தொடர்கதைகள் அத்தியாயம் 5

Rosei Kajan

Administrator
Staff member
#1
“ஆமாம் மதுரா, நீங்க நினைக்கிறது சரிதான். இனிமேல் இப்படித் தனியாக இருக்கத் தேவையில்லை; இப்பவே எங்களோடு கிளம்பி வாங்க!”

“இதென்ன நித்தி! நான்...எப்படி? இல்ல...வேணாம் .” தடுமாறினாள் அவள்.

“ஸ்ஸ்...ஒத்த வார்த்தை கதைக்கப்படாது!” சட்டென்று மதுராவை நெருங்கி அவள் கரங்களிரண்டையும் பற்றிக்கொண்ட நித்தியின் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.

“அம்மா, அப்பா இல்லாத வீட்டில் நானும் அண்ணாவும் மூச்சுமுட்டிப் போகாத நேரமே இல்லை மதுரா!” அக்கணம், தான் உதிர்த்த வார்த்தைகளில் வாழ்ந்தாள் நித்தி.

“அண்ணாவை கல்யாணம் செய்யுங்க என்றால் அதற்குப் பதிலே இல்லை. கடைசியாக, வாய் ஓயாது அண்ணாவின்ட கல்யாணம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த அம்மா...” தளும்பிய நீரைத் துடைத்துக் கொண்டாள்.

“ப்ளீஸ் மதுரா! உங்களுக்காக என்று நினைக்க வேணாம்; எங்களுக்காக வாங்களன். பாருங்க, நாங்க யார்? உங்கட அம்மாவின்ட ஃப்ரெண்டின்ட அக்காவின்ட பிள்ளைகள்; இந்த அறிமுகம் போதாதா? இப்ப, நான் உங்கட தங்கச்சியாக இருந்தால் இப்படிக் கேட்டால் பார்த்துக் கொண்டு இருப்பீங்களா? ப்ளீஸ்...” கெஞ்சியவளை, பல நாட்களுக்குப்பின் விழிநீரோடு கட்டிக்கொண்டாள் மதுரா.

‘வந்ததிலிருந்து, சிறு வார்த்தையில் என் நிலையை எண்ணி கலங்க வைக்கவில்லை! தலைகுனியவோ தடுமாறவோ வைக்கவில்லை! எனக்கு நடந்த கொடுமையைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றியே கதைத்துக் கதைத்து என்னைப் பரிதாபம் கொள்ள வைத்து, என் மனநிலையை மறந்து, தன்னை ஆறுதல் படுத்த வைக்கிறாள்! யாரிவள்? என்னைவிட வயதில் சிறியவளாக இருந்தாலும் பெரியவள் போல் பொறுப்பாக, நாசூக்காக நடந்து கொள்கிறாள்!’ மனம் அரற்ற, தன்னை மறந்து அழுதுவிட்டாள் மதுரா.

மதுராவின் மனவோட்டத்தை, அவளின் இறுகிய அணைப்பில் உணர்ந்தாள் நித்தி. கண்டவுடன் இரும்பாகி நின்றவளை மீண்டும் அப்படி ஒருநிலைக்குள் தள்ள நினைக்காது, தன்னைப் பற்றியே கதைத்துவந்த நித்தி, மதுராவின் அழுகையில் திடுக்கிட்டுப் போனாள்.

அவளுக்கு இப்படி நடந்துவிட்டது என யோகம் சொன்னபோது கூட, தம்மோடு அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவளுள் சிறிதும் வரவில்லை. இங்கே வந்து, அவளைப் பார்த்த பின், சட்டென்று, முதல் பார்வையில் நித்தியின் மனதில் நுழைந்தமர்ந்து விட்டாள் மதுரா.

ஏதோ ஒருவகையில் பாசம், பரிவு! தன்னந்தனியே ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகளையும் தாங்கிக்கொண்டு நின்றவளின் நிலையில், நித்தியின் மனம் பாகாக உருகிவிட்டது.

அதுவும், அவளின் அறையைப் பார்த்த பின், அவ்வளவு பெரிய வீட்டில் இருப்பவர்கள் இவளைத் தங்க வைத்துக் கொண்டால் என்ன என்றுதான் தோன்றியது இவளுக்கு.

