தொடர்கதைகள் அத்தியாயம் 11

Rosei Kajan

Administrator
Staff member
#1
தே கடற்கரை...!

இப்போது, மாலையிலிருந்த கலகலப்புகளுடன் சேர்ந்து, பகலவனின் அழகிய புன்முறுவலும் மறைந்திருக்க, இருளவன் ஸ்திரமாகத் தன் ஆதிக்கத்தை ஆரம்பித்திருந்தான்.

மாலை பிரணவுடன் இருந்து பேசிக் கொண்டிருந்த அதே இடத்தில் யாருமற்ற தனிமையில், தான் அமர்ந்திருந்த காரின் இருக்கையை நன்றாகப் பின்புறம் சரித்துவிட்டு அதில் கண்மூடிச் சாய்ந்திருந்தான் யாதவ்.

நெற்றியில் கைவைத்து கண்களை இறுக மூடியிருந்தவனின் தோற்றமே அவன் தீவிர சிந்தனையில் இருப்பதை உணர்த்தி நின்றது.

பிரணவுடன் கதைத்து, அவனுக்குத் தைரியமும் நம்பிக்கையும் கொடுத்து அவனைக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு நேரே இங்கு வந்தவன், அப்போதிருந்து இப்படித்தான் இருக்கின்றான்.

வீட்டிலிருந்து புறப்பட்ட பொழுது, ‘இன்று கட்டாயம் இவற்றை செய்து முடிக்க வேண்டும்’ என நினைத்திருந்த வேலைகளில் சிலதை நிக்கியிடம் ஒப்படைத்தவன், சிலதை நாளை பார்த்துக் கொள்ளலாமென ஒதுக்கி வைத்து விட்டு, தன் கைபேசியை அணைத்து வைத்து விட்டான். சிறிது நேரம் அமைதியாக இருந்து ஆழ்ந்து யோசிக்க வேண்டியிருந்தது அவனுக்கு.

தியாவை திருமணம் செய்வதாக தான் முடிவெடுத்தது மட்டுமன்றி, அதை அவளிடமும் தெரிவித்து, அவள் தம்பிக்கும் நம்பிக்கை கொடுத்தாயிற்றல்லவா?

இனி அதை முறையாக நடத்தி முடிக்கும் பொறுப்பு அவனுக்கு இருக்கின்றதே!

‘ஆனால், அதை எப்படிச் செய்யப் போகின்றேன்? வார்த்தைகளால் சொன்ன மாதிரி அது ஒன்றும் அவ்வளவு இலகுவானதல்லவே!’ இதுவே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

‘என் விருப்பை வீட்டில் சொல்வது மட்டுமில்லாது, அவர்களை வருத்தாது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.’ நினைத்துக் கொண்டவன்,

“அது முடியுமா...?” வாய்விட்டே கேட்டுக் கொண்டான்.

தன் வீட்டினரின் சம்மதம் கிடைத்து விட்டால், ‘எப்படியும் தியாவை சம்மதிக்க வைத்து விடலாம்...அதை அவள் அம்மா பார்த்துக் கொள்வார்.’ என்றெண்ணிக் கொண்டவன், தன் வீட்டில் யாரிடம் தெரிவிப்பது என்பதைச் சிந்தித்தான்.

நேரம் கடந்து விரைந்ததை உணராது அப்படியே இருந்தவன், தன்னைக் காணாது வீட்டினர் குழம்பித் தவித்ததை உணர மறந்து போனான்.

திடீரென்று சுற்றிலும் கவிந்திருந்த இருளை உணர்ந்தவன், அவசரம் அவசரமாக தன் கைபேசியை உயிர்ப்பித்து அதில் மாறி மாறி வந்திருந்த அழைப்புக்களைப் பார்த்ததும் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

‘இன்றைக்கு எல்லோருமாகச் சேர்ந்து என்னை வாட்டி எடுக்கப் போகிறார்கள். நானும் தான் எப்படிப்பட்ட முட்டாள் வேலை செய்திருக்கிறேன்!’ நினைத்துக் கொண்டே காரை இயக்கியவனை, கைபேசியின் ஒலி ஈர்க்க அவசரம் அவசரமாக எடுத்தான்.

