தொடர்கதைகள் அத்தியாயம் 14

Rosei Kajan

Administrator
Staff member
#1
மேலேயுள்ள அத்தியாயத்தை எழுதித் தான் ஆரம்பித்த கதையை நிறைவான மகிழ்வுடன் முடிவுக்கு கொண்டு வர எண்ணினார் சீலன்.

கடைசி வரியை டைப் பண்ணி முடித்தவரின் விரல்கள் அப்படியே தம் அசைவை மறந்து நிற்க, அவர் விழிகளோ ஒருவிதவித அவசரத்துடனும் ஆவலுடனும் தான் எழுதி முடித்த இறுதி அத்தியாயத்தில் மீண்டும் மீண்டும் பதிந்து சுழன்றது. மனமோ சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்த ஆர்ப்பரிப்பில் மூழ்கியிருந்தது.

‘அழகிய கற்பனைகளுக்குத் தான் எத்தனை எத்தனை சக்தி?! மேலுள்ள அத்தியாயத்துக்கு முன்னைய அத்தியாயத்தை எழுதி முடித்த பொழுது என் மனம் இருந்த நிலைக்கும், இப்போதைக்கும் எவ்வளவு வேறுபாடு?’ நினைத்துக் கொண்டவர் பார்வை, அருகிலிருந்த யன்னலால் தெரிந்த தோட்டத்தில் நீண்ட நேரமாக நிலைத்திருந்தது.

மேலேயுள்ள அத்தியாயத்தை எழுத வேண்டும் என்று அவர் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. ஆனால், அதை இப்போது இவ்வளவு அவசரமாக எழுதி முடித்தது தன் செல்ல மகளுக்காகவே தான்.

இது வரை அவர் எழுதிய ஒவ்வொரு கதையையும், எழுத எழுத முதல் வாசகியாக வாசித்து தன் பார்வையில் அழகாக கருத்துக் கூறி வருவது அவர் செல்ல மகளே தான்.

தந்தையின் கதையை ஒரு நல்ல வாசகியாக அலசி ஆராய்ந்து, சிறு சிறு தப்புக்களையும் கண்டு பிடித்து சொல்லி விடுவாள் துர்கா. அவற்றையெல்லாம் மகிழ்வுடன் திருத்தி விடுவார் சீலன்.

ஆனால் இந்த முறை தன் செல்ல மகளுக்காக கதையின் போக்கையே மாற்றி விட்டார் அவர்.

‘‘முதல் அத்தியாயம் முடிந்து விட்டதாப்பா?? எத்தனை அத்தியாயங்கள் எழுதி விட்டீங்க?? ப்ளீஸ்பா! வாசிக்கத் தாங்க..’’ மிகவும் ஆவலுடன் தந்தையிடம் கேட்டுக் கொண்டே திரிந்தாள் துர்கா.

ஆனால் அவரோ, ‘‘இல்லடா, இந்த முறை அப்பா எழுதி முடித்து விட்டே தருகிறேனே. நிறைய நாட்கள் செல்லாதும்மா, நீங்க கொழும்பு போய் திரும்பி வரும் போது அநேகமாக முடித்திருப்பேன். சின்னக் கதைதான்.’’ சமாதானமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

காரணம், இடையில் எவர் குறுக்கீடுமின்றி தன் மனதிலுள்ளதை உள்ளபடியே எழுத நினைத்தார் அவர்.

சில நாட்களுக்கு முன், எழுதிக் கொண்டிருந்த சீலன் நண்பர் ஒருவர் வந்திருக்கவே அவருடன் கதைக்கச் சென்று விட, அவர் எழுதி விட்டுச் சென்றிருந்த கதை, அப்போது அங்கே வந்த துர்காவின் பார்வையில் தப்பாமல் பட்டு விட்டது. அவளும் அடக்க முடியாத ஆர்வத்தில் கதையை வாசிக்கத் தொடங்கி விட்டாள்.

