தொடர்கதைகள் அத்தியாயம் 5

Rosei Kajan

Administrator
Staff member
#1
அறையெடுத்துத் தங்கியிருந்த வீட்டில் இடமில்லை. அவளுக்கோ, பக்கத்துவீடுகளில் தங்குவதில் சற்றும் விருப்பமில்லை. இரு வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்தாலும் நேருக்கு நேராகச் சந்திக்கையில் சிறு முறுவல், ஒரு ஹாய் சொல்வதோடு சரி.

‘ஒரு இரவுக்கெண்டாலும் அவேட வீட்டில எப்பிடி?’ இவள் குழம்பி நிற்கையில் தான், “என்ர தாத்தாவ இவளுக்கு நல்லாவே தெரியும்.” என்றிருந்தான் ஜோரிக்.

‘என்ன சொல்லுறான்? இவனையே யாரெண்டு தெரியாது! இவன்ட தாத்தாவ எப்பிடி? ஒருவேளை அம்மா அப்பாவையளுக்குத் தெரிந்தவையாக இருப்பீனமோ! மாமாக்கு? அப்பம்மாவையளுக்கு?’

அவளின் குழப்பமான பார்வை அவன் மீது திரும்ப, அவன் விழிகளில் சிக்கனமாக முறுவலொன்று பளிச்சிட்டு மறைந்தது.

“ஓம் மீரா; அவையள உனக்கு நல்லாவே தெரியும்; ‘ஆலீவ் இத்தாலியானா’ ரெஸ்டாரன்ட், அதிண்ட உரிமையாளர் பீட்டர், அவர்ட மனைவி ஹெலன், இவையள, உனக்கு நல்லாத் தெரியும் தானே?”

நிறுத்தி, நிதானித்து, அழுத்தமாக அவன் உச்சரித்ததில் இவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

கரம் வேறு வாயைப் பொத்தியது. பலத்த ஆச்சரியம் காட்டினாள் மீரா.

“நீ..நீ...அவேட பேரனா?” சற்றே பலமான சந்தேகம்தான்.

அது அவனுக்கும் விளங்கியது.

“இதில எல்லாம் உன்னட்டப் பொய் சொல்லி எனக்கென்ன வரப் போகுது?” ஒரு மாதிரிக் குரலில் சொன்னவன், “பேரன் இல்ல, அவரின்ட பேத்தின்ட மகன்.” என்றான், சற்றே கடினமாக!

அதைச் சொல்லவே அவன் விரும்பவில்லை போலும்!

அதன்பின் இவள் சற்றும் யோசிக்கவில்லை.

“ஓஹ்! அப்ப நான் இவரோட போறன்!” என்று வீட்டுக்காரப்பெண்மணியிடம் கூறிட்டு, “ஒரு அஞ்சு நிமிசம் நிக்க ஏலுமா ஜோரிக்? மேல, எங்கட அறையில இருக்கிற சாமான்களை என்ன செய்யலாம் எண்டு பார்த்திட்டு வாறன்.” என்று நகர்ந்தாள்.

“நான் ஏதாவது செய்து தரவேணும் எண்டா சொல்லு!” என்றுவிட்டு, அங்கிருந்த கதிரையில்(இருக்கை) அமர்ந்துவிட்டான் அவன்.

வீட்டுக்காரப்பெண்மணியோடு மேலே சென்றவள், அறையிருந்த அலங்கோலத்தில் சிறிது நேரம் மலைத்து நின்றுவிட்டாள் தான்.

பின் சுதாகரித்து, “நல்ல காலம், எல்லாம் அலுமாரிக்குள்ள இருக்கப் போய் நனையாது தப்பிச்சு!” என்றபடி, தனது ஆடைகள், புத்தகங்கள் என அலுமாரியில் இருந்தவற்றை ஒரு பையில் போட்டுச் சேகரிக்கத் தொடங்கினாள்.

“உண்மைதான் மீரா, அட! பொருட்களை விடு; நீ அறையில இருந்திருந்தா...என்றதை யோசிச்சுப் பார்க்கவும் பயமாக் கிடக்கு!” இன்னமும் பதற்றம் மறையவில்லை, அப்பெண்மணிக்கு.

