தொடர்கதைகள் அத்தியாயம் 20

Rosei Kajan

Administrator
Staff member
#1
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுவாதீனமாக வருவதுபோல, அன்று மாலை யாதவ் வந்திருந்தான்.

இங்குவரும் போதெல்லாம் தியாவைக் காண அவன் மனம் ஏங்கினாலும், அவள் இப்போதெல்லாம் வார இறுதியில் மட்டுமே இங்கு வருவதையும், வீட்டில் அநேகம் தங்குவதில்லை என்பதையும் அறிந்திருந்தவன், ‘சரி இன்னும் எத்தனை நாட்களுக்கு! மாமாவுக்கு கொஞ்சம் குணமாகட்டும், கல்யாணத்தை முடித்து ஒன்றாக இருக்கலாம்.’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வான்.

அன்று ராஜேந்திரனின் விபத்து நாளன்று அவளைக் கண்ட பின்னர், அவளுடன் தனியாகப் பேச நேரம் கிடைக்கவில்லை இவனுக்கு.

தன் வேலைகளுடன் சேர்ந்து ராஜேந்திரனையும் கவனித்துக் கொண்டதில் அதைப் பற்றிய எண்ணத்தை ஒதுக்கி வைத்திருந்தவன், இப்போது அவர் வீடு வந்த பின்னர் அவள் தென்படமாட்டாளா என்று மிகவும் ஏங்குவதுண்டு.

“வாங்க அத்தான்..” மலர்வாக வாயிலைத் திறந்தான் பிரணவ்.

உள்ளே வந்தவன் பார்வையில் முதல் விழுந்தது தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்த ராஜேந்திரன் தான்.

“இப்போதான் வந்தாயா பிரணவ்?” மைத்துனனை நலம் விசாரித்தவன், “தியாவைக் கண்டாயா?” தொடர்ந்து கேட்டுக் கொண்டே காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு உள்ளே வந்தான்.

“ம்ம்..மத்தியானம் கண்டேன் அத்தான்.” என்றவன், “வந்து இருங்க அத்தான்.”

“அம்மா..அத்தான் வந்திருக்கிறார்..” மேலே இருந்த தாயை உரத்து அழைத்தான்.

“ஹாய் மாமா, எப்படி இருக்கிறீங்க? என்ன சொல்லுது உடம்பு..? ஃபிசியோவுக்கு போய்விட்டு வந்துவிட்டீர்களா?” இயல்பாகக் கேட்டவனை, திரும்பியும் பார்க்கவில்லை ராஜேந்திரன்.

யாதவோ அடக்கப்பட்ட முறுவலுடன் தன் காதுகள் இரண்டிலும் தொட்டுக் காட்டி “அவுட்டோ!!” பிரணவை நோக்கி வாயசைத்தான்.

“வேண்டாம் அத்தான்..ப்ளீஸ்” யாதவ் வந்ததும் வராததுமாக தந்தையை வம்புக்கிழுக்கத் தொடங்கி விட்டதை உணர்ந்த பிரணவ், உதட்டசைவில் கெஞ்சினான்.

உள்ளே வந்த பின்னர் சத்தமில்லையே என்று பார்த்த ராஜேந்திரனின் பார்வையில் மகனின் சைகை தப்பாமல்பட்டு அவரைச் சினம் கொள்ள வைத்தது.

தன் சினத்தையும் யாதவ் நிச்சயம் பரிகசிப்பான் என்று தெரிந்திருந்தாலும், “சே..சொந்த வீட்டில் இருக்கவும் மனிதனுக்கு நிம்மதியில்லை! கண்டதுகளும் வந்து தொல்லை செய்யுதுகள்..” வெறுப்பாக முணுமுணுத்துக் கொண்டிருக்கையில் இறங்கி வந்தார் கோதை.

“வாய்யா...வேலை முடிந்து விட்டதா?”

“கேக் சாப்பிடுகிறாயா?” கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் நுழைய, “ம்ம்..தாங்க அத்தை. நான் வேலை முடிந்ததும், விசாலம் தந்த டீயையும் குடிக்காது ஓடி வந்தேன்..” ஓரப் பார்வையும் நமுட்டுச் சிரிப்புமாக ராஜேந்திரனை பார்த்துக் கொண்டே சொன்னவன், எழுந்து சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த உணவு மேசையில் வாகாக ஏறி அமர்ந்து கொண்டான்.

அவனோடு எழுந்து சென்ற பிரணவும் அத்தானின் அருகில் அமர்ந்து கொண்டே,

“மா..எனக்கும் டீ..” என்றவனிடம்,

“எப்போ இந்தப் பக்கம் வருவாளாம்...உன் அக்கா.”

“இன்று சிலவேளை வருவாள் அத்தான். இனி சம்மர் லீவும் வரவிருப்பதால் இங்கே வேலைக்கு வந்திருக்கு என்றாள்..”

