தொடர்கதைகள் அத்தியாயம் 17

Rosei Kajan

Administrator
Staff member
#1
அன்று காலை முதல் விரிவுரை முடிந்ததும், அடுத்த விரிவுரை தொடங்க இன்னமும் ஒருமணி நேரமிருப்பதால், தோழிகள் மூவருமாய் கண்டீனுக்கு அருகிலுள்ள சிறுபகுதியில் போடப்பட்டிருக்கும் ஸ்டோன் பெஞ்சில் வந்தமர்ந்தனர்.

சிறிது நேரம் பொதுவாய்க் கதைத்துக் கொண்டிருந்தவர்கள், பின்னர் கதைப்புத்தகங்களை விரித்துக் கொண்டு அதில் மூழ்கி விட்டனர்.

கண்டீனில் உள்ளே மாணவர்களின் ஆர்ப்பாட்டக் குரல்களும், அதோடு கலந்து இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் பிலோமினாவின் அழகிய காந்தக் குரலில் கணீரென்று ஒலித்த பாடலுமாக, அச்சுற்றுப்புறமே களை கட்டியிருந்தது.

எப்போதும் போல பிலோமினாவின் குரலில் குழைந்து வந்த,
‘கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை.’
எனும் பாடல்வரிகள், கதைப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவர்களின் செவிவழி நுழைந்து, மூவரையும் வெவ்வேறு நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.

‘‘ச்சே...வாங்கடி...வேற எங்கயாவது போயிருப்பம். மனிசனுக்கு நிம்மதியா இருந்து வாசிக்க முடியுதா? இந்தப் பிலோமினாக்கா எப்பப் பார்த்தாலும் இந்தப் பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறா.’’ சலிப்புடன் எழுந்த மஞ்சுவின் கரத்தைப் பிடித்திழுத்து அமர்த்தினாள் மயூ.

‘‘என்னடி இப்படிச் சலிக்கிற? இந்தப் பாட்டைப் பாடுங்க பாடுங்க என்று எத்தின தரம் கேட்டிருக்கிற? இப்பப் போய்...ம்ம்...கேட்கப் பிடிக்குதில்லை என்ன? பேசாம இருடி.’’ என்றாள் கண்டிப்புடன்.

‘‘ஏன்டி மஞ்சு, உனக்கு உன்ர மனச்சாட்சி குத்துதா?’’ தோழியைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே தொடரவும் செய்தாள்.

‘‘வேணாமடி மயூ, வேணாம்! தேவையிலாமல் கதைச்சு வீணா நாம சண்டை போடுறதில எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்ல.’’ கறார்க் குரலில் சிடுசிடுத்தாள் மஞ்சு.

‘‘ஓமோம்! உனக்குத் தேவை இல்லாமல் சண்டை போடுறதோ, மாதக் கணக்கில முகத்தத் திருப்பி வச்சிருந்து கஷ்டப்படுத்திறதோ கொஞ்சமும் விருப்பமில்லைத் தான். இது இத்தினை வருசங்களா உன்னோட ஒன்றா இருக்கிற எங்களுக்குத் தெரியாமல் இருக்குமா சொல்லு?’’ எள்ளல் குரலில் கொஞ்சமும் சளைக்காமல் திருப்பிக் கொடுத்தாள் மயூ.

தோழிகள் இருவரும் மாறிமாறி மறைமுகத் தாக்குதலைத் தொடங்கியிருப்பதைப் பார்த்த ஸ்ரீ, இது இப்போதெல்லாம் அடிக்கடி நடப்பதென்பதால் தன்னுள் சலித்துக் கொண்டவள், ‘‘மயூ, கொஞ்சம் பேசாமல் இருப்பா; தேவையில்லாமக் கதைச்சிக் கதையை ஏன்டி வளர்க்கிறீங்க?’’ கடிந்து கொண்டவள், மஞ்சுவை ஆதரவாய்ப் பார்த்து, ‘‘எனக்குத் தெரியும் டீ, என்ர மஞ்சுவின் மனம் கல்லில்லை என்று!’’ என்றாள், கண்கள் கலங்க.

அதைக் கேட்டிருந்த தோழிகள் இருவரின் கண்களும் கலங்கியது. கலங்கும் தன் கண்களை மறைத்துக் கொண்டு தலை குனிந்தவளைப் பார்த்த ஸ்ரீ , ‘‘மஞ்சு, நீ எப்பவும் போல தலை நிமிர்ந்தே இரடி. இப்ப ஏன் தலையைக் குனியிறாய்? எல்லாம் சரிவரும் டீ; பொறுத்தார் பூமி ஆழ்வார்.’’ என்றாள், பெரிய மனிசியாய்.

‘‘கடவுளே போதும் டீ...போதும்! இதோட நிறுத்து. எனக்கு இன்னும் இருவது பக்கங்கள் தான் இருக்கு, வாசிச்சிட்டு வாறன். அதுக்குப்பிறகு உங்கட போதனையைத் துவங்குங்க!’’ சமாளிப்பாகச் சொல்லி கதைப் புத்தகத்தில் ஆழ்ந்த மஞ்சு, திடீரென்று நிமிர்ந்து, ‘‘நீ அப்பிடியே சத்தியன் அண்ணாவோட ஒரு டுயட் பாடிட்டு கெதியா டைமுக்க திரும்பி வா மயூ.’’ புன்முறுவலுடன் சொன்னவள் திரும்பவும் கதைப்புத்தகத்தினுள் ஆழ்ந்தாள்.

