அந்த ஏழு நாட்கள் By கோபிகை(இலங்கை)

Rosei Kajan

Administrator
Staff member
#1


பகுதி 1

வெண்பஞ்சுக் குவியலாய் வானம் அழகு காட்டிப் பரந்து விரிந்து கிடந்தது.

அந்த மேகங்களைத் தழுவி உறவாடியபடி மிதந்து வந்துகொண்டிருந்தது அந்தக் கனேடியவிமானம்.

உள்ளே, இறுகிப்போன முகத்துடன் அமர்ந்திருந்தாள் சுமுகி. அருகில் அவள் தந்தை சிவபாதம். இந்த இருபத்தியிரண்டு வயதுக்குள் இப்படி ஒரு கோபம் அவளுக்கு வந்ததே இல்லை. அதுவும், அவளது அருமைத் தந்தையின் மீது.

மகளைத் திரும்பிப் பார்த்த தந்தையின் முகத்திலோ, எப்போதும் போல மெல்லிய புன்னகை.

இதுவரை, அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்தாத சிவபாதம், இந்தப் பயணத்திற்காகக் கட்டாயப்படுத்தியது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட மிரட்டி அழைத்து வந்திருந்தார் என்பதே அவளுக்கு அதிகக் கோபத்தைக் கொடுத்தது.

இப்படி, அவளது எண்ணங்களைச் சிதறடிப்பதுபோலவே போட்டிபோட்டுக் கொண்டு பறந்து வந்த விமானம், கொழும்பு சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்காவில் தரைதட்டியது. அடுத்து வந்த நிமிடத்துளிகளில், விமானநிலைய விதிமுறைகளை முடித்துக்கொண்டு வெளியேவந்தனர் , சுமுகியும் அவள் தந்தையும்.

வெவ்வேறு மொழிகளைப் பேசிய மக்கள் கூட்டம் அங்குமிங்குமாய்ச் சென்றுகொண்டிருந்தனர். வித்தியாசமான அச்சூழல் சற்றுப்பயத்தைக் கொடுக்க, தந்தையின் கரங்களை இறுகப்பற்றிக் கொண்டாள் சுமுகி.

ஒருபுறம் தந்தை மீது கோபம் இருந்தாலும் மறுபுறம் பரிதாபமாகவும் இருந்தது.

அவள், எவ்வளவோ மறுத்தும் கேளாது, சொந்த மண்ணையும் தனது உறவுகளையும் காணவேண்டுமென அவளையும் அழைத்து வந்துவிட்டார். பல வருடங்களின்பின், தன் இரத்த உறவுகளைக் காணப்போவதில் அவருக்கிருந்த பேரானந்தம் அவரது கண்களில் பிரகாசித்தது. அதனைக்கண்ட சுமுகியின் மனமோ அவருக்காய் பாகாய் உருகியது.

நாட்டின் போர்ச்சூழலால் பல சிக்கல்களுக்கிடையில் தட்டுத்தடுமாறி கனடா வந்ததை தந்தை அடிக்கடி கூறக்கேட்டிருக்கிறாள். மிகநெருக்கடியான ஒரு சூழலில் தாயை மணந்து கொண்டதையும், அதன் பின்னர், தாயின் உறவுகளுக்கு ஏற்றவகையில் தனது அந்தஸ்தை உயர்த்த வேண்டும் எனும் கட்டாய நிலையில், வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது இயந்திரமயமாகி விட்டது அவர் வாழ்க்கை எனவும் கூறியிருக்கிறார்.

தனது வாழ்க்கையில், மண்ணுக்காகச் செய்த சில உதவிகளைத்தவிர, கூடப்பிறந்தவள் பற்றிக்கூட கவனிக்காது இருந்து விட்டேன் எனவும் கூறியிருந்தார். இப்போதுதான் காலம் மெல்லக் கனிந்திருக்கிறது. தன் பந்தங்களைக் காணவேண்டும் எனும் ஆவலில் வந்திறங்கியிருக்கிறார், மகள் சுமுகியுடன்.

அவரது உறவென்று சொல்லவும் பெரிதாக யாருமில்லை. நெருங்கிய உறவென்றால் அவரது ஒரே தங்கை சாவித்திரியும் உயிர்நண்பன் தினகரனும் தான் எனச்சொல்லியிருந்தார்.

அப்போதுதான் பார்த்தாள், அவர்களை அழைத்துச் செல்வதற்காக தந்தையின் நண்பர் தினகரனும் வேறொரு தூரத்து உறவினரும் வந்திருந்தனர். தூரத்தில் வரும் நண்பனைக் கண்டதும் தந்தையின் முகத்தில் தோன்றிய மலர்ச்சி, அவள் என்றுமே காணாதது.

தினகரன் அருகில் வந்துவிட இருவரும் கட்டித்தழுவிக் கண்ணீர் சொரிந்து நட்பின் ஆழத்தைக் காட்டிக்கொண்டனர். தந்தையின் அருகில் அமைதியாய் நின்ற சுமுகி மென்மையாய்ப் புன்னகைத்தாள்.

‘இயந்திரமாய் ஓடியோடி உழைத்த அப்பாவிற்குள் கூட இப்படி ஒரு நட்பு ஒளிந்து கிடக்கிறதா? யாரிடமும் அதிகம் பேசாமல் மௌனத்தை மொழியாக்கி வாழ்ந்த அப்பாவின் எண்ணங்கள் இவ்வளவு இனிமையானவையா?’

தாயுடன் கூட தந்தை அவ்வளவு நெருக்கமாய் இருந்து அவள் கண்டதில்லை. இயல்பாகவே அவள் தாயிடம் இருந்த பணக்காரத்திமிரும், தாயின் உறவுகளிடம் தந்தை காட்டிய ஒதுக்கமும் சேர்ந்து அவர்களுக்குள் ஒருவித இடைவெளியை உண்டாக்கியிருந்தது.

ஆனால், அவள் தந்தை அவளிடம் மட்டும் எப்போதும் அன்பும் இனிமையும் மட்டுமே காட்டுவார். ஆனாலும், அதிகம் பேசமாட்டார். அவள் தாய்க்கு ஆடம்பரமும் அலங்காரமும் பிடிக்கும். தந்தையோ, எப்போதும் எளிமையையே விரும்புவார்.

இந்தப் பயணம் தவிர, ஏனைய விடயங்களில் அவள் தந்தையின் கொள்கைகளில் அவளுக்கும் உடன்பாடே. இந்த விடயத்தில் மட்டும் தாய் சொன்னவைகளே சரியென்று தோன்றியது.

தூசும் புழுதியுமான தெருக்களையும் வறியமக்களையும் காண அவள் தாய்க்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனால், அவளையும் அனுப்ப விரும்பவில்லை. தாயைக் கோபப்படுத்த வேண்டாமே என நினைத்தே அவளும் வரமறுத்தாள். அதற்காகத் தான் அப்பாவுடன் சண்டைபோட்டு ஒரேயடியாக மறுத்தாள். ஆனால், இப்போதைய தந்தையின் ஆனந்தம் பார்க்கும்போது அவரோடு வந்ததே சரியெனத் தோன்றியது.

அங்கிருந்து, அவர்களின் பயணம் வடக்கு நோக்கி ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தில் தான் தினகரனின் வீடு இருந்தது. அவர்களின் வீடு சகல வசதிகளுடனும் கட்டப்பட்டிருந்தது. இவர்கள் வீடுவந்து சேர்ந்தபோது மாலையாகி விட்டது.

தினகரனின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் இருந்தனர். அவரும் மனைவியும் அவரது தந்தையாரும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர்.

அன்று, நடு இரவில் தினகரனின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட, வீடே அல்லோலகல்லோலப்பட்டது.

அவசரமாய் அருகிலிருந்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவர். சிவபாதமும் தினகரனுடன் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார். சுமுகியும் தினகரனின் மனைவியும் தான் வீட்டில்.

காலையில் அவரும் வைத்தியசாலைக்குச் சென்றுவிட, தனியே அந்த வீட்டில் இருக்க ஏதோ மாதிரி இருந்தது சுமுகிக்கு. தந்தைக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாள்.

“அப்பா உங்கட தங்கச்சி வீட்டுக்குப் போறதில்லையா?”

“இந்த நிலைமையில நான் தினகரை விட்டிட்டு வரமுடியாது, நீபோறியா?”

“நான் மட்டுமா அப்பா?”

“ஆமாம்டா...” தாமதிக்காது சொல்லிவிட்டார் சிவபாதம்.

“நீ முதல்ல போம்மா, நான் ரெண்டு நாளில வாறன். அத்தையும் நாம எப்ப வருவம் என்று எதிர்பாத்துக்கொண்டு இருப்பா. சின்னப்பிள்ளைகள் வேற, அவேக்கும் ஆசையா இருக்கும் தானே? சொக்லேற் எல்லாம் கொண்டுபோய் குடுத்திட்டு, அவயோட இரு!” தொடர்ந்து சொன்னவர், “ஆனா, சுமுகி...” என்று நிதானித்தார்.

‘முதல் முதல் அத்தை வீட்ட போகப்போறம்; தனியாக நான் மட்டுமா?’ என்ற தயக்கத்தோடு நின்றவள், தந்தையின் குரல் தயங்கியதும், “என்னப்பா?” என்றாள்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
“இல்லம்மா, தினகரன் வீடு போல அத்தை வீட்டில வசதிகள் இல்ல; இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மேல வருகீனம்; உன் அம்மா மாதிரி எதையும் வார்த்தையால குத்திக் காட்டிடக்கூடாது; அவள் சரியான பாவம், இதுவரை நானும் எந்த உதவியும் செய்ததில்ல.” என்றார், கவலையும் எச்சரிக்கையுமாக.

“ஹையோ! நான் அப்படியெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன்பா.” என்றாள் சுமுகி.

ஏனோ அவளுக்கும் தந்தையின் சகோதரியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதே பரபரப்பும் ஆர்வமுமாகத் தயாராகினாள். இவள் புறப்படுவதை அறிந்ததும் வைத்தியசாலையில் நின்றாலும் தன் இன்னொரு நண்பன் மூலம் மகிழுந்தொன்றை ஏற்பாடு செய்துவிட்டார் தினகரன்.

தந்தை சொன்னது போல், சொக்லேட் கொஞ்சமும் ஒரு சில பொருட்களையும் மட்டும் எடுத்துக்கொண்டு பயணப்பட்டாள் இவள். அவர்களைச் சந்தித்த பின் அவர்களுக்கேற்ற விதத்தில் ஆடைகளை வாங்கிக்கொடுக்கலாம் என்பதால் உடைகள் வாங்கிக்கொண்டு வரவில்லை. சமையலறைக்கான பொருட்கள் நிறையவேகொண்டு வந்திருந்தாலும், அவற்றைத் தானே கொண்டுவருவதாகக் கூறிவிட்டார், சிவபாதம்.

இரண்டு மணிநேரம் பயணத்தின் பின், ஒரு சந்தியில் திரும்பியதும் மகிழுந்து மெதுவாகச் செல்ல, பின்னால் சைக்கிள் ஒன்று தொடர்ந்து வந்தது. கண்ணாடிக் கதவிற்கு நேரே வருவதும் பின்னர் சற்றுத்தள்ளி வருவதுமாக வந்துகொண்டிருந்தான் அவன்.

சிறிதுநேரத்தில் சைக்கிள் முன்னே செல்லும்போதுதான் நன்றாகப் பார்த்தாள் சுமுகி. அவளைவிட ஐந்தாறு வயது கூடுதலாக இருக்கும் அவனுக்கு. ஏதோ வழிகாட்டிபோல முன்னே சென்று கொண்டிருந்தான்.

‘பக்கா ரௌடி மாதிரி இருக்கிறான்!’ தனக்குள் எண்ணிக் கொண்டாள் அவள்.

அப்பிரதேசத்தின் இருபக்கமும் வயலின் குளிர்மையோடு இதமானகாற்று உடலைத் தழுவியது.

‘இயற்கை அன்னை தன் மொத்த அழகையும் அங்கேதான் விட்டுவிட்டாளோ!’ என எண்ணிய சுமுகி, மகிழுந்தை நிறுத்தி இறங்கிக்கொண்டாள்.

அந்தச் சைக்கிளும் சற்றுத்தூரம் சென்று நின்றது. அப்போதுதான் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு நொடி கண்கள் நான்கும் வெட்டிக்கொண்டன.

‘ரௌடி!’ எனத்தனக்குள் திட்டியபடியே திரும்பினாள் சுமுகி.

“திமிர்பிடித்தவள்” தனக்குத்தானே சொன்னபடி மறுபக்கம் பார்த்தான் அந்த நெடியவன்.

அந்த இயற்கையின் எழிலில் இலயித்துப் போய் நின்றவள், ‘அடடா! இந்த அழகை ரசிப்பதற்காகத் தான் என்னை அழைத்து வந்தாயோ?’ என எண்ணியபடி, புகைப்படங்களை விதவிதமாய்த் தட்டிக்கொண்டாள்.

சற்றுநேரத்தில் மீண்டும் புறப்பட்டது மகிழுந்து.

“வாசிகசாலைக் கட்டடத்திற்கு நேர் ஒழுங்கையில் பெரிய வேப்பமரத்தின் கீழுள்ள இரண்டாவது வீடு, அந்த வேப்பமரம் தான் எங்கள் ஓய்விடம், படிக்குமிடம், அரட்டை அடிக்குமிடம் எல்லாமே.” எனத் தந்தை சொன்னது அவள் நினைவில் வந்தது.

அதேபோலவே, வாசிகசாலைக் கட்டிடம் அவள் பார்வையில் பட்டது.

நேரெதிரே திரும்பியதும் எங்குமே வேப்பமரத்தைக் காணவில்லை. மனம் உடைந்து போனது சுமுகிக்கு.

‘ஒரேமாதிரியான இவ்வீடுகளில் அப்பாவோடு கூடப்பிறந்தவர் எந்தவீட்டில் இருக்கிறாரோ!?’அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மகிழுந்து நின்றது. குதூகலக் குரல்கள், அவளை எதிர்பார்த்தபடி அனேக பெண்கள், அயல் வீட்டுக்காரர்களும் அவளுக்காய் காத்திருந்தனர் போலும். சங்கடமும் சஞ்சலமுமாய் இறங்கினாள் சுமுகி.

