அத்தியாயம் 3 - இதழ் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1


அன்று மாலையில் நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சிக்குத் தானும் போவது என்று முடிவெடுத்த அபரஜித் உரிய நேரத்திற்குத் தயாரானான்.பாடசாலைச் சீருடை போல எப்போதும் அவன் அணியும் கறுப்புநிற ஜீன்ஸ், கறுப்பு நிற சேர்ட், கறுப்பு நிற கோட், கறுப்பு நிறக் கழுத்துப் பட்டி, கறுப்புச் சப்பாத்து சொக்ஸ் என்று அவன் அங்கங்களில் வெளித்தெரியும் பகுதி தவிர்த்து மீதிப் பிரதேசமெங்கும் கறுப்பு மயமாகத் தயாராகினான். வாயோ, ‘கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்று பாடவும் தயங்கவில்லை.ஒருவாறு தயாராகித் தனது கவசத்தை அதுதான் கமெராவைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு நிகழ்ச்சி நடந்த அரங்கை அடைந்தவன், நேராகக் கலைஞர்களுக்கு ஒப்பனை நடந்து கொண்டிருந்த அறைக்குச் சென்றான். அங்கு கதவைத் தட்டவும் வந்து திறந்தது யாழினி.“இங்கேயும் வந்திட்டீரா என்னைக் கரைச்சல் படுத்த?”கேட்டபடி முறைத்தவளை விழி வெட்டாது பார்த்தான் அந்தக் கறுப்பு ராஜா. அவன் எதுவும் பேசாமல் அவளையே ஒரு மந்தகாசப் புன்னகையோடு நோக்குவதைச் சகிக்க முடியாதவளாய் கதவை மறுபடியும் சாத்தினாள் யாழினி. அவள் மூடவும் இவன் மறுபடியும் தட்டவும், யாழினியின் கோபம் உச்சந் தலைக்கேறியது.இன்று இவனை என்ன, ஏதென்று கேட்டு ஒரு வழி செய்து விடுவது என்று முடிவெடுத்தவளாய் தன்னை நோக்கி வேகமாய்க் கதவைத் திறந்தாள்.அதே நேரம் அபரஜித் மறுபடியும் கதவைத் தட்டவென கையைக் கதவை நோக்கிக் கொண்டு வர, கடைசியில் பிடிமானமற்றுப் போன கரம் நேராய் யாழினியின் நடு நெஞ்சில் பதிய, அவனின் அழுத்தம் தாங்காமல், இதை எதிர்பார்த்துமிராதவளாய் திகைத்த விழிகளோடு, விழாமல் இருக்க அவனின் கையையே பற்றுக்கோலாய் பற்றிக் கொண்டு கீழே மல்லாக்காய் சாய்ந்தாள் அவள்.தனது கையைப் பிடித்து அவள் இழுப்பாள் என்று எதிர்பார்த்திராத அபரஜித்தோ தவிர்க்க முடிந்திருந்தும் விலகிக் கொள்ளாமல் அப்படியே யாழினியின் மீது விழுந்தான். விழுந்த அடுத்த நொடியே, அவள் மீதிருந்து புரண்டு பக்கத்தில் படுத்துக் கொண்டான். யாழினியோ நடந்த விடயத்தைக் கிரகிக்க முடியாதவளாய் கண்கள் கலங்க அப்படியே தரையில் மல்லாக்காய் கிடந்தாள்.அவள் நிலையைப் புரிந்து கொண்டவனாய் அபரஜித் தானே முதலில் எழுந்து, அவள் எழுவதற்கு உதவியாகத் தனது வலக் கையை அவளை நோக்கி நீட்டினான். வேறெதும் பிடிமானம் இல்லாமல் எழ முடியாதவளாய் வேறு வழியின்றி அவன் கையைப் பிடித்து மெதுவாய் பாதி எழுந்திருக்க அவன் அவள் கையை இறுகப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, யாழினி நேராய் அபரஜித்தின் மார்பில் வந்து மோதி நின்றாள்.அவனது உயரத்திற்கு அவள் தலையை உயர்த்தி அவன் கண்களை நோக்க, அவனோ இவள் நாடியை ஒற்றை விரலால் உயர்த்தி, கன்னக் கதுப்புகளில் ஒரு கள்ளச் சிரிப்புக் குடி கொண்டிருக்க அவள் உதடுகளை நோக்கிக் குனிந்தான். எதற்கும் அஞ்சாதவளான இவளோ, ஒரு நொடி தன் வசமிழந்து தன் நீண்ட விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.