‘அண்ணாவும் நானுமாக தனியே இருப்பதை விட மதுராவும் கூட இருந்தால் நன்றாக இருக்குமே!’ என, மனதில் பட்டதும் தமையனிடம் கேட்க, அவனும் பச்சைக்கொடி காட்டி விட்டான்.

இதுவரை கலங்காது இருந்தவளின் கலக்கத்தில் அரண்டவள், “இங்க பாருங்க மதுரா, இப்படி அழுதால் வயிற்றில் இருக்கும் ஏஞ்சல்ஸ் கோவிப்பார்கள் ; பிறகு, உங்களை உண்டு இல்லை என்றாக்கி விடுவீனம்!" பரிகாசமாகச் சொல்லத் தொடங்கியவளோடு சேர்ந்து கொண்டார், நித்தியின் கோரிக்கையில் திகைத்து நின்ற யோகம்,

“நித்தி சொல்லுறதுதான் சரி மதுரா! நீ இவர்களோடு போ ஆச்சி; அப்போதான் எனக்கும் நிம்மதியாக இருக்கும். உன்னைப் பார்க்க வேணுமென்றால் இன்னும் கொஞ்சநேரம் காரோட வேணும்; அவ்வளவும் தானே?” என்றார் அவர்.

“எங்களையும் பார்க்க வரலாம் ஆன்ட்டி; என்ன வருவீங்களா?” ஈர விழிகளோடு கேட்ட நித்தியை மிகவும் பிடித்துவிட்டது யோகத்துக்கு.

“ராசாத்தி, சின்ன வயசிலயே எவ்வளவு பொறுப்பு!” அவள் கன்னம் தடவியவர், “ஹ்ம்ம்..நித்தி சொல்லுறது தான் சரி மதுரா, குழந்தைகள் பிறந்த பிறகு நிச்சயம் இந்த அறை போதாது; புதுசா வீடு பார்க்க வேணும். அப்படி இப்படி என்று எவ்வளவு இருக்கம்மா! இப்போதைக்கு நித்தியோடு போயிரு; பிறகு யோசிச்சுச் செய்யலாம்.” அவள் வாழ்வில் அக்கறையுள்ளவராகச் சொன்னார்.

யோகம் அப்படிச் சொன்னதும், அமைதியாக அமர்ந்திருந்த கார்த்திகேயனை சங்கடமாகப் பார்த்தாள் மதுரா.

‘வந்ததிலிருந்து ஒரு முறை நித்தியை கடிந்துகொள்ள மட்டுமே வாய் திறந்தவர், பின் அமைதியாக இருக்கிறார். நான்...நான் எப்படி இவையோட போயிருப்பது?’

அவள் பார்வையைத் தொடர்ந்த நித்தி, “அண்ணா, மதுராவை நம்மோட கூட்டிக் கொண்டு போறது பற்றி உங்களிட்ட கேட்டுட்டுத்தானே இவரிட்டச் சொன்னன்?” தங்கை கேட்ட விதத்தில் முறுவலித்தான் அவன்.

“ம்ம்...நீங்க எங்களோடு வருவதில் எங்களுக்கும் சந்தோஷம்தான். அவ்வளவு பெரிய வீட்டில் ரெண்டு பேரும் தனியா இருக்கிறதைவிட இன்னொருவர் இருந்தால் ஆறுதலாக இருக்கும்!” இலகுவாகச் சொன்னான் அவன்.

“இதைப் பற்றி எப்போ தம்பி உங்களோடு கதைத்தாள்? நாங்களும் இங்கே தானே இருக்கிறோம்.” சந்தேகம் கேட்டார் யோகம். அதே சந்தேகம் தான் மதுராவுக்கும்.

“அட..அதுக்குத்தானே இது இருக்கு ஆன்ட்டி!” தன் கைபேசியை ஆட்டிக் காட்டினாள் நித்தி.

“அண்ணாவுக்கு மெசேஜ் அனுப்பி, சம்மதம் வாங்கினன்!” என்றவளை பொய்யாக முறைத்தார் யோகம்.

“எதிர் எதிர் இருந்து கொண்டு ஃபோனில்...ஹ்ம்ம்...இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இது இல்லையோ ஒன்றும் முடியாது!” என்றவர், அப்போதும், அவ்வளவாக விருப்பமின்றி நின்ற மதுராவை சமாளித்து மேலே அழைத்துச் சென்றார்.

*****

ஞாயிற்றுக்கிழமை மதியம்!

