அத்தியாயம் 14

K.Thanu

Active member
#1
நிலவு _ 14


அன்றைய நாளின் பத்தாவது முறையாக அலைபேசியை ஏதேனும் மெசேஜ் கால்ஸ் வந்திருக்கிறதா என்று ஆர்வத்துடன் பார்த்தாள் வந்தனா.அப்படி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை தான்.ஆனாலும் அவள் கண்ணும் மனமும் சும்மா இருக்காமல் நொடிக்கொரு தடவை போனையே வட்டமிட்டது.

இம்முறையும் அந்த சிறுதிரை அவளுக்கு வேண்டிய எதையும் காட்சிப்படுத்தாது போகவும் ச்சே என்ற சிறு சலிப்புடன் அதை தூக்கி முன்னால் இருந்த மேசையில் போட்டாள்.

ச்சே..என்னவாயிற்று இவனுக்கு. ஏன் கடந்த சில நாட்களாக அவளை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவே இல்லை.ஆம் அவள் மனது இவ்வளவு ஆர்வத்துடன் தேடுவது சேரனின் அழைப்பைத்தான்.சேரன் கடந்த சில நாட்களாக அவளுடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவே இல்லை. அவளின் அழைப்புக்களுக்கும் பதில் அளிக்கவில்லை.

கடந்த சில நாட்களாக அவனின் குரலைக் கேட்காமல் அவனுடன் பேசாமல் என்னவோ போல் இருந்தது அவளுக்கு.ஏதோ திடீரென வாழ்க்கை வண்ணம் இழந்து போனதாக ஏதோ ஒரு சோர்வும் சலிப்பும் தன்னுள் குடியேறி இருப்பதை உணர்ந்தாள் வந்தனா.

ச்சே ..எனக்கு என்னவாயிற்று??? அவளுக்கு அவன் யார்?? அவன் விடயத்தில் இதுவரை அவள் நடந்து கொண்டது எல்லாமே தலைகீழாக தான் இருந்திருக்கிறது. முதன் முதலில் அவனைக் கண்ட போது நடு வீதியில் ஒரு ஆண்மகன் என்றும் பாராமல் அவனைத் துரத்தி போய் பேசியதில் இருந்து உங்கள் தங்கையை நான் பார்த்துக்கொள்வேன் கவலைப்படாதீர்கள் என்று வாக்கு கொடுத்தது வரை.................

சரி முதலில் தான் சேராவுடன் புகைப்படத்தில் பார்த்த நபராயிற்றே அவன் அவளுக்கு யார்? என அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் போய் பேசினாள் என்றாலும் அவன் சேராவின் அண்ணன் என்று தெரிந்தவுடன் அத்துடன் பேச்சை முடித்துவிட்டு வந்திருக்கலாம் தானே?? அதை விட்டு தான் ஏதோ பெரிய மனுசி போல உங்கள் தங்கையை நான் பத்திரமாக பார்த்துக்கொள்வேன் என்று வலிய போய் அவனுக்கு வாக்கு கொடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன??

அப்போது அந்த தருணம் அவன் முகத்தில் தோன்றிய சிறு புன்னகை அதற்காகவே எதுவும் செய்யலாமோ!!!!

ம்ஹும்..வேண்டாம் வந்தனா வேண்டாம்.உன் எண்ணம் போகும் போக்கே சரி இல்லை.உன் நினைவில் வருவதற்கு கூட தகுதி அற்ற ஒருவன் என்று அவன் தங்கையினாலேயே விமர்சிக்கப்பட்டவன். அவன் எப்படி நல்லவனாய் இருக்க முடியும்?? சும்மா கண்டபடி மனதை அலைபாய விடாதே வந்தனா.

ஹ்ம்ம்...ஆனாலும் அந்த கம்பீர முகத்திற்கு பின்னால் தெரிந்த ஒரு சோகம் அவள் நெஞ்சை காரணமின்றி ஏதோ செய்கிறதே!!! அவனை அவளால் வெறுக்க முடியுமா??

