தொடர்கதைகள் அத்தியாயம் 7

NithaniPrabu

Administrator
Staff member
#1
நிலவு 7அந்த மாலினுள்(mall) சுற்றி சுற்றி சேராவிற்கு கால் வலித்தது. வந்தனாவின் மீது சற்று எரிச்சலாகக் கூட வந்தது. வாங்குவதற்கு எதுவும் இல்லை என்றால் கூட எதற்கு இப்படி சுற்றிக்கொண்டே இருக்கிறாள் என்று. வந்தனா அப்படித்தான் செய்துகொண்டிருந்தாள். அதுவரை குறைந்தது மூன்று தடவையாவது அந்த மாலினை மேலே கீழே என்று சுற்றி வந்திருப்பாள். அவளுடன் சேர்ந்து சேராவும். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்,

“வந்தனா சுற்றியது போதும் வா போகலாம்!” என்றாள் சலிப்பும் எரிச்சலுமான குரலில்.

“ஏய் சேரா ஏன்பா?”

“எவ்வளவு நேரம் தான் சும்மா சுற்றிக்கொண்டே இருப்பாய்? எதையாவது வாங்குவதென்றால் வாங்கு. அதைவிட்டு இப்படி சும்மா சுற்றிக்கொண்டே இருப்பதென்றால் எனக்கு எரிச்சலாய் இருக்கிறது.”

“ஆமாம். இருக்கும்டி இருக்கும். நான் தினமும் வந்து இப்படி சுற்றிக்கொண்டே இருக்கிறேன் பார். பெரிதாக சொல்ல வந்துவிட்டாள். இப்படி வெளியே வருவதே ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம். அதில் வந்தவுடன் கிளம்பி போய் மீண்டும் அந்த புறாக்கூண்டில் அடைய வேண்டுமா? என்னால் முடியாதுப்பா. இங்கே சுற்றுவது பிடிக்கவில்லையெனில் வா சினிமாவுக்காவது போகலாம் என்றால் அதற்கும் உதட்டைச் சுழிக்கிறாய். நான் என்ன தான்டி செய்வது.”

“இதோ பார் சேரா உனக்குப் பிடிக்கவில்லை என்றால் போ போய் அந்த ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திரு. நான் இன்னும் குறைந்தது இரண்டு தடவையாவது இந்த மாலினை சுற்றி அலசி ஆராய்ந்துவிட்டே வருவேன்.” என்று படபடவென பொரிந்த வந்தனா, மீண்டும் அதேவேகத்தில் திரும்பி அடுத்த தளத்துக்கான மாடிப்படி நோக்கி விரைந்தாள்.

‘என்னவோ செய்!’ என்பது போலத் தலையிலடித்துக்கொண்ட சேரா அவள் சொன்னது போலவே கீழ் தளத்திலிருந்த ரெஸ்டாரண்டில் போய் அமர்ந்தாள். வந்தனாவின் கோபம் அவளுக்கும் புரிந்தது. அவளும் ஒரு காலத்தில் இப்படி இருந்தவள் தானே!!

இப்போது அவளுக்கு எதிலுமே ஆர்வம் அற்றுப் போய் இறுகி இருக்கிறாள் என்றால் அதற்காக அவளுடன் நட்பு பாராட்டும் பாவத்திற்கு வந்தனாவும் அப்படியே இருக்க வேண்டுமா என்ன? அவள் மனம் தான் இப்படிச் சின்னச் சின்னச் சந்தோசங்களை எல்லாம் தொலைத்து இறுகி விட்டது. வந்தனாவாவது மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கட்டுமே.

தன் போக்கில் ஏதேதோ எண்ணியவள் ஓர் ஆழ்ந்த பெருமூச்சை இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளியேற்றியபடி கையில் இருந்த பழச்சாறில் கவனத்தைச் செலுத்திய நேரம் பின்னாலிருந்து,

“மெல்ல டீச்சரம்மா மெல்ல. நீங்கள் விடும் பெருமூச்சில் இங்குள்ள பொருட்கள் எல்லாம் பறந்துவிடப்போகிறது!” என்ற இனியனின் கேலிக்குரல் கேட்டது.

