தொடர்கதைகள் அத்தியாயம் 4

Rosei Kajan

Administrator
Staff member
#1
மாடி மரப்படியில் கேட்ட மெல்லிய அரவத்தில், சட்டென்று அங்கே திரும்பியது கார்த்திகேயனின் பார்வை.

ஒடுக்கமான படிகளில் கவனமாக இறங்குவதில் முனைந்திருந்த மதுரா, அவளை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவர்களை கண்டுகொள்ளவில்லை.

வந்தவர்களை உபசரிக்கவென தேநீர் தயாரித்துக்கொண்டிருந்த சுபாவுடன் குசுகுசுவென்று உரையாடிக்கொண்டிருந்த யோகம், இறங்கி வருபவளைக் கவனிக்கவில்லை.

தமையனின் பார்வையைத் தொடர்ந்து, நித்தியின் பார்வையும் மதுராவில் நிலைத்தது.

யௌவனத்தின் அதீத சாரலோடு கூடிய சாந்தமான நிலா வதனம்; சற்றுமுன் நீர் அடித்துக் கழுவியிருந்ததன் உபயம் பளிச்சென்றிருந்தது.

பிடிவாதம் கொண்ட சிறுசிறு கேசக் கற்றைகள் நீர்ப்பற்றோடு கன்னங்களை உரசிக் கொண்டிருக்க, அசிரத்தையாகப் பின்னப்பட்டிருந்த ஒற்றைப்பின்னல் ஒருபக்கத் தோளால் முன்பக்கம் தவழ்ந்து கொண்டிருந்தது.

லைட் ஆரஞ் நிறத்தில் தொளதொள டாப், கறுப்பு நிற தொளதொள பாண்ட்; அவள் மேனியின் நிறத்தை அதிகரித்துக் காட்டியது.

மெல்லிய உடல்வாகில் வயிறு மட்டும் பெரிதாக, வேறாகத் தெரிந்தது.

அலங்காரமோ நகைகளோ இன்றி, துடைத்து வைத்த தோற்றத்தில் இறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்திருந்த நித்தியின் இதய ஆழத்திலிருந்து பரிதாப மூச்சு வெளியேறியது.

‘இவவுக்கு என்ன குறை! இவவைக் கட்டிய பின்னும் இன்னொருத்தியுடன் எப்படி உறவாட முடிந்தது!?’ நித்தியின் இளநெஞ்சில், விடையறிந்தே ஆகவேண்டும் என்கின்ற தவிப்போடு முட்டி மோதியது இக்கேள்வி.

‘அப்படி என்ன தான் இருக்கு அந்தப் பெண்ணிடம்! அவளும் அவள் மூஞ்சியும்.’ தொடர்ந்து எண்ணியவள் முகம் அருவருப்பில் கோணியது.

கடைசி இரு படிகள் இருக்க, ஏதோ தோன்ற நிமிர்ந்த மதுரா அப்படியே அசையாது நின்றுவிட்டாள். அவள் விழிகளில் முதலில் பட்டது கார்த்திகேயனின் முகம் தான். அப்புதியவனின் விழிகள் வெளிப்படையாகத் தெரிவித்து நின்ற பரிதாபத்தை அறிந்துகொண்டவள் உள்ளம், அவமானத்தில் மூழ்க, வதனம் கண்டிச் சிறுத்தது!

‘யார் இவர்!? யோகம் ஆன்ட்டி எங்க?!’ இவள் மனதில் குழம்ப, சற்றுமுன் அவள் உணர்ந்தது நிஜமா எனத் தடுமாறும் வகையில் மிகவும் சாதாரணமாகப் பார்த்திருந்தான் கார்த்திகேயன்.

‘இப்போ பரிதாபமாகப் பார்த்தாரே! அப்படி இல்லையா? யாரைப் பார்த்தாலும் என் பரிதாப நிலைதான் நினைவில் வருதா? யார் இவர்கள்?’ மனம் முணுமுணுக்க, அசையாது நின்றவளின் கரம் மாடிக் கைபிடியை இறுகப் பற்றியது.