அவள் என்ன எண்ணுகிறாள்?? அவளால் அவனை வெறுக்க முடியாதென்றால் அவள் அவனை நேசிக்கிறாளா??? அவனின் குரலைக் கேட்காமல் இந்த நான்கு நாட்களாக அவள் தவிக்கும் இந்த தவிப்பு தான் காதலா?? மறுநாள் அவனை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவள் உடலில் ஒரு மகிழ்ச்சி அலையை உற்பத்தி செய்யுமே அது தான் காதலா??
கடவுளேஏஏ !!! என்றபடி குழம்பிய தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்தாள் வந்தனா.

........................................................................................................................................................
 

K.Thanu

Active member
#2
ஹே ஸ்வீட்டி...அந்த ரெட் கலர் சாரியையும் எடுத்துக்கோ .. அந்த நிறம் உனக்கு மிகவும் நன்றாக இருக்கும் செல்லம் ...பணத்தைப் பற்றி கவலைப்படாதே!!!!! டியர். ..
அது ஒரு ஷாப்பிங் மால் என்பதையும் மறந்து அப்படி ஒரு பொது இடத்தில் சற்றும் கூச்சமின்றி சத்தமாக ஒரு பெண்ணிடம் வழிந்துகொண்டிருந்த அந்த ஆண்குரலில் சற்று எரிச்சலடைந்த நிலா யார் இந்த இங்கிதமில்லாத பிறவி என்ற எண்ணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் உடல் விறைத்து நிமிர்ந்தது.

கடந்த சில மாதங்களாக சற்று சமனப்பட்டிருந்த அவள் மனதின் அடி ஆழத்தில் அமிழ்ந்து போய் இருந்த அக்கினி மெல்ல மெல்ல மேலெழும்ப தொடங்கியது. அவள் மனதில் தோழி ஜானுவின் பூ முகம் சிரிப்புடன் வந்து போனது.

நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறேன் டி நிலா.என்னவர் என்னைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறார் தெரியுமா. ஆரம்பத்தில் வீட்டை அம்மா அப்பாவை எதிர்த்து இப்படி ஓடி வந்தது சற்று உறுத்தலாய் தான் இருந்தது. ஆனால் இப்போது அந்த கவலை உறுத்தல் எதுவும் இல்லை.இன்பாக்ட் நான் என் பிறந்த வீட்டையே மறந்து விட்டேன் என்றால் பார்த்துக்கோயேன்!!!!!!!! அவ்வளவு தூரம் ஆகாஷ் என் மீது அன்பைப் பொழிகிறார்டி.அவர் உயிரே நான் தானாம்.என்னைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறார்.
அவள் தோழியின் குரல் காதுக்குள் மகிழ்ச்சியும் பெருமையுமாய் கலகலத்தது.

அப்படி அவள் தோழியால் புகழப்பட்ட அவளுடைய அந்த அருமைக் கணவன் தான் இன்று சற்றும் உறுத்தல் இன்றி பொது இடத்தில் இன்னொரு பெண்ணிடம் வழிந்துகொண்டிருக்கிறான். அங்கு இவன் பெற்ற இரு பிள்ளைகளும் கூடவே இவனை காதலித்ததை தவிர வேறு எந்த பாவமும் செய்யாத இவன் மனைவியும் இவனை நம்பிய பாவத்திற்காக அவள் பிறந்த வீட்டில் இடி சோறு தின்றுகொண்டிருக்க இவன் என்ன வேண்டுமோ வாங்கிக் கொள். பணத்தைப் பற்றி கவலைப்படாதே கண்ணே என்று இன்னொருத்தியிடம் வழிந்து வழிந்து வசனம் பேசிக்கொண்டிருக்கிறான்.

இவன் எல்லாம் என்ன ஜென்மம். நாய் ஜென்மம்.இவங்களுக்கெல்லாம் மனசு என்ற ஒன்று இல்லவே இல்லையா.நம்பி கூட வந்தவளைக் கைவிட்டுவிட்டு அதைப்பற்றி சற்றும் உறுத்தல் இன்றி இன்னொருத்தியுடன் உல்லாசமாக பொழுதைக் கழித்துக்கொண்டு.............ச்சே...

சேரநிலாவின் உடலில் கோபம் அலையலையாய் பெருக விரைந்து அவனை நெருங்கியவள் அவன் புருவம் சுளித்து அவளைப்பார்க்கும் போதே பொறுக்கி ராஸ்கல் நீயெல்லாம் ஒரு மனிதனா என்று சீறியவள் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.


