தொடர்கதைகள் அத்தியாயம் 2 - இதழ் 9

Rosei Kajan

Administrator
Staff member
#1
அத்தியாயம் - 02அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் தனது வீட்டிலிருந்தான் அபரஜித். வீடென்பதை விட மாளிகை என்று சொல்வது தான் சாலப் பொருந்தும். அவன் உடல் தான் அங்கிருந்ததே தவிர, எண்ணமெல்லாம் இன்னமும் மெல்போர்ன் நகரில் அவன் இதயத்தைக் கொள்ளை கொண்டவளைச் சுற்றியே தான் வந்து கொண்டிருந்தது.ஒன்றா, இரண்டா எத்தனை ஆண்டுகள் காத்திருப்பு? ஆர்க்டிக்ல இருந்து அண்டார்டிக்கா வரை அவளைத் தேடி அவன் சுற்றாத நாடில்லையே! கடைசியில் இத்தனை வருடத் தேடலின் பின்னர், இல்லை அவனின் நீண்ட காலத் தவத்தின் பின்னர் எதிர்பாராத விதமாக அவளைச் சந்தித்தே விட்டான்.இனிமேல் அவன் செய்ய வேண்டியதெல்லாம் அவள் மனதை வசப்படுத்தி அவளை மணந்து கொள்ள வேண்டியதே. அவன் அழகுக்கு மயங்காதவர் யார்? அவன் உருவத்துக்குக் கிறங்காதவர் கூட அவனிடம் இருக்கும் வசதி, வாய்ப்பில் சொக்கி விடுவரே. இவள் மட்டும் என்ன மறுக்கவா போகிறாள்? எல்லாம் இவனைப் பற்றி அறிந்து கொள்ளும் வரை தான் இந்தத் துள்ளல், துடிப்பு எல்லாம்.‘அவளை எப்படியும் தனது வழிக்குக் கொண்டு வந்து விடலாம்’ எனத் தனக்குள்ளேயே உறுதியாக ஒரு தீர்மானத்திற்கு வந்தவன் அவன் அறையில் இருந்த ஒரு புத்தக அலுமாரியை அசைக்க அது ஒரு பக்கமாக ஒதுங்கியது. அதன் மறைவிலே, சுவரில் ஆளுயரத்திற்கு மிகப் புராதனமான ஓவியம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள் யாழினி.ஓவியத்திலிருந்தவளை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தானோ, தொலைபேசி ஒலித்த சத்தத்தில் மறுபடியும் அலுமாரியைப் பழையபடி வைத்து விட்டு கைத் தொலைபேசியை எடுத்துக் கொண்டு அதில் ஆழ்ந்தான்.மேலிடத்திலிருந்து புதிய வேலைக்கான கட்டளை வந்திருந்தது. இந்தத் தடவை எடுக்க வேண்டிய உயிர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் தான். ஒரே நேரத்தில் நானூறு பேர்களது உயிர்களை எடுக்கும் பொறுப்பு இவன் ஒருவனிடம் மட்டுமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இவன் தேவைப்படின் உதவிக்கு யாரையும் அழைத்துச் செல்லலாம். அல்லது உதவியாளர்களையே கூட அனுப்பி வைக்கலாம்.அவனுக்குக் கீழே உதவியாட்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருந்தார்கள். இவன் ஒரு விரலசைத்தால் போதும். இந்த நிழல் உலகத்தில் அவன் தான் ராஜா. அவன் தான் மந்திரி. என்ன தான் இவனுக்கு ஒரு மேலிடம் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், இவனைத் தவிர வேறு யாரும் மேலிடத்தோடு தொடர்பு கொள்ள முடியாததால் எல்லோரும் இவனையே தலைவனாகக் கொண்டாடினார்கள்.இந்த நிழல் உலக வாழ்க்கை வெளித் தெரியாமல் இருக்கவே இவனது இந்த படப் பிடிப்புத் தொழில். அவனது வேலையாட்களும் உலகம் முழுவதும் பரந்திருந்தார்கள். வைத்தியர்கள், காவல்துறையினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்பரவுத் தொழிலாளர்கள் என்று அனைத்து மட்டத்திலும் அவர்கள் தங்கள் நிழல் உலக வேலைகள் வெளியே தெரியாமல் இருக்க வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏன் ஒரு வல்லரசு நாட்டின் பிரதம மந்திரி கூட இவனின் கையாள் தான்.இப்போது இவனுக்கு வந்திருந்த வேலை இந்தோனேசியாவின் சுமத்திராத் தீவில். தானே செல்வோமா அல்லது வேறு ஆட்களை அனுப்புவோமா என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை அவனின் அனுமதி இல்லாமலேயே அவனது அறைக்கு அரக்கப் பரக்க ஓடி வந்த அந்த உதவியாளனின் அவலக் குரல் குழப்பியது.