ஈழத்து நட்சத்திர இயக்குனர் மதிசுதா -இதழ் 8

#1
1550856574028.png

சினிமா என்பது உலகமெங்கும் பரவிப் படர்ந்துகிடக்கும் அழகிய உலகம்! இங்கே கற்பனைகளும் கனவுகளும் கொடிகட்டிப் பறக்கும்! இலட்சியவாதிகள் உருவாவதும் நடக்கும். இலட்சியவாதிகள் அழிந்து போவதும் நடக்கும். மக்களிடையே அதன் மீதிருக்கும் மாயையும் மயக்கமும் தீராதது!அப்படி மனத்தைக் கவரும் சினி உலகம் என்பது ஈழத்தவர்களுக்கு இன்னுமே கசக்கும் நெல்லிக்காயாகவே இருக்கிறது. ரசிக்க முனைபவர்கள் அதில் வாழ விரும்புவதுமில்லை, வாழ்பவர்களை இலகுவாக ஏற்றுக்கொள்ள விரும்புவதுமில்லை. ஒரு இடைவெளி இன்னுமே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியான தடைகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சாதனை படைக்கத் துவங்கியிருக்கும், தன் காலடித் தடங்களை வெற்றிப்படிகளில் பதிக்கத் துவங்கியிருக்கும் ஒருவரைத்தான் இந்தமாதம் செந்தூரம் மின்னிதழ் பெருமையுடன் அறிமுகம் செய்கிறது!அவர்தான் திரு மதிசுதா அவர்கள்!யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் உள்ள உடுப்பிட்டி எனும் ஊரில் பிறந்து, இடப்பெயர்வுகளின் அலையில் அடிபட்டு பெரும்பாலான இளமைக்காலத்தை வன்னியிலும் அதன் காடுகளிலும் கடந்திருக்கிறார்.வன்னி வாழ்க்கையின் மீட்சிக்குப்பின் கல்வியும் குழம்பிப் போனதுமல்லாமல் அவருக்குள் இருந்த ஆசைகளும் கனவுகளும் சிதைந்து போனதாகவே உணர்ந்திருக்கிறார்!ஏமாற்றங்களும் தோல்விகளும் தானே வீறுகொண்டு எழ வைப்பது!பணம் உழைக்க ஆயிரம் தொழில்கள் இருந்தாலும், சாதிப்பதற்கென்று சில கொள்கைகள் தான் பாதை கொடுக்கும்! தன் சாதனைகளுக்காய் அவர் கையிலெடுத்துக்கொண்டது எழுத்துத் துறையை! பேனாமுனையின் கூர்மை எதையும் சாதிக்க வல்லது அல்லவா! இணையத்தில் mathisutha.com என்ற வலைத்தளத்திலும் பத்திரிகைக்கும் எழுதத் தொடங்கினாலும் அவரின் தேடலாக வேறு ஏதோ ஒன்றை மனம் ஆழமாய் எதிர்பார்த்திருக்கிறது!சிறு வயதிலிருந்தே படம் பார்க்கும் வெறியும், வாசிப்புத் திறனும் அவரை அறியாமலேயே அவருக்குள் ஒரு சினிமாக்காரனை உருவாக்கி வைத்திருந்ததை அவரே உணர்ந்திருக்கவில்லை.

