தொடர்கதைகள் அத்தியாயம் 10

Rosei Kajan

Administrator
Staff member
#1
ணவனை மதிக்காது துச்சமாகக் கதைத்துவிட்டாள் என்று மகளை அறைந்த கோதை, தான் அவ்வளவு கெஞ்சியும், அவமானத்தாலும் ஆத்திரத்தாலும் முகம் கன்ற கணவன் கோபத்துடன் செல்ல, செய்வதறியாது திகைத்து நின்றது என்னவோ சிலநிமிடங்கள் தான்.

பின் ஆவேசமாக உள்ளே வந்தவர், தாயிடம் அடிவாங்கிய அதிர்வு மாறாது நின்ற மகளையும், அவளருகில் என்ன நடந்தது என்று விளக்கம் கேட்டு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்த மகனையும் பார்த்ததும் மீண்டும் இழுத்து வைத்து ஒரு அறை விட்டார் மகளுக்கு!

“அம்மா உங்களுக்கு என்னம்மா நடந்து விட்டது? இப்போ ஏன் அக்காவை அடிக்கிறீங்க? அதுவும் அந்தாளுக்காக? அவரெல்லாம் ஒரு அப்பாவா? அப்படியிருந்தால் அக்காவைப் பிடித்து பாழும் கிணற்றில் தள்ளப் பார்ப்பாரா? இன்னும் நாலு கேள்வி கேட்டு அனுப்பியிருக்க வேண்டும் அக்கா. நான் கொஞ்சம் முதல் வந்திருந்தால், இன்றைக்கு நடப்பதே வேறு. எத்தனை நாட்களுக்குத்தான் சுற்றம் சூழல் என்று நாங்களும் அமைதியாக இருப்பது?” வெறுப்புடன் சீறினான் பிரணவ்.

“இவள் செய்த காரியத்துக்கு அடிக்காது கொஞ்சவாடா வேண்டும்? அதென்னடா அந்தாள்...கொஞ்சம் முன்னர் வந்திருந்தால் அப்படி என்னடா செய்திருப்பாய்?” பதிலுக்குச் சீறினார் கோதை.

“பெற்ற தந்தையைப் பார்த்து சொல்லும் வார்த்தையா சொன்னாள்? அவரை வெளியே போ, கோர்ட்டில் சந்திக்கலாம் என்று சொல்லும் அதிகாரத்தை இவளுக்கு யார் கொடுத்தது? அந்தளவுக்கு வளர்ந்து விட்டீர்கள் என்ன?” என அழுகையுடன் கேட்ட தாயை, அதிர்ந்து போய்ப் பார்த்தனர் பிள்ளைகள்.

“எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து இத்தனை வருடங்களும் உங்களைப் வளர்த்து விட்டார்! அதெல்லாம் மறந்து, இப்படிப் பேச உன்னால் எப்படிடீ முடிந்தது? அதுவும் என் கண் முன்னால்..” சொல்லிக் கொண்டே தொய்ந்து அமர்ந்தவரை, ஓடிச் சென்று கட்டியணைத்துக் கதறி விட்டாள் தியா.

மகளை அணைத்துக் கொண்டவர், அவள் முகத்தை வருடிக் கொண்டே தானும் அழுது தீர்த்து விட்டார்.

தாயையும் தமக்கையும் பார்த்துக் கொண்டு நின்ற பிரணவின் கண்களும் கலங்கி விட்டன. அப்படியே தலையைக் கைகளில் தாங்கிக் கொண்டு அமர்ந்து விட்டான் அவன்.

“சாரிம்மா..என் செல்லத்தை அடித்து விட்டேனே...! கோபிக்காதேடா..” அரட்டியவர், “எப்படிம்மா உன்னால் அப்பாவின் முகத்துக்கு நேராக அப்படிச் சொல்ல முடிந்தது? அவர் அப்படியே உறைந்து விட்டாரடி. உன் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தையை அவர் கடைசிவரை எதிர்பார்த்திருக்க மாட்டார்..” சொன்னவரின் கண்கள் மாலையாக நீரைச் சொரிந்தது.

“நீ அவ்வளவு பேசிய பிறகும் உன்னை அடித்துவிட்டேன் என்று கோபப்பட்டார்டி..” கணவன் அதட்டியதை நினைத்துக் கொண்டே சொன்னார்.

