அத்தியாயம் 7 - இதழ் 12

Rosei Kajan

Administrator
Staff member
#1


கனவுகளின் பாதிப்பு யாழினி எழுந்ததும் கூட அவளை விட்டு அகலவில்லை. கனவில் அவள் முத்தமிட்ட முகமே நிஜத்திலும் கண்ணெதிரே மிக நெருக்கமாகத் தெரிய, அதே மகிழ்ச்சியோடு அபரஜித்தின் நாடியில் ஒரு முத்தத்தைப் பதித்தாள்.

அவளின் சத்தம் கேட்டு என்னாச்சுதோ ஏதாகிச்சுதோ என்று பதைபதைத்து ஓடி வந்த அபரஜித்தோ, சற்றுமே எதிர்பாராத இந்த முத்தத்தால் தன் வசமிழந்தான்.

"ஹனி..." என்று கிறக்கமாக அழைத்தவன், அவள் உடல் நிலையையும் மறந்து அவள் முகமெங்கும் முத்தமிட்டவன், "ஐ லவ் யூ ஹனி... இனிமேலாவது என்னை விட்டுப் பிரியாமல் இரு! எந்தக் காரணங்களுக்காகவும் நான் உன்னை விட்டு இனி விலக மாட்டன்."என்றான் கண்கள் கலங்க.

அவன் நீண்ட முத்தத்தில் தன்னிலைக்கு வந்த யாழினியோ அபரஜித்தின் இந்த உணர்ச்சி வேகத்தில் திகைத்துப் போயிருந்தாள். கனவுகளின் விளைவாய் அபரஜித் மீது இவள் இனம் விளங்க முடியாத ஒரு உணர்வு கொண்டிருந்தாலும் இத்தனை விரைவாக அதைக் காதல் என்று ஏற்றுக் கொள்ள முடியாது குழம்பித் தவித்தாள்.

தனது முன்ஜென்மக் கனவுகள் பற்றி அபரஜித்திடம் கூறி விடுவோமா என்று சிந்தித்தவளின் முன் அதை விடப் பெரும் கேள்வி ஒன்று எழுந்தது. அபரஜித் மீது தனக்கும் நாட்டம் இருப்பதை மனது ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும் மூளை சுட்டிக் காட்டவே செய்தது. தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிந்தால் அபரஜித் தன்னை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று எண்ணியவளின் கண்கள் அவள் இயலாமையை வெளிப்படுத்தும் முகமாய்த் தண்ணீரைக் கொட்டின. இவளின் சொரிந்த விழிநீர் கண்ட அந்த அன்புக் காதலனோ, அவள் அனுமதியின்றி தான் முத்தமிட்டதனால் தான் அழுகிறாள் என்று எண்ணி அவளை ஆசுவாசப்படுத்த முனைந்தான். ஆனால், அந்த அப்பாவிப் பெண்ணின் கண்ணீரோ மேலும் மேலும் அதிகரிக்க, அதைத் தாங்க மாட்டாதவனாய், தான் எதற்கு ஆறுதல் படுத்துகிறோம் என்பதையும் மறந்து அவளைத் தன் நெஞ்சிலே சாய்த்து முதுகை மெதுவாக வருடி விட ஆரம்பித்தான்.

அவளை அணைத்து ஆறுதல்படுத்திக் கட்டிலில் தலையணையை முண்டுகொடுத்து உட்கார வைத்தவன் குளிர்ந்த நீரை அருந்தக் கொடுத்தான். அவளும் எதுவும் பேசாது வாங்கியருந்தினாள். அவள் மனப் போராட்டத்தைப் புரிந்து கொண்டவனாய்,"ரியலி ஸொரி ஹனி... ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அப்படிச் செய்திட்டன். மன்னிச்சிடு!" என்று இறங்கிய குரலில் கூறினான். எப்போதும் கம்பீரமாக அவளோடு அடாவடியாய் பேசுபவன் தாழ்ந்து பேசுவது பிடிக்காமல்,"எனக்குக் கோபம் ஒன்றும் இல்லை அபரா... கொஞ்சம் குழப்பத்தில இருக்கிறன். என்னைக் கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கோ. நான் கொஞ்ச நேரத்தில உங்களோட வடிவாக் கதைக்கிறன். "என்றதும் அவளுக்குத் தனிமை கொடுத்து எதுவும் பேசாது விலகிச் சென்றான் அபரஜித்.

அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் அங்கே வந்தார் செல்வி. அவரைப் பார்த்ததும் ஒரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் தன்னிலையை எண்ணி பச்சாதாபமும் கொண்டாள் யாழினி.

"என்ன யாழம்மா... இப்பிடிச் சோர்ந்து போயிருக்கிறியள்? உடம்புக்கு என்ன செய்யுது? முகமெல்லாம் இப்பிடிக் கறுத்துக் கிடக்கே!" என்று ஆதூரமாய் வினாவினார். அவரின் அந்த அன்பைக் கூடத் தாங்க மாட்டாதவளாய் கண்ணீர்ச் சுரப்பிகளை மறுபடியும் திறந்தாள் அந்த அபலைப் பெண்.

"எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது செல்வியக்கா? நான் அப்பிடி என்னதான் பாவம் செய்தன்? இந்த விதம் விதமான கனவுகள், அதை விட நேரில் இப்போ அபரஜித்... எந்த ஆணைக் கண்டும் தடுமாறாத என்ர மனசு அபரஜித்தைக் கண்டதும் ஏன் இப்பிடிக் குழம்புது? கனவில் வந்த அபரசேகரனாகவே நினைக்க வைக்குதே... இப்போ அவன் வேற லவ் பண்ணுறன் என்று சொல்லுறான்... நான் இப்ப என்ன தான் செய்ய?"என்று குலுங்கி அழுதவளை ஆறுதல் படுத்தும் வகையறியாது வாளாவிருந்தார் செல்வி. யாழினியின் அழுகை தொடரவும் அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவராய், "நீங்க இவ்வளவு நாளும் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் யாழம்மா. உங்களுக்கு உண்மையில அந்தத் தம்பியைப் பிடிச்சிருக்கு என்றால் எல்லா உண்மையையும் அவரிட்ட சொல்லி அவரைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கோ. எனக்கென்றா அவருக்கு உண்மை தெரியும் போலவும் இருக்கு. ஏனென்றா நான் வரேக்க அவர் என்ர கண்களை நேருக்கு நேராகப் பார்த்தது போல இருந்துச்சு." செல்வி கூறவும், அழுகையை நிறுத்தி அவரையே யோசனையாகப் பார்த்தாள் யாழினி. அவர் சொன்ன இந்த விடயம் அவளை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்த அவள் அழுகை மறந்து சிந்திக்க ஆரம்பித்தாள். இனி அவள் ஒழுங்கான முடிவெடுப்பாள் என்று புரிந்து கொண்ட செல்வி அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்.

முன்னிரவு நேரம். அறைக்குள் அடைந்து கிடப்பது மேலும் மனப் புழுக்கத்தை அதிகரிக்கச் செய்ய மெதுவாய் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள் யாழினி. அவள் அரவத்தை உணர்ந்த அபரஜித் உடனடியாக எழுந்து வந்தவன், அவள் தோள்களை பிடித்து அழைத்துச் சென்று தோட்டத்தில் இருந்த ஒரு மர இருக்கையில் அமர வைத்தவன், "அஞ்சு நிமிசம் வெய்ட் பண்ணு ஹனி... இரவுச் சாப்பாட்டை இங்கேயே கொண்டு வாறன்." உரைத்து விட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றான்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#2
பலவித மலர்கள் அடங்கிய அந்தச் சோலையில் எழுந்த நறுமணமும் தென்றல் காற்றும் மனதுக்கு இதம் சேர்க்க, ஒரு முடிவெடுத்தவளாய் அபரஜித்துக்காய்க் காத்திருந்தாள் யாழினி . ஒரு கிண்ணத்தில் ரசம், சாதம் பிசைந்து கரண்டி வைத்து எடுத்து வந்தவன் அவளுக்கு ஊட்ட ஆரம்பிக்க மறுப்பேதும் சொல்லாமல் அவளும் வாங்கி உண்டாள்.