“அம்மா, சாரி சாரி. இதோ பாட்டி வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.” தாயைக் கொஞ்சமும் பேசவிடவில்லை அவன்.

“தம்பி, இப்போது எங்கேயிருந்து கதைக்கிறாய்? வீட்டிலிருந்து புறப்பட்டு எங்கே போனாய்? அதுவும் இவ்வளவு நேரமாய்? ஃபோனை இப்படித்தான் ஆஃப் பண்ணி வைப்பாயா? இதென்னடா புதுப் பழக்கம்?” சரமாரியான கேள்விக் கணைகளைக் கண்டிப்புடன் தொடுத்தார் உஷா.

குற்ற உணர்வில் சிறிது நேரம் அமைதி காத்தவன், “ம்மா...நான் எங்கேயும் போகவில்லையம்மா. சும்மா பீச் வரை வந்தேனா..அப்படியே கண்ணயர்ந்து விட்டேன். இதோ பாட்டி வீட்ட போய்க் கொண்டிருக்கிறேன். போனதும் கதைக்கிறேனே.” மகனின் குரலில் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டு கொண்டார் உஷா.

“இல்ல...வேண்டாம் யாதவ். நான் இன்னமும் சாப்பிடவும் இல்லை உனக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீ இங்கேயே வா.” சொன்ன வேகத்தில் ஃபோனை வைத்தே விட்டார் அவர்.

தன் பதிலை எதிர்பாராது தாய் அலைபேசியைத் துண்டித்த வேகத்தில் இருந்தே, தாயின் மனநிலையை நன்றாக அறிந்து கொண்டான் மகன். ‘டேய் யாதவா, உனக்கு இன்றைக்கு நாள் சரியில்லை என்று தான் நினைக்கின்றேன். போய்ச் சமாளிடா..’ சொல்லிக் கொண்டே, முதலில் அருகிலிருக்கும் பாட்டி வீடு நோக்கிக் காரைச் செலுத்தினான்.

அங்கே விசாலமும் அவர் கணவர் முத்துலிங்கமும் வெளி வாயிலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். அதைக் கண்டதும் யாதவனுக்கு என்னவோ போலிருந்தது. வயோதிப காலத்தில் தன்னால் இவர்கள் இன்று குழப்பமடைந்து விட்டனரே என்று வருத்தமடைந்தவன், காரை நிறுத்தி விட்டு உள்ளே விரைந்தான்.

“சாரி தாத்தா.. விசாலம், சாரி செல்லம்..” பாட்டியை இறுகக் கட்டிக் கொண்டான்.

அவர்களோ கலவரத்துடனிருந்த தம் முகங்களைச் சீராக்கிக் கொண்டே அவனை ஆராய்ந்தனர். அதையுணர்ந்தவன், “ஹா..ஹா..என்ன தாத்தா, விசாலம் இந்தப் பார்வை பார்க்கிறா...ம்ம்ம்.....” கேலி செய்தான்.

விசாலம் முத்துலிங்கம் தம்பதிகள், தம் மகள் உஷாவின் மூன்று பிள்ளைகளிலும் கடைக்குட்டியான இவனில் தனிப்பட்ட பாசம் வைத்திருக்கின்றனர். யாதவின் அக்கா இதைச் சொல்லிச் சொல்லியே அடிக்கடி சிணுங்குவாள். “உங்களுக்கு எப்போதுமே அவன் தான் பெரிசு..” என அவள் முறுக்கிக் கொள்ளும் போதெல்லாம்,

“அப்படியெல்லாம் இல்லையம்மா. எங்களுக்கு எல்லோருமே ஒன்றுதான்.” என்று சொன்னாலும், அனைவருக்குமே தெரியும் யாதவ் என்றால் பெரியவர்களுக்குத் தனியென்று.

குறிப்பாக விசாலத்துடன் நெருக்கமதிகம் இவனுக்கு. அதுவும் உஷா சிறு விடயங்களுக்கும் கண்டிப்புக் காட்டும் போதெல்லாம், “விசாலம் விசாலம்..” என்று செல்லங் கொஞ்சிக் கொஞ்சியே பாட்டியை கரைத்துத் தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வான் யாதவன்.

