அத்தியாயம் 17

NithaniPrabu

Administrator
Staff member
#1
அத்தியாயம் 16-17 கூகிள் லிங்க்:

https://drive.google.com/file/d/1Die_w2Qj5ts_e5iizN4CracotQXs5-lH/view?usp=sharing

அத்தியாயம்-17

வீட்டுக்குள் வந்த பவித்ரா விறு விறு என்று தன் அறைக்குள் சென்று தொப்பென்று கட்டிலில் விழுந்தாள்.

இன்னுமே கணவன் மீதிருந்த கோபம் தீராதபோதும், அவன் ஒழுங்காக சாப்பிடவில்லை என்பது அதையும் தாண்டிக்கொண்டு மனதை பாதித்தது. அதுவும் அவன் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிடும் ரகம். அப்படியானவன் அரை வயிற்றுக்கும் உண்ணவில்லையே!

நீயும் கொஞ்சம் உன் வாயை அடக்கலாம் பவி. அவன் சொன்னமாதிரி எப்போ பார் அவனோடு மல்லுக் கட்டிக்கொண்டு! ஒரு கல்யாணமான பெண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியுதா உனக்கு?

தன்னைத் தானே திட்டிக்கொண்டவளுக்கு இனி எப்படி அவனை சாப்பிட வைப்பது என்கிற யோசனைதான் பிரதானமாக ஓடிக் கொண்டிருந்தது. அவள் வயிற்றிலும் பசி தெரிய இப்படித்தானே அவனுக்கும் இருக்கும் என்று பிசைந்தது மனது! எழுந்துபோய் அவனை மேலே கூட்டிக்கொண்டு வந்து சாப்பாடு போடலாமா? கூப்பிட்டால் வருவானா? என்று அவள் யோசிக்கையிலேயே வீட்டுக்கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது.

‘வந்துவிட்டான்!’

தான் பார்த்த வேலைகளுக்கு திரும்பவும் கோபத்தில் வந்து கத்துவானோ? அவனுடைய தமக்கையிடம் வேறு பேச்சை நிறுத்துமாறு சொன்னாளே! என்று இவள் யோசிக்கையிலேயே கனத்த காலடி ஓசை அவள் அறையை நெருங்கத் தொடங்க, ‘அய்யய்யோ.. மாட்டினோமா..’ என்று எண்ணியவள், சட்டென்று கண்கள் இரண்டையும் இறுக்கி மூடிக்கொண்டு தூங்குகிறவள் போல் படுத்திருந்தாள்.

நெஞ்சு மட்டும், ஊதல் காற்றுக்கும் பேய் மழைக்கும் திறந்திருந்த வீட்டுக் கதவு படார் படார் என்று அடித்துக்கொள்ளுமே அப்படி அடிக்கத் தொடங்கியது.

அவளது அறை வாசலுக்கு வந்த சத்யனின் நடை தயங்கி நின்றது. உள்ளே போகலாமா வேண்டாமா என்று ஓடிய யோசனையை, தினமும் அவனுக்கு வயிறார சாப்பாடு போடும் அவளின் மலர்ந்த முகம் மனக்கண்ணில் வந்து விரட்டியடித்தது. மெல்ல கட்டிலை நெருங்கினான்.

காலடியோசை கட்டிலருகில் நின்றுவிட எகிறிக் குதிக்கத் தொடங்கியது இவளது இதயம்!

அன்றென்று பார்த்து முழங்கால் வரையிலான பாவாடை சட்டை அணிந்திருந்தவள், அலட்சியமாக வேறு கட்டிலில் விழுந்திருந்தாள்.
இவன் இப்படி அறைக்குள் வருவான் என்று அவள் எங்கே கண்டாள்?

பாவாடை வேறு சற்றே மேலேறிக் கிடந்தது. அணிந்திருந்த சட்டையோ எலுமிச்சை நிற இடையை காட்டவா வேண்டாமா என்று எல்லைக்கோட்டை தொட்டுக் கொண்டிருந்தது. அதை இழுத்துவிட கைகள் துடிக்க, அதைச் செய்தால் தன் நடிப்பு வெளிப்பட்டு விடுமே என்று அடக்கிக்கொண்டு கிடந்தவளின் தேகமெல்லாம் நாணம்!

