தொடர்கதைகள் அத்தியாயம் 11

Rosei Kajan

Administrator
Staff member
#1
பொழுது புலர்ந்ததின் அறிகுறியாக பறவைகளின் சந்தோசக் கூச்சல் கேட்டு கண் விழித்தான் மனோ. அவன் மனமோ, எப்போதும் இனிமையாக எதிர்நோக்கும் விடியலை இன்று வெறுமையாய் எதிர் கொண்டது.

இரவு முழுவதும் அமைதியான உறக்கமில்லாததில் கண்கள் எரிச்சல் தர, அதற்குச் சற்றும் குறையாமல் மனம் எரிச்சலில் மண்டிக் கிடக்க, கடிகாரத்தில் பார்வையை ஓட விட்டவன், எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் .

குளித்து முடித்து வெளியில் வர, வழமை போல சமையலில் இருந்த கமலம், “தம்பி இந்தா காஃப்பி..” தந்தவர் முகமும் கன்றிச் சிவந்து தான் இருந்தது .

பிறந்ததும் மிகவும் சொற்ப காலமே இவரின் கரங்களில் தவழ்ந்திருந்தாள் ஓவி.

எப்படியும் அவளை வெளிநாட்டுக்கு தத்துக் கொடுத்திட வேண்டும் என்று வெகுவாக முயன்ற பாரதி, அதன் படி வெளிநாட்டுக்கு அவளை தத்துக் கொடுத்த பின், காலப் போக்கில் அவளைப் பற்றி முழுமையாக மறந்து விட்டார் கமலம்.

ஆனால், திடீரென்று ஒருநாள் வளர்ந்த குமரியாக தங்கள் முன்னே வந்து நின்றவளைக் கண்டதும் ஆனந்தமாக அதிர்ந்து போனவர், அதன் பின் அவளுடன் தொடர்பில் இருக்கிறார். அந்தத் தொடர்பும் எல்லாம் கடந்து ஒரு வகை மெல்லிய பாச இழையினால் பிணைக்கப்பட்டிருகின்றது.

மனோவும் அவளுடன் நட்பு என்ற ரீதியில் நெருக்கமாகி இருந்தான்.

அவளும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் முற்றிலும் வேறு ஒரு சூழலில் வளர்ந்திருந்தாலும், இவர்கள் வீட்டில் ஒருத்தியாகத் தான் உரிமையாகப் பழகினாள்.

அப்படியிருக்க, இந்த முறை அவள் தம்முடன் தங்கியிருந்து துக்கத்தைச் சுமந்து சென்றதைப் பார்த்தவர்களால், அதை ஜீரணித்துக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது.

அதிலும் அவள் சுபாவம் தெரிந்திருந்ததால், அங்கு சென்றும் யாருடனும் பரிமாறிக் கொள்ளாது தன்னுள்ளே வைத்து வேதனைப்படுவாள் என்று நினைத்தே மிகவும் வருந்தினான் மனோ.

‘அவளுக்கு மட்டும் ஏனிப்படி நடக்க வேண்டும்?’ என எண்ணிக் கொண்டவனுக்கு, அவளை விடவும், எத்தனை ஆயிரம் உள்ளங்கள் மிகவும் கேவலமாக அன்பு மறுக்கப்பட்டுத் துடிக்கின்றன என்ற நிதர்சனம் நினைவில் வர, இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்றே எண்ணத் தோன்றியது.

அப்படிப் பார்க்கையில், இப்படிப்பட்ட குழந்தைகளை தேடி வந்து தத்தெடுத்து, அவர்களையும் ஒழுங்காக வளர்த்து விடும் தத்துப் பெற்றோர்கள் உண்மையில் உயர்ந்த உள்ளம் கொண்டவர்களாகவே தெரிந்தார்கள் அவனுக்கு!