அவள் வயதையொத்த ஒரு பெண்ணும் முதிய பெண்ணொருவரும் அவசரமாய் முன்னால் விரைந்து வந்தனர். அந்தச் சின்னப்பெண் உறவுடனும் உரிமையுடனும் கைபற்றி “வாங்க மச்சாள்!” என்றதும், அவள்தான் அத்தையின் மூத்தபெண் கானகி என்பதைப் புரிந்து கொண்டாள்.

“கானகி!”என்றாள் சினேகமாய்.

“எப்படிக் கணடுபிடிச்சீங்க மச்சாள்?” வியந்தாள் அவள்.

“கானகிக்கு இடது கன்னத்தில மச்சம் இருக்கிறதெண்டும் சிரிச்சாக் கன்னத்தில குழிவிழும் எண்டும் அப்பா சொன்னார். இதுவரை எந்தத் தொடர்பும் இல்லாததால, போட்டோவிலகூடப் பாத்ததில்லை உங்களை” என்றாள் இவள், குறையாக.

அந்த முதிய பெண்மணிதான் தனது அத்தை என்பதையும் உடனே தெரிந்து கொண்டாள் சுமுகி. காரணம், தந்தையின் சாயல் அப்படியே அத்தையிடம் இருந்தது. அவரது பார்வை அவளது பார்வையுடன் கலந்து மீண்டது.

“ அ...த்தை” அவள் மெல்ல உச்சரிக்க முன்பு, அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவர், ‘ஓ’வென்று அழத்தொடங்கினார். அதனைக்கண்ட கானகியும் கண்ணீர் வடிக்க,

“அம்மா! இதென்ன றோட்டில நிண்டு? உள்ள போங்கோ!” என்று கூறியது அவளது மகிழுந்தின் பின் சைக்கிளில் வந்தவன் தான்.

பிடித்தகையை விடாமல் பற்றி அழைத்துச் சென்ற கானகியுடன் சேர்ந்து நடந்தாள் சுமுகி. அதற்குள் வாண்டுகள் இருவர் ஓடி வந்தனர்.

‘சின்னவர்கள் என அப்பா சொன்னது இவர்களைத் தானோ!’ என நினைத்தவள், மென்மையாய்ப் புன்னகைத்தாள்.

அத்தையின் கனிவான நேசம், கானகியின் தோழமையுடனான பாசம், சின்னவர்களின் பிரமிப்பான பாசம் எல்லாமே வியப்பாகவும் விருப்பாகவும் இருந்தது சுமுகிக்கு.

“உன் அம்மா சொல்ற மாதிரி இல்லை அவ; மனசு எப்பவும் வெள்ளையாவே இருக்கும்.” தன் சகோதரி பற்றி அப்பா சொன்னவை நினைவில் வந்தது.

வீட்டின் முன்னால் பரந்துவிரிந்து நின்றது மாமரம். மாமரத்தின் கீழே வரவேற்புக்காய்க் கொட்டகை ஒன்று போடப்பட்டிருந்தது. நான்கைந்து கதிரைகள் சுற்றிலும் போடப்பட்டு அழகாய் இருந்தது.

கானகியின் கையணைப்பில் இருந்து விலகாமலே ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டாள் இவள். அருகில் இருந்த கதிரையில் கைப்பையை வைத்துவிட்டு பெரிய பையினுள் துளாவி சொக்லேற் பக்கற்றுகளை எடுத்துச் சிறியவாண்டுகள் இருவரிடமும் கொடுத்தாள். அவர்கள் சட்டென்று வாங்கி விடவிடவில்லை. ஒருவரையொருவர் பார்த்துவிட்டு அத்தையைப் பார்த்தனர். அத்தையின் தலை ஆட்டலுக்குப் பின்னரே வாங்கிக்கொண்டனர்.

“கண்ணம்மா! வீட்ல அம்மா நல்லா இருக்கிறாவா? அப்பா என்ன சொன்னார் தங்கம்?” என்றார் அத்தை.

“அம்மா நல்லா இருக்கிறா; அப்பா ரெண்டு நாள்ல வருவதாகச் சொன்னார்.” என்றாள் இவள்.

‘மனம் கொள்ளாத நேசத்தை இந்த அத்தை எங்கே தான் பதுக்கி வைத்திருக்கிறாரோ! இப்படி வார்த்தைகளில் அன்பைக்கொட்டுவது அத்தைக்கு மட்டுமே உள்ள தனிச்சொத்தோ!’ என, எண்ணுமளவுக்கு உபசரித்தார் அவளின் அத்தை.

அவசரமாய் உள்ளே சென்ற கானகி இரண்டு பெரிய தம்ளர்களில் சில்லிடும் தோடம்பழத் தண்ணியையும், தட்டொன்றில் மொறுமொறுப்பான முறுக்குகளையும் கொண்டு வந்து கொடுத்தாள். முறுக்கை வேண்டாம் என்றுவிட்டுத் தோடம்பழத் தண்ணியை மட்டும் வாங்கிக் கொண்டாள் சுமுகி.

தூரத்தில் நின்ற அந்த நெடியவன், “கானகி, உன்மச்சாளுக்கு இந்தச்சாப்பாடெல்லாம் பிடிக்குமோ என்னவோ! வெளிநாட்டில பிறந்து வளந்தவங்களுக்கு இதெல்லாம் சரிவருமா?” என்றான், அடங்க மறுத்த கேலியோடு.

‘இதைச் சொல்ல இவன் யார்?’ மனதில் முணுமுணுப்போடு அவனுக்கு ஒரு முறைப்பைக் கொடுத்தாலும், சட்டென அருகில் நின்ற கானகியிடம் முறுக்குத் தட்டை வாங்கிக்கொண்டவள், இரண்டு முறுக்கை எடுத்துவிட்டுத் தட்டைத்திருப்பிக் கொடுத்தாள்.

அவர்களையே பார்த்திருந்த நெடியவன் உதடுகளில் சின்னதாய் ஒருசிரிப்பு! அதைச் சுமுகியும் காணாமல் இல்லை. ஓரக் கண்ணால் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“கானகி, யாரோவெல்லாம் என்னைப் பற்றிக் கதைப்பதை நான் விரும்பவில்லை”என்றுவிட்டாள் சுமுகி. மறுநொடி, எதுவும் பேசாமல் போய்விட்டான் அந்த நெடியவன்.

அத்தை அவசரமாய் சமையல் செய்தார். ஊர்க்கோழி இறைச்சிக்கறி மிக அருமையாக இருந்தது. மாமரத்தின் கீழ் கதிரைகளைப் போட்டுவிட்டு அமர்ந்திருந்தனர் அனைவரும். அருகில் இருந்து பார்த்துபார்த்துப் பரிமாறினார் அத்தை. அத்தையின் கண்களில் அபரிமிதமான அன்பு கொட்டிக்கிடந்தது. அப்பா தன் உறவுகள் மீது கொண்டிருக்கும் பாசத்தின் பலம் என்னவென்பது சுமுகிக்கும் புரிந்தது.

சாப்பிட்டு முடிந்ததும் கானகியுடன் அமர்ந்திருந்த சுமுகி, “கானகி நான் வரும்போது என் காருடன் வந்துவிட்டு, பின்னர் கூட உள்ளே வந்து நின்றாரே, யாரது? என்றாள்.

“அண்ணா...”என்றாள் அவள்.

“அண்ணாவா?” என்றாள், வியப்புடன் சுமுகி.

“உங்களுக்கு அண்ணாவும் இருக்கிறாரா?”

“ஓம்...” என்ற கானகி, “எங்களோடு கூடப் பிறக்கவில்லை. ஆனால், நாங்கள் அவன் மீதும் அவன் எங்கள் மீதும் அளவில்லாத அன்பு வைத்திருக்கின்றோம். அவன் எங்கள் பெரியப்பாவின் மகன் சுந்தர் அண்ணாவோடு கூடப் படித்தவன். நாட்டுச்சூழலின் இக்கட்டான நேரத்திலும் இருவரும் ஒன்றாகவே இருந்தவர்கள். ஆனால், காலன், சுந்தர் அண்ணாவை அவசரமாய் எடுத்திட்டான்.” என்று கூறி நிறுத்தியவள், தன் தந்தையும் சேர்த்து இழந்த அன்றைய கொடும் வேதனையில் அமைதியானாள்.

மைத்துனியின் கரத்தை அன்பாகப் பற்றிக் கொண்டாள் சுமுகி. ஆனாலும் ஆறுதல் என்று எதைச் சொல்வது? தடுமாறிப் போனாள் அவள்.

“கடைசி யுத்தத்தில், இவனுடைய பெற்றவர்களும் ஒரே சகோதரியும் இறந்துவிட்டனர்; எங்கட அப்பாவும் அதில தான்...” தொண்டை அடைத்தது கானகிக்கு. அழகாகச் சமாளித்தாள்.

“தனியே நின்றவனை அம்மாதான் எங்களோடு இருக்குமாறு கூப்பிட்டார். நான்கு வருடங்களாகிற்று. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. எங்களுக்காகவே தோட்டத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான். அவனும் இல்லாவிட்டால் நாங்கள் என்ன பாடுபட்டிருப்போமோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.”

வருத்தத்தை அடக்கி அழும் குரலில் சொல்லி முடித்த மைத்துனியை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள் சுமுகி.

அவர்களின் துயரைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், ஆறுதலாகச் சில வார்த்தைகளைப் பகிர முடிந்தாலும், தினம் தினம் மனதுள் வெந்து போகிறார்களே!

‘அதை யாரால் தணிக்க முடியும்? காலம்?’

அவ்வளவு இலேசில் முடியும் என்று இவளுக்குத் தோன்றவில்லை. காலமும் இவர்களிடம் தோற்றுத்தான் போகும்.

‘உயிர் இருக்கும் வரையில் போட்டு வாட்டி வதைக்கும், இந்த நினைவுகள்!’ இவள் மனமும் எரிந்தது.

அந்த நெடியவனுக்குப் பின்னால் இப்படியொரு சோகத்தையும் அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான்.

இப்போதைக்குப் பேச்சை மாற்றினாள் சுமுகி.

 

Rosei Kajan

Administrator
Staff member
#3

அத்தையின் ஊரில் அன்று இரவு மின்சாரத்தடை. சிறிய சிறிய குப்பிவிளக்குகள் இரண்டு எரிந்து கொண்டிருந்தன. இப்படியொரு இருட்டைக் காணாத சுமுகிக்கு அந்தச்சூழல் ஒருவித அச்சத்தைக் கொடுத்தது என்னவோ உண்மைதான்.

சிறிது நேரம் சென்றிருக்கும், தோட்டத்தில் வேலை செய்யும் சாமி ஐயா பெற்றோல்மாக்ஸ் ஒன்றைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார்.

“அம்மா, அண்ணன்தான் பெற்றோல்மாக்ஸ் கொழுத்திக் குடுத்துவிட்டிருக்கு” கானகிதான் தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஓமோம், உன்ர அண்ணன் யாருக்கு எப்ப என்ன செய்யவேணும் எண்டதைப் பாத்து பாத்துச் செய்யிறதில கெட்டிக்காரன்!” என்றார், அவள் அத்தை பெருமையாய்.

இரவின் கருமையைக் கிழித்தது அந்தப் பெற்றோல்மாக்ஸ் வெளிச்சம்.

சுற்றி அனைவரும் அமர்ந்திருந்து சாப்பிட்டபோது, அந்தக்கணத்தில், எத்தனையோ பார்ட்டிகளில் வராத நெகிழ்வு சுமுகியின் மனதில் உதித்தது.

“அத்தை, நீங்களும் சாப்பிடுங்கோ!” என்றபடி ஒரு தட்டை எடுத்துச் சாப்பாட்டைப் போட்டே கொடுத்தாள் சுமுகி.

அவள் முகத்தில் வளித்து நெட்டிமுறித்து திருஷ்டி கழித்த அத்தை, “என் அண்ணாவின் பாசத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லை என் மருமகள்”என்றார். இப்படியே கலகலத்தபடி எல்லோரும் சாப்பிட்டுவிட்டு எழுந்துகொண்டனர்.

ஆனால், அந்த அவன் மட்டும் சாப்பிட வரவில்லை.

சுமுகிக்கு மனம் பரபரத்துக்கொண்டே இருந்தது. அவள் மதியம் கோபமாகச் சொன்னதால்தான் அவன் சாப்பிட வரவில்லையோ? தாங்க முடியாது கானகியிடமே கேட்டு விட்டாள்.

“ஏன் கானகி, உங்கட அண்ணா சாப்பிடவில்லையே, வரமாட்டாரோ”என்ற சுமுகியிடம், “அண்ணாவா? தோட்டக்காவலுக்காக அங்கேயே படுத்திருவார். யாராவது வந்து சாப்பாடு கொண்டு போவார்கள்”என்றாள், கானகி.

“இந்தக் குளிரில் எப்படித் தோட்டத்தில் படுப்பார்?” என்றவளுக்கு, “அதெல்லாம் அண்ணாவுக்குப் பழகிப்போச்சு. பாவம், இந்தக் குடும்பத்துக்காக அவன் படுறபாடு கொஞ்சமில்லை...”என்ற கானகியின் வார்த்தைகளில் அண்ணன் மீதான பாசம் புரிந்தது.

சற்று நேரத்தில் படலை திறக்கும் சத்தம்.

“அம்மா அம்மா...அண்ணா...” சின்னவர்கள் தான் சத்தமிட்டனர்.

“என்னப்பா... வர்றியோ, தெரியேல்ல என்று நினைச்சன் வந்திட்டாய்” என்ற அத்தையிடம்,

“சாப்பிட்டுட்டுப் போகலாமென்று வந்தன் அம்மா...” என்று அவன் சொன்னது தெளிவாகக் கேட்டது.

“சரி வா, சாப்பிட...” அத்தை சாப்பாடு எடுத்துவைக்கச் சென்றார்.

