தொடர்கதைகள் அத்தியாயம் 4

Rosei Kajan

Administrator
Staff member
#1
அடுத்து வந்த நிமிடங்களில், மழையோடும் புயலோடும் போட்டி போட்டவாறே துரிதகதியில் மீட்பு வேலைகள் நடந்தன!

நான்கு கார்கள் நன்றாகவே சேதமுற்றிருந்தாலும் அதனுள் இருந்தவர்கள் உயிராபத்தின்றித் தப்பியிருந்தார்கள்.
நல்லவேளையாக, காரினுள் சிறுவர் குழந்தைகள் என யாரும் இருக்கவில்லை!


சற்றே அதிக காயங்கள் காரணமாக இருவர் மட்டும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் இருந்தனர்.
கைகளில் ஆங்காங்கே சிராய்ப்புக் காயங்கள், வலப்புறக்காதின் பின்னால் ஒரு சிறுகாயம், இவ்வளவோடு தப்பியிருந்த மீராவுக்கு, பின்புறம் நைந்துபோயிருந்த தன் காரைப் பார்க்கையில் அடிவயிறு கலங்காதில்லை.


பல்கலை ஆரம்பித்ததும், புத்தம் புதிதாக அவள் மாமா வாங்கித் தந்த அழகான சிவப்பு நிறக்கார்.

ஆசைக்குக்கூட ஆதவ் நிரூஜிடம் கொடுக்க மாட்டாளே!

ஆரணி ஆரபியைவிட, இவர்கள் மூவருள்ளும் இரு வயதுகள் தான் வேறுபாடு என்பதால், எல்லாவற்றிலும் போட்டி போட்டுக் கொள்வார்கள். சண்டைகளிற்கும் குறைவிருக்காது. பெரியவர்களான ஆரணி, ஆரபி தான் இடையிட்டுச் சமாதானம் செய்து வைப்பது.

அப்படியிருந்தும், கார் விடயத்தில் யார் பேச்சும் எடுபடாது.

“தரமாட்டன் எண்டா மாட்டன் தான்!” மறுத்து விடுவாளே!

இவர்களின் சண்டையைப் பார்த்துவிட்டு, ஆதவ், நிரூஜ் இருவருக்குமாகச் சிறு காரொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் சதீஷ்.

‘இப்ப மட்டும் அவன்கள் பார்க்க வேணும்!’ மழைத்துளியோடு சேர்ந்து கரைந்தது அவள் கண்ணீர்.

‘எண்டாலும் நான் சேதமில்லாமல் தப்பினது பெரிய விசயம் தான்!’ அவளுக்குப் புரியாதும் இல்லை.

‘ஒருவேளை காயம் அப்பிடி இப்பிடி எண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டி வந்திருந்தா?’ நினைத்தும் பார்க்க முடியவில்லை.

‘வெளியில வெளிக்கிடாத!” என்ற வீட்டாக்கள் மட்டும் இப்ப இதைக் கேள்விப்பட்டால்? துலஞ்சன்.’

பயத்தில் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டு சதிராட, கலங்கும் விழிகளோடு நின்றவள் கரத்தை ஆறுதலாகப் பற்றினான் அவன்.

“ஸ்ஸ்...இந்தளவோட தப்பினதுக்குச் சந்தோசப்படு!” என்றவன், அவள் பார்வை காரில் படிந்திருந்ததைப் படித்துவிட்டு, “புதுக்கார் போல! ஹ்ம்...இன்சூர் செய்திருக்குத் தானே? யோசியாத!” ஆறுதலாகச் சொன்னான்.

பதிலேதும் சொல்லாது நின்றாள் மீரா. அவனும் எதிர்பார்க்கவில்லை.

சில நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவளிடம் திரும்பியவன், “உன்ர வீட்டுக்குச் சொல்லப் போறியா?” என்றதும், விசுக்கென்று அவனை ஏறிட்டாள் மீரா.

“ஐயோ! வேண்டவே வேணாம்; நான்...நான் இண்டைக்கு அறையில நிண்டிட்டு நாளைக்குத் தான் வருவன் எண்டு சொல்லியிருந்தன்; இது மட்டும் தெரிஞ்சா அவ்வளவும் தான்.” மறுப்பாகத் தலையை ஆட்டியவாறே சொன்னவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்.

