அவள் ஆரணி 9

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம் 9பொழுது மத்தியானத்தை நோக்கி இடம்பெயர்ந்துகொண்டிருந்தது. போன நிகேதன் இன்னும் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல வேலை கிடைத்ததா? என்ன செய்கிறானோ? என்கிற சிந்தனையும் பரிதவிப்பும் ஆரணிக்கு அதிகரித்துக்கொண்டே போயிற்று! அவனுடைய மோட்டார் வண்டியின் சத்தத்துக்காகக் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தாள்.


அதோடு, அன்றைய காலை உணவை அவள்தான் கடைசியாகச் சாப்பிட்டாள். வேறு ஒன்றுமே அங்கு சாப்பிடுவதற்கு இல்லை என்றும் கண்டிருந்தாள். அமராவதி அம்மா மத்தியானச் சமையலை ஆரம்பிப்பதாகவும் தெரியவில்லை. சும்மா தண்ணீர் குடிக்கச் செல்வதுபோல நடந்துபார்க்க, கடைக்கண் பார்வையில் அவரின் அறைக்குள் கட்டிலில் சரிந்த இடத்தை விட்டு அசையவேயில்லை அவர். அவன் வந்து, ‘பசிக்குது, சாப்பிட எதையாவது கொண்டுவா.’ என்றால் என்ன செய்வாள்? ஒன்றும் இல்லையே என்று சொல்லும் நிலமையைக் கற்பனையில் காண்கையிலேயே கொடுமையாக இருந்தது. மனம் மெல்ல மெல்லத் தவிக்கத் தொடங்கியது. இந்த மாமி சமைப்பார் போலவே தெரியவில்லை.


போய்க் கேட்டால் என்ன சொல்லுவாரோ? கணவனின் பசிக்கும் வயிறு தயக்கத்தைப் பின்னுக்குத் தள்ள, அவரின் அறை வாசலில் போய் நின்றாள். அவர் அசைவதாக இல்லை என்றதும், “மாமி சமைக்க இல்லையா? நிகேதன் பசியோட வருவான் எல்லோ.” என்றாள் மெல்ல.


படக்கென்று எழுந்து அமர்ந்து முறைத்தார் அமராவதி அம்மா. அந்த ஒற்றைச் செயலிலேயே அவ்வளவு கோபம் தெறித்தது.


“நான் மூண்டு நேரமும் சமைச்சுப்போட, நீ சும்மா குந்தியிருந்து நல்லா விழுங்கப் போறியே? என்ர நெத்தில என்ன லூசு, விசர், ஏமாளி எண்டு ஏதும் எழுதிக் கிடக்கோ? அவனில அவ்வளவு அக்கறை இருந்தா நீயே போய் சமை! சும்மா சும்மா கண்ணுக்கு முன்னால வந்து நின்று எரிச்சலை கிளப்பாத!” எரிந்து விழுந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார் அவர்.


காலையில் கதைத்ததில் கொஞ்சமாவது இறங்கி வருவார் என்றுதான் எதிர்பார்த்தாள். மாற்றமே இல்லாது சொல்லப்போனால் இன்னுமே அதிகமாகச் சீறவும் அவளுக்கு ஒருமுறை திக் என்றது. ஆனாலும் சமாளித்துக்கொண்டாள்.


“எனக்குச் சமைக்கத் தெரியாதே மாமி!” அவளும் அவரை விடுவதாயில்லை.


“உனக்கு ஊரைச் சுத்தி எவனையாவது பிடிக்க மட்டும்தானே தெரியும்!” முகத்தில் அறைவதுபோல் பதில் வந்தது.


“மாமி போதும்! இப்ப என்ன, நான் சமைக்கவேணும். அவ்வளவுதானே! ஓகே சமைக்கிறன்! நான் சமைக்கிறத சாப்பிடவேணும் எண்டு உங்கட தலைல எழுதி இருந்தா யார் என்ன செய்யேலும் சொல்லுங்கோ? ஆனா ஒரு பருக்கை கொட்டாம சாப்பிட்டு முடிக்கவேணும்!” என்றுவிட்டு சமையலறைக்குள் நடந்தாள் ஆரணி.


‘ஊரைச் சுத்துறது, வளச்சுப் போடுறது, ஆளை பிடிக்கிறது என்ன வார்த்தைகள்?’ சினம் தான் வந்தது அவளுக்கு! ஆனால் என்ன செய்ய? வாயை மூடிக் கேட்கத்தானே வேண்டும்! சமையலைப் பார்க்கப் போனாள்.


‘என்ன பெரிய சமையல்! யு டியூபை தட்டினா எல்லா சாப்பாடும் வந்து கொட்டபோது!’


சமையல் தெரியாதுதான். அதற்கென்று அவள் எதையும் யோசிக்கவுமில்லை பயப்படவும் இல்லை.


