கரிசனம்...மதிவதனி - இதழ் 12

Rosei Kajan

Administrator
Staff member
#1

அந்தக் காலை வேளைக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டு இருந்தது அழகி அச்சகம். பலர் அங்கு பத்திரிக்கை அடிப்பதற்கும் நிறுவன விளம்பர நோட்டிசுகள் அடிப்பதற்கும் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு பெண் கணினியில் திருமணப் பத்திரிக்கை ஒன்றை தட்டச்சுச் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது உரத்த குரல் “சுமங்கலி, சுமங்கலி” என்று மெசின்களின் சப்தத்தைத் தாண்டி கேட்டது. அத்தனைக் கூச்சலிலும் ஏதோ நினைவோடு எழுத்துக்களை அழுத்திக்கொண்டு டைப் செய்து கொண்டிருந்தவளை, அருகில் இருந்த சக ஊழியரான பெண் கைகளால் உசுப்பி விட்டு, “சுமி! சார் கூப்பிடறாரு” என்று சொன்னதும் எழுந்து ஓடிய சுமங்கலி, சுதாரித்தபடி சற்று பதட்டத்துடன் வந்து ”சார்...” என, அவர் முன் நிற்க, வேலவன் சுருக்கிய புருவங்களோடு, “ஏம்மா கூப்பிட்ட உடனே வந்து நிக்கமாட்டியா? என்ன அவ்ளோ அலட்சியமா வேல பாக்கரிங்கன்னு தெரிய மாட்டேங்குது. மொதலாளிக்கே இந்த நெலமைனா, கஸ்டமருக்கு எப்படி இருக்கும்?” குத்தலாகப் பேச, “இல்ல சார்... ஒரு பத்திரிக்கை அடிச்சுகிட்டு இருந்தேன், சத்தத்துல கேட்கல...” என, வார்த்தைகளை மென்று விழுங்க, “எதுத்துப் பேசாதே!” என்று கோபத்தோடு கத்தியவர், “போ... இந்த இன்விடேஸனையும் அளவு வாங்கிட்டு, முடிச்சு வச்சிடு, சாயங்காலம் ப்ரூப் பாக்க அந்தக் கஸ்டமர் வருவாங்க” என்று கையில் இருந்த விபரங்களை அவளிடம் கொடுத்துவிட்டு, மெசின் பக்கமாக நகர்ந்தார்.


சக ஊழியரான பெண் சுதா, சுமங்கலிக்கு நல்ல சினேகிதி. இருவரும் ஒன்றாக வேலை செய்வதால் ஏற்பட்ட நட்பு இது. சுமங்கலி வேலைக்குப் புதிதாகச் சேர்ந்த பொழுது அவளுக்கு எல்லா வேலைகளையும் சுதாதான் கற்றுக்கொடுத்தாள். இன்று சுதாவுக்கே சொல்லிக்கொடுக்கும் அளவுக்குச் சுமி முன்னேறிவிட்டாள்.

சுமங்கலி கம்ப்யூட்டர் அருகில் தன்னிடம் இருந்த பேப்பரை வைத்துவிட்டு உட்கார, “என்ன சுமி சார் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டியா?” எனச் சிரித்தபடியே கேட்க, “இல்ல சுதா, சார் ரொம்பக் கோபமா இருக்கார் அப்புறமாக் கேக்கலாம்னு...” என்று இழுவை பாட, “சீக்கிரம் கேட்டுடுடி... இல்லாட்டி அதுக்கும் வேற கோபப்படுவார். சாயங்காலம் என்னைப் பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்லு, ஒண்ணும் சொல்ல மாட்டார்.” அக்கறையுடன் சுதா சொல்ல, “கேக்குறேன் டி, வேற என்ன பண்ண?” என்று சொல்லும் போதே அவள் முகத்தில் வெறுப்புடன் கூடியக் கவலைத் தென்பட்டது.