“இப்பிடி, வீட்டுப் பெரியவேக்குப் பயப்படுற நீ, செய்யிற வேலைகளைப் பார்த்தா அப்பிடித் தெரியேல்லையே!” ஒரு மாதிரி இழுத்தவனுக்கு என்ன பதில் சொல்வதாம்?

“சந்தர்ப்பம் கிடைச்சோன்ன சொல்லிக் காட்டுறான்.” முணுமுணுத்தபடி மறுபுறம் திரும்பினாலும், அவன் அங்கு நிற்பதில், ஒரு துணையின் அருகாமையைத் தன்னையுமறியாது உணர்ந்து கொண்டாள் அவள்.

ஓரளவு நினைவு தெரிந்ததில் இருந்தே, எதற்கும் யார் உதவியும் எதிர்பாராது வளர்ந்தவள் தான். அவள் மட்டுமன்றி, பிள்ளைகள் ஐவரையுமே அப்படித்தான் வளர்த்திருந்தார்கள், கார்த்திகேயன் மற்றும் சதீஷ் தம்பதிகள்.

‘எங்கட பார்வை உங்களில இருக்கும்!’ என்று உணர்த்துவார்களேயொழிய, இவர்களின் நடவடிக்கைகளில் குறுக்கிட்டு, விருப்பங்களுக்கு அணைபோட்டு என்றெல்லாம் நடந்து கொண்டதில்லை.
அதேநேரம், நியாயமான ஆசை எது, நாம் யார் என்பதையும் அழுத்தமாகவே புரிய வைத்திருந்தார்கள்.
அதனால், பெரியவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையேயான உறவுமுறை அன்பால் பிணைக்கப்பட்டு சுமூகமாகவே இருந்தது.
அப்படியிருந்தும், இன்று நடந்த நிகழ்வில் மனத்தால் மிகவும் அரண்டுவிட்டிருந்தாள் இவள்.
கணநேரம், யாருமற்றுத் தனித்து நின்ற உணர்வில் ஆடிப் போயிருந்தாளே! அப்போதுதானே இவன் வந்தான்.


இப்படியாகீற்று என்று சொல்லிச் சட்டென்று அப்பா, அம்மா, மாமா, மாமி என, உரியவர்களை அழைக்கும் துணிவும் வரவில்லை.

‘கூப்பிட்டோன்ன வரக் கூடிய காலநிலையா? எனக்கு ஏற்பட்ட இதே நிலை அவேக்கும் ஏற்படாதெண்டு என்ன நிச்சயம்?’ கலங்கிப் போனவள், தந்தை வழிப்பாட்டி யோகத்தையோ, தாத்தாவையோ அழைக்கவும் துணியவில்லை.

இருவருமே வயதானவர்கள் என்பதோடு, அவர்களும் இங்கிருந்து பார்த்தால் தூரமாகவே இருந்தார்கள்.

“எனக்கு எதுவுமே இல்லை பாட்டி!” என்று சொன்னாலும் நம்ப மாட்டார் யோகம்.

‘என்னவோ ஏதோ எண்டு கத்திக் குளறிக்கொண்டு வந்து ஒரு வழிபண்ணிவிடமாட்டாரா?’ இந்த எண்ணத்தில், ‘எப்படியோ, முதல் காரைவிட்டிறங்கி வெளியே போவம்.’ என்றெண்ணிக் கொண்டிருந்தவள், அரக்கப் பறக்க வந்தவனைக் கண்டதும் அதுவரையிருந்த நடுக்கம் சமன் படுவதாகத்தான் உணர்ந்தாள்.

அதுவும், அவன் பேச்சு நடவடிக்கையைப் பார்க்கையில், இவளை அங்கு கண்டுவிட்டே வந்திருக்கிறான் என்று புலப்பட்டதில் உள்ளத்தில் ஒருவகை மென்னுணர்வு பரவியது!

என்ன ஏதென்று பகுத்தறியவும் முடியவில்லை.