மீராவுக்கு உதவியாக, அவளோடு தங்கியிருந்த நண்பிகளின் பொருட்களை அங்கிருந்த அவர்களின் பயணப்பைகளில் சேகரிக்கத் தொடங்கினார் அவர்.

“என் பாக்கை நான் கொண்டுபோறன் மரியா. இந்த ரெண்டு பாக்கையும் கீழ கராஜில வைப்பமா? ஃப்ரெண்ட்ஸிட்ட சொன்னால் வந்து எடுப்பீனம்.” என்றதற்குச் சம்மதித்த வீட்டுக்காரப்பெண்மணி, யோசனையாக அவளைப் பார்த்தார்.

“என்ன மரியா?”

“இல்ல மீரா, உங்களுக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க ஒரு கிழமைதானே இருக்கு? அதுக்குள்ள அறையைத் திருத்த முடியுமா எண்டு பாக்கிறன். இல்லையோ, வேற இடம் தான் பார்க்க வேணும்.”

“இன்னும் ஒரு வருசத்துக்கு வேற இடமா? அதெல்லாம் கஷ்டம் மரியா. எங்களுக்கு இங்க பழகீட்டு! ஒரு கிழமை இருக்குத்தானே? அதுக்குள்ள திருத்தப் பாருங்க மரியா.” என்றாள் இவள், கெஞ்சலாக!

“எனக்கும் உங்களப் போல பிரச்சனை இல்லாத பிள்ளைகளை விட்டிர விருப்பம் இல்லை தான் மீரா. எப்படியும் மழை விட்டதும் வேலையைத் தொடங்கலாம்.” நம்பிக்கையாகச் சொல்லிவிட்டுக் கீழே சென்றுவிட்டார் அவர்.

இவளும், தோழிகளின் பயணப்பைகளை இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு வெளியேறியவள், அறை வாயிலைத் தாண்டியதும் கீழே வைத்துவிட்டாள்.

“பச்! இந்தக் கனம் கனக்குதே! முதல் ஒண்டைக் கொண்டு போய் வச்சிட்டு வருவம்.” முணுமுணுத்தபடி, ஒரு பையை எடுத்துக்கொண்டு படிகளால் இறங்க ஆரம்பிக்கையில், “தேவையெண்டா கூப்பிடு எண்டு சொன்னனே!” என்றபடி விரைந்து வந்தான் ஜோரிக்.

“இல்ல பரவாயில்ல, நானே கொண்டு வருவன்.” அவள் மறுக்க, “விடு!” என்று அவளிடமிருந்த பையை வாங்கிக் கொண்டவன், “அதில உள்ளதும் கீழ கொண்டு போகவா வேணும்?” வினவினான்.

“ம்ம்...என்னோட தங்கியிருக்கிற ஃப்ரெண்ட்ஸின்ட பேக்ஸ்; இங்க கராஜில வச்சு விட்டா வந்து எடுப்பீனம்; என்ர சாமான்கள் எண்டு பெரிசா இல்லை; இந்தச் சின்னப்பை தான்.” என்றவளிடம், “அதையும் தா!” மற்றப் பெரிய பையையும் தூக்கிக்கொண்டு இறங்கியவன், கராஜில் மரியா காட்டிய இடத்தில் வைத்துவிட்டு வர, தன் பையோடு வந்து சேர்ந்தாள் மீரா.

“நீ இப்படியே நனைஞ்ச உடுப்போட தான் வரப் போறியா?” மேலே சென்றவள் ஆடையை மாற்றுவாள் என்று எதிர்பார்த்திருந்தவன், அவள் அப்படியே நனைந்த ஆடையோடு வரவும் கேட்டான்.

“ம்ம்...திரும்பவும் நனையத்தானே போறம்; ஒரேயடியாக மாற்றலாம்.” என்றபடி வந்தவளுள், காரில் ஏறப்போகும் தருணம், ‘இவனோடு போக முடிவெடுத்தது சரியா?’ உள்மனதில் ஒரு எச்சரிக்கையுடனான கேள்வி தோன்றிற்று! அது, சட்டென்று காரினுள் ஏறவிட்டுவிடுமா என்ன?

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
அதோடு, ‘அப்பா அம்மாவுக்கோ, மாமா மாமி யாருக்குமே சொல்லாமல்...’ மனதில் முணுமுணுப்போடு, மழையில் நனைந்தபடி நின்றவளை, “மீரா!” சற்றே அதட்டினான் அவன்.