‘கண்ணை மூடின நீ மூட வேண்டியதை விட்டுட்டியேடி லூசி!’ வெட்கம் கொண்டவள், ‘சரி விடு! என்றைக்கா இருந்தாலும் அவன்தானே பார்க்கப் போகிறான்! இதை பார்த்தாவது இந்த மடையன் மடங்குறானா பார்க்கலாம்.’ என்று தன்னையே தேற்ற முயன்றாள்.

இதழ்களிலோ நாணப் புன்முறுவல் பூத்துவிட துடியாய் துடித்தது!

சற்று நேரம் எந்தவித சத்தத்தையும் காணோம்! ‘என்ன செய்கிறான்..?’ இவள் சிந்தனை ஓடுகையிலேயே, செருமல் சத்தம் ஒன்று கேட்டது.

‘தொரை மைக்கு பிடித்து பேசப் போகிறாராம்!’

அவளின் ஊர்ஜிதம் சரிதான் என்பதாக, “சாப்பிட்டுவிட்டுப் படு!” என்றான் சத்யன்.

சட்டென்று பன்னீர் ஊற்றுப் பொங்கியது அவளுக்குள். இதயத்துக்குள் அதுநாள் வரை வாடிக்கிடந்த பூவொன்று சட்டென்று மலர்ந்து மணம் வீசிற்று! அக்கறையற்றவன் சாப்பிடச் சொல்வானா?

தன் முயற்சிகள் ஒன்றும் விழலுக்கு இறைத்த நீராகிவிடவில்லை என்கிற ஆனந்தத்தில் மூடிய இமைகளுக்குள் கருமணிகள் துடித்தாலும், அப்படியே கிடந்தாள். பின்னே, மேடை ஏறியாயிற்று! நடித்து முடிக்க வேண்டாமா?

“பவித்ரா! எழும்பு. நீ முழித்துத்தான் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.” என்றான் அவன்.

‘கடன்காரா! இதையெல்லாம் நல்லா கவனி. என் மனதில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் கவனிக்காதடா!’ என்று வைதவள், அதற்குமேலும் தாக்குப் பிடிக்க முடியாமல் கண்களை திறந்தாள்.

அவனோ அவளைப் பாராமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.

‘நீ செத்தாலும் திருந்த மாட்டாடா!’

‘முழுச் சாமியாராவே இருக்கிற இவன் முன்னால் கவர்ச்சி டான்ஸ் ஒன்றைப் போட்டால் என்ன’ என்கிற யோசனை அவளுக்குள் ஓட, “வா.. வந்து சாப்பிடு.” என்றான் அவன். அப்போதும் அவளை பார்க்கவில்லை.

அந்தக் கடுப்பில், “எனக்கு பசியில்லை.” என்றாள் இவள்.

இன்னும் கொஞ்சம் அவன் நெருங்கிவந்தாலே அவள் வயிறு, ‘அடியே! சாப்பாட்டைப் போடுடி!’ என்று கத்தும் சத்தம் அவனுக்கே கேட்டுவிடும் என்று தெரிந்தும் முறுக்கிக்கொண்டாள்.

தானும் சற்று அளவுக்கு அதிகமாக பேசிவிட்டோம் என்று உணர்ந்தானோ என்னவோ, “பொய்யை சொல்லாமல் எழும்பி வா..” என்று தணிந்தே போனான் சத்யன்.

அதற்குமேலும் வீம்பு பிடிக்க மனமற்று, அவனைச் சாப்பிட வைக்கவும் ஒரு வழி கிடைக்க, “நீங்களும் சாப்பிடுவதாக இருந்தால் நான் சாப்பிடுகிறேன்.” என்று பேரம் பேசினாள்.

“நான்தான் சாப்பிட்டேனே..”

“ஆனாலும் பசி போயிருக்காது.”

‘இவளுக்கு எப்படித் தெரியும்?’ வியப்போடு அவளைப் பார்த்தான் அவன்.

‘இப்போ மட்டும் நல்லா பாருடா! லூசா! லூசா!’

அவளின் மனவோட்டங்களை அறியாதவன், “சரி, எனக்கும் சேர்த்துப் போடு!” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

இருவருமாக உணவை முடித்துக்கொண்டனர். அவள் கையால் வாங்கி சாப்பிட்ட பிறகுதான் மனசும் வயிறும் நிறைந்தது போலிருந்தது சத்யனுக்கு!