‘எமக்கென குழந்தைச் செல்வம் இல்லையே!’ என்று ஏங்கித் தவித்தாலும், அதிலிருந்து மீண்டு, ஆதரவின்றித் தவிக்கும் பிஞ்சுகளுக்கு ‘நான் தாயாய், தந்தையாய் இருப்பேன்!’ என்று முன் வருதல் என்பது தெய்வீகச் செயலாகவே அவன் கண்களுக்குத் தெரிந்தது.

இப்படியே சுழன்ற அவன் சிந்தனை கடைசியில் மீண்டும் ஏஞ்சல் எழிலில் வந்து நின்றது.

‘அவள் புறப்படப் போவது தெரிந்தும் நேற்று வந்து விட்டுச் சென்ற எழில் அதன் பிறகு என்னுடன் சரி கதைக்கவில்லையே!’ என எண்ணிக் கொண்டவனை, ‘அப்படி எதைச் சொல்லி அவனை கலங்கடித்து அனுப்பியிருப்பாள்?’ என்ற எண்ணம் மீண்டும் தோன்றி மனதைக் குடைந்தது.

‘இனி எழில் என்ன செய்வான்? அப்படியே அவளை விட்டு விலகிவிடுவனா?’ என்று நினைத்தவனுக்கு, அவர்கள் சேர்வதற்கான சந்தர்ப்பங்களை விட விலகுவதற்கான சாத்தியங்களே அதிகமாக இருப்பதாகத் தோன்றியது.

ஆனால், ‘எழில் ஒரு விடயத்தை நினைத்து விட்டுப் பின் வாங்கும் இரகமில்லை.’ என எண்ணி சிறிதாக ஆறுதலும் பட்டுக்கொண்டான்.

‘நானே அவனுக்கு ஒருதரம் எடுத்துப் பார்த்தால் என்ன?’ என்று நினைத்துக் கொண்டவன், ‘சரி கொஞ்ச நேரத்தால் அவன் எடுக்கவில்லை என்றால் எடுப்போம். நேற்றே இருட்டியும் வீட்டுக்கு இன்னமும் வரவில்லை என்று ஆதி அண்ணா சொன்னார்.’ நினைத்தவாறே கல்லூரி செல்வதற்காக தாயாராகச் சென்றான்.

இப்படியே வழமைக்கு மாறான அமைதியுடன் தாயும் மகனும் தத்தம் வேலைகளுக்கு புறப்பட்டவர்கள், வெளியே செல்வதற்கு ஆயத்தமாகும் வேளையில், அவர்கள் வாசலில் வந்து நின்றார்கள் ராஜசேகரும் பரிமளாவும்.

அவர்கள் யாரென்று அறிமுகம் இல்லாததால், “யார் வேண்டும்?” கேட்டுக் கொண்டே சென்ற தாயை முந்திக் கொண்டு சென்ற மனோ, “வாங்க ஆன்ட்டி...உள்ளுக்கு வாங்க அங்கிள்..” அவசரமாக வரவேற்றாலும், ‘இப்போது இவர்கள் ஏன் இங்கு வந்திருக்கிறார்கள்?’ என்ற குழப்பமும் அவனுள் தோன்றியது.

குழப்பத்துடன் பார்த்த தாயிடம், “அம்மா இவர்கள் எழிலின் அம்மாவும் அப்பாவும்..” சொன்னதும், “ஓ!” என்ற கமலம், “உள்ளுக்கு வாங்க...” வரவேற்றவருக்கு, இவர்கள் ஓவியாவைப் பற்றிக் கதைக்கவே வந்திருக்கிறார்கள் என்று உடனேயே புரிந்தது.

அமைதியாக வந்து அவர்கள் வீட்டைச் சுற்றி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அமர்ந்தனர் எழிலின் பெற்றோர்.

“என்ன குடிக்கிறீங்க?” கேட்ட கமலத்திடம், “இல்லை இப்போது ஒன்றும் வேண்டாம்; நாங்க போகும் போது தண்ணி தாங்க.” தன்மையாகச் சொன்னார் பரிமளா.