உணவுண்ட கையோடு, “இன்னும் கொஞ்சம் அட்மினிஸ்ட்ரேஸன் வேலைகள் இருக்கு; முடிச்சிட்டு வாறன் நித்தி!” என்றவாறே, ஹாலின் ஒருபக்கக் கதவைத் திறந்து பின்புறமாக அமைந்திருந்த தம் க்ளினிக்குக்குள் நுழைந்த கார்த்திகேயன், விட்ட இடத்திலிருந்து வேலைகளைத் தொடர்ந்தான்.

“சரிண்ணா...” என்ற தங்கை, தொலைக்காட்சியில் இருந்த விழிகளைத் திருப்பாது இலயித்திருந்ததைப் பார்த்தவன் முகத்தில் முறுவலும், மனதில் நிம்மதியும் ஒருங்கே தோன்றியது.

‘அம்மா அப்பா மறைந்து அந்தா இந்தா என்று இருவருடங்களாகப் போகிறதே!’ மனம் நம்ப மறுத்தது.

‘இத்தனை மாதங்களில் அந்தக் கவலையிலிருந்து நித்தியை மீட்க என்னபாடு பட்டிருப்பன்! ஹப்பா! இப்பத்தான் அவள்ட முகம் கொஞ்சமேனும் தெளிஞ்சிருக்கு!’ என நினைத்தவன், அதற்குக் காரணமான மதுராவை எண்ணியதும், அவள் மீதிருந்த பரிதாபத்தையும் கடந்து மரியாதைதான் தோன்றியது.

‘மதுராவின்ட நிலையில பரிதாபப் பட்டு அவளை இங்க கூட்டிக்கொண்டு வந்திருந்தாலும், உண்மையில எங்கட நிலைதான் பரிதாபகரமாக இருந்தது; அதை நேராக்க அவள் எல்லா விதத்திலும் உதவுகிறாள். ஒருநிமிடமேனும் தன் நிலைக்காக எங்களைத் திண்டாவோ, தடுமாறவோ வைக்க இல்லை!’ நினைத்தவன் உதடுகள், “போல்ட் நட்!” முணுமுணுத்தது.

இருகிழமைகளுக்கு முன், “நான் அங்கெல்லாம் வரவில்லை நித்தி; இங்கு எல்லாம் வசதியாகத்தான் இருக்கு!” என, மறுத்தவளுடன், மல்லுக் கட்டித்தான் அழைத்து வந்திருந்தார்கள்.

“இப்போதைக்கு வாங்க மதுரா, நீங்க வருவதால் எங்களுக்கு எந்தவிதத்திலும் கஷ்டமில்லை. வேலை செய்தே ஆகவேணும் என்றால், இப்போதைக்கு, எங்கட க்ளினிக்கில் உங்களுக்கு ஏற்றமாதிரி ஒரு வேலை ஏற்பாடு செய்து தரலாம். வந்து பாருங்க, பிடிக்கவில்லை என்றால் திரும்பி வரலாம்; யாரும் தடுக்க மாட்டீனம்.” அவர்களின் வாக்குவாதத்தில் இடையிட்டான் கார்த்திகேயன். அதன் பிறகு, எதுவும் பேசவில்லை அவள்.

இடியாக இறங்கிய வேதனையில் துணையாக நின்ற யோகமும், அன்போடு அழைக்கும் நித்தியும் கார்த்திகேயனும் இந்தளவு கேட்ட பின்னரும், மீண்டும் மீண்டும் மறுப்பது அவ்வளவு அழகாகத் தெரியவில்லை அவளுக்கு! அதோடு, ‘பழகாதவர்கள் என்றாலும் சுதா மிஸ்சின் அக்கா வீடுதானே?’ மனதைத் தேற்றிக் கொண்டாள்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
அதையும் கடந்து, இவர்களைக் கண்டதில், நித்தியோடு அளவளாவியதில் அவள் மனமெங்கும் நிம்மதியின் சுகந்தம் பரவத் தொடங்கியிருந்ததையும் இலேசாக உணர்ந்து கொண்டவள், தன் சொற்ப பொருட்களோடு அவர்களோடு புறப்பட்டு விட்டாள்.

