தொடர்கதைகள் அத்தியாயம் 4

Rosei Kajan

Administrator
Staff member
#1
இருபது வருடங்களுக்கு முன், சிறியளவில் ‘மென்பொருள் உற்பத்தி’ நிறுவனத்தை நடத்தி வந்திருந்தார் தர்மா. குடும்பத்தைப் பிரிந்து தனியாக வந்தவர் அத்தொழிலை விரிவுபடுத்தி முழுமூச்சாக வளர்த்து உச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.அவரின் சுகயீனத்தின் பின்னர் அத்தனையையும் கட்டிக்காப்பது வதனாவின் பொறுப்பானது. அவளும், தந்தைக்கு ஏற்ற மகளாக மிக இலாவகமாகவே தொழிலை நடத்தி வருகின்றாள்.அவள், நின்று நிதானிக்காது அலுவலகத்துக்கும் வைத்தியசாலைக்குமாக அலைவதை, இந்த இரண்டு நாட்களுமே அவதானித்திருக்கிறான் நிர்மலன்.அப்படியே, கல்யாணத்துக்குச் சம்மதம் என்ற வேகத்தில், “டொக்டரைப் பார்த்திட்டு வாறன்.” என்று போனவளை அதன் பின்னர் வைத்தியசாலையில் சந்திக்கவில்லை அவன்.அதைப்பற்றியெல்லாம் கவனியாத தர்மா தன் உற்ற நண்பனை அழைத்து, அடுத்த முகூர்த்தத்தில் மகளுக்குக் கல்யாணம் என்ற விபரம் சொல்லி ஆயத்தங்களைச் செய்யச் சொல்ல, இடையிட்ட நிர்மலன், “இங்கு மாமாவின் முன்னால் வைத்துச் சிம்பிளாகச் செய்வம்!” அதிலேயே நின்றிருந்தான்.“கலியாணம் முடிஞ்சபிறகு உன்ர வீட்டுக்குச் சொல்லலாம் நிர்மல், இப்போ வேணாமே!” யார் தலையீட்டிலும் மகளின் திருமணம் தடைப்படுவதை விரும்பாது கோரிக்கை வைத்திருந்தார் தர்மா.தர்மாவின் கோரிக்யை மீறி, வீட்டிலோ, தன் அன்புத்தாயிடமோ சொல்ல நினைத்தால் சொல்வது இவனுக்கு ஒரு விடயமே இல்லை. வரும் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் திடமில்லாமலா திருமணத்துக்குச் சம்மதம் சொன்னான்.அப்படியிருந்தும், திருமணம் முடிந்ததும் சொல்வோமே எனத் தானும் முடிவெடுத்தவன், திருமணத்துக்கு முன்பாக வதனாவோடு மனம் விட்டுக் கதைக்க வேண்டும் என்று தீர்மானிக்க மறக்கவில்லை; அதை ஆறப்போட அவன் மனம் இசையேன் என்றது.இப்படி, அவளோடு கதைப்பதற்குச்(பேசுவதற்குச்) சந்தர்ப்பம் பார்த்து மாலை வரை அங்கு நின்றவன், அவளைச் சந்திக்கவே இல்லை.“சரி, இரவைக்கு வீட்டுக்கு வந்து தானே ஆக வேணும்?’ என எண்ணிக்கொண்டு மாமனாரிடம் விடைபெற்று வீடு வந்தவன், வீட்டுவேலை செய்யும் பெண்மணி தந்த தேநீரோடு தனக்குத் தந்திருந்த அறையின் பால்கனியில் வந்தமர்ந்து, மடிக்கணணியை உயிர்ப்பித்து, தன் வேலை சம்பந்தமாக முக்கியமாகப் பார்க்க வேண்டியவற்றைப் பார்க்கத் தொடங்கினான்.இவனும், இவனது ஒரே தங்கையின் கணவனும் நண்பனுமான ராகவுமாக மென்பொருள் அலுவலகம் ஒன்றையே நடத்தி வருகிறார்கள். அவனிடம் கூட தான் என்ன விஷயமாகச் செல்கிறேன் என்று சொல்லாது வந்திருந்தவன், அவனுக்கு அழைத்து, அலுவலகம் தொடர்பாக உரையாடினான்.முடிவில், பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டான் ராகவ்.“என்னிடம் கூட சொல்ல முடியாமல் அப்படி என்ன விஷயம் மச்சான்? நிச்சயம் நீ வீட்டில் சொன்னது போல நம் வேலை சம்பந்தமான விஷயமில்லை என்றுதான் எனக்குத்தான் தெரியுமே!” என்று, இவன் குட்டை உடைத்தான்.இவன் பதில் சொல்லாதிருக்கவே, “நீ வேலை விடயமாகப் போவதாகச் சொல்லிச் சென்றதாக மாமி பேச்சுவாக்கில் சொன்னார். என்னடா கதையிது என்று திடுக்கிட்டாலும் அதையும் இதையும் சொல்லிச் சமாளித்தேன். போதாக்குறைக்கு, மாமா வேறு ஒருமாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தார்.” என்றவனை, இடையிட்டான் நிர்மலன்.