இன்றோ, இரவு பேரன் வருவான் என்று சமைத்து வைத்துவிட்டுப் பார்த்திருந்தவர்கள், நேரம் செல்லச் செல்ல கொஞ்சம் கலவரமடைந்து விட்டார்கள். அதுவும் கைபேசி அழைப்புக்கும் பதிலில்லை என்றதும் விசாலம் பதைபதைத்துப் போய்விட்டார்.

மகளுடன் கதைக்கையில் இன்று கல்யாண விடயம் பேசியதையும், அவன் முடிவைச் சொல்லச் சொன்னதையும் உஷா சொல்ல, ஏற்கனவே பேரன் மனதில் நிக்கி மீது விருப்பம் இருக்குமோ என்று சந்தேகத்தில் இருந்த விசாலம், கணவரைப் போட்டு ஒரு வழிசெய்து விட்டார்.

“ஏங்க, அவன் உண்மையாகவே அந்த நிக்கியை விரும்புகிறான் போல. திடீரென்று உஷா வேறு பெண்ணை கைகாட்ட, எப்படித் தன் விருப்பத்தைச் சொல்வது என்று தயங்கிக் கொண்டு குழம்பிப் போய்விட்டான் என்று தான் நினைக்கிறேன்.” கிட்டத் தட்ட அழுதார் அவர்.

“அப்படியெல்லாம் இருக்காது விசாலம். அவர்கள் சின்ன வயதிலிருந்து பழகிய நல்ல நண்பர்கள், அதோடு இப்போது ஒன்றாக வேலையும் செய்கிறார்கள்..வேறு ஒன்றுமில்லை. அதோடு நிக்கிக்கு வேறு ஒரு பையன் இருக்கிறான்.” அவசரமாக, அதே நேரம் நம்பிக்கையுடன் மறுத்தார் முத்துலிங்கம்.

“வேறு பையன் இருந்தால்...” ஒருமாதிரிக் கேட்டுக் கொண்டே கணவரைப் பார்த்த விசாலத்தின் முகம் கடு கடுத்தது.

“என்னவோ ஒரு பையனையோ பெண்ணையோ சிநேகிதம் வைத்திருந்தால் கடைசியில் கல்யாணமும் அவர்கள் கூடவா நடக்குது..” முகத்தில் வெறுப்பைக் காட்டியவர், “எங்க காலத்தில் காதல் என்ற சொல்லைச் சொல்லவே நாங்க பயப்படுவோம். இந்தக் காலத்தில் அதுவும் இங்க...” முகத்தைக் கோணிய மனைவியைப் பார்க்க முத்துலிங்கத்துக்கு சிரிப்பாக இருந்தது.

“இப்போ உங்களுக்கு என்ன கவலை, உங்க காலத்தில் இப்படி இருக்கவில்லையே என்றா...அல்லது..” என்ற கணவரை முறைத்தவர், “ஏங்க நான் என்ன சொல்கிறேன், நீங்க என்ன பேசுறீங்க? அந்த நிக்கிக்கு வேறு சிநேகிதம் இருந்தாலும், நாளுக்கும் பொழுதுக்கும் இவனோட தானே திரிகிறாள்...” பேரன் நிக்கியுடன் திரிவதில் கொஞ்சமும் பிடித்தமில்லை பாட்டிக்கு.

“எல்லாம் உங்களால்தான். எத்தனை தடவைகள் சொல்லி இருப்பேன். சின்ன வயதில் சேர்ந்து விளையாடுவது சரி, வளர்ந்த பிறகும் ஓட்டிக் கொண்டே திரிந்தால்! அதைச் சொன்னால் எல்லோரும் சேர்ந்து என்னைப் பட்டிக்காடு என்று சொல்லுங்க...” கோபத்துடன் சொன்னவர்,

“கண்டறியாத வெளிநாடு என்று வந்து மனிசன் படும் பாடு இருக்கே!” இப்போது விரக்தி கைகோர்த்துக் கொண்டது.

“அப்படி மட்டும் அவன் சொன்னால் நான் என்ன செய்வது? ஈஸ்வரா!! முருகா!!” இப்படியே அதையும் இதையும் சொல்லிக் கலங்கிப் போனார் விசாலம். அவரைத் தேற்றுவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார் முத்துலிங்கம்.