மயூ சத்தியன் திருமணம் பேசி முடிவு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொண்ட நண்பிகள், அன்று மஞ்சுவின் பிரச்சனையில் கலவரப்பட்டுக் கொண்டிருந்ததால், அதைப் பற்றித் தூண்டித் துருவி ஆராயவில்லை.
அந்த மட்டில் மஞ்சுவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்ட மயூ, வீட்டினரே பேசி முற்றாக்கியதா என அவர்கள் வினவ, ‘ஆமாம்’ என்று தலையாட்டி ஒரு மாதிரிச் சமாளித்துக் கொண்டாள். ‘அதெல்லாம் பிறகொரு நாளில் தெரியவராமலா போகப் போகுது.... அப்ப சமாளிக்கலாம்!’ என்ற நினைப்பில்

அன்றைய விரிவுரைகள் மூன்று மணியுடன் முடிந்ததும் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தோழிகள் மயூ வீட்டருகில் வந்த போது தான், தமக்கு முக்கியமாகத் தேவையான புத்தகம் ஒன்று இன்றைக்கு நூலகத்துக்கு திரும்பி வருவதால், அதை எடுத்து வைக்கும் படி நூலகரிடம் சொல்லியிருந்ததையும், அதை வாங்குவதற்கு தாம் மறந்து வந்து விட்டதையும் உணர்ந்தனர் .

‘‘இப்ப என்னடி செய்யிறது? மழை வேற வரும் போல இருக்கு! இண்டைக்கு அண்ணி வேலையால வர கொஞ்சம் நேரம் ஆகுமெண்டு சொன்னவா. அதனால திவிகுட்டியை நான் தான் சமாளிக்க வேணும். கீதாவுக்கும் வகுப்பிருக்கு....’’ யோசனையுடன் சொன்னாள் மஞ்சு.

‘‘எனக்கும் வீட்டில கொஞ்சம் வேலையிருக்கடி! நாளைக்கு ராகவன் அங்கிள் ஆட்கள் கொழும்புக்குப் போறதால, அண்ணா வீட்டுக்கும் சத்தியன் வீட்டுக்கும் கொஞ்சம் பலகாரம் செய்து கொடுப்பமெண்டு அம்மா சொன்னாரடி. தனியாச் செய்யிறதெண்டா அம்மா பாவம்டி...’’ மயூவும் தன் பங்கிற்கு யோசனையுடன் இழுத்தாள்.

அந்தப் புத்தகம் இவர்களுக்கு முக்கியமாகத் தேவையாக இருக்கவே, ‘‘சரி பரவாயில்லை விடுங்கடி. அம்மாவுக்கு ஃபோனில சொல்லீட்டுக் கெதியாப் போய் எடுத்துக்கொண்டு வாறன். இரவைக்கு எழுதிட்டு, உங்களுக்கு காலம தாறன்.’’ தீர்வு சொன்ன ஸ்ரீ, கைபேசியில் தன் தாய்க்கு அழைத்துச் சொன்னவள், சைக்கிளைத் திரும்பவும் பல்கலை நோக்கித் திருப்பினாள்.

‘‘கவனம்டீ! போயிட்டுக் கெதியா வா. மழை வேற கொட்டப் போகுது! காற்றும் பலமா அடிக்குது!’’ என்ற தோழிகள் தத் தம் வீடுகளுக்குச் சென்றனர்.

விரைந்து சென்ற ஸ்ரீ, பல்கலைக்குள் நுழையும் பொழுதே மழையுடன் தான் நுழைந்தாள். நூலகத்தின் முன்பாகத் தன் சைக்கிளை நிறுத்திவிட்டு, இலேசாய் நனைத்தவாறே ஓடிச் சென்று நூலகத்தினுள் நுழைந்து கொண்டாள்.

'ச்சே..என்ன மழையோ! இந்தக் காற்றில குடையும் பிடிக்க ஏலாது. அதுவும் சைக்கிள் ஓடிக் கொண்டே! ப்ச்... ரெயின் கோட்டைக் கொண்டு போ என்று அம்மா சொன்னதையும் நான் கேட்க இல்ல; நனைஞ்சு கொண்டு தான் திரும்பிப் போக வேணும்!’ எண்ணியவாறே உள்ளே சென்றவள், தனக்குத் தேவையான இன்னும் சில புத்தகங்களுடன் நூலகரிடம் சொல்லி வைத்திருந்த புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவளுக்கு, ‘ஹைய்யோ’ என்றிருந்தது!

சுழன்றடிக்கும் காற்றுடன் கைகோர்த்திருந்த வர்ணபகவான், தன் பலத்தைக் காட்டியே தீருவேன் என்றவகையில் பலமாகவே தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தான். நேரமும் மாலையாகி இருந்ததுடன், மழை இருட்டும் சேர்ந்து கருமை படரத் தொடங்கியிருந்தது!

‘‘திரும்பி வராமல் இருந்திருக்க வேணும்; இல்லையெண்டா வீட்ட போய் தம்பியைச் சரி கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம்.’’ முணுமுணுத்துக் கொண்டே, இலேசான தயக்கத்தோடு நூலக வாசலில் சிறிது நேரம் தாமதித்தாள் ஸ்ரீ.