அவள் அரைவாசி வாசித்துக் கொண்டிருக்கும் போது அறைக்குள் வந்த சீலன், ‘‘அவ்வளவு சொன்னேனேம்மா..’’ என்றதும், அவரை ஆழ்ந்து நோக்கியவள்,

‘‘அப்பா ப்ளீஸ்... என்னைக் கொஞ்சம் குழப்ப வேண்டாம். எழுதியவரை வாசித்து விட்டே வருகிறேன்.’’ முடிவாகச் சொல்லி வாசிப்பதைத் தொடர, சீலனும் அமைதியாக் நகர்ந்து விட்டார்.

ஆனால், எழுதியிருந்த அத்தியாயம் பன்னிரண்டு வரை வாசித்தவளோ, அப்படியே மேசையில் தலை கவிழ்த்து விட்டாள்.

மிகவும் துணிவும் உறுதியும் கொண்டவள் துர்கா. சோகமான படங்களையோ கதைகளையோ பார்த்து கண்ணைக் கசக்கும் இரகமுடையவள் இல்லை அவள். ஆனால் இன்று கதையுடன் அப்படியே ஒன்றிப் போய் வாசித்தவளால், துளசிக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற நடுக்கமும், எந்தவித ஆபத்துமின்றி அவள் நந்தனுடனும் தன் குழந்தையுடனும் சுகமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஏக்கமும் உள்ளத்தில் பொங்கியெழ, அவள் கண்கள் எந்தவித முன்னேற்பாடுமின்றி கசியத் தொடங்கின. நெஞ்சை ஏதோ ஒருவித இறுக்கம் சூழ அதைத் தாங்க முடியாதவளாக குமுறி அழுது விட்டாள் துர்க்கா.

சற்றுத் தள்ளியமர்ந்திருந்து மகளையே அவதானித்துக் கொண்டிருந்த சீலன், முதலில் மகளின் மௌனத்தில் துணுக்குற்று, பின் அவள் அழுகையில் துடிப்பதைப் பார்த்ததும் பதறிப்போனார்.

சட்டென்று எழுந்து மகளினருகில் சென்று ஆதரவாக அவள் தலையை வருடியவருக்கு அந்த நிமிடம் பேச நாவெழவில்லை!

கதையின் கனம் எழுதிய அவரையும் மிக நன்றாக எவ்வித தயை தாட்சண்யமுமின்றிப் பதம் பார்த்திருந்தாலும், தன் செல்ல மகளின் கண்ணீருக்கு அது காரணமாகி விட்டதே என உள்ளம் துடித்தார், ஒரு தந்தையாக.

அந்த நிமிடம், கண்ணீரில் குளித்த மகளின் விழிகளில், மகிழ்வு ஊற்றெடுப்பதை பார்க்க மிகவும் விரும்பினார் சீலன்.

அவர் மனமும் துளசி நந்தன் இருவரினதும் இணைபிரியா வாழ்வைக் காண விளைந்ததோ என்னவோ?!

அந்த எண்ணம் தோன்றியதும் தான் தாமதம், மனம் முழுதும் பரபரவென்று பரவிய உற்சாகத்துடனும் மகிழ்வுடனும் பதின்மூன்றாம் அத்தியாயத்துக்கான காட்சிகள் அவர் மனக்கண்ணில் துல்லியமாகத் துலங்கத் தொடங்கின.

அதன்படி மிகவும் அழகாக கதையை முடித்தவர், ‘கொழும்பிலிருந்து வந்ததும் இதை என் கண்மணியிடம் காட்டி அவள் மகிழ்வில் மலர்வதைப் பார்க்க வேண்டும்.’ நிறைவுடன் நினைத்துக் கொண்டார்.

பிள்ளைகளும் ரேகாவும் கொழும்பு சென்றிருந்ததால், வீடே அமைதிப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. வரவேற்பறையில் மட்டும் தொலைக்காட்சியின் மெல்லிய சத்தத்துடன் இணைந்து மாமி மாமாவின் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

மேசையில் முழங்கையை ஊன்றி, முகத்தை கைகளில் தாங்கிய வண்ணம் கணனியையே வெறித்துக் கொண்டமர்ந்திருந்தார் சீலன்.