“இல்லை டீ போடுகிறேனே, முதல் முதலாக வீட்டுக்கு வந்திருக்கிறீங்க.” என்ற கமலத்திடம்,

“இல்லை பரவாயில்லை, இப்போது தான் குடித்தோம்.” நாசுக்காக மறுத்தவர்கள் உள்ளே திரும்பிப் பார்த்து விட்டு, “எங்கே அந்தப் பெண்?” கேட்ட ராஜசேகரின் குரல் கடினத்துடன் வந்தது.

“எந்தப் பெண் அங்கிள்? ஓ! ஓவியாவைக் கேட்கிறீங்களா? அவள் இப்போது பறந்து கொண்டிருப்பாள்.” மனோ சொன்னதும், சட்டென்று விளங்கவில்லை அவர்களுக்கு.

“என்ன??” புரியாது கேட்டவரை நேராகப் பார்த்தார் கமலா. “அவள் இன்று அதிகாலை விமானத்தில் ஊருக்குப் போய் விட்டாள்.” சொன்ன கமலத்தின் குரலும் இறுகியே இருந்தது.

அதை உணர்ந்து கொண்ட ராஜசேகருக்கு ஏஞ்சலுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி இவர்களுக்குத் தெரியும் என்பதே அவமானமாக இருந்தது.

“ஓஓ!” என்றவருக்கு அதற்கு மேல் இவர்களுடன் நின்று கதைக்க விருப்பம் வரவில்லை. தம் குடும்ப விடயங்களை கண்டவர்களுடன் கதைப்பதற்கு அவர் கொஞ்சமும் விரும்பவில்லை. இங்கு வரும் போதே இனி என்ன செய்வது என்று தான் வேண்டா வெறுப்பாக வந்திருந்தார்.

“அந்தப் பிள்ளை நின்றால் கதைப்போம் என்று வந்தோம். அப்போ போவோமா?” கணவன் மனதறிந்து எழுந்து கொண்டார் பரிமளா.

“ம்ம் போவோம்..” என்று எழுந்தவர், “வந்து பத்து நாட்கள் இருக்குமா? அதற்குள் லவ்வாம்! வெளிநாட்டுக்காரிகளுக்கு இதெல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்!?” வெறுப்புடன் சொன்னதும், மனோ தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தியதைப் போல கமலத்தால் அமைதியாக இருக்க முடியவில்லை.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
“லவ்வா?! யாருக்கு? யாரில்??” அவர்களைப் பார்த்து வியப்பாகக் கேட்டார்.

தொடர்ந்து, “எழில் சொன்னதை சொல்கிறீர்களா?” சின்னதாக கேலிச் சிரிப்புடன் அவர்களை ஏறிட, அவர்கள் கேள்வியாக அவரை நோக்கினார்கள்.

“ஓவியா அப்படி இலேசில் யாரையும் லவ் பண்ணக் கூடிய பெண்ணில்லை. உங்களுக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்? அவள் ஒரு கோடிஸ்வரர் வீட்டுப் பிள்ளை. அவளது போதாத காலம் அவள் பிறப்பு மட்டும் பிழையாகிப் போய்விட்டது. மற்றவை எல்லாம் அவளுக்கு மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவில் தான் அமைந்திருக்கு!” கடகடவென்று சொன்னவர், நிறுத்தி நிதானமாக அவர்களை ஏறிட்டார்.

“அவளைப் படைத்தவன் ஆரம்பப் புள்ளியை கோணலாக வைத்தாலும், மிகவும் அற்புதமான ஓவியமாக அவளை உருவாக்கி, அதன் மதிப்புத் தெரிந்தவர்களிடம் தான் சேர்த்து வைத்திருக்கிறான்.” தொடர்ந்தவர் ,

“அவளுக்கு அனைத்தையும் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறான்.” அவரையும் மீறி கேலியும் ஆத்திரமும் குரலில் நன்றாக வெளிப்பட்டது.