‘இப்படியே நிண்டு கொண்டிருந்தா இன்னும் இருட்டிரும்; நனைஞ்சு கொண்டே போய்ச் சேருவம்.’ முடிவெடுத்து வெளியில் இறங்க எத்தனித்தவளை, ‘‘ஸ்ரீ! என்ன தனியா வந்திருக்கிறீர்?’’ என்ற குரல் தயங்கி நின்று, குரலுக்குரியவரை இனம் கண்டவாறே, குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க வைத்தது.

நூலகத்திலிருந்து வெளியேறியவளை தற்செயலாகத்தான் கண்டிருந்தான் ராம்.

‘இந்த மழையில், அதுவும் தனியாக வந்திருக்கிறாளே!’ என்ற யோசனையோடு, அவள் என்ன செய்கிறாள் என்று பின்னால் நின்று கவனித்தவன், தயக்கமாக நின்றவள் ஒருமுடிவோடு வெளியில் செல்ல எத்தனிக்க, ‘இந்த மழையில எப்படிப் போவாள்?!’ என்ற எண்ணத்தில் தான் அழைத்து நிறுத்தினான். அவள், மழையில் நனைந்தவாறே தனியாகச் செல்வதை அவன் மனம் சிறிதும் அனுமதிக்க மறுத்தது.

கண்டது முதல் அவளால் சிறிது சிறிதாய்க் கவரப்பட்டவன், அவளிடமும் அதைப் பற்றிக் கதைப்போம் என்று முடிவெடுத்திருந்த நேரத்தில், உயிர் நண்பன் நரேனின் காதலே கேள்விக் குறியானதில், அதில் ஏற்பட்ட பிரச்சனைகளைப் பார்த்துத் தன் எண்ணத்தை அப்படியே அடக்கிக் கொண்டான். இவள்பால் ஏற்பட்ட ஈர்ப்பை, தன் விருப்பமின்றியே தன்னுள் அடக்கிக் கொண்டவன், நிச்சயம் சந்தோசத்தையோ ஆறுதலையோ உணரவில்லை தான்.

ஸ்ரீயும், தானும் தன் பாடுமாய் விரிவுரைகளுக்கு வந்து போனாலும், ராமின் பார்வை தன்னை துளைப்பதையும் தொடர்வதையும் அப்பப்போ கண்டாலும் அதைப் பற்றிப் பெரிதுபடுத்த முனையவில்லை. அவள் சுபாவம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மஞ்சுவின் விடயமே அவர்களை எதையும் சிந்திக்க விடாமல் கட்டிப் போட்டிருந்தது.

ராமையும் ஸ்ரீயையும் ஆரம்பத்திலிருந்து பகிடி செய்துகொண்டிருந்த மஞ்சுவும், தன்னுள் தன் கவலைகளுடன் சுருண்டு விட்டதால், தோழியில் அடிக்கடி ஆதுரமாய்ப் பதிந்து மீளும் ராமின் பார்வைகளை அவளாலும் இனம் காண முடியவில்லை.

தோழிகள் மூவருமாய் ராம் வீட்டுக்கு அடிக்கடிப் போய் வந்தாலும், ஸ்ரீ ராமுடன் தேவையற்றுக் கதைப்பதில்லை. அவள் மனதில் ஆரம்பத்தில் அவனால் ஏற்பட்ட சலனம் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அழிந்து விட்டதா என்றால் அதற்கும் அவளிடம் தக்க பதில் இல்லை. அப்படிச் சொல்வதை விட அதைப் பற்றியெல்லாம் ஆராய்வதில், அவள் தன் நேரத்தை செலவிடவில்லை என்பதே உண்மை.

தன் மனதில் அவள் பற்றிய நினைவுகள் அழிக்க முடியாதவாறு நிலையாகப் பதிந்து விட்டதை எப்பவோ உணர்ந்திருந்த ராம், தானா இப்படி என ஆச்சரியப்பட்டாலும், தன் முதல் காதலால் ஏற்பட்ட ரணம் முற்றாக அழியாவிடினும், தற்போது வெகுவாய் மறைந்திருப்பதையும், ஸ்ரீயுடன் தன் காதலைப் பகிராமலேயே அவளுடன் நெருக்கமாய் உணர்பவன், இன்று அவளைத் தனியாகச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சமும் நழுவவிட விரும்பாமல், தான் கேட்டதற்கு பதில் சொல்லாது முழித்துக் கொண்டு நிற்பளை நெருங்கினான்.

‘‘என்ன ஸ்ரீ, எங்கே உம் பொடி கார்ட்ஸ்...வாலுகள்?’’ கேலியாகக் கேட்க, அவனை இலேசாய் முறைத்தவள், எதுவும் சொல்லாது வெளியே பார்வையைப் பதித்தாள்.

‘‘ஏன் ஸ்ரீ, இண்டைக்கு மௌன விரதமா? கதைக்க மாட்டீங்களா? இல்லையெண்டா ...’’ மீண்டும் கேலியாகவே பேச்சைத் தொடர்ந்தான் ராம்.