“எல்லாரும் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டபடியேதான், தானும் சாப்பிட்டு முடித்தான் அவன்.

அவன் வந்த நொடிமுதல் வீடு அமைதியானதைத் துல்லியமாய் இவளால் உணர முடிந்தது.

அறைவாசலில் கானகியுடன் அமர்ந்திருந்தாள் சுமுகி. அந்தப் பக்கமாக வந்தவன் நேருக்கு நேராக நன்றாகப் பார்த்தான் சுமுகியை. ‘இந்தப் பார்வைக்கெல்லாம் நான் பயமில்லை...’ என்பது போல அமர்ந்திருந்தாள் சுமுகி.

“கானு, உள் ரூமில இருக்கிற கட்டில்ல படுக்கச்சொல்லு உன் மச்சாளை. பிறகு உங்களோட படுக்கிறன் எண்டு நிலத்தில படுத்து உடம்புவலியை இழுக்கவேண்டாம் எண்டு சொல்லு!”என்றான், அவள் மீது அக்கறையும் வீட்டவன் என்ற உரிமையும் கலந்து.

சட்டென்று அவனைப் பார்த்த சுமுகி, “அப்பிடி உடம்புவலி வந்தாலும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தரமாட்டன் எண்டு சொல்லு கானகி!”என்றாள் வெடுக்கென்று. ஒருநாள் பழக்கத்தில் மைத்துனிமாருள் பேச்சு ஒருமைக்குத் தாவியிருந்தது.

கானகி இருவரையும் சற்றே சங்கடத்தோடு பார்த்தாள். எப்போதும் தமையன் சொல்வதைத் தட்டாத அந்த வீட்டில் இன்றுதானே மறுபேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், சுமுகியின் பதிலில் எவ்விதச் சுணக்கமும் இல்லையென்ற கணக்கில் தங்கையிடம் திரும்பினான் அவன்.

“அப்படியென்றால் சரிதான்…” என்று கானகியிடம் சொன்னவன், கணத்திலும் குறைவாக, சுமுகியை மென்மையாய் முறைத்தான் தான். அதை உணர்ந்து அவள் பதில் முறைப்பு வீச முதல், தாயிடம் திரும்பி, “அப்ப நான் போய்ட்டு வர்றன்மா...”சென்று விட்டான்.

அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த இவள் அத்தை, விழிகளில் ஏக்கம் பரவச் சின்னதாய் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுமுகிக்கு வியப்பாய் இருந்தது.

‘வேற்று வீட்டைச் சேர்ந்த ஒருவன் எத்தனை இயல்பாய் இங்கு பொருந்தியிருக்கிறான்?’ என்ற எண்ணமே, அவனைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் போன்றதொரு உணர்வையும் ஏற்படுத்தியது.

அதற்குமுதல், அத்தை வீட்டவர்கள் பற்றியே ஒன்றும் தெரியாதே! அதையும் அறிந்துவிட வேண்டும் என எண்ணியபடியே, தூங்குவதற்கு ஆயத்தமான கானகியை எழுந்து அமரச் செய்தாள்.

“கானகி, உங்களை உங்க வீட்லஎப்பிடிக் கூப்பிடுவாங்க?” முதல் கேள்வி.

“கானகி எண்டு தான், ஏன் மச்சாள்?” என்றாள் அவள்.

“நான் உங்களைக் கானுன்னு கூப்பிடலாமா?” துளித் தயக்கத்தோடு கேட்டவளை அன்பாகப் பார்த்தாள் கானகி.

அதோடு, “ஐயோ மச்சாள்! இதுக்கெல்லாம் யாராவது கேட்டிட்டு இருப்பீனமா? பேசாமக் கூப்பிடுங்க...” என்று சொன்னவளின் தோள்களை இறுக்கி அணைத்துக்கொண்டாள் சுமுகி.

இச்செயல்கள் பழக்கமற்றதால் புழுப்போல நெளிந்தாள் கானகி.

அடுத்து வந்த சிறுபொழுது அவள் அத்தை வீட்டினர் பற்றி அறிவதில் கழிந்தது.

கொட்டாவி விட்டாள் கானகி.

“மச்சாள்...நீங்க அறைக்குள்ளையே தூங்குங்கோவன்.”

“ஏன்...உனக்குத் தூக்கம் வருதோ!” என்றபடி எழுந்து, ‘சற்றுமுன் அவனும் அறைக்குள் தூங்கட்டும் என்றானே!’ என்ற எண்ணத்தோடு அறைக்குள் எட்டிப்பார்த்தாள் சுமுகி.

அங்கே, இரும்புக்கட்டிலில் புதிதாகத் தலையணை, படுக்கைவிரிப்பு, போர்வை என எல்லாமே அழகாய் வைக்கப்பட்டிருந்தது.

அவள் பார்வையைத் தொடர்ந்து பார்த்த கானகி, “மச்சாள், இந்தக் கட்டில் இதுவரை தோட்டத்தில கிடந்தது. அண்ணன் உனக்காக இங்க கொண்டுவந்து போட்டிருக்கிறான்” என்றாள்.

கேட்ட சுமுகிக்கு நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ செய்தது. இதமான குறுகுறுப்பொன்று.

“ஓ!” என்று வாயுரைக்க, ‘இதுவரை அந்த ரௌடி படுத்த கட்டிலிலயா படுக்கப்போறன்?’ மனம், ஒருவித சிலிர்ப்போடு கேள்வி கேட்டு வைத்தது.

முதல் பார்வையில் ‘ரௌடி’ என்று மனதார விளித்தவளுக்கு இந்த இதத்தை உணர்ந்ததும் நிச்சயம் ஆச்சரியம் தான்.

‘இதென்ன? என் மனம் ஏன் இத்தனை சஞ்சலம் அடைகிறது?’ வியப்பாகத்தான் இருந்தது.

‘அவன்வாழ்வில் நடந்துவிட்ட கொடும் இழப்புகள் பற்றி அறிந்ததில் வந்த பரிதாபமா?’ மனதின் கேள்வியைப் பிரித்துப் போட்டுப் பதில் தேட முனையாது கானகியிடம் திரும்பினாள்.

“உங்கண்ணா பேரென்ன?” சாதாரணமாக வினவுவது போல கேட்பதற்குச் சற்றே முயலவேண்டி இருந்தது. ஏனோ, குரல் அடைத்துக்கொண்டது.

“சித்தார்த்...”

‘சித்தார்த்’ சொல்லிப்பார்த்தாள். சற்றுமுன் உணர்ந்த அதே இதமும் உவகையும் பற்றிக்கொண்டது. அதுவே முகத்திலும் டாலடிக்க, கானகியைப் பார்க்கவே தடுமாறினாள்.

“ஓ! நல்ல பெயர்!” என்றவளுக்கு, அந்தப் பெயருக்குரியவன் தோற்றம் தான் மனக்கண்ணில்!

கருநிறக்கண்ணனாய் கருகருருவென்ற சுருண்டமுடியும், தீட்சண்யமான கண்களும், சீரான நாசியும், அளவான உதடுகளுமாய் அவனது முகத்தோற்றம் சட்டென கண்முன்னால் வந்து போனது. ரௌடி எனத்தோன்றியவன் இக்கணம் அழகனாக உருமாறினான், சுமுகியின் மனதில்.

‘எப்படி?’ அறிவுகெட்ட மனச்சாட்சி இடையிட்டு வம்புக்கிழுத்தது.

‘அட போப்பா! இதிலெல்லாம் ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க முடியுமா என்ன?’ மனச்சாட்சியின் வாயை அடைத்துவிட்டு, “சரி நீ தூங்கு கானு, நானும் தூங்கப்போறன்...” மைத்துனியிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்து கட்டிலில் சாய்ந்தவள், தலைவைத்துப் படுக்கும் இடத்தை கைகளால் வருடிப்பார்த்தாள். அந்த ரௌடியின் நினைவுகளின் குறுக்கிடலுடன் தான் கண்ணயர்ந்தாள்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#4


பகுதி 2மேகங்களின் நடுவில் புகைமூட்டம்!

அசைந்து அசைந்து நகர்கிறாள் சுமுகி! அந்தரத்தில் தவிப்பது போல பதைபதைக்கிறாள்! எங்கிருந்தோ ஒற்றைக்கரம் ஒன்று நீண்டு வருகிறது. அக்கரங்களை இறுகப்பற்றிக் கொள்கிறாள் அவள். தன்னோடு சேர்த்து அவளையும் எங்கோ ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றன அக்கரங்கள். மேலே மேலே செல்லும் ஆனந்தம் அவளுக்குள் அலைபாய்கிறது!

அக்கணம், கலகலவெனப் பலகுரல்கள்.

‘ஓ! சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டேனா!’ எண்ணங்களினூடே அந்தக் கரங்களைத் தேடுகிறாள். அருகில் காணவில்லை. சில்லிட்டுப்போகிறது அவளிதயம்.

அவசரமாய் கண்களைத் திறக்கிறாள் சுமுகி. தனியே கட்டிலில் படுத்துக் கிடந்தாள்.

“அட... கனவு! விடிஞ்சிட்டு...” எழுந்து வெளியே வந்தாள்.

சற்றுத்தொலைவில் மாட்டுக் கொட்டகையில் இருந்தனர் அனைவரும். கண்களைக் கசக்கியபடி சிறு குழந்தைபோல அவள் நின்ற தோற்றம் அனைவரையும் சிரிக்க வைத்தது என்றால் அவனை மட்டும் வியக்க வைத்தது. கண்களால் களவாடி இதயத்தில் நிரப்பிக்கொண்டான், அவளை.

ஒருநொடிதான், இயல்பாகி விட்டான்.

ஆனால், சுமுகியோ அவனைப் பார்க்கவில்லை, காரணம், அவன் கையில் நெளிந்த கன்றுக்குட்டி! அதை மார்போடு அணைத்து கரங்களால் தழுவிக்கொண்டிருந்தான். வெள்ளை நிறத்தில் மண்ணிறம் கலந்த கன்றுக்குட்டி அவனது கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்தது.

நிமிர்ந்து பார்த்தாள். சித்தார்த்தின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு. அன்பு காட்டுவதில் ஆடுமாடுகள் கூட அடக்கம் தானே? அக்கணம் அவன் காந்தக் கண்களுக்குள் தான் சிறைப்படுவது போலொரு எண்ணமும் சுமுகியை ஆட்கொண்டது.

“எங்கட வெள்ளச்சி கன்று போட்டுவிட்டது!”சின்னவர்கள் சத்தமிட்டனர். இவர்களும் சுதாகரித்து விட்டார்கள்.

ஒரு பசுக்கன்றின் வரவு இவ்வளவு சந்தோசத்தைக் கொடுக்கும் என்பது அவளுக்குத் தெரியாது. தங்கள் வீட்டிற்கு ஒரு புது உறவு வந்துவிட்டதுபோல ஆர்ப்பரித்தனர், அனைவரும்.

“கானு, நான் ஒரு ஃபோட்டோ எடுக்கவா?” என்ற சுமுகி, யாரும் பதில் சொல்லும் முன்னர் அவசரமாய் ஓடிச்சென்று தனது புகைப்படக்கருவியை எடுத்து வந்தாள்.

அந்தக் கன்றுக்குட்டியை அனைவரும் வைத்திருக்க அத்தனையையும் படமாக்கினாள். சித்தார்த் எதிர்பார்க்காத தருணத்தில் அவன் அறியாத வண்ணமே அவனைப் படம்பிடித்தாள். இரண்டு நாட்கள் ஷேவ் செய்யப்படாத குறுந்தாடியுடன் கலைந்து கிடந்த முன் சுருட்டைமுடியுமாக இருந்தான் அவன்.

ஆனால், சிரிப்பே இல்லாத அவனது அந்தத் தோற்றம் சுமுகியின் மனதில் ஓவியம் போல பதிந்து போனது.

‘இந்த அழகான முகத்தில ஏன் இப்படி ஒரு கடுமை? இவனுக்குச் சிரிக்கவே வராதோ?’ என எண்ணியபடி, கையிலிருந்த புகைப்படக் கருவியை கானகியிடம் கொடுத்துவிட்டு, அவன் கரத்திலிருந்த கன்றுக்குட்டியை வாங்குவதற்காக கையை நீட்டினாள். கன்றுக்குட்டியும் இவள் கரத்துக்கு மாறியிருந்தது. அதுமட்டுமா? அவ்வேளை இவளுள் அப்படியொரு அதிர்வு!

ஆம்! அதிகாலைப்பொழுதில் அவள் கனவில் வந்த அதேகரங்கள். அவளை இறுகப் பற்றியவாறு உயரத் தூக்கிச்சென்ற அதே கரங்கள், அப்படியென்றால் அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரன் சித்தார்த். அவளை அள்ளி அணைத்த கரங்கள் சித்தார்த்தினுடையவை!?

‘அதிகாலைக் கனவு பலிக்குமாமே’ எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். இதழ்களை அலங்கரித்தது சின்னப்புன்னகை.

இதுவரை அவள் உணராத உணர்வுகள் எல்லாம் கண்டபடி ஆட்கொண்டது அவளை. அங்கு நிற்க முடியவில்லை. கன்றுக்குட்டியை அருகில் நின்ற கானகியிடம் கொடுத்துவிட்டு மௌனமாய் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அக்கணம், அவனைச் சிரிக்க வைத்துப் பார்க்கவேண்டும் என்ற தவிப்பே அவளுள் அதிகமாய் இருந்தது. மூளையில் ஏதோ பொறி தட்டியது, அவள் இதயத்தில் சித்தார்த் ஆழமாய் வேரோடுகிறானே, ஏன்?

அன்று பகல் பொழுது சுமுகியின் அப்பா வந்து விட்டார். அவரைக்கண்ட போது அத்தை அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தன் வாழ்வில் வந்த துயரங்கள் எல்லாம் அப்போது வந்ததுபோல அத்தை அழுத அழுகை அனைவரையும் கண்ணீரில் நனைத்தது.