பின் மீண்டும் முன் தான் இறுதியாக எழுதிய அத்தியாயத்தை, துளசியும் நந்தனும் தம் செல்ல மகளுடன் வாழப் போகும் இனிய வாழ்வை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்த விடயங்களை நூறாவது முறையாக விழிகளால் தொட்டு, மனதில் உணர்ந்தவர் ஆனந்தத்தால் நிறைந்து போனார்.

அதேவேளை தன் மகளின் கண்ணீர் மட்டும் குறுக்கிடவில்லை என்றால், கதையை எவ்வாறு நகர்த்த வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தார் என்பதை ஒருகணம் நினைத்துப் பார்த்தவரின் உடலில், சட்டென்று ஒருவித நடுக்கம் வந்து போனது.

ஆனால் அவர் மனமோ, விடாப்பிடியாக நின்று அந்த நினைவுகளில் மூழ்கியெழ விளைந்தது.

அவர் நினைவலைகளோ பெருமோசையுடன் காட்டாற்று வெள்ளமாக கரை புரண்டோடத் தொடங்கியது. 

Rosei Kajan

Administrator
Staff member
#2
மிக விசாலமான படுக்கையறை! அதன் ஒரு பக்கச் சுவருக்குப் பதிலாக கண்ணாடி இடம் பெற்றிருந்தது.

இரவில் மட்டுமே தான் போர்த்திக் கொள்ளும் தடித்த திரைச் சீலைகளை தன் இரு பக்கமும் ஒதுக்கி விட்டு, தோட்டத்தில் இருந்து வரும் தென்றலை அவ்வறை பூராகவும் நிரப்ப, வாய் விரித்து உதவிக் கொண்டிருந்தது நடுவில் அமைந்திருந்த கண்ணாடிக் கதவு.

அறை முழுதும் இதமான தென்றலால் நிறைந்திருக்க, சுற்றுப்புறம் மறந்த நிலையில் அமர்ந்திருந்தாள் பானு. அவள் நயனங்களோ தான் அமர்ந்திருந்த பெரிய கட்டிலின் மத்தியில், தன் பட்டு இமைகள் மூடி ரோஜாப்பூவாய் உறங்கும் தன் ஆருயிர் அக்கா பெற்ற குட்டித் தேவதையில் நிலைத்திருந்தன.

கடந்த மூன்று கிழமைகளாக இவள் இப்படித் தான் இருக்கிறாள்.

அன்று வைத்தியசாலையில், குழந்தையையும் கணவனையும் தங்கையின் பொறுப்பாக்கிவிட்டு வலிப்பு வந்து மயங்கிச் சரிந்த துளசியின் உடல் நிலை, அடுத்து வந்த மூன்று நாட்களில் வேகமாக மோசமாகிக் கொண்டே சென்றது.

பெற்றவர்கள், சகோதரி, கணவன், அவன் குடும்பத்தினர் எல்லோரும் கதறித் துடித்துக் கொண்டிருக்க, அவள் புலன்களோ ஒன்றொன்றாய் மிகவும் பிடிவாதமாக நிரந்தர வேலை நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.

மருந்துகளும், பிரார்த்தனைகளும், உருக்கமான அழைப்புகளும், கதறல்களும் அவள் புலன்களால் மிகவும் இலாவகமாக நிராகரிக்கப்பட்டன.

பார்வை மங்கி, ஈரல், கல்லிரல், சிறுநீரகம் என்று ஒவ்வொன்றாய் தம் செயல்பாட்டை மறந்து, இறுதியாக பிள்ளை பெற்று ஒன்பதாவது நாள் எல்லோரையும் புழுவாய்த் துடிக்க வைத்துவிட்டு, நிரந்தரமாக கண்கள் மூடியே விட்டாள் துளசி.