அவளை அழைத்து வந்த அடுத்த நாள் சுதாவுக்கு அழைத்த கார்த்திகேயன், “மதுரா, நல்ல சுகமாக இருக்கிறார் சித்தி; அவர்கள் வீட்டுக்கு அழைத்துக் கதைப்பதாகச் சொன்னார்!” சுருக்கமாக முடித்துக்கொண்டான்.

சுதாவுக்கோ நிறைந்த மகிழ்வு! ‘சொன்னதும் பிள்ளைகள் செய்து விட்டார்களே!’ என்கின்ற பூரிப்பு!

“கமலா டீச்சர் கேட்டால் மிகவும் சந்தோசப்படுவார் தம்பி. மதுராவின்ட மூத்த தங்கச்சிக்கும் ஒரு இடம் சரி வரும் போலிருக்கு; உள்ளூர் தான்.” என்றிருந்தார்.

அதைக் கேட்டதும், “முதல் அந்தக் கல்யாணம் முடியட்டும்; பிறகு மதுராவின்ட விசயம் சொல்லிக் கொள்ளலாம்!” என, தங்கையிடம் சொல்லி இருந்தான் இவன்.

“அதற்கு முதல் தெரிய வந்தால்!” யோசித்த நித்தி, ‘எது எப்படியோண்ணா, மதுராவின்ட குழந்தைகள் சுகமாகப் பிறந்திட்டால் போதும். இப்பத்தான் ஒழுங்காகச் சாப்பிடவே தொடங்கி இருக்கிறார்!” பெரிய மனிஷியாகக் கவலைப்பட்டாள்.

தன் இழப்பை எண்ண நேரமின்றி, கண்முன்னால் நின்ற மதுராவுக்கு நடந்த கொடுமையே அவள் மனதை வியாபித்திருந்தது. அத்தனை வேதனைகளைத் தாங்கி நிற்பவளையும் குழந்தைகளையும் பரிவாக அணைத்துக் கொண்டது நித்தியின் அன்பு கொண்ட உள்ளம்.

இவர்களின் தாய், வீடு நிறைய அழகிய தொட்டிகளில் பூங்கன்றுகள் வைத்திருந்தார். அவரின் இழப்புக்குப் பின் அவையனைத்தும் ஒழுங்கான கவனிப்பின்றி மெல்ல மெல்ல கருகி மடிந்துவிட, அசிரத்தையோடு நடமாடிய நித்தியும் கார்த்திகேயனுமாக, பூச்சாடிகளை கராஜில் அடுக்கி வைத்திருந்தார்கள்.

“இவ்வளவு அழகான சாடிகளை ஏன் இப்படிப் போட்டு வைத்திருக்கிறீங்க நித்தி?” வந்த மறுநாள் அவற்றைப் பார்த்ததும் கேட்டாள் மதுரா.

“அதெல்லாம் அம்மா ஆசை ஆசையாகப் பார்த்து வாங்கியது மதுரா! எல்லாப் பிளான்ட்ஸும் பட்டுப் போய்ட்டுது; ஏனோ திரும்பவும் வைக்க மனம் வரவில்லை. பச்..விட்டுட்டம்!” என்றவளைச் சரிக்கட்டி, இவனையும் அழைத்துப் போய், மண்ணும் பூங்கன்றுகளும் வாங்கி வந்து தன் கைபடவே அழகாக நட்டு, ஆரம்பத்திலிருந்த இடங்களில் எல்லாம் வைத்து விட்டாள்.

அது மட்டுமா?

“நீங்க போய் அடுப்படியில் வேலை செய்யவேணாம் மதுரா!” சமையல் செய்கிறேன் என்று கிளம்பியவளை, தடுக்க எவ்வளவோ முயன்றும் முடியாது தோல்வியைத் தழுவினாலும், வாய்க்கு ருசியான உணவுக்கு பஞ்சமில்லாது போய்விட்டதே!

“வந்து நின்று பாருங்க நித்தி, பிறகு நீங்களும் சமைக்கத் தொடங்கீருவீங்க!” என்று, “நம்மூர் சாப்பாடு சாப்பிட விருப்பம் மதுரா; ஆனால் என்ன, சமைக்கத் தெரியாது!” என்றவளையும், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் இழுத்து வைத்து சமையல் சொல்லிக் கொடுத்தாள்.

நித்தி, இடைநிலைப் பள்ளி ஆசிரியருக்குப் படிக்கிறாள். இறுதி வருடத்தில் படித்துக் கொண்டிருப்பவள், கல்லூரி போக மிகுதி நேரங்களை, மிகுந்த விருப்பத்தோடு மதுராவோடு கழித்தாள்.