“உனக்கு இப்ப என்னதான் பிரச்சினை?” என்றவனை, தீர்க்கமாகப் பார்த்தாள் மீரா.

“அப்படியெண்டா... என்னை உனக்கு முதலிலயே தெரியுமா?”

ஏற்கனவே மழையில் நன்றாகவே நனைந்திருந்தவள், மீண்டும் நனைவதைப் பற்றிய அக்கறையின்றிக் கேள்வி கேட்பதை, ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தான் ஏறியமர்ந்தவன், “மழையில் நனைந்தபடிதான் விசாரணை செய்யோணுமா?” என்றான், சற்றே அவள் புறம் குனிந்து.

முகத்தில் தீவிர பாவனையோடு அவள் கேட்ட தோரணை என்னவோ விசாரணை போல் தான் இருந்தது.

அவளோ, பதில் சொல்லாது, ‘கேட்டதிற்குப் பதில் சொல்?’ என்றவகையில் நின்றாள்.

“என்னை நீ நம்பேல்ல போல!” என்றபடி, கைபேசியை எடுத்தான் ஜோரிக்.

“இங்க பார், தாத்தா பாட்டியோட நான் நிக்கிற ஃபோட்டோ! உன்னை ஏமாற்றிக் கடத்த முடிவு செய்து, உனக்குப் பழக்கமானவையோட நிண்டு பொய்யா ஃபோட்டோ எடுத்துத் தயாரித்து, உன்ர காருக்கு இப்பிடி நடக்கும் எண்டு தெரிஞ்சு, பிளான் பண்ணி வந்து உன்ர வீட்டில அந்த மரத்தைப் பெயர்த்துப் போட்டு, இப்பிடியே உன்னைக் கடத்தி...” படபடவென்று சொன்னவனை முறைத்தபடி ஏறியமர்ந்து, கதவைச் சாத்திய வேகத்தில் சீற்பெல்ட்டை மாட்டினாள் மீரா.

அதோடு, ‘போதும்!’ என்பதாகக் கையையும் உயர்த்திக் காண்பித்தாள்.

‘பீட்டர், ஹெலன் என்ன மாதிரியான இனிமையான மனிதர்கள்! அவர்களுக்குப் போய் இப்படியொரு...’ மனதில் முணுமுணுத்தபடி அவனைப் பார்த்தவளுக்கு, ‘ஏன்? இவனில் என்னதான் குறை?’ என்றுதான் தோன்றிற்று!

‘சற்றும் இளக்கமின்றிப் படபடவென்று கதைக்கிறான் தான். ஆனாலும், அப்படியே போகாது உதவிக்கு வந்து...இது எல்லாம் அவனுக்குத் தேவையா என்ன? இந்தத் தயாள குணம் பீட்டர் ஹெலனோடது.’ என்றெண்ணியவள், தோள்களைக் குலுக்கியபடி காரை எடுத்தவனை நோக்கினாள்.

அவனும் அந்த நேரம் அவளைத்தான் பார்த்தான்.

“நீ யோசிக்கிறது ஒண்டும் பிழையும் இல்லை. தெரியாதவர் வீட்டுக்கு எப்படிப் போறது? எங்க என்ன எப்படி எண்டு யாருக்குத் தெரியும்? இந்தக் காலத்தில யாரையும் நம்பேலாது தான்.” என்றவன், அவளை நேருக்கு நேராகப் பார்த்தான்.

“நான் ஒண்டும் அந்தளவு கெட்டவன் இல்ல. அதோட, உன்னைக் கொண்டுபோய்விட்டுட்டுக் கொஞ்ச நேரத்தில திரும்பி வந்திருவன்.” என்றான், சிறு முறுவலோடு.

“நான் ஒண்டும் உன்னச் சந்தேகப்படேல்ல; அப்பிடி நினைச்சிருந்தா இந்தக் காரில ஏறியிருக்க மாட்டன்.” என்றாள் இவள்.

“வீட்டில இண்டைக்கு அங்க வர வேணாம் என்றவே. ரூமை விட்டு வெளிக்கிட வேண்டவே வேண்டாம் என்றவே. அதைக் கேட்காம வெளிக்கிட்டு இத்தினை நடந்திட்டு. அதையும், இதுவரை அவேட்ட சொல்லேல்ல.” என்றவளை, ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பாதையில் கவனம் பதித்தான் அவன்.