சின்னஞ் சிறுவயதிலிருந்து தன் அமைதியாலேயே பார்ப்போரைக் கவர்ந்து, குணத்தாலும் நடத்தையாலும் பெற்றவர்கள் உறவினர்களின் மனதை வென்று, அளவற்ற காதலால் கணவனைக் கட்டிப் போட்டு அழகாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளம் தளிர், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று தோன்றி, பேயாட்டம் போட்ட கொடும் சூறாவளியில் சிக்கி, இருந்த இடம் தெரியாது மறைந்தே போய் விட்டது.

அன்றிலிருந்து பானு இப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்க, பெற்றோரின் அளவற்ற காதலின் சின்னமாக, கருவறையில் உருவாகி வெளியுலகைப் பார்த்த இந்த ஒரு மாதத்தில் தன்னைச் சுற்றி நடப்பவற்றின் தாக்கம் கொஞ்சமும் இல்லாமல், தன் தேவைகள் பூர்த்தியாவதில் மிகத் திருப்தியுடன் சொகுசாகக் கிடக்கிறாள் குட்டிக் கண்மணி.

இவளின் செல்லச் சிணுக்கம் மட்டுமே சிலையாக இருக்கும் பானுவிற்கு அப்பப்போ உயிர் கொடுக்க, அவள் கரங்களோ குழந்தையின் தேவைகளை எந்திரமாக தடையின்றி நிறைவேற்றத் தவறுவதில்லை.

குழந்தையின் அறையிலேயே கண்ணையும் காதையும் வைத்துக் கொண்டு நடமாடும் வனிதாவும் அம்பிகாவும், குழந்தையின் இலேசான அசைவிலும் சிணுக்கத்திலும் அறைக்குள் பாய்ந்து வந்தாலும், மாமியையும் அவள் அன்னையையும் தன் வெற்றுப் பார்வையால் தயங்கித் தள்ளியே நிற்க வைத்தாள் பானு.

ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்திருந்தாலும், பிறந்தவுடன் கண்களை உருட்டி விழித்து அழுது, நிறை மாதத்தில் பிறந்த குழந்தை செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தாலும், ஒரு கிழமை வைத்தியசாலையில் வைத்திருந்து குழந்தையை முழுமையாகப் பரிசோதித்து தமக்கு திருப்தி என்ற பின்னரே வீட்டிற்குச் செல்ல அனுமதித்திருந்தனர்.

அப்போது பகலில் கூடவே இருந்த பானுவிற்கு, சிறு பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல, குழந்தைக்குச் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் அங்கிருந்த வயது போன தாதி விளக்கி, செய்து காட்டி, அவளைக் கொண்டும் செய்ய வைத்து திருப்தியுடன் அனுப்பி வைத்திருந்தார்.

அதுவும் துளசி கடைசியாக பானுவிடம் பிள்ளை உன் பொறுப்பு என்று கூறிய பொழுது அவரும் அருகில் நின்றதால், அடுத்த இரு நாட்களும் வேதனையில் சுருண்ட பானுவைத் தன் அனுபவ வார்த்தைகளால் தேற்றி, நடப்பை ஓரளவுக்கு புரிய வைக்க முயன்றிருந்தார் அந்த தாதி.

‘‘ராஜாத்தி ...பச்சைக் குழந்தையம்மா...! உனக்கு எப்படிம்மா இதெல்லாம் தெரியும். நாங்க இத்தனை பெரியவர்கள் ஏன்டா இருக்கிறோம்? நாங்க பார்த்துக் கொள்கிறோமே!’’ பானுவிடம் தழுதழுப்பார் அம்பிகா.

கெஞ்சி அதட்டி என்று எப்படி எல்லாமோ பார்த்தும், பானு தன் மௌனத்தைக் களையவும் இல்லை, குழந்தையை விட்டுப் பிரியவும் இல்லை.

அவள் குழந்தையை விட்டு அசையாது இருப்பதால், வனிதாவும் அங்கேயே தங்கி விட்டார்.