“ப்ச்...அவளை இனி அந்த வேலைக்கெல்லாம் போக வேண்டாமென்று சொல்லு..” என்றவன் ,

“சொன்னதும் அப்படியே கேட்டுவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாள்.. உன் அக்கா.” தொடர்ந்தவனின் குரலில் லேசான கோபமிருந்தது.

“இந்தாங்க சாப்பிடுங்க..” இடையில் புகுந்தது கோதையின் குரல்.

கேக்கை வைத்துவிட்டு அப்பால் நகர்ந்தவரை அன்பாகப் பார்த்து, “அத்தை, நீங்களும் சாப்பிடுங்கோவன்..” என்றான் யாதவ்.

“இல்லையப்பா..நீங்க சாப்பிடுங்க..”

“நோ..நோ..இந்தாங்க நீங்களும் சாப்பிடுங்க.” இறங்கி, கேக் தட்டுடன் சென்று கோதையை எடுக்க வைத்துவிட்டு மீண்டும் வந்து இருந்த இடத்தில் ஏறியமர்ந்தவன் நினைவு வந்தவனாக, “மாமா..கேக் சாப்பிடுங்கோவன்..” வீட்டுக்காரனாக மிகவும் கரிசனையாக உபசரித்தான்.

சட்டென்று திரும்பினார் ராஜேந்திரன். “சட்ட்..” அவர் கையிலிருந்த டிவி ரிமோட் சிதறி விழுந்தது.

“இந்த வீட்டில் கொஞ்ச நேரம் மனிதன் நிம்மதியாக இருக்க முடியவில்லை.” சொன்னவர், எழுந்து கிரச்சை ஊன்றிக் கொண்டே அருகிலிருந்த தன்னறைக்குள் புகுந்து கொண்டார். அவரறைக் கதவோ ‘படீர்’ என்ற சத்தத்துடன் வாயை மூடிக் கொண்டது.

“ஹா.ஹா...என் மாமாவுக்கு கோபம் வந்து விட்டுது..ஹா..ஹா..” சிரிக்கத் தொடங்கிய யாதவை கெஞ்சலாகப் பார்த்தார் கோதை. “ஏன் தம்பி அந்த மனிசனோடு வம்பு வளர்க்கிறாய்..?

“வம்பா..?! அவரோடா??!! அதை யாரும் செய்து விட்டு நிம்மதியாக இருக்க முடியுமா அத்தை!? கேக் சாப்பிடுறீங்களா என்றுதானே கேட்டேன்..” என்றவன்,

“கொடுக்கிறவங்க...கொடுக்கிற மாதிரிக் கொடுத்தா ஆசை ஆசையாக வாங்கிச் சாப்பிடுவாராக்கும்..” அவன் குரல் உயர்ந்திருந்தது. அது அவன் ஆசைப்படி ராஜேந்திரனின் செவியினுள்ளும் நுழைந்தது.

“வேண்டாம் அத்தான் விடுங்க. பிறகு நீங்க போனதும் வந்து அம்மாவை வறுத்தெடுப்பார்..” அடிக் குரலில் சொன்னான் பிரணவ்.

“எத்தனை நாட்களுக்கு பிரணவ்! இல்ல எத்தனை நாட்களுக்கு? அடங்குறாரா மனிஷன்! அதுதான் நானும் அவர் வழியிலேயே போவோம் என்று இருக்கிறேன். அவர் மருமகன் அவர் அளவுக்கு இல்லையென்றாலும் கொஞ்சம் சரி இருக்க வேண்டாமா?” இதுவும் உயர்ந்த குரலில் சென்றடைந்தது.

தேநீரைக் கொடுத்தவாறே, “இரண்டு பேரும் சும்மா இருங்க. வேறு கதையுங்க...நீங்க கதைப்பதெல்லாம் அவர் காதில் விழப் போகுது.” மெல்லிய குரலில் எச்சரிக்கை விடுத்த அத்தையை முறைத்தான் யாதவ்.

“காதில் விழட்டும் என்றுதானே சொல்கிறேன். அவர் வாயைத் திறக்கமாட்டாரா என்று நானும் முயன்று பார்க்கிறேன். ஆனால் உங்க புருஷன் இந்த விசயத்தில உஷாராகத்தான் இருக்கிறார்.” அவனும் மெல்லிய குரலில் சொன்னான்.

“ஏன் தம்பி வீணாக..” ஆரம்பித்த கோதையிடம்,

“சரி சரி நிறுத்திவிட்டேன்..” சமாதானம் பேசினான் மருமகன் .

“அத்தை, இரவுக்கு என்ன சாப்பாடு? நமக்கும் கிடைக்குமா..?” கேட்டவனை, சில கணங்கள் அன்பு கனியப் பார்த்திருந்தன கோதையின் விழிகள்.