ஆனால் அவன் மூச்சுக் காற்று அவள் மூச்சுக் காற்றோடு கலக்கின்ற தூரத்தில் அவன் நெருங்கவும், அபரஜித்தின் நோக்கம் புரிந்தவளாய் சட்டென சுதாரித்து அவனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஒப்பனை அறைக்கு ஓடிச் சென்றாள். அவளின் இளக்கத்தைப் புரிந்து கொண்டவனது மனது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, ‘எனக்கு கல்யாண வயசு வந்தாச்சு’ பாடலை சீட்டியடித்தபடி அவளைப் பின் தொடர்ந்தான்.நல்ல காலம் அனைவரது ஒப்பனைகளும் முடிந்திருந்தது. இல்லையென்றால் உடல் வெலவெலத்துப் போயிருந்தவளால் கைகள் நடுங்க எந்த ஒரு வேலையையும் செய்திருந்திருக்க முடியாது. தனது வேலை முடிந்ததால் அனைவரதும் நன்றிகளைப் பெற்றுக் கொண்டு எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.இவள் வெளியேறவும் உடனடியாக அபரஜித்தும் அவளைப் பின் தொடர்ந்தான்.“ஹேய் ஹனி…! கொஞ்சம் நில்லு டார்லிங்… உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்.”இவளோ அவன் குரலே காதில் விழாதவளாய் விறு விறுவென வெளி வாயிலுக்கு நடந்தாள். வீதிக்குச் சென்றவள், அங்கு வந்து கொண்டிருந்த ஒரு டாக்ஸியை மறித்து ஏறினாள்.தான் தங்கியிருக்கும் ஹோட்டலின் முகவரியைச் சாரதியிடம் தெரிவித்து விட்டு கார் பின்னிருக்கையில் சாய்ந்தமர்ந்து ‘உப்’ என ஒரு பெரு மூச்சை வெளியேற்றித் தன்னை ஆசுவாசப்படுத்தி, கண்களை இறுக மூடிக் கொண்டாள் அவள். அவள் செல்லும் இடத்தை அடைய ஒரு மணி நேரத்திற்குக் கிட்ட ஆகுமே.# # # # #அந்தி மாலை செவ்வண்ணம் பூசி, கதிரவனை நித்திரைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அவனின் தங்க நிற ஒளி பட்டு அந்தப் பூஞ்சோலையிலிருந்த மரங்களும் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன.மஞ்சள் வெயில் மாலையில் மனதைப் பறி கொடுத்து இயற்கை அன்னையின் காணத் திகட்டாத வனப்பை, அந்தச் சிற்றோடைக் கரையிலிருந்து இரசித்துக் கொண்டிருந்தவள் சாய்ந்திருந்த கொன்றை மரத்தை விட்டுச் சற்றே அகன்று அந்த சிற்றோடையைக் கவனமாகப் பார்த்தாள்.இருள் கவிழ இன்னமும் நேரமிருந்தது. ஆதவன் ஒளி பட்டு சலசலத்து ஓடிக் கொண்டிருந்த அந்த ஓடையும் பொன்னிறமாய் தான் காட்சியளித்தது. இருந்தாலும் பளிங்கு நீராய் அடி ஆழமிருந்த சிறு கற்கள், வெண் மணல் வரை தெளிவாய் ஓடிக் கொண்டிருந்த அந்த நீரோடையில் இவள் என்ன தான் உற்று உற்றுப் பார்த்தும் இவளுக்குத் தேவையான, இவள் எதிர்பார்த்த விடயம் கிடைக்கவில்லை. பெரிதாய் ஒரு ஏக்கப் பெருமூச்சொன்றை வெளியிட்டவள் சோர்வுடன் மறுபடியும் மரத்தடியில் சாய்ந்து அமர்ந்தாள்.அரண்மனையே பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய களைப்பில் பெரிய ஆளவரமற்று சற்றே சோர்ந்த தோற்றத்தோடு தான் காட்சியளித்தது. ‘ஓய்வெடுக்கப் போகிறேன்’ என்று தோழிகளிடம் கூறியவள், அவர்கள் இவள் அறையை விட்டு அகன்றதும் பின் கதவால் அந்தப்புர பூஞ்சோலைக்கு வந்திருந்தாள்.