இப்போதும் அக் கலக்கம் தீராது களைத்திருந்த பேரனின் முகத்தை ஆராய்ந்து கொண்டே, “போடா போக்கிரி. ஒருபோதும் நீ இப்படிச் செய்ததில்லையே..! காணவில்லை, போனையும் எடுக்கவில்லை என்றால் யாரும் தேட மாட்டார்களா?” என்றவர்,

“சரி வா...வந்து சாப்பிடு.” உள்ளே செல்லத் திரும்பியவாறே அழைத்தார்.

“விசாலம், அம்மா பார்த்துக் கொண்டிருக்கிறேன் வா என்றார். நல்ல ஹீட்டில இருக்கிறார். அதனால நான் அங்கே போய்ச் சாப்பிடுகிறேன். நீங்க தூங்குங்க..” என நகர எத்தனித்தான் பேரன்.

“தேவையில்லை..நான் உஷாவிடம் சொல்லி விட்டேன். அவள் காத்திருக்கமாட்டாள். நீ சாப்பிட்ட பின் அவளுடன் ஒருவார்த்தை கதைத்து விடு.”

“ஓ அப்படியா? பாட்டி என்றால் பாட்டிதான். என் செல்ல விசாலம்.” சலுகையாக செல்லங் கொஞ்சி, “சரியாப் பசிக்குது பாட்டி...ஐந்து நிமிடத்தில் குளித்து விட்டு வருகிறேன்.” என நகர்ந்தவன்,

“நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டுவிட்டீர்களா?” எனக் கேட்டு, அவர்கள் தலையசைப்பைப் பெற்றுக் கொண்டு மாடியேறும்போதே தாயை அழைத்து, “சாரிம்மா சாரி. நாளை வருகிறேன். சாப்பிட்டு விட்டு படுங்கோ...” சமாதானம் செய்யவும் மறக்கவில்லை.

தாயுடன் கதைத்துக் கொண்டே செல்பவனைப் பார்த்திருந்த விசாலம் கணவனிடம் திரும்பி, “என்னவாக இருக்கும்? எதுவோ அவனைப் போட்டுக் குழப்பி இருக்கு. அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லையோ?! அல்லது நிக்கி ..” ஆரம்பித்தவர், கணவனின் முறைப்பில் அடங்கி, பேரனுக்கு உணவை எடுத்து வைப்பதற்காகச் சமையலறை நோக்கிச் சென்றார்.

*****

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
ருவகை அசாத்திய அமைதியில் திளைத்திருந்தது தியாவின் இல்லம். இந்த சிலவருடங்களாக அடிக்கடி பிரச்சனைகளைச் சந்தித்திருந்தாலும், இன்று, வீட்டிலிருக்கும் மூவருமே வித்தியாசமான விதங்களில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கோதையோ, என்னதான் என்றாலும் கணவனைப் பார்த்து, “வெளியே போ..” என்று மகள் கூறியதையும், வாயில் புறமாகத் தள்ளி விட்டதையும் சிறிதும் ஜீரணிக்க முடியாது மிகவும் கஷ்டப்பட்டார். அதோடு சேர்ந்து, “இங்கே வரவேண்டாம், கோர்ட்டில் சந்திப்போம்.” என்ற தியாவின் வார்த்தைகள் அவரின் ஈரக்குலையை நடுங்க வைத்தது. கணவன் சென்ற விதம் அவர் மனக் கண்ணில் வந்து வந்து அவர் இதயத்தைப் பிழிந்தெடுத்தது.

வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளார் என்ற செய்தி தெரிந்த போதும், “ஆமாம் அப்படித் தான், அதற்கு என்ன செய்யப் போகின்றாய்? உன்னிடம் கிடைக்காதது அவளிடம் தாராளமாகக் கிடைக்கின்றது, அதனால் போகின்றேன்.” என்று முகத்துக்கு நேராகச் சொன்னவரை, தடுத்து நிறுத்தும் வழிதெரியாது மலங்க மலங்க விழித்த போதும், கணவர் தங்களிடையேயான உறவை முழுதாக அறுத்துக் கொள்ள முன் வரவில்லை என்பதை நினைத்து மிகவும் ஆறுதலாகவே உணர்ந்தார் கோதை.
 