“அதுக்கென்ன..இன்றைக்கு இடியப்பம்..சாப்பிட்டு விட்டே போகலாம்.” முறுவலுடன் சொல்லிக் கொண்டே தன் வேலைகளில் ஈடுபட்டார் அவர்.

“ம்ம்...எங்க அம்மா நல்ல ருசியாகச் சமைப்பார் அத்தை.” பெருமையாகச் சொன்னவன், “ஆனால், உங்க சமையல் அம்மாவின் சமையலுடன் போட்டி போடுமளவுக்கு இருக்கு..” என்றதும், மீண்டும் பார்த்து மெல்லிதாக முறுவலித்தார் கோதை.

“தியா எப்படி அத்தை? உங்க சமையல் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்காவது சமைப்பாளா?” என்றவனைப் பார்த்துவிட்டு, அவனருகில் இருந்து தன் சிரிப்பை அடக்க முயலும் மகனைப் பார்த்து பெரிதாக முறுவலித்தார் கோதை.

“அப்போ அம்பேலா!! தியாவுக்கு சமையலே தெரியாதா?” என்றவன் நினைவில், சாப்பாட்டு விடயத்துக்காகத் தான் அண்ணியுடன் போடும் சண்டைகள்தான் நினைவில் வந்தன.

அதை இவர்களிடம் சொன்னவன், “இவ்வளவுக்கும் அண்ணியின் சமையலும் நன்றாகவே இருக்கும் அத்தை. அப்படியிருக்க நான் எவ்வளவு கேலி செய்வேன் தெரியுமா.? அண்ணி விட்ட சாபம் இப்போது பலித்து விட்டதே..!” சோககீதம் இசைத்தவனை இடைமறித்தான் பிரணவ்.

“ஆங்..! அதென்ன இப்படி கவலைப்படுறீங்க..! அக்காவும் நன்றாகவே சமைப்பாள்.” விட்டுக்கொடாது சொன்னவன், “என்ன... விதம் விதமாகச் செய்ய மாட்டாள். இரண்டே இரண்டு சாப்பாடுகளை இரண்டு மூன்று விதங்களில் செய்து அசத்துவாள். நன்றாகவே இருக்கும் அத்தான்.” தீவிரமாகச் சொன்னான்.

“அதுதானே பார்த்தேன். நானும், சில மனிதர்களைப் போல விதம் விதமாகச் செய்து போட்டாலும் குறைசொல்லிக் கொண்டே வயிறு முட்டச் சாப்பிடும் இரகம் இல்லை பிரணவ். எனக்கு அந்த இரண்டு ஐட்டமும் போதும்.” உரத்த குரலில் சொல்ல, திரும்பி நின்று அவனை முறைத்தார் கோதை.

யாதவ் வேண்டும் என்றே கணவரை ஒவ்வொரு விடயத்திலும் வம்பிக்கிழுப்பது எங்கே கொண்டு போய் விடுமோ என்று மிகவும் பயந்தார் அவர்.

“அதுசரி... அந்த இரண்டும் என்னென்ன..” தொடங்கியவனை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்த பிரணவ், “சலாடும், சூப்பும்..அதுவும் கடையிலிருந்து வாங்கி கலந்து, சூடு பண்ணி...” சொல்லிக் கொண்டு வந்தவன் விழுந்து விழுந்து சிரிக்க, சட்டென்று மேசையிலிருந்து இறங்கிய யாதவ், “அத்தை இது கொஞ்சம் கூட நல்லா இல்லை...” முறையிட்டான்.

பிரணவோ, அவன் நின்ற நிலை பார்த்து மேலும் சிரித்தவன், “எதற்கும் தீபா அக்கா சொன்னது போல நீங்க சமையலைப் பழகுங்க அத்தான். இல்லையோ சைனீஸ் இத்தாலியன் தான்...” சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தாள் தியா.

நீண்ட நாட்களின் பின்னர் வீட்டில் கேட்ட நகைப்பொலியும், தாய் தம்பியின் மலர்ந்த முகங்களையும் கண்டவள் பார்வை தானாகவே யாதவில் பதிந்து...விலக மறந்தது.

அவனும் அவளையே தான் பார்த்திருந்தான்.

சிலநாட்கள் இடைவெளியின் பின்னர் இன்று அவளைக் கண்டதும் அவனுள் ஒருவகைப் புத்துணர்வு பரவியது. களைப்பில் நலுங்கியிருந்தாலும் கொஞ்சமும் சோபை குறையாது நின்றவளைப் பார்க்கையில், அவனையும் அறியாமல் அவளருகாமைக்கு ஏங்கியது அவனுள்ளம்.

ஓடிவந்து தன் கைவளைக்குள் புகமாட்டாளா என்ற ஏக்கத்துடன் அவளைப் பார்த்தவனின் பார்வையை மெல்லத் தவிர்த்தாள் தியா.