சேரா சிறு திகைப்புடன் திரும்பிப் பார்க்கவும் சிறு குறும்புச் சிரிப்புடன் இயல்பாக அவள் எதிரே வந்து அமர்ந்தான் இனியன்.


‘இவன் எங்கே இங்கே?’ அன்று இல்லத்தில் அவனைச் சந்தித்த போது மீண்டும் அவனுடனான சந்திப்பு நிகழும் என்று அவள் எண்ணவே இல்லை. இவன் அவளுக்கு முன் ஜென்மமாகத் தோன்றும் ஓர் காலத்தில் அறிமுகமானவன். அதன் பின் எது எதுவோ நடந்து அவள் வாழ்வே தடம் மாறிய பின்பு சற்றும் எதிர்பாராமல் எதேச்சையாக இல்லத்து விழாவில் அவனைச் சந்திக்கநேர்ந்தது. அவளைக்கண்டுகொண்டு முகம் மலர வந்து பேசியவனிடம் முகத்தில் அடித்ததைப் போல் பேச முடியாமல் எதுவோ ஒன்று தடுக்க தன்னால் முடிந்தவரை இயல்பாகப் பேசி அந்தத் தருணத்தை நகர்த்தி விட முயன்றாள். இப்போது மீண்டும் ஓர் சந்திப்பு.

வேறுவழியின்றிச் சேரா அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைக்கவும், “எங்கே மேடம் ஷாப்பிங்கா?” என்றான் இனியன், கண்ணில் ஓர் ரசனை கலந்த எதிர்பார்ப்புடன்.

சேரா அதற்கும் அமைதியாகச் சிறு புன்னகையுடன், “ம்ம் ஆமா.” என்று சுருக்கமாகப் பதில் கொடுக்கவும் அவன் முகத்தில் லேசாக ஓர் ஏமாற்றம் பரவியது.

அவன் அவளிடம் எதிர்பார்த்தது என்ன? இவளுக்கு என்னதான் ஆயிற்று?

அவனுக்கு முன்பு ஒரு தடவை சேரனையும் நிலாவையும் ஓர் ஷாப்பிங் மோலில் பார்த்துவிட்டு அவர்கள் அருகில் சென்று, “ஹாய்டா மச்சி! எங்கே ஷாப்பிங்கா?” என்று தான் இயல்பாக விசாரிக்க, உடனே கண்களில் குறும்புடன், “இல்லை இனியணண்ணா. சாமி கும்பிட வந்தோம். இல்லண்ணா!” என்று இடக்காகப் பதில் சொல்லி, தன் காலை வாரிய நிலாவின் துறுதுறு முகம் நினைவடுக்கில் வந்து போனது.

அந்தக் குறும்பும் துறுதுறுப்பும் இந்த அமைதியும் அழுத்தமும் ம்ஹும்ம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையே? மோவாயைத் தடவியபடி சேராவை நோக்கியவன், “தனியாகவா வந்தாய்?” என வினவினான்.

“இல்லை என் தோழி வந்தனாவுடன் வந்தேன்.”

“எங்கே அவங்களை காணோம்?”

“அவளோட ஷாப்பிங் இன்னும் முடியல.”

“நீ முடித்துவிட்டாயா?”

“ம்ம்ம்.” என்றபடி அருகே இருந்த சிறு பொருட்கள் அடங்கிய பாக்கினை விழியசைவால் காண்பித்தாள்.

“ஹே என்ன இவ்ளோ தான் உன் ஷாப்பிங்கா?” என்று இனியன் வியப்புடன் கேட்கவும், அவன் பேச்சு அவளைச் சீண்ட,
“அதற்காக நான் இந்த கடையையே வாங்க முடியாதில்லையா? எனக்கு எது தேவையோ அதைத்தானே வாங்க முடியும்.” என்று சூடாகப் பதில் கொடுத்தாள் சேரா.

சேராவின் வெடுக்கென்ற பேச்சில் இனியன் வாய்விட்டு நகைத்தான். “இது இது இது தான் நிலா. இவ்ளோ நேரமும் இங்கே யாரோ நாங்க ரொம்ப அமைதியாக்கும் என்று பாவ்லா காட்டிட்டு இருந்தாங்களே அவங்க யாரு நிலா?” என்று மேலும் சீண்டிச் சிரித்தான்.