அப்போது, “அதில் நிற்பது உங்கள் காராமே; வந்து எடுங்க!” போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர் சொல்ல, “இதோ..” சட்டென்று பதில் சொன்னவன், அதற்கு மாறாக அசையாது நின்றான்.

‘இவளை அப்பிடியே விட்டுட்டுப் போக ஏலாதே!’ மனதில் எண்ணியபடி அவளையும் காவலரையும் யோசனையோடு பார்த்தான்.

“நீ இனி இங்க நிண்டு என்ன செய்யிறது? காரை அவே பார்த்துக் கொள்ளுவீனம். மிச்சம் எல்லாம் நாளைக்குக் கதைச்சுக் கொள்ளலாம்.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, “நீங்க எப்பிடிப் போவீங்க? வாகனம் ஒழுங்கு செய்து தரலாம். எங்க போக வேணும்?” என்றபடி வந்தார், இன்னொரு காவல் அதிகாரி.

“அதற்கு அவசியம் இல்ல; நானே கூட்டிக்கொண்டு போய் விடுறன்.” அவள் பதிலளிக்க முதல் முந்திக்கொண்டான் இவன்.
‘எப்பிடியும் இங்க இருந்து ஒரு வாகனத்தில தானே போகோணும்? அது ஆரிட(யார்) வாகனமாக இருந்தால் தான் என்ன?’ மனதுள் எண்ணமோட அமைதியாக நின்றாள் மீரா.


அவனும், அவள் மறுத்தாலும் என்றெல்லாம் நினையாது காவல்துறை அதிகாரியோடு கதைத்து விடைபெற்றவன், அவளையும் அழைத்துக்கொண்டு தன் கார் நோக்கி விரைந்தான்.

முதலுதவிக்கு வந்தவர்கள் ஒரு பொலித்தீன் மழைச்சட்டையால் போர்த்தி விட்டிருந்தாலும், நன்றாகவே நனைந்திருந்தாள் மீரா.

அவனோ தெப்பலாகியிருந்தான்.

விரைந்து வந்து அவள் பாக்கை பின்புறத்தில் வைத்துவிட்டுத் திரும்பியவன், காரினுள் ஏறாமல் அப்படியே நின்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று கதவைத் திறந்துவிட்டான்.

“ரெயின் கோட்ட கழட்டி இப்படித் தந்திட்டு ஏறு!” என்ற பின்னும் காரையும் அவனையும் யோசனையாகப் பார்த்தாள் அவள்.

‘இப்பிடித் தெப்பலா நனைஞ்சபடி, அழுக்கான ஆடையோடு...என்ர காரில எண்டால் கடைசிவரை யாரையும் ஏற விட மாட்டன். அப்படியிருக்க...’ எண்ணமிட்டவாறே, மீண்டும் அவனைப் பார்க்க, அவனோ பொறுமையின்றிப் பார்த்தான்.


 

Rosei Kajan

Administrator
Staff member
#2
“இப்ப உனக்கு என்னதான் பிரச்சன? நனைஞ்சது போதாதா? நீ எண்டாலும் ரெயின்கோட் போட்டிருக்கிற. என்னைப் பாரன்.” என்றவனைப் பார்க்க, மிகவும் பரிதாபமாகத்தான் இருந்தது.

தன் பாட்டில் போகாமல் உதவி செய்ய வந்தவன், அதிக சேதாரத்தோடு நிற்கிறானே!

அவள் உதடுகளில் சிறு முறுவலின் பூச்சு!

அவன் போட்டிருந்த வெள்ளை டீ சேர்ட் நிறம் மாறிப்போயிருக்க, அவனின் வெளிறிய டெனிம் அவ்வளவு நனைந்தும் அழுக்கோடு சிரித்தது.

“ஹலோ...நல்லா இருக்கே உன்ர வேல! இன்னொருதரம் வந்து காரை எடு எண்டு சொல்லுறதுக்குள்ள போவம் ஏறு எண்டு சொல்லுறன், என்னை மேல இருந்து கீழாக அளக்கிற!”

ஒரு மாதிரிக்குரலில் அவன் சொன்னதில் திடுக்கிட்டுப்போனாள் அவள்.