“என்னம்மா ஒரே சிரிப்பாக இருக்கு?!” கேட்டுக் கொண்டே விழிகளைச் சுழற்றித் தந்தையைத் தேடியவள், அவர் அங்கில்லை என்றதும் அவர்களை நோக்கி வந்தாள்.

வைத்தியசாலையில் தந்தை இருக்கும்பொழுது அவர் நிலையைப் பார்த்துத் துடித்திருந்தாலும், குணமடையக் குணமடைய அவர் தாய்க்கு இழைத்த அநீதியும் தாய் துடித்த துடிப்பும் கண்முன்னால் வந்து நின்று, அவர் மீதான வெறுப்பை அவள் மனதிலிருந்து அகலவிடாமல் பிடித்து வைத்துக்கொண்டது. அதுவும் அப்பெண் இவரை அடித்தாள் என்பது இவர்கள் காதுக்கும் வந்திருந்ததில், தந்தை என்பவர் மீது அருவருப்பே மிஞ்சி நின்றது.

“வாடாம்மா வா. என்னடா இது கோலம்? சாப்பிடுவதில்லையா? இப்படி மெலிந்திருக்கிறாய்!” மகளை வாஞ்சையுடன் விழிகளால் வருடியவாறு கூறினார் கோதை.

“உங்களுக்கு எப்போதும் அப்படித்தான்மா தெரியும்.” என்றவள்,

“வாங்க..” யாதவைப் பார்த்து முணுமுணுத்துவிட்டு, “நான் குளித்துவிட்டு வாரேன்மா..” சொல்லிக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டாள்.

அவள் அப்படி விருட்டென்று நகர்ந்ததும் யாதவின் மனமோ கூம்பி விட்டது.

கோதைக்குமே மகளின் செய்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதுவும், யாதவின் முகம் சுருங்கியதைப் பார்த்ததும் அவரின் மனமும் கவலை கொள்ளத் தொடங்கியது. ‘இவள் கொஞ்சம் நன்றாகக் கதைப்பது போல இருந்ததே! இப்போ என்ன?’ குழம்பினார்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
பிரணவும் கொஞ்சம் குழம்பித்தான் போனான். ஆனாலும் அவனுக்குத் தன் அக்காவை விட அத்தானில் அதிகமாகவே நம்பிக்கையிருந்தது. அதனால் யாதவையே பார்த்தான்.

பிரணவைப் பார்த்துத் தோள்களைக் குலுக்கியவன் மாடியேறும் தியாவை பார்த்தவாறே, “கடைசி.. ஒரு நான்கு அல்லது ஐந்து நாய்கள் சரி வளர்க்க வேண்டும் போல பிரணவ். இல்லை என்றால் சமாளிப்பது கஷ்டம் தான்..” கேலி கொப்பளிக்கச் சொன்னவனின் முகமோ இப்போது கனிந்திருந்தது.

கோதையும் பிரணவும் யாதவ் சொன்னதைக் கேட்டதும், ‘இதென்ன சம்பந்தமே இல்லாமல் கதைக்கின்றார்?!’ என வியப்பாகப் பார்த்தனர்.

அவன் குரலில் நடை நிற்க சரேலென்று திரும்பியவளின் பார்வை, கணநேரம் யாதவின் முகத்தில் நிலைத்து இரு ஜோடி விழிகளும் கலந்து நின்றன. சிலநொடிகள் தம்மை மறந்து நின்றவர்களில் முதலில் சுதாகரித்தவள் தியாதான். இதழில் மொட்டுவிட்ட மென்முறுவலுடன் சட்டென்று அவள் நகர்ந்ததும், சற்று முன்னிருந்த சுணக்கம் நீங்கி மனதில் இதம் பரவ அழகாக முறுவலித்துக் கொண்டான் யாதவ்.

“என்ன அத்தான்? நாயா..?! அதுவும் நான்கு ஐந்து...!” கேட்ட பிரணவிற்கு, அவர்கள் இருவரையும் கவனித்ததில் எதுவோ இருக்கு என்று லேசாக விளங்கிய மாதிரி இருந்தாலும், கோதைக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“தம்பி, தியாவுக்கு நாய் என்றாலே பயம். சின்னவயதில் ஒருநாள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒருநாய் இவள் மீது விளையாட்டுக்குப் பாய, இவள் நல்லா பயந்து விட்டாள். அதற்குப் பிறகு நாய் என்றால் காத தூரம் ஓடுவாள்.” என்றதும், பெரிதாகச் சிரித்த யாதவை ஒருமாதிரிப் பார்த்தான் பிரணவ்.

“அத்தான்....! இந்த சிரிப்புக்குப் பின்னால் எதுவோ இருக்குது போல!! என்ன அத்தான்..?” ஆவலாகக் கேட்டவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் அவன்.