முதலாளி வேலவனின் குரலைக் கேட்டாலே எல்லோருக்கும் வேலையில் மொத்தக் கவனமும் திரும்பிவிடும். சுதா ஒருமுறை செய்த தவறுக்கு அவரிடம் திட்டு வாங்கியது நினைவிற்கு வந்தது. ஒரு முறை அவர் சுதாவைக் கூப்பிட்டு, “நம் ப்ரஷ்ஷின் பேர் என்ன?” என்று சிரித்துக்கொண்டே கேட்க, “அழகி அச்சகம் சார்” என அவளும் சிரித்துக்கொண்டே பதிலளிக்க, “அத இந்தப் பத்திரிகையிலும் போட்டா எவ்வளவு அழகா இருக்கும்?” என்று சொல்லும்போதே அவர் முகம் மாறியது.

“எத்தன முறை உனக்குச் சொல்றது எந்த வேல செஞ்சாலும் அதுல நம்ம ப்ரெஷ் பேர போடனும்னு” என்று ஆரம்பித்தவர், கோபம் தீர சுதாவைத் திட்டித் தீர்த்து விட்டார். அன்று முதல் சுதா அந்தத் தவறைச் செய்வதில்லை என்று சுமங்கலியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.மதிய உணவு நேரம் ஆனதும் வேலவன் வீட்டுக்குக் கிளம்ப, சுமங்கலி அந்த நேரம் அவரிடம் சென்று பெர்மிசன் கேட்க, செய்ய வேண்டிய முக்கிய வேலையைச் சுதாவிடம் கொடுத்துவிட்டுச் செல்லும்படி உத்தரவிட்டார்.

சுமங்கலி மதிய உணவை முடித்துவிட்டு, தோழியிடம் முதலாளி சொன்னதைச் சொல்ல, “நான் பாத்துக்கறேன்டி..” என்ற சுதா கிண்டலாக, “பொண்ணு பாக்க வரும்போதும் மூஞ்சிய இப்படியே வச்சுக்காதே!” என்றாள் சேர்த்து.

சுமிக்கு அவள் தாயும் தந்தையும் நினைவுக்கு வந்தனர். அவளுடைய தந்தை உடல் நலக்குறைவால் காலமானார், அந்தத் துக்கத்திலேயே அவரது தாயும் இறந்து போனார். சுமி தற்போது தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறாள். அக்கா வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தான் திருமணதிற்குச் சம்மதித்ததாகத் தோழியிடம் கூறினாள்.“ஏய்... உன் வயசுதான்டி எனக்கும் ஆகுது, ரெண்டு புள்ளைங்க ஆச்சு”

“வயசு ஆகிடுச்சுத் தான்... என்ன செய்ய? எனக்கும் வெக்கமா இருக்கு. முப்பது வயசாச்சு, அப்பா அம்மா இருக்கும் போதே கல்யாணம் பண்ண முடியாம போச்சு”

“அவங்களையே நெனச்சுக்கிட்டு இருந்தா, எல்லாம் சரியாகிடுமா? உன்னைப்பத்தி, உன் லைஃபை பத்தி யோசி சுமி’ எனத் தோழியாகப் பேச, “நான் எங்கயாவது போய்த் தனியாக வாழ்ந்துடுவேன், ஆனா அக்கா வருத்தப்படுவாளே... அக்காவோட கட்டாயத்தில தான் சம்மதிச்சேன்”


 

Rosei Kajan

Administrator
Staff member
#2
“பொம்பளைங்க.. அதுவும் கல்யாணம் ஆகாத பொண்ணுங்க இந்த உலகத்துல தனியா வாழ முடியாது சுமி, உனக்கு இன்னும் உலகம் புரியல, எல்லாருக்கும் ஒரு துணை வேணும், கண்டதையும் யோசிக்காம, போய்ட்டு வா.” என்று சுதா அறிவுரை கூற, “ம்ம்ம்...” என்று மட்டும் கேட்டுக் கொண்டாள்.


சுமி வேலைகளை முடித்து சுதாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பி, வீட்டிற்குச் சென்ற போது அங்கு அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அவள் உள்ளே நுழைந்ததும் அக்கா கண்களைத் துடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


இது ஒன்றும் அவளுக்கு புதிதில்லை, அன்றாடம் நடப்பதுதான். சமீபத்தில் இருவருக்கும் இப்படிச் சண்டை வருவது அதிகமாகிவிட்டது.


“மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துடுவாங்க, நீ போய் ஃப்ரெஷ் ஆகிக்கோ!” என்று அதுதான் முக்கியம் போல செல்வம் பேச, சரியென்றுத் தலையாட்டிவிட்டு அறைக்குள் சென்று தமக்கையின் அருகில் அமர்ந்தாள்.


வாணி அழுதுகொண்டே “அந்த மனுஷன் உன்ன ரெண்டாந்தாரமா கட்டிவக்க பாக்குறார்டி. ஒத்த பைசா கூட வேணாம்னு சொன்னாங்களாம்” சுமியின் கண்களில் நீர் ததும்ப “அக்கா நம்ம குடும்பச் சூழ்நிலைக்கு, நம்மால இப்ப எதுவும் செய்ய முடியாதே! எனக்கு என்ன கிடைக்குமோ அதுவே கிடைக்கட்டும், நீ மாமா கூட சண்டை போடாத!’ என்று மனதைத் தேற்ற முயன்றாள்.


“ஏய் அந்த ஆளுக்கு என்ன வயசு தெரியுமா? அம்பது ஆகுது. அம்பதுக்கும், முப்பதுக்கும் வித்தியாசம் இல்லையா? அவர் தான் அறிவில்லாம செய்றார்னா, உனக்கும் புத்தி பேதலிச்சுப் போயிடுச்சா?” என, தன் மனக்குமுறலை கொட்டியவளிடம், “பரவாயில்ல, எனக்கு இருக்கிற வயசுக்கு இனிமே யாரு பொண்ணு கேட்டு வருவாங்க சொல்லு? எனக்கு இப்ப அதெல்லாம் பெருசாத் தோனல, கல்யாணச்சந்தையில நான் விலை போகாத ஆடுக்கா... விடு! மனசைத் தேத்திக்கோ!” என்று, அக்காவைச் சமாதானப்படுத்தினாள் சுமி.

சுமியா இப்படிப் பேசுவது என்று வாணிக்கு வியப்பாக இருந்தது. அப்பா இருக்கும் போது பெண் பார்க்க வந்தவர்களைக் குறை கூறித் தவிர்த்து வந்தாள். அதிக வரதட்சணை கேட்கிறார்கள் என்றும், அதோடு ஒரு முறை எதுவும் செய்ய வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்று வந்த நெருங்கிய உறவுக்கார ஒருவரை அவன் படிப்பறிவு இல்லாதவன், கிராமத்தான் வேண்டாம் என்று சொன்னவளா? இப்படிச் சொல்வதற்கு அவள் இருந்த நிலைமையே காரணம். யாரைக் குறை சொல்ல, வாணி வேண்டா வெறுப்பாகத் தங்கையை அலங்கரித்தாள்.

மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டனர் என்று செல்வம் வந்து கூப்பிட்டதும் சுமியை அழைத்து வந்தனர். அங்கு மாப்பிள்ளை மற்றும் அவருக்கு நெருங்கிய மாமாவும், வயதான இருவரும் மட்டுமே வந்திருந்தனர். பெண்ணைப் பார்த்த மாப்பிள்ளை, “அவங்களுக்கு எல்லா விசயமும் சொல்லிட்டிங்களா? பொண்ணுக்கு இதுல சம்மதமான்னு கேளுங்க.” எனவும், “எல்லாம் சொல்லியாச்சு!” என்று சிரித்துகொண்டே சொன்ன செல்வம் வாணியை முறைத்து பார்த்தான்.


அவர்களது அமைதி மாப்பிள்ளை சுந்தரத்திற்கு விளங்கவில்லை. அதனால் “சரி, நீங்க சொல்லியிருந்தாலும் நானும் என்னப் பத்திச் சொல்லிடறேன், அதுதான் சரியாகவும் இருக்கும்” என்று சுமியைப் பார்த்து ஆரம்பித்தார். எல்லாவற்றையும் கேட்ட சுமி, அவளிடம் இருந்த தனிமை அவரிடமும் இருப்பதை உணர்ந்து திருமணதிற்க்குச் சரியென்றுவிட்டாள்.