அவள் கீழே இறங்காது நின்றுவிடவே, ‘எங்களைக் கண்டதும் தான் நின்று விட்டார்! இதோ வாறேன்!’ சட்டென்று எழுந்தாள் நித்தி.

“மதுரா...மதுரா தானே?” என்றவாறே விரைந்து வந்து கரங்களைப் பற்றியவளைப் பார்த்த மாத்திரத்தில், தன் இளைய சகோதரிகளின் நினைவில் கனத்துப் போனது மதுராவின் மனம். நித்தியின் முகத்தில் பதிந்த பார்வையை விலக்க மறந்து நின்றாள் அவள். ஏனோ, அவளை இறுகக்கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது மதுராவுக்கு.

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? யாரடா இவர்கள் நம் பெயரைச் சொல்கிறார்களே; நமக்குத் தெரியவில்லையே என்று யோசிக்கிறீங்களா?” முறுவலோடு கேட்ட நித்தி, “முதல் இறங்கி வாங்க!” அவள் கரம் பற்றி அழைத்து வந்து, அங்கிருந்த இரட்டைச்சோஃபாவில் அமர்த்தி, அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

நித்தியின் கரம் பற்றுதலில், ஒரு சொந்தத்தின் உரிமை உணர்வை உணர்ந்த மதுராவின் கல்லாகிக் கிடந்த நெஞ்சம், மெல்லத் தளர்ந்து நடுங்கியது.

அப்பா, அண்ணா என்கின்ற உற்ற பந்தங்களை அநியாயமாக இழந்து நின்றபோதோ, வேதனையைப் பகிர்ந்து கொள்ளவும் தோள் கொடுக்கவும் கைகோர்த்து நின்றனர், அன்னையும் இளைய சகோதரிகளும்; உற்றார் உறவுகளும். அதே, வசந்தம் தரும் வாழ்வென்று தயங்காது தனியே யாரை நம்பி வந்தாளோ, அவனே, கொடும் சூறாவளியாகச் சுழற்றி அடித்த போது, ஆறுதலாக அணைத்து நின்ற ஒரே ஜீவன் யோகம் மட்டுமே.

அதிலும் சிலநாட்களில், தன்னுள் தானே ஒடுங்கிக் கொண்டாள் மதுரா.

‘ஹப்பா! அவளை ஒருமாதிரி தேற்றி விட்டோம்!’ யோகமும் அவள் விடயத்தில் தலையிட்டவர்களும் நினைத்தாலும், அதுவல்ல நிஜம்! கொந்தளிக்கும் எரிமலைபோன்ற உள்ளுணர்வுகளை, நெஞ்சை அறுக்கும் வேதனையை, பயங்கரமாக ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்கின்ற அவமானத்தை ஒன்றாகத் திரட்டி அமுக்கி அடக்கி, வெளிப்பார்வைக்கு திடமாகக் காட்டிக் கொண்டாள் என்பதுதான் உண்மை. அதைவிட வேறு வழியும் இருக்கவில்லையே!

கடந்த சில மாதங்களாகத் தனிமையின் அரவணைப்போடு வாழ்ந்தவள், இறுகப் பற்றியிருந்த நித்தியின் கரம் உணர்த்திய நேசத்தில் கரைந்து போக முயன்றாள்.

“மதுரா...நான் நித்தி, இவர் என்ர அண்ணா கார்த்திகேயன்!” அமைதியாக அமர்ந்திருந்தவளிடம் அறிமுகத்துடன் ஆரம்பித்தாள் நித்தி.

இருவரையும் பார்த்து மெலிதாக முறுவல் செய்தாள் மதுரா.

“உங்களுக்கு சுதா டீச்சரைத் தெரியும் தானே? உங்கட அம்மாவோடு படிப்பிக்கிறார்!” என்றதும், சட்டென்று இவர்கள் யாரென்று புரிந்தது மதுராவுக்கு.

