தொடர்கதைகள் அத்தியாயம் 6

Rosei Kajan

Administrator
Staff member
#1
அகன்ற வரவேற்பறையில் ஒருபுறமாகப் போடப்பட்டிருந்த ‘ட’ வடிவ சோஃபாவில் அமர்ந்திருந்த மதுராவும் நித்தியும், எதிர்ச்சுவரில் பொருத்தியிருந்த எல் இ டி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த திரைப்படத்தில் இலயித்திருந்தனர்.

கலங்கிய குட்டையாகி நலிந்து ஒடுங்கிக் கிடந்த மதுராவின் மனம், இங்கு வந்ததிலிருந்து சற்றே சற்று தெளிவுக்கு வந்திருந்தது. அதற்கு முழுக்காரணமும் நித்தியும் அவள் அன்புமே!

காலையில் கல்லூரி செல்பவள் திரும்பி வரும் வரை மந்த கதியில் செல்லும் மதுராவின் பொழுது, அதன் பின்னரோ மின்னலென விரைந்து போகும்.

“ம்ம்...கிளம்புங்க கிளம்புங்க; இப்படியே ஒரு சுற்று நடந்திட்டு வரலாம்!” என்பதில் ஆரம்பித்து, பார்த்துப் பார்த்து உண்ணத் தருவது வரை சகோதரிக்கும் மேலாக, தாயாய் மாறிப் போனாள் நித்தி. அச்சிறுபெண்ணின் செய்கையில் கசியும் தாய்மையின் பரிவில், திக்குமுக்காடிப் போனாள் மதுரா.

“படமா? நான் பெரிசாப் பார்க்கிறதில்ல; நீர் பாரும் நித்தி!” மதுரா மறுக்க மறுக்க, “உங்களுக்குப் பிடிக்க இல்லை என்றாலும் என்னோட வந்திருங்க!” வற்புறுத்தி, இங்கு வந்த ஒரு கிழமையில் இது மூன்றாவது படம்.

அவர்களின் முதுகுப்புறமாக இருந்த சிறு காரிடாறினால், கிளினிக்கிலிருந்து வரவேற்பறைக்குள் வந்த கார்த்திகேயன், மதுராவின் பக்கமாக வந்து அவளருகில் நெருங்கி அமர்ந்தவன்,

“ஆன்ட்டி, இந்தா பாருங்க உங்கட மகள்; ஆசைதீரப் பார்த்துக் கதையுங்க!” கணனியை அவள் மடிமீது வைத்துவிட்டு, திரையில், திடுக்கிடும் ஆச்சரியத்தோடு பார்த்த கமலாவோடு முறுவலித்தான்.

வயிறு குலுங்க நகைக்கும் திரைப்படத்தில் கவனமாக இருந்த மதுரா, கண்ணிமைக்கும் நேரத்தில் அருகிலமர்ந்த கார்த்திகேயனின் செயலில் விதிர்விதிர்த்துப் போனாள்.

சட்டென்று, அவனை முறைத்தது அவள் வதனம்!

அனிச்சையாக நகர்ந்து நித்தியோடு ஒட்டிக் கொண்டமர்ந்தவளின் விழிகளில் கலக்கமும் குடிவந்திருந்தது. கணனியையோ, அதில் தெரிந்த அன்னையையோ, கார்த்திகேயன் சொன்னதையோ கிரகிக்க முதல், அவன் செயலே அவளைப் பாதித்தது!

அவளின் முறைப்பையும் தள்ளியமர்ந்த விதத்தையும் பார்த்த கார்த்திகேயன் ஒருகணம் புரியாது தடுமாறியவன், அவள் நகர்ந்த வேகத்தில் தடுமாறிய கணனியை, சோஃபாவில் அவள் புறமாகத் திருப்பி வைத்தான்.

“மதுரா, உங்கட அம்மா உங்களோட கதைக்க வேணுமாம்; அதனால தான் கொண்டு வந்து தந்தன்.” என்றவனுக்கு, அவள் தள்ளியமர்ந்தது ஏனென சற்று மெதுவாகவே விளங்கியது. அவளின் அச்செய்கை, அவன் மனதுக்குத் துளியும் உவப்பாக இருக்கவில்லை!

“சாதாரணமாகத்தான் பக்கத்தில் இருந்தன்! அதுவும், நீங்களும் உங்கட அம்மாவும் எதிர்பாராது கதைத்துக் கொள்ளட்டும் என்று...பச்...” முகம் சுருங்க, தெளிவாகவே முணுமுணுத்தவன், சட்டென்று எழுந்து, திரும்பியும் பாராது க்ளினிக்குக்குள் புகுந்து மறைந்தான்.