 

Rosei Kajan

Administrator
Staff member
#2
எத்தனையோ பெரிய பெரிய கவிஞர்கள் இவள் அழகைக் குண நலன்களை, சிறப்புக்களை வாழ்த்திப் பாடியும், அறிஞர்களின் புகழுரைகள் கிடைத்தும், தந்தையின் பிறந்தநாள் பரிசாக அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டிருந்த பட்டாடைகளும், நவரத்தின ஆபரணங்களும் கிடைத்திருந்தும் கூட அவளுக்கு மகிழ்ச்சி என்பது மனதை எட்டவில்லை. தந்தை மனம் வாடி விடக் கூடாதே என்று உதட்டளவில் சிரித்துக் கொண்டிருந்தாள்.அவள் இன்பம் தொலைத்து, குழப்பக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்க அவன் ஒருவனே காரணம். ஆனால் அவனைப் பார்த்து இன்று மாதங்கள் பல. தனது பதினெட்டாவது பிறந்தநாளைக்காவது வருவான் என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தவளுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.ஆதவனைத் தூங்க வைத்து விட்டு இதோ தண்ணொளியான் சந்திரனே கூட வந்து விட்டானே. ஆனால் இவன் மட்டும் இன்னமும் வரவில்லை. இனியும் அங்கிருந்தால் மற்றவர் சந்தேகத்துக்கிடமாகி விடும் எனப் புரிந்தவளாய், ஏமாற்றம் மனதை வருத்த எழுந்து அரண்மனையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.நடந்து கொண்டே தனது இடுப்பில் சுருட்டிச் செருகியிருந்த அந்தச் சிறு துணிச் சுருளை எடுத்து விரித்துப் பார்த்தாள் அவள். அழகும் கம்பீரமும் ஒருங்கே அமையப் பெற்றவனுக்கு இலக்கணம் வகிக்கும் முறையில் இளவரசன் போன்ற தோற்றம் பெற்ற ஒருவனின் ஓவியம் அதில் சிறிதாய் என்றாலும் மிகத் தத்ரூபமாக வரையப் பட்டிருந்தது. அவள் அந்த ஓவியத்தையே இலயித்துப் பார்த்தவள், பின்னர் அந்த ஓவியம் வரைந்திருந்த பட்டுத் துணிக்குக் கூட நொந்து விடாது, அந்தத் துணியை விட மிருதுவாய் ஒரு முத்தத்தைப் பதித்தாள்.# # # # #“அச்சோ….! அந்த ஓவியத்தில இருக்கிறது அவன்…! அவனே தான்…”கூறிக் கொண்டே பெரிதாய் அலறியபடி கண்களைத் திறந்தாள் யாழினி. அப்போதுதான் புரிந்தது காரிலேயே கண் அசந்து அரைகுறை தூக்கத்தில் வழக்கம் போல கனவு கண்டிருக்கிறாள் என.“எந்த ஓவியம்? எவன் அவன்?”அருகில் கேட்ட குரலில் பதறி எழுந்து, தலை கார் மேற் கூரையில் இடிக்க மறுபடியும் இருக்கையில் அமர்ந்து அவனைத் திரும்பி நேராகப் பார்த்து முறைத்தாள்.“நான் ஏறின டாக்ஸில எனக்குத் தெரியாமல் நீர் எப்பிடி ஏறினனீர்? எங்க ஏறினனீர்? டிரைவர் நான் பொலிஸ்ஸில தான் கம்பிளைன்ட் செய்யப் போறன். என்ர அனுமதியில்லாமல் ஏற்றினதுக்காக…”“உங்கட ஹஸ்பண்ட் என்று சொன்னார் மேம்… அது தான் ஏத்தினான்.”