“மா...!! எல்லாம் நடிப்பும்மா..அதையெல்லாம் இன்னுமா நம்புறீங்க?! அவர் உங்களை தன் கால் தூசுக்கும் மதிப்பதில்லையே! அப்படியிருக்க...எப்படிம்மா இன்னமும் அவருக்காக இப்படிப் பேச முடியுது?” ஆச்சரியம் கலந்த அழுகைக் குரலில் கேட்ட மகளைப் பார்க்காது, எதிரில் சுவரில் மாட்டியிருந்த தங்கள் குடும்பப்படத்தையே வெறித்தார் கோதை.

தமக்கை கேட்டதையே பிரணவ் மனமும் பிரதிபலித்து நின்றது. ‘அம்மா, அப்பாவில் கொண்ட நேசத்தை அறியாதவர்கள் அல்ல நாங்கள். அதற்கு இம்மியும் குறையாத பாசம் கொண்டிருந்தவர்கள் தானே நாங்களும்!’ பெருமூச்செறிந்தான் அவன்.

உறவென்று யாருடனும் பழகி அறியாததாலோ என்னவோ, இவர்கள் ஐவரும் மிகவும் நெருக்கமாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். சிறுவயதில் தந்தை தாயைக் கேலி செய்தால், தாமும் சேர்ந்து கேலி செய்வார்கள் இளையவர்கள் இருவரும். அப்போதெல்லாம் மாறன் மட்டுமே தாயுடன் ஒன்றிக்கொண்டு அமைதியாக இருப்பான்.

“அப்பா” என்றாலே பிள்ளைகள் மூவருக்குமே ஒருவித பெருமை! அவர் உருவத்தில், நடத்தையில், பேச்சில் என்று அப்படி ஒரு வசீகரம்! “இவர்தான் எங்கள் அப்பா..” என்பதையே ஒரு வித அகங்காரத்துடன் நினைத்துக் கொண்டவர்கள் இவர்கள்.

‘ஆனால் இன்றோ!? இந்நிலையை உருவாக்கிக் கொண்டவரும் அவர்தானே!’

‘கண்டதும் விலகிக் கடந்திருக்க வேண்டிய சலனம் என்ற விதையைத் தன்மனதில் ஊன்றிய கணம்’,

‘அது மெதுவாக முளைவிட மகிழ்ந்து நீரூட்டி வளர்த்த கணம்’,

“இது அற்பப் பதர், பிடுங்கி ஏறிந்துவிடு!” என்ற உற்றவர் எச்சரிக்கையை உதாசீனம் செய்த கணம்,

‘தான் ஆசையாக வளர்த்த குடும்பமெனும் விருட்சம் கவனிப்பின்றிக் காய்ந்து சருகாகினாலும் கவலையில்லையென்று, சலனத்தின் சௌந்தர்யத்தில் மயங்கி, அதன் நிழலில் இளைப்பாரத் தொடங்கிய கணம்....எங்களுக்கும் அவருக்குமிடையில் இருந்த பிணைப்பெல்லாம் ஆட்டம் கண்டு அறுந்து விட்டதே!’ நினைத்தவன் உள்ளமதில், வேதனையும் மீறிய சினம் துளிர்த்தது.

‘அதன் பின்னரும் அவரைப் பாராட்டிச் சீராட்டினால், அவரின் அத்தனை துரோகச் செயல்களையும் நாங்களும் மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகாதா??’

‘கணவனால் இந்தளவுக்கு கேவலப்படுத்தப்பட்ட பின்னரும், தனக்குரிய இடத்தில் மகளைப் போலுள்ள ஒருத்தியை அவர் வைத்துப் பார்ப்பதை அறிந்து கொண்ட பின்னரும், கண்ணால் கண்ட பின்னரும், கணவனே கண்கண்ட தெய்வம், எல்லாம் கிரகம் செய்யும் வேலை என்றிருந்தால், “நீ ஒரு அரைப்பைத்தியம்..உன்னைக் கட்டி நான் இதுவரை பட்டதே போதும்.” என்ற கணவனின் கூற்றை உண்மையாக்குவது போலாகாதா?’ தாயிடம் பெருங்குரலெடுத்துக் கேட்க நினைத்து, முடியாமல் சோர்ந்தான் பிரணவ்.

