இதழ் 2

Rosei Kajan

Administrator
Staff member
#1
The buzzin mexico.jpg
ஹாய் ஹாய் அன்பு வாசகர்களே!

மிக்க மிக்க மகிழ்வான செய்தியோடு உங்களை நாடி வந்துள்ளோம்.

அது என்னவென்றால்…நம் செந்தூரம் மின்னிதழின் ஆனி மாத இதழ் வெளியாகியுள்ளது.

ஒரு நாவலை எழுதுவது என்றால் ஆகக் குறைந்தது இரண்டு மாதங்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரை ஆகும். அதற்கு மேலேயும் போகும். அப்படி, குருவி, கூடு கட்டுவதுபோல கிடைக்கும் சொற்ப நேரங்களையும் பயன்படுத்தி எழுதி முடித்து வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வருகையில், அவர்களின் கருத்து பரிமாற்றங்களைப் பார்க்கையில் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். அந்தக் கணங்களில் இன்னுமின்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உருவாகும்.

அதை விடப் பன்மடங்கு மகிழ்வையும் உத்வேகத்தையும் தருகின்றது இந்த செந்தூரம் மின்னிதழ். முதல் இதழுக்கு நீங்கள் தந்த வரவேற்பு, தயக்கமின்றி உங்கள் மனதில் தோன்றிய திருத்தங்களை பகிர்ந்து கொண்டமை, ஆக்கங்களை அனுப்பவது என்று என்ன பாடு பட்டாவது முதல் தரமான குடும்ப இதழாக இதைக் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது மக்களே.மிக்க மிக்க நன்றி!

இந்த இதழ் பற்றிய உங்கள் ஒவ்வொருவரினதும் கருத்துகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம். திருத்தம் என்று மனதில் படுவதைத் கீழே தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும். தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

செந்தூரம் குழு.


செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்!

எங்கள் முதல் குழந்தையின் அழகைப் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். படித்து, பாராட்டி, ஊக்கம் தந்து, உற்சாகமூட்டி, குறைகளைச் சுட்டி அடுத்த இதழுக்கான அடியை எடுத்துவைக்கும் நம்பிக்கையை எமக்களித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

நம்பிக்கை; உன்னால் முடியும் என்கிற நம்பிக்கை; அதுதானே இன்று இந்தளவு நம்மைக் கொண்டு வந்தது. அதே நம்பிக்கைதான் எல்லோருக்கும் வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

‘நீ இதற்கெல்லாம் சரிவரமாட்டாய்’ என்று பிள்ளைகள் மனதை உடைப்பதை விட்டுவிட்டு, எதெல்லாம் அவர்களுக்கு வரவில்லை என்று கவனித்து, அவர்களுக்கே தெரியாமல் உதவி செய்ய வேண்டும். உன்னால் முடியும் என்று தட்டிக்கொடுப்பதும், தோற்றால் பக்கபலமாய் நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கையை உருவாக்குவதும், தக்க சமயத்தில் எவ்வளவு உதவும் என்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஏதோ ஒரு சமயத்தில், தலைசாய்ந்திடத் தோள் ஒன்றை இன்றுவரை நாம் தேடுகிறோம். அப்படி ஒரு தோளாய் நாம் மாறியிருக்கிறோமா?

முதலில், பிள்ளைகளின் தோல்வியைப் பெற்றவர் எதிர்கொள்ளத் தெரிந்தவராய் இருத்தல் வேண்டும். நீ தோற்றுவிட்டாய்! என்று விரல் நீட்டி அவனைச் சுட்டுவதை விட்டுவிட்டு, எதனால் தோற்றான்? எதனைத் தவறவிட்டான்? என்று, நாமும் சிந்தித்து அவர்களையும் சிந்திக்க வைப்பதில்தானே வெற்றியே இருக்கிறது?

பெரும்பாலும், இன்றைய இளைய சமுதாயத்தினர், தோல்விகளைச் சந்திக்கத் தயங்குகின்றனரோ என்னும் சந்தேகத்தை விதைக்கும் வகையிலான பல நிகழ்வுகளை அன்றாடம் காண்கிறோம் அல்லவா? அந்நிலையை மாற்றவேண்டிய தலையாய கடமை நம் கைகளில் உள்ளது. அதன் முதல் படியாக, நம் பிள்ளைகளுக்குத் தோல்விகளை அறிமுகப்படுத்துவோம். அதிலிருந்து மீண்டு வெற்றிபெறுவதற்கான வழியைக் காட்டுவோம். போராடிப்பெறும் வெற்றியின் சுவையை அறிய வைப்போம்.என்றென்றும் நட்புடன்,

செந்தூரம் ஆசிரியர் குழு.ஆக்கங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: senthuram.emagazine@gmail.com 
Last edited:
Top