அந்த உதவியாள் அவுஸ்திரேலியா நாட்டுக்குப் பொறுப்பானவன். இங்கு அவன் அனுமதியின்றி யாரும் எவர் உயிரையும் எடுத்து விட முடியாது. அத்தனை தூரம் எல்லோரையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன். அவனுக்குக் கீழே மட்டும் இருநூறுக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். அவ்வாறிருக்க அவனே பயந்தடித்து ஓடி வருமளவு என்ன நடந்திருக்கும் என்று கேள்வியாய் ஏறிட்டான்.“தலைவா! ஒரு தப்பு நடந்து போச்சு… என் உயிரை எடுத்திடுங்கோ… நான் இனி வாழவே தகுதி இல்லாதவன் தலை… முதன் முதலாக நான் வைச்ச குறி தப்பிட்டுது. அதுவும் ஒரு பெண்ணால. என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலை. உங்க கையாலேயே என்னைக் கொன்று விடுங்கோ!”அபரஜித்தின் காலைக் கட்டிக் கொண்டு கதறினான் அவன். அபரஜித்தின் வரலாற்றில் அவன் ஒரு உயிர் மீது குறி வைத்துத் தப்பியதென்றால் முன்பு சில வருடங்களாக இலங்கையில் தான். அதுவும் பத்து வருடங்களுக்கு முன்பு. இவனே நேரில் சென்று பார்ப்போம் என்று எண்ணியிருக்க பழையபடி அனைத்து வேலைகளும் இவன் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது.பத்து வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக மறுபடியும் ஒரு குறி தப்பியிருக்கிறது. இவனின் தொழில் சுத்தம் பற்றித் தெரிந்த மேலிடம் இவனை ஒன்றும் சொல்ல மாட்டார்கள் தான். என்றாலும் இது இவனுக்குப் பெரும் அவமானமாகவே தான் இருந்தது.“முதல்ல என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்லு!”அபரஜித்தின் சிம்ம கர்ச்சனையாக ஒலித்த குரல் மற்றவனுக்கு உள்ளே கிலி பரப்பினாலும் கலங்கிய குரலில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.“நீங்க எனக்குத் தந்த ஓர்டர் ஆப்ரிக்கா நாட்டொன்று பிரைம் மினிஸ்டர் ஒராளிட ஐந்து வயதுப் பேரன் உயிரை எடுப்பது தானே? அவன் பள்ளிக்கூடம் முடிந்து பார்க்கில் விளையாடி விட்டு ரோட்டைக் கடக்கும் போது தான் அவன் உயிரைப் பறிப்பது என்று பிளான் செய்திருந்தேன்.இவன் பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே ஒரு பெண் இவனது கையைப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவனை ரோட்டைக் கடக்கவே விடேல்ல. அந்தப் பொடிப் பயலிட பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் கூடவே இருந்து அனுப்பி வைச்சா.அவனைத் தன்னை விட்டு அசைய விடாமல் தன்னோடேயே வைச்சிருந்தா. அடிக்கடி நான் இருந்த பக்கமாக வேற பார்த்திட்டு இருந்தா. நான் ஒரு தடவை அவளுக்குக் கிட்டப் போய்ப் பார்த்தேன். அவ என்னைத் தெளிவா அடையாளம் கண்டு பிடிச்ச போலத்தான் இருந்தது. அவ என்னை முறைச்சதைப் பார்க்கவே ரொம்பப் பயமாக இருந்தது தலை… இப்ப என்ன செய்யிறது? அவளுக்கு நான் யாரென்று வடிவாத் தெரியும் போல இருக்கே...”“அந்த ஆப்ரிக்கப் பொடியன்ட விசயத்தைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப் போடுவோம். நீ அந்தப் பொண்ணுட போட்டோ ஏதாவது எடுத்து வந்தாயா?”“ஓம் தலைவா… எடுத்திட்டு வந்தனான். அவ கண்களைப் பார்க்கவே பயமா இருக்கு. நீங்களே பாருங்கோ…”தனது கைத் தொலைபேசியிலிருந்து ஒரு புகைப்படத்தைக் காட்டினான் அவன். அதைப் பார்த்த அபரஜித்தின் உள்ளத்தில் ஒரே நேரத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும். ஏனெனில் அந்தப் புகைப்படத்தில் முறைத்துக் கொண்டிருந்தது வேறு யாருமில்லை. அவன் மனதைக் கொள்ளை கொண்ட யாழினியே தான்.‘அப்போ அவள் சிட்னி வந்திருக்கிறாளா? நல்லதாகப் போய் விட்டது’ என்று எண்ணியவன் முகத்தில் குறுநகை படர்ந்தது.