மூத்தவன் மாறனுக்கோ, தாய் மனதில் படும் அவஸ்தையைப் பார்த்து வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டவோ, தந்தையை எதிர்க்கவோ, மனைவியிடம் இருந்து அனுமதியும் இல்லை, அவனாலும் அது முடியாது.

என்றாலும், “அம்மா, உங்கள் விடயத்தில் தீர்வு காண்பது உங்கள் கைகளில் மட்டுமே உண்டு. மற்றவர்கள் எதுவுமே செய்ய முடியாது. அப்பாவுக்கு எதிராக யார் வந்தாலும்...எது செய்ய முயன்றாலும் முதல் தடைபோடுவது நீங்கள் தானே..!” என்றவன், அதன் பின் மௌனத்தைப் போர்த்துக் கொண்டு திரிகிறான். அதுதான் மாறன்.

அவனைப் போல இளையவர்களால் இருக்க முடியவில்லை. அவர்கள் தம் தாயைக் கலங்காது வைத்திருக்கவே விரும்பினார்கள். ஆனால், ‘கணவன் நிழலில்தான் நான் கலக்கமற்று இருப்பேன்.’ என்று அவரோ அடம் பிடிக்கின்றாரே!

தாயின் கணவன் பாசத்தைப் பார்த்து வியந்தாலும், தாயின் முட்டாள்தனம் பிள்ளைகளின் பொறுமைக்கு பெரும் பரீட்சை வைத்து, அவர்களை திக்கு முக்காட வைக்கின்றது என்பதுதான் உண்மை.

தந்தையின் இப் போக்கு தாயை உருக்குலைத்திருந்தாலும், ‘அவரை நிரந்தரமாகப் பிரிந்தால், அம்மாவின் நிலை என்னாகும்?’ நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவர்களால்.

அதேநேரம், அவரை ஒரு மனிதனாகப் பார்க்கவோ மன்னிக்கவோ முடியவும் இல்லை இளையவர்களால். இப்போது பெற்ற மகளுக்கே அவர் சிபாரிசு செய்யும் மணவாழ்க்கை, அவர் மேல் உள்ள வெறுப்பின் உச்சத்தை தொட வைத்தது.

“அவர் என்னை மதிக்கவில்லை, மனிஷியாகப் பார்க்கவில்லை என்பது சரி தியா. ஆனால், பதினெட்டு வயதில் அவரை நம்பி இங்கு வந்த என்னுடன் இருபது வருடங்களுக்கும் மேலாக உண்மையாகத்தான் வாழ்ந்தார்.” புகைப்படத்தில் இருந்த விழிகளை அகற்றாது சொன்னவரையே பார்த்திருந்தனர் பிள்ளைகள்.

“இந்த சிலவருடங்கள் அவர் போக்கு தடம் மாறியதை வைத்து, மொத்தமாக அவருடன் வாழ்ந்த வாழ்வை அசிங்கப்படுத்த நான் கொஞ்சமும் தயாரில்லை தியா. இதையெல்லாம் விளங்கிக் கொள்ள உங்களாலும் முடியாதும்மா.” சொன்ன கோதை,

மகள் கண்களின் வடியும் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டே குழந்தைக்குச் சொல்வது போல சொன்னார்.

“புரையோடிப் போன காயம் என்றாலும், தெரிந்ததும் அது இருக்கும் அங்கத்தையே வெட்டி விடுவோமா? அல்லது எப்படியும் குணப்படுத்த முயல்வோமா சொல்லு...? அப்படித்தான் நானும். அவர் எப்படியும் என்னிடம் வந்திடுவார் என்று, அதற்கு இறைவன் துணையைத் தேடி நிற்கின்றேன்.” தழுதழுத்தார்.

வேதனையில் குளித்த விழிகளுடன், வருத்தம் தோய்ந்த குரலில் தாய் சொல்வதையே அசையாதிருந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள்.

“ஏனென்றால் எனக்கு வேறுவழி தெரியவில்லையேம்மா. நான்..நான் ஒரு முட்டாள்ம்மா..அடி முட்டாள். கட்டிய கணவனை தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத முட்டாள்.”

“அவரை நீ கோர்ட்டில் சந்திக்கலாம் என்று சொல்லி விட்டாயே! இனி நான் என்ன செய்வதும்மா?” இயலாமையில் ஒலித்தது அவர் குரல்.