‘பார்த்துப் பார்த்து பொத்திப் பொத்தி நான் வளர்த்த செல்வங்களில் ஒன்று அரை குறையாக அவசரமாக என்னை விட்டுப் போக, மற்றது இப்படி தன்னை மறந்து நிற்கிறாளே..!’ துடித்துப் போனார் வனிதா.

பெரியவளின் இழப்புத் தந்த வேதனையை ஜீரணிக்கவே தள்ளாடிய அவர் உள்ளம், அவள் போகும் போது செய்து விட்டுச் சென்ற காரியத்தை ஏற்க மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 

Rosei Kajan

Administrator
Staff member
#3

குழந்தையுடன் பானுவை மட்டும் அன்று உள்ளே அழைத்துச் சென்ற பின், அங்கு என்ன பேசிக் கொண்டார்கள் என்பதும் தெரியாமல், துளசியின் உடல் நிலையும் மிகவும் மோசமடைய, பைத்தியம் பிடித்தது போன்று கலங்கி அலைந்து திரிந்தனர் இருபக்க குடும்பத்தினரும்.

எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பானுவோ நந்தனோ உள்ளே என்ன கதைத்துக் கொண்டார்கள், துளசி இறுதியாக என்ன சொன்னாள் என்றும் சொல்லவேயில்லை.

அதைச் சொல்லிச் சொல்லி வனிதா புலம்பிக் கொண்டிருக்கவும், அங்கு அன்று அவர்களுடன் கூடவே நின்ற தாதியே உள்ளே நடந்தவற்றைச் சொல்லி இருந்தார். அதைக் கேட்டு இருபக்கப் பெரியவர்களுமே அதிர்ச்சி அடைந்தார்கள் என்றாலும், வனிதாவும் சுகுமாரும் சிந்திக்கும் திறனற்று செயலற்றுப் போய் விட்டனர்.

எல்லாக் காரியங்களும் முடிந்த பின்னும், பானுவும் வனிதாவும் துளசி வீட்டில் தங்கியிருந்ததால், தானும் அங்கேயே தங்கிக் கொண்ட சுகுமார், மகள் கடைசியாக சொன்ன விடயமும், சின்னமகளின் எவரையும் அண்ட விடாத இறுக்கமும் கண்டு செய்வதறியாது மிகவும் வருந்தினார்.

‘இதையெல்லாம் எப்படிச் சரி பண்ணப் போகின்றேன்? போனவளை திருப்பி வர வைக்கும் வித்தை தெரியாது! ஆனால், இருப்பவளை எப்படி இதிலிருந்து வெளியே கொண்டு வரப் போகிறேன்.’ ஒரு கண் குருடாகியதில் துடித்தாலும், மறு கண்ணை சேதமின்றி காப்பாற்றத் தந்தையாகத் துடித்தார் சுகுமார்.

எப்படியும் இன்னுமொரு கிழமையில் துளசியின் முப்பத்தியொன்று முடிந்ததும், பானுவை அழைத்துக் கொண்டு யாழ் சென்று விட வேண்டும் என்பதில் சுகுமார் மிகவும் உறுதியாக இருந்தார்.

ஆனால், ‘இவள் தான் குழந்தையை விட்டு நகர மறுக்கிறாளே! என் மகளையே உரித்து வைத்திருக்கும் பேத்தியை என்னிடம் தந்து விடுங்கள் என்று நான் எப்படி அவர்களிடம் கேட்பது? அது அவர்கள் வீட்டுச் செல்வமும் தானே! முதல் மாப்பிள்ளை இதற்கு சம்மதிப்பாரா? அதுவும் தான் நியாயமா?’ குழம்பினார் சுகுமார். வனிதாவும் அதையே நினைத்து மனதில் மறுகிக் கொண்டிருந்தார்.

‘‘பானும்மா, வாயை விட்டுக் கதறி அழுடா. அப்பவாவது மனப் பாரம் குறையும்.’’ எப்போதும் துள்ளலுடன் திரியும் சிறு பெண்ணாகக் கண்டவளை, இந்தக் கோலத்தில் பார்க்க முடியாமல் கெஞ்சிப் பார்த்தார் நந்தனின் பெரியண்ணி.