“உன்ர மாமா என்றைக்குத்தான் ஒழுங்காகப் பார்த்திருக்கிறார்! எப்பவுமே ஒரு மாதிரிப் பார்வைதான்.” என்றவன் குரலில் தகப்பன் மீதான பிடிப்பின்மை மிகுந்திருந்தது.தந்தை மகன் உறவின் தரமும் தன் மாமனாரின் குணமும் தெரிந்த ராகவ் பேச்சை மாற்றினான்.“அதைவிடு, சொல்லு, என்ன விஷயமாகப் போனாய்? இப்ப எங்க இருக்கிறாய்?” உரிமை கலந்த கண்டிப்போடு கேட்டு வைத்தான்.ஒருநிமிடம், ‘சொல்லி விடுவோமா’ என நினைத்தவன் அதைக் கைவிட்டுவிட்டு, “என்ன என்று நான் வந்து சொல்லுறன் மச்சான்; நீ எப்படிக் கேட்டாலும் இப்போ என் பதில் மௌனம் தான்!” தன் வழக்கப்படி கறாராகச் சொன்னவன்,“எவ்வளவு கெதியா முடியுமோ வருவேன், அதுவரை பார்த்துக் கொள்!” என்றுவிட்டு வைத்தவன், பால்கனியால் தெரியும் பாதையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.நேரம் கடக்க கடக்கப் பசியுணர்வு வயிற்றில் கலவரம் உண்டு பண்ணியது.போட்டிருந்த டீ - சேர்ட்டை கடந்த சில்லென்ற காற்றின் தழுவலில் வீட்டினுள் செல்ல விரும்பிய உள்ளத்துக்குத் தடைபோட்டுவிட்டான்.“தம்பி, சாப்பிடலாம் வாங்க!” என, இருதடவைகள் வந்து அழைத்த பொன்னிக்கு, “வதனாவும் வரட்டும்.” என்று பதில் சொன்னவன், அசையாதிருந்தான்.‘வழமையாக இப்படித்தான் நேரம் செல்ல வருவாளோ? அல்லது, விருப்பமில்லாமல் கல்யாணத்துக்குத் தலையாட்டிவிட்ட கலவரத்தில் எங்காவது சுத்துகிறாளோ!? என்னவாச்சு!’சுழலும் சிந்தனை, பலதடவை அலைபேசியை எடுத்து அவள் இலக்கத்தை அழுத்த முனைந்து, பின் அதையும் கைவிட்டுவிட்டுத் தடுமாறியது.இப்படியே அவன் பொறுமையை சோதித்துவிட்டு ஒன்பதுமணி கடந்த வேளையில் அவள் கார் வீட்டினுள் நுழைந்தது. சட்டென்று இருக்கையை விட்டெழுந்து கீழே எட்டிப் பார்த்தவனால், தோளில் ‘பாக்’கும், கையில் சில ஃபைல்களுமாக இறங்கி உள்ளே வந்தவள் முகம், மிகவும் களைத்துச் சோர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.மாமாவின் மகளாக அறிமுகமாகி, முதல் பார்வையில் இவன் மனதைச் சுளிக்க வைத்தவள், பின், அதிர்வையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினாலும் உற்ற உறவென்ற எண்ணம் வரவே இல்லை.இப்போதோ, இவள் என்னோடு வாழ்வு முழுமைக்கும் கைகோர்க்கப் போகின்றவள் என்ற எண்ணம் அவன் மனதை வியாபித்திருந்ததை அதிசயமாகவே உணர்ந்தான் அவன்.அதே எண்ணமும் உணர்வும் அவளுள்ளும் உண்டா என அறிந்திடும் ஆவல் அவனுள் தலைதூக்கி வளர்ந்து கொண்டிருந்தது.மீண்டும் இருக்கையை நாடின அவன் கால்கள். ஏனோ, உள்ளே சென்று உணவுண்ணும் எண்ணம் வரவில்லை.‘சாப்பிட்டிட்டனா என்று கேட்டு, வந்து கூப்பிடுறாளா பார்ப்பம்!’ சின்னதாக ஆசையில் தோய்ந்த எதிர்பார்ப்பு!‘அவளைக் கண்டதும் என்னுள் உருவான ஒதுக்கமும் வெறுப்பும் போலவே அவளுக்கும் இருந்திருக்குமே! இப்ப, தகப்பனுக்காக ஆமென்றவள் இன்னும் அந்த வெறுப்பைச் சுமந்து கொண்டிருந்தால் எங்கள் வருங்காலம்?’ என்ற சிந்தனையே அவனை வியாபித்திருந்தது.ஒட்டுதலில்லா தாம்பத்தியம், குடும்பவாழ்வு, கணவன் மனைவி பரஸ்பர உறவு எப்படியிருக்கும் என்பதற்கு, அவன் கூடவே உதாரணமாக உள்ளார்களே அவன் பெற்றோர்!ஆதலால், அப்படியொரு வெறுப்புணர்வோடு திருமணம் செய்வதில் அவனுக்குக் கொஞ்சமும் இசைவில்லை.