தனக்கென ஒரு வட்டம் போட்டு, சிறுசிறுவிடயங்களுக்கும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த தங்கையின் மாற்றம் பற்றியும், அதை இலகுவாக ஏற்படுத்திய மதுரா பற்றியும் எண்ணிக்கொண்டே வேலையில் மூழ்கியிருந்தவனை, சுதாவின் ‘ஸ்கைப்’ அழைப்பு கலைத்தது.

“சொல்லுங்க சித்தி” என்றவன், இருக்கின்ற இடத்தை வைத்தே அவன் வேலையில் இருப்பதை ஊகித்துக் கொண்ட சுதா, முறைத்தார் .

“ஞாயிறு அன்றுமா தம்பி இங்கிருக்க வேணும்! ஒரு நாளைக்கென்றாலும் இதை மூடிட்டு நித்தியோடு எங்காவது வெளியில் போய் வந்தால் என்னய்யா? பிறகெப்படி அவள் மனம் தேறும்?! பார், நீ இங்கு, அவள் அங்கால என்ன செய்வாள்? தாய் தகப்பனைத்தான் நினைத்துக் கொண்டிருப்பாள்!” கடிந்து கொண்டார்.

“அவள் படம் பார்க்கிறாள் சித்தி; உடனே முடிக்கவேண்டிய வேலைகள், அதுதான் வந்தேன்; பின்னேரம் வெளியில போகப் போகிறம்.” இலேசாக முறுவலித்தான்.

மதுரா தம்மோடு இருப்பதை சிறியதாயாரிடம் மறைக்கிறோமே என்கின்ற குற்றவுணர்வில், அவரை நேராகப் பார்க்கவே சங்கடப்பட்டான் அவன்.

‘பேசாமல் சித்தியிடம் மட்டும் சொன்னால் என்ன?’ அவன் மனதில் இந்த எண்ணம் அடிக்கடி எழுந்து அடங்கியது.

“ஹ்ம்ம... என்னவோ செய் ராஜா. கல்யாணம் செய் என்றால் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறாய். உன் அம்மா இருந்தால் இப்படிச் சொல்வாயா?” சலித்துக் கொண்டார் சுதா.

“செய்வம் செய்வம்; இப்ப என்ன அவசரம் சித்தி? முதல் நித்தி படிப்பை முடிக்கட்டும்!”

“அவள் படிப்பு முடிப்பதற்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“இல்ல சித்தி, அவளுக்கு கல்யாணம் முடிய நான் செய்யலாம் என்று நினைச்சிருக்கிறன்; அம்மா அப்பா இருந்தால் வேறு கதை. இப்போ” என்றவனை, செல்லமாக முறைத்தார் சுதா.

“உனக்கு இப்போதே இருபத்தி எட்டு..” ஆரம்பித்தவரை,

“எனக்கு இப்பதான் இருபத்தி ஏழு சித்தி!” முறுவலித்தான் கார்த்திகேயன்.

நீண்டநாட்களின் பின் அவன் முகம் முறுவலில் மலர்வதைப் பார்த்த சுதாவின் கண்கள் கலங்கின!

‘அக்கா இருந்திருந்தால் இந்நேரம் மகன் கல்யாணத்தைச் செய்து வைத்திருப்பாரே! எவ்வளவு ஆசையாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்!” அவர் மனம் அழுதது.

“நீ சின்னதா தலையாட்டு தம்பி, இங்கே பெண் பார்க்கத் தொடங்கீருவன்!” அதற்கும் முறுவல் செய்தவன்,

“முதல் நித்திக்கு எங்காவது நல்ல மாப்பிள்ளை இருந்தால் பாருங்க, நானும் இங்கே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன்; அக்காவும் அங்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்!” செல்லத் தங்கை பற்றியே மீண்டும் தொடர்ந்தான்.

“அவளுக்கு இங்கிருக்கத்தான் விருப்பம் சித்தி. எனக்கும் தூரமாகச் செய்து கொடுக்க விருப்பமில்லை!” என்றவனுக்கு, மதுராவும், அவள் திருமணம் அவளுக்கு அளித்த வாழ்வுமே நினைவில் வந்து போனது.