“ஹா..ஹா..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பிரணவ்... உண்மையாகவே நான் நாய் வளர்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.. அதைத்தான் சொன்னேன்..” சொல்லிக் கொண்டே தன்னுள் எழுந்த நகைப்பை அடக்க முயன்றான்.

“இப்போ அத்தை சொல்வதைப் பார்த்தால், தியாவுக்குப் பயம் என்றால் வேண்டாம்...அந்த வினையே வேண்டாம்பா..” பெரியமனதுடன் தன் ஆசையைத் தியாகம் செய்தவன் போல பாவனை செய்தவனை, அப்போதும் சந்தேகத்தோடு பார்த்தான் பிரணவ்.

கீழே யாதவ் சொன்னவை ஒவ்வொன்றும் தியாவின் செவிவழி நுளைந்து அவள் இதயத்துடிப்பை எகிறச் செய்தது.

அன்றைக்குப் பிறகு அந்த நினைவுகளை மறக்கச் செய்யும் வகையில், நாட்கள் ஒவ்வொன்றும் மிகவும் தடுமாற்றத்துடன் தான் கடந்திருந்தன அவளுக்கு!

அப்படியிருந்தும், தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட அன்றிலிருந்து யாதவைச் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவன் காட்டிய உரிமையுடன் கூடிய கரிசனையில் அவள் உள்ளம் தடுமாறி நெகிழ்ந்தாள் என்பதுதான் நிஜம்.

அவன் பாசத்தில் திக்குமுக்காடிய அவள் மனமோ ஒருவித பிடிவாதத்துடன், மெல்ல மெல்ல அவன் புறம் சாய்ந்ததை அவளால் கொஞ்சமும் தடுக்க முடியவில்லை.

அதேநேரம் அவன் நேசத்தை ஏனோ முழுமனதோடு நம்பவும் முடியவில்லை அவளால். ஏதோ ஒருவகைப் பயம் அவள் மனதை அவ்வப்போது கவ்விச் சென்றது.

திருமண பந்தம் தன் தாய்க்கு வழங்கிய பரிசான கணங்கள் ஒவ்வொன்றும் அவள் நினைவில் வந்து, ‘உனக்கு இந்த விஷப் பரீட்சை தேவையா?’ என்று, எதிர்மறைச் சிந்தனையை அவள் மனதில் தூண்டிச் சென்றது.

அதன் பிறகு அவளின் கல்யாணப் பேச்சை எடுக்கும் சூழ்நிலை நிலவவில்லை என்றாலும், அதை உறுதி செய்யும் வகையிலான யாதவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பலவேளைகளில் அவளைப் பரவசப்படுத்தினால், சில சமயங்கள் நடுங்கவும் தயங்கவும் செய்வித்தன.

“தியா, டீ போட்டிருக்கிறேன் வந்து குடிம்மா..” கீழிருந்து வந்த தாயின் குரலில் மெல்லக் கலைந்தவள், “மா..நான் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். வாரேன்..” பதில் சொல்லிவிட்டு அப்படியே தன்னறையில் அமர்ந்திருந்தாள். ஏனோ கீழே சென்று மீண்டும் யாதவைக் காணும் மனதிடம் இப்போது அவளிடம் இல்லாது போயிருந்தது.

கோதையோ மீண்டும் மீண்டும் அழைத்தார்.

மேலே சென்றவள் இப்படி வராது இருக்கவே, மறுபடியும் யாதவன் மனதில் சுறு சுறுவென்று கோபம் துளிர்விடத் தொடங்கியது. தியா சிலவேளைகளில் அவனைக் கண்டு மலர்ந்தாள் என்றால், அவன் மனதை வருடும் பார்வையை தன்னைமறந்து மெலிதாக வீசினாள் என்றால், இப்படிப் பலவேளைகளில் நத்தையாகச் சுருங்குவதையும், அவனைத் தவிர்ப்பதையும் உணர்ந்தே இருந்தான் இவன்.

சட்டென்று எழுந்தான் யாதவன். “பிரணவ் நான் போய்விட்டு வருகிறேன், உன் அக்காவை வந்து டீயைக் குடிக்கச் சொல்லு.” அவளுக்குக் கேட்கட்டும் என்று உரத்தே சொன்னவன். “அத்தை வாரேன்..” சொல்லி நகர, “தம்பி இதென்ன!! இருந்து சாப்பிட்டு விட்டுப் போப்பா..” மறித்த கோதைக்கு, தியாவின் செய்கை பயத்தை ஏற்படுத்தியது.