“உன்ன அளக்கிறனா? அது எதுக்காம்!” வெட்டும் பார்வை, பழைய மீரா மீண்டு கொண்டிருப்பதைக் காட்டியது.

“நல்ல நினைப்புத்தான்! ஐயோ பாவமே! இப்பிடியே ஏறினா கார்ட நிலை என்ன எண்டு யோசிச்சா?” ஒரு கரத்தால், தன்னை மேலிருந்து கீழாகச் சுட்டிக் காட்டியவள், “நீ என்னவிடக் கேவலமா நிற்கிறயே! அதைத்தான் பாத்தன்.” என்றவள், முடிக்க முன்னர் குறுக்கிட்டான் அவன்.

“அப்பிடிப் பார்த்துக்கொண்டு நிண்டா எப்பிடி வீட்டுக்குப் போவ? நடந்தா?
அழுக்காகாமல், நனையாது பாதுகாக்க வேணுமெண்டா, காரை ரோட்டில இறக்கவே கூடாது; கண்ணாடிப்பெட்டிக்குள்ள வச்சு அழகு பார்க்க வேணும்.” என்றபடி, அவள் கழட்டிய மழைச்சட்டையை, “இப்படித்தா?” என்று வாங்கி, அப்பகுதியால் கடந்து சென்ற ஒரு உதவியாளரை நிறுத்தி, “எங்களுக்கு இனித் தேவைப்படாது; இங்க யாருக்காவது உதவும்.” என்று கொடுத்த வேகத்தில், காரைச் சுற்றிக்கொண்டு வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.


அதற்குப் பிறகும் தாமதிக்காது தானும் ஏறியமர்ந்தாள் மீரா.


அவன் சிகை நெளி நெளியாக நெற்றியை மறைத்தும் கழுத்தோரமாகவும் கலைந்து கிடந்தது. அதிலிருந்து துளித் துளியாக வழிந்த நீர் அவன் முகத்தை வருடி இறங்க, “ஸ்ஸ்...” என்றபடி பின்புற இருக்கையிலிருந்த டிஸ்ஸு பெட்டியை எடுத்து, தான் சிலதுகளை உருவி முகத்தை ஒற்றியவாறே அவளிடம் நீட்டினான்.

மழைக்குளிரால் சுருங்கியிருந்த விரல்களால் அதை வாங்கிக் கொண்டவள் நடுங்குவதைப் பார்த்துவிட்டு., “கொஞ்சநேரம் பொறுத்துக்கொள்ளு !” என்றபடி ஹீட்டரைப் போட்டவன், “வேணுமெண்டா...” மீண்டும் பின்புறம் எக்கி, அங்கிருந்த ஒரு கம்பளிக்கோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“ஈர உடுப்பு, என்ன எண்டாலும் குளிரத்தான் செய்யும்; இதால போத்திக் கொள்ளு; கொஞ்சம் சரி குளிர் குறையும்.” என்றவன், அவள் வாங்காது தயங்கவே, “நான் ரெண்டு மூணு தடவைகள் பாவிச்சிருப்பன்; பரவாயில்ல தானே?” என, ஒற்றைப்புருவம் உயர்த்தி விழிகளால் நகைத்தவன், அன்று டோவரில் வெடுசுடுமூஞ்சியாகத் தெரிந்ததற்கு நேர் எதிராக, இப்போ, அநியாயத்துக்கு அழகாகத் தெரிந்தான்.

சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டவள், “இல்ல, எனக்கு வேணாம்; நீயே போடு!” அவனைப் பாராது முணுமுணுத்துவிட்டுப் பாதையைப் பார்த்தாள்.

“ஏய்! நான் சும்மா சொன்னன். ஒருதரமும் பாவிக்க இல்ல. பார், நடுங்கிற.” என்றபடி அவளில் போர்த்தி விட்டவனை, ஏனோ, இமைக்கவும் மறந்து பார்த்தாள் அவள்.

அவன் அவள் பார்வையைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

அவன்புறமாக வந்து கண்ணாடியில் ‘தட் தட்’ என்று தட்டிய காவலர், தான் பொறுமையிழந்து விட்டதை உணர்த்தி, அவனை எதையுமே கவனிக்கவோ சிந்திக்கவோ விடாது காரை எடுக்க வைத்தார்.