தன்னறையில் வந்து விழுந்தவனுக்கு மனதில் குழப்பம்.

போட்டோக்களை கொழுவியதில் அவனுக்குக் கோபம்தான். அந்தக் கோபத்தில் தான் அக்கா வீட்டுக்கு உண்ணப் போனான். அவள் சாப்பிட்டேன் என்று பொய் சொன்னதும் அன்றுபோல் பட்டினியாகக் கிடக்கப் போகிறாளோ என்கிற பரிதவிப்பு கோபமாக உருவெடுத்ததில் தான் தமக்கை லைசென்ஸ் பற்றிப் பேசியபோது அக்கறையற்றவனாக பதில் சொன்னான். அதை சொல்லும்போது பவித்ராவின் முகத்தில் தெரிந்த பாவம்?

ஏனடா வாயை விட்டோம் என்றாகிவிட்டது அவனுக்கு.
 

NithaniPrabu

Administrator
Staff member
#2
ஒன்றைத்தொட்டு இன்னொன்று என்று அவனுடைய பொறுமையற்ற குணமும் கோபமும் வார்த்தைகளை விட வைத்துவிட்டன! அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்கிற கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை.

அவனை நெருங்க அவள் முயல்வதும் அவன் தள்ளித் தள்ளிப் போவதும் அவன் அறியாதது அல்ல. ஆனால், நெருங்கவும் முடியவில்லை.

முதலாவது காரணம், கீர்த்தனனின் நடத்தை! சத்யனின் நிபந்தனைக்கு உட்பட்டு வேறு வழியின்றி மணந்த ஒருவனின் நடத்தைகள் அல்ல அவை! நெஞ்சுமுழுக்க நேசத்தை நிறைத்துக்கொண்டு அக்காவை பார்க்கும் அத்தானின் பார்வைகளை அவன் அறிவான். அப்படியான அத்தானுக்கு ஏமாற்று வேலையை செய்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி. அடுத்ததாக அத்தானின் தங்கை என்கிற முட்டுக்கட்டை!

அதோடு, என்ன இருந்தாலும் தன் தமக்கைகாகத்தானே அவளை மணந்தோம் என்கிற எண்ணங்களே அவளை நெருங்க விடாமல் அவனை வதைத்தது.

இவ்வளவு நாட்களும் பெரிய இவன் மாதிரி விலகி விலகிப் போய்விட்டு இனி எப்படி அவளை நெருங்குவது என்கிற யோசனை வேறு! இதற்கு என்னதான் முடிவு என்கிற யோசனையுடனேயே உறங்கிப்போனான் சத்யன்.

அன்று கணவன் தன் பசியை கவனத்தில் கொண்டான் என்கிற சந்தோசம் தந்த நிறைவில் அடுத்த நாள் விசப்பரீட்சை ஒன்றுக்குத் தயாரானாள் பவித்ரா. அதுவரை தினமும் அவனுக்கு தானாக அழைத்துப் பேசுகிறவள் அன்று அவளாக எடுப்பதில்லை என்கிற முடிவை எடுத்தாள்.

இத்தனை நாட்களும் அவள் நேரம் காலம் மறக்காது அழைத்துப் பேசியதற்கு பலன் இருந்தால் இன்று அவனாக அவளைத் தேடி அழைக்கவேண்டும். அந்த முடிவை என்னவோ வெகு இலகுவாக எடுத்துவிட்டாள் தான். செயல்படுத்துவதற்குள் தான் படாத பாடு பட்டுப்போனாள்.

நேரம் மதியத்தை நெருங்க நெருங்க உடலும் உள்ளமும் பரிதவிக்கத் தொடங்கியது.

விரதம் காப்பவள் போன்று தலைக்குக் குளித்துவிட்டு வந்து, ஓடிப்போய் கடவுள் படத்துக்கு முன்னால் கைகூப்பி நின்றாள். கண்களில் அவளை அறியாமலேயே கண்ணீர் வடிந்தது.