இன்று ஆட்டம் கண்டு நிற்கும் குடும்பத்தின் மொத்தச் சுமையும் அவர் தலையில் அழுத்த, அவரோ மிகவும் கஷ்டப்பட்டு தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் யாராலும் பானுவை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை.மெல்ல உடலை முறுக்கி, இறுகப் பொத்திய மலர்க் கையை கண்களில் வைத்துத் தேய்த்த வண்ணம் அரைக் கண்ணைத் திறந்தாள் குட்டி தேவதை. எப்போதும் போல் குழந்தையின் வட்ட விழிகள் மலர, அவள் போட்ட சிணுக்கத்தில் இன்றும் உயிர் வந்தது பானு என்ற சிலைக்கு!

இதுவரை இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர, ‘‘குட்டிம்மா எழுந்தாச்சா?! வாங்கடா வாங்க.’’ சொல்லிக் கொண்டே மெல்ல குழந்தையை அவள் தூக்கவும், சத்தம் கேட்டு விரைந்து வந்த வனிதா, வழக்கம் போல எதுவும் சொல்லாது படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டார்.

என்னதான் என்றாலும், ‘பானு ஒரு விளையாட்டுப் பிள்ளையல்லவா? சிறு குழந்தையை அவளால் எவ்வாறு பராமரிக்க முடியும்?’ இப்படித்தான் நினைத்தனர் அனைவரும் .

‘குழந்தைக்கு ஒன்று கிடக்க ஒன்று நடந்து விட்டால், அதைத் தாங்கும் சக்தி யாருக்காவது இருக்கா?’ மனதில் அங்கலாய்த்துக் கொண்டே சின்னமகள் குழந்தைக்கு நாப்கின் மாற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார் வனிதா.

****

நந்தனின் அறைக் கதவைத் திறந்து கொண்டு சாப்பாட்டுத் தட்டுடன் உள்ளே சென்றார் அம்பிகா.

விழிகள் வானத்தை வெறிக்க, அறையை ஒட்டியதாக இருந்த பால்கணியில் அமர்ந்திருந்தான் நந்தன்.

மெல்ல மகன் அருகில் வந்து அவன் முன்னால் இருக்கை ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்த அம்பிகா, எதுவுமே சொல்லாது கையில் உள்ள உணவைப் பிசைந்தார்.

அவர் வந்த அரவத்தில் திரும்பிப் பார்த்தவன், ‘‘ ப்ளீஸ்மா..பசியில்லை, வேண்டாம்...’’ கிணற்றுக்குள் இருந்து ஒலித்தது போல் வந்தது அவன் குரல்.

‘‘எப்படி ராசா! என்னய்யா இது? என்னை இப்போ என்ன செய்யச் சொல்கிறாய்? அதைச் சரி சொல் செய்கிறேன்..’’ சொல்லிக் கொண்டு வந்தவர் விம்மத் தொடங்கினார் .

‘‘ம்மா...ஏன்மா? சரி வைத்து விட்டுப் போங்க, நான் சாப்பிடுகிறேன்.’’ சொன்னவனின் முகத்தை ஏறிட்ட தாய் வயிறு பதறியது.

ஒரு மாதத் தாடியும், வீங்கிச் சிவந்த கண்களும், காய்ந்து வறண்ட இதழுமாக பார்க்கவே என்னவோ போல் இருந்தான் நந்தன். கிட்டத்தட்ட உணவு உறக்கமின்றி பலகாலம் வெயிலில் அலைந்து திரிபவன் போன்று தோற்றமளித்தான் அவர் செல்ல மகன்.