அவன் சிரிக்கவும் சேராவின் முகம் சட்டென அதுவரை இருந்த இயல்பு தொலைத்து இறுகியது. தன் முக மாற்றத்தை அவனிடம் காட்ட மனமின்றிப் பார்வையை வேறு புறம் திருப்பியவளின் கண்களில் ஒரு கல்லூரி மாணவிகள் பட்டாளம் தென்பட்டது.

“ஏய் என் ஐஸ்கிரீமை எதுக்குடி புடுங்கின?”

“நீ நேத்து என் லஞ்சினை திருடிச் சாப்பிட்டில அதான்.”

“ஏய் ஏய் இது மகா அநியாயம்டி உன் புளிச்சுப் போன புளிச்சாதமும் என் குளுகுளு ஐஸ்கிரீமும் ஒண்ணாடி?”

“ஹி ஹி! புளிசாதம்னா புளிக்கத்தான் செய்யும் கண்ணம்மா.”

“அய்யே பெரிய கண்டுபிடிப்பு போடி.”

“சரி போய்டுறேன்.” என்றபடி அந்தப் பெண் ஐஸ்கிரீம் கோப்பையுடன் எழுந்து ஓட,

“ஏய் ஐஸ்கிரீம் திருடி ஓடாதடி!” என்று மற்றவள் துரத்த, அந்த இளைஞிகள் பட்டாளம் கலகலத்து நகைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்குத் தங்களைச் சுற்றி ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே மறந்து போனதைப் போலத் தாங்களே தங்களுக்கென்று ஒரு உலகத்தைச் சிருஸ்டித்து அதில் சிரிப்பும் கும்மாளமுமாக சஞ்சரித்தபடி அந்த இடத்தையே அதிர வைத்துக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த நிலாவின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது. ஒரு காலத்தில் அவளும் இப்படித்தானே. ஜானு, ராதா, ஷீலா, ரத்னா என்று தன் நட்பு வட்டத்துடன் பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிந்திருக்கிறாள். துன்பத்தின் நிழல் கூட அவள் மீது படாத காலம் அது. மனதில் கோபம், வெறுப்பு, துன்பம், சோகம் என்று எந்த எதிர்மறை உணர்வுகளும் அற்று மனம் தூய பாலாய் இருந்த காலம் அது.

அந்தக் காலம் அப்படியே உறைந்திருக்கக் கூடாதா? இனி எப்போதேனும் இந்த மனதை அழுத்தும் சுமைகளில் இருந்து விடுபட்டு அவள் மனம் இலவம்பஞ்சாய்ப் பறக்கும் காலம் வர முடியுமா? அவள் நெஞ்சின் ஏக்கத்தில் அவள் விழியோரம் நீர் துளிர்த்தது.

அதுவரை அவள் முகத்தையே பார்த்தபடியிருந்த இனியனுக்கு அவள் முகத்தில் தோன்றிய வேதனையின் சாரலும் விழிகளில் வழிந்த ஏக்கமும் மனதைக் காரணமின்றி என்னவோ செய்தது.

சிறு கேலிப்பேச்சுக்குக் கூட வெள்ளிச் சலங்கையாய் குழுங்கும் அவள் சிரிப்பு எங்கே? எதற்காக இந்த வேதனை!

அவளையே ஓர் ஆராய்ச்சிப் பார்வையுடன் நோக்கியபடியிருந்தான் இனியன். முன்பு ஜீன்ஸ் டாப் ஷர்ட், த்ரீ போர்த் தவிர அவள் வேறு உடைகளையே அணியாள் என்பது போல எப்போதும் அவைகளுடனேயே சுற்றிக்
கொண்டிருப்பாள்.

