ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் -இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்

1554061120293.pngதிரு சுதாராஜ் அவர்கள், வடமராச்சியைச் சேர்ந்த சிவசாமி இராசம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் இராஜசிங்கம். 1972 இல் "ஒளி" என்ற சஞ்சிகையில் "இனி வருமோ உறக்கம்?" என்கின்ற சிறுகதை மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர்.இன்றோ, ஈழத்துச் சிறுகதை உலகை இவரைத் தவிர்த்துவிட்டுத் தொகுக்க முடியாத அளவுக்குத் தன்னுடைய இயல்பான எழுத்தினால் ஆணித்தரமாக தன் இருப்பைப் பதிப்பித்தவர் மரியாதைக்குரிய திரு சுதாராஜ் அவர்கள்.முதல் சிறுகதைத் தொகுப்பு "பலாத்காரம்" சிரித்திரன் வெளியீடாக வெளிவந்தது. "கொடுத்தல்" இற்காக சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றவர்.வித்தியாசமான கதைக்களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்து எடுப்பது, எளிமையான மனிதர்களின் நாளாந்த வாழ்வினை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது, சமூகத்தின் பிரச்சனைகளை கதையின் போக்கிலேயே சொல்லிச் செல்வது, மிக எளிமையான சொற்களைக் கொண்டு மனித உள்ளங்களின் உணர்வுகளை விளக்குவது என்று தன் இயல்பான எழுத்து மூலமே வாசக நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டவர்.சிலரின் எழுத்துகளோடுதான் மனமொன்றி நம்மால் பயணிக்க இயலும். சிலரின் கதைகளில்தான் கதை மாந்தர்களின் உடலுக்குள் நாமும் புகுந்துகொண்டு அவர்களோடேயே பயணித்துக் கரையேற முடியும். அப்படியான வல்லமை கொண்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் சுதாராஜ் அவர்கள். அவரின் எழுத்தில் நாம் எம்மைத் தொலைப்பது உறுதி. கதை முடிந்துவிடும், நாமோ அதற்குள் இருந்து வெளியே வரமுடியாமல் திணறுவோம். அப்படி அவரின் பல சிறுகதைகளைப் படித்துவிட்டுத் திணறியிருக்கிறேன். எளிமையான எழுத்து, ஆனால் வலிமையாக நம்மைக் கட்டிப்போட்டுவிடும் ஏதோ ஒரு மந்திரம் அதற்குள் உண்டு!சிறுகதைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும், சிறுகதை எழுத ஆர்வம் கொண்டவர்களுக்கும் இவர் நல்லதொரு வழிகாட்டி. இவரின் எழுத்துகள் நமக்கான பயிற்சி! அவரை நேசிக்கும் வாசக நெஞ்சங்களுக்கு அவர் தந்த பரிசுகள் பல!சிறுகதைத் தொகுப்புகள்:பலாத்காரம்

கொடுத்தல்

ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்

தெரியாத பக்கங்கள்

சுதாராஜின் சிறுகதைகள்

காற்றோடு பேசுதல்

இளமைக் கோலங்கள் (நாவல், வீரகேசரி பிரசுரம், 1981, மணிமேகலைப் பிரசுரம், மீள் பிரசுரம், 2004)

சிறுவர் இலக்கியம்:

காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதை

பறக்கும் குடை கோழி அம்மாவும் மயில் குஞ்களும் குட்டிப் பூனையும் கெட்டிக்காரச் சுட்டிப் பையனும்

திரு சுதாராஜ் அவர்கள் பெற்ற விருதுகள்:1981-1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய விருது (கொடுத்தல்)

இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் பட்டம். (கொடுத்தல்)

1989ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான யாழ் இலக்கிய வட்டத்தின் விருது (ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்).

தெரியாத பக்கங்கள் எனும் சிறுகதைத் தொகுப்புக்கு விபவி கலாசார மையத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது.

அடைக்கலம் சிறுகதை ஆனந்த விகடன் வைர விழாப் போட்டியில் 1991இல் பரிசு பெற்றது.ஈழத்து இலக்கிய பரப்புக்குக் கிடைத்த அற்புதமான எழுத்துக்குச் சொந்தக்காரரான மதிப்பிற்குரிய திரு சுதாராஜ் அவர்களை, செந்தூரம் வாசக நெஞ்சங்களுக்கு அறியத்தருவதில் செந்தூரம் பெருமகிழ்ச்சி கொள்கிறது!
 
Top