ஆசிரியை ஸ்ரீமதி செளமி வசந்த் (ஸாகித்ய ஸாதநாலய நடனம் மற்றும் வாய்ப்பாட்டுப் பள்ளி ) -இதழ் 11

Rosei Kajan

Administrator
Staff member
#1
1570902681063.png புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தத்தமது பண்பாட்டையும் மொழியையும் தம் எதிர்காலச் சமூகத்திற்கு வழங்க எடுக்கும் முயற்சிகளில் முதன்மையானது என்றால் கலைகள் சம்பந்தமான கற்கைகள்/நிகழ்வுகளில் தம் பிள்ளைகளைப் பங்கெடுக்க வைப்பதைச் சொல்லலாம்.

அந்த வகையில் வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் சம்பந்தமான பயிற்சிகள் என்பவை அந்தந்தத் துறைகளில் தேர்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படுவதையும் இளம் சமூகத்தினர் ஆவலோடு அவற்றைக் கற்பதுவும் அவை தொடர்பான நிகழ்வுகளில் பங்கெடுப்பதையும் இன்று அநேக இடங்களில் காண முடிகின்றது.

1570902778299.png அந்தவகையில், இம்மாத செந்தூர வானில் பகுதியில் ஒல்லாந்து நாட்டிலும் மற்றும் பெல்ஜியம் நாட்டிலும் ‘ஸாகித்ய ஸாதநாலய நடனம் மற்றும் வாய்ப்பாட்டுப் பள்ளியினை நடத்தி வரும் ஆசிரியை ஸ்ரீமதி செளமி வசந்த் அவர்களைப் பற்றி நம் வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கின்றோம்.

இலங்கையில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலேயே ஒல்லாந்து நாட்டுக்குப் புலம்பெயர்ந்த இவர், சிறுவயதிலிருந்து தான் ஆர்வத்துடன் கற்ற கலையினை மென்மேலும் வளர்த்தெடுக்கும் முயற்சியாக 'ஸாகித்ய ஸாதநாலய நடனம் மற்றும் வாய்ப்பாட்டுப் பள்ளியினை நிறுவி, கடந்த 13 வருடங்களாக இளைய தலைமுறையினருக்கு அவற்றைக் கற்பித்து வருகின்றார்.

இதுவரை 50 க்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளதாகவும் விரைவில் நடனக்கலை சார்ந்த புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்த இவர், நாடகக் கலைஞர்களான அப்புகுட்டி ராஐகோபால் மற்றும் சின்னக் குட்டி தயாநிதி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.

ஏற்கனவே ஒரு கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் திருமணம் குழந்தைகள் என்றான பின்னரும் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்போடு தொடர்ந்து கலைப்பயணத்தில் பயணிக்க முடிகின்றது என்று கூறும் இவர், தனது கலைவாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்களாக, 1999 மற்றும் 2000 ஆண்டுகளில் காணக்குயில் வாய்ப்பாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதைக் குறிப்பிடுகின்றார்.

அதுமட்டுமின்றி, 2016 ல் BTM Brothers வழங்கிய ஸ்ரீமதி பட்டமும், 2018 ல் ஒல்லாந்து நாட்டில் உள்ள Oudenbosch தமிழ் பாடசாலையின் 25 ஆம் ஆண்டு விழாவில் தங்கத்தாரகை என்ற பட்டமும் கிடைக்கப் பெற்றதைத் தன் மறக்க முடியாத சம்பவங்களுடன் இணைத்துக்கொள்ளும் இவர், எதிர்காலத்தில் மேலும் மேலும் தன் துறையில் வளர்ந்து மிளிர செந்தூரம் மனமார வாழ்த்துகின்றது.
1570902912924.png
 
Top