‘‘இல்ல சார்...நேரமாச்சி. நான் போயிட்டு வாறன். மஞ்சுவைக் கேட்டீங்க என்று சொல்லுறன்.’’ அவசரமாக இடையிட்டுச் சொன்ன ஸ்ரீ, வெளியில் இறங்குவதற்காய் படியில் கால் வைக்க, ஓரெட்டில் நெருங்கி அவள் கரம் பற்றித் தடுத்தான் ராம்.

‘‘கொஞ்சம் நில்லும்; நான் எப்ப மஞ்சுவக் கேட்டன்?! நீர் என்ன.. கதைச்சுக் கொண்டிருக்கேக்க இடையில விட்டுட்டு ஓடுகிறீர்?’’ அவளுடன் மல்லுக்கு நிற்கும் உத்தேசத்தில் வந்தவன் போல் மிகச் சாதாரணமாக பேச, பயம் கலந்த அதிர்வுடன் நூலகத்தின் உள்ளே திரும்பிப் பார்த்தாள் ஸ்ரீ.

அதேநேரம், ‘‘சா..ர்.. முதல் கையை விடுங்க...'' தடுமாறியவாறே கையை உதற, அவன் பிடி இறுகியது. அவளின் முறைப்பைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை அவன்.

‘‘இந்த மழையில, அதுவும் சைக்கிளில...இருட்டியும் போச்சு.. உமக்கு என்ன விசரா?’’ என்றவன், ‘‘பேசாம என்னோட வீட்டுக்கு வாரும், நான் கொண்டு போய் விடுறன்.’’ என்றான் முடிவாக.
‘‘ஹைய்யோ சார், உங்களுக்குத் தான் விசர்; முதல் என்ர கையை விட்டுட்டுக் கதையுங்க.’’ பதறிவிட்டாள் ஸ்ரீ.

அவளின் பதற்றத்தில் துடித்த உதடுகளையும், கலங்கிய விழிகளையும் இரசித்தபடி மெதுவாகப் பிடியைத் தளர்த்தி அவள் கரத்தை விட்டவன், ‘‘பயப்படாதேயும் ஸ்ரீ, இங்க ஒருத்தரும் இல்லை; யாரும் பார்க்கவும் இல்ல.’’ அவன் முகத்தில் விரிந்த முறுவல் பளிச்சிட்டது.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
‘லூசு! மறை கழன்ற லூசு! இதெல்லாம் ஒரு லெக்ஷ்ரர்! மடச்சாம்பிராணி! காலில் கிடக்கிறதால வேண்டியிருப்பாய்; ஆன்ட்டியோட முகத்துக்காகப் பார்க்கிறன். அதோடு, இளிப்பு வேற வேண்டிக் கிடக்குதா?’ வெளியில் கொட்டும் மழைக்குப் போட்டியாய் மனதுள் அர்ச்சனை மழை பொழிந்தாள் ஸ்ரீ.

உள்ளே குமுறும் ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டவள், இன்னமும் ஆர்வமாய் அவன் தன் முகத்தையே பார்த்திருப்பதைப் பார்த்து, ‘இப்ப ஏன் இந்தப் பார்வை பார்க்குது?’ மனதில் சினக்க முற்பட்டாலும் சட்டென்று அவன் விழிகளைத் தவிர்த்து விலகியது அவள் நயனங்கள்!

இதுவரை, மழைக்குளிரால் சில்லிட்ட அவள் உடலும் உள்ளமும் அவன் பார்வையாலும் செய்கைகளாலும் மெல்ல மெல்ல நடுக்கம் கொண்டது.
சட்டென்று சமாளித்துக் கொண்டாள் ஸ்ரீ. அக்கணம், இத்தனை நாள் தன் விரிவுரையாளர் என்று மனதில் சுமந்த மரியாதையைக் கடந்திருந்தாள் அவள். அதை அவள் சற்றும் உணரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை தேவையில்லாது ஒத்தவார்த்தை பேசியிராதவள், யாரோடும் இலேசில் கோபம் கொள்ள நினைக்காதவள், இவனுடனான முதல் சந்திப்பில் சீறியது போலவே சண்டைக்கோழியாகச் சிலிர்த்துக் கொண்டாள்.

‘‘இங்க பாருங்க, எப்படி வந்தனோ, அப்படியே போகவும் தெரியும்; உங்கட உதவி தேவையில்லை. கேட்காமலேயே உதவ நினைச்ச உங்கட நல்ல மனசுக்கு நன்றி.’’ வெட்டும் பார்வையோடு சொன்ன வேகத்தில் படிகளில் இறங்கத் தொடங்க, தானும் இணைந்து இறங்கிய ராம், அவள் வெளியில் கால் வைக்கவும், மீண்டும் அவள் கரத்தைப் பற்றி நிறுத்த, சட்டென்று மூண்ட சினத்துடன் அவனை முறைத்தாள் ஸ்ரீ.

‘‘சார்...வேணாம். ஒரு அளவுக்குத் தான் எல்லாருக்கும் மரியாதை குடுக்கலாம். நீங்க என்ன செய்றீங்க என்று உங்களுக்கு விளங்க இல்லையா? யாராவது பார்த்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பீனம்? உங்களுக்கென்ன...'' என்றவளை, மேலும் கதைக்க விடாமல் தொண்டை அடைத்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கியிருக்க, கண்களோ, கசிந்த கண்ணீரை வெளியேற்றவா வேண்டாமா என்று வாக்குவாதத்தில் இறங்கியிருந்தன.