வேதனையில் அரட்டும் தாயைத் தேற்ற முனைந்த அந்நேரம் பார்த்து, பிள்ளைகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியது பிரணவின் கைபேசி!

அவசரமாக எடுத்துப் பார்த்தவன் அதில் ஒளிர்ந்த யாதவின் பெயரைப் பார்த்ததும் நெற்றி சுருக்கினான்.

‘ஏன் எடுக்கிறார்?’ நினைத்தவாறே அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹோய்(ஹாய்) பிரணவ்...” என்றவன் தொடர்ந்து, “சொல்லுங்கண்ணா..” என்றவாறே இருக்கையிலிருந்து எழ, அவனிடமிருந்து கைபேசியைப் பாய்ந்து பறித்தாள் தியா.

“டேய்ய்ய்...உனக்குச் சொன்னால் புரியாதாடா? நீயெல்லாம் ஒரு மனிஷன் என்று சொல்லிக் கொள்ள உனக்கு வெட்கமாக இல்லையா? இனி உனக்கும் எங்களுக்கும் ஒரு தொடர்பும் தேவையில்லை. இன்னொருதரம் என் விடயத்தில் தலையிட்டாயோ, நடப்பதே வேறு! இவ்வளவும்தான் உனக்கு மரியாதை. நினைவில் வைத்துக் கொள். என் முன்னால் மட்டும் இப்போ வந்தாயானால் கன்னம் பழுத்திருக்கும் லூசு...நாய்...” கிறீச்சிட, அதை மறுபுறம் இருந்து கேட்டவனோ முழி பிதுங்கி அதிர்ந்து போனான்.

‘நா...ன்..என்னயா...?!! திவ்யாவா...இப்படி?!’ அவன் மனம் திடுக்கிடலுடன் பெரும் குரலில் அலறியது.

தமக்கை கைபேசியை பறித்த வேகத்தில் ஆவேசமாகத் திட்டத் தொடங்க, ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்று விட்டான் பிரணவ்.

அவன் சுதாகரித்து, “அக்கா..வேண்டாம்..” அலற, அவளோ தள்ளி நடந்து கொண்டே திட்டித் தீர்த்து விட்டாள்.

அவளருகில் பாய்ந்து வந்தவன் கைபேசியைப் பறிக்க முயல்கையில், அவளே பேசி முடித்த வேகத்தில் அணைக்க முயன்றவள், “திவ்யா...நான்..யாதவ்..” கணீரென்று ஒலித்த குரலில் உச்ச கட்டமாக அதிர்ந்து நின்றாள்.

 

Rosei Kajan

Administrator
Staff member
#2
சட்டென்று தன்னருகில் நின்ற தம்பியைக் கேள்வியும் குழப்பமுமாகப் பார்த்து, “நான்..நான்..மாறன்..அண்ணன் என்று..” மென்று விழுங்கியவள், அவன் கையில் கைபேசியைக் கொடுத்த வேகத்தில் தன்னறை நோக்கி மேலே ஓடி விட்டாள்.

“யாதவ் அண்ணா ..சாரி சாரி. வெரி சாரி. அக்கா, மாறன் அண்ணா என்று நினைத்து விட்டாள். நானும் உங்களிடம் சொல்லுங்கண்ணா என்றேனா அதுதான். நீங்க எடுப்பீங்க என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாள். சாரிண்ணா..சாரி” திரும்பத் திரும்பச் சொன்னவனிடம்,

“பரவாயில்லை பிரணவ். நான் உன் வீட்டுக்கு முன்னால் உள்ள பார்க்கிங்கில் தான் நிற்கிறேன். ஒருதரம் வந்து விட்டுப் போ.” அழைத்தான் யாதவ்.

“ஏன்?” தொடங்கியவன், கேள்வியாகப் பார்த்த தாயிடம், “ யாதவ் அண்ணா அம்மா. இதோ வருகிறேன்...” சொல்லிக் கொண்டே விரைந்து ஓட்டமாக வெளியேறினான்.

பிரணவ் வருவதைக் கண்டதும் எக்கித் தன்னருகுக் கதவைத் திறந்து விட்டு, “ஏறு பிரணவ்...” என்றவனைக் கேள்வியாகப் பார்த்தவாறே ஏறியமர்ந்தவனின் பார்வை சட்டென்று தங்கள் வீட்டில் படிந்தது. அவன் நினைத்தது போலவே கோதை வாயிலருகில் வந்து நின்றவாறே, காரில் மகன் ஏறியதைப் பார்த்து நின்றார்.