அவள் உண்டு முடித்ததும் வாய் துடைத்து நீரை அருந்தக் கொடுத்தவன், பாத்திரங்களை வைத்து விட்டு அவளருகில் வந்தமர்ந்தான்.

"நீங்க சாப்பிடேல்லையா?"

"இல்ல... அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நீ இப்ப என்ன சொல்ல நினைச்சிட்டிருக்கிறாய்? அதை முதல்ல சொல்லு." அவன் கூறவும் சில நிமிடங்கள் மௌனம் சாதித்து விட்டு தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள் யாழினி.

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் விசுவமடு, இலங்கையில் தான். ரெண்டு அண்ணாக்கு ஒரு தங்கச்சி... வீட்டில எல்லாருக்கும் சரியான செல்லம். நான் பத்தாம் வகுப்புப் படிக்கேக்க ஒருநாள் அண்ணாவோட சைக்கிளில பள்ளிக்கூடம் போய்டிருந்தன். அப்ப திடீரென்று அடிச்ச ஒரு கிபிரில (விமானக் குண்டுத் தாக்குதல்) அண்ணா அதே இடத்தில சரி. எனக்கும் நல்ல காயம். என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் ஒரு மாதிரி பிழைக்க வைச்சிட்டினம்.

ஆனா எனக்கோ ஏன்டா உயிரோட எழும்பினம் என்ற நிலைமையாப் போச்சுது. நான் இனி சொல்லப் போறதை உங்களுக்கு நம்புறது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனாலும் கேளுங்கோ அபரஜித்...

மயக்கத்தில இருந்து எழும்பின பிறகு என்ர கண்களுக்கு சில நேரங்களில கறுப்புப் புகை போல ஆட்களை சுற்றித் தெரியத் தொடங்கிச்சு. அந்த ஆட்களின் கையைப் பிடிச்சுப் பார்த்தால் எனக்கு அவங்கள் எப்போ, எப்பிடி சாகப் போகினம் என்று தெரியும்.முதல்ல இந்த விசயத்தை நான் உணர்ந்த போது எனக்குச் சரியான பயமாக இருந்துச்சு. போகப் போக இந்த சக்தியை வைச்சு சண்டையில எங்கட சனத்திட உயிர் போகாமல் காப்பாத்தலாமே என்று தோண, வீட்டில சொல்லி அதைச் செயற்படுத்த ஆரம்பிச்சன்.

முதல்ல யாரும் என்னை நம்பேல்ல. ஆனா நான் சொன்னபடி ஆக்கள் சாகவும் அதுக்குப் பிறகு எல்லாருமே நான் சொன்னதைக் கேட்டு நடக்க தொடங்கிச்சினம்.

நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் ஆக்களிட கையைப் பிடிச்சுப் பார்த்து எங்க குண்டு விழப் போகுதென்று தெரிஞ்சு கொண்டு ஆக்களை அந்த இடத்தை விட்டு இடம் பெயரச் செய்வன். என்ர சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து ஊர் ஆக்கள் எல்லாருமே எனக்குக் கிட்டவாக வந்து வாழ ஆரம்பிச்சாங்க.

ஒருநாள் நான் இருந்த பங்கருக்குப் (பதுங்கு குழி) பக்கத்தில ஒரு சிப்பாய் எல்லை தாண்டி வந்துவிட்டான். எதேச்சையாக அவனை நான் தொட அவன் இன்னும் சில நிமிடங்களில் சாகப் போகிறான் என்று தெரிய வந்துச்சு. எதிரியாக இருந்தாலும் அவன் உயிரும் ஓர் உயிர் தானே என்றிட்டு நான் அவனை வேறு பக்கமாகப் போக உதவி செய்தன்.