‘‘ஹைய்யோ ஸ்ரீ, லூசா நீர்? ஸாரி ஸாரிம்மா.. இந்தளவுக்கு உம்மை நான் கஷ்டப்படுத்த நினைக்க இல்ல. நான்...உம்மை...வேணாம் விடும் ... மன்னிச்சிக் கொள்ளும்..’’ அவன் வாய் தடுமாறியபடி சொன்னாலும், அவன் கரம் பிடித்த பிடியை விடவேயில்லை.

அந்த நேரம் பார்த்து, அவளோடு படிக்கும் பையன்கள் சிலர் நூலகத்திலிருந்து வெளியில் வர, சட்டென்று அவளை மறைத்தவாறு நின்று கொண்டான் ராம்.

‘‘இங்க பாரும் ஸ்ரீ, கிட்டத்தட்ட ரெண்டு வருசங்களாக என்னைத் தெரியும் தானே? உமக்கு என்னில நம்பிக்கை இருந்தா, பேசாமல் இதிலயே நில்லும்; கையை விட்டதும் ஓடாதேயும்.’’ அடிக்குரலில் தீவிரமாய்ச் சொன்னவன், மெல்ல அவள் கரத்தை விட்டான்.

இவர்களை நெருங்கிய அப்பையன்கள், ‘‘சார், என்ன இங்க?’’ எனத் தொடங்கி, அவனருகில் நின்றவளைக் கண்டதும், அப்பட்டமாக முகத்தில் ஆச்சரியத்தை காட்டினார்கள். மறுகணம், ‘‘அப்ப, சார் நாங்க வாறம்...’’ என்றவாறே நகர,‘‘நாளைக்குப் பார்ப்பம். போயிட்டு வாங்க..’’ அவர்களின் விரிவுரையாளராக இயல்பாகச் சொன்னான் ராம்.

பின், தன் கையிலிருந்த தடித்த புத்தகங்கள் இரண்டையும் ஸ்ரீயிடம் நீட்டி, ‘‘இதை ஒருக்காப் பிடிச்சுக் கொள்ளும்.’’ அதே இயல்புடன் சொல்ல, அவளோ, தங்களையே திரும்பிப் பார்த்துக்கொண்டு செல்லும் பையன்களை நினைத்து உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தவள், ‘கடவுளே! இவன்கள் என்னவெல்லாம் நினைத்து, எப்படியெல்லாம் கதைகட்டப் போறான்களோ!’ மனதில் தவித்துக்கொண்டே, ராம் தந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டாள்.

‘இந்த மனிசனுக்கு மூளை தான் கெட்டுப் போச்சு! இவருக்கு சேட்டைக்கு நான் தான் கிடைச்சனா?’ அவள் திரும்பவும் மனதில் புலம்பிக் கொண்டிருக்க, ஒரு கரத்தால் தன் பெரிய குடையை அவளுக்கும் சேர்த்துப் பிடித்துக் கொண்டே, மறுகையால் கைபேசியில் செக்குரிட்டிக்கு அழைத்தவன், அவளின் சைக்கிளை ‘ஷெட்’டில் விடுமாறும், நாளை வந்து எடுப்பதாகவும் சொன்னவன், அப்பொழுதும் கலங்கும் விழிகளோடு தன்னையே பார்த்திருந்தவளை அன்பாய்ப் பார்த்து புன்னகைத்தான்.

‘‘என்ன? எனக்கு நல்லா திட்டித் தீர்த்தாச்சா? சரி பரவாயில்ல விடும். யார் திட்டினது? நீர் தானே? அதுக்கு உமக்கு எல்லா உரிமையும் இருக்கு; வாரும் போவம்.’’ வெகுவாகப் பழகிய நெருக்கமானவன் போல் கதைத்துக்கொண்டே நடக்கத் தொடங்கினான்.

‘இவரின் பேச்சும் நடத்தையும் கொஞ்சமும் நல்லா இல்லை. என்னைப் பற்றி இவர் என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறார்? பெரிசா உரிமைக் கதையெல்லாம் கதைக்கிறார்! இவேட வீட்டில சாப்பிடுறதால எதையும் கதைக்கலாம் என்று நினைக்கிறாரோ?’ உள்ளத்தில் கோபமும் கலக்கமும் கலக்க, அவன் புத்தகங்களைத் திருப்பி வாங்கிக் கொள்ளாததால் அவற்றையும் அணைத்துப் பிடித்தவாறு, மறுக்க முடியாது அவனோடு சேர்ந்து நடந்தாலும் ஒரு குடைக்குள் அவனோடு இணைந்து நடப்பதில் மிகவும் அசௌகர்யத்தையே உணர்ந்தாள் அவள்.