அதைக் கண்ட யாதவ் சட்டென்று காரை விட்டு இறங்கி கோதையை நோக்கிச் செல்ல, அவன் தங்கள் வீட்டை நோக்கி வருவதை உணர்ந்து வாயிலைத் திறந்தவரிடம், “ஒரு அரை மணிநேரம் பிரணவை அழைத்துச் சென்று வரவா? பீச் வரை.. கொஞ்சம் பேச வேண்டும்.” கோதையின் கன்றிய முகத்தையும், வீங்கிச் சிவந்த கண்களையும் அவதானித்துக் கொண்டே கேட்டான்.

“ஆங்..சரி..தம்பி..அழைத்துக் கொண்டு போ..” என்றவர், “ஏன் தம்பி, ஏதாவது பிரச்சனையா? இல்...லையே!” அழையாதவன் வந்தழைத்ததில் தடுமாறினார்.

“ச்சா...ச்சா அப்படியெல்லாம் இல்லை. ஒரு சின்ன வேலை விடயமாகப் பேச வேண்டும். அவ்வளவும் தான்..” முயன்று சாதாரணமாகவே சொன்னவனிடம்,

“தம்பி... அவள் அண்ணன்காரன் என்று நினைத்து, பிள்ளை..தவறி உன்னிடம் கத்தி விட்டாள். குறை நினைக்காதே...” மறக்காது மன்றாடலாக வந்தது கோதையின் குரல்.

“ஹைய்யோ இதென்ன நீங்க. அதெல்லாம் ஒன்றுமே இல்லை. நீங்க இப்படி என்னிடம் கேட்கத் தேவையுமில்லை.” சட்டென்று அவர் கரங்களைப் பற்றி ஆதரவாகக் கூறியவன், “நீங்க யோசியாமல் இருங்க..நான் இன்னும் அரை மணியில் பிரணவை அழைத்து வந்து விடுகின்றேன்..” சொன்னவன், அவரைத் தோளோடு இறுக அணைத்து “கவலைப்படாதேங்க எல்லாமே சரியாகிடும்.” என்றவன் குரலிலிருந்த ஆறுதல் ஏனோ கோதையின் நெஞ்சை அப்படியே நிறைத்தது.

“போயிட்டு வாரேன்.” சொல்லிக் கொண்டே ஓடிச் சென்று காரில் ஏறிச் செல்ல, கண்கள் கசிய பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் கோதை.

அந்நேரம் பார்த்து இவர்களின் பக்கத்து வீட்டுத் தம்பதியினர் நாயுடன் வெளியே வந்தவர்கள், கோதையைக் கண்டதும் வழமைபோல சிநேகமாக முறுவலித்துவிட்டு கைகாட்டிச் செல்ல, பதிலுக்கு கைகாட்டிப் புன்னகை புரிந்தாலும் கோதைக்கு மிகவும் அவமானமாகவும் வருத்தமாகவும் இருந்தது.

இப்போதெல்லாம் இவர்கள் வீட்டில் கேட்கும் சண்டைப்பேச்சும், சத்தமும் நிச்சயம் அருகிலுள்ள வீடுகளையும் எட்டுமே! அதை நினைத்துக் கொண்டவரின் விழிகள் மீண்டும் நிறைய, “எப்படி இருந்த வீடு? இன்றைக்கு இப்படி சில்லங்கெட்டு நிற்குதே!” வாய்விட்டே புலம்பிக் கொண்டு உள்ளே நகர்ந்தார்.

*****

ருகில் பத்து நிமிட காரோட்டத்தில் இருந்த கடற்கரையை நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்த யாதவை திரும்பிப் பார்த்தான் பிரணவ்.