‘அப்போ இவளுக்கு உண்மையாகவே இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா..?!’ நினைத்தவருக்கு, அவள் சம்மதம் சொன்னதாகவும் நினைவில் வரவில்லை. ஆனால், “மறுத்தாளே!! எனக்கு வேண்டாம் பிடிக்கவில்லை என்றாளே!” முணுமுணுத்தவர், ‘இதென்ன புதுப் பிரச்சனை?’ இக் கல்யாணத்தை எப்படியும் நடத்தியே தீரவேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர் உள்ளத்தில் மிக மிகச் சோர்ந்தார்.

யாதவ் போய் வருகிறேன் என்று செல்ல அவன் பின்னால் சென்றான் பிரணவ். அவர்கள் வாயிலால் வெளியேறிய மறுகணம் தன்னறையில் இருந்து வெளிவந்தார் ராஜேந்திரன். இதுவரை கூண்டுப் புலியாக அறையில் உலாத்திக் கொண்டு நின்றிருந்தவர், வந்த வேகத்துக்கு மனைவியின் முன்னால் சென்று நின்றார்.

“அவன் இப்படி இங்கு வந்து போவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை கோதை.” அதட்டலாகத் தொடங்கினார்.

கோதையின் விழிகள் அவசரத்துடன் திறந்திருந்த முன்வாயிலைத் தொட்டு மீண்டன.

“கொஞ்சம் மெல்லக் கதையுங்கோ...அவர்கள் முன்னுக்குத் தான் நிற்கிறார்கள்.” தவிப்புடன் அவசரமாகச் சொன்னார் .

“நின்றால் என்ன என்கிறேன்! அவன் கதைப்பதற்கு எல்லாம் அமைதியாக இருந்தவுடன் நான் என்ன அவனுக்குப் பயந்து விட்டேன் என்று எண்ணுகிறாயா..?” குரலைத் தணிக்கவில்லை அவர்.

“வீணாகப் பிரச்சனை வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், அவன் வருந்தி அழைப்பது போலவே நடந்து கொள்கிறான். என்னிடம் முறையாக வாங்கப் போகிறான்.” வார்த்தைகளில் சூடு பறந்தது.

“திமிர் பிடித்தவன். என்னையே கேள்வி கேட்கும் உரிமையை யார் அவனுக்குக் கொடுத்தது? நீயா?” எகிறியவர், “அத்தானாம் அத்தான்..” கோபத்தில் மின்னும் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
 

Rosei Kajan

Administrator
Staff member
#3

“நான் இப்போதும் ஏற்கனவே சொன்னதைத்தான் சொல்கிறேன் கோதை. கடைசிவரை என் மகளை அந்த வீட்டில் செய்து கொடுப்பதில் எனக்கு இஷ்டமில்லை. செய்து கொடுக்க மாட்டேன். வீண் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு இங்கு வந்து போகும் வேலையை வைக்க வேண்டாம் என்று அவனிடம் சொல்லி வை..” உறுமியவரை அமைதியாக ஏறிட்ட கோதை, தான் செய்த வேலையில் கவனமானார்.

“நான் சொல்வது உன் காதில் விழுந்ததுதானே..! நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டேன். அங்கே ஹாஸ்பிட்டலில் வந்து போனான். நான் ஒன்றும் கதைக்கவில்லை...” என்ற கணவரை இப்போது நிமிர்ந்து நோக்கிய கோதையின் விழிகளில் நிச்சயம் கோபம் எட்டிப் பார்த்தது.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்...? வரவர உன் போக்கு எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.” கோபத்தில் முகம் சுளித்தவர், அமைதியாகத் தன் வேலைகளில் கவனம் செலுத்திய மனைவியின் செய்கையில் உள்ளம் கொதித்துப் போனார்.

“என்ன...எனக்கு எதிராகச் செய்து காட்டியே தீருவேன் என்று நினைத்து இதையெல்லாம் செய்கிறாயா?” உறுமினார்.

“அவன் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இங்கு வந்து சமா வைக்கிறான். நீயும் அவனுக்கு உபசரணை செய்கிறாய்.” சீறியவருக்கு, யாதவுடன் உரிமையாக ஒட்டிக் கொண்ட பிரணவை நேரே அழைத்து திட்டுவதற்கு மனம் விரும்பினாலும் நிறையவே தயக்கமாக இருந்தது.

ஆனால் அவர்கள் இன்று கதைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த தியா, அவர்களுடன் அமர்ந்திருந்து கதைக்காது ஒருசில வார்த்தைகளுடன் மேலே சென்றது, அவருக்குப் பெரும் மகிழ்வையும் திருப்தியையும் கொடுத்தது. ‘யார் மகள் அவள்! என் மகளல்லவா! யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது அவளுக்கு நன்றாக விளங்கும்.’ தன்னையறியாமல் பெருமைப்பட்டுக் கொண்டார் அவர்.