ஒருநாளும் இல்லாமல் இப்படி நடந்து கொள்பவனை, தப்பான பார்வையிலும் பார்க்க முடியவில்லை. முதல், அதற்கு அவள் மனம் சிறிதும் இசையவில்லை.எனவே, ஜாக்கிரதையாய் கொஞ்சம் தள்ளியே நடந்தவள், விஞ்ஞானப்பிரிவு நுழைவாயிளால் வெளியில் வந்து, முன்னால் இருந்த சிறு ஒழுங்கைக்குள் புகுந்து ராம் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

குடை பெரிதாக இருந்தாலும், தள்ளி நடந்து வந்தததால் கொஞ்சத் தூரத்திலேயே பாதி நனைந்து விட்டாள் ஸ்ரீ. அதைப் பார்த்தவன், ‘‘இங்க பாரும், இப்ப நீர் குடைக்குள்ள வராமல் நனைஞ்சு கொண்டு தான் வருவன் எண்டு அடம் பிடிச்சால்...’’ சொல்லி நிறுத்தி, தவிப்போடு நோக்கியவளை குறும்பாக ஆராய்ந்தான்.

கொட்டும் மழையும் குளிரும் இருளுமாக இருந்த சுழலில் முதல் முதல் மனதுக்குப் பிடித்தவளோடு இவ்வளவு நெருக்கத்தில் நடப்பத்தில் அவன் உள்ளமோ மகிழ்வு ஆரவாரத்தில் துள்ளியது. அவளை வம்பிழுத்துச் சீண்டும் எண்ணம் வெகுவாக எழுந்தது.

“இப்படித் தோளில் கைபோட்டு கூட்டிக் கொண்டு போவன்; எப்படி வசதி?’’ அவள் தோளைச் சுற்றிக் கரத்தைக் கொண்டு சென்றவாறே சொல்ல அதிர்வோடு விலகினாள் ஸ்ரீ.

“ஹேய்... சும்மா சும்மா; விளையாட்டுக்கு ஒருவார்த்தை சொன்னால்.. இப்படியா மழையில் நனைவீர்? கேட்டவன் கரம் அவளைப் பிடித்து குடைக்குள் இழுத்தது. அவன் செய்கையில் வெகுண்டாள் ஸ்ரீ.

“இங்க பாருங்க, உங்கட மனசில என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறீங்க?” கேட்டவள் குரல் உள்ளத்தைப் போலவே நடுங்கியது.

‘ஹ்ம்ம்... உன்னைத்தான் நினைச்சுக் கொண்டிருக்கிறன்!’ நா நுனியில் எட்டிப் பார்த்த வார்த்தைகள் ஏனோ வெளியில் வராது உள்ளே திரும்பின.

“இப்படியா ஸ்ரீ கோபப்படுவீர்! அட...ஒரு கதைக்குச் சொன்னன்; உம்மில என் கைபடவே இல்லை.” சமாளிப்பாகச் சொன்னவன் அவள் பார்வை சென்ற இடம் பார்த்ததும், தன் பிடியிலிருந்த அவள் கரத்தை மெல்லத் தளர்த்தினான். கூடவே நீண்ட பெருமூச்சும் சேர்ந்து வெளியேறியது.

“கொட்டுற மழையில நின்று சண்டைபோடுறதில எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, உமக்கு விருப்பம் எண்டா ...” மீண்டும் அவன் முகம் குறும்பில் பளபளத்தது.

“இல்லை, நேரகாலத்துக்கு வீடு போய்ச் சேரும் ஆசை இருந்தா குடைக்க நடந்து வாரும்.” என்றவன், என்ன செய்வதாக உத்தேசம் என்ற மாதிரிப் பார்த்தான்.

‘கடவுளே இன்றைக்கு நான் யாரில முழிச்சனோ! இந்தாளிட்ட வந்து மாட்டி இருக்கிறன்.’ என்று நினைத்தாலும், ஒரு போதும் இல்லாதவாறு கலகலப்பாக மலர்ந்து போய் அவன் கதைப்பதை ஆச்சரியமாகப் பார்த்தவள், என்ன தான் சாதாரணமாக இருக்க முயன்றாலும், அவன் கலகலப்பும் பேச்சுமே தன்னை எதுவோ செய்வதை உள்ளத்தில் ஓடிய கலக்கத்துடன் உணர்ந்து கொண்டாள்.

‘இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப் போகுதோ!’ கலக்கத்தோடு, மனதில் அவனை அர்ச்சனைகளால் குளிப்பாட்டியபடி, கொஞ்சமாக குடைக்குள் வர, அவனும் அதற்குப் பிறகு எதுவும் பேசாது நடந்தான்.


 

Rosei Kajan

Administrator
Staff member
#3
வீட்டு விறாந்தையில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த ராமின் பெற்றோர், மகன் ஸ்ரீயை அழைத்துக் கொண்டு வருவதைக் கண்டதும், தங்களுள் பார்த்துக் கொண்டெழுந்தவர்கள், பாதிக்கு மேல் இருவரும் நனைந்தவாறே வரவே,

‘‘ராஜா என்னய்யா, நல்லா நனைஞ்சு போனீங்களே ! வாடாம்மா ஸ்ரீ, இங்க பார் பிள்ள முழுசா நனைஞ்சிட்டாள்; கொஞ்சம் இரம்மா துவாய் கொண்டு வாறன்.’’ அவசரமாக எழுந்த ராதா,

‘‘இல்ல... இல்ல..நீரே பாத்ரூமுக்குள்ள போய் வடிவாச் சட்டையைப் பிழிஞ்சு தலையைத் துடையும். வாடா வா..’’ அவளை இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றவர், ‘‘பரவாயில்லை ஆன்ட்டி, இப்ப வீட்ட போறது தானே..’’ அவள் சொன்னதைக் கேட்காது,

‘‘நீ உள்ள போம்மா, நான் துவாய் கொண்டு வாறன்.’’ அவளை, குளியல் அறைக்குள் விட்டுவிட்டு அருகிலிருத்த அறைக்குள் நுழைந்தார்.