சில நொடிகளில் நடந்தவற்றைப் பார்த்திருந்த நித்தி தன்னுள் பொங்கிய நகைப்பை, மதுராவின் கன்றிப்போன முகத்தைப் பார்த்து அடக்கிக் கொண்டவள்,

“என்னாச்சு மதுரா? அண்ணா சர்ப்பரைஸா உங்கள கதைக்க வைக்க நினைத்தார் போல! திடீரென்று பக்கத்தில இருந்ததும் பயந்து போனீங்களா?” என்றே கேட்டாள். வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த அவளுக்கு மதுராவின் கோபம் ஏனென்று புரியவில்லை.

எப்போதும் ஆண்களோடு எட்டி நின்றே பழகியவள் மதுரா. இப்போதோ, ஆணொருவனால் வலிக்க வலிக்க வாங்கிக் கட்டிக் கொண்டவளுக்கு கார்த்திகேயனின் செய்கையிலும் சட்டெனச் சினமே மூண்டது.

அதேநேரம், மனம் சுணங்கிச் சென்றவனின் பாவனையில் தன் தவறும் விளங்கியது! அவன், தானும் கணனித் திரையை பார்க்கும் நோக்கில் நெருங்கி அமர்ந்ததை உணர்ந்து கொண்டவளுக்கு, தன் செய்கை என்னவோ போலிருந்தது.

‘இங்கு வந்ததிலிருந்து மிகவும் மரியாதையாக நட்போடு நடத்துபவரை, ஒரு நொடியில் அவமானப்படுத்தி விட்டேனே!’ மனதில் குன்றிப் போனாள்.

“மதும்மா! எப்படி ராசாத்தி இருக்கிறாய்? உன்னைப் பார்த்து எத்தனை மாதமம்மா!” தழுதழுத்தார் அவள் தாயார் கமலா.

“முதல், ஒழுங்காச் சாப்பிடுறதில்லையா? இப்படி மெலிஞ்சிருக்கிறாய்! அதுசரி, இங்க எப்ப வந்தனீ? சொல்லவே இல்லை! கணேஷும் வந்திருக்கிறாரா?” சட்டுச்சட்டென்று வினாக்கள் அணிவகுத்து வந்தன.

திடீரென்று மகளைக் கண்ட சந்தோசத்தில் திக்கு முக்காடிப் போனார் கமலா. மூத்தமகள் தாய்மை அடைந்தாள் என்பதே எவ்வளவு மகிழ்வு! ஒவ்வொரு கணமும், மகளைக் காண, அவளைப் பரிவாகத் தடவ, மகள் விருப்பறிந்து வாய்க்கு ருசியாக சமைத்துப் பரிமாற அத்தாயுள்ளம் எல்லையற்று ஏங்கினாலும், பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்.

அப்படியிருக்க, தன் உருவையும் காட்ட மறுத்தாள் அவர் மகள். அதில், மிகவும் மனம் சுணங்கி இருந்தவர், இப்போது மகளுருவை அணுவணுவாக இரசித்து வருடினார். அவள் நயனங்கள் பழைய மலர்வைத் தொலைந்திருப்பதை துல்லியமாகக் கண்டு கொண்டது அத்தாயுள்ளம்.

அவரின் மூன்று மகள்களிலும் மிகவும் அமைதியான சுபாவம் மதுராவுக்கு! எதற்கும் மல்லுக்கு நிற்காது, சமாளித்து, அணுசரித்துப் போகக் கூடியவள் அவள். சின்ன சின்ன விடயங்களைப் பெரிது படுத்தாது, அதன் போக்கில் கடந்து செல்பவள்.

‘இன்றைக்கு ஏன் இப்படி இருக்கிறாள்?! முதல், ஏன் இங்க வந்தாள்? பழக்கமற்றவர்களோடு இலேசில் வந்து தங்குற அளவுக்குப் போக மாட்டாளே!’ கமலாவின் மனதில் அமிழ்ந்திருந்த கவலைக்குமிழிகள் மெல்ல மெல்ல உயிர்பெறத் துடித்தன!

தாயையே சில கணங்கள் பார்த்திருந்த மதுராவின் விழிகள் குபுக்கென்று நிறைந்தன!