தன்னிடமிருந்து இந்த பதிலை எதிர்பார்க்காதவர்களின் திகைத்த தோற்றத்தை அசட்டை செய்து, “எழில் தம்பி தான் அவளை லவ் பண்ணுவதாகச் சொல்ல, அவள் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லிவிட்டுத் தான் சென்றாள். நேற்று இங்கு வந்து அவளுடன் பேசி அவள் மறுப்பைக் கேட்டுக்கொண்டு தானே எழில் தம்பி போனார். உங்களிடம் சொல்லவில்லையா?” கசப்பும் கோபமும் கலந்த குரலில் கேட்டவரை பார்க்கவே பிடிக்கவில்லை ராஜசேகருக்கு.

வேண்டாம் என்று தான் மறுத்த பின்னரும் ஒவியிடம் கதைப்பதற்காகச் சென்றவன் திகைத்துக் கலங்கிய முகத்துடன் வெளியேறியதில் இருந்தே, ஓவி அவனுக்கு என்ன பதில் சொல்லி இருப்பாள் என்பதை ஊகித்து விட்டிருந்தார் கமலம்.

அதன் பிறகு ஓவியிடம் கேட்க அவளும், “இதெல்லாம் எனக்கு கொஞ்சமும் சரிப்பட்டு வராது ஆன்ட்டி. அவர் ஏதோ தன் விருப்பத்தைச் சொன்னார் தான்; சரிவராது என்று சொல்லி விட்டேன்.” ஒரே வரியில் முடித்து விட்டாள் .

அது தெரிந்திருந்ததால் இவர்களுடன் கண்டிப்பாகக் கதைக்க முடிந்தது.

‘அப்போ என் பிள்ளை தான் அவள் பின்னால் போனானா? இவனுக்கு என்ன தலையெழுத்தா? இப்படிக் கண்டவர்களையும் காதலிக்க வேண்டும், அவர்கள் முறுக்கிக் கொள்ள வேண்டும் என்று!?

முதல் இவன் எதில் குறைத்து போனான்? இவனுக்கு ஏன் திடீரென்று புத்தி இப்படிப் போக வேண்டும்? கண்டவர்கள் முன்னிலையில் மானத்தை வேண்டி விட்டானே!’ மனம் கொதிக்க சட்டென்று அவர்களிடமிருந்து விடை பெற்றார்கள் அவர்கள்.

“பார்த்தாயா மனோ? ஓவி செய்தது தான் சரி. எழிலுக்கு கொஞ்சமும் புத்தியில்லையா? இவர்களே எப்படி அவளைக் கல்யாணம் செய்ய சம்மதிப்பார்கள். எதையாவது கதைத்து அவளை விலக்கத் தான் இப்போது வந்ததும்.” என்றவருக்கு எழில் மீது கண் மண் தெரியாத கோபம் வந்தது.

“சும்மா வந்த பிள்ளையின் மனதை எழில் கெடுத்து விட்டான்.” என்று தொடர்ந்து சொன்னவரின் விழிகள் கலங்கின. ஓவியாவின் மனமும் எழிலை விரும்புகின்றது என்பதை அவள் நடவடிக்கைகள் மூலம் நன்குணர்ந்தவரால், இப்போதைக்கு கண்கலங்கி மனதுள் புலம்புவதை விட வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.

மனோ வீட்டிலிருந்து அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் தம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் ராஜசேகர் தம்பதி.

“உங்க மகன் இப்போ சரி வந்திருப்பானா?” கேட்டவருக்கு பதில் சொல்லாது அமைதி காத்தார் பரிமளா.