Rosei Kajan

Administrator
Staff member
#3

திருமணம் செய்த நாளிலிருந்து எவ்வாறு அனைத்துக்கும் கணவனில் தங்கியிருந்து பழகினாரோ, அதேபோல கணவனை அப்படியே அவரின் அத்தனை சுபாவங்களுடனும் உயிராக நேசிக்கவும் செய்தார் கோதை. பிரதிபலனாக கணவரிடமிருந்து அன்பின் வாசத்தை நுகராமலே அவரை மிகவும் நேசித்தார்.

ராஜேந்திரனின் கேலிப் பேச்சுக்களும், கிண்டல்களும் மிகவும் பழகிப் போன ஒன்று கோதைக்கு.

அவரைப் பொறுத்தவரை அவர் எப்படித் தன் குழந்தைகளைக் கண்ணாகப் பார்த்துக் கொண்டாரோ, அப்படியே தன்னவரையும் ஒரு மனையாளாக அருமையாக கவனித்துக் கொண்டார்.

ஆனால், அது இத்தனை வருடங்களுக்குப் பிறகு கணவனுக்கு திருப்தியளிக்கவில்லை என்றதும், அதற்கு என்ன தான் செய்ய முடியும் என்று ஓய்ந்தவரால், எக்காரணம் கொண்டும் கணவன் மேல் கொண்ட நேசத்தை மட்டும் அழித்துவிட முடியவில்லை. தன்னுயிர் இருக்கும் வரை அது அழியுமென்றும் அவருக்குத் தோன்றவில்லை.

ராஜேந்திரனும், “உன்னை விவாகரத்துச் செய்து விடுவேன்.” என்று மிரட்டி வந்தாலும், அதற்கு முனையவில்லையே! “அதற்கான காரணங்கள் இவைதான்மா..உங்களுக்கு அவரின் பித்தலாட்டமும் ஏமாற்றும் விளங்குதில்லையே!” என்று பிள்ளைகள் எதை எதையோ கூறினாலும், என்றாவது கணவன் தன்னிடம் திரும்பி வந்து விடுவார் என்ற கோதையின் நம்பிக்கையின் அடித்தளமே கணவனின் அந்த செய்கைதான்.

ஆனால் இன்று அதற்கும் மகள் வேட்டு வைத்து விட்டாளே!

அழுகையில் கரைந்தவர், யாதவுடன் சென்ற பிரணவ் உள்ளே வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை.

திரும்பி வந்த பிரணவும் அவன் இருந்த மனநிலையில் கொஞ்சநேரம் தனிமை தேவைப்படவே, தன்னறைக்குள் புகுந்து விட்டான்.

நீண்ட நேரத்தின் பின்னர் வெளியில் வந்த பிரணவ், அழுது வீங்கிய முகத்துடன் இருந்த தாயின் அருகில் வந்தமர்ந்து, “அம்மா..” மெல்ல அழைத்துக் கொண்டே அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

மகனின் தோளில் சாய்ந்த கோதைக்கு கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல் துயரம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

“மா, விடுங்கம்மா. அவர் இப்போது தன்னிலை மறந்து திரிகின்றார். இங்கு நடந்ததை மறந்துவிட்டு எங்காவது குடித்துக் கொண்டிருப்பார். அந்த..” சொல்லிக் கொண்டு வந்தவன், தாயின் பார்வையில் மீதி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

“அம்மா, நான் இப்போது சொல்வதைக் கேட்டால் நீங்களே சற்று முன் நம்ம வீட்டில் நடந்தவற்றை ‘ப்பூ’ என்று ஊதி விட்டு விடுவீர்கள்.” மகிழ்வு நிறைந்த குரலில் சொன்ன மகனை கேள்வியாக நோக்கினார் கோதை .

“மா, யாதவ் அண்ணா ஏன் அழைத்துச் சென்றார் தெரியுமா?” மாடிப்படியை ஒரு பார்வை பார்த்தவாறே, தணிந்த குரலில் கேட்டான் பிரணவ்.

“ஏன்யா? நான் அதைச் சுத்தமாக மறந்து போனேன்பார்! ஏதாவது பார்ட் டைம் வேலை கேட்டிருந்தாயா?”

“ஹைய்யோ!! இல்லையில்லை....” என்றவன், தாயை இறுகக் கட்டிக் கொண்டான்.