தேவையில்லை என்கிறவரைதான் எதுவுமே தெரியாது. தேவை என்கிற கட்டம் வருகையில் தெரிய வந்துவிடும்.


அவளே யூ டியூபராக மாறிக்கொண்டாள்.


“சமையலில் முதலில் நீங்க செய்யவேண்டிய காரியம், என்ன சமைப்பது எண்டு முடிவு செய்யவேணும்!”


நாளாந்த வாழ்வின் மிகச் சிக்கலான கேள்வி எது என்று எந்தக் குடும்பப் பெண்ணைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் பதில், ‘இன்றைக்கு என்ன சமைப்பது?’ என்பதுதான். அந்தக் கேள்வியை முதலில் வைத்தாள் ஆரணி.


“நமக்குச் சோறு முக்கியம்! எனவே முதலில் அரிசியை எடுத்து வைக்கவும்!”


“அரிசி எங்க இருக்கு..?” புதையல் புலப்படவே இல்லை.


“என்னைமாதிரியே உருப்படாம இருக்கிற உருட்டுக்கட்டைகளே.. குறைஞ்சது உங்க வீட்டுல அரிசி எங்க இருக்கு எண்டாவது பாத்து வைங்க. காலம் நமக்கு என்ன டாஸ்க்க எந்த நேரத்தில கைல குடுக்கும் எண்டு கண்டு பிடிக்கவே முடியாது!”


ஒருவழியாக ஒழித்து விளையாடிய அரிசியைக் கண்டு பிடித்திருந்தாள். முருங்கைக்காய் கண்ணுக்கு முன்னாலேயே காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதையே குழம்புக்கு எடுத்து வைத்தாள். உப்பு, மஞ்சள் தூள் எங்கே இருக்கிறது என்கிற தேடலில் கண்டுபிடித்த பருப்பையும் வெளியே எடுத்துவைத்தாள்.


எல்லாம் ரெடி. சமையலை எங்கிருந்து எடுத்து வைப்பது? அப்பா வீட்டுச் சொத்தாக அவளோடு கூடவே வந்த போனில் இலங்கைச் சமையல் என்று கொடுத்துத் தேடினாள்.


யாரோ ரோசிகஜனாம். சமையல் விற்பண்ணி என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் அவர் பல வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். சும்மா சொல்லக் கூடாது, லட்சத்தை தாண்டியிருந்தது பார்வையாளர்களின் எண்ணிக்கை.

“அப்ப சுமாரா சமைப்பாவாத்தான் இருக்கும்!” நம்பிக்கையோடு அவரின் வீடியோக்களுக்குள் சென்று, ‘அரிசி உழை வைப்பது எப்படி? என்று கொடுத்துத் தேடினாள்.


உடனேயே கண்ணுக்கு முன்னால் வந்து நின்றார் ரோசிகஜன்.


மெல்லிய உடல்வாகு. வயதைக் காட்டிக்கொடுக்காத அளவான மேக்கப். பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தார். ‘அப்ப சமையலும் நல்லாருக்கும்!’ நம்பிக்கை பிறக்க, அவரின் வீடியோவைத் தட்டிவிட்டாள்.


“அன்பு வாசகர்களே வணக்கம்! இன்று நாம்..” என்று அவர் ஆரம்பிக்க,


“வணக்கம் வணக்கம்! விசயத்துக்கு வாங்க!” என்றாள் ஆரணி.


“முதலில் அரிசியை ஒரு பாத்திரத்துக்குள் போடவும்.”


“பின்ன என்ன நிலத்திலையா போடுறது”


“மிதமான தண்ணீரில் அரிசியை மூன்று நான்கு முறை நன்றாக அலசவும்!”


“ஏன், சூடான தண்ணில கழுவினா அரிசி குளிக்க மாட்டன் எண்டு ஆடம் பிடிக்குமா என்ன? அதென்ன மிதமான தண்ணி?” என்றபடி நான்கைந்துமுறை அலசிக்கொண்டாள்.


அவர் சொன்னதுபோலவே அளவாகத் தண்ணியை வைத்து அடுப்பிலேற்றி அது கொதிக்கத் தொடங்கவும் அரிசியைப் போட்டாள்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
உப்பும் போட்டு, கொதித்துப் பொங்கி வரும்போதெல்லாம் அவர் சொன்னதுபோலவே கிளறிக் கிளறி விட, நன்றாகவே வெந்து வந்திருந்தது சோறு!


அவளுக்குப் பார்த்ததுமே பெரும் சந்தோசம். வாழ்க்கையில் அவளின் முதல் சமையல். அதுவும் சோறு, வெள்ளை வெளேர் என்று வெள்ளை முத்துக்களைப் போல ஒவ்வொரு சோறாக மின்ன, அவள் கண்களும் சந்தோசத்தில் மின்னியது!