 

Rosei Kajan

Administrator
Staff member
#2
வேலையைச் சரியாக முடிக்காததால் எங்கே தன் தலை போய் விடுமோ என்று பயந்து கொண்டு வந்தவன், அபரஜித் யாழினியின் புகைப்படத்தைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டு வியப்புடன் ஏறிட்டான். அவனுக்கு அபரஜித்தைப் பத்து வருடங்களுக்கு மேலாகத் தெரியும். இன்று வரை அபரஜித்தை ஒரு பெண்ணுடன் பேசியோ, பழகியோ கண்டதில்லை. அவ்வாறிருக்க இன்று இவன் நடவடிக்கை வித்தியாசமாகப் பட்டதில் வியப்பென்ன?“சரி நீ போ… நான் இந்த விசயத்தைப் பார்த்துக் கொள்கிறேன். நாளைக்கு அந்த மூணு பேரிட துப்பாக்கிச் சூட்டுக் கேஸையாவது பொறுப்பாகச் செய்து முடி!”என்று கூறி அவனை அனுப்பி வைத்தான் அபரஜித். பழையபடி சிந்தனை முழுவதும் யாழினி ஆட்கொள்ள அவளை எப்படித் தன் வழிக்குக் கொண்டு வருவது என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான்.# # # # #அந்த அரண்மனை எங்கும் விருந்து, வேடிக்கைக்குக் குறைவில்லாமல் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள் எல்லோரும் கூடத் தத்தமது குடும்பம் சகிதமாய் வந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.அந்நாட்டு இளவரசியின் பதினெட்டாவது பிறந்த தினம் தான் வெகு விமரிசையாக அங்கு கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தது. மன்னனின் கண்ணுக்குக் கண்ணான ஒரேயொரு மகவல்லவா அவள்? பின் கொண்டாட்டத்திற்குக் குறைவேது?சிங்கைப் பரராச சேகரனின் பத்தினியார் அவர் மகள் அமுதாவை ஈன்றெடுத்து விட்டு உயிர் நீத்திருந்தார். மன்னனோ தன் வாழ்வை அர்த்தமாக்க இந்த ஒரேயொரு குழந்தை போதும் என்று முடிவெடுத்தவராய் மறு திருமணமும் செய்யாது தானே அவளை வளர்த்து ஆளாக்கினார்.அமுதாவும் தந்தையின் பாசத்தை உணர்ந்தவளாய் அவர் மீது உயிரையே வைத்திருந்தாள். ஒரு இளவரசன் அறிந்திருக்க வேண்டிய வாள் வித்தை, வில் வித்தை போன்ற ஆயுதப் பயிற்சிகளில் ஆகட்டும், பாட்டு, நடனம் போன்ற கலைகளில் ஆகட்டும், கல்வி, கேள்விகளிலும் ஆகட்டும் அமுதா மிகச் சிறந்து விளங்கினாள்.ஒரு முறை தந்தையோடு மான் வேட்டைக்குச் சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக எதிர்ப்பட்ட ஒரு சிங்கத்தைக் குறி தப்பாது ஈட்டி எய்து கொன்று மன்னனின் உயிரைக் காப்பாற்றியிருந்தாள். அப்போது அவளுக்கு பதினைந்து வயது மட்டுமே.