சில வருடங்கள் கழித்துச் சுதா ஜெராக்ஸ் எடுப்பதற்கு ஒரு கடைக்கு செல்ல, அங்கு சுமங்கலி ஜெராக்ஸ் எடுத்துகொண்டு இருக்க. வெகு நாட்களுக்குப் பிறகு தோழியைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தாள். சுமியைக் கண்டதும் சுதாவுக்குக் கண்கள் கலங்கி விட்டன. “உன் நிலைமை இப்படியா ஆகனும்?” என்று அழுது புலம்பினாள்.

சுமி அவளைத் தேற்றி, “நானே தைரியமாக இருக்கேன், உனக்கென்னடி? அன்னைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வந்த அவர் என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா?”


“எனக்கு ரெண்டாம் கல்யாணம் இதுல எல்லாம் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனா, என்னுடைய மாமா வற்புறுத்தியதால் மட்டும் இதற்க்குச் சம்மதம் சொல்லலை, என்னுடைய மனைவி இறந்து ஆறு வருஷம் ஆகிடுச்சு. இப்பவரைக்கும் நான் தனிமையில் தான் இருக்கேன். எனக்குன்னு அவள் விட்டுட்டுப் போனது பிறவியிலேயே மனநலம் சரியில்லாத எங்க மகள் மட்டும் தான். என்னாலயும் அவளைச் சரியாக் கவனிக்க முடியலை. மகளாயிற்றே! எனது மாமனார், மாமியார் என் மனைவி போன பிறகு மகளையும் பிரிச்சுட்டுப் போயிட்டாங்க. வயசான பிறகு துணைக்கு என்று கூட யாரும் இல்லை. என்னைக் கல்யாணம் செய்துகொண்டால் நானும் உனக்கு நல்ல துணையா இருப்பேன்னு நம்புறேன்.” என, அவர் வார்த்தைகளை கேட்ட சுமிக்கும் மனம் சற்றே கலங்கியது. தானும் அப்பா அம்மா போன பிறகு அடைந்த வேதனையை தான் அவரும் அனுபவிக்கிறார் என்று எண்ணிக்கொண்டாள்.


சுமியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சுதா பிறகு என்ன நடந்தது என்று கேட்க, “கடைசிவரை நான் இப்படித் தனிமையில தான் இருக்கனும்னு கடவுள் விதியை எழுதிட்டார் போல!” எனக் கலங்கிய சுமி, “கல்யாணம் முடிஞ்சு எங்க தனிமை போச்சு, அன்யோன்யமா வாழ முயற்சி செஞ்சோம். குழந்தையைக் கூப்பிட்டு வந்து கூடவே வச்சிக்கிட்டோம். எல்லாமே நல்லா தான் போச்சு. ஆனால், ஒருநாள் திடீரென்று நெஞ்சு வலியில் துடிச்சவரை ஆசுபத்திரியில் சேர்த்தோம்’ என்று கதறியவளை, தேற்றும் வழிதான் தெரியவில்லை. மாரடைப்பால் சுந்தரம் மீண்டும் சுமியைத் தனிமையில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.


“அழாதே சுமி, அந்தக் கடவுளுக்கு உன்மேல் இரக்கமே இல்லை போல...” எனக் கடவுளைக் கண்டபடி திட்டினாள் சுதா.


"இல்ல, நீ நினைக்கிற மாதிரி இல்ல. சுமங்கலின்னு பேர் வச்சுட்டு அமங்கலியா இருந்தாலும், தாய்மைங்கிற ஒரு தகுதியை எனக்குக் கொடுத்துருக்கார். கடவுளுக்கு, என்மேல ஏதோ கரிசனம் இருக்குது. அதனால் எனக்குனு ஒரு துணையை தந்துருக்கார்.” என்றவளின் பார்வை, கடையின் உள்ளே, சுந்தரத்தின் மனநிலை சரியில்லாத மகள் சில பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தவளின் மேல் விழுந்தது.


முற்றும்
 
Top