“அவன் சொன்னால், நீ என்னைக் கேட்காமல் ஏற்றிடுவாயா? முதலில இவனைக் கீழ இறக்குங்கோ…”“ஹேய்… ஹனி…! என்ர கோபத்தை ஏன் அவனில காட்டுறாய்? எனக்கு உன்னோட கதைச்சே ஆக வேணும். அதுக்குத் தான் உன்னோட வந்தனான். நீ நான் சொல்லுறதைக் கேட்கிற வரை நான் உன்னை விட்டு அகல மாட்டேன்.”“லூசாடா நீ… எவ்வளவு சொன்னாலும் விளங்காதே… இதென்ன எங்கட ஊர் என்று நினைச்சுக் கொண்டிருக்கிறீரே? நான் நீர் என்னை டிஸ்டர்ப் பண்ணுறீர் என்று பொலிஸ்ல சொன்னால் என்ன நடக்கும் தெரியும் தானே? நான் இவ்வளவு நேரமும் பொறுமையாக இருக்கிறதுக்குக் காரணமே நீரும் தமிழன் தான் என்ற படியால் தான் சரியோ? தயவு செய்து என்னை விட்டிட்டு நீர் உம்மட வேலையைப் போய்ப் பாரும்.”யாழினி கூறி முடிக்கவும் அவள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது. டாக்ஸிக்குரிய பணத்தைச் செலுத்தி விட்டு இறங்கி ஹோட்டலுக்குள் சென்றாள். அபரஜிதனும் இறங்கி அதே ஹோட்டலில் தனக்கும் ஒரு அறையை ஒழுங்கு செய்து விட்டு ஹோட்டல் வரவேற்பறையிலேயே அமர்ந்து கொண்டான்.தனது அறைக்குச் சென்ற யாழினிக்கோ எரிச்சல் மண்டியது. இவள் முகத்தைப் பார்த்த இவளது மனநிலையைப் புரிந்து கொள்ளக் கூடிய செல்வி, என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பித்தார். அவளும் நடந்தது அனைத்தையும் சொல்லி, வரும் போது கண்ட கனவையும் சொல்லி முடித்தாள்.சிறிது நேரம் சிந்தனை வயப்பட்ட செல்வி,“எனக்கென்னவோ யாழம்மா, உங்களுக்கும் அந்தத் தம்பிக்கும் பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கிறது போலத் தான் தெரியுது. எதுக்கும் நீங்க அந்தத் தம்பியோட கொஞ்சம் பொறுமையாக நடக்கிறது நல்லம் போல இருக்கும்மா.”“என்ன செல்வியக்கா? இப்பிடித் திடீரென்று கட்சி மாறிட்டியள். நீங்கள் தானே சொன்னியள், நான் அவனைப் பார்த்த படியால், அவனைப் பற்றி யோசிச்சுக் கொண்டு தூங்குகிற படியால் தான் அவனிட முகம் கனவில தெரியுது என்று. பிறகேன் இப்ப இப்பிடிச் சொல்லுறியள்?”“கட்சி மாறின என்றெல்லாம் இல்லை யாழம்மா… அடிக்கடி அவன்ட முகமே தெரியவும் தான் ஒரு யோசினையாக இருக்கும்மா.”“சரி… சரி…. இந்தக் கதையை விடுங்கோ. அந்தப் பிள்ளை என்ன செய்யுது? நான் கொஞ்ச நேரத்தில பொலிஸ்குப் போகப் போறன். இந்தப் பிள்ளை என்ர பிரண்ட், கொஞ்ச நாளாகத் தொடர்பு கொள்ள முடியேல்ல, வீட்டுக்கு கோல் செய்தாலும் கதைக்க முடியேல்ல. அங்கு எதாவது நடந்திருக்குமோ என்று பயமாக இருக்கு’ என்று கொம்பிளைன் கொடுக்கப் போறன்.”