‘திடீரென்று ஒரு கட்டாயத்தில் நடந்தாலும் எங்கள் கல்யாணம் இருவரினதும் குறைந்த பட்ச சம்மதத்தோடுதான் நடக்க வேணும்.’ என்கின்ற பிடிவாதம் மனதில் அலைந்து திரிய, அவன் இமைகள் தாமாக மூடிக்கொண்டன.முதல்நாள், நீண்டநேரம் காரோட்டி வந்து, அடுத்தடுத்து அதிர்வுகளைச் சுமந்து, இன்றும், காலையிலிருந்து ஒரே பரபரப்பு, அலைச்சல் என மனமும் உடலும் ஓய்வின்றி இருந்ததாலோ என்னவோ கண்மூடியவன் அசந்துறங்கிப் போனான்.“நிர்மல் நிர்மல்..” மெல்ல அழைக்கும் குரலும் அவன் தோளில் உணர்ந்த தொடுகையிலும் கண்ணைத் திறந்தவன், தன்னருகில் நின்ற வதனாவைக் கண்டதும் விழிகள் விரிய, உறக்கம் ஓரம் கட்டியிருக்க நிமிர்ந்தமர்ந்து அவளையே பார்த்தான்.“இதென்ன குளிரில் இருந்து நித்திரை கொள்ளுறீங்க? எவ்வளவு நேரமாச்சு, சாப்பிடவும் இல்லையாமே! வாங்க சாப்பிடலாம்.”கவனமாக அவன் பார்வையைத் தவிர்த்தாலும் சாதாரணமாகவே இருந்தாள் அவள்.வந்ததில் இருந்தே அவளது இந்த நிதானத்தைக் கண்டிருக்கிறானே!“ஹப்பா! ஹார்ட் நட்!” அவன் முணுமுணுப்பு அவள் செவிகளைத் தொடாதில்லை. ஆனாலும் கேளாதவள் போல் மெல்லத் திரும்பி நடக்க முற்பட்டவளை, நகரவிடாது தடுத்தது அவன் கரம் பற்றுதல்.சட்டென்று நின்றவள் அவனை நேராகப் பார்த்தாள்.பிறகு, அவன் கரத்தைப் பிடித்திருந்ததையும் பார்த்துவிட்டு, “உங்களுக்கு குளிரவில்லையா? எனக்குக் குளிருது; அதோடப் பசிக்குது; வாங்க சாப்பிடலாம்.” மீண்டும் உட்புறமாகத் திரும்பியவளை, இப்போது தோள்களில் பற்றி நிறுத்தினான் அவன்.அதோடு, ‘உனக்கு நல்ல துணிச்சல் தான்!’ அவள் விழிகளில் படிந்த செய்தியைத் தப்பாது படித்தும் விட்டான்.உள்ள நிலைமறந்து சிறுமலர்வு அவன் விழிகளிலும் உதடுகளிலும் எட்டிப் பார்த்தது. அதைக் கண்டவள் பார்வை நகர்ந்து வெளிப்புற இருட்டைத் துளாவியது.மறுநாள் கல்யாணம் செய்யப் போகிறவன் கரம்பற்றியதும் அப்படியே துவண்டு வெட்கிப் போகும் பெண் இல்லை இவள் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்தவனுள்,‘மனமொத்து இணைய விருப்புகிறவர்களால் தானே அப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியும்!’ என்ற எண்ணம் தோன்றாது இல்லை.‘அப்ப, இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. தவிர்க்க முடியாத சகிப்பில் தலையாட்டி இருக்கிறாள்.’ என்ற எண்ணம் கசப்போடு வியாபிக்க, “உம்மோடு கொஞ்சம் கதைக்க வேணும் வதனா!” மனதின் சுணக்கத்தைக் காட்டியது அவன் குரல்.தோளில் படிந்திருந்த அவன் கரத்தை விலக்கிக்கொண்டே அவனைப் பார்த்தவள், “கதைக்கலாமே! அதற்காகப் பசியோட குளிருக்குள்ள நின்று......சாப்பிட்டுட்டுக் கதைப்பமே!” என்றவள்,“உங்களுக்குச் சாப்பாடு கொடுக்கச்சொல்லி பொன்னியிடம் சொல்லியிருந்தன். வேணாம் என்றீங்களாம். வாங்க, முதல் சாப்பிடலாம்.” என்றவள், நகராது, என்ன வருகிறாயா என்கின்ற மாதிரி அவனைப் பார்த்து வைத்தாள்.அதற்கும் மேல் எதையும் கதைக்கவில்லை(பேசவில்லை) அவன்.“ஹ்ம்ம் வாரும்!” என நகர, அவனை முந்திச்சென்றவள் இருவருக்குமாக தட்டை எடுத்து வைத்துவிட்டு உணவுப் பதார்த்தங்களின் மூடிகளை எடுத்து அப்பால் வைத்தவள்,“நீங்களே வேண்டியதை போட்டுச் சாப்பிடலாம்!” என்றவாறே அமர எத்தனிக்க, “ஏன் வதனா, நீர் போட்டுத் தந்தால் சாப்பிட மாட்டேனென்று எப்ப சொன்னன்?” என்றவாறே, அவள்புறமாகத் தன் தட்டை நகர்த்தினான் அவன்.“இல்ல, அதுக்கில்லை. உங்களுக்கு அளவாக...