“நீங்க, சுதா மிஸ்சின்ட அக்காவின் மகளா? மிஸ் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். இங்க வந்ததும் உங்களிட்ட வரவேணும் என்றிருந்தன்; பிறகு, அப்படியே முடியாமல் போய்ட்டுது! உங்கட வீட்டு நம்பர் கூட தந்து விட்டார்!” என்றவளை, இறுக்க அணைத்துக்கொண்டாள் நித்தி.

அந்த அணைப்பின் நெருக்கம் இதுவரை எவருமே தராத ஆதரவை நல்கியது மதுராவுக்கு. யாருமில்லாது தத்தளித்துத் துவண்டிருந்த அவளுள்ளம், அறியாத ஊரில் அந்நியமான பாஷையின் மத்தியில் தான் தனியல்ல; தன்னை அறிந்தவர் இருக்கிறார் என்றதில் மெல்ல மெல்ல நிமிர நினைத்தது.

“ம்ம்... உங்கட கல்யாணப்பேச்சு ஆரம்பிச்ச போதே சித்தி சொன்னார் மதுரா! ஆனால்,” நிறுத்தி, மதுராவைப் பார்த்த நித்தியின் முகம் கணத்தில் இருண்டுவிட்டது.

‘நாங்க மட்டும் அன்றைக்கே விசாரித்து அவன் பற்றி அறிந்திருந்தால் ஒருவேளை இன்று இவருக்கு இந்நிலை வந்திருக்காதோ!’ அவளுள் எழ முயன்ற தவிப்பை அடித்துக்கொண்டு மேலெழுந்தது அன்னை தந்தையின் இழப்பு!

‘அன்றைக்கு நாங்களிருந்த நிலை யாரோ ஒரு மதுரா பற்றி எள்ளவும் சிந்திக்க வைக்கவில்லை.’ மனம் முனக, தலை குனிந்தவள் சற்று நேரம் பேச்சின்றி இருந்தாள்.

“அதையெல்லாம் மறக்கடிக்கின்ற மாதிரி எது எதுவோ நடந்து..” குரல் இறுகச் சொல்லிக்கொண்டு வந்தவளின் விழிகள், பெற்றோர் நினைவில் குபுக்கென்று நிறைந்து விட்டன!

சுதா மிஸ் கூறி, இவர்கள் பெற்றோர் இறந்த விபரமறிந்திருந்த மதுரா, அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

அந்நிமிடம், தன் ஆற்றமுடியாத வேதனையையும் தாங்கொணாக் கசப்புடன் பெரும்பாரமாகக் கருதி குழந்தைகளைச் சுமப்பதையும் மறந்தாள் அவள். தன்னை அனைவரும் பரிதாபப்பார்வை பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தைத் தள்ளி வைத்தாள். சற்றுமுன் மலர்வாக இருந்து, கணத்தில் சுருங்கிக் கலங்கிவிட்ட நித்தியை தேற்ற முனைந்தாள்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
பெற்றோர் பற்றிப் பேச்சு வந்ததும் கண்ணீர் விடும் தங்கையை, எப்போதும் கடிந்து கொள்ளும் கார்த்திகேயன், இன்று, ‘சபாஷ்’ போட்டான். அவனையும் அறியாதுதான் மதுராவை பரிதாபமாகப் பார்த்தான். அதை அவள் உணர்ந்து இறுகியதும் தன்னைச் சுதாகரித்திருந்தவன், ‘இவளை எப்படி அணுகுவது!?’ என்கிற யோசனையிலிருக்க, சுலபமாக, அவள் சோகத்தை ஒதுக்கி, தனக்காக இரக்கப்பட வைத்துவிட்டாளே அவனின் செல்லத் தங்கை!

இவர்கள் பேசுவதைக் கண்டதும் விரைந்து வந்தார் யோகம்.