இவையெல்லாம் புதிய அனுபவங்களாக இருந்தன சுமுகிக்கு. உறவுகள் இத்தனை ஆழமானதாக இருக்கும் என அவள் இதுவரை எண்ணியதோ கண்டதோ இல்லை. அம்மாவின் சொந்தங்கள் எனப் பலபேர் உள்ளனரே தவிர அவர்களுக்குள் இவ்வளவு நேசத்தைக் கண்டதில்லை.

அப்பாவிற்குப் பிடித்தவைகளை வாங்கி வரச்செய்து தன் கையால் சமைத்துப் பரிமாறினார் அத்தை.

இரவு வெகுநேரம் வரை அத்தையும் அப்பாவும் கதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள் சுமுகி. அன்பின் ஆழமான துளைகள் இருவரது பேச்சிலும் ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தாள்.

சின்ன வயதின் குறும்புகள், மனதை அறுத்த கவலைகள், எதிர்கால ஏக்கங்கள் என எல்லாமே அவர்களின் பேச்சில் உலாவந்தன. பேச்சின் நடுவே சித்தார்த்தைப் பற்றியும் சொல்ல மறக்கவில்லை அத்தை.

“என் வயிற்றில் பிறந்த மகனாக இருந்தால் கூட என் மீதும் என் பிள்ளைகள் மீதும் இவ்வளவு அன்பு கொண்டிருப்பானோ தெரியாது அண்ணா. என் பிள்ளைகள் தங்கட அப்பாவையும், அவன் தன் பெற்றவர்களையும் ஒரே இடத்தில் ஒரே பதுங்குகுழியில் தான் பறிகொடுத்தனர். கடவுள் ஒன்றைப் பறித்து ஒன்றைக் கொடுத்துவிட்டான்!” என்றார், அத்தை அழுகையோடு. அத்தை சொன்ன விடயங்களே சித்தார்த் மீது சுமுகிக்கு இருந்த மதிப்பும் நேசமும் இன்னும் அதிகரிக்க வழி செய்தன.

தங்கையை, அவளின் கஷ்டகாலத்தில் அருகில் நின்று தாங்க முடியவில்லையே என்ற வருத்தம் சிவபாதத்தை வாட்டி எடுத்தது. மனைவி துர்க்காவின் நச்சரிப்பும் கூட ஒரு காரணம் தான். குடும்ப நிம்மதிக்காய் அவர் பல விடயங்களில் அமைதியாய் இருந்துவிட்டதன் கொடுமைகளில் ஒன்றுதான் இதுவும் என எண்ணியவர், எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தார்.

இரவு மணி இரண்டைத் தாண்டிய போதுதான் இருவரும் படுக்கைக்குச் சென்றனர்.

மறுநாள், பின்னர் வருவதாகக் கூறி மீண்டும் தனது நண்பனின் வீட்டிற்குச் சென்றுவிட்டார் சுமுகியின் அப்பா. சுமுகி இங்கேயே இருப்பதாகக் கூறியதுடன், தங்கையின் பிள்ளைகளும் சுமுகி இங்கேயே நிற்கட்டும் என்றதும் சரியென்று விட்டுச்சென்றார்.

அன்றையதினம் பக்கத்து வீட்டுக் குமரன் அண்ணாவின் குழந்தையின் முப்பத்தோராம் நாள் என்பதால் அனைவரும் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அத்தை அதிகாலையிலேயே சமைப்பதற்காகச் சென்றுவிட்டார். அங்கேதான் எல்லோருக்கும் மதியச்சாப்பாடு.

“நீயும் சாப்பிட வந்திடு, இல்லாட்டி குமரன் கோவிச்சுக் கொள்ளுவான்,” என சித்தார்த்திடமும் அத்தை சொன்னது சுமுகியின் காதுகளில் விழுந்தது.

குமரன் அண்ணாவும் சித்தார்த்தும் நல்ல நண்பர்கள் என்பது கானகி சொல்லி அறிந்துகொண்டாள். ‘கட்டாயம் சித்தார்த் சாப்பிட வருவான்’ என எண்ணியபோது, இனம்புரியாத இனிமை ஒன்று நாளங்களில் பரவியது.

 

Rosei Kajan

Administrator
Staff member
#5
கானகியும் சுமுகியும் சின்னவர்கள் இருவரும் தயாராகி, செல்வதற்கு ஆயத்தமானபோது வீட்டிற்கு வந்தான் சித்தார்த். அப்போது இவர்களைக் காணவில்லையே எனப் பார்ப்பதற்காக அத்தையும் வந்திருந்தார். சித்தார்த்தின் பார்வை சுமுகியின் மீது படிந்து அவசரமாய் கானகிக்குத் தாவியது.

சுமுகியின் வெளிர்நீல நிற சல்வார் ஒன்றைப்போட்டு, அவளது ஆபரணங்களையும் அணிந்திருந்தாள் கானகி.

“அம்மா, கானகி ரொம்ப அழகா இருக்கிறா இல்ல!” என்றான் சித்தார்த் .

“ம்ம்...இந்தக்கலர் சுரிதார் அவளுக்கு எடுப்பா இருக்கு!” என்றார் தாயார்.

அதன்பின் தன்னை ஏறெடுத்தும் பார்க்காத சித்தார்த் மீது சுமுகிக்கு கொள்ளை கோபம், அவளும் தான் அழகாக இருக்கிறாள், ‘அவனுடைய கண்ணுக்கு அது தெரியவில்லையோ?’ கானகி மீது சற்றுப் பொறாமை கூட உண்டானது,

மறுநிமிடமோ, “மச்சாள், உன் சுரிதார் என்னை அழகாக்கிவிட்டதாம்!” வெகுளியாய் சொன்ன கானகியைப் பார்க்க, தன்மீதே கோபம் வந்தது, அவளுக்கு. நொடியில் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

“பாவம் கானகி, இவனெல்லாம் சொல்லாவிட்டால் என்ன? இந்த வெங்காயக் கலர் சல்வாரில் நான் நல்ல அழகு என்று அப்பா அடிக்கடி சொல்வாரே!” தனக்குத்தானே சொல்லிக்கொண்டவளாய் நடக்கத்தொடங்க, முதுகில் ஊசியால் குத்துவது போல தோன்றவும் சட்டெனத் திரும்பினாள்.

யன்னல் வழியாக அவளைத்தான் பார்த்துக்கொண்டு நின்றான் சித்தார்த். நாக்கை நீட்டி வெவ்வே என் பழித்துக்காட்டிவிட்டு அவசரமாய் திரும்பிக் கொண்டாள்.

குமரன் வீட்டில்...

பிஞ்சுக் கைகால்களுடன் செக்கச்செவேரென்று இருந்த குழந்தையைக் காணும்போது சுமுகிக்குள் ஒரு பரவசம். இப்படி அவள் இதுவரை கண்டதேயில்லை, அம்மா வழி சித்தியின் குழந்தைகளைக் கூட சில மாதங்களின் பின்னர் தான் கண்டிருக்கிறாள், குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். அதன் பிஞ்சு விரல்களை கையால் தொட்டுப் பார்த்து அதிசயித்துக்கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்ற சித்தார்த், “நீயும் இப்பிடித்தான், இருந்திருப்பாய்” என்றான்.

வெண்மையிலும் சற்று தூக்கலான மாநிறம் கொண்ட அவளது மேனி செந்நிறம் கண்டது, அவனது வார்த்தையில்.

குங்குமமென சிவந்தது முகம். அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. சிறிது நேரம் நின்றவன், செல்வதைக்கண்டதும் நிமிர்ந்தவள், அதிர்ந்தாள். நாக்கை வளைத்து உதட்டைக் குவித்து அவன் சிரித்த விதம் ஆச்சரியம் தந்தது அவளுக்கு. மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள். இவனது கேலிச்சிரிப்பு இத்தனை அழகென்றால்?

சாப்பாட்டிற்காக அனைவரும் பந்தியில் அமர்ந்திருந்தனர். சித்தார்த்திற்கு அருகில் ஒரு இடம் மட்டுமே இருந்தது. வேறு வழியின்றி அருகில் அமர்ந்துகொண்டாள் சுமுகி. தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டது. தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ அவளது குவளையில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டான்.

“அது என்னுடைய தண்ணீ!” கோபத்தோடு சொன்னாள் சுமுகி.

“அடடா! அதுதான் இனிக்கிறதோ?!” சிரிக்காமல் சின்னக்குரலில் கேட்டான் அவன். கோபத்துடன் அவனை முறைத்தாள் சுமுகி.

இப்படி, சின்ன சின்னச் சீண்டல்களோடு கடந்தது அன்றைய பொழுது.வறட்சியினால் காய்ந்து மண்ணில் தோன்றியிருந்த வெடிப்புகள் அனைவரையும் மழைக்காக கடவுளிடம் மன்றாடச் செய்திருந்தது.

அன்று, வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. பனையோலை விசிறி எல்லோர் கைகளில் நர்த்தனம் ஆடியது. சுமுகிக்கு அவ்வாறு விசிறுவது பழக்கமற்றதால் அருகில் இருந்து இருவருக்குமாக விசிறிக் கொண்டிருந்தாள் கானகி.

மதியப்பொழுது நெருங்கியது; திடீரென வானம் இருட்டியது; நிறைமாதக் கர்ப்பிணி போல பொலிவு கொண்டது; உஷ்ணம் நீங்கிட குளிர்கலந்த மெல்லிய காற்று வீசியது; உடலில் மயிர்த்துளைகள் குத்திட்டு நின்றன; மேற்கே இடி இடித்து மின்னல் மின்னியது!

ஊரே மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க, ஓட்டமும் நடையுமாகக் களிப்புடன் வந்த சித்தார்த், “அம்மா, மழை வரப்போகுது, உடனே செய்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.” என்றான்.

“ஓமையா, நீ சொன்னது போல இப்ப விதைச்சாத்தான் அறுவடைக்குச் சரியா இருக்கும்.” என்ற அம்மாவைப் பார்த்தவன், “என்னம்மா, வீட்டில யாரையும் காணேல்ல! சத்தமே இல்ல... எங்க?” என்றான்.

“எல்லாரும் பின்பக்கம் தோட்டத்திற்குப் போனதைக் கண்டன், பாரப்பா”என்றார் அவர்.

அவன் தோட்டத்திற்குப் போவதற்குள் இடியுடன் கூடிய மழை பொழியத் தொடங்கியது.

 

Rosei Kajan

Administrator
Staff member
#6
அண்ணன் வந்ததைக் காணாத சின்னவர்கள் இருவரும் மழையில் நின்று துள்ளி விளையாடத் தொடங்க, அவர்களோடு தானும் சேர்ந்து கொண்டாள் சுமுகி.

சடசடவெனப் பொழிந்த மழை பெருந்துளிகளாகி விழத்தொடங்கியது. கரங்களைக் குவளை போலச் சேர்த்து விழுந்த மழைநீரை அருந்திய வாண்டுகளைப் பார்த்து தானும் அவ்வாறே செய்த சுமுகியைக் கண்ட சித்தார்த்திற்கு வியப்பாய் இருந்தது. இருபதுவயதைக் கடந்துவிட்ட போதும் அவளது குறும்புத்தனங்களும் குழந்தைத்தனங்களும் அப்படியே தான் இருந்தன.

குதித்து விளையாடியபடியே மெல்லத் திரும்பிய சுமுகி தாங்கள் விளையாடுவதை உற்றுப் பார்த்தபடியே நின்ற சித்தார்த்தைக் கண்டுவிட்டாள். எதுவும் தோன்றாது பேசாமல் அப்படியே நின்றவள், சின்னவர்களைப் பார்க்க அண்ணனைக் கண்ட இருவரும் வீட்டை நோக்கி ஓட, தனியே நின்ற சுமுகிக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.

“கானகி, புதுமழை, விளையாடினது காணும், ஏதாவது வருத்தம் வந்தாலும் வரச்சொல்லு...” என்றான் தங்கையிடம்.

“மச்சாள், வாங்கோ வீட்ட போவம்.” என்ற கானகியிடம், “அதெல்லாம் ஒரு வருத்தமும் வராது, நான் இன்னும் கொஞ்சநேரம் விளையாடிப்போட்டு வாறன்.” என்றாள் வேண்டுமென்றே.

எதுவும் சொல்லாமல் நடந்தான் சித்தார்த். சங்கடத்துடன் அண்ணனையும் மைத்துனியையும் மாறி மாறிப் பார்த்த கானகி, ஓடிவந்து கையைப்பற்றி இழுத்துச் சென்றாள் சுமுகியை.

மறுநாள் காலை தலைவலியும் உடம்புவலியும் பேயாய் ஆட்டியது சுமுகியை. உடம்பு அனலாய் தகித்தது. எல்லோரும் எழுந்துவிட்ட போதும் சுமுகி பேசாமல் படுத்திருந்தாள். வழமையாக அவள் அதிக நேரம் தூங்குவதால் யாரும் எதுவும் கேட்கவில்லை. ஏதோ அலுவலாக உள்ளே வந்த சித்தார்த் குளிரினால் உடல் நடுங்க சுருண்டு படுத்திருந்த சுமுகியைக் கண்டுவிட்டுத் தாயிடம் சென்றுகூற, அவசரமாய் வந்தார் அவர்.

“என்னம்மா சுமுகி, என்ன செய்யுது?” என்றபடி கையினால் தொட்டபோது அதிர்ந்துபோனார்.

உடல் அனலாய் தகித்தது. உடனேயே காய்ச்சல் மாத்திரை, குளிர்பானம் சகிதம் சித்தார்த் வந்துவிட, சிறுபிள்ளை போல மாத்திரை விழுங்க அவள் அடம்பிடிக்க, சுமுகியை மருந்து போடவைப்பதற்குள் அவள் அத்தைக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

அறைவாசலில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், சித்தார்த். ஏனோ அவன் மனம் படபடவென இருந்தது. வீட்டில் யாருக்கேனும் வருத்தம் என்றால் அவனது மனம் சங்கடப்படுவது உண்மைதான். ஆனால், இன்று அதிகமாய் சங்கடப்படுவதாய் உணர்ந்தான். சுமுகியை உறங்கச் செய்துவிட்டு தாய் வெளியே வந்தபின்னர் தான் தோட்டத்திற்குச் சென்றான்.