“ரோசிகஜன்! ஐ லைக் யூ!” என்று அவருக்கு ஒரு பறக்கும் முத்தத்தைப் பரிசளித்துவிட்டுத் துள்ளலோடு சோற்றினை ஒரு கரையாக இறக்கி வைத்தாள்.


அப்படியே அவர் காட்டிக் கொடுத்தது போலவே, சூடான எண்ணையில் கடுகை வெடிக்க விட்டு பெருஞ்சீரகம், வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் போட்டு வதக்கி, இஞ்சி உள்ளி போட்டுப் பிரட்டி, வெட்டி வைத்திருந்த தக்காளிப்பழம் போட்டு வதக்கி எண்ணை விடத் தொடங்கிய பொழுதில் உப்பும் மஞ்சளும் சேர்த்து, நார் எடுத்து ஒரு விரல் அளவுக்கான துண்டு துண்டுகளாக வெட்டி, அதனை இரண்டாக்கப் பிளந்து வைத்திருந்த முருங்கைக்காய்களைப் போட்டுப் பிரட்டினாள். முருங்கைக்காய் ஓரளவுக்கு வதங்கி வரும்போது இரண்டு உருளைக்கிழங்குகளை துண்டுகளாக்கிப் போட்டு, மல்லி, செத்தல்மிளகாய், மஞ்சள் கட்டி, மிளகு, கறிவேப்பிலை என்று இன்னும் என்னென்னவோ எல்லாம் சேர்த்து அரைத்திருந்த இலங்கை கறித்தூள் போட்டுப் பிரட்டி, தேவையான அளவு நீர் வீட்டுக் கொதிக்க வைத்தாள். கறி பார்வைக்கு குணமும் மணமுமாக நன்றாகவே இருக்க, அவளுக்குள் தானாகவே ஒரு துள்ளல் வந்து அமர்ந்துகொண்டது!


“ரோசிகஜன், நீங்க என்ன பெரிய சமையல் விற்பண்ணி? இந்தா பாருங்க, முதல் சமையலையே அற்புதமா சமைச்சிருக்கிறன். போற போக்கில நானும் ஒரு யூ டியூபரினா மாறுற சந்தர்ப்பம் வந்தாலும் வரும்!” என்று சொல்லியபடியே உப்பு உறைப்பெல்லாம் பார்த்துக் கறியை இறக்கி வைத்தாள்.


அவர் காட்டிக் கொடுத்தது போலவே பருப்பிலும் ஒரு பால்கறி வைத்து, அப்பளம் மிளகாய் பொறித்து, பாத்திரங்களை ஒதுக்கி என்று அவள் சமையலை முடித்தபோது மூன்று மணித்தியாலங்கள் கடந்திருந்தது. என்னவோ வீடு கட்டப் போனவள் போன்று முற்றிலுமாகக் களைத்தே போயிருந்தாள். அடுப்பு நெருப்பு தன் வெம்மையால் அவளை எரித்தே விட்டிருந்தது. தேகமெல்லாம் வியர்வையில் குளித்து எரிந்தது. கையில் ஒருசில வீரத் தழும்புகளும் வந்திருந்தது. ஆனாலும், அவளின் உற்சாகத்துக்குக் குறைவில்லை. தானே உருவாக்கிய ஒன்று மிக மிக நன்றாக வந்துவிட்டிருக்கிற சந்தோசம்.


“மாமி! சாப்பாடு ரெடி! சாப்பிட வாங்கோ!” உற்சாகமாய்க் குரல் கொடுத்தாள்.


அவரிடம் சத்தமில்லாமல் போக, ஒரு தட்டில் சூடான சோற்றை மட்டும் போட்டு ஆறவிட்டுவிட்டு அவரின் அறைக்கே சென்றாள்.


“மாமி வாங்கோ சாப்பிட!”


“பசிச்சா எனக்குச் சாப்பிடத் தெரியும். நீ உன்ர வேலையைப் பார்!”


“அதெப்படி? முதல் முதல் சமைச்சிருக்கிறன். சாப்பிட்டு எப்படி இருக்கு எண்டு நீங்க ஒரு வார்த்தை சொல்லவேணாமா?”


சினத்துடன் அவளை முறைத்துவிட்டு எழுந்து வந்தார் அவர். உண்மையிலேயே அவள் சமைக்க எடுத்துக்கொண்ட மூன்று மணித்தியாலத்தில் பொழுது பின் மத்தியானத்தை நோக்கி நகரத் தொடங்கியே விட்டிருந்தது. அதற்குள் அவருக்கும் பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியுமிருந்தது. ஆனாலும், எட்டியும் பாக்கட் கூடாது என்கிற பிடிவாதத்தில் அவளே முடிக்கட்டும் என்றுதான் படுத்தே கிடந்தார். இதில், ‘ஏதாவது தெரியாது எண்டு கேட்டுக்கொண்டு வரட்டும், நல்லா குடுத்து அனுப்புறன்.’ என்கிற எண்ணமும் இருந்தது.


