிடித்த பாடகர்கள் பாடுவதை நேரில்ப் பார்க்கக் கூட மனமின்றி வந்ததன் காரணம் அவன் மட்டுமே தான்.இவள் பாடகிகளுக்கு ஒப்பனை முடித்ததும் அங்கே புகைப்படங்கள் எடுக்கத் தயாரானார்கள். இவளும் கூடவே நின்று அந்த போட்டோசூட்டுக்கு உதவிக் கொண்டிருந்தாள். அப்போது தன் மீது ஏதோ வெளிச்சம் மின்னலாய்ப் பட்டுத் தெறித்ததை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.கறுப்பு நிறத்தில் சேர்ட்டும் ஜீன்ஸ்ஸும் அணிந்த ஒருவன் இவளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தான். ஒற்றைக் கையால் முகத்தை மறைத்தபடி அவனை உறுத்து விழித்தவள்,“ப்ளீஸ்…! என்னை போட்டோ எடுக்க வேணாம்…”என்றாள். பெயரிலிருந்த யாழ் குரலின் இனிமையில் வெளிப்பட்டாலும் அவளின் முகத்தில் வெடித்த எள்ளும் கொள்ளும் அவள் கோபத்தை நன்றாகவே பறை சாற்றியது. ஆனால் அவனோ இவள் பேச்சைக் கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து கிளுக்கிக் கொண்டிருந்தான்.ஒரு கட்டத்தில் தாங்க முடியாதவளாய் கொலைவெறியில் அவன் அருகே சென்றவள், அவன் புகைப்படம் எடுக்கும் கருவியைப் பறித்து எறிந்தாள். அந்த விலை உயர்ந்த கமெரா சிறிது தூரத்தில் தெறித்து விழுந்தது. அங்கு கூடியிருந்த யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.அவ்வளவு நேரமும் மிக இனிமையாகப் பேசிச் சிரித்துக் கொண்டு மென்மையாக நடந்தவள் இவ்வாறு ஆவேசப் பட்டதைக் கண்ட அனைவரும் ஒரு நொடி திகைத்துத் தான் போனார்கள்.“உனக்கு ஒரு தரம் சொன்னால் புரியாதா? ஒழுங்கு மரியாதையாக என்ர போட்டோஸ் எல்லாத்தையும் டிலீட் பண்ணிடு…”கூறி விட்டு விருட்டென அந்த இடத்தை விட்டு அகன்றாள். அவனோ அவள் சொன்னது எதுவுமே பாதிக்காதவனாய் தனது கமெராவை எடுத்து அது உடைந்திருக்கிறதா என்று பரிசோதிக்க ஆரம்பித்தான். அவன் சாதாரணமாக இருக்கவும் மற்றவர்களும் எதையும் காட்டிக் கொள்ளாது தங்களது வேலையைத் தொடர்ந்தனர்.அவன் அபரஜித். அவுஸ்ரேலியாவில் எந்த நகரில் என்றாலும் தமிழர்கள் எல்லோரது வீட்டு விசேசங்களையும் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ அவனது யாழ் புகைப்பட சேவைகள் தான். இப்போதும் இந்த இசை நிகழ்ச்சியை ஆவணமாக்கும் பொருட்டுத் தான் இங்கே வந்திருந்தான். எல்லா நகரங்களிலும் கிளை அமைத்து உரிய ஆட்களை நியமித்திருந்தான். இவன் மேற்பார்வை பார்ப்பதோடு சரி.திரைப்படங்கள் அளவுக்கு இவனது வீடியோக்கள் இருந்ததால் நற்பெயரோடு நிறைய வாடிக்கையாளரையும் கொண்டிருந்தான். எந்த நேரம் எங்கே இருப்பான் என்று சொல்ல முடியாத படி உலகம் பூராகச் சுற்றிக் கொண்டிருப்பான். அவனும் அவன் கமெராவும் கர்ணனும் கவச, குண்டலங்களும் போல எப்போதும் இணை பிரியாதவை. அப்படிப் பட்ட கமெராவை யாழினி தூக்கி எறிந்தும் அவன் கோபப்படாதது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அவன் உதவியாளனை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்றது.முதல் மாடியில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தவன், யாழினி கோபமாகக் கார்த் தரிப்பிடத்தை நோக்கிச் செல்வதை ஒரு குறுஞ் சிரிப்புடன் பார்த்து விட்டு ஸூம் செய்து அவளை மறுபடியும் தனது கருவிக்குள் அடக்கினான்.“உனக்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தேன் தெரியுமா? இன்றைக்கு உன்னை இங்க மீட் பண்ணுவேன் என்று கனவிலயும் நினைக்கேல… எஸ்பிபி சேருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் பாடுவது பார்க்க என்று தான் நான் இன்றைக்கு வந்ததே. ஆனால் உன்னைச் சந்திக்கும் இந்த அதிசயம் நடந்து விட்டதே.