சற்று முன்னர் வீட்டில் நடந்த குழப்பம் அவன் மனதைக் கனக்க வைத்தாலும், ‘இவர் ஏன் என்னை அழைத்துச் செல்கின்றார்? என்னிடம் தனியாகப் பேசும் அளவிற்கு அப்படியென்ன இருக்கு?’ விளங்காதவனாகத் தடுமாறியவனுக்கு, காரோட்டுவதில் கவனமாக இருந்த யாதவின் முகத்திலிருந்து எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

அணைக்கட்டால் ஏறி காரை நிறுத்தியவன், மௌனமாக முன்னால் ஆர்ப்பரித்துக் குதூகலித்துக் கொண்டிருந்த கடலையே வெறித்த வண்ணம் அமர்ந்திருக்க,

சட்டென்று வந்து மோதிய குளிர் காற்றில், சற்று முன் வரை உள்ளத்தில் நிரம்பியிருந்த அழுத்தம் கொஞ்சமே கொஞ்சமாகக் குறைந்ததாக உணர்ந்தான் பிரணவ். ஆழ்ந்த மூச்செடுத்து தூயகாற்றை தன்னுள் நிரப்பிக் கொண்டவன், முன்னால் விரிந்த இயற்கையின் அற்புதத்தையே விழிகளால் துளாவினான்.

சிறிது தூரத்தில் மணல் மேடாக ஒரு சிறு தீவு தனித்து நிற்க, அதன் அருகில் பரந்து விரிந்திருந்த ‘டெக்ஸல்’ என்ற தீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது பெரிய ஃபெர்ரி படகு.

அத்தீவையும் சேர்த்து “டச் வடன் சீ ஐலண்ட்ஸ்” (Dutch Wadden Sea Islands) என்றழைக்கப்படும், இன்னும் நான்கு அழகிய தீவுகள் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன.

சிறுவயதிலிருந்து விடுமுறைக் காலங்களில் அங்கு குடும்பமாகச் சென்று குதூகழித்த பசுமையான நினைவுகள் பிரணவின் மனதில் எழுந்ததும், அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேறியது.

‘எத்தனை அழகிய நாட்கள் அது?! இனி அப்படியொரு காலம் வருமா? அண்ணா, அக்கா, அப்பா, அம்மா...’ நினைவே அவனுக்கு ஒருவகைச் சுகத்தை தந்தது.

அந்தக் கணங்கள் ஒவ்வொன்றையும் நினைத்தவனுக்கு ஒன்றைமட்டும் மறுக்க முடியாதென்றே தோன்றியது. கடந்த சிலவருடங்களைத் தவிர்த்துப் பார்த்தால், குழந்தையிலிருந்து அவர்கள் அனுபவித்த இனிமையை, அழகிய குடும்பச் சூழலை குறைத்துச் சொல்ல முடியாது என்பதே உண்மை.

அதற்கு முக்கிய காரணம் அவன் தந்தையே! பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்ட தந்தை, ‘எப்படி மாறிப் போனார்?! எப்படி முடிந்தது அவரால்..?!!’ மனதில் ஏங்கியவனுக்கு விடை தெரியவில்லை.

அதற்கு அவன் தந்தை சொல்லும் காரணங்களை அவனால் துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘சபலம் தாக்குவதற்கும், மனம் போன போக்கில் இழுத்துச் செல்லப்படவும் வயதில்லையோ...?!! அனுபவமும், முதிர்ச்சியும் அங்கு செயலிழந்து விடுமோ!?’ அவனால் விடைகான முடியவில்லை.

இப்படியே தன் வீட்டு நினைவில் ஆழ்ந்தவனை, “பிரணவ்..” என்ற யாதவின் குரல் அவனை நோக்கித் திருப்பியது.

“சொல்லுங்கண்ணா..” என்றவாறே திரும்பியவனிடம், “நீ எத்தனை தடவைகள் அண்ணா அண்ணா என்கிறாய்!?” கேலியாகவே ஆரம்பித்தான்.

“இந்த அண்ணாதான்...கொஞ்சம் முதல் என் காதைக் கிழித்துவிட்டது . ஹப்பாடா!” காதைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

“அதுமட்டுமில்லை, என் நெஞ்சுக் கூடே கலகலத்துவிட்டுது... பயத்தில்! அம்மாடியோவ்! லூசு..நாய்..இதுவரை யாருமே வைக்காத பெயர்கள்..!” என்றவன், நெஞ்சைத் தேய்த்து விட்டு, பின் தன் கன்னத்தைத் தடவினான்.

அவன் செய்கையைப் பார்த்த பிரணவ் முகத்தில் சிறுநகை எட்டிப் பார்த்தது.