அவளோ ஒரு வார்த்தை கூட அவரிடம் கேட்கவில்லை.


இந்த ஒரு நாளிலேயே, அவளை இலகுவில் ஆட்டிவைக்க முடியாது என்று புரிந்துபோயிற்று அவருக்கு.


அவர் கையைக் கழுவிக்கொண்டு வருவதற்குள், போட்டுவைத்திருந்த சோற்றின்மீது ஒருபக்கம் முருங்கைக்காய் குழம்பு போட்டு, மறுபக்கம் பருப்பு வைத்து மிளகாய் அப்பளமும் வைத்துக் கொண்டுவந்து கையிலேயே கொடுத்தாள் ஆரணி.


“சாப்பிடுங்க மாமி!” ஒரு சில்வர் கப்பில் தண்ணீரும் கொண்டுவந்து வைத்தாள்.


படுத்திருக்கத் தயாராகி வந்த மத்தியான உணவு கைகழுவி வருவதற்குள் கைக்கே வந்திருக்க, உற்சாகமான உபசரிப்பு என்று அவரே தன்னைச் சற்றுப் புதிதாகவே உணர்ந்தார். வித்தியாசமாக இந்த உணர்வு நன்றாகவும் இருந்தது. ‘மாமியார்’ என்கிற பதவிக்கான மரியாதையை அனுபவிப்பது போல. மாலினி இப்படி இதுநாள் வரை செய்ததே இல்லை. அவள் இங்கு வந்தால் இவர்தான் ஓடி ஓடிக் கவனிப்பார். காசு தரும் மகாலட்சுமி ஆயிற்றே!


இவள் வேண்டாத மருமகளாயிற்றே! அவர் ஆட்டிவைக்க அவளே ஏற்பாடு செய்துகொடுத்தாள். நிமிர்வாகவே சோற்றைக் குழைத்து வாயில் வைத்தவர், சற்றுநேரம் ஒன்றுமே சொல்லவில்லை. பின் மெல்ல மென்று விழுங்கினார்.


அதற்காகவே காத்திருந்தவள், “எப்படி இருக்கு மாமி? நல்லாருக்கா? என்ர முதல் சமையல். வீட்டுல கிச்சனுக்கு நான் போன நாளை விரல் விட்டு எண்ணலாம்.” என்று தன்பாட்டுக்கு வளவளத்தாள் அவள்.


அவளுக்கு மாறாக ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்துபோனார் அவர்.


“திமிர் உங்களுக்கு! ஓகேஓகே! ஆரணின்ர மாமிக்கு இந்தளவுக்குத் திமிர் இல்லாட்டி எப்படி? நான் உங்களையும் லைக் பண்ணுறன் மாமி!” என்று தோளைக் குலுக்கிவிட்டு குளிக்கப் போனாள் ஆரணி.


நிகேதனின் இரண்டு சாரங்களையும் ஒரு டீ-ஷர்ட்டையும் எடுத்துக்கொண்டாள்.


கிணற்றடியில் கிணற்றையும் வாளியையும் பார்க்க ஆரணிக்கு மீண்டும் மலைப்பாயிருந்தது.


‘இதுல தண்ணிய அள்ளி.. குளிச்சு.. கடவுளே..’


‘நோ ஆரணி! இதெல்லாம் உனக்கான டாஸ்க்! புகுந்து விளையாடு! எதுலயும் நீ சோரக்கூடாது!’


மெல்ல மெல்லத் தண்ணீரை அள்ளி டாங்க்கில் நிரப்பத் தொடங்கினாள். சமையலைப்போல அறிந்துகொள்ளும் ஆர்வத்துடனோ சுவையாகச் சமைக்கவேண்டும் என்கிற விருப்புடனோ நீரை இறைக்க முடியவில்லை. தளிர் விரல்களும் வேலை பார்த்தே பழகியிராத மென்மையான உள்ளங்கையும், ஏற்கனவே சமையலால் உண்டாகியிருந்த காயங்களும் எரிய, தொண்டை அடைத்து மூக்குச் சிவந்து கண்களைக் கரித்துக்கொண்டு மேகமூட்டமாகக் கண்களில் கட்டியது கண்ணீர். அப்படியே துவைக்கும் குந்தில் அமர்ந்துவிட்டாள்.


இன்று ஒரு நாளிலேயே சிவந்துவிட்ட விரல்களை பார்க்கப் பார்க்க இன்னும் அழுகை வந்தது.


லைசென்ஸ் எடுத்த புதிதில் காரின் ஸ்டேரிங் சுழற்றி உள்ளங்கை நோகிறது என்று சொன்னதும் அதற்குக் கவர் வாங்கிப்போட்ட அப்பா நினைவில் வந்தார்.