வேண்டியதை...” சற்றே தடுமாறினாள் அவள்.“எனக்கு எவ்வளவு சாப்பாடு போடாலாம் என்று உம் மனம் சொல்லுதோ அந்தளவு போடும்!” என்றவாறே கரமிரண்டையும் கட்டிக்கொண்டு கதிரையில்(இருக்கை) சாய்ந்தமர்ந்து அவளை ஒருபார்வை பார்த்தான் நிர்மலன்.வெட்டும் பார்வை ஒன்றை மறக்காது வீசி விட்டு, தட்டை எடுத்து அங்கிருந்த பதார்த்தங்களை ஆராய்ந்தவள், அவன் விருந்தாளியாக வந்திருக்கிறான் என்றதால்தான், பொன்னி பார்த்து பார்த்துச் சமைத்து வைத்திருக்கிறாள் என விளங்கிக்கொண்டாள்.இல்லையோ, தந்தை வைத்தியசாலையில் இருப்பதில், இவள் அங்கேயே எதையாவது கொறித்துவிட்டு வருவதால் வீட்டில் அவ்வளவாகச் சமையல் நடப்பதில்லை. 

Rosei Kajan

Administrator
Staff member
#2
“புட்டும் இடியப்பமும் இருக்கு...எது விருப்பம்?” அவள் கேட்ட தோரணையே ‘உன்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும்?’ என்பதாக அவனுக்கு விளங்கியது.