தாயுடன் செல்லும் அவளையே விழிகளால் தொடர்ந்த ராம், தன்னையே தந்தை பார்த்துக் கொண்டிருப்பதைக் கூடக் கவனிக்காது, தானும் உடை மாற்ற அறைக்குள் சென்றான்.

உடை மாற்றி வெளியே வந்த ராம், ஸ்ரீயுடன் தந்தையும் தாயும் அமர்ந்து கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், அவள் முன்பாக டீபோவில் வைக்கப்பட்டிருந்த பருத்தித்துறைவடையில்(தட்டைவடை) இரண்டைக் கையில் எடுக்க, ‘‘தம்பி, இந்த டீ உனக்குத் தான்யா, சூடாக் குடி.’’ என்று தாய் தந்த தேநீர்க் கப்பையும் வாங்கிக் கொண்டவன், கதைத்துக் கொண்டே ஸ்ரீயின் அருகில் சுவாதீனமாய் அமர்ந்து கொண்டான்.

அவன் செய்கையில் அதிர்ந்து விழித்த ஸ்ரீ, பதறிக்கொண்டு விருட்டென்று எழுந்தவள், ராதாவையும் ரத்தினத்தையும் தவிப்பாகப் பார்த்தவாறே ராதாவின் அருகிலிருந்த இருக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டாள்.

அப்போது தான், தான் செய்த செயலை உணர்ந்த ராம், தனக்கு வெகு இயல்பாய் வந்து விட்ட செயலால், அவர்கள் மூவருமே தன்னைக் குழப்பமாய் பார்ப்பதைப் பார்த்தவன், ‘ம்ம்ம்...என் பெண்டாட்டி பக்கத்தில உட்காரக் கூட எனக்குச் சுதந்திரம் இல்லை. முதல், அவளே முழியை இப்படி உருட்டுகிறாளே! ராம் உன் நினைப்பெல்லாம் கனவாகத்தான் போகுதோ!’ தன்னுள்ளே புலம்பியவன், அந்த புலம்பலின் வெளிப்பாடாக பெரிதாக பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.

அதைப் பார்த்து, ‘‘ராஜா, என்னய்யா என்ன விஷயம்? பெருமூச்சு பலமாய் இருக்கு!’’ கேலியுடன் வினவினார் ராதா.

‘‘ஆங்...ஒன்றுமில்லைம்மா. இந்த மழையை நினைச்சேனா...பெருமூச்சுத் தானாகவே வருது!’’ ஸ்ரீயை ஒருகணம் இரசனையாக வருடிய பார்வையுடன் சொன்னவன், வெகு ஆர்வமாய் சிற்றுண்டியைச் சுவைக்கத் தொடங்கினான்.

மகனின் செய்கைகளையே கண்காணித்துக் கொண்டிருந்த அவன் தந்தையின் பார்வையில், அவன் ஸ்ரீயைப் பார்த்த பார்வையோ தப்பாமல் விழுந்தது. அடுத்த கணம், அவர் பார்வை மனைவியின் பார்வையை சந்தித்து மீண்டது.

‘‘ஸ்ரீ, நான் கூட்டி கொண்டு வந்து விடுறன் எண்டு உம்மட அம்மாவுக்கு எடுத்துச் சொல்லிவிடும். பிறகு தேடப் போகீனம்.’’ திடீரென்று ராம் சொன்னதும், ‘‘அதெல்லாம் சொல்லியாச்சு; நீ முதல் வடையச் சாப்பிட்டு டீயக்குடி.” என்ற ராதா, தொடர்ந்து ஆவலுடன் அளவளாவத் தொடங்கினார்.

தேநீர் அருந்தி முடிய, ‘‘சரி வாரும் போவம்.’’ என்று எழுந்தவன், ‘‘கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டு வாறன்மா.’’ கார்ச்சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியேறி, காரை எடுத்து வீட்டு வாயிலில் நிறுத்த, ஒரு நாளும் இப்படி யாருடனும் போக வேண்டிய சந்தர்ப்பம் வராதாதாலும், கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை ராம் நடந்து கொண்ட முறை சரியில்லை என்பதாலும் மிகவும் தயங்கிக் கொண்டே, ‘எங்க ஏறுறது? முன்னுக்கா பின்னுக்கா?’ யோசித்தவாறே, மழை இன்னமும் நிற்காததால் ராமின் தந்தை ரத்தினத்துடன் குடைக்குள் வர, எட்டி முன் கதவைத் திறந்து விட்டு ‘‘ம்ம், ஏறும்..’’ என்றான் ராம்.
‘அங்கிள் ஆன்ட்டி எல்லாம் என்னைப் பற்றி என்ன நினைப்பீனமோ?’ கலக்கம் எழ, மிகவும் தயக்கத்துடன் ரத்தினத்தைப் பார்த்து, ‘‘போயிட்டு வாறன் அங்கிள்.’’ என்றபடி ஏறி அமர, தந்தையைப் பார்த்து ஒரு தலையாட்டலுடன் காரை கிளப்பியவன், ஸ்ரீயின் வீடு வரும் வரை அவளுடன் ஒரு வார்த்தை கூடக் கதைக்க இல்லை. அவளோ அவனிருந்த பக்கமே தலையைத் திருப்பவில்லை.