அவருக்குமே மகனில் ஆத்திரம் வந்தது. ‘கண்ணுக்கு இலட்சணமாக சொந்தத்தில் அருமையான பெண்ணாகப் பார்த்து வைத்திருக்க, இவருக்கு பார்த்ததும் காதல் வரும். காதல் மட்டுமா எத்தனை வில்லங்கங்கள் அதோடு சேர்ந்து வந்திருக்கு!’ என நினைத்துக் கொண்டவருக்கு உள்ளே மிகவும் கொந்தளிப்பாக இருந்தது.

அப்படியே வீடு வந்து சேர்ந்தவர்கள் உள்ளே நுழைகையில், அவர்களை தன் மௌனப் பார்வையால் சலனமின்றி ஏறிட்டான் வரவேற்பறையில் அமர்ந்திருந்த எழில்.

‘பார், இவ்வளவு நடந்த பின்னும் அமைதியாக அமர்ந்திருப்பதை!’ தந்தை மனதுள் முறைத்துக் கொண்டாலும் எதுவும் சொல்லாது முன்னேற, அப்போது கல்லூரி செல்லத் தயாராகி வந்த தங்கையுடன் சேர்ந்து கொண்டவன்,

“நான் கடைக்குப் போகின்றேன்; வாறோம் அம்மா.” சொல்லி, சாதாரணமாக நகர்ந்த மகனை, ஆச்சரியமாக விழி விரித்துப் பார்த்தார் பரிமளம்.

‘நேற்று இவ்வளவு நடந்த பின்னும், எதுவும் கதைக்காது அமைதியாகப் போகிறானே!’ என்ற அவர் சிந்தனையைக் கலைத்தது வீட்டுத் தொலைபேசியினதும், ராஜசேகரின் கைபேசியினதும் ஒன்று சேர்ந்த அலறல்!

வெளியே சென்று கொண்டிருந்த எழிலோ, பெற்றோரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே இறங்கி நடந்தவன் அங்கிருந்தே, “அப்பா, நான் காலையில் அத்தையுடன் கதைத்து என் முடிவைச் சொல்லி விட்டேன். எனக்கு..” சொல்லி நிறுத்தி நிதானமாக அவரைப் பார்த்தவன்,

“எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிந்து விட்டது.” அந்த எல்லாமே என்றதில் மகன் கொடுத்த அழுத்தம் அவரை நெற்றி சுருங்க வைத்தது. அலறும் கைபேசியில் பார்வை பதித்து விட்டு மகனைப் பார்த்தவரிடம், “அத்தை தானே? எடுத்துக் கதையுங்க.” வெளியேறினான் எழில்.

மகன் சொல்வதைத் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்த பரிமளம் விரைந்து சென்று வீட்டுத் தொலைபேசியைத் தூக்கி, “ஹலோ..” சொல்ல,

தன் கைபேசியை இயக்கி அழைப்பை ஏற்றார் ராஜசேகர்.

அடுத்த கணம் கதைத்துக் கொண்டிருந்த இருவர் பார்வையும் அதிர்வுடன் ஒன்றுடன் ஒன்று சந்தித்துக் கொண்டது.

கதைத்து முடித்து தொலைபேசியை அதனிடத்தில் வைத்த பரிமளம், தங்கைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் கணவரைப் பார்த்தவருக்கு ‘இனி என்ன நடக்கப் போகின்றதோ?’ என்று கலக்கமாக இருந்தது.

தான் நினைப்பதைச் செயலில் காட்டும் மகனில் அவருக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது.

‘அந்தப் பெண் இவனை வேண்டாம் என்று சொன்னாளாமே! அதன் பிறகும் ஸ்ரீமதியிடம், ‘அத்தை உங்க பெண்ணைக் கட்ட முடியாது. நான் வேறு பெண்ணைக் காதலிக்கிறேன்.’ என்று சொல்லி இருக்கிறானே!

