அனலை அரிகர புத்திர அய்யானார் ஆலயம் – ரோசி கஜன்

Rosei Kajan

Administrator
Staff member
#1

சமய ஸ்தலங்கள் பகுதியில் முதலாவதாக எங்கள் ஊர் அனலைதீவு அரிகர புத்திர அய்யானார் ஆலயம் பற்றி பகிர்ந்து கொள்வதில் அந்த ஊரவளாக மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

முதலில், அனலைதீவு பற்றி சிறிதான அறிமுகத்தோடு ஆரம்பிப்போமே!

இலங்கையின் வடக்கே அமைந்துள்ள தொன்மைவாய்ந்த சப்ததீவுகளுள் ஒன்றாக, நயினாதீவு மற்றும் எழுவைதீவுக்கு இடையில் அமைந்துள்ள அழகிய சிறு தீவே எங்கள் ஊராகும். இதன் தென்பகுதியில் அமைந்துள்ள புளியந்தீவு எனும் சிறு தீவும் அனலைதீவினுள் அடக்கமே.

நாற்புறமும் பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலைன்னையை எதிர்த்து நிற்கும் வகையில், கற்பாறைகளை அரணாகக் கொண்டிருப்பதால் அணை அலைதீவு என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், அக்காரணப் பெயரே மருவி அனலைதீவென்றாகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

அதேநேரம் 1675 ஆண்டளவில் அனலை என்னும் பெண்ணரசி இத்தீவை ஆண்டார் என்றும், அதனால்தான் இப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வகையான தொன்மையான பாரம்பரியமிக்க அனலைதீவை சைவமணித்தீவென்றும் அழைப்பர். அந்தவகையில் அங்கு அமைந்துள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றுமே விசேஷமானவை.

கோவில் திருவிழா என்றால் கொண்டாட்டத்துக்கு கேட்கவே தேவையில்லையல்லவா? அந்த அனுபவம் எல்லோருக்குமே பொதுவானது.

எங்கள் ஊரில் பிள்ளையார், நடராஜர், அம்மன், முருகன், வைரவர், விஷ்ணு என்றெல்லாம் கோவில்கள் இருந்தாலும், ஐயனார் ஆலய உற்சவ காலமே அதிகளவு குதூகலத்தைக் கொடுக்கும் நாட்களாகும்.

அனலைக்கு ஒரு அடையாளமாக, அங்குள்ளவர்களின் குல தெய்வமாக, காவல் தெய்வமாகவே ஐயனார் போற்றப்படுகின்றார்.


1541962354325.png



இக்கோவில் உருவாக்கம் தொடர்பாக ஒரு புராணக் கதைசொல்லப்படுகின்றது. அதை அப்படியே ஆலய சித்திரத்தேரில் பொறித்தும் உள்ளார்கள். இதற்கு ஆதாரமான பேழை அங்கிருக்கும் கூழா மரத்தின் கீழ் இன்னமும் காணப்படுகின்றது.


1541962377559.png



கடற்கரையில் வந்தடைந்த அப்பெட்டியை சில ஊர் மக்கள் சுமந்து வந்ததாகவும், களைப்பு மேலீட்டால் நயினாங்குளம் என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பாறிவிட்டு மீண்டும் தூக்க முனைகையில் அதன் கணம் அசைக்கவும் விடவில்லை என்றும், அதன் பின்னர் அப்பெட்டியை உடைத்துப் பார்த்ததில் உள்ளே புட்கலை சமேத ஐயனார் உருவச் சிலை காணப் பட்டதாகவும், அதே இடத்தில் அய்யனாருக்கு சிறு கோவில் உருவாக்கப்பட்டதாகவும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.



1541962399653.png 1541962414924.png


வருடாவருடம் சித்திரை முதல் திங்களில் பொங்கல் உற்சவம் அங்கு களை கட்டும். வருடாந்த உற்சவம் ஆரம்பத்தில் பத்து தினமாகவும், இடைக்காலத்தில் பதினைந்து தினமாகவும், தற்போது, மீண்டும் பத்து தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆடி அமாவாசையை நிறைவு செய்து வரும் சுக்ல பட்ச ஐந்தாம் நாள் முதல் பூரணை வரையிலான நாட்களே திருவிழா நாட்களாகும். இத்திருவிழா காலத்தில் ஐயனாரின் கிருபை மீது நம்பிக்கை கொண்டோரின் பக்திப் பரவசம், காவடிகள் நேத்திகடன்கள் என வெகு விமரிசையாக அனுஸ்டிக்கப்படும்.

இவற்றின் உச்சமாக ஐயனார் சித்திரத் தேரில் வீதி வலம் வரும் தருணங்களை நேரில் கண்டு மெய்சிலிர்க்க, உலகெங்கும் பரந்து வாழும் அவ்வூரின் குடிமக்கள் ஓடோடிச் செல்வதும் வழக்கத்தில் உண்டு.
 
Top