“ஓம்… இது நல்ல ஐடியா… முடிஞ்ச வரைக்கும் பொலிஸ்ஸ உடனேயே இந்தப் பிள்ளையின்ர வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் செக் பண்ணிப் பார்க்க வையுங்கோ…”“அதுதான் செல்வியக்கா. நீங்க பிள்ளையிட்ட எல்லா விவரங்களும் கேட்டு நோட் செய்து வையுங்கோ. நான் குளிச்சிட்டு வாறன். ஸ்டேசனுக்குப் போவம்.”“சரி யாழம்மா…”கூறியவர் அந்த இளம் பெண்ணிடம் அனைத்து விவரங்களையும் கேட்டுக் குறித்துக் கொள்ள ஆரம்பித்தார்.யாழினியும் குளிப்போம் என்று ஷவரின் அடியில் சென்று நின்றாள். பூந்துவலையாய் உச்சியில் விழுந்த நீர்த்துளிகள் அந்தக் கோர வெயிலால் வியர்த்துப் போயிருந்த உடலுக்கு இதமாக இருந்தாலும் கூடப் பல்வேறு சிந்தனைகளால் ஆட்பட்டிருந்த மனதுக்குக் கொஞ்சம் கூட இதம் சேர்ப்பதாக இல்லை.அவள் இதயம் அவமானத்தால் துடித்துக் கொண்டிருந்தது. இத்தனை வருடங்களில் எந்த ஒரு ஆணையும் அவள் வாழ்வில் நெருங்கவிட்டதில்லை. அவ்வாறிருக்க இந்த கமெராக்காரனிடம் மட்டும் அவள் மனம் இளகியதேன்? எப்படி அவன் முத்தமிட வந்த போது கொஞ்சம் கூட வெட்கமற்றுப் பிரக்ஞையில்லாது நின்றிருந்தாள்? யார் எவர் என்றே தெரியாத ஒருவனிடம், பார்த்த இரண்டு சந்திப்புகளிலும் வெறுப்பை மட்டுமே கொட்டியவனிடம் ஸ்பரிசத்தில் வெறுப்பை பெண் மனம் உணராதது ஏனோ?பலதும் மனதை வாட்ட ஒரு முடிவுக்கு வர முடியாதவளாய் மனம் சோர்ந்தாள். பார்க்க வேண்டிய காரியங்கள் ஏகப்பட்டது கடைமையை உணர்த்த யாழினி குளித்துத் தயாராகினாள். அவள் வந்ததும் மூவரும் தேநீரை அருந்தியபடி குறித்து வைத்த விவரங்களைப் பற்றிக் கலந்துரையாடி முடிவுக்கு வந்தவர்கள் காவல் நிலையத்தை நோக்கிச் சென்றார்கள்.வரவேற்பறையில் ஒரு மாத இதழைப் புரட்டியபடி யாழினிக்காகவே காத்திருந்த அபரஜித், அவள் வேறு இருவருடன் சேர்ந்து டாக்ஸியில் எங்கோ புறப்பட்டுச் செல்வதைப் பார்த்து, இன்னொரு டாக்ஸியில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.காவல் நிலையத்தில் கண்கள் கலங்க யாழினி கொடுத்த புகாரைப் பரிசிலீத்த காவலர், உடனேயே வேறு சில காவலர்களையும் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த இளம் பெண்ணின் வீட்டை நோக்கிச் சென்றார்.யாழினி காவல் நிலையம் சென்றிருக்க, செல்வியும் மற்றைய பெண்ணும் டாக்ஸியிலேயே தங்கிக் கொண்டனர். இவர்களுக்குப் பின்னால் இவர்களை அவதானித்தபடியிருந்த அபரஜித்தும் காவல் நிலையத்தில் இவர்களை அவதானித்தவாறு காத்திருந்தான். யாழினி காவலர்களோடு செல்வதைப் பார்த்தவன், அந்தக் காரைத் தொடருமாறு தனது டாக்ஸி ஓட்டுநரிடம் சொன்னான்.