“ம்ம்...எனக்குப் புட்டு அதுவும் வெள்ளைப் புட்டு...” என்றவாறே, கறிகள் இருந்த பாத்திரங்களை ஆராய்ந்தான்.“இது என்ன? இறால் பிரட்டலா? அதோடு தாரும். ” என்றவன், “இனி மறக்க மாட்டீரே?” கொசுராகக் கேட்டு வைத்தான்.காதில் விளாத பாவனையில் கறிகளையும் பிட்டையும் பரிமாறிவிட்டு, “சாப்பிடுங்க...” என்றவள், அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு,“இனி எடுத்துத் தீத்தி(ஊட்டி) விடவும் வேண்டுமாக்கும்!” முணுமுணுத்தது அவன் செவிகளில் விழ, நகரப் போனவளின் கரத்தைப் பற்றி நிறுத்தியவன்,“தீத்தி விட்டாலும் சாப்பிட நான் ரெடி!” மலர்வோடு நகைத்தான்.அவள் காணும் அவனது முதல் மலர்ந்த நகைப்பிது!வந்ததற்கு இப்போதானே அவள் முகம் பார்த்து, தன்மையாக, சேர்த்தால் போல கதைத்திருக்கிறான்.முதல்நாள் மணம்புரிய மறுத்து, மறுநாள் திருமணத்துக்கு சம்மதித்து, எப்படி, ஏன் என்ற கேள்விகளை அவளுள் உலவவிட்டிருந்தான் இவன்.‘தன் மாமாவுக்காக, போனால் போகுதென்று என்னைச் சகித்துக்கொள்ள துணிந்து விட்டார் போல!’ என்று கோபத்தோடு கனத்துப் போயிருந்த அவளுள்ளம், இப்போதோ, விழிவழி அவன் நகைப்பை படம் பிடிக்க முயன்றது.அதில் அர்த்தங்களைத் தேடவும் முனைந்தது.‘கட்டாய மணபந்தத்தில் சிக்கப் போகிறோமே என்ற சஞ்சலம் குடிகொண்டிருந்தால் இப்படி இலகுவாக நகைக்க முடியுமா? வலிந்து வலிந்து கதைக்கத் தான் முடியுமா?’ என்ற கேள்விகள் எழுந்த வேகத்தில் ‘முடியாது’ என்கின்ற பதிலைச் சொல்லி, அவள் மனப்பாரத்தைக் குறைக்க முயன்றது.தன்னையே நோக்கியவாறு நிற்பவளைத்தான் அவனும் பார்த்திருந்தான்.‘தன் மலர்வுக்குப் பதில் அங்கு கிடைக்குமா?’ என, அவன் முகம் அவள் வதனத்தை துளி துளியாக ஆராய்ந்தது.கணத்துக்குக் கணம், மனதின் மாற்றங்களை துல்லியமாகக் காட்டிய பளிங்கு வதனத்தில், மெல்ல மெல்லத் தான் தொலைவதை உணர்ந்தவனின் எதிர்பார்ப்பு, உச்சத்தில் நின்றது.‘இந்தத் திருமணத்தில் உனக்கு மனமார்ந்த சம்மதமா?’ என்ற கேள்வியைக் கேட்டு, அதற்கு, அவளின், ‘சம்மதம்’ என்கின்ற பதிலைப் பெற அவாக்கொண்ட அவன் மனம், அவள் இதழ்களின் அசைவில் புன்னகையை உதறிவிட்டு அவளைத் தீர்க்கமாகப் பார்த்தது.என்னதான் மனதில் சமாதானம் கொள்ள முயன்றாலும் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லச் சற்று முன்னரும், இத்திருமணத்தில் விருப்பம் இல்லையென்று சொன்னதால், ‘என்னைச் சகித்துக்கொள்ளவே நினைக்கிறார்.’ என்றே மீண்டும் எண்ணியவளும் அவனை ஒரு தீர்க்கமான பார்வையால் தொட்டாள்.அதோடு நிறுத்தாது, “நான்..பகலும் சாப்பிடவில்லை; கொஞ்சம் வேலை, அதுக்குப் பிறகு அப்பாவிடமும் போயிட்டு வர நல்லா நேரம் போய்ட்டுது.” என்றவள், “பசிக்குது!” என்றதும், கரத்தை விட்டவன் அமைதியாக உண்ண முனைந்தான்.கணத்தில், அவன் மனதில் முளைத்திருந்த அமைதியும் ஒருவகை மகிழ்வும் மறைந்து போனது போலிருந்தது.அவளின் ஒட்டுதலில்லா வார்த்தைகளே அதைச் செய்ததாக எண்ணியவன், ‘இவளுக்கு விருப்பம் இல்லாத போது, திருமணம் செய்து...உப்ஸ்!’ உள்ளத்தில் மிகவும் களைப்பாக உணர்ந்தான்.‘மகனுக்குப் பொருத்தமான பெண் எங்கே இருக்கிறாள் என்று அம்மா சல்லடை போட்டுத்தேட, நான் இவளைக் கட்டுவதற்குத் தலையாட்ட, இவளோ...’ என நினைத்தவனுக்கு, தர்மாவின் உடல் நிலை, இக்கல்யாணத்தில் அவரின் நிம்மதி, சந்தோசம் என்பவற்றைத் துல்லியமாக அறிந்திருந்தவனால் தொடர்ந்து உணவுண்ண முடியவில்லை.தந்தை வைத்தியசாலை சென்றபின் அவளுமே உணவைக் கொறித்துவிட்டு எழுபவள் ஆச்சே! அவனுக்கு முதல் அவள் எழுந்து விட்டாள்.அதற்கும் அவன் மனம் முனகியது!‘டேபிள் மானஸ் தெரியாதவள்; போட்ட சாப்பாட்டைச் சாப்பிடுறானா? ஏதாவது வேணுமா? என்று கேட்டுப் பார்த்துப் பரிமாறினால் குறைந்து போய்விடுவாவாம்!’ என்று முனகியவனுக்கு, முதல்நாள் அவள் உணவு தந்ததும் அவளைப் பற்றி விசாரிக்காது தான் உண்டதும் தான் நினைவில் வந்தது.அவன் சுண்டிய முகத்தோடு எழ, “பொன்னி, நாங்க சாப்பிட்டிட்டம். எடுத்து வச்சிட்டுப் போயிட்டு வாங்க!” அவர்கள் வீட்டின் பின்னால் வசிக்கும் வேலை செய்யும் பெண்ணிடம் சொல்லிவிட்டு, விறுவிறுவென்று சென்று ஹால் சோஃபாவில் அமர்ந்தவள், அவன் அங்கு வராது தன் அறைநோக்கி நகர்வதைப் பார்த்து,“ நிர்மல், என்னவோ கதைக்க வேணும் என்றீங்களே என்றுதான் இதில் வந்து இருந்தன்.” என்றதும், முறைத்தவன், விடுவிடுவென்று தன்னறைக்குள் புகுந்து விட்டான்.வழுவழு கொளகொள என்று பேசிப் பழகுபவன் அல்ல நிர்மலன். அப்படிப்பட்டவன், முதல் முதல் அவளோடு மிகவும் தன்மையாக அணுக நினைத்தான். அவளோ, ‘அவனை துச்சமாக நினைத்துக் கொண்டாளோ!’ அவன் மனதில் இந்த சந்தேகம் வந்திருந்தது.‘அளவுக்கதிகமான பணம், அதை ஆளத்தெரிந்த திறமை என்று திடமான ஒரு இளம்பெண் அவள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபத்தி மூன்று வயதிருக்குமா?’ கணக்குப் போட்டவன், “அவளை விட ஐந்து வயது பெரியவன் நான்; என்னிடமேவா?” வார்த்தைகளால் தன் அதிருப்தியை வெளியிட்டான்.இவன் இப்படிக் கொதிக்கத் தொடங்கியிருக்கையில், அதை ஆரம்பத்திலேயே அணைக்கும் விதமாகத் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள் வதனா.உள்ளே வந்தவளோடு ஒத்தவார்த்தை கதைக்க முனையவில்லை அவன்.ஆனால், விழிகளின் கூர்பார்வை அவளைத் துளைக்கும் வேலையை நிறுத்தவில்லை.இதுவரை அவளில் இருந்த நிமிர்வில் சிறு தடுமாற்றம்!மெல்ல அருகில் வந்தவள், “என்னில் கோபம் வந்திட்டுது போல! நான்...நான் ஒன்று கேட்கலாமா?” என்றதற்கு எதுவும் சொல்லாது அவளையே பார்த்தவாறு இருந்தான் அவன்.அவன் விழிகளில் தென்பட்ட பிடிவாதமும் முகத்தில் இருந்த இறுக்கமும் பார்த்தவளுக்கு அவனைத் தான் வருத்தியுள்ளது புரிந்தே இருந்தது.அவன் அமர்ந்திருந்த சோஃபாவின் மறுமுனையில் சென்றமர்ந்து கொண்டவள், “அப்பா முதல் கேட்டதும் மாட்டன் என்றீங்க தானே? பிறகு, அப்பாவின் நிலைபார்த்துச் செய்வதறியாது சம்மதம் சொன்னீங்க; ஒருவகையில் சொன்னால், தவிர்க்க முடியாத சுமையாகிப் போனன் நான். என் அப்பாவுக்கும்...உங்களுக்கும்.” அவள் அப்படிச் சொன்னதும் அவன் முகத்தில் அதிர்வலை ஓடி மறைந்தது.அவன் நெற்றி கேள்வியாக ஏறியிறங்கியதைப் பார்த்துவிட்டு, “அத்தனை வருத்தத்திலும் வேதனையிலும் அதை எல்லாத்தையும் விட என்னைப்பற்றிய கவலைதான் அப்பாவுக்கு!” கண்கலங்கச் சொன்னவளுக்கு, தகப்பன் நினைவில் தொடர்ந்து நாவெழவில்லை.
 