அவளிடமிருந்து இதை சற்றும் எதிர்பார்க்காத ஆகாஷ் உடன் சுற்றியிருந்த கூட்டமும் சேர்ந்து ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. எரிந்த கன்னத்தைப் பற்றியபடி கோபத்துடன் நிமிர்ந்த ஆகாஷ் ஏய்..... யார் நீ?? எதற்காக என்னை அறைந்தாய் என்று கோபத்துடன் சீறவும் அதற்கு சற்றும் குறையாத கோபத்துடன்

ஒ ..நான் யாரென்று கூட மறந்து போய்விட்டதா?? அது சரி தாலிகட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளைகளையுமே மறந்த நீ என்னை நினைவு வைத்திருந்தால் தான் ஆச்சரியம் என்றாள் குத்தலாக..
ஹே...நீ... நீங்கள்...ஜானுவின் தோழி நி...நிலா தானே ...ஆனால்...

அட பரவாயில்லையே ஜானு என்று அவளின் செல்லப்பெயர் கூட உனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

லுக் மிஸ் நிலா.என் பெர்சனல் விடயத்தை இப்படி பொது இடத்தில் விமர்சிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

என்னது பெர்சனல் விடயமா?? நீ காதல் என்ற பெயரில் என் தோழியின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டுப் போவாய்.நான் அதைப் பார்த்து அது உன் சொந்தவிடயம் என்று ஒதுங்கிப்போக வேண்டுமா?? அதற்கு வேறு யாரையாவது பாருடா முட்டாள்.


ச்சே ..நீயெல்லாம் ஒரு மனிதனா?? உன்னையே நம்பி உன் பின்னால் வந்தவளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய உன்னால் எப்படிடா முடிந்தது?? நம்பியவர்களை ஏமாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமா உங்களுக்கெல்லாம்?? உங்களை நம்பியவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய மன வலியைக் கொடுக்கும் என்று தெரியுமாடா உங்களுக்கெல்லாம்?? ஹ்ம்ம்...அதெல்லாம் புரிய மனசு என்ற ஒன்று வேண்டும்.உங்கள் ஆண் ஜென்மத்துக்கு தான் அப்படி ஒரு பொருளே இல்லையே!! என்று கோபத்துடன் பொரிந்தாள்.

இதோ பாருங்கள் நிலா.நான் ஒன்றும் உங்கள் தோழியைக் கைவிடவில்லை.அவளையும் பிள்ளைகளையும் கைவிடும் எண்ணமும் எனக்கு எப்போதும் இருந்தது இல்லை.அவள் என்னுடன் இருந்திருந்தால் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் வேண்டிய அனைத்தையும் செய்து என்னால் அவளை நன்றாகவே பார்த்திருக்க முடியும்.ஆனால் அவள் தான் திமிர் பிடித்து என்னைவிட்டு விலகிப் போனாள்.இதில் என் தவறு எதுவுமே இல்லையே.

ஹ்ம்ம்...வீட்டில் மனைவியை வைத்துக்கொண்டு நீ இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்துவாய்.அது தெரிந்தும் அவள் நீயே கதி என்று உன் காலைப் பிடித்துக்கொண்டிருந்தால் அவள் பத்தினி.தன்மானம் கொண்டு விலகினால் அவள் திமிர் பிடித்தவளா?? உங்கள் மனதில் பெண்களைப் பற்றி என்ன தான்டா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?? அவர்கள் முதுகெலும்பே இல்லாத கோழைகள் என்றா அல்லது தன்மானம் சுயகௌரவம் என்று எந்த உணர்ச்சியுமே இல்லாத ஜடங்கள் என்றா??? அவர்களும் மனுசர்கள் தான்டா. ஒன்றும் கல்லில்லை.
 

K.Thanu

Active member
#3
ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எதிர்காலம் குறித்து ஆயிரம் கனவுகள் கற்பனைகள் இருக்கும். வளமான வாழ்க்கை வேண்டும்.அழகான அன்பான கணவன் வேண்டும்.இப்படி எண்ணற்ற கனவுகள் இருக்கும்.ஆனால் அது அத்தனையிலும் முதன்மையாய் இருப்பது எது தெரியுமா?? தன கணவன் தனக்கு மட்டுமே..தன்னவனாய் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான். வேறு எந்த விடயத்தில் ஏமாற்றம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள்.ஆனால் இந்த விடயத்தில் ஏமாந்தால்..அதுவும் உயிராய் நேசித்தவனிடமிருந்து இப்படி ஒரு துரோகத்தை சந்தித்தால் அவள் தாங்கிக் கொள்ளவே மாட்டாள் டா.