பிறப்பிலேயே செல்வந்தனாகப் பிறந்ததாலோ என்னவோ கௌரவம், தராதரம், அந்தஸ்து என்று எல்லாமே அதிகமாகப் பார்க்கும் மனிதர். பாசத்தைக்கூட அப்படித்தான் காட்டுவார். ஸ்டேரிங் கவரினைக்கூட நைக்கில் வாங்கிப் போட்டவர். அப்படியானவருக்கு அவளின் செயல் எவ்வளவு தலைகுனிவாக இருக்கும்.


இப்போது என்ன செய்வார்? இன்னுமே கோபத்தில் இருப்பாரோ? நிச்சயமாக! அவரளவில் அவருக்கு அவள் இழைத்தது மிகுந்த தலைகுனிவான ஒன்று! உள்ளுக்குள் அவமானத்தில் குறுக்கிப் போயிருப்பார். தன் மானம் மரியாதை போய்விட்டதாக எண்ணித் துடித்துக்கொண்டு இருப்பார். அதற்கும் சேர்த்துக் கண்ணீர் வர, இந்தக் கண்ணீர் தன்னைப் பலவீனமாக மாற்றுவது போலிருக்க எல்லா நினைவுகளையும் உதறிவிட்டு மனதில் உறுதியோடு எழுந்தாள்.


கை எரிய எரிய, அந்த எரிவே வீம்பை அவளுக்குள் விதைக்க, வலிக்க வலிக்கப் பிடிவாதத்தோடு டாங்க்கினை நிரப்பிமுடித்தாள்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
அவனது சாரத்தைக் குளிப்பதற்கு ஏற்றவாறு அணிந்துகொண்டு அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி தோய்த்துக் காயப் போட்டுவிட்டு அள்ளி நன்றாக முழுகினாள்.


குளித்து முடிக்கும் தருவாயிலேயே நித்திரை கண்ணைச் சொக்கியது. நிகேதனின் சட்டை சாரத்தை அணிந்துகொண்டு கட்டிலில் விழுந்தவள் தான்.


எழுப்பியது நிகேதன் தான். அவனைக் கண்டதுமே இறுக்கி அணைத்துக்கொண்டாள். அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. மலையையே அன்று பிரட்டியது போன்றதொரு தோற்றம். என்னவோ நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தது போல் துயர் மனதில் பொங்கிற்று!


அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கிறது என்று அவனுடைய இறுகிய அணைப்பிலேயே தெரிந்தது.


“தனிய இருக்க போறா இருந்ததா?” அடைத்த குறளை செருமிக்கொண்டு இதமாகக் கேட்டான்.


இல்லை என்பதாக மறுத்துத் தலையசைத்தவள், பிறகுதான் அவன் முகம் பார்த்தாள். வெயிலில் சுற்றிஅலைந்ததில் காய்ந்து, கருத்து, கண்களில் களைப்போடு கேசமெல்லாம் கலைந்து ஆடை கசங்கி என்று பார்க்கவே நெஞ்சை அடைத்தது அவளுக்கு.


“வேலை கிடைச்சதாடா?”


முகம் வாட மெல்ல மறுத்துத் தலையசைத்தான் அவன்.


“ஏதாவது சாப்பிட்டியா?”


அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை அவனால். அவளுக்கும் பதில் தேவைப்படவில்லை.


“குளிக்கப் போறியா? இல்ல முகம் கழுவிக்கொண்டு சாப்பிடுறியா?” எழுந்து தன் முடியினை ஒரு பாண்டினுள் அடக்கியபடி கேட்டாள்.


“குளிச்சிட்டே வாறன்.” என்றவன், அவளின் ஆடைகளைக் கவனித்துவிட்டு, “யார் தண்ணி அள்ளித் தந்தது?” என்று கேட்டான்.


“நீயே அள்ளிக் குளிச்சியா?” என்றவன் உடனேயே அவள் கரம்பற்றி இழுத்துக் கையைத்தான் முதலில் பார்த்தான்.


சிவந்து தடித்துப் போயிருந்த விரல்களைக் கண்டுவிட்டு, “என்னடா இதெல்லாம்?” என்று வலியோடு கேட்டான் அவன்.


ஆரணிக்குக் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. சமாளித்துக்கொண்டு சிரித்தாள். “விடுடா! விடுடா! இதெல்லாம் வீரத் தழும்புகள்!” அவள் சொல்லும்போதே அவனுடைய உதடுகள் அவளின் உள்ளங்கையில் மென்மையாகப் பதிந்தன. மீண்டும் மீண்டும் பதிந்தன. தன் இயலாமையை இதமாக அவளுக்குள் பதித்தான்.