Rosei Kajan

Administrator
Staff member
#3


இத்தனைநாட்களுக்குப் பின், இன்று, அவர் முகத்தில் மகிழ்வும் அமைதியும் பரவி நிற்பதைப் பார்த்துவிட்டுத்தானே வந்திருந்தாள்.அந்த அமைதியும் மகிழ்வும் நீண்ட ஆயுள் கொண்டதா?மீண்டும் அவனைப் பார்த்தவள் அவனிடமே அதைக் கேட்டாள்.“உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வீட்டுக்குள்ள உறவு என்று வந்த முதல் ஆள் நீங்க தான். இதுவரை, அம்மா பக்கம் இருந்தோ அப்பா பக்கம் இருந்தோ யாருமே வரவில்லை. அவர்களை எதிர்த்துக் கல்யாணம் செய்ததில் வந்த வினை!என் சொந்தம் என்றால், அப்பாவைத் தவிர அம்மாவைக் கூட தெரியாது. அம்மாவின் ஃபோட்டோ என்று எதுவுமே இருக்கவில்லை. கேட்டால் ‘ஃபோட்டோ எடுக்கும் நிலையில் எங்க வாழ்க்கை இருக்கவில்லை; அவளும் அவசரமாகப் போயிட்டாள்.’ என்கிறார் அப்பா.அப்படிப் பார்த்தால், காதலித்து, வீட்டை எதிர்த்துக் கல்யாணம் செய்து அப்பாவுக்கு கிடைத்தது நான் மட்டுமே! தாய் இல்லாது ஒரு சிறுபிள்ளையை வளர்ப்பதென்பது அவ்வளவு இலகுவானதா சொல்லுங்க பார்ப்போம்?வேலை, வீடு, சமையல் என்று அப்பா பம்பரமாகச் சுழன்றது எனக்கு இன்னும் நினைவிருக்கு! அப்பவெல்லாம் நான் அவர் கஷ்டத்தை உணர்ந்து கொள்ளவில்லை. இப்பத் தான் விளங்குது.” கரைகடந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தாள்.“இதே, இரண்டு பக்க உதவியும் இருந்திருந்தால் வந்திருக்குமா? அப்பாவும் தனிமையில் நின்றிருக்கத் தேவையில்லை. பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பார்களா என்ன? என்னையும் வளர்க்க கஷ்டப்பட்டிருக்க தேவையில்லை.” என்றவளின் பார்வை, மீண்டும் அவன் முகத்தில் நிலைத்தது.“சொந்தபந்தம் இல்லாதிருந்தால் எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். சொந்த பந்தங்களுக்காக ஏங்கியிருக்கிறன். அப்படியிருக்க, இப்போ நம்ம கல்யாணம் நடந்தால் அன்றைக்கு அப்பாவுக்கு நடந்ததுதானே நமக்கும் நடக்கும்?அப்பாவை இத்தனை வருடங்கள் மன்னிக்காத உங்க குடும்பம், அப்பாவின் மகளை, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்பார்களா?நீங்க ஏன் அதை யோசிக்க இல்ல? இந்தக் கல்யாணம் பற்றிக் கொஞ்சம் சரி விருப்பம் இருந்து யோசிச்சிருந்தால் உங்களுக்கு அது கட்டாயம் தெரிஞ்சிருக்கும் .அப்பா கேட்கிறார் என்று சகித்துக்கொள்ளும் வகையில் நீங்க தலையாட்டி வைத்தால் நாளை என் பிள்ளைக்கும் தனிமைதானே? உறவுகளைத் தெரியாமல், அறியாமல் வளர வேண்டிய நிலைதானே?” கடகடவென்று சொல்லிக்கொண்டு வந்தவள், பேச்சை நிறுத்தி, கலங்கும் விழிகளையும் நடுங்கும் இதழ்களையும் கட்டுப்படுத்த முனைந்தாள்.அவள் சொல்லச் சொல்ல கேட்டிருந்தவனோ அசைய மறந்திருந்தான்.‘இவளுக்குச் சம்மதமா என்று நான் குழம்ப, அவள் கல்யாணம் முடித்து குழந்தைகளின் வாழ்வு வரை போயிட்டாளே!’சட்டென்று நெருங்கி அமர்ந்தவன், அவள் கரத்தைத் தன் கரங்களுள் எடுத்து வைத்துக்கொண்டு, அவள் விழிகளுள் உற்று நோக்கினான்.“அழுகை வந்தால் அடக்காது அழுது விடவேணும் வதனா. எனக்கு முன்னால் அழுதாய் என்று நான் என்ன பகிடியா பண்ணப் போறன்! ச்சே...ச்சே...உண்மையாவே சிரிக்கமாட்டன்; அழுதுவிடு!” அவன் குரலில் இருந்த கேலி, அவள் விழிகளை குபுக்கென்று உடைத்து விட்டது.மெல்லிய சத்தத்தில் விசும்பியவளை உரிமையோடு வளைத்துக் கொண்டன அவன் கரங்கள்.“ஸ்ஸ்..வதனா..ஒரு பேச்சுக்குச் சொன்னால் இப்படியா அழுவாய்?! நான் ஏதோ ‘அயன் லேடி!’ என்று நினச்சனே! அப்படி இல்லைப் போலிருக்கே!” அவன் கேலி தொடர, அவள் விசும்பலும் அதிகரித்தது.சின்னவயதில் இருந்தே அவள் திடமானவள் தான். அப்படித்தான் அவளின் தந்தை வளர்த்திருந்தார். அதே, தந்தையின் சுகயீனம் அவளை மேலும் இறுக வைத்துவிட்டது. அவரின் அத்தனை தொழில்களையும் சின்னவயதில் பொறுப்பேற்கும் நிலை வந்த போது அதற்குப் பொருத்தமாக தன்னைத் தானே இறுக்கமாக மாற்றிக்கொண்டாள் இவள்.அப்படியிருந்தவளுக்கு, முதல் முதல், ‘என் தோள் சாய்ந்து உன் கலக்கம் மற!’ எனச் சொல்லி, ஆறுதல் தந்தவன் நேற்று அறிமுகமான சொந்தம்தான்.“வதனா...போதும்; இனி நிற்பாட்டும்!” கண்டிப்போடு கூறி அவளது முகம் நிமிர்த்தியவன், மென்மையாக அவள் கண்களைத் துடைத்து விட்டான்.“இங்க பாரும், இந்தக் கல்யாணத்தில் எனக்குத் துளியும் விருப்பம் இருக்க இல்ல. மாமா, வா என்றதும் வந்தாலும் அவரில் எனக்குச் சரியான கோபம்.” அவள் முகத்தின் அதிர்வு பார்த்துத் தன் பார்வையை வேறுபுறம் திருப்பியவன், “ஆனால், இங்க வந்த பிறகு ...” சற்றே தடுமாறினான்.“அப்பவும், திடீரென்று கல்யாணம் செய் என்றதும் அது எப்படி என்றுதான் நினைத்து மாட்டேன் என்றேன். உன்னை எனக்கோ, என்னை உனக்கோ தெரியாது. கட்டாயத்தில் கல்யாணம் செய்வது...