காரை அப்படியே திருப்பி, வந்த வழியே சிறிது தூரம் விட்டவன், ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் திரும்பினான்.
“ம்ம்...சொல்லு; உன்ர வீடு எங்க இருக்கு?”


“அதுக்கு முதல், உன்ர பெயர் என்ன எண்டு சொல்லு?” என்றவள், “நான் மீரா!” சிறு முறுவலோடு வலக்கரத்தை நீட்டினாள்.

தயங்காது பற்றிக்கொண்டான். “ம்ம்...தெரியும். சொந்த இடம் அல்மேரே; படிக்கிறதுக்காக அறை எடுத்துத் தங்கியிருக்கிற; இதைத்தான் அங்க போலீசிட்ட சொன்னியே!” என்றவன், “நான் ஜோரிக்!” முறுவலோடு அவள் கரத்தை விட்டான்.

“இனிச்சரி, வீடு எங்க எண்டு சொல்ல முடியுமா?

“உன்ர வீடு எங்க இருக்கு?” அவள் கேட்டதற்கு பதில் சொல்ல முதல் அழைத்தது அவன் கைபேசி.

“பச்! துலைஞ்சன்!” என்றபடிதான் அழைப்பை ஏற்றான்.

“ஓமா(பாட்டி) நான் வீட்டுக்குத் தான் வந்து கொண்டிருக்கிறன்; இடையில ஒரு ஃப்ரெண்டைப் பார்த்ததில கொஞ்சம் பிந்தீட்டு!”

“........”

“இல்ல இல்ல அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல. இன்னும் ஒரு ஒன்று ஒன்றரை மணித்தியாலத்தில் வந்திருவன்.”

.......

“ஓமா!” சற்றே அதட்டினான்.

“இவ்வளவு நேரம் என்ன செய்தன் எண்டு வீட்ட வந்து சொல்லுறன்; முதல் வைய்யுங்க!” என்று விட்டு, அவளைப் பார்த்தவன், “என்ர பாட்டி. வரவேண்டிய நேரத்தில் ஒரு அஞ்சு நிமிசம் பிந்தினாலும் போதும் ஃபோனைப் போட்டு உண்டு இல்லை எண்டு ஆக்குவார்.”

அவன் சொன்ன விதத்திலேயே அவர்களிடையேயான பற்றுத் தெரிந்தது.

“உன்ர வீடு எங்க இருக்கு? என்னக் கொண்டு போய் விட்டுட்டு வீட்ட போகப் பிந்தினால்? பேசாமல் என்னை ஒரு பஸ் ஸ்டாப்பில விடு!” என்றவளை முறைத்துவிட்டு, விலாசத்தைக் கேட்டுக்கொண்டவன், “உன்னை விட்டுட்டு மற்றப்பக்கமாக என்ர வீட்ட போகலாம்; கொஞ்சத் தூரம்தான்.” என்றபடி காரைச் செலுத்தினான்.

அதன்பின் காரினுள் அமைதியே நிலவியது.

நடந்த நிகழ்வைக் கேள்வியுறுகையில் வீட்டினரிடம் எவ்வாறான எதிரொலி கிடைக்கும் என நன்கறிந்தவள், அவர்களை எப்படிச் சமாளிப்பது என்ற தவிப்பில் ஆழ்ந்திருந்தாள்.

அவனோ, வெளிப்புறம் பார்த்தபடி அமைதியாக வருபவளை ஒருதரம் பார்த்துவிட்டுக் காரைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினாலும், இந்தளவுக்கு அக்கறையெடுத்து அவளுக்குத் தான் உதவுவதில் ஆச்சரியமே கொண்டான்.

‘அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் எவரும் செய்யும் மனிதாபமான உதவியிது!’ மனதுள் சொல்லிக் கொள்ளவும் செய்தான்.