இப்போது கோமதி பெரியம்மா தொலைபேசியிலேயே இந்தக் கத்து கத்துகிறார். நேரில் வருகிறாராம். ஹைய்யோ! வந்து வீட்டையே இரண்டாக்கப் போகிறார். அதற்கு முதல், இவருக்கு வரும் கோபத்தில் மகனுடன் சண்டை போடப் போகிறார்.’ மனதுள் புலம்பிக் கொண்டே பிரச்சனை தங்கள் கைமீறிப் போய் விட்டதை நினைத்தவாறே கணவரை அணுகினார்.

அங்கு, எழில் சொன்னதைச் சொல்லி அழுத தன் செல்லத் தங்கைக்கு ஆறுதல் சொல்லிக் கதைத்த ராஜசேகரும் கைபேசியை வைத்தவர், தங்கை வரப் போவதாகச் சொன்னதும், ‘அவளை எப்படி நான் பார்ப்பேன்!’ மனதில் அங்கலாய்த்துக் கொண்டார்.

மகன் எல்லாம் தெரிந்து விட்டது என்று சொன்னதிலிருந்து அவன் உண்மையைப் புரிந்து கொண்டான் என்பது அவருக்குத் துல்லியமாக விளங்கியது.

“அண்ணா அண்ணா என்று எல்லாவற்றுக்கும் என்னை நம்பியவளுக்கு நான் என் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லையா? அவள் வாழ்வில் இத்தனை வருடங்களின் பின்னர் இப்படிப் பிரச்சனைகள் வருகின்றதே! இதையெல்லாம் அவள் எப்படி எதிர் கொள்வாள்? உடைந்து போக மாட்டாளா? அடுத்து சின்னப் பெண் ஸ்வேதா...” மனம் குமுறித் தவித்த கணவரைப் பார்க்கவே பயமாக இருந்தது பரிமளாவுக்கு.

‘இவன் திரும்பவும் தன்னிஷ்டத்துக்கு ஒன்றொன்றாகச் செய்கிறானே! தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பற்றி கொஞ்சமும் யோசித்துப் பார்க்க மாட்டானா? அந்தளவு சுயநலமானவனா என் மகன்!’ மனதில் வெகுண்டார் ராஜசேகர்.

“காலங்காத்தால அவர்களுக்கு எடுத்து இப்படிச் சொல்லியிருக்கிறானே! இவன் மனதில் என்ன நினைத்து விட்டான்?” கர்ஜித்தவர் மனைவியின் சுணங்கிய முகம் பார்த்து, “யார் கதைத்தது?” என்றார்.

“கோமதிப் பெரியம்மா தான்.. கத்துறாங்க...” கண்கலங்கச் சொன்னார் பரிமளம்.

சந்தர்ப்பம் கிடைத்து விட்டால் நாட்டமை பண்ணுவது போல அதிகாரம் செலுத்தும் குணமுடையவர் கோமதி. அது தெரிந்தே, தங்கையைக் கட்டிக் கொடுத்த இடம் என்று மரியாதை கொடுத்தாலும், மிகவும் கவனமாகப் பழகுவார் ராஜசேகர். அப்படியிருக்க, அவரின் வாய்க்குள் அரைபடும் நிலையில் தாம் இன்று இருப்பதை நினைத்து கொண்டவர்,

“அவர் என்ன கத்துவது? அவர் தொடக்கி வைத்தது தான் எல்லாம். மூடி மறைத்து தங்கள் சுயநலத்துக்காக செய்தவை எல்லாம் என் தங்கை வாழ்வையும் அவள் பெண்ணின் எதிர்காலத்தையும் அல்லவா இப்போது பதம் பார்த்திருக்கு? வரட்டும் வரட்டும்.” கோபத்தில் உறுமினார்.
 
#3
Very nice ud sis.
 
#4
Seekiram adutha podunga maam
 
#5
What to do
 
#6
அடுத்த story podungo Akka
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
அடுத்த story podungo Akka
Seekiram adutha podunga maam
நன்றி நன்றி
 
Top