மாலையில் நேரத்துடன் வீடு வந்த சித்தார்த் சுமுகியை எட்டிப்பார்த்தான். கண்மூடியபடி கட்டிலில் கிடந்த அவள் உறங்குவதாக நினைத்தவன், அருகில் சென்று அவளது நெற்றியில் கைதொட்டுப் பார்த்தான்.

சட்டென கண் திறந்த சுமுகி ஆச்சரியமாய் பார்க்க, சட்டென்று தன்னைச் சமாளித்தவனாய், “எப்பிடியிருக்கு?” என்றான்.

“பரவாயில்லை...” மெல்ல அசைந்தது அவளது உதடுகள்.

“மழையில விளையாட வேண்டாம் என்று அப்பவே சொன்னன். இப்ப விளங்குதா?” என்றான்.

அவனை முறைப்பாய்ப் பார்த்தவள், பேசாமல் திரும்பிப் படுத்துக்கொண்டாள். அவளை ஒரு முறை ஆழமாகப் பார்த்தவன், பெருமூச்சொன்றை வெளிவிட்டபடி பேசாமல் வெளியே சென்றுவிட்டான். திரும்பிப் பார்த்தாள் சுமுகி. அவனது முகத்தில் சிறு வாட்டம் தெரிந்தது. ‘எனக்குக் காய்ச்சல் என்றதும் சித்தார்த்திற்கு வலிக்கிறதோ?’ துள்ளியது உள்ளம்.

பார்வையால் முறைத்தாலும் அவள் மனமோ வேறு சொல்கிறதே! நிறுத்தி அவனுடன் பேசவேண்டும்போல மனம் தவித்தது சுமுகிக்கு.

தோட்டத்திற்குச் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தான் சித்தார்த். எல்லோரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளும் சுமுகி, தன்னிடம் மட்டும் முறைப்பதையும் வார்த்தைக்கு வார்த்தை பேசுவதையும் அவன் அறியாமல் இல்லை. விளையாட்டுப்பெண் என நினைத்தவன் அவசரமாய் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

மறுநாள் காய்ச்சல் ஓரளவு குறைந்திருந்தது. அறையைவிட்டு வெளியே வந்தாள் சுமுகி. வீடு மிகவும் கலகலப்பாக இருந்தது,

எதிரேவந்த அத்தையிடம், “என்ன அத்தை வீட்ல ஒரே கலகலப்பா இருக்கு?” என்ற சுமுகியிடம், “அதுவா, கானகியைப் பெண்பார்க்க வருகீனமம்மா”என்றார் அத்தை.

“ஓ! அப்படியா? எங்க அத்தை கானு?” என்றாள்.

“அவ கறவை மாட்டுக்குப் புல்லுப் போடப்போனா, வந்திடுவா, இரும்மா,” என்றார்.

“இல்லைத்தை, நானே போய்ப்பாக்கிறன்,” என்றபடி நடந்தவளைத் தடுத்து, “நேற்றுத்தான் பயங்கரமான காய்ச்சல், பேசாமல் படுத்துக்கொள்ளம்மா, உனக்கு வருத்தம் வந்தால் எனக்கு மனசு தாங்காது...” என்ற அத்தையிடம், “எனக்கு காய்ச்சல் போயிற்று அத்தை, நான் பாக்கிறன்…” என்றபடி நடந்தாள்.

மாலையில் பெண்பார்க்கும் படலம். காலையில் இப்படி வேலை செய்கிற கானகியைப் பார்த்ததும் வியப்பாக உணர்ந்தாள் சுமுகி.

‘பத்து நாட்களின் முன்னரே ஃபேஷியலுக்காய் ஆர்ப்பாட்டம் போடும் நாமும் இவர்களும் எவ்வளவு வித்தியாசத்தில்...’ என எண்ணினாள்.

கானகியின் அருகில் சென்றவள், “ஏய், சொல்லவே இல்லை, உன்னைப் பெண்பாக்க வருகீனமாமே! எப்பிடி இருப்பார் உன்னோட ஆள்?” என்றாள்.

வெட்கத்தில் தலை கவிழ்ந்த கானகியோ, “சும்மா இருங்க மச்சாள்...” என்றாள்.

மதியம் பரபரப்பாக சமைத்து முடித்த அத்தை எல்லோருக்கும் உணவு பரிமாறிவிட்டு, “இந்த சித்தார்த் இன்னும் வரவில்லையே!” எனப் பார்த்தபடி இருந்தார். அவனது அலைபேசியும் நிறுத்தப்பட்டிருந்தது.

வருவான் வருவான் என்று பார்த்து பார்த்தே நேரம் கழிய, தானே உணவை எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு வருவதாகக்கூறிப் புறப்பட்டார்.

அவ்வேளை அங்கே வந்த சுமுகி, “அத்தை, வீட்ல இவ்வளவு வேலை இருக்க, நீங்க போனா எப்பிடி? நானே ஆரூரனையும் கூட்டிக்கொண்டு போயிற்றுவாறன்,” என்றாள்.

“நீயா? வேண்டாம்மா; நேற்றெல்லாம் சரியான காய்ச்சல், தோட்டத்துக்கு நடந்து போய்வர அலுப்புக்குத் திரும்பவும் வந்தாலும் வந்திடும்.”என்றார்.

“இல்லை அத்தை, எனக்கு இப்ப ஒண்டுமில்லை; நானே போட்டுவாறன்; பிளீஸ்...தோட்டம் பாக்க ஆசையாகவும் இருக்கு.”என்றாள் விடாது.

“சரிடாம்மா!” அரைமனதாய் சம்மதித்த அத்தை, சாப்பாட்டைப் போட்டு எடுக்கு முன்னர், உடைமாற்றி ரெடியாகி வந்து நின்றாள் சுமுகி.

பல தடவை ‘கவனம்...’ எனக்கூறி கூடையைக் கொடுத்து, கூடவே ஆரூரனையும் அனுப்பிவைத்தார் பெரியவர்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
இறுதிப்பகுதி ...வெயில் தகித்தது. சின்னக்குடைத் தொப்பியை தானும் அணிந்து, ஆரூரனுக்கும் அணிவித்தாள் சுமுகி.

சித்தார்த்தை உடனே பார்க்க வேண்டும் போல மனம் ஆர்ப்ப ரித்தது. அன்று காலையில் இருந்து அவனைப் பார்க்காதது என்னவோ போல இருந்தது. அவளது எண்ணங்கள் அவளைவிட வேகமாய் சென்று சேர்ந்தன, சித்தார்த்திடம்.

முதல் நாள் மாலையில் முகம் திருப்பியதற்காக அவனிடம் எப்படி எல்லாம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டாள். அவனது நினைவுகள் சுகமாய் மனதை நிறைத்திருக்க வெயிலின் உஷ்ணமோ, நடையின் வலியோ எதுவுமே தெரியவில்லை அவளுக்கு.

ஆரூரன் வழிகாட்டிய பாதையில் குதூகலமாய் அவனோடு கதை பேசியபடி நடந்து சென்றவளின் மனமோ, சித்தார்த்தை எப்போது பார்ப்பது என அடித்துக்கொண்டது.

இருமருங்கிலும் பூவரசுமரங்களால் நிறைந்து வரவேற்ற தோட்டம் அவளை வியந்து பார்க்க வைத்தது.

படலையின் அருகில் வந்ததும், “சுமுகி மச்சாள், செருப்பைக் கழற்றுங்க, தோட்டத்துக்குள்ள செருப்பு போடக் கூடாது!” என்ற ஆரூரனின் வார்த்தையைக்கேட்டு அவசரமாய் செருப்பைக் கழற்றினாள்.

ஒருகையில் சாப்பாட்டுக் கூடையும் மறுகையில் செருப்புமாக வாய்க்கால் வரம்பில் நடந்து வந்த சுமுகியை தூரத்திலேயே கண்டதும் சிரிப்பிற்குப் பதில் கோபமே வந்தது சித்தார்த்திற்கு.

‘இந்த வெயிலில் இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறாளே, அம்மாவிற்கு ஏன் இந்தவேலை? நேற்று முழுதும் காய்ச்சலும்...’ எண்ணமிட்டவாறே, வெண்டிச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்ததை, அப்படியே விட்டுவிட்டு விரைந்து வந்தான்.

தமையன் வேகமாக வருவதைக் கண்டதும் அப்படியே அசையாமல் நின்ற ஆரூரனைப் பார்த்துத் தானும் நின்றாள் சுமுகி.

“சுமுகி மச்சாள், அண்ணா கோபமா வாறார், எனக்குப் பயமா இருக்கு!” என்றான், சின்னவன்.

“என்னடா பயம்? பேசாமல் நட!” என்ற மைத்துனியிடம் பதில் பேசாது நின்றவனின் அருகில் வந்துவிட்டிருந்த சித்தார்த், “ஆரூ, ஏன் இப்ப அவசரமாச் சாப்பாடு கொண்டு வாறீங்க?” என்றான்.

“அது...அம்மாதான்” மென்று விழுங்கிய ஆரூரனைப் பரிதாபமாகப் பார்த்த சுமுகி, “அவனில ஏன் கோபப்படுறீங்க? நான் தான் தோட்டம் பாக்கவேணும் எண்டு அத்தையிட்ட கேட்டு சாப்பாட்டையும் வாங்கி வந்தன்...” என்றாள்.

எதுவும் பேசாமல் சுமுகியை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டுத் தூரத்தில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு இளநீர் பறித்துக்கொடுக்குமாறு கூறிவிட்டு, அருகில் பரந்துவிரிந்து நிழல்பரப்பி நின்ற மாமரத்தின் கீழ் இருவரையும் அமருமாறு கூறிவிட்டு மீண்டும் தண்ணீர் கட்டத் திரும்பியவனை, “எக்ஸ்சியூஸ்மி”என்ற சுமுகியின் வார்த்தை தடுத்தது.

‘என்ன?’ என்பது போல திரும்பிப் பார்த்தான்.

“இல்ல, சாப்பாடு ஆறீரும், சாப்பிட்டுட்டு இதெல்லாத்தையும் குடுத்தா நான் எடுத்திட்டுப் போயிருவன்,” மெல்ல இழுத்தாள்.

எதுவும் சொல்லாது திரும்பியவன், “கைகால் அலம்பீட்டு வாறன்”என்றான்.

அவசரமாய் மரத்தடிக்கு விரைந்த சுமுகி, ஆரூரன் காட்டிய சாக்குப்பையை எடுத்து விரித்தாள். அதன்மேல் சாப்பாட்டை வைத்துத் தட்டில் சோறுகறி வைத்து அதனை வாழை இலையால் மூடிவிட்டுக் காத்திருந்தாள்.

“சுமுகி மச்சாள், நான் போய் இளநி குடிச்சிட்டு உங்களுக்கும் எடுத்திட்டு வாறன்...” என்றபடி, சிட்டாகப் பறந்தான் ஆரூரன்.

அவளின் செய்கைகள் புதிதாய் இருந்தது, சித்தார்த்திற்கு. எதுவும் பேசாமல் வந்தமர்ந்தவன் உணவு மூடப்பட்டு இருப்பதைக் கண்டு எடுத்துப் பார்த்தான். அளவாக, அழகாக அவள் பரிமாறியிருந்த விதம் அவன் நெஞ்சை நெகிழ்த்தியது. நிமிர்ந்து பார்த்தான், ஏதோ சொல்லத் தோன்றிய போதும் மௌனமாக இருந்துவிட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த சுமுகி, “சொறி!” என்றாள், மென்குரலில்.

அவசரமாய் நிமிர்ந்தவன், “எதற்கு?” என்றான்.

“நான் வந்த இந்தமூன்று நாட்களில் உங்களை மரியாதை இல்லாது பேசியதற்கும், நடந்து கொண்டதற்கும்” சொல்கையில் தவிப்பு.

“நீ சொன்னமாதிரி, மன்னிக்க...” என்று சொல்லிக் கொண்டு வந்து நிறுத்தி அவளை ஆழப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான் சித்தார்த்.

“நீங்க சொன்னமாதிரி நான் யாரோதான், அதனால பரவாயில்லை. மன்னிப்பெல்லாம் எதற்கு?” என்றவன் குரலில் இறுக்கம்.

அந்தக் குரல் அவள் மனதை வெகுவாகத் தாக்கியது. அத்தனை இழப்புகளுக்கு மத்தியில், அநாதரவான நிலையில் அன்பைத் தேடிவந்து இணைந்திருப்பவனை. அத்தை குடும்பத்தின் பலமாக இருப்பவனை, ஒருவழியில் அவளது அப்பா செய்யவேண்டிய கடமைகளை எடுத்துப்போட்டுச் செய்பவனை உதாசீனப்படுத்தி விட்டாளே!

அம்மா, தங்கை, தம்பி என்று வாய் வார்த்தைகளில் சொல்லிவிட்டுச் செல்லாது, அந்த உறவுகளை உயிராக மதித்து அவர்களுக்காக வாழ்பவனுக்கு ‘நீ யாரோ’ என்ற வார்த்தை எத்தனை துன்பம் தந்திருக்கும்?

“என்னை...கோபம் இருந்தால் வெளிப்படையாக ஏசிவிடுங்க (திட்டிவிடுங்க). அதை விட்டுட்டு இப்படிப் பேசி...என்னை...” சொல்ல வந்ததைச் சொல்ல முடியாது தொண்டை அடைத்துக் கொண்டது அவளுக்கு. விழிகளில் நீர் முத்துக்கள் கோர்த்துக்கொண்டன.

அவளைப் பார்த்துப் பதறிப்போனான் அவன்.

“சரி சரி, நான் எல்லாத்தையும் மறந்திடுறன். முதல்ல மன்னிக்கிற அளவுக்கு அது பெரியதப்பில்லை.” என்றான், அவசரமாக.

“அப்ப...இனிமே நாம...” இழுத்தாள் சுமுகி.

“ஃப்ரெண்ட்ஸ்” அவன் சொல்ல, “வேண்டாம்,” அவசரமாய் மறுத்தவள், அதே வேகத்தில், “ம்ம்” என்றாள்.