“இதுமட்டும் தாண்டி என்னால சிக்கனமில்லாமத் தரமுடியும்!” வேதனையோடு சொன்னவனிடம் அதற்குமேல் ஆரணியால் கண்ணீரை மறைக்க முடியவில்லை.


ஆனால், மனம் நிறைந்து வழிந்ததால் பொங்கியது அந்தக் கண்ணீர்.


“அடேய் விசரா! எனக்கும் இது மட்டும் தான்டா வேணும்! வேற எந்தக் கஸ் இல்ல! நீ கவலைப்படாத!” கண்ணீரோடு சிரித்தாள் அவன் காதலி!


அவளின் விழிகளைத் துடைத்துவிட்டான். நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, அருகிலிருந்த பையினை எடுத்துக் கொடுத்தான். “நைட்டி மட்டும் தான். உள்ளுடுப்பு நாளைக்கு நீயும் வா. போய் வாங்குவோம்.” என்றான்.


“இப்ப என்னத்துக்கடா?” அவளுக்கு அத்தியாவசியம் என்றாலும், இருக்கிற காசையும் செலவு செய்துவிட்டு என்ன செய்யப் போகிறான் என்று கேட்டாள்.


“உனக்கு ஒண்டாவது தேவைதானே!” அவனுக்கும் இப்போது தாய் தங்கையிடம் கேட்க விருப்பமில்லை. வெறும் கையோடு வந்தவள் மாற்றுடைக்கு என்ன செய்வாள் என்று அவர்களும் யோசிக்கவே இல்லைதானே.


அவன் குளிக்கப் போக, தானும் நைட்டியை மாற்றிக்கொண்டு பின்னால் போனாள். அவன் குளிக்க, அவள் அவன் அணிந்திருந்தவைகளை அலசிப் போட்டாள்.


ஓடிப்போய் கறிகளை மெல்லச் சூடாக்கி வாய்க்கு இதமாக போட்டுக்கொண்டு வந்து, குளித்துவிட்டு வந்தவரிடம் கொடுத்தாள்.


“நீ சாப்பிட்டியா?” தட்டை வாங்கியபடி கேட்டான் நிகேதன்.


“இன்னுமில்ல. நீ சாப்பிடு முதல்!” ஆர்வமாய்ச் சொன்னவளுக்கு அவன் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லிவிடவேண்டும் என்று துள்ளியது உள்ளம்.


“வேலையும் இல்லாம காசும் இல்லாம இன்னும் எத்தனை நாளைக்கு சோறும் கறியுமா சாப்பிடப் போறாய்?” அவன் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்த கணமே வேலையைப் பற்றி விசாரித்துவிட்டிருந்தவர் கணவன் மனைவியிடம் தெரிந்த அந்நியோன்யத்தில் கடுகடுத்தார்.


சுள் என்று ஏறியது ஆரணிக்கு.


“முதல் பசியில சாப்பிடுறவன நிம்மதியா சாப்பிட விடுங்க மாமி! வேலைக்குப் போறதுக்கு அவன் முதல் தெம்பா இருக்கவேணும். இல்ல வேலை கிடைச்சாலும் செய்யேலாது. நீ எழும்பி அறைக்க வா!” என்றவள் கொடுத்த தட்டைத் தானே பிடுங்கிக்கொண்டு அறைக்குள் சென்றாள்.


நிகேதனால் சற்று நேரத்துக்கு அசைய முடியவில்லை. வெறுமையான விழிகளோடு தாயின் முகத்தைப் பார்த்தான். கையில் ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கைகளைப் பார்த்தான். காசும் வேலையும் தான் தாயின் பாசத்தையும் நிர்ணயிக்கும் போல!


அவன் அமர்ந்திருந்த கோலம் பெற்றவரின் மனதையும் சுட்டதோ, “வீட்டு நிலவரத்தைத்தான் நான் சொன்னனான்.” என்றார் மெல்ல.


ஒன்றும் சொல்லாமல் எழுந்து அறைக்குள் நடந்தான் நிகேதன்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#4
“சாப்பிடு!” அடைத்த குரலில் தட்டை நீட்டினாள்.


“ப்ச்! பசியில்லை!”


“இப்படி எத்தனை நாலைக்குப் பட்டினி கிடப்பதை நிக்ஸ்? வேலை கிடைக்கிற வரைக்குமா? ரோசப்பட்டு ஆக்கிரத்துக்கு ஒண்டும் இல்லடா. சாப்பிடு! கொஞ்ச நாளைக்குத்தான் இதெல்லாம். அதுவரைக்கும் பொறுத்துத்தான் போகவேணும்.” இதமாகச் சொன்னவள் அவன் கையில் தட்டை வைத்தாள்.


“நீ ஒண்டும் யோசிக்காத. உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கும்!” நம்பிக்கையோடு சொன்னாள் ஆரணி.