ஏன் சில சமயம் சேரனின் சட்டையையும் திருட்டுத்தனமாக எடுத்து அணிந்து அவனிடம் மாட்டிக் கொண்டு கொட்டும் வாங்கியிருக்கிறாள். தங்கையின் குறும்புகளைக் கூறும் போது சேரன் கூறிச் சிரித்திருக்கிறான்.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
ஆனால், இப்போது பெண்மையே உருவாய் கண்ணியமாய்க் காட்டும் ஒரு காட்டன் சல்வார். இழுத்து வாரிப் பின்னலிட்ட முடி. நெற்றியில் சிறு பொட்டு. குறும்பு தவழும் கண்களில் நிரந்தரமாகக் குடியேறிய அமைதியும் அழுத்தமும். அதன் பின்னணியில் மெல்லிய ஒரு சோகத்தின் இழை ஓடுகிறதோ? சலனமற்ற முகம். சிரிக்கவே தெரியாதது போன்று அழுத்தமாய் மூடியிருந்த சின்ன இதழ்கள். லிப்ஸ்டிக் போடாமலே இவ்வளவு ரோஜா நிறத்தில் மென்மையாக இருக்க முடியுமா ஒரு பெண்ணின் இதழ்கள்?


சட்டெனத் தலையைக் குலுக்கி கொண்டான் இனியன். என்ன செய்துகொண்டிருக்கிறான் அவன்? அவள் மாற்றங்களை அளவிடத் தொடங்கி இறுதியில் எங்கே வந்து நிற்கிறது அவன் எண்ணவோட்டம்? அவன் இதற்கு முன் இவளை இப்படி பார்த்ததே இல்லையே! இப்போது மட்டும் ஏன்?

தன்னைக் குறித்துத் தானே குழம்பியவன் அந்தக் குழப்பத்தை மனதின் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து, “நிலா!” என்று அழைத்தான். அவளை அழைத்த அவன் குரலின் மென்மை அவனுக்கே வியப்பாய் இருக்க ஒரு கணம் மௌனம் காத்தான்.

ஆனால் அவனின் அழைப்பில் நிலா நிமிடத்தில் தன்னை மீட்டுக்கொண்டாள். அவள் முகம் மீண்டும் அமைதியைத் தத்தெடுத்து நிர்மலமாய் மாறியிருக்க என்னவென்பதாய் அவனை ஏறிட்டாள்.

நிமிடத்தில் அவள் முகபாவத்தை மாற்றிக்கொண்ட விதத்தைப் பார்த்து இனியன் வியப்பின் உச்சிக்கே சென்றான். ஆக மேடமுக்கு இது மிகவும் பழகிய விடயம். இல்லையெனில் இவ்வளவு எளிதாக ஒருவரால் முகபாவத்தை மாற்றுவதென்பது முடியாத காரியம்.

அவன் மட்டும் சளைத்தவனா என்ன? தன் வழக்கமான புன்னகையுடன், “ஏதாவது சாப்பிடலாமா? என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்றான் இயல்பாக.

அப்போதுதான் அவன் எதுவும் உண்ணாமல் இருக்க தான் மட்டும் ஜீஸை அருந்திக்கொண்டிருப்பது உறைக்க, “சாரி சாரி இனியணண்ணா. நான் இதைக் கவனிக்கவில்லை. எனக்கு எதுவும் வேண்டாம். உங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என்றாள்.

அவளின் இனியணண்ணா என்ற அழைப்பு முதன் முதலாக ஏதோ ஒரு இனம் புரியா உறுத்தலை மனதினுள் விதைக்க, அந்த நெருடலை மனதினுள்ளே புதைத்தவன் சிறு புன்னகையுடன், “ஹப்பா இப்பவாவது கேட்கணும் என்று நினைவு வந்ததே.” என்று கேலி செய்தவன் அங்கிருந்த சிப்பந்தியை அழைத்து அவள் மறுக்க மறுக்க இரண்டுபேருக்கும் சில சிற்றுண்டிகளுடன் இரண்டு மாதுளை ஜூசும் ஓர்டர் செய்தான்.

அதற்கு மேல் மறுக்க முடியாமல் சேரா மௌனம் காத்தாள்.

சிற்றுண்டிக்கான ஆர்டரினைக் கொடுத்து விட்டு சேராவின் புறம் திரும்பியவன், “அப்புறம் நிலா உன் வாழ்க்கை எப்படிப் போகிறது? எங்க ஊர் பிடிச்சிருக்கா?” என்று வினவினான். இயல்பாக பேச்சை நகர்த்தும் பொருட்டு.