“மதுராம்மா, எப்படிடா இருக்கிறாய்?” என்றவர், “பிள்ளைகள் உன்னைக் காணாமல் போக முடியாது என்றதும் அழைத்து வந்தேன்மா!” சங்கடத்தோடு சொன்னார்.

“நானும் இவேண்ட வீட்டுத் தொலைபேசி எண்ணிருந்தும் இதுவரை கதைக்காமல் இருந்திட்டன்; சுத்தமாக என்ர நினைவில் வராமல் போய்ட்டுது! ஸாரி..” நித்தியிடம் கூறினாள் மதுரா.

“இதிலென்ன இருக்கு? அதுதான் இப்பப் பார்த்திட்டமே!” என்றாள் நித்தி.

“அது சரி, செக்கப்புக்கு போனீர்களா? இரட்டைக் குட்டிகளாமே! இரண்டும் பெண்ணா? ஆணா? ஹ்ம்ம்..ஆண் ஒன்று பெண் ஒன்று என்றால் நன்றாக இருக்குமே!” படபடத்த நித்தி,

“எங்கட அக்காவுக்கும் இரண்டு மகன்கள்; இரண்டாவது குழந்தை பிறப்புக்கு என்று புறப்பட்டுப் போய்த்தான்..” கடகடவென்று சொல்லிக் கொண்டு வந்தவள் மீண்டும் கலங்கினாள்.

“நித்தி என்ன இது?” சட்டென்று கடிந்து கொண்டான் கார்த்திகேயன். அவனின் இறுகிய முகத்தைப் பார்த்துவிட்டு நித்தியிடம் திரும்பினாள் மதுரா.

மீண்டும் அவள் கரம் நித்தியை ஆதரவாக அணைத்துக் கொண்டது.

“இரண்டும் பெண் குழந்தைகளாம்; சிலவேளை வேறு மாதிரியும் இருக்கலாம் என்றார்கள்!” நித்தி கேட்டவைக்கு எவ்வித பாவனையுமின்றி பதில் சொல்லி, அவள் நினைவை மாற்ற முயன்றாள்.

“வாவ்...இரண்டு ஏஞ்சல்ஸ்! ஹப்பா! அப்ப உங்களைப் போலவே ஒன்றுக்கு இரண்டா?” முகம் மலர கூறினாள் நித்தி.

கேட்ட மதுராவின் முகமோ கருமையைப் பூசி மீண்டது!

“தேத்தண்ணி எடுத்துக் கொள்ளுங்க!” எல்லோருக்கும் கொடுத்தார் சுபா.

மதுரா, எப்போதுமே குழந்தைகள் பற்றிய பேச்சை விரும்புவதில்லை என்பதை அறிந்திருந்த யோகம், “இந்தா மதுரா, நீயும் குடியம்மா! மத்தியானம் என்ன சாப்பிட்டாய்? பார், இரண்டு கிழமைக்கு முதல் பார்த்ததைவிட இன்னும் மெலிஞ்சிருக்கிறாய். கன்ன எலும்பெல்லாம் தள்ளிக்கொண்டு நிற்குது. நீ சொல்வதைக் கேட்க மாட்டாய் போலிருக்கே!” கடிந்து கொண்டார்.

“நல்லாத்தான் சாப்பிடுறன் ஆன்ட்டி. சுபா ஆன்ட்டி முழுநாளுக்கும் தேவையானதை இரவில தந்து சாப்பிடச் சொல்லி நிற்பார்! அதனால், மற்ற நேரங்களில் கொஞ்சமாகச் சாப்பிட்டு இடம் வச்சிருப்பன்.” சமாளிப்பாகச் சொன்னாள்.