நீ செய்த இதே துரோகத்தை ஜானு உனக்கு செய்திருந்தால் உன் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று ஒருகணம் ஒரேகணம் எண்ணிப்பார்.என்ன முகம் அஷ்டகோணலாய் மாறுகிறது.அப்படி எண்ணிப் பார்க்க கூட உன்னால் முடியவில்லை அல்லவா?? ஹ்ம்ம் நீங்கள் ஆம்பிளை என்ற போர்வையில் என்ன வேண்டும்னாலும் கூத்தடிபீர்கள் ஆனால் உங்கள் மனைவி மட்டும் பத்தினித் தங்கமாய் இருக்க வேண்டும் அப்படித்தானே??


ஹ்ம்ம்..ஜானு உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் அவளுக்கு எப்படி உன்னால் இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிந்தது.உன்னால்....அவள் பட்ட வேதனை.....கஷ்டம்...கோபத்தில் பொரிந்து கொண்டிருந்த நிலாவின் குரல் தோழியின் நினைவில் தழுதழுக்க ஆத்திரத்துடன் விழிநீரைச் சுண்டி விட்டவள்..தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஹ்ம்ம்... இதெல்லாம் புரிய மனசு என்ற ஒன்று வேண்டும்.அது இல்லாத உன்னிடம் பேசுவதே வீண் என்றவாறு திரும்பி நடந்தாள்.

அவளையே வெறித்தபடி நின்றிருந்தான் ஆகாஷ்.அதே மோலில் இருந்த டோய்ஸ் ஷாப்பில் வசந்தின் குட்டிப்பெண்ணுக்காக பார்பி பொம்மை ஒன்றை வாங்கிக்கொண்டு திரும்பிய இனியன் இந்த காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான்.

ஒரு பொது இடத்தில் இவ்வளவு உணர்சிவசப்பட்டு நடந்து கொண்டது நிலாவா??? அவள் மனதில் உள்ள கோபத்தீ இப்போது நீறு பூத்து உள்ளது.அதை விசிறிவிட சிறு காற்று போதும் அண்ணா. வந்தனா கூறியது அவனுக்கு நினைவு வந்தது. அவசரமாக நிலா சென்ற பாதையில் விரைந்தான்.அவன் வாசலை நெருங்கும் போதே நிலா வெளியே வீதியில் இறங்குவது தெரிந்தது.அவசரமாக கார் பார்க்கிங் சென்று காரை எடுத்தவன் அவள் சென்ற பாதையில் விரைந்தான்.

நிலாவின் உடல் ஆத்திரத்திலும் உணர்வுக் கொந்தளிப்பிலும் நடுங்கிக்கொண்டிருந்தது. என்ன தைரியம் அந்த பொறுக்கி ராஸ்கலுக்கு. அவள் தோழி ஜானுவை தன்னுடைய துரோகத்தால் கிட்டத்தட்ட சாவின் விளிம்புவரை தள்ளியவன் சற்றும் உறுத்தலோ கூச்சமோ இன்றி தன் தவறை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவர்களுக்கெல்லாம் மனச்சாட்சி என்பதே கிடையாதா?? அவள் விழிகளுக்குள் நிலா ...நிலா..என்னால் அவரின் இந்த துரோகத்தை தாங்கவே முடியவில்லையேடி...இப்படி ஒரு துரோகத்தை எனக்கு செய்து கொண்டு எப்படி என் முகத்தைப் பார்த்து அவரால் பேச முடிந்தது. அவர் மனச்சாட்சி உறுத்தியிருக்காதா??? என் ..என் நெஞ்செல்லாம் வலிக்கிறதுடி..செத்துடலாம் போல இருக்கு.....என்று அவனின் துரோகத்தை தாங்க முடியாமல் துடித்துக் கதறிய தோழியின் பூ முகம் வந்து போனது...எவ்வளவு நல்ல பெண் அவள்...அப்பாவி..குழந்தை உள்ளம் கொண்டவள்......அவளுக்கு போய்....