அவளையே பார்த்திருந்த நித்தி, சட்டென்று அவள் கரத்தை இறுகப்பற்றி அழுத்தினாள். “ஆன்ட்டி, நான்தான் நித்தி! எப்படி இருக்கிறீங்க? உங்களைப் பார்த்தால் மதுரா போலவே இருக்கு!” பேச்சையும் ஆரம்பித்தாள்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
தான் கேட்டதுக்கு மகள் மௌனமாக இருக்க, மனதில் சலனம் கொண்ட கமலா, குறுக்கிட்ட நித்தியிடம், “நான் நல்லா இருக்கிறன்மா!” முறுவலித்தவர், “இவள் எப்ப உங்களிட்ட வந்தாள்?” மீண்டும் அதிலேயே நின்றார்.

“அதுவா ஆன்ட்டி, நேற்றுத்தான்; ஒருமுறை வீட்டுக்கு வாங்க என்றிருந்தம்; நேற்று மீண்டும் அந்தப் பக்கம் போனோமா, உங்கட மகளைக் கடத்திக் கொண்டு வந்தாயிற்று!” கேலியாகச் சொல்லி முறுவல் செய்தாள் நித்தி.

“அப்ப கணேஷ்! தம்பி வரவில்லையா மது? சாப்பாட்டுக்கு என்ன செய்வார்மா!? நீ எப்பத் திரும்பிப் போவாய்?” மீண்டும் கேள்விகள்!

கேட்டிருந்த மதுராவின் முகத்தின் இறுக்கத்தோடு போட்டி போட்டது, சினத்தில் ஜொலித்த நித்தியின் வதனம்!

‘ஆமாம் ஆமாம்; அவனுக்கு சாப்பாடு போடத்தான் ஆளில்லை! கள்ள ராஸ்கல்; சாப்பாட்டில் விசம் கலந்து கொடுக்க வேணும்!’ பற்களை நறநறத்தபடி முணுமுணுத்தது, அருகில் நெருங்கியிருந்த மதுராவின் செவிகளைத் தழுவியது.

தாய் தன்னை ஆராய்வதை உணர்ந்து கொண்டாலும், வாய் திறந்து பேச முடியவில்லை அவளால்! நெஞ்சுக் கூட்டில் ஏற்பட்ட வேதனையின் இரணவலி, தொண்டைக்குழியில் துக்கப்பந்தாக அடைத்துக்கொள்ள, திண்டாடிப் போனாள் அவள். கட்டுப்படுத்த முடியாது, கரமுயர்த்தி தன் நெஞ்சைத் தடவிக்கொண்ட மதுராவை, தோளோடு அணைத்துக்கொண்ட நித்தி, “உங்கட அம்மா உங்களையே பார்க்கிறார் மதுரா.” அடிக்குரலில் எச்சரிக்கை விட்டாள்.

“ஏன் ஆன்ட்டி, உங்கட மகள் எங்கட வீட்டில் வந்து நிற்கக் கூடாதா? ஏன் இங்க வந்தாய் என்பது போல கேட்கிறீங்க!” வேண்டுமென்றே ஒருமாதிரிக் குரலில் கேட்டவள், அருகில் தெரிந்த சுதாவிடம், “பாருங்க சித்தி, உங்கட ஃப்ரெண்ட் கதைக்கிற கதையை! (பேச்சை)” முறையிட்டாள்.

“அப்படி எல்லாம் இல்லையம்மா, கணேஷ் தம்பி தனியாக என்று தான்...” என்ற தாயை, இப்போது, சலனமின்றிப் பார்த்தாள் மதுரா.

நித்தி பேச்சை வளர்த்த சிறுபொழுதில் ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டவள், “அவர்தான் போகச் சொன்னார்மா! இரவு வேலைதானே; அநேகம் நான் தனியாகத் தான் நிற்பன். கொஞ்ச நாட்கள் இங்க நிற்கச் சரி என்றார்!” இயந்திரத்தனமாக வார்த்தைகள் வெளிவந்தன!

“அவ்வளவு தூரமில்லை அம்மா, அவர் வந்து போகலாம். நித்தியோடு நிற்பது தங்கச்சிகளோடு இருப்பதுபோல, நம் வீட்டில் இருப்பதுபோல இருக்கும்மா!” தொடர்ந்தவள் விழிகள், அவள் பேச்சை அசட்டை செய்து கசிந்தன!

பார்த்திருந்த கமலாவோ பதறித் துடித்து விட்டார்.

சுதாவின் நெற்றி யோசனையில் சுருங்கியது!

‘எதுவோ நடந்துதான் இருக்கு! மதுரா, ஆளே சரியில்லை; என்னைக் கண்டும் ஒரு வார்த்தை கதைக்க நினைக்க இல்லையே! கமலாவின் பயம் சரிதானா?