“அட...இது நல்ல கதையாயிருக்கே! நம்பாதீங்க யோகம் அக்கா; ஒருநாளும், கொடுக்கிறதை முழுதும் சாப்பிடுறதில்லை. உனக்கில்லை என்றாலும் வயிற்றில் ஒன்றுக்கு இரண்டாக வைத்திருக்கிறாய் சாப்பிடு என்று திருப்பித் திருப்பிச் சொன்னால் தான் இறங்கும்!” என்ற சுபா,

“பெரியவர்கள் பிரச்சனைகளில் இன்னும் பிறக்காத குழந்தைகள் மீதும் கோபம் காட்டுவது என்றால்...” பேச்சைத் தொடர, மிகவும் அசௌகரியமாக உணர்ந்தாள் மதுரா.

நித்தியையோ மற்றவர்களையோ நிமிர்ந்து நோக்கவும் முடியாது தடுமாறி தேநீரைப் பருக முனைந்தவளை, அந்நேரம், அதிலிருந்து காப்பது போல அவள் கைபேசி மணிச்சத்தம் அழைத்தது.

“ஃபோன் அடிக்குது.. இருங்க பார்த்துவிட்டு வாறன்!” அவசரமாக எழுந்தாள்.

“எங்க இருக்கு, உங்கட அறையிலா? நீங்க இருங்க நான் எடுத்துக்கொண்டு வாறன்!” தானும் எழுந்த நித்தி, “உங்கட அறை எதுவென்று சொல்லுங்க!” என்றவள், “இல்லை, தேவையில்லை; நானே பார்க்கிறன்! கஷ்டம் ஒன்றுமில்லை!” என்ற மதுராவை பிடித்து அமர்த்தினாள்.

“சுபா ஆன்ட்டி, மதுராவின்ட ரூம் எது?” கேட்டுக்கொண்டே படிகளில் தாவி ஏற, “வலது பக்கம் முதல் அறை!” முறுவலோடு சொன்னார் சுபா.

கைபேசியை எடுக்க முன், அது அடித்து ஓய்ந்துவிட்டது.

“பச்!” என்றவாறே கைபேசியை எடுத்த நித்தியின் விழிகள், ஒற்றைக் கட்டிலோடு இருந்த அச்சிறு அறையை அளவெடுத்தது.

“அவசரமாகத் திரும்பினால் சுவரில்தான் மோதுப்பட வேணும்; இதில், குழந்தைகளோடு எப்படிச் சமாளிப்பார்! அல்லது, வேறு வீடு பார்ப்பாரா? அதுவும் இரு குழந்தைகள்!” முணுமுணுத்துக் கொண்டவளின் மனதில் மின்னலென ஒரு வழி தோன்றியது.

சட்டென்று தன் கைபேசியில் இருந்து ஒரு ‘எஸ்எம்எஸ்’ தட்டி விட்டவள், அதற்கு பதிலை எதிர்பார்த்துக்கொண்டே மெதுவாகக் கீழே இறங்க, மதுராவின் கைபேசி மீண்டும் சிணுங்கியது.

ஒரே தாவாக கைபேசியைக் கொடுத்தவள், தமையனைப் பார்த்துக்கொண்டே போய் அமர்ந்து கொண்டாள்.

கைபேசியோடு சிறிது தள்ளிச்சென்ற மதுராவின் பேச்சிலிருந்து, அவளோடு வேலை செய்பவர் பேசுகின்றனர் என்பது விளங்கியது.

வந்த குறுகிய காலத்தில் பாஷையை ஓரளவுக்கு நன்றாக அவள் கதைப்பதைப் பார்த்து வியந்தனர், அண்ணனும் தங்கையும்.

தன் கைபேசியை தட்டிக் கொண்டிருந்த நித்தி, அருகில் வந்தமர்ந்தவளிடம், “ஃபோன் பண்ணினால் எடுத்துப் பேசும் வழக்கமே உங்களுக்கில்லை என்றுதான் நினைச்சிருந்தம்! ஆனால், அப்படி இல்லை போலிருக்கே!” கேலியோடு கூற, புரியாமல் பார்த்தாள் மதுரா.