ஒரு பெருமூச்சுடன், “நீயும் போட்டுக்கொண்டு வா.” என்றபடி ஒரு பிடியை வாயில் வைத்தவன் அடுத்த கணமே, “என்னடி சாப்பாடு இது? யாரு சமைச்சது?” என்றான் முகத்தைச் சுளித்துக்கொண்டு.


விழிகளில் ஆர்வத்தைத் தேக்கி என்ன சொல்லப்போகிறான் என்று காத்திருந்த ஆரணியின் முகம் அப்படியே வாடிப் போயிற்று!


“ஏன்டா? நல்லா இல்லையா? நான் தான் சமைச்சனான்.” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.


“உன்னை ஆர் இதையெல்லாம் செய்யச் சொன்னது?” சட்டென்று மூண்ட கோபத்தோடு சிடுசிடுத்தான் அவன்.


“ஏன் சமைச்சா என்ன? அதைவிட்டு சொல்லு நீ, நல்லாவே இல்லையா?” என்றாள் மீண்டும்.


அவளை இழுத்து அருகில் அமர்த்தினான். “அம்மா சொன்னவாவா?”


“நான் இந்த வீட்டு மருமகள் தானே. அப்ப நான் தானே சமைக்கவேணும்!” பிடி கொடுக்காமல் பதில் சொன்னாள் அவள்.


“என்ர மனுசி முதல் முதல் சமைச்சது. நல்லாருக்கோ இல்லையோ, எனக்கு அது தேவாமிர்தம் தான்!” மனம் கனியச் சொன்னவன் அவளுக்கும் ஊட்டிவிட்டான்.


வாங்கிச் சாப்பிட்டவளின் முகமும் படு கன்றாவியாக மாறிப்போயிற்று!


“என்னடா இவ்வளவு கேவலமா சமைச்சு வச்சிருக்கிறன்? ரோசிகஜன் உங்களுக்கு இருக்குப் பொறுங்க!”


இளநகை அரும்பிற்று அவன் முகத்தில்.


“அது ஆரு?”


“அவாதான் சொல்லித் தந்தவா. ஆனா இப்படி வந்திருக்கு.”


“அவா நல்லாத்தான் சொல்லியிருப்பா. நீ உப்பு உறைப்ப அளவா போட்டா சரி. இங்க பார், முருங்கைக்காய் நல்லா அவிஞ்சிருக்கு. கரையேல்லா. பருப்பும் தான். உப்புக் கொஞ்சம் காணாது. தூள் கூடிப்போச்சு!” என்று குறையையும் நிறையும் கனிவோடு எடுத்துச் சொன்னான் அவன்.


“டேஸ்ட் பாக்கேக்க நல்லா இருந்த மாதிரித்தான்டா இருந்தது.” சிணுங்கினாள் அவள்.


“பழகப் பழக சரியா வரும் விடு! நமக்கு இப்ப சுவையான சாப்பாடா முக்கியம்? பசிக்குச் சாப்பிட ஏதாவது இருந்தா போதாதா?” அவளுக்கும் கொடுத்து உணவை உண்டாலும் அவன் இங்கில்லை என்று புரிந்தது அவளுக்கு. என்னவோ சிந்தித்தபடியே உண்டு முடித்தான்.


அவள் தான் தட்டையும் கொண்டுபோய்க் கழுவி வைத்துவிட்டு வந்தாள்.


“தெரிஞ்ச இடமெல்லாம் கேட்டுட்டு வந்திருக்கிற ஆரா. சொல்லுறன் எண்டுதான் சொல்லி இருக்கீனம். ஒரு இடத்திலையும் உடனே வேலை தாரமாதிரி இல்ல.” இரவின் அமைதியில் அவளைத் தன் தோளில் சாய்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தான் நிகேதன்.


“கிடைக்கும். கவலைப்படாத. என்ன எங்கட அவசரத்துக்கு உடனடியா கிடைக்குதில்ல. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ கேட்டு வச்சா தேவைப்படேக்க கூப்பிடுவீனம் தானே. மனதை சோர விடாத. கட்டாயம் நாங்க நல்லா வருவோம். கொஞ்ச காலத்துக்கு கஷ்டம் தான். அதைத் தாண்டிட்டா பிறகு எல்லாம் ஓகே ஆயிடும் சரியா!” அவனுக்கு ஆறுதல் சொன்னாள் அவள்.


அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.


“ஒரே நாள்ல வாழ்க்கையே தலைகீழா மாறிப்போன மாதிரி இருக்கா?” மெல்லக் கேட்டான்.


அவளால் உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ஒருகண அமைதி அவனை வதைத்தது. “இவனை ஏன்டா கட்டினன் எண்டு நினைக்கிறியா?” கேட்டு முடிக்க முதலே அவன் வாயிலேயே ஒன்று போட்டாள் ஆரணி.