“இப்ப மட்டும் நடந்ததைச் சொன்னா மாமாவோ அப்பாவோ உடனே வரப் பார்ப்பீனம். அதனாலதான் சொல்லேல்ல. அப்பிடி அவேக்கும் சொல்லாம...அதுதான் யோசிச்சன்.” என்று உண்மையைச் சொன்னவள், கையிலிலிருந்த பேசியையும் வெளிப்புறத்தையும் மாறி மாறிப் பார்த்தாள், இருமனதாக!

அவன் எதுவும் சொல்லவில்லை. இதில் அவன் என்ன சொல்வது? அவளாச்சு அவள் வீட்டினராச்சு!

அவள் என்ன செய்கிறாள் என்றதை மட்டும் கவனித்தபடி வாகனத்தைச் செலுத்துவதில் முனைந்திருந்தான் ஜோரிக்.

‘ஆரணி, ஆரபிக்கு மட்டுமாக மெசேஜ் போட்டால்!’ என்ற எண்ணம் தோன்றிய கணமே மறைந்தது.

‘சுத்தம்! முதல் வேலையாக மாமிக்குப் போகும்.’

‘நிரூஜ்? பச்! கேட்கவே வேணாம். ஒன்றுக்குப் பத்தாக்கி வத்திவைப்பான். ராஸ்கல்!’ அடிக்கடி சகோதரனோடு அடிபாடுதான்.

‘ஆதவ்...ம்ம்ம்..’ யோசித்தாள். ஆதவன் அப்படியே அவள் மாமா கார்த்திகேயன் போல்! அக்கறையும் அன்புமாகக் கவனித்துக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவனேதான்.

‘யாருக்கும் சொல்லாது இருப்பதை விட..’ யோசித்தவாறே, நடந்ததை மிகச் சுருக்கமாகத் தெரிவித்துக் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டி விட்டாள்.

மறுகணம், அழைத்துவிட்டான் ஆதவ்.

“ஏய் மீரா! என்னடி சொல்லுற? நீ எப்பிடி இருக்கிற? உனக்குக் காயம் எதுவும் இல்லையே? முதல் வீடியோ ஆன் பண்ணு பார்ப்பம். இதுக்குத்தானே இண்டைக்கு இங்க வர வேணாம் எண்டது. சொல்வதைக் கேட்டிட்டா நீதான் மீரா இல்லையே! ‘அவள் நன்மைக்குத்தானே சொல்கிறோம் என்று இந்தப்பிள்ளைக்கு விளங்கின மாதிரித் தெரியேல்ல. வந்தாலும் வருவாள்’ என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்...” படபடத்தான்.

“டேய்! கொஞ்சம் பொறு. சொல்லுறதக் கேள்! எனக்கு ஒண்டும் இல்ல எண்டு சொல்லுறன். பிறகென்ன?” அவசமாகக் குறுக்கிட்டவள், “இப்ப நீ எங்க இருந்து கதைக்கிற?” ஜாக்கிரதையாக வினவினாள்.

“வீட்டிலதான்; பயப்படாத! என்ர ரூமில.”

“வீட்ட சொல்லாதேடா ஆதவ். நாளைக்கு வந்து சொல்லுறன். இப்பத் தெரிஞ்சா அப்பாவோ மாமாவோ வர நிப்பீனம்.”

“உனக்குச் சொல்லுறதக் கேட்கேலாது. பிறகு, அதையும் இதையும் சொல்லிச் சாமாளி. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா...” கடிந்து கொண்டான் ஆதவ்.

அவர்கள் இருவரும் நெதர்லாந்து மொழியில் தான் உரையாடிக் கொண்டார்கள். அதைச் செவிமடுத்திருந்த ஜோரிக் உதடுகளில் முறுவலின் பூச்சு!

‘வீட்டில நல்லாவே வாங்குவாள் போல இருக்கே!’ என்ற எண்ணம் தந்த முறுவல் அது.

அவனுக்கும் ஒரு தங்கை உண்டுதான். இப்போ, திருமணமாகி இலண்டனில் இருக்கிறாள். குழந்தையும் உண்டு. அவளிடம் சென்றுவிட்டு வரும் போதுதான் டோவரில் வைத்து மீராவைச் சந்தித்திருந்தான்.