முப்பது நிமிடங்களில் அந்த வீட்டை அடைந்தவர்கள், அழைப்பு மணியை அடித்தும் எந்தப் பயனும் இல்லை. பின்னாலே சிறு நிலத்தோடு கூடிய தனி வீடு தான். இரு காவலர்கள் பின்புறமாகச் சென்று நின்று கொள்ள, யாழினியினும் மற்ற இருவரும் முன்புறமாக நின்று கதவைத் தட்டிக் கொண்டு நின்றனர்.அப்போது இவர்களோடு வந்த மோப்ப நாய் பின்புற யன்னலால் உள்ளே எட்டிப் பார்த்துக் குரைத்தது. உள்ளே ஆளரவம் இருப்பதை உணர்ந்து கொண்ட காவலர்கள் வீட்டினுள்ளே செல்லத் தயாரானார்கள்.யாழினியைப் பின் தொடர்ந்து வந்திருந்த அபரஜித், அந்த வீட்டிற்கு அருகே நேற்றுத் தன்னைச் சந்தித்த தனது உத்தியோகத்தன் மறைந்திருப்பதைப் பார்த்துத் திகைத்தான். மூன்று பேர் உயிரை எடுக்கும் பொறுப்பை மேலிடத்திலிருந்து அவனுக்கு அப்படியே ட்ரான்ஸ்பர் செய்திருந்தானே தவிர யார், எவர் என்ற விபரம் பார்க்கவில்லை. யாழினியின் பெயரும் அந்தப் பட்டியலில் இருந்திருக்குமோ என்ற எண்ணம் மனதில் எழக் கலங்கிப் போனான் அந்தக் காதலன்.உடனடியாக டாக்ஸியை விட்டு இறங்கித் தனது உத்தியோகத்தனிடம் சென்று அவனுக்குக் கொடுத்திருந்த பட்டியலைப் பார்வையிட்டான். அந்த மூன்று பேரில் யாழினியின் பெயரும் அடங்கியிருக்க இவன் முகம் கறுத்தது. மேலிடத்தின் மீது எழுந்த சொல்லணாக் கோபத்தை அவர்களிடம் காட்ட முடியாது அருகிலிருந்த காரில் கையை முஷ்டியாக்கி ஓங்கிக் குத்தினான். கார் யன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.அந்த ஆபிரிக்க ஜனாதிபதியின் பேரன் விசயம் தோற்றதற்குக் காரணம் யாழினி தான் என்பதைத் தெரிந்து கொண்ட மேலிடம் அவள் பெயரை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதளவுக்கு முட்டாளில்லையே அபரஜித்.ஆனால் அவள் இல்லாத அவன் வாழ்க்கை? எண்ணிப் பார்க்கவே மனம் கலங்கிக் கனத்தது. ஒன்றோ இரண்டா எத்தனை வருடத் தவத்தின் பின் அவனுக்கு அவள் கிடைத்திருக்கிறாள்? மூன்றாம் சந்திப்பிலேயே அவள் உயிரைப் பறிக்கவா அவன் இத்தனை வருடங்களாக அவளைத் தேடித் திரிந்தான்?ஆனால் மேலிடத்து உத்தரவை மதிக்காது இவனே அவளைக் காப்பாற்றுவானாக இருந்தால் இவனுக்குக் கிடைக்கப் போகும் தண்டனை நரகத்தை விடக் கொடியதே. தலையை இரு கைகளாலும் தாங்கியபடி அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டான் அபரஜித்.என்ன முடிவெடுக்கப் போகிறான் அபரஜித்? காதலியின் உயிர் காப்பானா? அல்லது சுயநலமாக தண்டனையிலிருந்து தப்ப நினைப்பானா?
 
#3
Nice update. Pl post next episode frequently
 
#4
Seems like a misterious story.
 

Aruna

Active member
#5
Nice epi sis...
 
Top