“விசரணை மாதிரி கதைக்காத. சமைக்க உண்மையாவே எனக்குப் பிடிச்சிருந்தது. இனியும் விருப்பமாத்தான் சமைப்பன். அதைவிட, என்ன வெளில போ போ எண்டு கத்தின மாமிய என்ர கைச்சோறை சாப்பிட வச்சிட்டன் பாத்தியா. அதுக்காகவே சமைப்பன். ஆனா..” என்றவள் தயங்கிப் பின் தொடர்ந்தாள்.


“தண்ணி அள்ளி குளிக்கேக்கதான் அழுகை வந்தது. அதுவும் போகப் போக பழகிடும் விடு!” என்றாள் சிரித்துக்கொண்டு.


மீண்டும் அவள் கரங்களைப் பற்றி மென்மையாக முத்தமிட்டான். இனி நான் வெளில போகமுதல் டாங்க்கை நிரப்பி விட்டுட்டுப் போறன். நீ குளிக்கிற நேரம் குளி.” என்றவன் நாள் முழுக்க அலைந்த களைப்பில் அவளை அணைத்தபடியே உறங்கிப் போனான்.


மாலை நன்றாகவே உறங்கி எழுந்த ஆரணிக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. வேறு சிந்தனைகளும் இல்லை. உள்ளம் அவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருந்தது.


தொடரும்...
 
#5
Seekiram oru nalla velai kedaikatum sis.... Rosei kajan prabhu Neenga ingeum Vanthuteengala.... ;)
 
#6
Rosi Akka Samayal tips ha ha ha . Enum ether parkan. Rompa pedichchu iruku😍😍😍😍
 
#7
Enakku ennomo samaiyal tasta than irukku......
 
#8
mami ethavuthu samayal potutnagala. nice update rosika super
 
#9
Super akka. Nikethan ku seekrama Velaiku yerpadu pannunga akka. Rosei akkavaium vittu vaikala ☺☺☺☺☺
 
#10
அருமையான பதிவு.ரோஸி சமையல் கலக்கல்😊😊😊😊
 
#11
Ha ha ha!! Rosei ma'am ah vera oru bit pottu irukeinga.. first cooking experience very nicely narrared..
 

sumiram

Active member
#12
Nice ud
 
#13
Super mam. Especially Rosie Kajan samayal tips 😂😍
 
#14
ரோஸி கஜன் சமையல் குறிப்புடன் ஆரணியின் சமையல் கண்டிப்பா சூப்பரா தான் இருந்திருக்கும், ஒரு வேளை மாமியின் கைவண்ணமோ?….
 
#15
அவளுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்த
மாமியாருக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும்
சாப்பிட்டு ஒண்ணும் சொல்லவில்லை
இந்த அம்மணி ரோசிய வேறு சடைக்கிறாங்கோ
 
#16
Naan kuda paya pulla nalla samachita first time nu santhoshapatten mami ethuvum sollama sapittangale sogamana ana urchaganana epi
 
#17
நிதா அக்கா..... சூப்பர் எபி.... அதுவும்ரோசி அக்கா சமையலை இப்படி ஆரணி வைச்சி கலாட்டா பண்ணிட்டிங்க.... இனிமே உங்களுக்கு new ரேஸிபே சொல்ல மாட்டங்க போங்க..... @ரோஸி கஜன் அக்கா இதை எல்லாம் கேக்க மாடீங்களா.....

அடேய் விசரா! எனக்கும் இது மட்டும் தான்டா வேணும்! வேற எந்தக் கஸ் இல்ல! நீ கவலைப்படாத!” கண்ணீரோடு சிரித்தாள் அவன் காதலி!

அக்கா இதுல கஸ் அப்பபடி என்்ன
 

NithaniPrabu

Administrator
Staff member
#18
நிதா அக்கா..... சூப்பர் எபி.... அதுவும்ரோசி அக்கா சமையலை இப்படி ஆரணி வைச்சி கலாட்டா பண்ணிட்டிங்க.... இனிமே உங்களுக்கு new ரேஸிபே சொல்ல மாட்டங்க போங்க..... @ரோஸி கஜன் அக்கா இதை எல்லாம் கேக்க மாடீங்களா.....

அடேய் விசரா! எனக்கும் இது மட்டும் தான்டா வேணும்! வேற எந்தக் கஸ் இல்ல! நீ கவலைப்படாத!” கண்ணீரோடு சிரித்தாள் அவன் காதலி!

அக்கா இதுல கஸ் அப்பபடி என்்ன

அது கஷ்டம் எண்டு வரவேணும் தரணி. நிறைய எழுத்துப் பிழை. இது மட்டுமில்ல நிறைய கிடக்கு. அவ்வ்
 
Last edited:
Top