கிரீச் .....
அருகே வந்து பிரேக் போட்டு நின்ற காரின் ஒலியில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்த நிலாவின் நினைவுச் சரங்கள் அறுபட திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

விழிகளில் லேசாக அரும்பி இருந்த நீருடனும் கோபத்தில் சிவந்து ஜொலித்த முகத்துடனும் பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்த நிலாவின் முகம் இனியனின் மனதில் சிறு வலியை ஏற்படுத்தியது.அவன் நினைவுகளில் எப்போதும் மலர்ந்து சிரிக்கும் நிலாவின் முகம் வந்து போனது.அவளிடம் மீண்டும் அந்த சிரிப்பை அவனால் கொண்டுவர முடியுமா??? சிறு பெருமூச்சுடன் கார்க் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான்.
ஹாய் நிலா.எங்கே விடுதிக்கு தானே??
ம்ம்
வா நிலா நான் உன்னை ட்ரோப் செய்கிறேன்.
இல்..இல்லை நானே போய்க்கொள்வேன்.
எப்படி அவ்வளவு தூரம் நடந்தே செல்வாயா??
அது என் கவலை சார்......நிலாவின் பொறுமை குறைந்துகொண்டிருந்தது.

நிலா இது ஒரு சின்ன விடயம். இதற்கு இவ்வளவு தூரம் மறுக்க வேண்டிய அவசியமே இல்லை.சும்மா பஸ் பண்ணாதே. கம் ஒன் கெட் இன்.

அவ்வளவு தான்.ஏற்கனவே மனதில் கொதித்து கொண்டிருந்த கோபத் தீக்கு இனியனின் லேசான அதட்டல் கலந்த உரிமைப் பேச்சு மேலும் நெய்யூற்றி விட நிலாவின் பொறுமை முற்றாக பறந்து போனது.
 

K.Thanu

Active member
#4
லுக் மிஸ்டர் இனியன்..நீங்கள் யார் சார் எனக்கு?? ஏதோ முன்பு பழகிய பாவத்துக்கு முகத்தை முறித்து பேசக்கூடாதே என்று பார்த்தால் ரொம்பத் தான் அதிகமாகப் போகிறீர்கள்.மற்றவர்களை நிறுத்தியது போல உங்களையும் எட்டவே நிறுத்தி இருக்க வேண்டும்.அப்படி செய்யாமல் விட்டது என் தப்பு தான்.என்ன இருந்தாலும் நீங்களும் ஆண் ஜென்மம் தானே!! உங்களுக்கு மட்டும் உங்கள் இனத்திற்குரிய புத்தி இல்லாமலா போகும்.ஹ்ம்ம்...உங்கள் எல்லை எதுவோ அங்கேயே நில்லுங்கள்.அதைத் தாண்டி உள்ளே வர முயற்சிக்காதீர்கள்...அப்படி வந்தால்...

பனை மரத்தில் தேள் கொட்டியதால் தென்னை மரத்தில் நெறி கட்டிய கதையாய் அவள் மனதில் அதுவரை கொந்தளித்த கோபம் முழுதும் இனியன் மேல் திரும்ப என்ன பேசுகிறோம் என்பதையே அறியாமல் பொரிந்துகொட்டிக்கொண்டிருந்தாள்.

அவளின் இந்த கோபத்தை இனியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவள் அவனிடம் இதுவரை இப்படி எடுத்தெறிந்து பேசியதும் இல்லையே.அவளின் பேச்சில் அவனின் தன் மானம் காயம் கொண்டது.

அவனிடம் இதுவரை எந்தப் பெண்ணும் இப்படி அலட்சியமாக அவனை அவமதித்து பேசியது இல்லை.அப்படி பேசும்படி அவன் நடந்துகொண்டதும் இல்லை.ஏன் நிலா மேல் காதல் என்று உணர்ந்த பின்னும் கூட அவளிடம் இருந்து கண்ணியமான இடைவெளிகாத்து அவள் மனதில் உள்ள காயத்தை ஆற்றி அவள் மனதை மாற்றிய பின்பே அவளிடம் தன நேசத்தை சொல்லவேண்டும் என்று தானே எண்ணிக்கொண்டிருக்கிறான்.இதுவரை அவன் அவளிடம் தன் எல்லையைத் தாண்டி ஒரு வார்த்தை கூட பேசியதோ நடந்துகொண்டதோ கூட இல்லையே!! அப்படிப்பட்டவனைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்.