‘என் மகனா இது?’ உள்ளம் நடுங்க நினைத்துக் கொண்டவர் நடுங்கும் கரத்தால் சோற்றைப் பிசைந்து அவன் வாயருகில் கொண்டு செல்ல, கலங்கும் விழிகளுடன் தாயுடன் தர்க்கம் புரியும் சக்தியின்றி ஈரப்பசையின்றி வறண்டு கிடந்த வாயைத் திறந்து சோற்றுருண்டையை வாங்கிக் கொண்டான் நந்தன் .

இப்பாடித்தான் ஒரு நாளைக்கு ஒருதரம் என்றாலும் மகனுடன் மல்லுக்கட்டி அவன் வயிற்றினுள் அரையும் குறையுமாக எதையாவது திணித்துக் கொண்டிருக்கிறார் அம்பிகா.

நான்கு உருண்டைகளை கஷ்டப்பட்டு விழுங்கியவன், அடுத்த தரம் உயர்ந்த தாயின் கையைப் பிடித்து தட்டிலேயே வைத்து விட்டான்.

‘‘போதும்மா...ப்ளீஸ்.’’ என்றவாறே அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, கொண்டு வந்திருந்த நீரைக் கொடுத்து அவன் வாயைத் துடைத்து விட்டவர்,

‘‘ராஜா...நான் சொல்லித் தான் உனக்கு விளங்க வேண்டுமா? அறையை விட்டு வெளியே வாய்யா. நீ இப்படி இருந்தால் எதைச் சமாளிப்பது? முதல் இப்படி இருந்து எதைச் சரி செய்ய நினைக்கிறாய்?’’ தழுதழுக்கச் சொன்னவர் தான் சொல்வதை மகன் கிரகித்துக் கொள்ளட்டும் என நினைத்து சற்றே நிதானித்தார்.

இன்று எப்படியும் மகனுக்கு வீட்டு நிலையைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் அம்பிகா.

‘‘உன் மாமா மாமி ஒருபுறம், வாயைத் திறக்கவே மாட்டேன் என்று என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள் தம்பி. பாவம்டா பானு! உன் பிள்ளையை எங்களிடம் தரவே மாட்டேன் என்கிறாள். நீயோ அந்தக் குழந்தையை திரும்பியும் பார்க்கிறாய் இல்லை. உன் குழந்தையை நீ பார்த்துக் கொண்டால், உன்னுடன் வைத்துக் கொண்டால், பானு விலகி நிற்பாள் தானே! அவள் சின்னப் பிள்ளையடா, கொஞ்சம் யோசித்துப் பார்.’’ சொன்னவரை இப்போது வெறுமையாக ஒரு பார்வை பார்த்தான் மகன்.

அவன் பார்வையை தயங்காமல் தாங்கிக் கொண்டவர், ‘‘எனக்குமே இப்போ இதைக் கதைக்க விருப்பம் இல்லை தம்பி. ஆனால் எதையும் வளர விடாமல் முடித்துக் கொள்வது நல்லது என்றே மனதுக்குப் படுது. பானுவின் போக்கு எனக்குப் பயத்தைத் தருகுது. துளசி வேற பிள்ளை அவள் பொறுப்பு என்று சொல்லி விட்டாளா!? அதையே இவள் பிடித்துக் கொண்டு நிற்கிறாள் என்று நினைக்கிறேன்.’’ சட்டென்று தலையை மீண்டும் மறுபுறமாகத் திருப்பிக் கொண்டான் நந்தன்.

அன்று அந்த நேரம் துளசி கடைசியாக பேசியது ஒவ்வொன்றும் அவன் காதில் ரீங்காரமிட்டது.

‘பிள்ளையை உன் தங்கை பொறுப்பு என்றாயடி. உன் புருசனுக்கு உன் பிள்ளையை வளர்க்கும் வழி தெரியாது என்று நினைத்து விட்டாய். அது சரி...உன் பிள்ளை தாயும் தந்தையுமாக வாழ வேண்டும் என்று நினைத்தாய் ஒரு தாயாக. ஆனால், என்னையும் அந்தச் சின்னப் பிள்ளையின் பொறுப்பு என்று சொல்ல உனக்கு எப்படிடி மனம் வந்தது.’ நெஞ்சம் வலிக்க மனைவியிடம் ஆயிரம் கோடி தரங்களுக்கு மேல் கேட்ட அதே கேள்வியை இப்போதும் கேட்டுக் கொண்டான் அவன்.