மேலே சென்றவள் வருவாள் வருவாள் என்று காத்திருந்த யாதவ் மனச் சுணக்கத்துடன் எழுந்து சென்றதை அவன் குரலே காட்டிக் கொடுத்து விட்டதே! அவ்வளவுமே போதுமானதாக இருந்தது அவருக்கு. ‘நான் ஒதுக்கியவர்ளை என் மகள் நிச்சயம் அணைக்கவே மாட்டாள். அவள் என் மகளாக்கும்!’ பெருமையில் நெஞ்சம் நிமிர்த்திக் கொண்டார் அவர்.

“இனியொருதரம் அவனை இங்கு கண்டேனோ...” கைநீட்டி மனைவியை எச்சரித்தவரை , “அம்ம்ம்மா..” என்ற தியாவின் அதட்டல் குரல் மாடிப்படியை நோக்கித் திரும்ப வைத்தது.

மகளைக் கண்டதும் பேச்சை நிறுத்தி அவளையே கூர்ந்து பார்த்தார் ராஜேந்திரன்.

தான் இவ்வளவு கடுமையாக படுக்கையில் இருந்து எழுந்த போதும், அவள் வாயிலிருந்து “அப்பா” என்ற வார்த்தை வரவில்லை என்பதை பலதடவைகள் எண்ணிய அவர் மனம், இப்போதும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அதை எண்ணத் தவறவில்லை.

‘அப்படி நான் என்ன பாவம் செய்தேன்! ஒரு தந்தையாக இவளுக்கு நான் என்ன செய்யவில்லை..? மாறனின் மைத்துனன் வீட்டு வரனை நானா போய்த் தேடிக் கொண்டு வந்தேன்..! கேட்டு வந்தவர்களை சொந்தம் என்ற முறையில் செய்யலாமென்று நினைத்தேன்.’ என்றதும், இப்போது அவர் மனம் வெகுவாகச் சுளித்துக் கொண்டது.

‘உன் மகள் என்கிறாயே, அவள் விடயத்தில் நீ செய்ய நினைத்தது சரியா?’ அக்கல்யாண விடயத்தை கருத்தில் கொண்டே அவர் மனசாட்சி கேள்வியெழுப்பியது.

‘ஆங்!! அதிலும் என் எண்ணத்தை மட்டுமே சொன்னேன்..மிகுதி அவள் விருப்பம் தானே!’ இவரோ, இதில் தவறு சொல்ல என்னவுள்ளது என எதிர்க் கேள்வி எழுப்பினார்.

‘என்னதான் செய்தாலும், இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லோருமே நன்றி கெட்டதுகள், சுயநலம் பிடித்ததுகள்..’ மிக மிக நியாயவாதியாக வெறுத்துக் கொண்டார்.

தியாவோ நிமிர்வாக அவர்களை நெருங்கியவள், தாய் மீது ஒரு தீர்க்கமான பார்வையைச் செலுத்தினாள்.

“மா..என் வாழ்வு பற்றித் தீர்மானிக்கும் பொறுப்பு என்னது என்று அன்றே சொன்னேன் அல்லவா?” என்றவளை, இப்போது நீர் ததும்பும் விழிகளுடன் நோக்கினார் கோதை.

‘ஆக... இவளும் கடைசியில் அவள் அப்பாவுடன் சேர்ந்து யாதவ் வேண்டாம் என்று சொல்லப் போகிறாள். அடி முட்டாள் பெண்ணே! வரும் செல்வத்தை எட்டி உதைக்காதே!’ மனதில் அழவே தொடங்கி விட்டார் கோதை.

“இப்போதும் அதைத்தான் சொல்கிறேன் அம்மா.” கணம் நிறுத்தியவள், “ஆனால், என் விடயத்தில் எல்லாவித உரிமையும் உங்களுக்கு இருக்கும்மா.. உங்களுக்கு மட்டும்..” சட்டென்று தாயைக் கட்டிக் கொண்டாள். “உங்க வார்த்தைகளை நான் எப்போதுமே... எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் மீற மாட்டேன்மா..”

“ஆனால்...” நிமிர்ந்து, ஒரு வெற்றுப் பார்வையை ராஜேந்திரன் மீது வீசினாள்.

“எனக்கு..” நின்று நிதானித்தவளின் குரலில் எஃகுவின் உறுதி தொனித்தது.

“யாதவை உண்மையாகவே பிடித்திருக்கு. அவரைத் திருமணம் செய்ய எனக்கு முழுச் சம்மதம்மா. உங்க வருத்தத்தை உண்மையாக புரிந்து கொள்ளக் கூடியவர், நிச்சயம் என்னையும் சந்தோசமாகவே வைத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கும்மா..” என்றவள் மீண்டும் தாயை இறுக அணைத்து கணத்தில் விடுதலை செய்துவிட்டு, “நான் இங்கு இருக்க முடியும் என்றால், அவரும் இந்த வீட்டுக்கு வந்து போகலாம்மா..இது என் அம்மாவின் வீடும் தானே..” கேட்டவள், சட்டென்று மாடியை நோக்கி விரைந்தாள்.