இவர்கள் எதையாவது மறைக்கிறார்களோ! நித்தி...ஹ்ம்ம்...அவள் முகம், பார்வை எதுவுமே சரியில்லை. அதோட, ஒருதரம் போய்ப் பார்த்திட்டு வாங்க என்றதற்கு என்ன முறுக்கு முறுக்கியவே திரும்பவும் அங்க போனவையோ !? அப்படி என்ன வேலை!? இவன் கார்த்தியும் நேராகப் பார்த்துக் கதைக்கிறான் இல்லை!” பெரிதும் குழம்பினார் சுதா.

“விடுங்க விடுங்க ஆன்ட்டி; உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்றைக்கே கொண்டு போய் விடுறம்!” மீண்டும் முறுக்கினாள் நித்தி.

“அப்படியெல்லாம் இல்லையம்மா! அவருக்குச் சரி என்றால் எனக்கென்ன, தாராளமாக நிற்கட்டும்; எனக்கும் அதில் சந்தோசம்தான். இந்த நேரத்தில் சந்தோசமாக கலகலவென்று இருக்க வேணும்.” என்றவர்,

“வேற ஒரு பிரச்சனையும் இல்லையே மது!” கேட்டவர் குரலில், கவலை ததும்பி நின்றது.

“இல்லை...அப்படியெல்லாம் இல்லம்மா; ஏனிப்படிக் கேட்கிறீங்க?” விழிநீரோடு முறுவலித்த மகளையே பார்த்திருந்தார் கமலா .

“ராஜாத்தி, ஏதாவது என்றால் அம்மாவிடம் மறைக்காது சொல்லி விடம்மா! உன்னை அத்தூரமாக அனுப்பிவிட்டு நான் நிம்மதி இல்லாமல் தவிக்கிறன்!” கலங்கும் விழிகளைத் துடைத்துக்கொண்டார்.

“ஸ்ஸ்...என்ன கமலா இது?” குறுக்கிட்ட சுதா, அப்போதுதான் மதுராவின் கருத்தில் பதிந்தார்.

“சுதா மிஸ்! எப்படி இருக்கிறீங்க? தம்பி நன்றாக இருக்கிறானா?” அவரோடு உரையாடத் தொடங்கினாள்.

மகள், மாமியார் வீட்டினரோடு ஏன் கதைப்பதில்லை என்பதைக் கேட்கத் துடித்த நாவை அடக்கிக்கொண்ட கமலா, ‘தனியாகக் கதைக்கும் போது கேட்கலாம் என்றால் கதைக்கவே விடாது ஃபோனை வைக்கிறவள், இப்ப, இவேக்கு முன்னுக்குக் கேட்டால் மட்டும் ஒழுங்காகப் பதில் சொல்வாளா?’ நினைத்தவாறே, ஆயிரம் கவனங்களைச் சொல்லி, “வீட்டுக்கு எடு ராசாத்தி, தங்கச்சிகள் கதைக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கீனம்.” என்றுவிட்டு, ஸ்கைப்பை அணைத்தார்.

“ஹப்பா! உங்கட அம்மான்ட பார்வையே சரியில்லை மதுரா! அவருக்கு ஏதோ சந்தேகம். துப்பறியும் போலீஸாக வந்திருக்க வேண்டியவர்; தப்பித் தவறி கணக்கு டீச்சர் ஆகீட்டார்.” கேலி செய்த நித்தி, கைபேசிக்கு அழைத்த நண்பியோடு அளவளாவ, மனதில் எழுந்த சிறு தயக்கத்தையும் மீறி, மடிக்கணனியை எடுத்துக்கொண்டு கார்த்திகேயனின் க்ளினிக்குக்குள் நுழைந்தாள் மதுரா.

இந்த இரு கிழமையும், தன் செல்லத் தங்கையின் மலர்ச்சிக்குத் துணைபோன, தம்மில் தொலைந்த உயிர்ப்பை மெல்ல மெல்ல கொண்டுவர முனைந்தவளாகவே கார்த்திகேயனின் பார்வையில் தெரிந்தாள் மதுரா.

தன் சொல்லவொண்ணா கஷ்டத்தை, வேதனையை மறைத்து வளைய வருகையில், அவள் தைரியத்திலும் மனதிடத்திலும் வியப்பே கொண்டான் அவன்.

இவனை விட சிலவருடங்களே இளையவளாக இருந்தாலும், “எனக்கு இன்னொரு குடும்பம் இருந்தாலும், ஒருபோதும் உன்னையும் கைவிட நினைக்க இல்லை!” என, வாழ்வுப்பிச்சை போட முனைந்தவனை, துணிந்து வெட்டி உதறி விட்டு, இரட்டைக் குழந்தைகளையும் சுமந்தவாறு, புதிய சூழலில் பாஷை தெளிவாகத் தெரியாத போதும் இரும்பாக நிமிர்ந்து நிற்பவளில் மிகமிக மரியாதை வைத்திருந்தான் அவன்.