“அதென்ன, நாங்க ரிங் பண்ணினால் மட்டும் எடுத்துக் கதைக்க மாட்டீங்க போல! என்னண்ணா, எவ்வளவு தடவைகள் எடுத்திருப்பம் இல்லையா?” தொடர்ந்தவளைத் தவிப்போடு நோக்கியவள், வந்ததிலிருந்து அமைதியாக இருக்கும் கார்த்திகேயனை ஒருதரம் பார்த்துவிட்டு நித்தியிடம் திரும்பி, “நீங்க எனக்கு எடுத்தீங்களா நித்தி?” என்றவளுக்கு சட்டென்று நினைவு வந்தது.

“ஹைய்யோ...ஸாரி...ஸாரி நித்தி. தெரியாத நம்பர், அதுவும் இங்க அப்படி எனக்கு யாரைத் தெரியும் என்று பேசாமல் இருந்திட்டன். ஸாரி! ஸாரி!” நித்தியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

“அட...பரவாயில்லை விடுங்க; அதற்குப் பதிலாக நான் உங்களை நல்லாவே ஏசிட்டன். (நன்றாகவே திட்டிட்டன்) அண்ணா கூட நல்லாப் பேசினவர் (நன்றாகத் திட்டினார்)” மீண்டும் தமையனை இழுத்தாள் நித்தி.

எப்போதுமே கலகலப்பாக இருப்பவள் நித்தி. பெற்றோர் மறைவோடு அவள் கலகலப்பும் துள்ளலும் காணாமல் போயிருந்தது. அதை மீட்டு வர அவள் தமையனும் முயன்று தோற்றிருந்தான். இன்று, பழைய தங்கையின் சாயலைக் கண்டவனுக்கு மனதில் மகிழ்வு பொங்கியது.

சிறுமுறுவலோடு தங்கையைப் பார்த்திருந்தவனை மீண்டும் தவிப்பாகப் பார்த்த மதுரா, “ஸாரி...” ஆரம்பிக்க, அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பிய நித்தி, “அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது மதுரா!” கண்டிப்பாகச் சொன்னாள்.

“இங்கு ஃபிளவர் ஷோ நடப்பது தெரியும் தானே; ஏப்ரல் கடைசியில் வரும்.”

“ம்ம்...தெரியும், போன தடவை பார்த்தன்!” என்றவள் வதனம், கணத்தில் இருண்டுவிட்டது!

சென்றவருடம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியிருந்தான் கணேஷ். அங்காங்கே நிறுத்தி நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். அவற்றை, மிகுந்த மகிழ்வோடு தங்கைகளுக்கு அனுப்பி வைத்திருந்தாள் மதுரா.

அவளின் இருண்ட வதனத்தில் பார்வை பதித்திருந்த நித்தி, “அப்ப உங்களை வந்து பார்க்கலாம் என்றுதான் நினைச்சிருந்தம் மதுரா!” சட்டென்று சொல்ல, கடினப்பட்டு, தன் நினைவிலிருந்து மீண்டு நித்தியின் பேச்சில் கவனம் செலுத்தினாள்.

“சுதாச் சித்தி விட்டாவா? உடனே போய்ப் பார் என்று ஒற்றைக்காலில் நின்றார். அவவின்ட தொந்தரவு தாங்காமல் தான் இங்க வந்தம்!” உண்மையை மறைக்காது சொன்னவளை, மதுராவுக்கு மிகவும் பிடித்துப் போனது.

‘இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளை என்றாலும் நம்மூர் பிள்ளைகள் போல கலகலப்பாக பழகுகிறாள்!’ மனதுள் எண்ணினார் யோகம்.

“இப்ப, நான் உங்களைத் தொந்தரவு செய்யப் போறன்! பிடிக்குதோ இல்லையோ, எனக்காக அதைச் செய்வீங்களா? சித்திக்காக உங்களை நாங்க பார்க்க வந்தது போல..” புருவம் உயர்த்திக் கேள்வி கேட்டவளை புரியாது பார்த்தவள், “சொல்லுங்க நித்தி, என்ன செய்ய வேணும்? எதுவென்றாலும் உங்களுக்காகச் செய்யிறன்!” அன்போடு அவள் கரம் பற்றினாள்.