அவள் விழிகள் உடைப்பெடுத்திருந்தன.

காரணம், அவள் கதைக்கும் பொழுது ராஜேந்திரனின் முகம் முதலில் கோபத்தில் இறுகி இருந்தாலும், பிறகு மெல்ல மெல்ல ஏமாற்றத்தைப் பூசி, எல்லையில்லா வருத்தத்தில் சுருங்கத் தொடங்கியிருந்தது. அதை அவளால் கண் கொண்டு பார்க்கவும் முடியவில்லை. அதேநேரம், அவர் யாதவை ஒதுக்குவதையும், திட்டுவதையும் பொறுத்துக் கொள்ளவும் அவள் மனம் கொஞ்சமும் இடம் தரவில்லை.

அவள் அழுதவாறே மாடி ஏறுவதை, கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர் யாதவும் பிரணவும்.

ராஜேந்திரனின் உரத்த குரல் எட்டியதும், முன்வாயிலருகில் நின்று கதைத்துக் கொண்டிருந்த யாதவ், “பொறு பிரணவ்..இவரிடம் நேரேயே இன்று கதைத்து விடுவோம்..” என பிரணவ் தடுக்கத் தடுக்க வந்தவன், தியா வருவதைப் பார்த்துத் தயங்கி நின்றான்.

ஆனால் கேட்ட செய்தியோ!!

அவனுள்ளம் எல்லையில்லா ஆனந்தத்தில் சிறகடிக்கத் தொடங்கியிருந்தது. “இது போதும் பிரணவ்...எனக்கிது போதும்...” அவன் வாய் முணுமுணுக்க, அருகில் நின்ற மைத்துனன் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

தான் உணர்ந்த அவள் மீதான நேசத்தை அவளிடம் வார்த்தைகளால் பகிரவில்லையென்றாலும், கிடைக்கும் ஒவ்வொரு சிறுசிறு சந்தர்ப்பங்களிலும் தன் செயல்களால் அதை அவளுக்கு உணர்த்த அவன் தவறியதே இல்லை.

எப்போதுமே அவனைக் கண்டால் சிடு சிடுப்பவள், திருமணத்துக்கு கேட்டதும் மறுப்புச் சொன்னவள், இன்று அவனை உணர்ந்தது மட்டுமின்றி அவன் மீது நம்பிக்கையுண்டு என்று கூறிவிட்டாளே! அதுவும் அவள் தந்தையின் முன்னால்.

“இதற்கும் மேல் மாமா வாயைத் திறக்கிறாரா பார்ப்போமே...!” என்றவன் ராஜேந்திரன் திரும்புவதைக் கண்டதும், “நான் போயிட்டு வாறேன் பிரணவ். இப்போ இதில் என்னைக் கண்டால் அவர் தேவையில்லாமல் திரும்பவும் ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்...” சட்டென்று சொல்லி அகன்றான் யாதவ்.

மகளையே வெறித்திருந்த ராஜேந்திரனும் விந்தி விந்தி தன்னறைக்குள் சென்று மறைந்தார். வேதனையுடன் கணவர் அகன்றதைப் பார்த்த கோதையின் விழிநீர் உடைந்து வெளியேறியது.

‘இப்படியெல்லாம் மனம் நோகக் கதைப்பவளா என் மகள்!’ தன் செல்ல மகளின் மனம் எந்தளவுக்கு புண்பட்டுக் கிடக்கின்றது என்பதை உணர்ந்து கண்கள் கசிந்தார் அவர்.

‘அன்றும், வெளியே போ என்று இவரை இப்படித்தான் நிற்க வைத்தாள். இன்றும்?? அந்தளவுக்கு இந்த மனிசன் பிள்ளைகள் மனதைப் புண்ணாக்கி விட்டாரே! இதெல்லாம் என்றாவது சரியாகுமா?’ என்று ஏங்கியவர், காலம் அனைத்தையும் மாற்றிடவல்லது என்பதில் மிகவும் நம்பிக்கையுள்ளவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா..?

அதே நம்பிக்கையை இப்போதும் இறுகப் பற்றிக் கொண்டார் கோதை. அதேநேரம் மகள் திருமணத்துக்கு சம்மதம் என்றதில் எல்லையில்லா நிம்மதியை உணரத் தவறவில்லை அவர்.
 
#4
காலம் காயத்தையும் ஆற்றும்.
 
#5
Nice ud
 
#6
தியா செய்தது சூப்பர் 😆😆😆
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
காலம் காயத்தையும் ஆற்றும்.
தியா செய்தது சூப்பர் 😆😆😆
மிக்க நன்றி, மூவருக்கும்
 
Top