நீ யார் என்ற விபரம் தெரிந்து விட்டது பெண்ணே…! இனி உன் வீட்டு முகவரியும் தொலைபேசி இலக்கமும் என் கையெட்டும் தூரத்திலே...”தனக்குள் பேசியபடி சந்தோசத்தின் உச்சக் கட்டமாய் சீட்டியடித்தபடி விழா நடைபெறும் மண்டபத்தை நோக்கிச் சென்றான்.வீட்டிலே ஸோபாவில் படுத்துக் கிடந்த யாழினியோ இன்னமும் புகைந்தவாறுதான் இருந்தாள். அப்போது அங்கே வந்த செல்வி,“யாழம்மா…! வந்தாச்சா? இந்தாங்கோ… இந்த மாதுளம்பழ யூஸைக் குடியுங்கோ…”புதிதாய் சாறு பிழிந்து எடுத்து வந்த குளிர்பானத்தைக் கொடுத்தார். செல்வி எப்போதும் இப்படித்தான். யாழினியின் பதின்ம வயது முதலே கூடவே இருக்கிறார். அவள் மனம் அறிந்து எள்ளெனும் முன் எண்ணெயாக நிற்பவர்.அப்போதுதான் யாழினி செல்வியோடு கூட நின்ற அந்த இளம் பெண்ணைக் கவனித்தாள்.“யாரு செல்வியக்கா இது?”“அது வந்து யாழம்மா… இன்றைக்கு மார்க்கெட்டுக்குப் போனப்ப பார்த்தன். நம்ம வீட்டைத் தான் தேடி வந்தவளாம். யாரோ உங்களைப் பத்திச் சொல்லியிருக்காங்களாம். வேற இடம் மாறிப் போய் ஒரு மாதிரி அலைஞ்சு திரிஞ்சு இப்போதான் வந்து சேர்ந்திருக்கிறாள்… நல்லகாலம் என்ர கண்ணில பட்டபடியால் தப்பி விட்டாள்.”என்று அந்தப் பெண்ணின் பிரச்சினை பற்றிக் கூறி முடித்தவர்,“யாழம்மா…! இருபது வயசுச் சின்னப் பொண்ணு. கட்டின பொண்டாட்டி என்று கூடப் பார்க்காமல் இவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறான். நீங்கதான்மா உதவி செய்யணும்.”“சரி செல்வியக்கா… எனக்கும் பார்க்க ரொம்பப் பாவமாகத்தான் இருக்கு. நான் ஸிட்னிக்குப் போகணுமே அப்ப. ரெண்டு நாளில ஸிட்னில இசை நிகழ்ச்சி நடக்கப் போகுது. நான் அங்க மேக்கப் செய்யப் போக வேணும். அதை முடிச்சிட்டு இந்தப் பிரச்சினையைப் பார்ப்பமா?”“சரிம்மா. ஆனா அந்த நாதாரிட்ட துப்பாக்கி எல்லாம் இருக்காமம்மா. நீங்கள் தனியாக அவனைப் போய்ப் பார்க்கிறது நல்லது இல்லை. பொலீஸிட்டப் போய்ச் சொல்லுறது தான் நல்லமம்மா…”“நான் போய்ச் சொன்னால் பொலீஸ் நம்பணுமே செல்வியக்கா…”அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அந்தப் பெண் அப்போதுதான் வாய் திறந்தாள்.“அக்கா…! நீங்கள் தனியாக அங்க போறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். பொலீஸிட்டப் போவம். அவங்க நம்பலன்னா இதுதான் என் விதி என்று நினைச்சு நான் போய்டுறேன்…”அந்தப் பெண்ணைப் பார்க்க உண்மையிலேயே யாழினிக்குப் பாவமாக இருந்தது. உதவுவது என்று முடிவெடுத்தவளாய் செல்வியை நோக்கி,“அக்கா…! ஸிட்னி போறப்ப பொலீஸ் ஸ்டேசன் போய் ஒரு முயற்சியெடுத்துப் பார்ப்போம். அதுவரை இவளை யார் கண்ணிலும் படமால்ப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கட பொறுப்பு. அப்புறம் இன்னொரு விஷயம். இந்தப் பிரச்சினை தீர்ந்ததும் இவ இங்க இருந்து போயிட வேணும். அப்புறம் உங்களைப் போல இங்கதான் தங்குவேன்னு அடம் பிடிக்க எல்லாம் கூடாது சரியா?”கறாராகக் கூறி விட்டுத் தனது அறையை நோக்கிச் சென்றவளைப் புன்முறுவலுடன் நோக்கினார் செல்வி. யாழினி அப்படித்தான். உதவியென்று ஒருவர் கேட்டு விட்டால் தயங்காது செய்வாள். ஆனால் அத்துடன் அந்த நபரின் தொடர்பை முடித்துக் கொள்வாள். இந்த விடயத்தில் அவளின் கண்டிப்பு ரொம்பவே உறுதியானது.