‘‘தம்பி, பிள்ளைக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும்.’’ தாயின் குரல், அவனை அவர் பேச்சுக்கு செவி சாய்க்க வைத்து.

‘‘ராஜா, நடந்த எதுவும் நம்ம கையில் இல்லையடா. மாற்றவும் முடியாது. கசப்பென்றாலும் ஏற்றுத் தான் ஆக வேண்டும். அம்மா இப்படிச் சொல்லுறாவே என்று நினைக்காதே. முதல் உன்...உன்.................துளசி இதை தாங்குவாளா நினைத்துப் பார்...’’ சொல்லிக் கொண்டு வந்தவர் மகன் தோளில் சாய்ந்து குலுங்கி அழத் தொடங்கினார் .

தாய் சொல்லச் சொல்ல சூடான கண்ணீர் ஓசையின்றி வழிய மறுபக்கமாகத் தலை திருப்பியிருந்தவனின் கரங்கள், அழும் தாயை அணைத்துக் கொண்டாலும், ஒத்த வார்த்தையையும் அவன் வாய் உதிர்க்கவில்லை.

‘ஏண்டி என்னை இப்படித் தவிக்க விட்டுப் போனாய்? நான் என்ன செய்யப் போகிறேன்? என்னால் முடியவில்லையே! இதற்குத்தான் நான் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாயா? எப்படிடி...என்னை விட்டுப் போக முடிந்தது?’ ஊமையாக அழுதான் அவன்.

‘கடைசியில் என்ன வார்த்தை சொல்லி விட்டாய்...உன்னால் எப்படி அப்படிச் சொல்ல முடிந்தது அதுவும் உன் தங்கையிடமே...’ இன்னமும் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறும் அவன் மனமோ தொடர்ந்து ஓலமிட்டுக் கதறியது.

அப்போது அங்கே வந்த நந்தனின் தந்தை, ‘‘அம்பிகா என்ன இது..?’’ கடிந்து கொள்ள முயன்றவர் குரலும் தழுதழுத்தே வந்தது. அவர் கரங்கள் மகனின் தோளில் ஆதரவாகப் படிந்தது.

தந்தையைப் பார்த்ததும் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றான் நந்தன். ‘நான் வடிக்கும் கண்ணீரைத் துடைக்க எத்தனையோ பேர் இருந்தும், என் மனதில் பெரிதாய் விழுந்துள்ள பள்ளத்தை யாராலுமே நிரவ முடியாதே! என் துளசி ஒருத்தியைத் தவிர!’ என நினைத்துக் கொண்டவன், விழிகள் மூடி தன்னைக் கட்டுப்படுத்தப் போராடினான்.

தாய் சொல்வதில் உள்ள நிஜம் அவனுக்கும் புரிந்தே இருந்தது. அதே நேரம் குழந்தையை அவனால் சென்று பார்க்க முடியவில்லை. ‘உன் அம்மாவுடன் வந்து உன்னைத் தூக்குகிறேன்.’ என்றவனால், மனைவி இல்லாமல் குழந்தையின் முகத்தைப் பார்க்கவும் முடியாமல் இருந்து.

ஆனால், ‘பானுவை என்ன செய்வது? எப்படி அவளை பத்திரமாக மனம் நோகாமல் இங்கிருந்து வெளியேற்றுவது?’ மனதில் நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்தாலும், வழி தான் புரிபடவில்லை அவனுக்கு.
 
#4
Ana epadi panitenga Akka😂😂😂😂
 

emilypeter

Well-known member
#5
Nice ud
 

Rosei Kajan

Administrator
Staff member
#6
மிக்க நன்றி அனுஷா , எமிலி
 
#7
Nice ud sis
 
Top