அமுதா அவள் வீரத்தை விட அவள் அழகுக்குப் பிரசித்தமானவள். இன்று அவள் பிறந்தநாளுக்கு வந்திருந்த புலவர்களும் கவிஞர்களும் கூட அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காது பிரமித்துப் போய் நின்றனர்.தேவலோகத்து ரம்பா, ஊர்வசி, மேனகை மூவரின் அழகையும் கடைந்தெடுத்துச் செய்த சிற்பம் அவள் என்றே சொல்லலாம். அவளைப் படைக்கும் போது தான் பிரம்மனே அழகுக்கு வரைவிலக்கணம் வகுத்திருப்பான் போலும். காண்பவர் சித்தம் மதி மயங்கச் செய்யும் அப்படியொரு பேரழகி அவள்.இத்தகைய அழகுக்குச் சொந்தக்காரியோ அது பற்றிக் கொஞ்சம் கூட கர்வமோ, பிரக்ஞையோ இன்றியிருந்தாள். அதை விட அவள் உண்மையிலேயே அழகானவள் தானா என்ற சந்தேகம் அவளை இந்தச் சில வருடங்களாக அரித்து எடுத்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவன். அவன் ஒருவன் மட்டுமே.இரு வருடங்களுக்கு முன்பு வில் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக குருகுலத்தில் இணைந்திருந்தாள். அங்குதான் அவனை முதன் முதலாகச் சந்தித்தாள். அங்கிருந்த பிற இளவரசர்கள் எல்லோரும் இவள் அழகில் தலை சுற்றிப் போயிருக்க, இவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.அமுதாவும் இவனைக் கண்டு கொள்ளவில்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல இவனது அலட்சியம் அவளை அவன் பக்கம் அதிகமாகவே உற்று நோக்க வைத்தது. ஒரு தடவை மற்றைய இளவரசர்கள் இவள் அழகைப் புகழ்ந்து கொண்டிருக்க அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தன. இதனைக் கண்டு விட்ட அமுதா அவனைத் தனிமையில் சந்தித்தாள்.“ஏன் நான் அழகில்லையா? ஏன் நீ எப்போதும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறாய்?”“இந்த நாட்டின் அதி அவலட்சணமான பெண் நீ தான் என்பது உனக்குத் தெரியாதா? அது எப்படித் தெரியும்? காண்பவர் எல்லோரும் இளவரசி என்பதற்காகவே ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். அவ்வாறிருக்க உனக்கெப்படி உண்மை தெரியும்? நீயும் நீ தான் ஏதோ இந்திரலோகத்து சுந்தரி என்ற கணக்கில் மிதப்பாகத் திரிகிறாய்…”கூறிவிட்டு மறுபடியும் ஏளனமாக உதட்டைச் சுழித்தான். அமுதா அவனை நம்புவதா வேணாமா என்று குழம்பித் தவித்து மனம் சுணங்கிப் போனாள். அந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையை அவள் ஒதுக்கி விட்டு வில் வித்தை கற்பதில் கவனம் செலுத்தினாலும், அவளுக்கு உயிராபத்து விளைவிக்கக் கூடிய முடிவை அவள் தனக்குள் தீர்மானித்துக் கொண்டது அப்போதுதான்.இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வேறோரு இளவரசன், இவனிடம் காரணம் கேட்டான்.