எவ்வளவு நேரம் தன் பிரார்த்தனைகளை தெய்வத்தின் முன்னால் வைத்தாளோ, அவளே அறியாள்! அப்படி ஆண்டவனிடம் மனதில் உள்ளவற்றை எல்லாம் கொட்டியது ஒருவித ஆறுதலை தர, தன்னுடைய செல்லையும்.. வீட்டுக்கு அழைப்பானோ என்று தோன்ற வீட்டுத் தொலைபேசியையும் எடுத்துக்கொண்டு சென்று சோபாவில் அமர்ந்துகொண்டாள்.

அவள் வழமையாக எடுக்கும் அந்தப் பன்னிரண்டு மணியை நேரம் நெருங்கியது. இருப்புக்கொள்ளாமல் அவள் தவிக்க அவன் அழைக்கவில்லை..

பன்னிரண்டு ஒன்று.. பண்ணிண்டு இரண்டு.. கண்களில் கண்ணீர் பொங்கத் துவங்கியது.

நேரத்தை பார்த்தாள் பன்னிரண்டு ஐந்து. ‘எடுங்கள் ஜான்.. இன்று மட்டும் எடுத்துவிடுங்கள் ஜான்.. என்னை ஏமாற்றி விடாதீர்கள்..’ உள்ளம் பரிதவிக்க நேரமோ பன்னிரண்டு எட்டானது.

ஆசை நிராசையாக ஏமாற்றம் அவளைத் தழுவ, முற்றிலுமாக உடைந்துபோனாள் பவித்ரா.

‘இனி எடுக்க மாட்டான்.. அவன் மனதில் நான் இல்லவே இல்லை..’ நெஞ்சை பிளந்துகொண்டு விம்மல் ஒன்று பெரிதாக கிளம்பிய அதே நேரம், அவளது செல் இனிய நாதமாய் இசை பாடியது.

காதுக்குள் நுழைந்த இன்னிசை உயிரை மீட்டுத் தர, யார் என்று அறிய முதலே ‘அவன்தான் அவனேதான்’ என்று உள்ளம் அடித்துச் சொல்ல, உடலில் அலையலையாய் பரவசம் பொங்கிற்று! துவண்டு மடியப்போன உணர்வுகள் துள்ளி எழும்பியது. அதே வேகத்தில் கண்களை நிறைத்த கண்ணீரோடு செல்லை எடுத்துப் பார்க்க, அதிலே ஜான் என்கிற எழுத்துக்கள் முத்துக்களாக ஒளிர்ந்தன.

வேக வேகமாக கண்களை துடைத்துக்கொண்டு, பட்டனை அழுத்தி செல்லை காதுக்குக் கொடுத்து, “ஹலோ ஜான்..” என்றவளின் குரலில் ஆனந்தக் கண்ணீரும், புன்னகையும், துள்ளலும் சேர்ந்து ஒலித்தது.

செவிவழி பாய்ந்த உயிரை உருக்கும் அந்த அழைப்பில் சத்தியமாகக் கரைந்தே போனான் அவள் கணவன்.

சில நொடிகள் அமைதியாக இருந்து அவளின் குரல் உண்டாக்கிய சிலிர்ப்பையும், அதிர்வலைகளையும் சந்தோசமாக அவன் அனுபவிக்க, “ஜான்.. ஜான்.. இணைப்பில் இருக்கிறீர்கள் தானே..” என்று பரிதவித்துவிட்டாள் பவித்ரா.

‘எதற்கடி இத்தனை தவிப்பு?’ உள்ளம் கேட்டாலும் அதை மறைத்துக்கொண்டு, “ம்ம்.. இருக்கிறேன்..” என்றவன், அவளை தேடி என்றல்லாமல் ஏதோ அலுவலாக அழைத்தேன் என்று சொல்லவேண்டும் என்று எண்ணியதை மறந்து, “இன்று ஏன் நீ கூப்பிடவில்லை?” என்று கேட்டான்.

உள்ளம் துள்ள, நின்ற இடத்திலேயே சந்தோஷ மிகுதியில் துள்ளினாள் பவித்ரா. காதருகில் செல்லை பிடித்தபடியே சுவாமிப் படத்தருகே ஓடினாள்.

‘நன்றி தெய்வமே..!’ சந்தோஷ மிகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து, ஆணியில் கொழுவியிருந்த சுவாமிப் படத்தை எடுத்து ஒரு முத்தத்தை அழுத்தமாகப் பதித்தாள்!