இத்தாலியன் வகையிலான ரெஸ்டாரன்ட்; ஓரளவு பெரியது என்றுதான் சொல்லவேண்டும்; இவன் தாத்தாவினதுதான்; பலவருடங்களாக இயங்கிக் கொண்டிருப்பது; தாத்தாவோடு சேர்ந்து இவனும் தான் பார்த்துக் கொள்கிறான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், அதனருகில் விலைக்கு வந்த கடையை வாங்கி, பார்மஸி வகையிலான பெரிய கடையாக்கியிருந்தான். இப்போதெல்லாம் வீட்டுப்பாவனைக்குத் தேவைப்படும் மற்றைய பொருட்களும் அங்கே கிடைக்கும் வகையில் செய்து கொண்டு வருகிறான்.

கடையும் எதிர்பார்த்ததையும் விட நல்ல வருமானம் ஈட்டித் தருகின்றது. அதுவே, ஆறுமாதங்களுக்கு முதல், கடையோடு மேலேயிருந்த மாடிக்குடியிருப்பைச் சொந்தமாகவே வாங்க வைத்திருந்தது.

அதற்கு முன்னரே, கிழமையில் பாதி நாட்கள் தன் கடைக்குப் பின்னேயுள்ள சிறிய அறையில் தங்கிக்கொள்பவன், இப்போதோ, தன் வீட்டில் தான்.

இன்று இவன் பிறந்தநாள்; இருபத்தியொன்பதாவது பிறந்த தினம்.

“புயலாக்கிடக்கு...நீ நாளைக்கே வா! கொஞ்சத்தூரம் தானென்றாலும் ஏன் வீணா வெளிக்கிட்டுத் திரிவான்.” என்றுதான், இவன் தாத்தா, பாட்டி. முதலில் சொன்னார்கள்.

ஆனாலும், அவனை எதிர்பார்ப்பார்கள் என்பது இவனுக்குத் தெரியுமே!

கண்டதும் மலர்ந்து போவார்களே! அதையெல்லாம் எண்ணியே, “இல்ல பாட்டி, நான் கட்டாயம் வருவன்.” என்று சொல்லி, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது புறப்பட்டிருந்தான்.

“சில மணித்தியாலங்களில திரும்பி வருவன்.” என்று கடையில் பொறுப்பாக இருப்பவனிடம் சொல்லிவிட்டு வந்தவன், இப்போதோ, பாதையில் அச்சில மணிநேரத்தைச் செல்விட்டிருந்தான்.

‘இவளை, இவள் வீட்டில் விட்டுட்டு, வீட்ட போகமுதல் கடைக்கு அழைத்து நான் வரக்கொஞ்சம் பிந்தும் எண்டு சொல்ல வேணும்; இந்த மழையில யார் கடைக்கு வரப் போகீனம்? எண்டாலும் ...’ என எண்ணிக் கொண்டே, “இந்த ரோட்டில் தானே உன்ர வீடு?” காரைத்திருப்பி, சற்றுப் போனதுமே, இரண்டாகப் பிரிந்த பாதையின் இடப்புறம் அவள் கைகாட்டத் திருப்பியவன், “ஐயோ! இதென்ன?” என்ற அவளின் கூவலோடு, அவசரமாகத் தன் பார்வையையும் இணைத்துக் கொண்டான்.

பாதையோரமாக இருந்த பெரியமரமொன்று அருகிலிருந்த வீட்டின் மீது சரிந்திருந்தது.

“அதா நீ தங்கியிருக்கும் வீடு?”

அவள் பாவனையை வைத்துத்தான் கேட்டான்.

“ஓம் அதுதான்!” என்றபடி இறங்கி ஓடியவள், வாசலில் நின்ற வீட்டுக்காரப்பெண்மணியிடம் விரைந்தாள்.

இவனும் பின்னால் சென்றான்.

“மீரா பாத்தியா? உங்கட அறையில தான் விழுந்திருக்கு! காலேல நீ போகேக்க ‘வேணாம்’ எண்டு சொல்ல நினைச்சன். அது பார்த்தால்...நீ உன்ர அறையில இருந்திருக்க...சின்னதாக் காயப்பட்டிருந்தாலும் என்னால தாங்கிருக்க முடியாது.” என்று புலம்பிய அப்பெண்மணி, அவளின் கலைந்த கோலம் உறைக்க, பேச்சையும், தன் வீட்டின்மீது மரம் சரிந்து விழுந்ததையும் மறந்தே போனார்.

