ஆளுமைப் பெண்மணி திருமதி உமாச்சந்திரா பிரகாஷ்! - இதழ் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1
1558511507697.png


இலங்கையின் வடக்கேயுள்ள சாவகச்சேரிப் பிரதேசத்தில் மட்டுவில் வடக்கில் பிறந்த உமாச்சந்திரா, மட்டுவில் சந்திரமெளலீச வித்தியாலயத்திலும் சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர், திருமணத்தின் பின், திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் எனும் அடையாளத்தோடு தெற்கே குடிவந்தார்.

இளம் வயதில் முற்றிலும் புதிய சூழலில் தன் குடும்ப வாழ்வைத் தொடங்கியவர், சக்தி வானொலியில் இணைந்து ஏறக்குறைய எட்டு வருடங்கள் சிரேஷ்ட அறிவிப்பாளராகக் கடமையாற்றிவந்தார்.

அந்நேரத்தில், அவர்களின் ஒரே மகளையும் கைக்குழந்தையாக வைத்துக்கொண்டு அப்புதிய வாழ்வியல், வேலைச் சூழல், பரிச்சயம் அற்ற மொழி என்பவற்றைக் கடந்து, நிமிர்வும் உறுதியுமாக நின்று தன்னை நிலை நிறுத்தியதாலேயே சிரேஷ்ட அறிவிப்பார் என்னும் அடையாளத்தை அவரால் எட்ட முடிந்தது. அத்தோடு, தன் தொழில் சார்ந்த கற்கையாக ஊடகவியல் டிப்ளோமா கற்கையைக் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்திருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் அவரிடம் தளர்வு மருந்துக்கும் இல்லை; முன்னேறிச் சாதிக்கும் உத்வேகம் மட்டுமே அவரை அவரின் விருப்பில், தெரிவில் முன்னடத்தி வந்தது என்றால் மிகையாகாது.

பின்னர், வீரகேசரி நிறுவனத்தில் உதவி ஊடக முகாமையாளராகச் சிலவருடங்கள் பணியாற்றியிருந்த இவர், மீண்டும் சக்தி தொலைக்காட்சியில் செய்தி முகாமையாளராக இணைந்து சிலவருடங்கள் பணியாற்றியிருந்தார்.

இதேநேரம், அவரின் ஆர்வம் எழுத்துத் துறையிலும் எட்டிப் பார்த்தன் பயன், ஏற்கனவே மூன்று நூல்களை வெளியிட்டிருந்தவர், இதோ, அடுத்த நூல் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

நம் பழம்பெரும் தொன்மையான விடயங்கள், வரலாறுகளை அறிந்து கொள்வதிலும், நமக்கான தொன்மையான அடையாலங்களைப் பேணவேண்டும் என்பதிலும் அவருக்குள்ள தீரா ஆர்வமே அவரின் முதல் படைப்பான 'பெட்டகம்' உருவாகக் காரணமாக அமைந்தது எனலாம்.

1558511562048.png


1558511592864.png யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல், கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாறு தொடர்பான 30 கட்டுரைகளின் தொகுப்பாக்கவே பெட்டகம் வெளியாகியிருந்தது.

1558511653603.png இதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக வடபகுதித் தமிழ் மக்களின் பெருமைக்குரிய அடையாளமாகக் கருத்தப்படும் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் பற்றிய விபரத் தொகுப்பாக, யாழ்ப்பாண இராச்சியத்தில் நல்லூர் இராசதானியின் முக்கியத்துவம், நல்லூர் அரசர்களின் கோயிலான நல்லூர் ஆலயம் மற்றும் நாற்திசை கோயில்கள் ஆகியவை பற்றியும், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் நல்லூர் சந்தித்த பேரழிவுகளையும், மாப்பாண முதலியார் காலத்தில் மீண்டும் எழுச்சி பெற்ற இன்றைய நல்லூர் கடந்து வந்த பாதையும், இவ்வாலயம் பெருங்கோவிலான வரலாறையும் கூறும் வகையில் 'நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில்' என்னும் நூல் அமைந்திருந்தது.1558511669092.png மூன்றாவதாக, யாழ்ப்பாண குடாநாட்டில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 75 சுற்றுலா இடங்களை மையப்படுத்தி ‘Discover Jaffna’ சுற்றுலா நூல் தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டது.1558511683535.png இவற்றைத் தொடர்ந்து இப்போது தமிழர் பாரம்பரிய நகைகள் தொடர்பான 20 ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கி 'அணிகலன்' தயாராகி உள்ளது.

இவை மட்டுமே அவரது அடையாளம் என்று வரையறுத்துச் சொல்லிவிட்டுப் போக முடியாது.

ஒரு நாட்டின்,அதன் குடிமக்களின் அமைதியான, செழிப்பான வாழ்வு என்பதில் அந்நாட்டு அரசியலுக்கு முக்கிய பங்குண்டு என்பதை எவருமே மறுக்க முடியாது.

'சமத்துவமும் சம நீதியும் கொண்ட ஒரு அரசியல் தலைவர்...அப்படிப்பட்ட தலைவராக ஒருவர் இருந்துவிட்டால் ...' எண்ணமே எத்தனை இரம்மியமாக உள்ளது?

இந்த எண்ணம், ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏக்கமாகவே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பல வருடங்கள் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிச் சீரழிந்த எம்மினத்தின் வாழ்வு, உறுதியாக, செம்மையாக நேர் சீராக வரவேண்டுமென்றால் நாணல்களாக அன்றி அசைக்க முடியாத இரும்புத் தூண்களாகத் திடமாக நிமிர்ந்து நின்று எம்மக்களின் துயர் அறிந்து தீர்க்கும் புத்தி சாதுர்யமும் செயல்திறனும் மிக்க தலைவர்கள் நிச்சயம் வேண்டும்.

அரசியல் பிரவேசம் செய்துள்ள திருமதி உமாச்சந்திரா பிரகாஷ், துயர் தாங்கி நலிந்து நிக்கும் எம்மினத்தின் ஒளிர்வுக்கு ஒரு காரணியாக இருந்திடவேண்டும் என்றும், அவரின் எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பாதையில் அவரை நடத்திச் செல்ல வேண்டும் என்று மகிழ்வோடு வாழ்த்துவதோடு, அவர் பற்றி செந்தூர வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் கொள்கின்றோம்.
 
Top