கணவனுக்குக் கிடைக்கவேண்டிய முத்தம் அந்தக் கடவுளுக்கு; தென்னாடுடைய சிவனுக்குக் கிடைத்தது!

“பவி.. இப்போது நீ அழைப்பில் இருக்கிறாயா?” என்று கேட்டவனின் கேள்வியில் வழமைக்கு மாறாக சின்னக் கேலி விரவிக் கிடக்க, அதில் கரைந்தே போனாள் அவனிடம் முற்றாகத் தன்னை தொலைக்கக் காத்திருப்பவள்.

‘பவி என்றானே..’

உற்சாகத்தில் மேலும் கீழுமாய் குதித்த மனதை அதன்பட்டுக்கே விட்டுவிட்டு, சாதாரணமாக கதைக்க முயன்று, “இருக்கிறேன் ஜான். என்ன அதிசயமாக இன்று நீங்கள் என்னைத் தேடி அழைத்திருக்கிறீர்கள்?” என்று விசாரித்தாள்.

“தினமும் இந்த நேரத்துக்கு அழைத்து என் உயிரை வாங்குகிறவள் இன்று அழைக்காவிட்டால், என்னவோ ஏதோ என்று யோசிக்க மாட்டேனா?” என்று அவன் கேட்டபோது, ‘அவளின் அழைப்புக்காக அவனும் காத்திருந்திருகிறான்!’ நெஞ்சம் விம்மித் தணிந்தது இவளுக்கு.

சந்தோஷ மிகுதியில் என்ன சொல்வது ஏது சொல்வது என்று தெரியாது அவள் இருக்க, “ஏன் கூப்பிடவில்லை?” என்று அவனே கேட்டான்.

“அது.. அதுவா.. சோபாவில் சும்மா சாய்ந்து இருந்தேனா.. அப்படியே உறங்கிப் போனேன்...” என்று ரசித்துப் பொய் சொன்னாள் மனையவள்!

“ஓ..! அதுதான் குரலும் ஒருமாதிரி இருக்கிறது போல. சாரிமா. உன் உறக்கத்தை கெடுத்துவிட்டேனா?” என்று மெய்யாக வருந்தினான் கணவன்.

அவளது குரலில் இருந்த மாற்றத்தை கவனித்திருக்கிறான் என்றால், அவள் குரலை அவன் உள்வாங்கி இருக்கிறான் என்றுதானே அர்த்தம். அதோடு அவளது உறக்கம் கலைந்ததை எண்ணி வருந்துகிறான் என்றால் அவள்மேல் அன்பில்லாமலா?

நெஞ்சம் இன்னுமே துள்ள, “இல்லைப்பா.. இனி உறங்க முடியாது. நீங்கள் பேசுங்கள்.” என்றாள் அவள் சலுகையோடு.
 

NithaniPrabu

Administrator
Staff member
#3
அந்த சலுகையும் கொஞ்சலும் அவனுக்குள் என்னவோ செய்ய, இப்போது என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தான் அவன்.

அவளோ மறுபடியும் ஆரம்பித்தாள்.

“சாப்பிட்டீர்களா?”

இதழ்களில் புன்னகை அரும்ப, “ம்ம்..” என்றவன், என்ன சாப்பிட்டான் என்றும் சொன்னான்.

அப்படியே வழமையான பத்து நிமிடங்களையும் தாண்டி பேசியபிறகு, “இன்றைக்கு என்ன சமைக்கட்டும் ஜான்?” என்று கேட்டாள் அவன் மனைவி.

“இதென்ன என்னிடம் கேட்கிறாய் புதிதாக. நீயே எதையாவது பார்த்துச் செய்.” என்றான் அவன்.

“இல்லை. இன்றைக்கு உங்களுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள். அதையே செய்கிறேன்.” என்றாள் அவள் பிடிவாதமாக.

அவளோடு விளையாடிப் பார்க்கும் ஆசை திடீரென்று உருவாக, “ஸ்பகட்டி செய்.” என்றான் சத்யன்.

“என்ன..து…?!”