“ஏன் நண்பா… நீ அமுதாவிடம் எப்போதும் வம்பு செய்கிறாய்? அவளை அழகில்லை என்று சொன்னால் உன் பார்வையில் தான் கோளாறு என்பது உனக்குத் தெரியாததா? பிறகும் ஏன் அவளோடு விளையாடுகிறாய்? உன் பொய்யை அவள் நம்பியது போல வேறு தோன்றுகிறதே… அவள் மதிமுகம் ஒரு தடவை கறுத்துச் சிறுத்ததைக் கண்டேனே… அவள் பாவம். உன் விளையாட்டை இத்தோடு நிறுத்தி விடு!”“சில மாதங்கள் அவள் இங்கிருக்கும் வரை தானே அவள் கூட இவ்வாறு விளையாட முடியும் நண்பா? நாட்டுக்குத் திரும்பி விட்டால் அவள் பேரரசரின் கண்ணின் மணியான இளவரசி. நாமெல்லாம் அருகில் செல்லக் கூட முடியாது.”“அதற்கு இப்படித்தான் பொய் சொல்லுவாயா? அவள் உன் பொய்யை நம்பித் தன்னைப் பார்க்க முனைந்தால் என்னாகும் என்று கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தாயா?”நண்பன் கூறியதும் தான் அவனுக்கு தான் ஆரம்பித்து வைத்த விளையாட்டின் தீவிரம் புரிந்தது.“நான் அப்படி நினைத்துப் பார்க்கவே இல்லை நண்பா… அவள் ஏன் தன் உருவத்தைப் பார்க்க முனைகிறாள்? அவள் ஒன்றும் விவரம் அறியாத சின்னப் பிள்ளை அல்லவே…”நண்பனிடம் கூறுவது போலத் தனக்குத் தானே கூறிக் கொண்டான். இருந்தாலும் கூட எங்கே அமுதா தன்னைப் பார்க்க முனைவாளோ என்ற கேள்வி பூதாகரமாக அவன் முன் நின்றது.# # # # # #“யாழம்மா… யாழம்மா…!”செல்வி உலுக்கி எழுப்பியதில் கனவு கலைந்து எழுந்திருந்தாள் யாழினி.“நீங்கள் புரோகிராமுக்கு போக நேரம் ஆகுதேம்மா. இதென்ன என்றைக்கும் இல்லாத போல நேரம் கெட்ட நேரத்தில நித்திரை கொள்ளுறியள்…?”“இதில சும்மா சாய்ந்து படுத்திருந்தன் செல்வியக்கா… அப்படியே கண் அசந்து அந்த அரச காலக் கனவு வந்துச்சு… ஆனா அந்த அமுதா தன்ர முகத்தைப் பார்த்தால் என்ன பிரச்சினை வரும் என்று தெரியேல்லயே… அதுக்கு முதலே நீங்க வந்து எழுப்பிட்டீங்கள். சரி பரவாயில்லை. இன்னொரு நாளைக்குக் கனவைக் கொன்டினியூ பண்ணுவம்…”என்று கூறியவள் வெளியே செல்லத் தயாரானாள்.அமுதா தன் முகம் பார்த்தால் என்னாகி விடும்? அபரஜித்தின் வலையில் விழுவாளா யாழினி? அவளுக்கும் இந்தக் கனவுக்கும் என்ன சம்பந்தம்?அடுத்த பகுதியில் பார்ப்போம்...
 

Aruna

Active member
#3
Very interesting.. eagerly waiting for your next update...
 
#4
Nice going sis....
 
#5
Nice sis.super
 
#6
Nice sis
 
#7
Next update pl
 

Rosei Kajan

Administrator
Staff member
#8
அனைவருக்கும் மிக்க நன்றி !
 
Top