“அது...” சட்டென்று மதுராவைக் கட்டிப் பிடித்துக் கொண்டவளின் பார்வை, தமையன் விழிகளோடு கதைபேசி மீண்டது!

“சரி, அப்ப எடுப்பதை எடுத்துக்கொண்டு கெதியா வெளிக்கிடுங்க!” கட்டளையாகச் சொன்னவள், இருந்த இடம் விட்டு எழுந்து , “சுபா ஆன்ட்டி எங்கட மதுராவைக் கவனமாகப் பார்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!” அவர் கரம் பற்றி குலுக்கிவிட்டு, குழப்பமாகப் பார்த்து நின்ற யோகத்தினருகில் சென்றாள்.

“ஆன்ட்டி, உங்களுக்கு நன்றியெல்லாம் சொல்ல மாட்டன். மதுரா உங்கட மகள் என்று சொன்னீங்க தானே? அப்ப, நன்றி தேவையே இல்லை. இனிமேல் மதுரா எங்கட பொறுப்பு; நீங்க கவலைப்படவே வேணாம்.” அவரின் முகம் வியப்பில் குளிப்பதைப் பார்த்தவாறே, “மதுராவை நாங்க கவனமாக பார்த்துக் கொள்ளுவம்!” யோகத்தை, அன்பாகக் கட்டியணைத்தாள்.

இதுவரை அவள் பேச்சு புரியாதிருந்த மதுரா, சட்டென்று இருந்த இடம் விட்டெழுந்தவள், “நித்தி! என்ன சொல்லுறீங்க!” அதிர்வோடு கேட்டாள்

யோகமும் சுபாவும் கூட வியப்பும் குழப்பமுமாக, அமைதியாக அமர்ந்திருந்த கார்த்திகேயனைப் பார்த்தனர்.
 
#3
நல்ல யோசனை நித்திக்கு
தங்களுடன் அழைத்து செல்லும் எண்ணம்
 
#4
கதை நன்றாக வந்துள்ளது. அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
 
#5
இடம் மாறினால் மனமும் மாறலாம்.
 

lalu

Well-known member
#6
Super UD akka..Mathura eniyavathu santhosama erukonum....😓
 
#7
கரெக்டா ட்விஸ்ட் வைத்து அந்த இடத்திலேயே பதிவு முடித்து எங்களின் எதிர்பார்ப்புகளையும், இதய துடிப்பையும் எகிறி வைக்கிறீர். அதனால சீக்கிரமாக சட்டு புட்டுனு அடுத்த பதிவு போடுவீங்களாம்.

இப்படிக்கு எங்களின் நலம் கருதி கேட்டுக் கொள்வோர்- உங்களின் வாசகர்கள்..
 
#8
waiting for the next UD
 

Rosei Kajan

Administrator
Staff member
#9
நல்ல யோசனை நித்திக்கு
தங்களுடன் அழைத்து செல்லும் எண்ணம்
கதை நன்றாக வந்துள்ளது. அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
இடம் மாறினால் மனமும் மாறலாம்.
Super UD akka..Mathura eniyavathu santhosama erukonum....😓
கரெக்டா ட்விஸ்ட் வைத்து அந்த இடத்திலேயே பதிவு முடித்து எங்களின் எதிர்பார்ப்புகளையும், இதய துடிப்பையும் எகிறி வைக்கிறீர். அதனால சீக்கிரமாக சட்டு புட்டுனு அடுத்த பதிவு போடுவீங்களாம்.

இப்படிக்கு எங்களின் நலம் கருதி கேட்டுக் கொள்வோர்- உங்களின் வாசகர்கள்..
.ஹா.ஹா...


waiting for the next UD
அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி . பாடசாலை கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது அதனால தான் கொஞ்சம் அப்பிடி இப்பிடித் தாமதம் .
குறை கொள்ளாதீர்கள் .
 
Top