என்னதுவை அவள் இழுத்த இழுவையிலேயே அவளுக்கு அது செய்யத் தெரியாது என்று விளங்க, எழுந்த சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கிக்கொண்டு, “செய்யத் தெரியாதா? பிறகு எதற்கு சும்மா உங்களுக்கு பிடித்ததை செய்யவா என்று கேட்டாய்? எதையாவது செய். வந்து சாப்பிடுகிறேன்.” என்று அலுத்துவிட்டு அணைப்பை துண்டித்தவனுக்கு, உதடுகளில் மலர்ந்த இளம் முறுவலை அடக்கவே முடியவில்லை.

காரணமே தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக அவன் இப்படித்தான் இருக்கிறான். சும்மா சும்மா சிரிக்கிறான். எந்த நேரம் என்றில்லாமல் பவித்ரா மனக்கண்ணுக்குள் வந்துநின்று முறைக்கிறாள். மனதிலோ மயிலிறகால் வருடியது போன்றதொரு சுகம் நிரந்தரமாகவே தங்கிக் கிடந்தது. ஒருவித துள்ளல்! உற்சாகம்.. இப்படி என்னென்னவோ மாற்றங்கள் அவனுக்குள்!

காரணம் மட்டும் புரியவே மறுத்தது!

தான் சொன்னதை சமைத்தாளா பார்ப்போம் என்று எண்ணியபடி மாலை வீடு திரும்பியவனை, வாசனையுடன் கூடிய ஸ்பகட்டி வரவேற்றது. வியப்போடு, “கடையில் வாங்கினாயா?” என்று கேட்டு ஒருவாய் உண்டவன், அதன் ருசியில் ஆச்சரியப் பட்டுத்தான் போனான்.

“நானே செய்தேன். நன்றாக இருக்கிறதா?” கருவிழிகளில் ஆர்வம் மின்ன அவள் கேட்டபோது, “வெகுருசி…” என்றான் அவன்.

பவித்ராவோ அகமகிழ்ந்து போனாள்.

சத்யனுக்கு அதிக காரம் ஒத்து வருவதில்லை. அவனுக்குப் பிடித்த வகையில் காரம் கலந்து, அளவாக ஸ்பகட்டி சாஸ் விட்டு, மிதமான சூட்டில் இருந்த ஸ்பகட்டியை ஒரு வெட்டு வெட்டினான் சத்யன்.

“எப்படிச் செய்தாய்?”

“அண்ணியிடம் கேட்டு செய்தேன்.”

“சாஸ்? கடையில் வாங்கினாயா?” மதியம் என்னது என்று கேட்டு முழித்தவள் இவ்வளவு சுவையுடன் எப்படி சமைத்தாள் என்கிற ஆச்சரியம் அப்போதும் நீங்காமல் கேட்டான் அவன்.

பவித்ராவோ கணவன் தன்னோடு சகஜமாக உரையாடுகிறான் என்கிற மகிழ்வில் பதில் சொன்னாள்.

“அரைத்த இறைச்சி வாங்கி, தக்காளிப்பழம் போட்டு நானே சாஸ் காய்ச்சினேன்..”

அவளின் பேச்சும், செயலும் மனதை தொட, “எதற்காக?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் சத்யன்.

“உங்களுக்காகத்தான்!” பட்டென வந்தது பதில்.

“முதன் முதலாக நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை கேட்டிருக்கிறீர்கள். அதைச் செய்யாமல் இருப்பேனா? அண்ணியிடம், இந்த நட்டு உணவுகள் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டுவிட்டேன். இனி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பழகிவிடுவேன் ஜான்.” படபடவென்று சொன்னாள்.

இதெல்லாம் எதற்காக? தமக்கைக்காகத்தான் அவன் எல்லாத்தையும் செய்தான் என்பதை அறிந்தும் அவன்மேல் அவள் காட்டும் நேசத்தில் பிரமித்துத்தான் போனான் சத்யன்.

அவன் ஒன்றும் அவளை வெறுத்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவன் அல்லவே! அதோடு நல்லவனும் கூட! என்ன அக்காவின்மேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தவன்!

அந்தப் பாசம் சிலபல தப்புக்களை செய்ய வைத்தாலும், ஒரு பெண் மனைவி என்கிற இடத்திலிருந்துகொண்டு பாசமெனும் கயிறை நேசம் கொண்டு வீசுகையில் எந்த ஆண்மகன் தான் வீழ்ந்து போகாமல் இருப்பான்?