காருக்குள் மூச்சு முட்ட அமர்ந்திருந்தவள், வீட்டருகில் அவன் காரை நிறுத்தியதும், ‘ஹப்பாடா’ என்று நினைத்துக்கொண்டே இறங்க எத்தனிக்கையில், பின்னிருக்கையில் கிடந்த குடையை எடுத்து அவளிடம் கொடுத்தான் ராம்.

‘‘பரவாயில்ல, நான் ஓடிப் போயிருவன் .’’ மறுத்தாள் அவள். அவனோ ஒரு தாராளமான முறைப்புடன், ‘‘குடையப் பிடியும்..’’ என்றதும், ’இதப்பார்ரா... சார் கோபப்படுறாராமே!’ மனதுள் நகைத்துக் கொண்டவள், குடையை வாங்கிக் கொண்டே,
‘‘தேங்க்ஸ் சார், போயிட்டு வாறன். நீங்களும் கவனமாப் போங்க..’’ அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையைச் சந்தித்தவாறே, இயல்பாய்ச் சொல்லிக் கொண்டு இறங்கியவள், கதவை மூடாமல் அப்படியே கதவில் கைவைத்து குனிந்து அவனைப் பார்த்து, ‘‘சார்...நீங்க இவ்வளவு மினக்கெட்டு இந்தக் கொட்டுற மழையில, என்னில் இரக்கப்பட்டு வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டதற்கு தேங்க்ஸ். ஆனால்....’’ என்று இழுத்து, ஒரு முறைப்பை அவனுக்கு தாராளமாய் வழங்கினாள்.

‘‘இண்டைக்கு நீங்க என்னட்ட நடந்து கொண்டதற்கெல்லாம், உங்களுக்குக் கன்னம் பழுக்கத் தந்திருப்பன். ஆன்டியின் முகத்துக்காக உங்களைச் சும்மா விட்டன். ஆனா, எப்பவும் அப்படி இருக்கமாட்டன்... பத்திரம்..’’ கடுமையாச் சொல்லிக் கதவை அறைந்து சாத்தியவள், திரும்பியும் பார்க்காது வீட்டை நோக்கி விரைந்தாள்.

கட கடவென்று பொரிந்து விட்டு போகின்றவளையே வியப்பாய், மெல்லிய அதிர்வோடு பார்த்திருந்தான் ராம். சிறிது நேரத்தில் முகத்தில் மலர்ந்த புன்னைகையுடன், ‘‘பரவாயில்லையே, என் செல்லம் முழிப்பாத் தான் இருக்கிறாள்!’’ வாய்விட்டே சொல்லிக் கொள்ள, கைகளோ தன் கன்னத்தை தடவிப் பார்க்க, பெரிதாக வாய்விட்டு சிரித்தவன், அந்தச் சிரிப்புடனேயே காரைக் வீடு நோக்கிச் செலுத்தினான்.
 
#4
அட கதை சில பதிவுகளில் மிக வேகமெடுத்து செல்கிறதே.. அதுவும் ராம் மின்னல் தான் போங்க.. அருமை!! அடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன்....
 
#5
Wow super love scenes. சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது.😊😉😆
 

Rosei Kajan

Administrator
Staff member
#6
அட கதை சில பதிவுகளில் மிக வேகமெடுத்து செல்கிறதே.. அதுவும் ராம் மின்னல் தான் போங்க.. அருமை!! அடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன்....
உண்மையில் இது நான் எழுதி பழகிய கதை கௌரி .மயூ சத்யன் வச்சு காதல் என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தேன் . அதைத்தான் டெவெலப் செய்தேன் . இப்ப பார்த்தால் இன்னும் அழகாக எழுதலாம் என்று தோன்றும் . என்றாலும் அப்பிடியே இருக்கட்டும் என்று விட்டாச்சு. புத்தகமாகவும் இது வரவில்லை . லைட்டா கவலைதான் ஈபுக் போதும் என்று விட்டுட்டேன்
Wow super love scenes. சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது.😊😉😆
ஹா..ஹா..நன்றி அனுஷா
 
#7
உண்மையில் இது நான் எழுதி பழகிய கதை கௌரி .மயூ சத்யன் வச்சு காதல் என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தேன் . அதைத்தான் டெவெலப் செய்தேன் . இப்ப பார்த்தால் இன்னும் அழகாக எழுதலாம் என்று தோன்றும் . என்றாலும் அப்பிடியே இருக்கட்டும் என்று விட்டாச்சு. புத்தகமாகவும் இது வரவில்லை . லைட்டா கவலைதான் ஈபுக் போதும் என்று விட்டுட்டேன்

ஈபுக் தான் நிறைய பேரை இப்போ ரீச் ஆகுது. புத்தகம் என்றால் என்னை போன்ற நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்? தெரியவில்லை.. அதனால் நீங்க இப்ப டிரன்டில் அப்டேடடா இஇருக்கீங்க.. :)(y)
 
Top