“ம்ம்.. ஸ்கூல், இல்லம், விடுதி என்று வாழ்க்கை அமைதியாகவே செல்கிறது. எனக்குப் பிடிச்ச வேலை வேறு.” என்று கூறி லேசாகப் புன்னகைத்தாள் சேரா.

“ம்ம்.. நிலா நீ கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுத்துப் படித்தாய்?”

நிலாவின் பதிலைக் கேட்ட இனியன் அதிர்ந்துவிட்டான். “ஏய் உன் கல்வித்தகமைக்கு சென்னையிலேயே நல்ல வேலை எத்தனையோ கிடைக்குமே. அதைவிட்டு எதற்கு இங்கே வந்து இப்படி டீச்சர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாய்? இதில் சலரியும் அவ்வளவு வராதே?”

“நான் பணத்துக்காக வேலை பார்க்கவில்லை இனியணண்ணா. எனக்கு இந்த பீல்டில் ஈடுபாடு அதிகம். அதனால் இந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.” அழுத்தமான குரலில் பதில் கொடுத்தாள் நிலா.

இனியனும் விடுவதாய் இல்லை. “சரி! உனக்கு இந்த ஆசிரியத் துறையில் ஈடுபாடு என்றாலும் கூட சென்னையிலேயே இதே வேலையைச் செய்திருக்கலாமே. சென்னையில் இல்லாத பாடசாலைகளா?”

நிலாவின் முகம் ஒருகணம் தடுமாற்றத்தைக் காட்டியதோ?

இனியன் கூர்ந்து பார்க்கும் போதே, “பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான். சென்னை சலித்துவிட்டது. ஒரு மாற்றத்திற்காக வேலையையாவது இன்னொரு ஊரில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவு தான்!” என்றாள் நிலா.

முன்னொரு சமயம் ஏதோ ஒரு பேச்சின் இடையே இனியன், “ஒரே தூசி, சாக்கடை நாற்றம், சுத்தமே இல்லை.” என்று சென்னையைக் குறிப்பிட்டுப் பேசியபோது, அதைக் கேட்டிருந்த நிலா கோபத்துடன்,

“எங்கள் ஊரில் இவ்வளவு குறைகள் இருந்தால் பின்னும் ஏன் இங்கேயே இருக்கிறீர்களாம்? உங்கள் ஊரைப் பார்த்துப் போக வேண்டியது தானே? உங்களுக்கு படிக்க, வேலை பார்க்க என்று உங்கள் தேவைக்கு மட்டும் எங்கள் ஊர் வேண்டும். அதில் குறையும் வேறு சொல்ல வேண்டுமா? எங்கள் ஊர் நன்றாகத் தான் இருந்தது. உங்களைப் போல் வெளியூர்க்காரர்கள் வந்து தான் எங்கள் ஊரை இப்படிக் கெடுத்துவிட்டீர்கள். தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது போலன்னு இதைத்தான் சொல்லுவது போல.” என்று கோபத்துடன் படபட பட்டாசாய் அவள் பொரியவும்,

அவள் கோபத்தைப் பார்த்துச் சிரித்த சேரன், “ஏய் அவன் என்ன சொல்லிட்டான்னு நீ இப்படிக் குதிக்கிறாய். அவன் சொன்னது சரி தானே? ஊரா இது!” என்று இனியனுடன் சேர்ந்து கொண்டு அவளை மேலும் சீண்டினான்.

அதற்கு, “போடா துரோகி! பிறந்த ஊரில் சற்றும் பாசம் இல்லாத ஜென்மம்.” என்று தமையனையும் சேர்த்துத் திட்டியவள், “என் ஊர் எப்படி இருந்தாலும் எனக்கு என் ஊர் தான் பெஸ்ட். இந்தச் சாக்கடை நாற்றமும் எனக்குச் சந்தன வாசம் தான். இந்தத் தூசிக் காற்றும் எனக்குத் தூய்மையான பூங்காற்றுத் தான்!” என்றாள் அழுத்தமாக.