சத்யனும் வீழ்ந்தான்! சாதரணமாக அல்ல! அவளின் காலடியிலேயே!

அன்று, மனைவியை மனைவியாகப் பார்த்தான். அப்போதுதான் அவளது அழகே அவன் கண்களில் பட்டது.

பெரிதாக எந்த அலங்காரமும் செய்து கொள்ளவில்லை. நைட்டி தான் அணிந்திருந்தாள். மாலையே வாரியிருந்த தலை சற்றே கலைந்திருந்தது. அதை இரண்டுபக்கக் காதோரமும் இழுத்து ஒதுக்கியிருந்தாள். அதுவே ஒருவித அழகை முகத்துக்குக் கொடுத்தது. வகிட்டில் ஒரு பொட்டு, நெற்றியில் ஒரு பொட்டு, கழுத்தில் ஒரு பொட்டு... ‘எதுக்கு இவள் இத்தனை பொட்டுக்களை வைத்திருக்கிறாள்?’ புதிதாகக் குழம்பினான் சத்யன்.

அவனது அக்காவும் தான் திருமணம் ஆனவள். ஆனால், இப்படி ஐந்தாறு இடங்களில் அவள் பொட்டு வைப்பதில்லையே. அவள் வேறு எப்போதாவது வைத்திருக்கிறாளா? தன் நினைவடுக்குகளில் தேடித் பார்த்தான்.. ம்ஹூம்.. எதுவுமே நினைவில் இல்லை.

அவன் கண்களோ பவித்ராவின் கழுத்தில் வீற்றிருந்த பொட்டை சந்தித்து, அதற்குக் கீழே இறங்கியதில் அவன் பார்வை முதன் முதலாக கள்ளத்தனமாக மாறியது.

கணவனின் சிறு அசைவுகளையும் நெஞ்சுக்குள் பொத்தி வைப்பவள் அவனது இந்தப் பார்வையை கவனிக்காமல் இருப்பாளா? வெட்கத்தில் கன்னங்கள் சூடாகும் போலிருந்தது.

‘ராஸ்கல்! வெட்கமில்லாமல் என்ன பார்வை பார்க்கிறான்?’ செல்லமாக மனம் வைதாலும், உள்ளே உள்ளம் மட்டும் இன்னும் அவன் எப்படி எப்படியெல்லாமோ பார்க்கவேண்டும், அவளை ரசிக்கவேண்டும் என்று வெட்கமில்லாமல் ஆசைகொண்டது!தொடரும்....

கமெண்ட்ஸ் பிளீஸ்..
 
#4
Love start akitu.....😍😍😍😍
 
#5
Nitha 👌👌👌👌
 
#6
அடிக்கடி அப்டேட் குடுக்கிறதுக்கு நன்றி சூப்பர்
 
#7
தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கறீங்களே சிஸ்டர் ஸிக்சராய்.
 
#8
yevlo azhagana kaadhal, padikkum bodhu manasellam niranju pohuthu. indha episode mattum 3 times padichuten. romba kavidhaithanama iruku nitha sis.
 
#9
Thank you so much nitha continuous ah episode podurathuku rompa rompa azhagana love semma nitha padikka padikka acho avlo thaan mudinjiduchaenu thaonuthu
 
#10
Sathyan pavithramana kathalai nugara thodangi vittan.
 
#11
Nice ud..
Appaadi sathiya kkum light aa bulb eriudhe. Super
Nitha sis, Google browser la dhaan posts seriya load aaga maatengudhu. Naan vera browser use pannren. Working. Enna nnu paarunga pa
 
#12
Nice
 
#13
Sis. After completing this story but give Google link whole novel both part I and II to read continuously. I think it give me great pleasure. Thank you . This novel is vey nice.
 

NithaniPrabu

Administrator
Staff member
#14
Sis. After completing this story but give Google link whole novel both part I and II to read continuously. I think it give me great pleasure. Thank you . This novel is vey nice.
கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கோ. கட்டாயம் ரெண்டு பாராட்டுக்கும் கூகிள் லிங்க் தாரேன்
 
#15
கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கோ. கட்டாயம் ரெண்டு பாராட்டுக்கும் கூகிள் லிங்க் தாரேன்
Thank you sister for considering.
 
Top