இப்போது கூட சற்று முன் மோலில் அவள் நடந்து கொண்டதைப் பார்த்து அவள் மனதில் இருக்கும் வலியை கோபத்தைப் புரிந்துகொண்டவன்.அவளை ட்ரோப் செய்யும் சாக்கில் அவளுடன் சற்று இதமாகப் பேசி அவள் மனநிலையை மாற்ற முயற்சிக்கும் எண்ணத்தில் தானே அவளை அழைத்ததே!!!!! அதற்குப் போய் என்னவெல்லாம் சொல்லிவிட்டாள்...ச்சே...இனியனின் முகம் கோபத்தில் கறுத்து இறுகியது.

ஓஹோ....அப்படி நீ என்னை தள்ளி நிறுத்தாததால் என்ன வந்துவிட்டது நிலா??? நான் அப்படி என்ன உன்னிடம் அதீத உரிமை எடுத்துக்கொண்டேன்??? உன் கையைப் பிடித்து இழுத்தேனா?

வாட்??? மைன்ட் யுவர் வோர்ட்ஸ் இனியன்.என்ன பேசுகிறோம் என்று புரிந்து தான் பேசுகிறீர்களா??

நீ முதலில் என்ன பேசினோம் என்று தெரிந்து தான் பேசினாயா நிலா?? நீங்களும் ஆண் ஜென்மம் தானே உங்கள் இனத்தின் புத்தி இல்லாமலா போகும் என்கிறாயே?? அப்படி என்ன புத்தியையம்மா என்னிடம் கண்டாய்?? அன்றும் சரி இன்றும் சரி நான் உன்னை உன்னை என்ன யாரேனும் ஒரு பெண்ணை தப்பான ஒரு பார்வையாவது பார்த்திருப்பதைக் கண்டாயா?? என்றான் வலியும் கோபமும் கலந்த குரலில்.

இனியனிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை நிலா எதிர்பார்க்கவே இல்லை.எங்கோ இருந்த கோபத்தில் தான் இவனிடம் வார்த்தைகளை சிதறிவிட்டது புரிந்தது. உதட்டைக் கடித்தபடி சற்று மௌனம் காத்தவள் பின் ஒரு வேக மூச்சுடன் நிமிர்ந்து “சாரி..” என்றாள்.

அவளை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் உன்னுடைய இந்த சாரி என்ற ஒற்றை வார்த்தையால் நீ பேசிய வார்த்தைகள் எதுவும் இல்லை என்று ஆகிவிடாது நிலா.என்றுவிட்டு கார்க்கதவைத் திறந்து ஏறியவன் கதவை அறைந்து சாத்திவிட்டு அவளை திரும்பியும் பார்க்காமல் விரைந்து சென்றுவிட்டான்.

தேவையின்றி அவனை நோகடித்துவிட்டோமோ?? நிலாவின் நெஞ்சில் குற்றக் குறுகுறுப்பு எழுந்தது.அவள் விழிகளில் நீர் அரும்பியது.

இனியனின் ஆபீசில் அவளின் அந்த ப்ராஜெக்ட் வொர்க் முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.அதனால் நிலா அந்த வேலையை பாதியில் விட முடியாது. ஆனால் அவனிடம் இப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டு அவனின் அலுவலகத்துக்கு செல்லவும் ஒருமாதிரி இருந்தது.ஏன் தான் அவள் அவனிடம் அப்படிப் பேசினாளோ?? அந்த பொறுக்கியை சந்தித்ததில் அவள் மனதில் பழைய நினைவுகள் மீண்டும் அலையடிக்க அது ஏற்படுத்திய வலியில் அதற்கு காரணமானவர்கள் மீது எழுந்த கோபத்தில் இனியனிடம் வார்த்தையைக் கொட்டிவிட்டாள்.