சேரன் அதற்கும், “அடேங்கப்பா பெரிய ஊர்ப்பாசம் தான். நாளை திருமணம் முடித்ததும் இங்கிருந்து செல்லத்தானே போகிறாய்.” என்று மேலும் அவளைக் கடுப்பேற்றவும்,

“ம்ஹும்… நான் இங்கிருந்து போகவே மாட்டேன். இங்கிருந்து செல்வதை நினைத்தாலே மூச்சு முட்டுகிறது. இங்கேயே மாப்பிள்ளை பார்த்துவிடுண்ணா. இல்லையெனில் நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்.” என்று வீம்பாக முறைத்துவிட்டுச் சென்றாள்.

அன்று சென்னையை விட்டு செல்வதை நினைத்தாலே மூச்சுமுட்டுகிறது என்று கூறிய அவளுக்கு இன்று சென்னை சலித்துவிட்டதாம்!

“ஓ…!” என்ற இனியன் அதற்கு மேல் அது குறித்து எதுவும் பேசாமல் சிற்றுண்டியில் கவனத்தைச் செலுத்தியவன் திடீரென நினைவு வந்தவன் போல்,

“ஹ்ம்ம் நிலா! அன்றே உன்னிடம் கேட்கவேண்டும் என்று எண்ணினேன் பின் அவசரமாகக் கிளம்ப வேண்டியதால் மறந்தே போயிற்று. எனக்கு சேரனின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்க முடியுமா? அவனின் பழைய எண் பாவனையில் இல்லை என்று வருகிறது.” என்று கேட்டான்.

“தொலைபேசி இலக்கம் தானே கேட்டேன் அதற்கு எதற்கு இவ்வளவு தயக்கம்?”

“sorry இனியண்ணா என்னிடம் அந்த இலக்கம் இல்லையே!” என்றாள் சிறு சங்கடத்துடன் சேரநிலா.


இனியன் சற்று வியப்புடன் அவளைப் பார்த்தான். அண்ணனின் தொலைபேசி இலக்கம் தங்கையிடம் இல்லையா. அதுவும் அண்ணன் சம்மந்தப்பட்டதாயின் சிறு கிறுக்கலைக்கூட மனப்பாடம் செய்து வைக்கும் அன்புத் தங்கையிடம்.


“அது அது... முன்பு இருந்தது. அப்புறம் அடிக்கடி அவன் தொலைபேசி இலக்கத்தை மாற்றியதால் தேவையெனில் பேசிக்கொள்வதற்கு வீட்டு இலக்கம் உள்ளதே. அதனால் இந்த இலக்கம் தேவைப்படவில்லை. உங்களுக்கு வேண்டுமானால் வீட்டு எண் கொடுக்கவா?”


தோழியுடன் வெளியில் கடைகளுக்குச் சென்றால் கூட ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் அண்ணனிடம் பேசியில் அழைத்துக் கருத்துக் கேட்கும் அன்புத் தங்கைக்கு இங்கே தனியே வசிக்கும் போது அண்ணனின் கையடக்கத் தொலைபேசி எண் தேவைப்படவில்லையாம். எங்கேயோ உதைக்கிறதே.


புருவ மத்தியில் முடிச்சு விழ, “சரி கொடேன்!” என்று அந்த இலக்கத்தைப் பெற்றுக்கொண்டவன், கையைத் திருப்பி மணி பார்த்துவிட்டு,

“சரி நிலா நான் வருகிறேன். வசந்த் இந்நேரம் என்னைப் பார்க்கிங் ஏரியாவில் தேடிக்கொண்டு இருப்பான். ஒரே ஊரில் தானே இருக்கிறோம். மீண்டும் சந்திக்கலாம்.” என்று அவளிடம் விடைபெற்றான்.


அவனுக்குச் சிறு தலையசைப்புடன் விடைகொடுத்துவிட்டு, “ஊப்ஸ்!” என்ற ஓர் பெரு மூச்சுடன் திரும்பிய சேரநிலா, தன்னையே ஓர் கூர் பார்வையால் அளந்தபடி அருகில் நின்ற வந்தனாவைக் கண்டு திகைத்தாள்.


தொடரும்...
 
#3
Nice😊
 
#4
Nice akka
 
#5
Nice epi sis...
 
Top