“உனக்கு...என்ன நடந்தது?” அதிர்வை உதறிவிட்டுப் பதறியவரிடம் சுருக்கமாக நடந்ததைச் சொன்னவள், தன் பின்னால் வந்து நின்றவனை அறிமுகமும் செய்து வைத்தாள்.

அறிமுகம் செய்யும் அளவிற்கு அவனைப் பற்றி என்ன தெரியும்? பெயரைச் சொல்லி, தனக்கு உதவியதையும் சொன்னாள்.
அவனை, மேலிருந்து கீழாக ஒருபார்வை பார்த்தார் அப்பெண்மணி.


அதோடு, “ஹலோ” என்று அவன் கரம் நீட்ட, பற்றிக் குழுக்கியவர், “உள்ளுக்கு வா!” இருவரையும் அழைத்துச் சென்றார்.

“நீ போய் முதல் உடுப்பை மாற்று மீரா!” அவளிடம் சொல்லிவிட்டு “உங்கட அறை திருத்திற வரைக்கும் பாவிக்க முடியாது...” இழுத்தார்.


அந்த வீட்டில் இருப்பதே இரண்டு அறைகள் தானே?

அவரின் தயக்கம் புரிந்த மீராவின் முகத்தில் சிறு குழப்பம்.

‘இப்போதைக்கு வீட்ட போவதை நினைக்கவும் முடியாது; நாளைக்குப் போகும் வரை நான் எங்க தங்குவது?’ என்ற அவள் சிந்தனையைக் கலைத்தான் அவன்...ஜோரிக் !

“மீரா, உனக்கு ஆட்சேபனை இல்லையெண்டா என்னோட வா; வீட்டில தாத்தாவும் பாட்டியும் இருக்கீனம்; இண்டைக்கு அவையளோட தங்கீட்டு நாளைக்கு உன்ர வீட்டுக்குப் போகலாம்.” என்றதும், இதைச் சற்றும் எதிர்பாராதவள் தடுமாற்றத்தோடு பார்த்தாள்.

அவன் சொன்னதைக் கேட்ட வீட்டுக்காரப்பெண்மணியோ, “அறியாதவேன்ட வீட்டில எப்பிடி நம்பித் தங்கிறது?’ மீராவிடம் விழிகளால் பேசினார்.

அதைக் கவனித்தானோ என்னவோ, எதுவோ சொல்லவர, அப்பெண்மணியே ஆரம்பித்தார்.

“உனக்கு இவன முதலே தெரியுமா மீரா?” என்றுவிட்டு, பதிலை எதிர்பார்க்காது, “நீ போய் உடுப்ப மாற்று! இங்க பக்கத்து வீட்டில கேட்டுப் பாக்கிறன். ஒரு இரவுக்குத்தானே?” முடிவாகச் சொன்னார்.

“மீராவுக்கு என்ர தாத்தாவ நல்லாவே தெரியும். அதனால, அறியாத தெரியாதவே எண்ட யோசனை தேவையில்ல; எது எண்டாலும் உன்னிஷ்டம்.” என்றான் அவன்.

“உன்ர தாத்தாவ எனக்குத் தெரியுமா?” நெற்றி சுருங்கக் கேட்டாள் மீரா!
 
#3
Mira jorik super name akka, Tuesday update parthu kan puththu pochu, 😍😊😍😊
 
#4
Very nice ud sis. But I felt this ud was short. We expect more and lengthy ud sis.
 
#5
குட்டியா முடிச்சிட்டீங்களே
 
#6
Jorick super
 
#7
Kutti ud potta yepdi sis...so next 2 ud poduringa....ok va
 

Rosei Kajan

Administrator
Staff member
#8
Mira jorik super name akka, Tuesday update parthu kan puththu pochu, 😍😊😍😊
Very nice ud sis. But I felt this ud was short. We expect more and lengthy ud sis.
குட்டியா முடிச்சிட்டீங்களே
Kutti ud potta yepdi sis...so next 2 ud poduringa....ok va
எல்லோருக்கும் நன்றி நன்றி .
 
#9
Nice
 
Top