இது நடந்து சில நாட்களில நான் மாமா ஒராளைப் பாக்க ஆஸ்பத்திரிக்கு போயிருந்த நேரம் என்ர குடும்பம் முழுவதும் ஒரு துப்பாக்கிச் சூட்டில மேல போய்ட்டாங்க. நான் திரும்பி வந்து அவங்களைச் சுற்றி இருந்த கரும்புகையைப் பிடிச்சுப் பார்த்தால், நான் காப்பாத்தின அந்த சிப்பாயே தான் என்ர குடும்பத்தைச் சுட்டுத் தள்ளியிருந்தான்.

அப்போது தான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது. என்னால விதியை மாற்ற முடியாது என்று. அன்றைக்கு மட்டும் நான் அவனைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால் சில நேரங்களில என் குடும்பம் தப்பியிருக்கலாம். போக வேண்டிய உயிர் ஏதோ ஒரு வகையில போகத்தான் செய்யும். நான் காப்பாத்தினவங்க கூட சில மாதங்களில வேறு வகையில் இறந்தாங்க. அதனால நான் அதுக்குப் பிறகு மற்றவர்களைக் காப்பாற்றுவதை நிறுத்திக் கொண்டேன்.

இதை விட என்னால ஆவிகளையும் பார்த்துப் பேச முடியும். சில நேரங்களில் ஆவிகள் ஏதாவது நியாயமான உதவிகள் கேட்டால் செய்து கொடுப்பேன். உதாரணமாக நான் இப்போ அடிபட்டிருக்கிறது கூட இறந்து போன வாணியின் ஆவிக்கு உதவி செய்யப் போய் தான். இதை விட, செல்வியக்கா என்று ஒராள் நான் அவுஸ்ரேலியா வந்த நாளில இருந்து என்னோட இருக்கிறாங்க.

அவவும் என்னைப் போல படகில அவுஸ்ரேலியா வந்தவ. அவ வந்த படகு மூழ்கின நேரம் அவங்க இறந்திட்டாங்க. தன்ர மகனைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்காக என்னோட இருக்கிறாங்க.

இதெல்லாத்தையும் விட எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். ஒரு இளவரசி, ஒரு வீரனுக்காகக் காத்திருப்பது போல. அந்த இளவரசி என்னைப் போலவே இருப்பா. உங்களை முதல் முதலாகச் சந்தித்த அன்றைக்கு வந்த கனவில அந்த வீரன் உங்களைப் போல இருந்தான்.

அதன் பிறகு அடிக்கடி விட்டு விட்டு சில காட்சிகள் கனவுகளாக வர ஆரம்பிச்சுது. கனவுகளின் தாக்கமோ, அல்லது நீங்கள் என்னை இப்பிடி ஒரு அம்மா போல பார்த்துக் கொள்ளுறதோ, எதுவென்று எனக்குத் தெரியல... உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு அபரா... உங்க கூடவே காலம் பூரா வாழ்ந்து முடிக்கணும் போல ஆசையாக இருக்கு. என்னைப் பற்றி முழுவதும் தெரிஞ்சதுக்குப் பிறகு முடிவெடுக்க வேண்டியது இப்போ உங்கட கையில..."

பெரிதாய் பேசி முடித்தவளையே வைத்த விழி விலக்காது பார்த்திருந்தான் அபரஜித்.நம்புவதற்கு கடினமான யாழினியின் இந்தக் கதைகளை நம்புவானா அபரஜித்? இல்லை அவள் சக்தியை அறிந்து பேய்களோடு வாக்கிங் போகும் அவளிடமிருந்து ஒதுங்கிச் செல்வானா? தன்னுயிரைப் பணயம் வைத்து அவன் உயிர் காக்க முனைந்தவன், இனி அவளின் இந்த அதி அற்புத திறமைகளால் எடுக்கப்போகும் முடிவு என்னவோ? காற்று கை சேருமா?
 
Top