தானும் சகோதரியும் இப்படி எல்லாம் அன்னியோன்யமாகக் கதைத்துக் கொண்டதே இல்லை என்ற எண்ணம் அவனுள் தோன்றாதில்லை.

‘குடுத்து வச்சவள்!’ மீராவைப் பார்த்து அப்படித்தான் எண்ணிக் கொண்டான். அன்று டோவரில் வைத்து அவளின் மொத்தக் குடும்பத்தையும் காண்கையிலும் இவ்வெண்ணம் வராது இல்லை.

“டேய்! கனக்கக் கதைக்காத!(அதிகம் பேசாதே!) ஏதோ நான் வேண்டுமெண்டே செய்யிறது போலவும் வீட்டுக்கு மறைச்சு வேற எங்கயோ போக வெளிக்கிட்டது போலவும் சொல்லுற நீ. அங்க வரத்தானே வெளிக்கிட்டன். என்னைப் போலத் தனியா ரூமில இருந்தா நீயும் அதைத்தான் செய்வ.” காட்டமாகச் சொன்னாள்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#3
“அதை விடு! ரூமிலும் மரம் விழுந்திருக்கு எண்டா இப்ப நீ எங்க தங்கப் போற? முதல் வீடியோவை ஆன் பண்ணு பார்ப்பம்” குறுக்கிட்டான் ஆதவ்.

“அது வந்துடா...பீட்டர்...ஹெலன். நான் சொல்லியிருக்கிறன். நினைவிருக்கா?”

“அந்த ரெஸ்டாரண்ட் வச்சிருக்கிறவே தானே? நான் கூட உன்னோட ஒருநாள் போய்ச் சாப்பிட்டிருக்கிறன்.”

“அவர்களேதான்டா. அவையளோட தான் இண்டைக்குத் தங்கப் போறன். விடிஞ்சதும் அங்க வாறன்.”

“அவேண்ட வீடு எங்க இருக்கு? திடீரெண்டு அங்க ஏன் போற?”

“ஆதவ்! இதுதான் ஒருவருக்கும் ஒண்டும் சொல்லாமல் இருப்பம் எண்டு நினைச்சது.”

“நினைப்ப நினைப்ப. நாளைக்கு வீட்ட வாவன் இருக்கு மங்களம்!”

“அது அந்த நேரம் பார்த்துக் கொள்ளலாம்.” என்றவளுக்கு, ஜோரிக் பற்றிச் சொல்ல மனம் வரவில்லை. வீடியோ ஆன் பண்ணவும் தான். தன் வீட்டினரின் மனதில் ஜோரிக் என்பவன் மீது அத்தனை நல்லெண்ணம் இல்லையே!

அப்படியிருக்க, ‘இவன மட்டும் ஆதவ் கண்டாலே கேள்வி கேட்டே கொன்று போடுவான்!’ என்றே எண்ணினாள்.

“கார் அக்சிடென்ட் ஆன நேரம் தற்செயலா பீட்டர் அந்த வழியால வந்தாரடா. அவரோடதான் ரூமுக்கும் வந்தன். இங்கயும் இப்பிடி எண்டதும் தங்கட வீட்ட வரச் சொன்னவர். இப்ப அங்க தான் போய்க் கொண்டிருகிறன்.” தமிழில் சொல்லி, பீட்டர் வீடு இருக்கும் இடத்தையும் சொன்னாள்.

“ஓ! அவரிட்ட ஒருக்காக் குடு!” என்றான், அவனும் விடாக் கண்டனாக!

“அவர்...காரோட்டிக் கொண்டிருக்கிறார். வீட்ட போனதும் கதைப்பாராம். கேள்வி கேட்டது போதும், வை! நான் அங்க போயிட்டு எடுக்கிறன்.” என்ற வேகத்தில் அழைப்பதைத் துண்டித்துவிட்டு, ஆசுவாச மூச்சு விட்டவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி, ‘என்ன?’ என்பதாகப் பார்த்தான் அவன்.

“என்ர மாமாட மகன் ஆதவ்.” என்றவள், “யாரோட போற எண்டு அவன் கேட்டோன்ன உன்னோட எண்டு சொல்ல முடியேல்ல!” வெட்டும் பார்வையோடு சொன்னவளை, ஒற்றைப்புருவ உயர்த்துதலோடு பார்த்தான் அவன்.

