அந்தநாள் நினைவுகள்

NithaniPrabu

Administrator
Staff member
#1
1542194099099.png
ஹாஹா.. இதை பார்த்ததும் பழைய நினைவுகள். தம்பி மட்டும் இருக்கும்போது சமைக்கத் தொடங்கும்போது அடுப்புக்குக் கீழே இருக்கும் கப்போர்ட் முன்னால் இருத்தி கதவுகளைத் திறந்து விட்டுவிட்டால், அவருக்கு அத்தனை சந்தோசம். முதல் அதற்குள் இருக்கும் பாத்திரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வரும். பிறகு அவர் உள்ளே போயிருந்து வெளியிலிருக்கும் பாத்திரங்களை மீண்டும் உள்ளே எடுத்து வைப்பார். இப்படியே மாறி மாறி நடக்கும்.

மகளும் பிறந்தபிறகு அப்படி இருவரையும் விடமுடியாது. பாத்திரம் எங்காவது பட்டு அழத் துவங்கிவிட்டால் அன்று சமைத்த மாதிரித்தான். மகளை முதுகில் கட்டிக்கொண்டு தம்பியை இதே மாதிரி பக்கத்தில் இருத்திக்கொண்டு சமைப்பேன். ஒருமுறை கறியை துளாவிவிட்டு வைத்த கரண்டியை தம்பி பற்றி, பிள்ளையின் கை சிவந்து அழு அழு என்று அழுத்த நாட்களை மறக்கவே முடியாது. அன்றைய நாட்களில் சிலநேரம் அழுகை கூட வரும். இன்று மிக அழகான நினைவுகள்.

கொலுசு எனக்கு மிகவுமே பிடித்த ஒன்று. இவர்களின் உறக்கம் கலைந்துவிடுமோ என்று அன்றைய நாட்களில் கழற்றியது. பிறகு அணியவே மறந்தாச்சு.
பாத்ரூம் போகக்கூட பயம். மெல்லிய காலடி சத்தத்துக்கே எழும்பிவிடுவார் தம்பி. டிவி நினைத்துக்கூட பார்க்க முடியாது. திருமணமான பிறகு மறந்திருந்த கதைகள் வாசிக்கும் பழக்கம் மீண்டும் ஆரம்பித்த நாட்களவை.
முழங்கால் வரை ஆசையாசையாக வளர்த்து வைத்திருந்த முடியை விரித்துவிடவே முடியாது. தம்பி ஓடிவந்து அதிலே தொங்குவார். உயிரே போகும் வலி, அவருக்கு அடிக்க முடியாத ஆத்திரத்தில் அழுதழுது ஒருநாள் நானே என் முடியை வெட்டிக்கொண்டேன். அதன்பிறகு அந்தளவுக்கு வளர்க்கவேயில்லை.
இப்படி எத்தனையோ அழகான நினைவுகள். இந்த போட்டோ கிளறிவிட்டது.
 
Top