‘விரல் விட்டு எண்ணக் கூடியளவு நாட்களே அறிமுகமென்றாலும், வேற்றாளாக விலத்திப் பார்க்கக் கணமும் நினைத்ததில்லையே! அம்மாவைப் போல், பாசத்தோடு உணவு சமைத்துப் பரிமாறிய போது சுவைத்துச் சாப்பிட்டுப் பாராட்டிய நான், உன்ர தாயின் மனக்குறையை, துளியளவு போக்க எண்ணினன்; அவ்வளவே! அந்த நிமிடம், அது ஒன்றுதான் என்ர நினைவில இருந்தது. நானும் கதைத்ததால்தான்( பேசியதால் தான்) அப்படி நெருங்கி அமர வேண்டியும் வந்தது. மனதில் விகல்பமான எண்ணமா கொண்டிருந்தேன்!? அப்படிப் பார்த்தாளே!’ மிகுந்த சினம் கொண்டது அவன் மனம்.

‘என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாள்? அப்போ, இங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் என் மீதான பயத்தோடா வளைய வருகிறாள்!?’ இப்படியும் இடக்காகக் கேள்வி கேட்டு வைத்தது அவன் மனம்.

முக்கியமான காகிதங்களை கோப்பில்(ஃபைலில்) போட்டுக் கொண்டிருந்தவன், வேலையை மறந்தான்.

“அவளிடமே நேரே சென்று கேட்டால் என்ன?” முணுமுணுத்தவன், முதுகுப்புறம் கேட்ட காலடி அரவத்தில் திரும்பினான்.

வருவது மதுரா என்றதும் அவன் முகம் கல்லாகியது.

“அம்மாவோட கதைச்சிட்டன்; இந்தாங்க லப்டாப்!” கணனியை மேசையில் வைத்தவள், திரும்பிப் போகாது தயங்கி நின்று, தன்னை ஏறெடுத்தும் பார்க்காது அமர்ந்திருந்தவனை நோக்கினாள்.

அவனுள்ளத்தின் கோபம் முகத்தில் பளிச்சிட, மிகுந்த சங்கடத்தை உணர்ந்தவள், “நான்...நான்...நீங்க திடீரென்று வந்து உட்கார்ந்ததும் திடுக்கிட்டுட்டன்; குறை நினைக்காதீங்க. மற்றும் படி...” தொடர்ந்தவளின் பேச்சு, அவன் சட்டென்று நிமிர்ந்து நோக்கத் தடைப்பட்டது.

அவனோ, இளக்கமின்றிப் பார்த்தவன் இவள் பேச்சைத் துளியும் நம்பவில்லை.

அதை உணர்ந்தவள், “நீங்க நம்ப இல்லைத்தானே? அந்தளவு நம்பிக்கை இல்லாமலா உங்கட வீட்டில வந்திருக்கிறன்!” என்றவளின் குரல் வெகுவாக இறங்கியிருந்தது.

“அதோடு...இப்படி ஆம்பளப்பிள்ளை களின்ட பக்கத்தில இருந்தெல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை; அம்மா தோலை உரிச்சுப் போட்டிருவார்!”

அவள் சொன்ன பாவனையில் அவன் விழிகளில் துளி முறுவல்!

“அண்ணா, நீங்க எப்ப வேலையை முடிச்சுக்கொண்டு வருவீங்க? வெயில் போன பிறகா?” இவர்களின் பேச்சு நித்தியின் வருகையால் தடைப்பட, மதுராவை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன்,

“இன்னும் அரை மணியில் போவோம்மா!” விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர, நித்தியோடு சேர்ந்து அப்பால் நகர்ந்தாள் மதுரா.

அருகிலமரச் சினந்து விலகியதற்கு, அவள் சொன்ன காரணம் ஏதுவாக இருக்கவே, சற்று முன்னிருந்த சிடுசிடுப்பு விலகியவனாக வேலையைத் தொடர்ந்தவனை, அவசரச் சிடுசிடுப்போடு அருட்டியது அவன் கைபேசி.
 
#3
Super Akka
 
#4
Nice if.
 
#5
Nice if Madura realise Karthikeyan's feelings.
 

lalu

Well-known member
#6
Super UD akka......mathuraku karthi than Jodi pola...😍Nice going akka...👍
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
Nice if Madura realise Karthikeyan's feelings.
Super UD akka......mathuraku karthi than Jodi pola...😍Nice going akka...👍
அனைவருக்கும் மிக்க நன்றி !
 
Top