“ஏன்?” என்ற கேள்வியும் உதிர்ந்து விழுந்தது.

“ஏனா? உன்னக் கண்டுட்டாலும் எண்டுதான் வீடியோவையே ஆன் பண்ணேல்ல. அவன் மட்டும் தப்பித் தவறி உன்ர முகத்தைக் கண்டுட்டா என்ன செய்வானோ எனக்குத் தெரியாது.” என்று சொல்ல, விளங்காது பார்த்தான் அவன்.

“பின்ன? அண்டைக்கு டோவரில வச்சு நீ நடந்து கொண்ட முறையில அவ்வளவு நல்ல பெயர் உனக்கு!”

இப்போது அவன் முறைத்தான்.

“ஹலோ! நான் அண்டைக்கு அப்பிடி என்னதான் பிழையாக் கதைச்சன் சொல்லு பாப்பம்!”

“அதையேதான் நானும் கேட்கிறன். அண்டைக்கு, அப்பிடி என்ன பிழையாச் செய்தன் எண்டு அந்தக் குதி குதிச்ச? ஒரு சின்ன விசயம், உன்ர காரில்...” என்றுவிட்டு, காரினுள்ளே விழிகளை ஓட்டியவள், “வாங்கி எத்தின காலம்? அரதப் பழசு போலக்கிடக்கு! இந்த அழகில இதில சாஞ்சு நின்றன் எண்டு என்ன மாதிரி எல்லாம் கதைச்சனி?”

“ஹலோ! அந்தப் பழையகார் தான் இண்டைக்கு உனக்கு உதவி இருக்கு எண்டத மறந்திராத!”

அவள் கதைக்கும்(பேசும்) பாவனையில் உள்ளே மலர்ந்த நகைப்பை மறைத்து, விழிகளில் கேலியோடு சீண்டினான் ஜோரிக்.

“இப்ப நீ உதவி செய்யேல்லையோ நான் என்ன அந்த இடத்திலயே நின்றிருப்பனா என்ன? எப்பிடியோ வந்திருப்பன் தானே! ஜோரிக் இல்லையோ ஒரு டாவிட் உதவியிருக்கப் போறான். அந்தப் போலீஸ் கேட்கேல்லையா?” எடுவலாகச்(கெத்தாகச்) சொன்னவளை, என்ன செய்யலாம் என்ற மாதிரிப் பார்த்தான் அவன்.

போன போக்கில் போயிருக்க இப்போ வீட்டில் அல்லவா இருந்திருப்பான்?

‘பாவம், தாத்தா பாட்டிக்கு மிகத் தெரிஞ்சவள் எண்ட ஒண்டுக்காக இவளோட இழுபட, இவள் கொழுப்புக்கதை கதைக்கிறாளே!’ அவன் மனதின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாது, தொடர்ந்தாள் மீரா.

“இப்ப நினைச்சுப் பார்த்தா என்னை உனக்கு யாரெண்டும் தெரியும் தானே? அண்டைக்கு டோவரில நீ என்ன செய்திருக்க வேணும்?”

“அதையும் நீயே சொல்லிரு!” என்றான் அவன் அடிக்குரலில். முறைப்போடுதான். அவனுக்கே வகுப்பெடுக்கிறாளே!

அதையெல்லாம் அவள் கவனிக்கவேயில்லை. நினைத்ததைச் சொல்லத்தானே போகிறாள். பிறகென்ன?

“சின்னதா யன்னலில் தட்டி, ‘கொஞ்சம் தள்ளு; நான் இறங்க வேணும்.’ என்றிருக்க, தள்ளியிருக்கப் போறன். அதைவிட்டுட்டு எப்படி? எப்படி? பைத்தியக்காரக் குடும்பம் அது இது எண்டு எல்லாம் சொல்லேல்லையா?

அதுவும் என்ர அப்பாவும் மாமாவும் மன்னிப்பும் கேட்ட பிறகும். ஹ்ம்ம்... காரில சாயிறது என்ன அப்பிடி மன்னிப்புக் கேட்க வேண்டிய பிழையோ?” மீண்டும் ஒரு வெட்டும் பார்வையால் அவனைப் பார்த்தாள்.