சின்னப்புன்னகை அவன் உதடுகளில்.

அச்சிறு முறுவலே சுமுகியை ஆனந்தத்தின் எல்லையில் நிறுத்தியதே! அவள் நினைத்ததைப் போன்று சித்தார்த் சிரித்து விட்டான்.

அவளையே பார்த்திருந்தவன், “என்ன?” விழிகளால் வினாத்தொடுத்தான்.

“இப்பிடியே சிரிச்சிட்டிருந்தா அழகா இருக்கும்” வாய்விட்டே பதில் சொன்னாள் இவள்.

எதுவும் பேசவில்லை அவன். “முதல்ல கண்களைத் துடையுங்க மேடம்.” என்றபடி சாப்பிடத் தொடங்கினான்.

அவனோடு கதைத்தபடியே, ஆரூரன் கொண்டுவந்து கொடுத்த இளநீரையும் குடித்துவிட்டுப் புறப்பட்ட சுமுகியிடம், “நீங்க செருப்பைக் கழற்ற வேணாம், அப்பிடியே போகலாம்,” என்றான்.

“நான் சின்னவள் தான், என்னை, வா, போ என்றே சொல்லலாம்,” என்றவள் கைகளை ஆட்டிக் காட்டியபடியே புறப்பட்டாள்.

ஒரு பெண்ணுடனான பேச்சு இத்தனை ரசிக்கும்படியாக இருக்கும் என்பது அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது. சுமுகியைப் பார்த்த கணத்தில் இருந்து அவனது மனதில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது மெல்லப் புரிந்தது.

மாலையில் வீட்டில் ஒரே அமர்க்களம். கானகியைப் பார்க்க வருவதாகச் சொன்னவர்கள் ஐந்து மணியளவில் வந்தனர். சுமுகியின் தகப்பனாரும் வந்திருந்தார். எல்லாம் கதைத்து முடித்தபோது உள்ளே வந்தான் சித்தார்த். அவனைப் பற்றி விசாரித்தவர்கள், ஏதேதோ பேசிக் கொண்டனர். வந்திருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, அத்தையும் கானகியும் ஏன், சித்தார்த்தும் கூட கலங்கிவிட்டனர். சுமுகியின் தகப்பனார் தான் விடயத்தைக் கேட்டு அறிந்தார்.

“என்னப்பா? என்ன சொல்லீனம்?”

“அது...சுமுகி...”

“சொல்லுங்கோ அப்பா...”

“இவர்களின் அண்ணன்-தங்கை உறவில் களங்கம் காண்கிறார்கள்.” என்றார் சிவபாதம்.

வீட்டினர் அனைவரும் விக்கித்துப் போயினர்.

எங்கிருந்துதான் சுமுகிக்கு அப்படி ஒரு தைரியம் வந்ததோ தெரியாது.

“இஞ்ச பாருங்க, கானகி என் மச்சாள், எனக்கு உரிமையான மச்சாள். பெண்ணைப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதே தவிர அவளைப் பற்றி அவதூறு சொல்லவோ, சித்தார்த்தைப் பற்றிக் கேவலமாகக் கதைக்கவோ எந்த உரிமையும் கிடையாது. களங்கமில்லா அன்பின் ஆழம் உங்களுக்குப் புரியுமா? இனி நீங்கள் சம்மதித்தால் கூட இந்தத் திருமணத்திற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. எழுந்திருங்கள்!” என்றாள்.

அதேவேகத்தில், “சுமுகி” மூன்று நான்கு குரல்கள் ஏகமாய் ஒலித்தது. எதையும் பொருட்படுத்தாது கானகியை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள்.

வந்தவர்களும் புறப்பட்டு விட்டனர்.

இரவு, யாரும் சாப்பிட வரவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வொரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அத்தைதான் முதலில் எழுந்துகொண்டார். சமையல் அலுவலைப் பார்ப்பதற்காகச் சமையலறையில் நுழைந்து கொண்டார்.

வீட்டின் பின்புறம் இருந்த மாமரத்தின் கீழே சாய்வு கதிரையில் படுத்திருந்தார் சுமுகியின் அப்பா.

சுமுகி தன் தந்தையிடம் வந்தாள்.

“அப்பா, நான் செய்தது பிழையில்ல என்று எனக்குத் தெரியும். நீங்க சொல்லுங்க, நான் செய்தது தவறா?” என்றாள்.

“இல்லைடா, நீ அப்பாவின் குணத்தைக் கொண்டிருக்கிறாய். அதனால் தான் கண்ணுக்கு முன்னால் நடக்கும் அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை உன்னால். ஆனால், உன் அத்தை என்ன நினைத்தாளோ என்றுதான்...இவ்வளவு காலமும் எங்களால் எந்த உபயோகமும் இல்லை. அதனால்தான் கவலையாக...” சொல்லி முடிப்பதற்குள் அங்கே வந்தார் கானகியின் அன்னை.

“என்ன அண்ணா நீங்கள்? நான் ஏன் குறையாக நினைக்கப் போகிறேன்? என் மருமகள் செய்ததில் என்ன தவறு? என் மகளை என்றால் கூட பரவாயில்லை, சித்தார்த்தைச் சொல்வதற்கு அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? பத்தரைமாற்றுத் தங்கம் அவன். அவனைப்போய்...” பழிபோடத் தயங்காத மனிதர்களில் கொண்ட கோபத்தில் படபடத்தார்.

“சரிசரி, யோசிக்காதே சாந்தா. கடவுள் ஒரு நல்ல வழியைக் காட்டுவான்.” சமாதானம் செய்தார் சிவபாதம்.

கானகியின் தாயார் அப்பால் நகர்ந்ததும் தந்தையை யோசனையாகப் பார்த்தாள் சுமுகி. 

Rosei Kajan

Administrator
Staff member
#8
“அப்பா, நாங்களே நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துக் கானகிக்குக் கல்யாணம் செய்து வைக்கலாம்.” என்றாள் ஒரு உறுதியோடு.

“பார்க்கலாம்மா...” சிவபாதம் அப்படிச் சொன்னாலும் அவள் மனதில் திடமாக விழுந்தது அந்த எண்ணம்.

இரவு சாப்பிடவும் வரவில்லை சித்தார்த். சுமுகிக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. காலையில் தந்தையார் புறப்பட்ட கையோடு தோட்டத்திற்கு விரைந்தாள். கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த சித்தார்த் தூரத்தில் வரும்போதே சுமுகியைக் கண்டுவிட்டான். மனம் அவளை எண்ணியதும் ஏதேதோ எண்ணங்களைப் பரப்ப முனைந்தது. எழுந்து அமர்ந்தவன், அவள் அருகில் வரும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,

“ஏன் சுமுகி இப்பிடி அவசரமா வாறாய்?” என்றான்.

“நீங்க ஏன் ராத்திரி சாப்பிட வரவில்லை?” என்றாள் பதிலுக்கு.

“எனக்குப் பசி இல்ல...” வேறெதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

சட்டென்று அருகில் அமர்ந்தவள், அவன் கைகளைப் பற்றியபடி, “சித்தார்த், உங்கட மனசில எவ்வளவு துயரம் இருக்கெண்டு எனக்குத் தெரியும், மனசில இருக்கிற பாரத்தை இறக்கி வைச்சிடுங்க. உள்ளயே போட்டு அழாதீங்க!” என்றாள், அன்பும் ஆறுதலுமாக.

“சு...மு...கி!” சின்னக்கேவல் ஒன்று வெளிப்பட்டது அவனிடமிருந்து. இவ்வளவு நேரம், இத்தனை காலம் அடக்கி வைத்திருந்த வேதனை அழுகையாய் உடைப்பெடுத்தது. ஆண்பிள்ளைத் தனத்தை மறந்து அழுதான். தாய், தந்தை, சகோதரியின் இழப்பு, தனிமை என எல்லாவற்றையும் எண்ணிக் கலங்கியவன், அருகில் இருந்தவளும் விக்கி அழுவதைக் கண்டதும் சுதாகரித்து விட்டான்.

“பச்!” கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

‘என் கவலை என்னோடு’ மனதில் முணுமுணுத்தாலும் அருகில் இருப்பவளை வேற்றாளாக எண்ண முடியவில்லையே! என்ன தோன்றியதோ, தனது கரங்களைப் பிடித்திருந்த அவளது கரங்களை இறுகப்பற்றிக்கொண்டான்.

“சுமுகி...சுமுகி அழவேணாம்!” என்றான்.

அவன் வார்த்தைகளைக் கேட்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் சுமுகி.

கண்ணீரை, அந்த நினைப்பை உதறிவிட்டு, “சுமுகி, நேற்று ஏன் அப்பிடி ஆவேசமாப் பேசினாய்?” என்றான் மெதுவாக.

“ஏன் நான் கதைச்சதில என்ன பிழை இருக்கு? பாசத்திற்கும் வேசத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், உங்களைப் பற்றியும் கானுவைப் பற்றியும் எப்படிக் கதைக்கின்றார்கள்?” நேற்றைய கோபம் அப்படியே அவள் வார்த்தைகளில்.

“எனக்குச் சரியான கவலையா இருக்கு. என்னால கானகிக்கு ஒரு பிரச்சினை என்றால்...கடவுளே!” வேதனையுடன் சொன்னான் சித்தார்த்!

“நீங்கள் ஏன் யோசிக்கின்றீர்கள்? உங்களால் என்ன பிரச்சினை? இரத்தத்தொடர்பே இல்லாத உறவுகளுக்காக உங்களை எந்த அளவிற்குத் தியாகம் செய்திருக்கின்றீர்கள்! அத்தை குடும்பத்திற்காக நீங்கள் படும் பாட்டைக் கண்டதும் எனக்கு இப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா, என்ற எண்ணமே எழுந்தது. உங்கள் அன்பும் பரிவும், வேறு யாராலும் இப்படிக் காட்ட முடியாது” கண்கள் கலங்கப் படபடத்தாள்.

“என்மீது இவ்வளவு அபிப்பிராயம் வைத்திருக்கிறாய், ஆனால் நான் பேசும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்வாய். அல்லது வார்த்தைக்கு வார்த்தை கதைப்பாய்,” என்றான் இவன், சற்றே சீண்டலாக.

“அது நான்...”தடுமாறினாள் சுமுகி.

“சொல்லேன்... ஏன் அப்படி?” ஆர்வமாய்க் கேட்டான் சித்தார்த்.

“சொன்னாத் தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்றவளில் அத்தனை தடுமாற்றமும் தவிப்பும்.

“இல்லை, சொல்லு”

“எல்லோரிலும் அப்படிக் கோபம் காட்ட முடியாது, மனசிற்கு பிடித்தவர்களிடம் மட்டுமே அப்படி நடந்துகொள்ளலாம்”

“என்ன சொல்கிறாய்? எனக்கு விளங்கேல்ல!”

“காலம் முழுதும் உங்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.”

“சுமுகி! நீ என்ன சொல்றாய்?”

“ஒன்றுமில்லை...”

தூரத்தில் அத்தையும் கானகியும் வருவதைக் கண்டவள் மௌனமாய் நின்றாள்.

சித்தார்த்தும் அதன் பின் எதுவும் கேட்கவில்லை.


அருகில் வந்த கானகியின் அன்னை, “என்னடா, எங்க சங்காத்தமே வேண்டாமென்று நினைச்சிட்டியா?” என்றார், கண்களை நிறைத்த கண்ணீரோடு.

“அம்மா...என்னம்மா இது? என்னால கானகி வாழ்க்கையில இப்பிடி ஆகிட்டுதே என்றுதான் நான் கலங்கிப்போனன். மற்றபடி ஒண்டுமில்லை, என்னை மன்னிச்சிடுங்கோ அம்மா!”என்றான் சித்தார்த்.

“நீ ஏன் மன்னிப்புக் கேட்கிறாய்? உன்னில் ஒரு பிழையும் இல்லை!”

உடனே சுமுகி, “அத்தை ஒன்று தட்டிப்போகிறது என்றால் அதைவிட நல்லதாக ஒன்று கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்” என்றாள்.

“பாத்தியாப்பா? நம்ம சுமுகி சொன்னத, அதுதான் சரி” என்றார் பெரியவரும்.

சுமுகியை நிமிர்ந்து பார்த்தவன், அருகில் நின்ற கானகியிடம் “கானகி உனக்கு அண்ணா மீது கோபம் இல்லையே!” என்றான், பரிதவிப்போடு.

“ஐயோ அண்ணா, எனக்கு அவர்களைப் பிடிக்கவே இல்லை” என்றாள் அவள்.

“அத்தை...பார்த்துக்கொண்டே இருங்கள், கானகிக்கு இதைவிட நல்லமாப்பிள்ளை கிடைத்துச் சந்தோசமா வாழப்போறா” என்ற சுமுகியிடம்,

“சும்மா இருங்க மச்சாள்”என்ற கானகி, “அண்ணா எனக்குக் கலியாணமே வேணாம். நம்ம வீட்டிலயே உனக்குத் தங்கச்சியாவே நான் இருந்திருறன். என்னால நீ அவமானப்படுறதைத் தாங்கவே முடியாது” என்றாள் கண்கள் குளமாக.

“உனக்கு அடிதான் போடவேணும்.” தங்கையின் தலையில் செல்லமாய்க் கொட்டினான் சித்தார்த்.

“அவர்கள் ஏதோ சொன்னால் உனக்குக் கல்யாணமே வேண்டாமா? இனி இப்படியெல்லாம் கதைக்கிறதை நான் கேட்கக் கூடாது கானகி.” அன்புகனியச் சொன்னவனை விழியிமைக்காது பார்த்து நின்றாள் சுமுகி.ஒருவாறு இயல்பிற்குத் திரும்பினான் சித்தார்த். ஆனால், மனம் மட்டும் சுமுகி சொல்ல நினைத்தது என்னவாக இருக்கும், என்பதிலேயே நின்றது. அவளது வார்த்தை வீண் கற்பனைகளையும் உருவாக்கி விடுகின்றதே!