“அதனால், தயவு செய்து இனி அப்படிக் கூப்பிடாதே பிரணவ்...ப்ளீஸ்..” கெஞ்சுவது போல நடித்தான். அவனைச் சகஜ நிலைக்குக் கொண்டுவர யாதவ் செய்த பாவனைகளில் பிரணவின் முகம் மெல்ல மெல்ல மலர்வின் சாயலைக் காட்டியது.

“என்ன நடந்தது பிரணவ். வீட்டில் ஏதாவது பிரச்சனையா?” அக்கறையாகக் கேட்டவனைப் புரியாமல் பார்த்தான் பிரணவ்.

‘என் வீட்டில் பிரச்சனை என்றால், அதை இவர் ஏன் கேட்கின்றார்?’ சட்டென்று அவன் மனதில் தோன்றியது இதுதான்.

அவன் மனதைப் படித்தவன் போல மெல்லச் சிரித்துக் கொண்டான் யாதவ். அவன் நகைப்பில் பலவித உணர்வுகள் மின்னி மறைந்தன. “என்னடா இவன் திடீரென்று என்னை அழைத்து வந்து இப்படி என் வீட்டு விடயத்தை அக்கறையாகக் கேட்கின்றானே என்று இருக்கா பிரணவ்.” ஒருமாதிரிக் குரலில் தொடர்ந்து கேட்டவனை, மீண்டும் புரியாமல் பார்த்தான் பிரணவ்.

எதுவுமே பேசாது மீண்டும் சில நிமிடங்கள் மௌனம் காத்தான் யாதவ். பிரணவின் பொறுமையை மிகவும் சோதித்த பின்னர், “நான்..நான்..” அவனுக்கே கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது.

“பிரணவ் நீ சிறுவனில்லை. என்ன உன் அக்காவை விட சிலவருடங்கள் சிறியவனாக இருப்பாய். நன்மை தீமை நிச்சயம் விளங்கும். உன்னுடன் இப்படிக் கதைக்க வேண்டி வரும் என்று நான் கொஞ்சநேரம் முதல் வரை நினைத்திருக்கவில்லை.. ஆனால்..” சொல்லி நிறுத்தியவன், பிரணவின் குழப்பமான முகத்தை ஏறிட்டான்.

“இன்று நான் நினைக்காமல் நிறையவே நடந்து விட்டது பிரணவ். அதில் உன்னுடன் கதைப்பதுவும் ஒன்று.”

“உன் அக்கா இப்போ வீட்டுக்கு வரமுதல் என்னுடன் கதைத்து விட்டுத்தான் வந்தாள். அவள் மிகவும் கோபமாக வந்தாளா..அதனால், நானும் பின்னால் வந்தேன்.” என்றவனை, இப்பொது அதிர்வும் கேள்வியுமாக பார்த்திருந்தான் பிரணவ்.

‘அக்காவை கோபம் கொள்ள வைக்கும் வகையில் இந்த ஆள் எதைக் கதைத்திருப்பார்?!’ அவன் மனதில் கேள்வியெழ, யாதவோ மெல்ல பிரணவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

“நான் உன் அக்காவிடம் என்ன கேட்டேன் தெரியுமா..?” அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு வினவியவன் முகமோ, இதுவரை இருந்த யோசனையையும் கடினத்தையும் மீறி, சிறு மலர்வை வெளிப்படுத்தியது.

“உன் அக்காவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன் பிரணவ். அதற்கு அவளுக்கும் சம்மதமா என்று கேட்டேன்.” அழுத்தமாகச் சொன்னவனை, விழிகள் விரிய இமைக்க மறந்து பார்த்திருந்தான் பிரணவ்.

சமீப காலமாக, அதுவும் மாறனின் மைத்துனன் வந்து தியாவை விரும்புவதாகச் சொன்னதிலிருந்து, தமக்கையின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியுடன் இவன் மனதைப் போட்டு வாட்டிக் கொண்டிருந்தது.

ஆனால், நிச்சயம் இப்படி ஒரு சம்பந்தம் தன் தமக்கையை நாடி வரும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. சாதாரணமாக பிரச்சனைகளற்று இருந்திருந்தால், யாதவ் இப்போது கூறியது அவ்வளவு பெரிய விடயமாக நிச்சயம் தோன்றியிருக்காது. ஆனால், இன்றைய அவர்களின் நிலையில் கடவுளே நேரில் தோன்றி, தன் அன்பு அக்காவின் வாழ்விற்காக வரம் அருளியது போலிருந்தது, யாதவின் வாய்மொழி.