 
#2
தனது அறைக்குச் சென்று உடைமாற்றியவளை செல்வியின் குரல் அழைத்தது.“யாழம்மா…! சாப்பிட வாங்கோ. உங்களுக்குப் பிடிச்ச புட்டும் கத்தரிக்காய் பொரியலும் செய்து வைச்சிருக்கிறேன்.”“சுத்தமாகப் பசியில்ல செல்வியக்கா. நீங்க பிரிட்ஜ்ல வையுங்கோ. நான் சாமத்தில பசிச்சா எடுத்து சூடாக்கிச் சாப்பிடுறன்.”கூறி விட்டுப் படுக்கையில் வீழ்ந்தவளின் முன் அந்தக் கமெராக்காரனின் முகம் கண் முன்னே வந்து நின்று கடுப்பேற்றியது. ஆசைதீர அவனை வைதபடி தூங்கிப் போனாள்.# # # # #பூ மரங்களும் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பெரிய மரங்களையும் கொண்ட அழகிய சோலை அது. கீழே பச்சைக் கம்பளம் விரித்திருந்த புற்தரையில் மருந்துக்கும் ஒரு சருகில்லை. அதிலேயே தெரிந்தது, அந்த இடம் எவ்வளவு சுத்தமாகவும் கருத்தோடும் பரமாரிக்கப்படுகிறது என.அந்த சோலைக்கு மேலும் அழகு சேர்ப்பது போல சிறு வாய்க்கால் ஒன்றும் வளைந்து, நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த வாய்க்கால் ஓரத்தில் உயர்ந்து அகன்று குடை பரப்பி நின்ற அந்த பூவரச மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்.இவளைப் பார்த்துத்தான் பெண்ணுக்குரிய சாமுத்ரிகா இலட்சணங்களை வரையறுத்திருப்பார்களோ எனும்படியான பேரழகி அவள். அந்த அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருந்தது அவள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள்.மஞ்சள் பட்டிலே தாறுபாய்ச்சும் சிவப்புப் பட்டிலே மார்புக் கச்சும் அணிந்து, சிவப்பில் தங்கச் சரிகை போட்ட ஒரு சால்வையை முக்கோணமாய் மடித்து மார்பை மறைத்துப் போட்டிருந்தாள். கழுத்து, காது, கைகள் எங்கும் தங்க நகைகள் பிரகாசித்தன. தலையில்ப் போட்டிருந்த பெரிய கொண்டைக்கு முன்னால் நடு உச்சியில் வைக்கப்பட்டிருந்தது ஒரு சிறு கிரீடம். ஆம்! அவள் தோற்றத்தைப் பார்த்ததுமே சிறு குழந்தைக்கும் புரிந்து விடும் அவள் ஒரு அரசகுலத்தைச் சேர்ந்தவள் என்று.பூவரச மரத்தின் நடுப்பகுதியில் சாய்ந்திருந்தவள் மனதோ ஒரு நிலையில் இல்லை. ஒரு விதமான தவிப்போடு அல்லாடிக் கொண்டிருந்தாள். மகிழ்ச்சி என்றும் சொல்ல முடியாத, கவலை என்றும் சொல்ல முடியாத ஒரு உணர்வு அது. புதிதாக ஒன்றைக் காணப் போகும் எதிர்பார்ப்பு அது. யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்த்தவளாய் அடிக்கடி நாலாபுறமும் தனது கயல் விழிகளைச் சுற்றி நோட்டமிடவும் தவறவில்லை.அப்போது அவள் பின்புறமிருந்து,“அமுதா…!”