“அண்டைக்கு மட்டும் என்ர மச்சாள் இழுத்துக்கொண்டு போகேல்லையோ, பைத்தியம் என்ன செய்யும் எண்டு உனக்குக் காட்டியிருப்பன்!” எச்சரிக்கைப் போல் சொன்னவளை, தன்னைமீறிய முறுவலோடு பார்த்தான் அவன்.

அவள் உதடுகளையும் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ப பாவனை காட்டும் விழிகளையும், துணைபோகும் விற்புருவங்களையும் இத்தனை அருகில் பார்த்தவனால், சிலகணங்கள், அவள் வதனத்தில் ஒட்டிக்கொண்ட பார்வையை அகற்றவில்லை.

எந்தத் தயக்கமுமின்றி ஆழ நோக்கிவிட்டுப் பாதையில் கவனம் பதித்தவன், “என்னட்ட இப்பிடியெல்லாம் கதைக்க ...உனக்கு நல்ல துணிவுதான்!” என்றான், மீண்டும் வீசிய கூர்பார்வையோடு! அதற்கு நேர்மாறாகக் குரலில் நகைப்பே ஒட்டியிருந்தது.

“எங்கட துணிவுக்கு என்ன குறைச்சல்?” சவாலாகக் கேட்டவளை மீண்டும் ஒரு பார்வை பார்த்தவன், எதுவோ சொல்ல முயல, அவளே முந்திக்கொண்டாள்.

“கிட்டத்தட்ட ரெண்டு வருசங்களா ரெஸ்டாரண்டுக்கு வந்து போறம். ஒருநாள் சரி உன்ன அங்க கண்டதில்லையே!” நம்பமுடியாத ஆச்சரியத்தோடு கேட்டாள்.

“நீ அங்க வாறது பிட்ஸாவை ஒரு கை பார்க்க. அப்ப, அக்கம் பக்கம் எப்பவாவது பாத்திருக்கிறயா என்ன? அதோட நீ செய்யிற ஆர்ப்பாட்டத்தில உன்னத்தான் மற்றவே பார்ப்பீனம். போதாக்குறைக்கு அப்பப்ப செல்ஃபி!” முகச்சுழிப்போடு சொல்லிவிட்டான்.

“ஹலோ! ஹலோ! என்ர காசைக் குடுத்துச் சாப்பிடுறன். என்னைத்தானே செல்ஃபி எடுக்கிறன்? இதில உனக்கு என்ன நட்டம் வந்திட்டு?” மல்லுக்கு நின்றாள் இவள்.

“பீட்டரே ஒரு வார்த்தை சொல்லமாட்டார். ‘நீ வந்தால் தான் இந்த ரெஸ்ராண்டே களை கட்டும்!’ எண்டு சொல்லுறவர், நீ வேற!” நிறுத்தாது தொடர, இதுவரை கதைத்ததே அதிகம் என்ற கணக்கில் பேச்சை நிறுத்தியிருந்தான் அவன்.

அதையெல்லாம் அவள் கவனிக்கவில்லை.

“உனக்குச் சந்தோசமாகக் கலகலப்பாகக் கதைக்கப் பேசப் பிடிக்காது எண்டா அதைச் செய்யிறவே எல்லாருமே உதவாத ஆக்களோ? இது நல்ல கதையாக் கிடக்கே!” அவனை வம்பிழுக்கும் வகையில் தொடர்ந்தாள்.

“உனக்கு வாயே நோகாதா என்ன? எனக்குக் காது வலிக்குது!” காதைத் தேய்த்து விட்டுக்கொண்டான் ஜோரிக்.

முறைத்தாள் மீரா. அதைக் கவனிக்காத பாவனையில், “இந்தா வீடும் வந்திட்டு. இனிச்சரி கொஞ்சம் கதைக்கிறத நிப்பாட்டு!” சொல்லிக்கொண்டே காரை நிறுத்தினான் அவன்.

“என்ன? கதைக்கிறத நிப்பாட்டுறதா? ஹா...ஹா...உள்ள போனதும் வீடே கலகலக்கும் பாரன். பீட்டர், ஹெலன் என்ன உன்னப்போல வெடுசுடு மூஞ்சிகளா என்ன?” வாயடித்தபடிதான் இறங்க ஆயத்தமானாள் மீரா.