அது சரிவரும் என்று எனக்குத் தோன்றாததால் மாட்டேன் என்றேன்.அதேநேரம், இன்றைக்குச் சரி என்றதும் நிச்சயம் மாமாவுக்காக இல்லை வதனா. அவருக்காக என்றால்தான் நேற்றே சொல்லியிருப்பேனே! உன்னோடு என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று என் மனதுக்குப் பட்டதால் சரி என்றேன். அதேபோல, உன் விருப்பம் அறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?நன்றாக வாழ முடியும் என்ற பரஸ்பர நம்பிக்கை இருந்தால் பிறகு என்ன? வரும் நாட்களில் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம் தானே!இங்க பார், அப்போதும் உன் மனதில் என் மீது நம்பிக்கை இருக்கா என்று அறிய நினைத்தேனே ஒழிய, உன்னையும் என்னையும் ஒதுக்கி வைப்பார்கள் என்று கணமும் நினைக்கவில்லை. மாமாவின் பிரச்சனை வேறு.” சட்டென்று நிறுத்தியவன் சிறிது நேரம் எதுவும் கதைக்கவில்லை.“நம்மட கல்யாணத்தில், நீ ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தால் போதும் வதனா; நாம இரண்டு பேரும் சேர்ந்து சந்தோசமாக வாழலாம் என்ற நம்பிக்கை உனக்கு என்னில் இருக்கா? அதுமட்டும் தான் முக்கியம்.” அவள் முகத்தை நிமிர்த்தியவன்,“சொல்லு, அந்த நம்பிக்கை இல்லையென்றால் இப்பவே சொல்லு; இந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது!” அவன் சொல்லிக் கொண்டிருக்க, கரத்தை விலக்கியவளின் தலை அவன் தோளில் அழுந்தச் சாய்ந்து கொண்டது.அக்கணம், நிர்மலனின் மனம் நிர்மலமானது!இருநாட்களாக அனுபவித்த, அவனை ஆட்கொண்டிருந்த அத்தனை எதிர்மறை உணர்வுகளும் காணாமல் போய், அங்கு, அலாதியானதொரு அமைதி கலந்த திருப்தியுணர்வு மட்டுமே எஞ்சி நின்றது.அவனுள்ளத்தினுள் நுழைந்து தன் சுகந்தத்தை மெல்ல மெல்லப் பரப்பி இதழ்விட்டு மலர்ந்த வதனாவின் உள்ளமும், அக்கணம், பெருத்த ஆசுவாசம் கொண்டு அவனுள்ளதோடு இரண்டறக் கலக்க முனைந்தது.அம்முனைப்பில் தீவிர பாவத்தில் இருந்த இரு உள்ளங்களும் சினேகமுறுவலோடு இறுகக் கைகோர்த்து நிற்க, அதை உணர்ந்தவனின் கரமிரண்டும் அவளை வளைத்துத் தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டன.எதிர்வந்த சிறுபொழுது, வார்த்தைகளைத் தொலைத்த மௌனமொழியின் சலசலப்பும் அட்டகாச ஆதிக்கமுமாக கழிந்தன.மௌனத்தை முதலில் உதற நினைத்த நிர்மலனின் விழிகள், தன் கைவளைக்குள் அகபட்டிருந்தவளில் நிலைத்து இமைதட்ட மறந்து நின்றன.“இது மட்டும் போதும் வதனா” கிசுகிசுப்பாக ஆரம்பித்தான்.“என் வீட்டைப்பற்றி, அம்மா, தங்கச்சி, அவள் புருஷன், மாமி, அவர்களின் இரண்டு மகன்கள் என்று யாரைப் பற்றியும் ஒன்றும் நினைக்காதே! அவர்களுக்கு நான் எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியம் என் மனைவிக்கும் அங்க இருக்கும். அதை யாராலும் இல்லாமல் செய்ய முடியாது!” என்றவன், மறந்தும் அவன் தந்தை பற்றி வாய்விடவில்லை. அவளும், உள்ளத்தில் ஓடிய நிம்மதியில் அவன் தந்தை பற்றி குறிப்பிடாததைக் கவனிக்கவில்லை.பின்னர், நீண்ட நேரமிருந்து கதைத்தார்கள். ஒருவர் ஒருவரைப் பற்றி, படிப்பு, ஆசைகள், விருப்பங்கள், நண்பர்கள் என்று சென்ற பேச்சில் அடிக்கடி தர்மா வந்து போனார். அந்த நேரமெல்லாம் அவள் விழிகள் தளும்பிக் கொண்டிருந்தன.“எனக்கு அப்பா வேணும் நிர்மல்; நாம சந்தோசமாக இருப்பதைப் பார்க்க அவரும் இருக்க வேணும்.” என்றவளுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஆறுதல் சொன்னான் அவன்.திட்டமிட்ட மாதிரி, இருநாட்கள் கழித்து ஒரு நல்ல நேரத்தில் தர்மா இருந்த அறையில் வைத்தே மாலை மாற்றி, தாலி அணிவித்துக் கல்யாணம் செய்தது மட்டுமில்லாது, பதிவாளரை அழைத்து விவாகப்பதிவும் செய்து கொண்டார்கள்.எல்லாம் தன் விருப்பப்படி நடந்ததில் மிகுந்த மனநிறைவோடு இருந்தார் தர்மா.“இனி எல்லாம் நல்லபடி நடக்கும்!” அவர் சொன்ன நேரம் நிர்மலனின் கைபேசி கிணுகிணுத்தது.
 

Reva

New member
#4
Nice epi
 
#5
Nice epi sis
 
#6
Nice 👌.... epi sis....
 
#7
Nice sis...
 
#8
Thanks for the periya epi nirmal super character vathanavum sensitive a irukku parpom rendu perida anbu eppadi poguthu endru
 

Damu

New member
#9
Arumaiyana kathai sis, nice ud unga kathaila nan 3 padithu vitten koottu kudumba uravugal romba azhaga solli irrukinga. Very nice.
 

lalu

Well-known member
#10
அருமையான பதிவு.....கல்யாணம் முடிஞ்சுது....இனிதான் பிரச்சனை தொடங்கப்போகுதோ.....
 
#11
Nice ud sis
 
#12
Waiting for next ud mam
 
#13
Super akka
 
Top