என்ற ஒரு குரல் அழைத்தது. இத்தனை மணித்துளிகளையும் யுகங்களாகக் கடத்தி யார் வரவிற்காய்க் காத்திருந்தாளோ அவனது குரலைக் கேட்டதும், சந்தோசத்துடன் துள்ளிக் குதித்து எழுந்தாள். அவளை முகம் திருப்ப விடாது பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டு அவள் கண்களைப் பொத்தினான் அவன்.அவனைத் தவிர வேறு யார் இவ்வளவு உரிமையோடு அவளைத் தொட முடியும்? அவளும் அவன் பரந்த மார்பில் இழைந்தவளாய் அவள் கண்களைப் பொத்தியிருந்த, கைகளை மெதுவாகப் பிரித்து விட்டு அவன் முகத்தை நோக்கித் திரும்பினாள்.பார்த்தவள் நாடி நரம்பெல்லாம் அதிர்ந்து போக வீலென்று கத்தினாள். காரணம். அது அவன்.# # # # #கண்களை இறுக மூடிக்கொண்டு வீலென்று அலறிய யாழினியை உலுக்கி எழுப்பினார் செல்வி.“யாழம்மா…! அம்மா…! எழும்புங்கோ… ஏதும் கெட்ட கனவு கண்டிட்டியளா?”யாழினியோ இன்னும் கண்களைத் திறப்பதாய் இல்லை. பேயைப் பார்த்தது போல முகம் வெளுத்துப் போயிருந்தவளை சுயநிலைக்குக் கொண்டு வரும் வகையறியாது அருகிலிருந்த குவளையிலிருந்த நீரை எடுத்து அவள் முகத்தில்த் தெளித்தார். அதற்கு நல்ல பலனிருந்தது. யாழினி மெதுவாய்க் கண்களைத் திறந்தாள்.“என்னாச்சு யாழம்மா…? ஏதும் கெட்ட கனவா?”“செல்வியக்கா…! இன்றைக்கு நான் மேக்கப் செய்யப் போன இடத்தில ஒரு தறுதலை என்னைப் போட்டோ எடுத்துச்சு…”என்று கூறி அன்று நடந்ததைச் சொல்லி முடித்தவள்,“நான் சொல்லுவனேக்கா… எனக்கு எப்பவுமே மரத்தடில ஒரு இளவரசி உட்கார்ந்து இருக்கிற போலவும் ஒருத்தன் வந்து கண்ணைப் பொத்துற போலவும் ஒரு கனவு வரும் என்று…”“ஓமோம் யாழம்மா…! அந்த இளவரசி உங்களைப் போல இருக்கிறதாகவும் அவனைப் பார்க்கத் திரும்பிற நேரத்தில எப்பவும் கனவு கலைஞ்சு போகுதுன்னு வேற கவலைப்படுவியளே…”செல்வி சிரித்துக் கொண்டே கூறவும்,“இன்றைக்கு அவன் முகத்தைப் பார்த்தேன் செல்வியக்கா. அது யார் தெரியுமா?”செல்விக்கு ஆர்வம் தாங்க முடியாமல் பரபரக்க,“அது அந்தக் கமெராக்காரன் அக்கா… எனக்கு எப்பிடி இருக்கும் என்று யோசிச்சுப் பாருங்கோ…”என்றாள் யாழினி சோகமாய். அதற்கும் சிரித்த செல்வி,“நீங்கள் நித்திரை கொள்ளுற நேரம் அவனை நினைச்சபடி படுத்திருப்பியள். அதுதான் கனவில அவன் முகம் வந்திருக்கு.”செல்வி கூறவும் யாழினிக்கும் அதுவே சரியெனப் பட எழுந்து தனது கடமைகளைக் கவனிக்கச் சென்றாள்.கனவு நனவாகுமா? காற்று தென்றலாய் வீசுமா? இல்லை புயலாகுமா?அடுத்த இதழில் தொடரும்
 

lalu

Well-known member
#3
Wow....nice starting...😍
 

emilypeter

Well-known member
#4
Inimaiyana thudakkam
 

Aruna

Active member
#5
Nice epi sis...
 

Rosei Kajan

Administrator
Staff member
#6
நன்றி நன்றி Lalu , அருணா , எமிலி
 
#7
Nice ud sis
 
#8
Very nice starting.
 
#9
அருமையான ஆரம்பம்
 
Top