தான் எந்த காரணமுமின்றி அவனிடம் அப்படிப் பேசியது மிகத் தவறென்று நிலாவிற்குப் புரிந்தது.என்ன செய்வது அவளின் காயம்பட்ட மனதிற்கு அது புரியவில்லையே!!!!!!


இப்படி தன் செயலை எண்ணி வருந்தி இனி எப்படி அவன் முகத்தில் விழிப்பது. இயல்பாக பேசுவது என்ற தயக்கத்தில் நிலா இரண்டு நாட்கள் இனியனின் அலுவலகத்திற்கு செல்வதைத் தவிர்த்தாள்.இனியனும் அவளை எந்த விதத்திலும் தொடர்பு கொண்டு அழைக்கவில்லை. ஆனால் மூன்றாவது நாளும் நிலா ஸ்கூல் முடிந்து வந்தனாவுடன் நேராக விடுதிக்கு வரவும் இனியனின் கார் அவர்கள் எதிரே வந்து நின்றது.

நிலா அவனை நெருங்கி எதுவும் கேட்கும் முன்பே அவர்களை பார்த்துவிட்டவன் விரைந்து அவர்களை நெருங்கி நிலா அவசரமாக சென்னை கிளம்ப வேண்டும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு என்று அவசரத்துடன் கூறியவன் வந்தனாவிடம் திரும்பி சிஸ்டர் ப்ளீஸ் என்னுடன் சற்று வர முடியுமா?? என்று அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர முயன்றான்.

சென்னைக்கா?? ஆனால் ஏன்??
ப்ச்.. போகும் போது காரணத்தைச் சொல்கிறேன்.
என்னால் வர முடியாது.
நீ வந்து தான் ஆக வேண்டும் நிலா.
அப்படி என்ன கட்டாயமோ.
காரணம் சொன்னால் தான் வருவாயா??
காரணம் இன்றி வருவதற்கில்லை.
சிறு கோப மூச்சை எடுத்துவிட்டவன் நல்லது. இப்போதே உன்னை துன்பப்படுத்த வேண்டாம் என்று பார்த்தேன்.ஆனால் இப்போது வேறு வழி இல்லை.

என்ன சொல்கிறீர்கள்.
சகுந்தலா ஆன்ட்டிக்கு ஹார்ட் அட்டாக். கொஞ்சம் சிவியர் போல.ஹோச்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கு.கொஞ்சம் மோசமான நிலை.உன்னை பார்க்க ஆசைப்படுகிறார்களாம்.சேரன் இப்போது தான் போன் பண்ணினான்.

வாட்???? அ...அம்மா...ஆ .......நிலாவின் திறந்த வாய் சுவாசக்காற்றை உள்ளிழுக்க முயன்று முடியாமல் தோற்க கண்கள் சொருக அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள் நிலா.

...........
 

K.Thanu

Active member
#5
இனியனின் கார் சென்னையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது.இனியன் காரை ஒட்டிக்கொண்டிருக்க பின் இருக்கையில் வந்தனாவின் தோளில் தலைசாய்த்து நிலா விசும்பிக்கொண்டிருந்தாள்.

அவள் மனம் தாயை எண்ணிக் கலங்கியது. தாயை விட்டு பிரிந்திருந்த இந்த மூன்றாண்டுகளும் அவளை மருட்டியது. அம்மா.....அம்மா.... நான் உங்களைவிட்டு தள்ளியிருந்தது தப்போ...எனக்கு நீங்க வேணும்மா..எனக்கு உங்களைவிட்டா வேறு யாருமே இல்லைம்மா..கடவுளே ..கடவுளே.. அம்மாவைக் காப்பாற்று.. அந்த தருணத்தில் தாயை மட்டுமே நாடும் சிறு குழந்தையாய் நிலா மாறி இருக்க அவள் விழிகளில் இருந்து நீர் கசிந்துகொண்டிருந்தது.

கண்ணீருடன் கூடிய அவளின் அந்த பயணத்தின் முடிவில் அவள் வாழ்க்கைப் பாதையே மாறப் போகின்றது என்பதை நிலா அப்போது அறியவில்லை.
 
#6
Very impressive.
 
#7
Super நெஞ்சை டச் பண்ணிட்டீங்க
 
#8
அடுத்த பதிவு எப்போ
 
Top