மறுநாள் அவளைத் தனியே சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அவன் வீட்டிற்குள் வந்தால் அவள் வெளியே நின்றாள். அவன் வெளியே வந்தால் அவள் வீட்டிற்குள் சென்றாள்.

இதை அவதானித்தவனுக்கு உவப்பாகவா இருக்கும்?

கனத்த மனதோடு சாப்பிட்டுவிட்டுத் தோட்டத்திற்கு வந்தால் அங்கே அவனுக்காய் காத்திருந்தாள் சுமுகி.

‘இவ்வளவு நேரம் பம்பரமாய் ஆடவைத்துவிட்டு இப்போது ஏன் காத்திருக்கிறாள்?’ கோபம் கொப்பளித்தது அவனுக்குள்.

அவன் மாமரத்தடியில் அமர்ந்ததும் அருகில் வந்து நின்றவள், “கோபமா?” என்றாள்.

“எனக்கென்ன கோபம்? சொல்லு!” என்றான் வெடுக்கென்று.

“நான் நாளைக்குப் போகலாமென்று இருக்கிறன்.” திடுமென்று அவள் இப்படிச் சொன்னதும் அதிர்வோடு பார்த்தான அவன்.

“நாளைக்கேவா?”

“ம்”

“ஏன்? இங்க இருக்கப் பிடிக்கேல்லயா?”

“அப்பிடியெல்லாம் இல்லை, என்மனசு ...என்னால...” இழுத்தாள் சுமுகி.

“என்ன ஆச்சு? போறதுக்குக் காரணம் சொல்லு?”

“காரணம் நீங்க தான்...”

“நானா?”

“ம்ம்”

“நான் என்ன செய்தன்?”

“நேற்று நான் கேட்டதுக்குப் பதில் சொல்லேல்ல...”

“என்ன கேட்டாய்?”

“காலம் முழுதும் உங்களோடு வாழவேணுமென்று சொன்னேனே...”

அதுவரை சுளித்த புருவங்களோடு கேள்வி கேட்டுகொண்டிருந்தவன் ஒரு கணம் நிறுத்தி அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்தான்.

“எப்ப அப்படிச் சொன்னாய்?”

“உங்களுக்கு எதுவுமே விளங்காதா? சரியான ரியூப்லைற், போங்க!”

அவள் அசைவுகளால் மனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டாலும் இதை அவள் வாயால் கேட்கையில் ஒருகணம் விக்கித்துப் போனான் அவன்.

‘இதுவெல்லாம் நடக்கும் காரியமா?’ என்ற எண்ணம் தானே அவன் மனதை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அப்படியிருக்க, அவன் செய்த எந்தச் செயல் சுமுகியின் உள்ளத்தில் இப்படியொரு எண்ணத்தை உருவாக்கியது?

சட்டென்று எழுந்து விறுவிறுவென்று தோட்டத்தை விட்டு வெளியேறிவிட்டான் சித்தார்த்.


 

Rosei Kajan

Administrator
Staff member
#9
அன்றுடன் சுமுகி வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன.

தனக்குப் படிப்புச் சம்பந்தமான வேலை இருப்பதாகவும் கூப்பிடவேண்டாம் எனவும் கூறிவிட்டு தோட்டத்தில் வந்து அமர்ந்துகொண்டாள். அன்று முழுவதும் தோட்டத்தில் தான் இருந்தாள். ஆனால் யாருடனும் எதுவும் கதைக்கவில்லை தனது கைத்தொலைபேசியில் ஏதோ உரையாடியபடியும் குறுந்தகவல் அனுப்பியபடியேயும் இருந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்ப்பதும் வேலை செய்வதுமாக இருந்தான் சித்தார்த். உள்ளத்தில் புது அனுபவமாக இருந்தது அவனுக்கு. வாயில் முணுமுணுத்த பாடல்கள் கூட புது இன்பம் தருவதாக இருந்தது. அவளோடு வார்த்தையாடுவதில் தான் எவ்வளவு இன்பம்! இத்தனை நாட்களாக அவனுக்குள் பூக்காத கனவுகள் இப்போது சலங்கைகட்டி ஆடியது. ஆனால், எல்லாமே சற்று நேரம் தான். புத்தி, தன் பங்கிற்கு உரத்துச் சத்தமிட்டது.

அவனுக்குள் பல கேள்விகள். அவளது வார்த்தைகள் அவனுக்குள் தித்திப்பைக் கொடுத்தாலும் சுமுகி சொல்வது போல எதுவும் நடக்கக்கூடாது, அவள் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தபெண். அவளது ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள் எல்லாமே உயர்ந்தவைகள். ஏதோ ஒரு ஈர்ப்பில் இப்போது இப்படிச் சொன்னாலும், காலம், அவளது கனவுகளை அழித்துவிட்ட வாழ்க்கையாக இதனைப் பார்க்க வைத்துவிட்டால் அந்த வேதனையை அவனால் தாங்கவே முடியாது.

அத்துடன் அது அம்மாவிற்கும் சுமுகியின் அப்பாவிற்கும் பகையை உண்டு பண்ணிவிடும். என் ஆசைக்காக அம்மாவின் அன்பை இழந்து விடக் கூடாது, அது தவிர சுமுகியின் அம்மா கூட, அதிக வசதி படைத்தவர் என்றும் அவரது செல்வந்த குணத்தில் இருந்து அவர் எதற்காகவும் மாறியதில்லை எனவும் அம்மா சொன்னதை நினைத்தான்.

‘இது சரி வராது. அவள் தான் சிறுபெண்ணாய் இப்படிச் சொல்கிறாள் என்றால் நான்? எப்படிச் சம்மதிப்பது?’ என எண்ணமிட்டபடியே, அவளோடு கதைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி வேலை செய்து கொண்டிருந்தான்.

சுமுகியிடம் பேசவேண்டும் என நினைத்தான். ஆனால் அவள் ஏதோ அலுவலாக இருந்ததனால் பேசாமல் வேலைசெய்து கொண்டிருந்தான். மதியம் சாப்பிடுவதற்குக் கூட அவள் வரவில்லை. அப்பிள், பிஸ்கட் என்று சாப்பிட்டுவிட்டுப் “பசிக்கவில்லை” என்றுவிட்டாள். மாலையில் அவள் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமான போது அவளருகில் வந்த சித்தார்த்,

“சுமுகி, நான் உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்.”என்றான்.

“என்ன? சொல்லுங்க, என்ன கதைக்கவேணும்?” கூர்பார்வையோடு கேட்டவள், பார்வை கனிய, “எனக்கும் உங்களோட நிறையக் கதைக்கவேணும் போலத்தான் இருக்கு. சரி, நீங்களே முதல்ல சொல்லுங்கோவன்,” கண்களைச் சிமிட்டி உதடுகளைக் குவித்து, “ம் சொல்லுங்கள்!” என்றாள் மென்மையாக.

அவளது குழந்தைத்தனம் அவனைப் பேசவிடாமல் செய்தது.

அவன் அமைதியைப் பார்த்திருந்தவளோ, “என்ன?” என்றாள்.

“இல்ல, அது.. .நீ நினைக்கிற மாதிரி எந்த எண்ணமும் எனக்கு இல்லை, தயவுசெய்து மனதில் எந்த ஆசையையும் வளர்த்துக் கொள்ளாதே!” வெகு கண்டிப்போடு சொல்ல முனைந்து அதில் தோற்றாலும், அதுவே அவளை வெகுவாகத் தாக்கியது.

ஒருநொடியில் சுருங்கிப்போனது அவளது மென்மையான வதனம்.

“சித்தார்த், என்ன, என்ன, சொன்னீங்க? ஏன், என்னைப் பிடிக்கேல்லயா?” என்றாள் அவசரமாக.

“அதில்லை சுமுகி...” இழுத்தான் அவன்..

“ஓ!...எனக்கு விளக்குது, நானா வந்து என் விருப்பத்தைச் சொன்னதால என்னைத் தப்பா நினைச்சிட்டீங்க இல்லையா? வெளிநாட்டில வளந்தவ, ஒழுக்கமானவளோ தெரியேல்ல என்று தானே இப்பிடிச் சொல்றீங்க? அப்பிடித்தானே? சரி பரவாயில்ல, இனிமேல் என்னோட கதைக்காதீங்க, நான் நாளைக்கே இங்க இருந்து போறன்.” குரல் கம்மினாலும் ஒருவகைக் கோபத்தோடு படபடத்தாள் அவள். முகம் வேறு கோபமும் தவிப்புமாய் வாடிப்போயிருந்தது.

அவளையே பார்த்திருந்த சித்தார்த்துக்கு உளிகொண்டு இதயத்தை அறுப்பது போலிருந்தது.

“இல்ல...அப்படியெல்லாம் எதுவுமே இல்ல சுமுகி. நீ...நீ...நான்...சொல்றதைக் கேள்...பிளீஸ்...” கெஞ்சல் குரலில் சொன்னான்.

“இல்ல, இனிமே ஒரு நிமிசம் கூட உங்களுக்குப் பக்கத்தில நிக்க எனக்கு விருப்பம் இல்லை, நான் போயிர்றன்,” என்றவள் சொன்னதோடு நில்லாமல் நடக்கவும் தொடங்கினாள்.

அந்த வார்த்தைகளையும் ஒதுக்கத்தையும் அவனால் சற்றும் ஏற்கவோ தாங்கவோ முடியவில்லை.

அவசரமாய் அவள் கைகளைப் பற்றிய சித்தார்த், “என்னோட பாலைவனமான வாழ்க்கையில ஒருவித வசந்தமா தெரிஞ்சவள் நீ. தென்றலா என் மனசை வருடின பூங்கொடி நீதான். கறந்த பாலைப்போல களங்கமில்லாத மனசு உனக்கு என்றது எனக்குத் தெரியும். ஆனா...” சொல்லி நிறுத்தியவன்,

“ஆனா... இதெல்லாம் அத்தனை சுலபம் இல்ல சுமுகி. நீ நினைக்கிற மாதிரி நாங்க சேர முடியாதுடா, உப்புக்கல்லும் வைரக்கல்லும் எப்பவும் ஒண்ணாக முடியாது, புரிஞ்சுகொள். என் மனசால நான் நேசிச்ச முதல் பெண்ணும் நீதான், கடைசிப் பெண்ணும் நீதான். ஒரு பெண்ணுடனான சிரிப்பும் பேச்சும் இத்தனை இன்பமானது என்பதும் மனசு நிறைந்த மகிழ்ச்சி என்பதும் உன்னால் தான் எனக்கு தெரிந்தது. ஆனா... உன்னோட ஆசையை என்னால நிறைவேத்த முடியாதுடா!” அவன் சொல்ல சொல்ல, இருவர் விழிகளும் நிறைந்தன.

மனதின் வலியைத் தாங்க முடியாதவன் போல அவள் கரங்களை விடுவித்துவிட்டு அருகில் இருந்த மரக்குற்றி ஒன்றில் அமர்ந்து கொண்டான் சித்தார்த்.

அருகில் அமர்ந்துகொண்ட சுமுகி, அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“சித்தார்த், உங்க பயம் எனக்குப் புரியுது. எல்லாரும் சம்மதிச்சா நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவீங்க தானே?”

“சுமுகி இது றிஸ்க், வேணாம், விட்டிடு!” என்றான் அவன் திரும்பவும்,

விட்டுவிட்டால் அவள் சுமுகி அல்லவே, தனக்குள் எண்ணியவள், “சரி, இப்போ வீட்டுக்குப் போவம், மத்ததெல்லாம் பிறகு கதைப்பம்.” என்றாள்.

“சுகி...என்னை மன்னிச்சிடும்மா!”

“சுகியா?”

“அ...து...“ தடுமாறினான் சித்தார்த்.

“ஓ! மிஸ்டர் சித்தார்த்...எனக்குச் செல்லப் பெயர் வேற வைச்சிருக்கிறீங்களோ?” விற்புருவங்களை உயர்த்தியவள், அதன் பிறகு அவனைக் கதைக்க விடாது புன்னகையோடு அழைத்துச் சென்றாள்.

மறுநாள்பொழுது அமைதியாகவே கழிந்தது. காலையில் கூட சித்தார்த் வீட்டுக்கு வரவில்லை. யாருடனும் எதுவும் பேசாமல் இருந்த சுமுகியைக் கண்ட கானகி, தன் அண்ணன் ஏதோ அவளைப் பேசிவிட்டதாக எண்ணினாள்.

அவசரமாய் தோட்டத்திற்குச் சென்று அண்ணனை அழைத்து வந்து அவளிடம் மன்னிப்பும் கேட்க வைத்தாள்.

“உன் மச்சாளிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கொன்றும் கஷ்டம் இல்லை!” சுமுகியின் கண்களைப் பார்த்தபடியே அவனும் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். விழிகள் நான்கும் பிணைந்து கொண்டன.

அன்று மாலையில் கானகியுடன் கடைவீதிக்குச் சென்று வீட்டிலுள்ள அனைவருக்கும் ஆடைகள் வாங்கி வந்தாள் சுமுகி. அத்தைக்கும் சேர்த்துத்தான். எல்லோரிடமும் அவரவருக்கு வாங்கியதைக் கொடுத்தவள், எல்லோரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பதைக்கண்டு பூரித்தாள், அப்போது தான் ஆரூரன், “சுமுகி மச்சாள், எல்லோருக்கும் வாங்கியிருக்கீங்க, அண்ணாவுக்கு எதுவும் வாங்கேல்லையா?” எனக்கேட்க, உடனே கானகியும் “ஓம் மச்சாள், என்னவோ தெரியல, உனக்கு அண்ணாவைப் பிடிக்கேல்ல. ஆனா, எங்களைவிட்டு அவனைப் பிரிச்சுப் பாக்காத! அவன் எங்களில ஒருத்தன் தான்.” என்றாள்.

அப்போது அவ்விடம் வந்த சுமுகியின் அத்தை, “சுமுகி கண்ணா, சித்தார்த் பாவமடா, அவனை பிரிச்சுப் பாக்காதயடா!” என்றார்.