“டேய் தம்பி, விடு விடு. இப்படி இரும்புப்பிடி பிடிக்காதே.” திமிறி விடுவித்துக் கொண்டவர், “அப்போ ஏன் வந்தான்?” என்றவர் குரலில் ஆவல் குடி வந்திருந்தது.

தாயின் ஆவலைக் குறைக்காது யாதவன் அழைத்துச் சென்றதிலிருந்து நடந்தவை அனைத்தையும் பொறுமையாக எடுத்துச் சொன்னான் பிரணவ். கேட்டிருந்த கோதையோ பிரமித்துப் போனார்.

அண்மைக் காலமாக தன் வாழ்வில் பல கஷ்டங்களைச் சந்தித்து வந்தாலும், அதையெல்லாம் பின்தள்ளும் வகையில் மகளைப் பற்றிய கவலை இப்போது அவரை அரிக்கத் தொடங்கியிருந்தது. தன் செல்ல மகளுக்கு பொருத்தமான ஒரு மணவாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருந்தவருக்கு, கொஞ்சமும் எதிர்பாராத இடத்திலிருந்து வரமாக வந்த வரனாகவே யாதவ் தெரிந்தான்.

“உண்மையாகவே தம்பி தியாவைத் திருமணம் செய்ய விருப்பம் என்று சொன்னானாய்யா?!!” மகன் சொன்னவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பின்னரும் வினவினார் கோதை. அவன் போகும் பொழுது ஒருபோதும் இல்லாதவகையில் கூறிய ஆறுதல் நினைவில் வந்து, மகன் கூறுவதை நிச்சயம் செய்து கொண்டது.

“ஆமாம்மா ஆமாம். எனக்கும் முதல் அவர் சொல்லிக் கேட்கையில் இப்படித்தான் நம்ப முடியாமலிருந்தது. இப்போது தான்மா மனம் லேசாக இருக்கு!” ஆசுவாசமாகச் சொன்ன பிரணவ்,

“இனிமேல் அத்தான் என்று உரிமையாகவும் துணிவாகவும் சொல் என்றார்மா.” என்றவன் பார்வை தாயின் முகத்தில் நிலைத்தது. அவரும் கலங்கும் கண்களுடன் மகனையே பார்த்திருந்தார்.

“தான் இன்னும் வீட்டில் சொல்லவில்லையாம், அவர்களிடம் கதைத்துவிட்டு முறையாக வந்து உங்களுடன் கதைப்பதாகச் சொல்லச் சொன்னார்.” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, மாடிப்படிகளால் விரைந்து இறங்கி வந்தாள் தியா.

அவளைக் கண்டதும், சட்டென்று தம் பேச்சுக்குக் கோணல் மாணலாக முற்றுப்புள்ளி வைத்தனர் தாயும் மகனும்.

கன்றிச் சிவந்த முகத்துடன் கீழே வந்து முறைத்துக் கொண்டு நிற்கும் மகளை ஒருவிதத் தவிப்புடன் ஏறிட்டார் கோதை.

அவளோ தாயை விட்டுத் தம்பியை தீயாகச் சுட்டாள். “பிரணவ், எப்போதிருந்து நீ இவ்வளவு பெரியவனானாய்?” கேட்டவளின் தொனி அவனை நன்றாகவே கேலி செய்வதை உணர்ந்திருந்தாலும், கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல், “நான் என்ன சின்னப் பிள்ளையாக்கா?! அல்லது எப்போதாவது சிறுவனாக நடந்து கொண்டிருக்கிறேனா?” பதிலுக்குக் கேலியாகவே கேட்டான் அவன்.

“ஓஹோ அப்படியென்றால் நீ பெரியவன் என்று சொல்கிறாயா?” தியாவின் குரல் இப்போது இறுகிப் போயிருந்தது.

“அப்படிப் பெரியவன் என்றால், யாரோ ஒருத்தன் வந்து உன் அக்காவை நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். என்னை அத்தான் என்று அழை என்றால், லாலிபாப் கிடைத்த சிறுவன் போல இப்படிச் சந்தோசப்பட மாட்டாய் பிரணவ்.” அதே இறுகிய குரலில் சொன்ன தமக்கையை இப்போது முறைத்தான் அவள் செல்லத் தம்பி.