1550856686164.png
‘அந்த நாட்களில் எல்லாம் திருமண அல்லது சாமத்திய வீட்டு வீடியோ கசட் வந்தால் வாடகைக்கு தொலைகாட்சி எடுத்துத் தான் படமும் ஓடுவார்கள். அவர்களது கசட் தவிர நான்கு படங்கள் ஓடும். எட்டு ஒன்பது வயதிலேயே அத்தனை படங்களையும் காலை ஆறுமணிவரை முழித்திருந்து பார்த்திருக்கிறேன் என்றால் எனக்குள் இருந்த சினிமா பார்க்கும் ஆசையை பாருங்களேன்.’ என்று வெகு சுவாரசியமாக விவரிக்கிறார் திரு மதிசுதா அவர்கள்.அவருக்குள் உருவாகிப்போயிருந்த அந்த சினிமாக்காரனை உணரும் தருணமாக, அவர் விளையாட்டாகச் செய்த குறும்படம் ஒன்று அமைந்திருக்கிறது!ஏற்கனவே இருந்த கதை ஒன்றுக்குத் திரைக்கதை அமைத்து நண்பர்களுடன் சேர்ந்து ‘ரொக்கட் ராஜா’ என்கிற பெயரில், ஒரு குறும்படத்தை முதன் முதலில் விளையாட்டாக இயக்கி இருக்கிறார். எந்த முதலீடும் இல்லாமல் நோக்கியா C7 கைபேசியில்தான் பிடிக்கப்பட்டிருக்கிறது!அன்று, அந்தக் குறும்படம் ‘இதெல்லாம் ஒரு படமா?’ என்று நையாண்டிக்கு உட்படுத்தப்பட்டபோது, தோல்வியும் புறக்கணிப்பும் நம்மைச் சுருள வைக்குமென்றால், இவரை யோ வீறுகொண்டு எழ வைத்திருக்கிறது. அந்த எதிர்மறையான விமர்சனங்கள் தூண்டிவிட்டதில் சினிமா எடுப்பது பற்றி அவரைத் தேடவும் படிக்கவும் வைத்திருக்கிறது!அதற்கு அடுத்ததாக எடுக்கப்பட்ட ‘துலைக்கோ போறியள்’ குறும்படத்துக்குக் கிடைத்த வெற்றியும் பாராட்டுக்களும் சினிமாவில் நம்பிக்கையோடு ஆழமாகக் கால் ஊன்ற வைத்ததில், மிகச் சிறந்த குறும்படமான மிச்சக்காசினை இயக்க வைத்திருக்கிறது!அந்த மிச்சக்காசு குறும்படம் மூன்று வெவ்வேறு நபர்களால் இந்தியாவில் இருந்து திருடி எடுக்கப்பட்டதையும் வேதனையோடு பகிர்ந்துகொள்கிறார் மதிசுதா அவர்கள்!இப்படியாக ஆரம்பித்திருக்கிறது அவரது சினிமாப்பயணம்!சினிமாத்துறையில் முழுமையாகக் கால் ஊன்றிவிட்ட கடந்த ஏழு வருடங்களில் பதினைந்து குறும்படங்களையும், உம்மாண்டி என்கிற ஒரு முழுநீளப் படத்தையும் இயக்கியிருக்கிறார் மதிசுதா அவர்கள்! அதோடு நிற்கவில்லை அவரது பயணம், தற்போது வன்னியின் போர்க்கதை ஒன்றும் அவரினால் திரைப்படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது.அவரின் குறும்படங்கள், ஆறு சர்வதேச நாடுகளில் விருதுகளைப் பெற்றிருப்பதோடு, ஒன்பது நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச போட்டிகளில் திரையிடப்பட்டும் இருக்கிறது!தரமான படைப்புகள் என்றும் தவறவிடப் படுவதில்லை. சிலநேரங்களில் காலதாமதமாகலாம்!விருதுகள் என்பது ஒரு படைப்புக்கான உண்மையான அளவுகோலாக கருதமுடியாது என்றாலும், மக்களிடம் படைப்பைக் கொண்டுசேர்க்க இருக்கும் ஒருவகை விளம்பர ஆயுதமாக இருக்கிறது என்று அவர் கூறினாலும், அவரது விருதுகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதில் செந்தூரத்துக்குப் பெருமையே!சிறந்த திரைப்பட விருதுகள் நான்கு தடவைகள்

சிறந்த இயக்குனர் விருதுகள் மூன்று தடவைகள்

சிறந்த நடிகருக்கான விருதுகள் ஐந்து தடவைகள்

சிறந்த திரைக்கதைக்கான விருதுகள் மூன்று தடவைகள்

சிறந்த கலை இயக்குனர் விருது ஒரு முறை

நடுவர்களின் பரிந்துரையில் விசேட விருது இரண்டு முறைகள்இவற்றையெல்லாம் பெற்றிருந்தாலும், ‘எனக்குப் பெருமையாக இருப்பது, முன்னாள் போராளிகளை வைத்து நான் இயக்கியிருந்த ‘தழும்பு’ குறும்படத்தைப் பார்த்த பல போராளிகள் தமது உண்மை வாழ்க்கையை கண் முன் வாழ்ந்து காட்டியிருப்பதாக என் நடிப்பை பாராட்டியதும். தென்னிந்திய இயக்குனரான மிஸ்கின் அவர்கள். “நடிப்பு என்பது நடிப்பதல்ல, தன்னை வெளிப்படுத்தாமல் நடிப்பது” என்று கூறி ‘கருவறைத் தோழன்’ குறும்படத்துக்காக எனக்குத் தந்த சிறந்த நடிகர் விருதுமேயாகும்.’ என்று நிறைவோடு சொல்கிறார் திரு மதிசுதா அவர்கள்.அவரின் வெற்றி இன்னுமின்னும் சிகரத்தை நோக்கி நடைபோட வேண்டுமென்று வாழ்த்துகின்றது செந்தூரம்!
 
Top