அவள் இப்படிப் கதைப்பதொன்றும் அவனுக்கு அதிசயமாக இருக்கவில்லை. எல்லோரோடும் மிகச் சகஜமாகக் கதைத்துப் பழகுபவள் என்று அவனுக்குத்தான் தெரியுமே! அதுவும் எப்படி? மற்றவர்கள் பேசச் சந்தர்ப்பமே கொடாமல். லொட...லொடப்பான்!

ஒருவகையில் பார்த்தால் இவளின் இந்த பேச்சுத் தான் அவனுக்கு அவளையே பிடிக்காமல் போகச் செய்ததும்.

பல்கலைக்கும் இவள் தங்கியிருக்கும் ரூமுக்கும் இடையில் உள்ளது இவர்களின் ரெஸ்டாரன்ட். இவளும் இவள் நண்பிகளும், மாதத்தில் ஆறு ஏழுதடவைக்கு மேலாக அங்கு ஆஜர் ஆகிவிடுவார்கள்..

இவள் வந்துவிட்டு போகும் வரை அந்த ரெஸ்டாரன்ட் இவள் கட்டுப் பாட்டில்தான் இருக்கும். பின்னாலுள்ள அலுவலக அறையிலிருந்து cct கமராவில் எல்லாவற்றையும் பார்ப்பவனுக்கு ஏனோ அப்போதெல்லாம் எரிச்சலே வரும்.

“வந்தா சாப்பிட்டுட்டுப் போக வேணும் தாத்தா. பல்கலைப் பிள்ளைகளுக்கு இப்பிடிக் கண்டபடி இடம் கொடுக்க வேணாம்.” என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறான்.

“வேலை செய்யிற ஆட்களை எல்லாம் கெடுக்கீனம்; சிரிப்பும் சத்தமும் மற்றவேக்கு இடைஞ்சல் ஆகவும் இருக்கும்.”

இப்படி என்ன சொன்னாலும் இவன் தாத்தா காதில் வாங்கிக் கொள்ளமாட்டார் .

அவருக்கு ஏனோ, இவளிலும் இவள் நண்பிகளிலும் அந்தளவுக்குப் பாசம். அதிலும், இவள் நண்பியொருத்தி அவரின் நெருங்கிய நண்பனின் பேத்தி. அப்போ கேட்கவும் வேண்டுமா?

“இரண்டு பாக்கையும் எடுக்கப் போறயா?” என்றபடி, இறங்கினான் ஜோரிக்.

“இல்ல இல்ல...சின்ன பாக் மட்டும் போதும்!” அவனோடு வந்து, தான் இப்போது அறையிலிருந்து எடுத்த பையை எடுக்க, “தா! நான் கொண்டு வாரன்.” கைநீட்டினான் அவன்.

“இல்ல பரவாயில்லை.” என்றபடி அவள் நகர, காரைப் பூட்டிக்கொண்டு வந்தவன், பாதையோரமாகவே இருந்த வீட்டின் பிரதான வாயிலைத் தன்னிடம் இருந்த சாவியைப் போட்டுத் திறந்து, “ம்ம்... உள்ளே போ!” அவளுக்கு இடம் விட்டு ஒதுங்கி நின்றான்.
 
#4
Supera pokuthu akka, சூப்பர் name jorik, jorik ilaiye oru David ஹா ஹா ஹா ஹா
 
#5
Super ud sis. நித்தி போலவே மீராவும் எப்பொழுதும் கலகலதான்.
 
#6
Super mam meera nalla vaayadikura nithi ponnunu proof panna vachuteenga
 
#7
nice ud:)
 
#8
Interesting!!!!!! Where is thatha n patti?
 
#9
Nice
 

Rosei Kajan

Administrator
Staff member
#10
Supera pokuthu akka, சூப்பர் name jorik, jorik ilaiye oru David ஹா ஹா ஹா ஹா
Super ud sis. நித்தி போலவே மீராவும் எப்பொழுதும் கலகலதான்.
Super mam meera nalla vaayadikura nithi ponnunu proof panna vachuteenga
Interesting!!!!!! Where is thatha n patti?
அவர்கள் பற்றியும் சொல்லி இருக்கிறேனே தீபா .
எல்லாருக்கும் நன்றி நன்றி
 
Top