“போக்கா..அவர் ஒன்றும் யாரோ ஒருத்தன் இல்லை...” கண்டிப்புடன் சொல்லத் தொடங்கியவனை கை காட்டி நிறுத்தியவளின் பார்வை, மௌனமாக இருக்கும் தாயைக் கூர்மையாகத் துளைத்து மீண்டது.

“ஏன்மா வருகின்றவன் போகின்றவன் எல்லோரும் பரிதாபம் பார்க்கும் வகையிலா என் வாழ்க்கை இருக்கு? அல்லது எனக்கு கல்யாணம் நடக்கவில்லையே என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேனா?” கேட்டவளுக்கு, குரல் அடைத்தது.

“இதெல்லாம் என்ன பேச்சு தியா! உன்னை யார் அப்படிச் சொன்னது? வளர்ந்த பெண் பிள்ளைகள் இருந்தால் கல்யாணப் பேச்சை எடுப்பார்கள் தான்..” சொல்லிக் கொண்டு வந்தவரை இடைவெட்டியது மகளின் குரல்.

“அந்தத் திமிர் பிடித்த ஆள், என் பாட்டில் வந்து கொண்டிருந்த என்னை மறித்து என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா?” கோபமும் ஆத்திரமுமாக வெடித்த தமக்கையை, ஒருபோதும் இல்லாதவகையில் முறைத்தான் தம்பி.

“அக்கா, சும்மா அவரை எதுவும் சொல்ல வேண்டாம். அவர் தன் விருப்பத்தை உன்னிடம் சொன்னார். அதில் எங்கக்கா திமிரும், பரிதாபம் பார்ப்பதும் வருது ..?

“அவர் என்ன கதைத்தார் என்று தெரியாமல், அவரின் உளறல்களைக் கேட்டுக் கொண்டு வந்து, என்னுடன் கதைக்காதே பிரணவ்! நான் ஒருபோதும் அவரைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்க மாட்டேன். அதுமட்டும் இல்லை, என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பார்..” என்றவள்,

“அம்மா உங்களுக்கும் தான், இனி என் கல்யாணம் பற்றிக் கதைக்க வேண்டாம்.” கடினத்துடன் சொல்லி விட்டுத் திரும்பியவளை, “தியா..” என்ற தாயின் கண்டிப்புக் குரல் நகரவிடாமல் நிறுத்தியது.

“அந்தத் தம்பி அப்படிக் கேட்டான் என்றதும் நான் எவ்வளவு நிம்மதி அடைந்தேன் தெரியுமா? இதை விடப் பொருத்தமான மாப்பிள்ளை உனக்குக் கிடைக்க மாட்டார்மா. உன் நல்லது கெட்டதைப் பார்க்கும் பொறுப்பு எனக்கிருக்கு என்று நான் நினைக்கின்றேன். அப்படி இல்லையா தியா? அந்த உரிமை எனக்கில்லையா? அல்லது இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் அம்மாவால் எதைச் செய்ய முடியும் என்று நினைக்கின்றாயா?” கண்டிப்புடன் ஆரம்பித்து தழுதழுத்தார் கோதை.

அதைப் பார்த்ததும் தாயின் அருகில் வந்தமர்ந்து கொண்ட தியா, “அம்மா நான் என்ன சொன்னேன் என்று உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கின்றேன். என்னில் எல்லா உரிமையும் உங்களுக்கு...உங்களுக்கு மட்டும் தான்மா இருக்கு.” தாயை அணைத்துக் கொண்டவள்,

“ஆனால், அந்த அந்த...” சொல்லி நிறுத்தியவளின் மனதில் யாதவின் முகம் தோன்றி மறைய, உள்ளே ஒருவகை கோபம் அவன் மீது உருவானது.

‘நான் சொன்னதைச் செய்தே தீருவேன், அதற்கு உன் விருப்பு வெறுப்பு முக்கியம் இல்லவே இல்லை என்பது போலல்வா நடந்து கொள்கின்றார் இவர். நான் அவ்வளவு சொன்ன பின்னரும் தம்பியிடம் இப்படிக் கதைத்திருக்கின்றாரே! உனக்கு வேறு வழியே இல்லை, விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் என்னை ஏற்க வேண்டும் என்பது போலல்லவா இவர் நடவடிக்கை இருக்கு? பார்ப்போமே அவரால் இது எப்படி முடியும் என்று?’ மனதில் கறுவிக் கொண்டாள்.