சற்று முன்பு வரை தன் முன்பு தோன்றிய அனைத்துக் கஷ்டங்களையும் மேவி ஒருவகை மகிழ்வு உள்ளத்தில் ஊற்றெடுக்க, “என்..ன...? என்ன அண்ணா சொன்னீங்க?” தடுமாறினான் பிரணவ்.

“பார்..திரும்பவும் அதே அண்ணா! ம்ம்..நீ எனக்கு அடி வாங்கித் தந்து விட்டுத் தான் ஓய்வாய் போலிருக்கே!” பரிகாசம் செய்தான் யாதவ்.

“உன் அக்காவிடம், நாம் திருமணம் செய்து கொள்வோமா என்று கேட்டேன் பிரணவ்.” மீண்டும் அழுத்தத்துடன் சொன்னவன், “அதற்கு அவள் என்ன பதில் சொல்லியிருப்பாள் என்று உனக்குத் தெரியாமல் இருக்காதில்லையா?” என்றான் சிறு முறுவலுடன்.

“எது எப்படியோ, என் முடிவில் நான் உறுதியாகவே இருக்கிறேன். இன்னுமொன்று, நீ என்னை அத்தான் என்றே அழைக்கலாம் பிரணவ்.” என்றவன் குரலில் பிடிவாதம் விரவி நின்றது.

கேட்டிருந்த பிரணவோ சட்டென்று கலங்கிய விழிகளுடன் யாதவ் கரத்தினுள் அடங்கியிருந்த தன் கரத்தை விடுவித்து, அவனின் இருகரங்களையும் இறுகப் பற்றிக் கொண்டவன், அ...த்தான்...” தழுதழுத்தான். “நீங்க...சும்மா சொல்லவில்லையே! வீட்..டில் தெரியுமா?! அவர்கள்...” அவன் வாய்மொழியாகக் கேட்டதை பிரணவால் நம்பவே முடியவில்லை.

“இதிலே சும்மா சொல்ல என்ன இருக்கு பிரணவ்..!”

“வீட்டில்...அதெல்லாம் ஒத்துக் கொள்வார்கள், அந்தக் கவலையெல்லாம் உனக்கு வேண்டாம்.” ஆணித்தரமாக தைரியம் கொடுத்தான்.

“இனிச் சரி, வீட்டில் என்ன நடந்ததென்று சொல்லலாம் இல்லையா? உன் அப்பா...கோபத்தோடு போனதைக் கண்டேன்.” முகம் இறுகச் சொன்னவன்,

“நான் கதைத்ததை எதுவும் தியா சொன்னாளா? அதுதான் துள்ளினாரோ!? அல்லது அந்த மடையன் இன்னமும் ஏதாவது தொந்தரவு செய்கின்றானா?” குரலில் கடினத்துடன் கேட்க, அவன் மடையன் என்று சொன்னது தன் அண்ணியின் தமையனை என்று விளங்கியது பிரணவுக்கு.

அதேவேளை தந்தையை ஏளனமாக அவன் கேட்டதும் புரிந்தது. என்னதான் என்றாலும் மற்றவர் அப்படிப் பேசுவதைக் கேட்கையில் அவன் உள்ளம் வேதனையில் கிடந்து துடித்தது.

அதோடு சேர்ந்து உள்ளே அவமானம் பிடிங்கித் தின்ன, வீட்டில் நடந்த பிரச்சனையை, தமக்கை தன்னிடம் சுருக்கமாகச் சொல்லியிருந்ததையே மெதுவாகச் சொல்லத் தொடங்க, கோபத்தில் கனன்ற முகத்துடன், கை முஸ்டிகள் இறுகக் கேட்டுக் கொண்டிருந்தான் யாதவ்.
 
#3
Nice ud
 
#4
Interesting epi
 
#5
Good going.
 
#6
Nice Akka,,,😆😉
 

Rosei Kajan

Administrator
Staff member
#7
Interesting epi
Nice Akka,,,😆😉
மிக்க நன்றி Hemista , Reva , Suba , அனுஷா
 
Top