சித்தார்த் மீதான அவர்களின் பாசம் கண்டு வியந்தவள், “ஐயோ அத்தை நான் பிரிச்சுப் பாக்கவில்லை. சரி, அவருக்கு நான் ஏதாவது கொடுத்தாச் சரிதானே? எதையாவது கொடுக்கிறேன்,” என்றவள், நாக்கை வளைத்து உருட்டி யோசித்துவிட்டு தனது கையில் கிடந்த கைச்சங்கிலியைக் கழற்றவும் எதையும் அறியாத சித்தார்த் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அவசரமாய் அவனருகில் சென்றவள், அவனது கையைப்பற்ற, பதறிப் போனவன், “என்ன? என்ன சுமுகி?” என்றான்.

ஒன்றும் சொல்லாது அவனது கரங்களில் அதனை அணிவித்தவள், மற்றவர்களுக்கு விளங்காதவண்ணம், “எப்பவும் இது உங்க கையிலயே இருக்கோணும்,” என்றாள்.

அத்தையும் கானகியும் பதறிப் போயினர். “நாங்க சொன்னதுக்காக இதையெல்லாம்...வேண்டாம்மா!” என்றார் அத்தை.

“இல்லத்தை இருக்கட்டும்!” என்றாள் சுமுகி.

இப்படித்தான் நடக்கும் என அவள் எதிர்பார்த்தது வெற்றியானதில் ஏக குஷி சுமுகிக்கு.

இரவு, சாப்பிட்டு வெளியே வந்தவள், தனியே நின்ற சித்தார்த்திடம், “எல்லாரும் நான் உங்களுக்கு ஏன் எதுவும் தர இல்லையென்று கேட்டீனம். என் மனசை தந்திட்டன் எண்டு ஏன் சொல்லேல்ல நீங்கள்?” என்றாள்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#10

விழிகளில் வலியோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

மறுநாள் தந்தையை வரச்செய்து, அவருடன் புறப்பட்டாள் சுமுகி.

எல்லோரும் தடுத்த போதும் சித்தார்த் மட்டும் எதுவும் சொல்லவில்லை. சுமுகியும் போக வேண்டும் எனப் பிடிவாதமாய் கூறிப் புறப்பட்டுவிட்டாள். அத்தையும் பிள்ளைகளும் கண்ணீரோடு விடைகொடுத்தனர்.

சுமுகி சென்று விட்டது மற்றவர்களுக்குக் கவலையாக இருந்தது என்றால் சித்தார்த்திற்கு வெறுமையாக இருந்தது. இதுவரை அனுபவித்து அறியாத ஒரு தவிப்பு உள்ளத்தை உடைத்துப் போட்டது. தன்னை அறியாமல் நொறுங்குண்ட இதயத்தை என்ன சொல்லியும் அவனால் தேற்ற முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் அழுது தீர்த்தான். கடவுள் ஏன் தான் அவனது வாழ்வில் சுமுகியைக் காட்டினானோ என எண்ணிய போது, அவனால், அக்கணம் கடவுளை வெறுக்கவே முடிந்தது.

வீட்டில் யாருமே, எதுவுமே சரியாக இயங்கவில்லை. ஒரு பூங்காற்றாய் வந்து அனைவரது உள்ளத்தையும் நிறைத்துவிட்டு சட்டெனச் சென்ற சுமுகியின் பிரிவு அவர்கள் அனைவரையும் வருத்தியது.

சென்ற இரண்டாம் நாளே, அப்பா, அம்மா, கூடவே அவளது உயிர் நண்பன் ரேவந்தையும் அழைத்துக் கொண்டு திரும்பி வந்தாள் சுமுகி.

அவள் இவ்வாறு வந்தது ஆச்சரியம் என்றால், தனது அம்மாவையும் அழைத்து வந்திருந்தது பேரதிசயமாய் இருந்தது அனைவருக்கும்.

அவர்கள் அனைவரையும் கண்டதும் தடுமாறிப் போன கானகியும் தாயும் செய்வதறியாது நின்றனர். சுமுகிதான் இயல்பாகத் தாயையும் அழைத்துச் சென்று அமர வைத்தாள்.

சுமுகியின் அப்பாதான் முதலில் கதைக்கத் தொடங்கினார்.

பெற்றவர்களை இழந்து, தாத்தா பாட்டியோடு வாழும் ரேவந்தைப் பற்றிச் சொன்னார்.

அவனது சிறந்த குணங்களையும் சுமுகிக்கும் அவனுக்குமான குழந்தைப் பருவம் முதலான நட்பையும், தாங்கள், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய எண்ணியதைப் பற்றியும், தங்களுடையது மாசில்லா நட்பேயன்றி காதல் அல்ல என இருவரும் மறுத்துவிட்டதையும் கூறி, கானகிக்கு ரேவந்தை திருமணம் செய்து வைக்க விருப்பமா எனவும் கேட்டபோது கானகிக்கு இன்ப அதிர்ச்சி என்றால், அவளது அம்மாவிற்கு, பேரின்ப அதிர்ச்சியாக இருந்தது.

“அண்ணா! இதென்ன கேள்வி? ஆனா எங்களட்ட அவ்வளவு பணவசதி இல்லை?”

“அதெல்லாம் நீ கவலைப்படாதயம்மா, எல்லாம் நான் பாக்கிறேன்.” என்ற தமையனை நன்றியோடு பார்த்த தங்கைக்கு,

“இன்னொரு அதிர்ச்சி இருக்கு... பொறு!” என்றவர், “எங்கே சித்தார்த்?” என வினவினார்.

“அண்ணா, மாட்டுக் கொட்டகையில நிக்கிறார்.” வாய் திறந்த கானகியை ஆர்வமாய் பார்த்தான் ரேவந்.

“கூட்டி வாம்மா” என்ற மாமனாரின் சொல்லுக்கிணங்க ஓடிச்சென்று கையோடு தமையனையும் அழைத்து வந்தாள்.

என்ன ஏதெனத் தெரியாது அவசரமாய் வந்து நின்ற சித்தார்த், இவர்கள் அனைவரையும் கண்டதும் மரியாதையின் நிமித்தம், “வாங்கோ!” எனக்கூறி ஓரமாய் இருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டான்.

‘போனவள் வந்திருக்கிறாளே’ தன்னைத் துளைத்த அவள் பார்வையை ஒரு கணம் எதிர்கொண்டவன், பிறகு, அந்தப் பக்கம் பார்க்கவில்லை.

ஆனால், அவனது தோற்றமே அவன் எந்தளவிற்கு வேதனைப்பட்டிருக்கிறான் என்பதை உணர வைத்தது சுமுகிக்கு.

மகளையும் அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மகிழ்வோடு ஆரம்பித்தார் சிவபாதம்.

“அம்மா சாந்தா, உன் மகன் சித்தார்த்தை என் மகள் சுமுகிக்கு மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கின்றோம்.” என்று அவர் சொல்ல, இனிய அதிர்ச்சி அந்த வீட்டையே நிறைத்தது.

சட்டென்று நிமிர்ந்த சித்தார்த், சுமுகியைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். முதலில் முறைப்பாகப் பார்த்தாள். ‘அதென்ன எடுத்ததும் சரிவராது என்று ஒதுங்கிறது! ஹ்ம்ம்!’ பார்வையால் குற்றம் சுமத்தினாள்.

‘என் நிலையில் நீ இருந்தாலும் இதைத்தான் சுகி செய்திருப்பாய்.’ அவள் கிடைத்த சந்தோசத்தில் அமிழ்ந்தபடி பதில் பார்வை அனுப்பினான் அவன்.

உள்ளே சென்ற கானகி, அனைவருக்கும் குளிர்பானம் கொண்டுவந்து கொடுத்தாள்.

“எப்பிடியண்ணா இதெல்லாம்?” என்ற தங்கைக்கு, “எல்லாம் உன் மருமகளின்ர கைங்கரியம்” என்ற சுமுகியின் அப்பா, “ ‘உறவை வளர்ப்போம்’ என்ற பெயரில ஒரு சமூகசேவை அமைப்பில உன் அண்ணி தலைமை வகிக்கிறா. அதில ரேவந்தும் இணைஞ்சிருக்கிறான். இங்க இருக்கிற அந்த அமைப்பின் ஆண்டு விழாவிற்காக உன் அண்ணியும் ரேவந்தும் வந்திருந்தார்கள். அதில பல உறவுகள் இணைஞ்சது உண்மை. அதைச் சொல்லிக்காட்டி நீங்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டாமா என்று எல்லாத்தையும் எல்லாரையும் இப்படி முடிவு எடுக்கவைச்சிட்டா சுமுகி. தலைமை வகிக்கிறவர்கள் அதைத் தங்களுடைய வாழ்வில கடைப்பிடிச்சாத்தான் மற்றவர்களுக்கு உறுதியாக எடுத்துச் சொல்ல முடியும் என்றதைச் சொல்லியே எங்க முடிவை மாத்திட்டா” என்றார் சிவபாதம்.

“என் மருமகள் ஆச்சே அண்ணா, அதனாலதான் எங்கமேல அவ்வளவு பாசம்!” என்ற அத்தையை இறுக்கமாகக் கட்டிக்கொண்ட சுமுகி, புன்னகையோடு சித்தார்த்தைப் பார்த்தாள்.

‘அணைச்சிருக்கிறது அம்மாவை, பிறகு இங்க என்ன பார்வை?’ பார்வையில் பொய்க்கோபம் காட்டினான் சித்தார்த்.

அவன் மன ஓட்டம் புரிந்து கண்களால் சிரித்தாள் சுமுகி.

சுமுகியின் தாயாரும் தனது மைத்துனியிடம் பேசியதுடன் கானகியின் அமைதியான குணத்தைக் கூறிப் பாராட்டவும் செய்தார்.

மாலைப் பொழுது...

“நாலுபேரும் தோட்டத்துக்குப் போயிற்றுவாங்க, உங்களுக்குள்ள பேசிக்கொள்ள, புரிந்துகொள்ள நிறைய விசயங்கள் இருக்கும்’’ என்ற சுமுகியின் தாயாரை நன்றியுடன் பார்த்தனர் நால்வரும்.

ஒரு மாமரத்தின் கீழே நின்ற ரேவந், “கானகி, நான் உங்களை கானு என்று கூப்பிடலாமா?” என்றான்.

வியப்பாய் பார்த்தாள் கானகி, “என்ன?” சின்னக்குரலில் கேட்டான் ரேவந்.

“சுமுகி மச்சாளும் இப்பிடித்தான் கேட்டா, அது தான்...“ இழுத்தாள்.

“நிறைய விசயங்கள் எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரியான புரிதலில் இருக்கு, அதனால தான் நாங்க உயிர் நண்பர்களா இருக்கிறோம்” என்றான்.

அவன் கேட்டதுக்குப் பதிலாக “சரி ” என்பது போல தலையை அசைத்தாள் கானகி.

“ஏன் கதைக்க மாட்டீங்களா?” என்றான்.

மெளனமாக நின்றாள் கானகி.

“என்னைப் பிடிக்கலயா?” என்றான்.

“பிடிச்சிருக்கு” என்றாள்.

“என்னோட கனடா வந்திடுவீங்க தானே?” என்றான் அவன்.

“ஆம்” என்பது போல தலையை அசைத்தாள் கானகி.

மென்மையாய் புன்னகைத்தான் கானகியின் ரேவந்.

சுமுகியின் அருகில் வந்த சித்தார்த் , “ ஒரு விசயம் செசால்லோணும் சுகி.” என்றான்.

“என்ன?” என்பது போல நிமிர்ந்தாள் அவள்.

“எனக்கு வெளிநாடு போறதில விருப்பமில்லை”

“யார் சொன்னது வெளிநாடு போறதெண்டு?”

“சுகி?”

“நாங்க இங்கயே தான் இருக்கப் போறம். அப்பப்ப அப்பா அம்மாவைப் பாக்கப் போய் வரலாம். அவையளும் வந்து போவீனம்.”என்றாள்.

அதைக் கேட்ட மறுகணம் , தன் கைவளைவினுள் சுமுகியைச் சிறைசெய்த சித்தார்த்,

“எப்பிடி இந்த ஏழுநாளில எங்க குடும்பத்தினுடைய தலை எழுத்தையே மாற்றினாய்? ” என்ற போது,

“சுமுகிக்கு பிடிச்சா, சுமுகி நினைச்சா அப்படித்தான்!” என்றவளிடம்,

“அப்போ வாழ்வு பூரா நான் சிரிச்சிக்கொண்டே இருக்கப் போறன். அப்பிடித்தானே?”என்றான்.

குழந்தையாய் தலையை மேலும் கீழுமாய் ஆட்டிய அவளது தலையோடு தலையைச் சேர்த்து வெண்பற்கள் பளிச்சிட சிரித்தான் சித்தார்த்.

இமைவெட்டாது அந்தச் சிரிப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுமுகி.சுபம்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#11
இக்கதை பற்றிய கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளலாம்
 
#12
Oru Penn ninaithal ethaiyum matri vidalam.

Arumaiyana kathai.
 

Abi

New member
#13
Wow
 

Rosei Kajan

Administrator
Staff member
#14
Oru Penn ninaithal ethaiyum matri vidalam.

Arumaiyana kathai.
நன்றி சுமி
 

Rosei Kajan

Administrator
Staff member
#15
நன்றி அபி
 

emilypeter

Well-known member
#16
Manitha neyangalai azhaga yeduthu sollivittai aanal warin thakkam manitha uravukalai puratti pottathai ninaithu manam punnagai poivittathu.
 
#17
வாவ் பீல் .... எப்படி சொல்லுவது எந்த ஒரு வீண் அலட்டல் இல்லாம அருமையான கதை..... சுமுகி சித்தார்த் ........ எங்க எப்படி நேசம் மலர்ந்தது அப்படினே தெரியாமல் அழகாக கொண்டு போய் இருக்கீங்க...... போர் மூலம் சிதைத்தாலும் தங்களுக்குள்ள ஒரு சொந்ததை உருவாகிக்கி வாழும் முறை அழகோ அழகு.....
 
#18
Super akka
 
#19
Arumai
 
#20
Nice
 
Top