தங்கை பற்றியே கதைத்தவனின் தங்கை பாசம் தெரிந்த சுதா, “ம்ம்... பார்க்கிறன் ராஜா; இப்போதே பார்க்கத் தொடங்கினால் தான் அவள் பரீட்சை முடிய சரிவரும்.” என்றவர் ,

“அன்றைக்குப் போய் வந்தீங்களே மதுரா..” திடீரென்று ஆரம்பித்து இவனைத் திடுக்கிட வைத்தார்.

“நீங்க போய் அவளை பார்த்து வந்ததைக் கேட்டதிலிருந்து, கமலாவுக்கு உங்களோடு ஒருவார்த்தை கதைக்க விருப்பம். மதுராவும் எடுத்துக் கதைத்தாளாம். ஆனாலும், ஸ்கைப்பில் கதைக்கவில்லையாம்; ஏதோ பழுதாகிற்று, திருத்தியதும் கதைக்கிறன் என்றாளாம்!” என்ற சுதா,

“வாங்க...அட பரவாயில்லை வாங்க!” அருகில் யாரையோ அழைத்தவர், திரும்பவும் கார்த்திகேயனைப் பார்த்து, “கமலா வந்திருக்கிறார் கார்த்தி; உனக்கு நன்றி சொல்ல வேணுமாம். அந்தளவுக்கு மகளை நினைத்துக் கலங்கிப் போயிருந்தார்.” என்றவர் விலக, அந்த இடத்தில் வந்து நின்றார் மதுராவின் தாய் கமலா.

அவரைக் கண்டதும் சட்டென்று எழுந்தான் கார்த்திகேயன்! ஏனோ, அவனையும் அறியாது மனதில் சிறு பதற்றம்!

‘எவ்வளவு பெரிய விடயம், மகள் விவாகரத்தே வாங்கி விட்டாள் என்பதை நாங்களும் சேர்ந்து இத்தனை நாட்களாக மறைச்சிட்டோமே! அதைத் தெரிந்து கொள்ளும் பொழுது இவர் மனம் என்ன பாடுபடும்!’ நினைத்தவனுக்கு, அவரைப் பார்க்கையில் தன் அன்னையின் நினைவுதான் வந்தது.

தோற்றம் ஐம்பதுகளின் ஆரம்பத்தைக் காட்ட, மதுராவின் சாயலிலிருந்த கமலாவின் விழிகள் மட்டும் உள்ளத்துச் சுமையை தெள்ளத் தெளிவாகக் காட்டி நின்றது.

இவனைப் பார்த்து அன்பாகப் புன்னகைத்தவர், “மிக்க நன்றி தம்பி! எவ்வளவோ, எதையெதையோ நினைத்துக் குழம்பினன் தெரியுமா?” கலக்கத்தோடு ஆரம்பித்தார்.

“இரண்டாவது மகளுக்கு வெளிநாட்டுச் சம்பந்தம் வர ஒரேயடியாக மாட்டேனென்று சொல்லீட்டன். மதுவைக் கட்டிக் கொடுத்துத் தவிப்பதே போதும். ஆஹா ஓஹோ என்று இல்லையென்றாலும் என் கண்ணெதிரில் இருந்தால் போதும் தம்பி!” கனமாகப் பெருமூச்செறிந்தார்.

“நீங்க போய்ப் பார்த்து அவள் நல்லா இருக்கிறாள் என்று சொன்ன பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது தம்பி. வழமைபோல கதைத்துப் பேசி என்று இருந்திருந்தால் இந்தளவுக்கு கலங்கியிருக்க மாட்டன்; ஒரேயடியா ஆளே மாறிப் போயிட்டாள்; அதுதான் பயந்து போனேன் தம்பி. என் பிள்ளைக்கு என்னோடு கடிந்து பேசவே வராது; ஆனால், இப்போதெல்லாம் எடுத்தால் சுள்ளென்று விழுவாள்!” கண்கள் மின்னச் சொன்னார்.

“ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகளை சுமக்கிறாள்; கஷ்டம் தானே என்று மனதைத் தேற்றினாலும், மாப்பிள்ளைத் தம்பியும் வேலை வேலையென்று நிறைய நாட்களாகக் கதைக்க இல்ல. எப்பவுமே அளந்துதான் கதைப்பார் என்றாலும்...” விழிகளைத் துடைத்துக் கொண்டவர்,

“இப்ப எல்லாம் எங்களோடு ஒத்த வார்த்தை பேசவே உங்கட மகளுக்கு நேரமில்லை! எப்ப என்ர மகன் கதைச்சாலும் அவளுக்கு ஏதோ ஒரு வேலையிருக்கும்!” அடிக்கடி மருமகனின் தாய் தொலைபேசியில் முணுமுணுப்பதையும்,

“உள்ளுரில் வளர்ந்த பிள்ளை என்று மனதார நம்பித்தான் என் ஒரே மகனுக்கு செய்து வச்சன். எவ்வளவு பொறுப்பும் பாசமும் உள்ள மகன், இப்ப எல்லாம் கதைக்கிறதுக்கே நேரமில்லை என்கின்ற அளவில் வந்திட்டான்!” என்று, மகளில் குறை கூறுவதையும்,

“குழந்தை உண்டாகி இருப்பதைக் கூட உங்கள் மூலமாகவா அறிந்துகொள்ள வேணும்? அந்தளவுக்குத்தான் எங்களுக்கு மரியாதையா?” என, தன்னோடு சீறி முகம் திருப்பியதையும் எண்ணி, இப்போதும் கலங்கிக் கொண்டுதான் இருக்கிறார் கமலா.

இதையெல்லாம் மனம் விட்டு மகளோடு பேசுவோம் என்றால், அவள் தான் பேச்சை வளர்க்காது நறுக்குத் தெறித்தால் போல கதைத்து வைத்து விடுகிறாளே! மருமகனின் தாயின் கோபத்திலும் பிழைகாண முடியாது திணறுகிறார் கமலா.

“எப்படித் தம்பி இருக்கிறாள்? நீங்க போன பொழுது கணேஷ் தம்பி இருந்தாரா? என்னைத்தான் அங்கு வரவேணாம் என்றிட்டாள். ஸ்பொன்ஸர் செய்வதில் எதுவோ சிக்கல் இருக்காம்; உடனே சரிவராதாம். பிறகு வாங்கம்மா என்றாள். சரி பரவாயில்லை, சின்னவள் கல்யாண அலுவலும் இருக்கு என்று விட்டால், ஸ்கைப்பில் வாடியம்மா என்று கெஞ்சினாலும் ஏதேதோ சொல்லுறாள்.” பரிதாபமாகக் கேட்க, மனம் கரைந்துவிட்டான் கார்த்திகேயன் .

ஏற்கனவே அவர் மகள் விடயத்தை அறிந்தும் மறைக்கிறோம் என்கின்ற குற்ற உணர்வோடு, இவ்வளவு அருகில் மதுரா இருக்க அவர் இப்படிக் கலங்குவதை அவனால் பார்த்திருக்க முடியவில்லை.

கணேஷ் என்கின்ற பெயரும், அவனுக்கு அவர் மருமகன் என்று கொடுக்கும் மரியாதையையும் பார்த்து இரத்தம் கொதித்தாலும் அடக்கிக் கொண்டவன்,

“மதுரா பற்றி இனி யோசிக்க வேணாம் ஆன்ட்டி; நாங்க பார்த்துக் கொள்வோம். அதுவும், என்ர தங்கச்சிக்கு உங்கட மகளைச் சரியாப் பிடிச்சிட்டு!” முறுவலோடு சொன்னவன், மடிக்கணனியை தூக்கிக் கொண்டு,

“இப்ப என்ன, மதுரா எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேணும்; அவ்வளவும் தானே? கொஞ்சம் பொறுங்க!” என்றவன், அவர் புரியாது விழிப்பதைப் பார்த்து முறுவல் செய்தவாறே, க்ளினிக் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்தான்.
 
#3
Nice story.
 
#4
Nice update
 
#5
அருமையான பதிவு
 
#6
அருமை அக்கா.மதுரா பக்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வு
 
#7
தவறு செய்தவன் சந்தோஷமா இருக்கான்.மதுரா எதுக்காக சிலுவை சுமக்கனும்.
 
#8
Aiyooo....ini ennagum
 

Rosei Kajan

Administrator
Staff member
#9
Aiyooo....ini ennagum
தவறு செய்தவன் சந்தோஷமா இருக்கான்.மதுரா எதுக்காக சிலுவை சுமக்கனும்.
அருமை அக்கா.மதுரா பக்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வு
அருமையான பதிவு
அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி
 
Top