“அவர் என்னிடம் கதைக்கும் பொழுது என்ன சொன்னார் தெரியுமா அம்மா...! ஒரு வியாபாரம் பேசுவது போலவே பேசினார்மா. அண்ணியின் அண்ணாவை எனக்கு கேட்டிருப்பதைச் சொல்லி, தனக்கும் பெண் பார்க்கிறார்களாம். இலங்கையிலிருந்து பெண் வருவதைவிட நீ இன்னென்ன விதங்களில் பொருத்தமாக இருப்பாய், அதனால் கல்யாணம் செய்து கொள்வோமா என்று கேட்டு விட்டு அதே வேகத்தில்,” நிறுத்தியவள் முகம் கோபத்தில் கன்றியது.

“நான் உன்னை விரும்பினேன் அப்படி இப்படி என்று எதுவும் நினைத்துவிடாதே, என்றார்மா. அந்த நேரம் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே.” பற்களைக் கடித்தாள்.

“எனக்கு வாழ்க்கை கொடுக்கும் பாவனையில் பேசியவரை நான் ஒருபோதும் திருமணம் செய்ய முடியாது. முதல் இதற்கெல்லாம் அவர்கள் வீட்டில் சம்மதிப்பார்கள் என்றா நினைக்கிறீங்க?” ஏளனமாகக் கேட்டாள்.

“அவர்கள் நம்மையெல்லாம் கொஞ்சமும் மதிப்பதே இல்லை. அதுவும் உங்களுக்குத் தெரியும்” கண்கலங்கச் சொன்னவள், குமுறும் உள்ளத்தை மறைக்கும் முகமாக விருட்டென்று அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டாள்.

‘அவர்கள் இல்லையம்மா...உன் அப்பா தான் யாரையும் மதித்ததும் இல்லை. உங்களைப் பழக விட்டதும் இல்லை.” மனதில் வருத்தத்துடன் நினைத்துக் கொண்டார் கோதை.

அப்போதுதான் பிரணவுக்கும் இதே வார்த்தையை தன்னிடமும் யாதவ் பாவித்ததாக நினைவு வந்து ‘ஆக...அவர் மட்டில் சிக்கலில் தவிக்கும் பெண்ணிற்கு உதவுவோம் என்று தான் இந்த முடிவு எடுத்தாரா?’ என்று நினைத்தவனால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

‘சரி அப்படியே இருந்தாலும், விருப்பம் இல்லாது யாராவது கல்யாணம் செய்து கொள்ள முனைவார்களா? ச்சா..ச்சா..அவர் தன் மனத்திலுள்ளதைச் சொல்லத் தெரியாமல் இப்படிச் சொல்லி விட்டார் போல. இந்த அக்கா அதைப் பிடித்து தொங்குறா!’ என்று தன் மனதைச் சமாதானம் செய்து கொண்டவன், சற்றுமுன் ஏற்பட்டிருந்த சந்தோஷம் வடிய அமர்ந்திருந்த தாயிடமும் அதையே சொல்லிச் சமாதானம் செய்வித்தவன்,

“அவர்கள் வீட்டில் கதைத்துச் சம்மதம் வாங்குவது தன் பொறுப்பு என்றார்மா. அதனால் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் அத்தானே பார்த்துக் கொள்வார்.” என யாதவனை மிகவும் நம்பிக்கையாக அத்தான் என்று விழிக்க, அந்த நம்பிக்கை கோதையின் மனதிலும் மெல்ல ஊன்றத் தொடங்கியது.
 
#4
ஜெயிக்க போவது யாதவா? தியாவா?
 
#5
Nice
 
#6
கோதை பாவம் என்ன செய்வது மனிதர்கள் பலவிதம் அக்கா
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
ஜெயிக்க போவது யாதவா? தியாவா?
கோதை பாவம் என்ன செய்வது மனிதர்கள் பலவிதம் அக்கா
மிக்க நன்றி ரேவா , ஹமிஸ்டா , அனுஷா
 
Top